விக்ராந்த் மெதுவாக அந்த பாக்கெட்டை தன் எதிரே இருந்த டீபாய் மீது வைக்க அந்த பேய் குழந்தை அந்த சிப்ஸை மெதுவாக தொட்டுவிட்டுச் சென்றது. அதன் பின் அந்த சிப்ஸ் பாக்கெட் பூஞ்சை பிடித்து கெட்டுப்போக ஆரம்பிக்க அதைக்கண்டு அரண்டவன் இதை அபிநயா பார்த்துவிடக்கூடாதென அவசரமாக அதை எடுத்து ஜன்னல் வழியாக தூர எறிந்துவிட்டு வந்தான்.
அபியோ உற்சாகமாக அனைத்து பொருட்களையும் காரில் இருந்து இறக்கி வீட்டிற்குள் கொண்டு சென்று வைத்துவிட்டு விக்ராந்திடம் வந்தாள், அவன் சோபாவில் அமர்ந்து இருக்க அவனை பார்த்தபடியே இன்னொரு சோபாவில் அமர்ந்துக் கொண்டாள் அபி.
”வீடு நல்லா இருக்கு, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, சுத்திலும் இயற்கை சூழல் சுத்தமான காத்து, ஒரே அமைதி, இது போல சென்னையில கூட இல்லை அங்கயே நான் வளர்ந்ததால எனக்கு இந்த அமைதி ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் உற்சாகமாக
அதைக்கேட்ட விக்ராந்தோ மென்மையாக சிரித்துவிட்டு தன் பக்கத்தில் எதேச்சையாக திரும்பிப் பார்த்தான், அந்த 9 பேய் குழந்தைகளும் அவர்களுக்கு எதிராக நின்றபடி அவர்கள் பேசுவதை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்க அதைக்கண்டதும் விக்ராந்திற்கு வேர்த்துக் கொட்டியது
”அபி” என ஈனமாக இழுத்தான் விக்ராந்த்.
”ம் சொல்லுங்க” என்றாள் அபி ஆர்வமாக
”உனக்கு அங்க இருக்கறது தெரியலையா” என பேய் குழந்தைகள் இருந்த திசைப்பக்கம் கைகாட்டி கேட்க அபியும் திரும்பிப் பார்த்தாள்
”என்ன இருக்கு அங்க, ஓ பர்னிச்சரா மரத்தில செஞ்சதா, தேக்கா சூப்பராயிருக்கு” என்றாள் அதைக்கேட்டு அவனுக்கு அதிர்ச்சியும் வியப்பும் ஒருங்கே எழுந்தது.
”அது இல்லை அபி அங்க நிக்கற பேய்ங்களை உனக்குத் தெரியலையா”
”எது பேய்ங்களா எங்க எங்க” என ஆர்வமுடன் அந்த பக்கம் இந்த பக்கம் என எழுந்து நின்று பார்க்க அவளின் ஆர்வத்தை விக்ராந்தும் வியந்துப் பார்த்தான், அந்த 9 பேய் குழந்தைகளும் வியந்து பார்த்தன
”எங்க இல்லையே” என ஏமாற்றத்துடன் சொல்லியவள் விக்ராந்தை ஏக்கமாக பார்க்க அவனோ
”சும்மா விளையாட்டுக்கு அப்படி சொன்னேன், ஏன்னா இந்த இடம் பார்க்க அமானுஷ்யமா இருக்குல்ல, பேய் வந்தா கூட ஆச்சர்யப்படறதுக்கில்லை அதான் சொன்னேன்” என சமாளிப்பாகச் சொல்ல அவளோ கலகலவென சிரித்தாள்
”எதுக்கு இவள் சிரிக்கறாள்னு தெரியலையே” என மனதில் நினைத்துக் கொண்டு நொந்தபடியே அந்த 9 பேய் குழந்தைகளை ஒரு முறை பார்த்தான், அந்த பேய் குழந்தைகளோ அபியையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க விக்ராந்தோ
”இதுங்களை வைச்சிக்கிட்டு என்னத்த பேசறதுன்னு தெரியலையே” என நினைத்து நொந்தவன் அபியிடம்
”அபி எதுக்கு இப்படி சிரிக்கற” என கேட்க அதற்கு அவளோ
”சிரிக்காம வேற என்ன செய்றது, எனக்கு பேய்ங்கன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும், இவ்ளோ பிடிக்கும்” என தன் கைகளை அகலமாக விரித்து வேறு காட்ட விக்ராந்த்தும் அந்த 9 பேய் குழந்தைகளும் ஒரே சமயத்தில் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தார்கள்.
”பேயை பிடிக்குமா என்ன சொல்ற நீ” என அதிர்ச்சியுடன் கேட்டான் விக்ராந்த்
”ஆமாம் எனக்கு பேய்ங்கன்னா ரொம்ப பிடிக்கும், பேய் சம்பந்தப்பட்ட சினிமாதான் நான் நிறைய விரும்பிப் பார்ப்பேன், பேய்ங்கலாம் சூப்பர் ஸ்மார்ட் தெரியுமா, நாம நினைக்காததை எல்லாம் அவங்க சட்டு சட்டுன்னு செய்வாங்க, இன்னும் சொல்லனும்னா நான் ஸ்கூல்ல காலேஜ்ல நடந்த நாடகத்தில எல்லாம் பேய் வேஷம்தான் போடுவேன், அப்படியே ரியலா பேய் போலவே இருப்பேன், எல்லாரும் என் நடிப்பைப் பார்த்து கைதட்டி பாராட்டுவாங்க” என அபிநயா அளக்க விக்ராந்தோ ஆஆஆ என ஆச்சர்யமாக கேட்டான்
”பேய் வேஷமா நீயா“ என வியப்புடன் விக்ராந்த் அவளிடம் கேட்க
”என்ன நம்பலையா, சத்தியமா சொல்றேன், என் காலேஜ்ல ஏதாவது விழான்னா என்னைத்தான் முதல்ல தேடுவாங்க”
”எதுக்கு தேடுவாங்க”
”எதுக்கா நான் பேய் வேஷம் போட்டு நடிக்கனும்னு ஆசைப்படுவாங்க, அப்படியே ரியலா நடிப்பேன், அந்த சமயத்தில உண்மையான பேய் வந்தா கூட என்னைப் பார்த்து பயப்படும்”
”இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு”
”நம்புங்க நான் சொல்றது எல்லாம் உண்மை, பேய் வேஷம் போடறது எல்லாருக்கும் வராது, ஏன்னா பேய் போல வேஷம் போட்டாலும் அடுத்தவங்க பயப்படமாட்டாங்க, பேயை போல நடிச்சிக் காட்டனும், மத்தவங்களை பயமுறுத்தற மாதிரி நடிக்கனும், அப்பதான் நம்புவாங்க, பயப்படுவாங்க” என சொல்ல விக்ராந்திற்கு அவள் சொல்வது வேடிக்கையாக இருந்தது
”என்ன நம்பலையா நீங்க, சே இருங்க நான் பேய் வேஷம் போடாமலேயே பேய் போல உங்களை பயமுறுத்தி காட்டறேன், அப்பதான் நீங்க நம்புவீங்க”
”வேணாம் அபி இங்க இருக்கற பேய்களே போதும் இதுல நீயுமா” என சொல்ல அவன் சொல்ல வருவதை புரிந்துக் கொள்ளாமல் பேசினாள் அபி
”ப்ச் இருங்க இருங்க” என சொல்லியவள் சட்டென எழுந்து ஒரு பக்கமாக சென்று திரும்பி நின்றுக் கொண்டாள்.
அவள் என்னதான் செய்யப் போகிறாள் என பார்க்க விக்ராந்தும் அந்த 9 பேய் குழந்தைகளும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்,
வெளியே மாலை மங்கி இருள் கவிய தொடங்கி ஊதல் காற்று வேறு ஜன்னல் வழியாக வந்துக் கொண்டிருந்தது, அப்படியொரு அமைதியான சூழ்நிலையில் அபியோ மெதுவாக உருமினாள், அவளின் உருமல் பயங்கரமாக இருந்தது, அதைக்கேட்ட விக்ராந்தோ சற்று பதட்டமாகி திரும்பி அந்த பேய் குழந்தைகளை பார்த்து வியந்தான், அந்த பேய் குழந்தைகள் கூட ஒன்றை ஒன்றை பயத்துடன் இறுக்கமாக பிடித்துக் கொண்டு நின்றது
”என்னடா இது பேய் பயப்படுது” என விக்ராந்த் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க அந்நேரம் உறுமல் சத்தம் சற்று அதிகமாக கேட்கவும் அபியை பார்த்தான் விக்ராந்த்.
அபியோ ஸ்லோ மோஷனில் திரும்பி நின்றாள், அவளின் முகத்தை தலைமுடியை விரித்து வைத்து அதன் மூலம் மூடியிருந்தாள்.
உறுமலுடன் விக்ராந்தையே பார்த்தபடி நின்றாள், அவனுக்கு அவள் செய்வதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு போல தெரிய, அதே நேரம் அபி உறுமியபடியே ஒரே ஓட்டமாக ஓடி வந்து விக்ராந்தின் முன் சட்டென்று நின்று ஆஆஆ என கத்தினாள், அதில் விக்ராந்திற்கு தூக்கிவாரிப்போட்டது,
அதை விட அந்த 9 பேய் குழந்தைகளும் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு தலை தெறிக்க ஓடின, பேய்களே பயந்து ஓடுவதைக்கண்ட விக்ராந்திற்கு சிரிப்பாக இருந்தது, கலகலவென சிரிக்க அபியோ நொந்துபோய் தனது தலைமுடியை சரிசெய்தபடியே சோர்வாக சோபாவில் அமர விக்ராந்தோ சிரித்து முடித்து
”நல்லாதான் பயமுறுத்தற”
”எங்க நீங்கதான் சிரிச்சிட்டீங்களே” என்றாள் சோகமாக
”நான் சிரிச்சது வேற ஒண்ணைப் பார்த்து”
”வேற எதை பார்த்தீங்க”
”அதை விடு” என சொல்லியவன் சுற்றி முற்றி பார்த்தான், பேய் குழந்தைகள் ஒன்றுகூட அங்கு இல்லை
”பேய்ங்களே பயந்து ஓடற அளவுக்கு பெரிய பேயா இவள் இருக்காளே, சரி இவளை நினைச்சி இனி கவலைப்பட வேணாம் நாம கிளம்பலாம்” என நினைத்தவன் அபியிடம்
”சரி அபி நான் கிளம்பறேன் நேரமாச்சி” என சொல்ல அவளோ
”என்ன இது வந்ததும் கிளம்பறீங்க, இன்னும் இந்த வீடே எனக்குப் பழக்கமாகலை ப்ளீஸ் காலையில வரைக்கும் இருங்களேன் ப்ளீஸ்” என கெஞ்ச அவனுக்கும் அவள்மீது பாவமாக இருந்தது
”என்னதான் இவள் பேயை விரட்டினாலும் அதுங்க சும்மா விடாதே, ம் சரி ஒரு நாள்தானே இருக்கலாம், நாளைக்கு காலையில இவளே இங்கிருந்து கிளம்பிடுவா, ஒண்ணும் பிரச்சனையில்லை” என மனதில் நினைத்தவன்
”அதுக்கென்ன தாராளமா இருக்கேன்”
”ஓ தாங்ஸ் வீட்டை சுத்திப் பார்க்கலாமா” என அனுமதி கேட்டாள் அபி அதற்கு
”நான் ஏற்கனவே பார்த்துட்டேன் நீ வேணா சுத்திப்பாரு போ” என விக்ராந்த் சொல்ல
”என்கூட வாங்களேன் ப்ளீஸ்” என க்யூட்டாக அழைத்தாள். அதில் மதிமயங்கினான்
”ஏன் பயமாயிருக்கா”
”அப்படியில்லை பேச்சுத்துணைக்கு நல்லாயிருக்கும்ல வாங்க” என இதமாக அழைக்க அவனும் அவளுடன் இணைந்து வீட்டை சுற்றி பார்க்கலானான்.
ஒவ்வொரு இடத்தையும் கண்டு பிரமித்தாள் அபி, தான் பார்த்த ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு இடத்தையும் அழகாக வர்ணிக்கவும் செய்தாள், இவர்கள் இருவரும் முன்னால் நடக்க நடக்க பின்னால் 5 அடி இடைவெளி விட்டு அந்த 9 பேய் குழந்தைகளும் நடந்து வந்தன. அதை அபி அறியவில்லை, விக்ராந்த் கூட முதலில் கவனிக்கவில்லை, ஏதோ ஒரு நெருடல் தோன்றவே என்னவென திரும்பிப் பார்த்து அரண்டவன் அதன் பின் திரும்பிப் பாராமலே அபியுடன் இணைந்து நடந்தான்.
அனைத்து அறைகளையும் ஒன்றுவிடாமல் நன்றாக சுற்றி முற்றி பார்த்தாள், அவள் தங்க ஒரு அறையையும் தேர்ந்தெடுத்தாள், அப்படியே நடந்து வந்தவள் அங்கிருந்த லைப்ரரி அறையின் முன் நின்றாள்
”இதுல என்ன இருக்கு” என அபி கேட்கவும் விக்ராந்தோ
”இதுக்குள்ள லைப்ரரி இருக்கு”
”ஓ நான் பார்க்கலாமா”
”தாராளமா வா” என சொல்ல கதவை திறந்துவிட அவளும் முதல் ஆளாக உள்ளே சென்றாள்
அவள் பின்னால் விக்ராந்த் செல்வதற்குள் வரிசையாக 9 பேய் குழந்தைகளும் உள்ளே நுழைய விக்ராந்திற்கு தூக்கிவாரிப்போட்டது
”இதுங்க ஒண்ணு குறுக்க குறுக்க” என மனதில் நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்
அபியோ அங்கிருந்த புத்தகங்களை பார்த்து வியந்தாள்
”வாவ்வ்வ்வ் எவ்ளோ புக்ஸ் இருக்கு, சூப்பரா இருக்கு, எனக்கு புக்ஸ் படிக்கறதுன்னா ரொம்ப பிடிக்கும், ஓய்வு நேரத்தில இந்த புக்ஸ்களை நான் படிக்கலாமா” என ஆசையாக விக்ராந்திடம் கேட்க அவனோ பக்கத்தில் வரிசையாக நின்றிருந்த பேய் குழந்தைகளை பார்த்தான் அவைகளோ ஒன்றை ஒன்று பார்த்து ஏதோ பரிபாஷனை செய்துக் கொண்டது
”சொல்லுங்க நான் படிக்கலாமா” என அபி விக்ராந்திடம் சத்தமாக கேட்க அதற்கு அவனும் தலையை தலையை ஆட்டிவைத்தான்.
“ம் தாராளமா படிக்கலாம்”
”தாங்ஸ்”
”எதுக்கு தாங்ஸ்லாம், இந்த காட்டேஜ்ல உனக்கு ரொம்ப போர் அடிக்கும், அப்ப நீ ஏதாவது செய்யனும்ல, அப்ப இந்த புத்தகங்களை தாராளமா நீ படிக்கலாம்” என சொல்ல அவளோ புன்னகை பூத்துவிட்டு அப்படியே சுற்றி முற்றி பார்த்தபடியே எதேச்சையாக மேற்கூரையைப் பார்த்து
”ஆமா அது என்ன கயிறுகளா தொங்குது” என அபி கேட்க விக்ராந்த் அப்போதுதான் அந்த கயிறுகளை முதல் முறையாக பார்த்து திடுக்கிட்டான் காற்றே வராத இடத்தில் அந்த கயிறுகள் அங்கும் இங்கும் ஆடுவதைக்கண்டு மிரண்டான் அவசர அவசரமாக அபியிடம் நெருங்கி சட்டென அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான் கூடவே அந்த பேய் குழந்தைகளும் வெளியே ஓடி வந்தன.