மறுபக்கம் சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு போர்ஷன் வீட்டிற்குள் ஒரே கூச்சல் சத்தம், அக்கம் பக்கத்தில் வாழும் குடித்தனக்காரர்கள் சலசலவென பேசிவிட்டு கோபமாக தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அவர்கள் திட்டிய திட்டுக்களையும் கோபத்தையும் தாங்கிக் கொண்ட ராமலிங்கமோ தன் பக்கத்தில் இருந்த தன் மகள் அபிநயாவை பார்த்து கோபத்தில் முறைக்க அவளோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு

”சாரிப்பா” என்றாள் ஈனமாக அதைக்கேட்டு அவருக்கு இன்னும்  கோபம் அதிகமானது

”அபி நீ ஏன்தான் இப்படியிருக்கியோ, அம்மா இல்லாத பொண்ணாச்சேன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப் போச்சி, இன்னிக்கு என் மானமே போயிடுச்சி, பார்த்தல்ல எல்லாரும் எப்படி கண்டபடி திட்டிட்டுப் போறாங்கன்னு, இது தேவையா நமக்கு” என திட்ட அவளோ

”சாரிப்பா நான் நடக்கறதைதானே படம்பிடிச்சேன்”

”அதுக்குன்னு ஒரு அளவு இல்லையா, சே ஏன்தான் இப்படியிருக்கியோ உனக்கு பேர் புகழ் வரனும்ங்கறதுக்காக அக்கம் பக்கம் வீட்டாளுங்களை ஏன் இப்படி கஷ்டப்படுத்தற”

”இல்லைப்பா அதுவந்து வழக்கமா நான் செய்ற குக்கிங் வீடியோக்கு யூ-ட்யூப்ல வியூவ்ஸ் குறைவாக ஆரம்பிச்சது, அதான் அக்கம் பக்கம் இருக்கறவங்க என்னென்ன செய்றாங்கன்னு படம் பிடிச்சி யூ-ட்யூப்ல அப்லோட் பண்ணேன் வியூவ்ஸ் அதிகமா இருந்ததுப்பா” என்றாள் உற்சாகமாக அதைக்கண்டு நொந்துப் போனவர் அவளிடம்

”ம் கமெண்ட்டும் கேவலமா இருந்ததே அதை ஏன் சொல்லலை”

“இல்லைப்பா அது அது அது” என இழுக்க

”உன்னை நான் இன்ஜினியரிங் படிக்க வைச்சேன் ஆனா நீ என்ன செய்ற யூ-ட்யூபரா இருக்க, இது நல்லாவாயிருக்கு, படிச்ச படிப்புக்கு வேலைக்கு போகாம இதெல்லாம் ஒரு வேலையா”

”இன்ஜினியரிங் படிச்சா யார் வேலை தருவாங்கப்பா, இப்பலாம் இந்த படிப்புக்கு மதிப்பில்லாம போச்சிப்பா, அதான் நான் யூ-ட்யூபரா களத்தில இறங்கிட்டேன்” என சொல்ல அவரோ தனது ஆதங்கத்தை மகளிடம் கொட்டத் தொடங்கினார்.

”என்னாலதான் அந்த காலத்தில இன்ஜினியரிங் படிக்க முடியலைன்னு ஆசை ஆசையா உன்னை படிக்க வைச்சேன் ஆனா இப்ப இந்த படிப்புக்கே மதிப்பு குறைஞ்சிடுச்சி, என் காலத்தில இன்ஜினியரிங் படிச்சவங்களை எவ்ளோ மதிப்பா பார்ப்பாங்க தெரியுமா, உடனே வேலையும் கிடைக்கும், இப்ப பாரு என்ன நடக்குதுன்னு, சே இதுக்குப்பதிலா உன்னை நான் டாக்டரா படிக்க வைச்சிருக்கலாம்” என புலம்ப அதைக்கேட்டு அபி நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு

”அப்பா விடுங்கப்பா, இப்ப என்னாச்சிப்பா, நான் செய்ற வேலை கூட நல்லாதானே இருக்கு, மாசத்துக்கு எப்படியோ 30 ஆயிரம் வருதேப்பா” என்றாள் அதைக்கேட்டு மறுபடியும் அவருக்கு கோபம் எழுந்தது.

”அதுக்காக கண்ட கண்ட வீடியோலாம் எடுத்து போடுவியா”

”கண்ட கண்ட வீடியோவா? இல்லைப்பா நாட்டுல நடக்கற விசயங்கள்தான் எடுக்கிறேன். தப்புக்களை சுட்டிக்காட்டற நேச்சரல் வீடியோப்பா அதெல்லாம்”

”வேணாம்மா இதனால பாரு பெரிய பிரச்சனையாகுதுன்னு, இதுக்கு முன்னாடி நீ செய்த குக்கிங் வீடியோவே செய், அதை விட்டுட்டு மத்தவங்களை பயமுறுத்தி வீடியோ எடுக்கறது, ஃப்ரான்ங் பண்றது, இதெல்லாம் வேணாம்மா இதுல ஆபத்து அதிகம்”

”இப்படி செய்தாதான் வியூவ்ஸ் அதிகம் கிடைக்குதுப்பா”

”ம்ஹூம் இது வேலைக்காகாது, நானே உனக்கு ஒரு வேலையை தேடறேன்” என சொல்ல அவளோ கலகலவென சிரிக்க அவருக்கு கோபம் வந்தது

”ஒரு வாரத்தில உனக்கான வேலையை உன் கையில வைக்கிறேன், அது கஷ்டமாயிருந்தாலும் சரி நீ அந்த வேலையை செய்யனும், இதோட இந்த யூ-ட்யூப் வேலையை நிப்பாட்டு புரியுதா” என கடுமையாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட அவர் சொன்னதைக் கேட்டும் அமைதியாக இருந்த அபிநயாவோ அவர் வேறுபக்கம் சென்றதும் சட்டென அங்கு ஓரமாக மறைத்து வைத்திருந்த அவளின் காமிராவை எடுத்தாள்

அதில் இதுவரை பதிவாகியிருந்த விடியோவை யூ-ட்யூபில் அப்லோட் செய்தாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் ஏகப்பட்ட வியூவ்ஸ், லைக்ஸ் கமெண்ட்ஸ் வரவும் அதைக்கண்டு குதூகலமானாள் அபிநயா.

ஒரு வாரம் கழித்து,

ராமலிங்கம் தான் சொன்னது போலவே ஒரு தரமான வேலையுடன் அபிநயா முன் வந்து நின்றார், அதை அபி எதிர்பார்க்கவில்லை அவளோ தந்தையை பாவமாக பார்க்க அவரோ மனம் இறங்கவில்லை

”நீ எப்படி பார்த்தாலும் சரி நான் மனசு மாறமாட்டேன், ஒழுங்கா போய் வேலையைப் பாரு, இந்தா உன்னோட ஆர்டர் காப்பி” என சொல்ல அவளோ

”அப்பா தாயில்லாத என்னை ரொம்ப தூரத்துக்கு அனுப்பறீங்களே, என்மேல உங்களுக்கு பாசமே இல்லையா” என வருத்தமாக கேட்க அவரோ அக்கம் பக்கம் சுற்றிலும் எதையோ தேடி ஓரிடத்தில் மறைவாக வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராவை எடுத்து அதை ஆப் செய்துவிட அரண்டாள் அபிநயா

”நீ இன்னும் மாறலைல்ல” என கேமிராவை காட்டிக் கேட்க அவளோ அசடுவழிந்தாள்.

”சாரிப்பா”

”கிளம்பு இப்பவே கிளம்பு” என கோபத்தில் விரட்ட அவளோ முரண்டுபிடித்தாள்.

”அப்பா நான் போகலைப்பா உங்களை விட்டு நான் போகமாட்டேன்”

”நீ போய்த்தான் ஆகனும் கிளம்பு” என சத்தம் போட அவளும் பதிலுக்கு பதில் சண்டையில் இறங்கியும் வேலைக்கு ஆகவில்லை இறுதியில் ராமலிங்கமே வெற்றி பெற்றார் அதில் வேண்டா வெறுப்பாக அபிநயாவும் தனது துணிமணிகளை ஒரு பெரிய பெட்டியில் அடுக்கிக் கொண்டு தந்தையிடம் வந்தாள்

”எல்லாம் எடுத்துக்கிட்டியா” என கேள்விகளை அடுக்கினார்

”ம்” என்றாள் சோகமாக

”கேமிரா எங்க“

”பெட்டியில”

“அது எதுக்கு”

“என்னப்பா சும்மா கூட கொண்டு போக கூடாதா”

“ம் சரிதான், நீ வேலை செய்ற இடத்தில அக்கம் பக்கம் யாருமில்லை அதனால தாராளமா நீ கேமிரா கொண்டு போகலாம், அங்க இயற்கை காட்சிகள் நிறைய இருக்கு அதை வேணும்னா படமா பிடி”

”எதுக்குப்பா நான் அங்க போகனும், அங்க என்ன வேலை இருக்கு நான் படிச்ச படிப்புக்கான வேலையா அது”

”நல்ல வேலை, நல்ல சம்பளம், 50 ஆயிரம் மாசத்துக்கு, சும்மாவா வரும், ஏற்காட்டுல ஒரு காட்டேஜ் இருக்கு, அந்த காட்டேஜை பார்த்துக்க மேனேஜர் தேவை, பெரிசா எந்த வேலையும் இல்லை, என்னிக்காவது ஒரு நாள் அந்த காட்டேஜ் முதலாளி வருவாப்ல அவ்ளோதான், மீதி நாள் எல்லாம் நீ அங்க மகாராணி போல இருக்கலாம், அந்த காட்டேஜ்கூட உன்னோடது போல நினைச்சி நடந்துக்கலாம் சரியா”

”ப்ச் இதுவாப்பா வேலை” என சலிப்பாகச் சொன்னாள் அபி

”ஆமாம் அந்த காட்டேஜ்ல பழங்கால பொருட்கள் இருக்கு, அதை பத்திரமா பார்த்துக்கனும், அடிக்கடி சுத்தம் செஞ்சி வைக்கனும், இது ஒண்ணும் பெரிய கஷ்டமான வேலையில்லை, எல்லாம் உன்னால முடியும்”

”சுத்தம் செய்ற வேலையா இதுக்கு நான் போகனுமா, ஒரு இன்ஜினியரிங் ஸ்டூடன்ட் நானு எனக்கு இந்த வேலையா சே அவமானமா இருக்கு”

”போதும்மா போதும், நீ எப்படி பேசினாலும் சரி, கண்டிப்பா நீ அங்க போகதான் போற, இங்க இருந்தவரைக்கும் உன்னால பிரச்சனை வந்தது போதும், கிளம்பு தனியா கொஞ்ச நாள் புது இடத்தில இருந்தா தன்னால உனக்கு நல்ல புத்தி வரும்”

”வயசு பொண்ணை அவ்ளோ தூரம் நம்பி அனுப்பறீங்களே எனக்கு ஏதாவது ஆச்சின்னா” என பயந்தவள் பேச அதற்கு அவரோ

”அபிநயா எத்தனை முறை சொல்லியிருக்கேன் அடிக்கடி இப்படி காமெடி பண்ணாதன்னு“

”அப்பா“ என்றாள் கோபமாக

”உன்னால மத்தவங்களுக்கு எதுவும் ஆகாம இருந்தா போதாதா”

”சரி நீங்களும் என்கூட வாங்களேன்”

”எனக்கு வேலையிருக்கு நான் எப்படி வர்றது”

”நான் இல்லாம தனியா உங்களால இங்க இருக்க முடியுமாப்பா“

”கொஞ்சம் கஷ்டம்தான்” என்றார் வருத்தமாக

”அப்ப நான் இங்கயே இருக்கவா” என மகிழ்ச்சியாக கேட்க

“வேணாம் நான் பழகிக்கிறேன் நீ கிளம்பு”

”எப்ப இருந்து இப்படி கல்நெஞ்சுக்காரரா ஆனீங்கப்பா, அம்மா மட்டும் இப்ப உயிரோட இருந்திருந்தா எனக்கு துணையா இருந்திருப்பாங்க” என விசும்ப ராமலிங்கமோ அவளையே அழுத்தமாகப் பார்த்தார்

”கொஞ்சம் கூட அசரமாட்டேங்கறீங்களே சே, என் அருமை நான் இல்லாதப்பதான் உங்களுக்கு தெரியப் போகுது, நான் இல்லாம நீங்க எப்படி சமைச்சி சாப்பிடுவீங்களாம்”

”போதும்மா நீ குங்கிங் வீடியோ எடுக்கறேன்னு கண்டதை சமைச்சி போடுவ அதை சாப்பிட்டு என் வயிறு கெட்டதுதான் மிச்சம், இனிமேலயாவது நான் ஆரோக்கியமானதை சாப்பிட்டுக்கறேன், நீ கிளம்பு வா நேரமாகுது” என அவளின் பெட்டியை எடுத்துக் கொள்ள அவளோ கெஞ்சியபடியே தந்தையின் பின் சென்றாள்

அவர்கள் செல்வதை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர், அவளோ சுற்றியிருந்தவர்களை எல்லாம் துணைக்கு அழைக்க யாரும் அவளுக்காக ஆதரவு தர முன்வரவில்லை, மாறாக டாட்டா சொல்லி அவளை அன்புடன் வழியனுப்பி வைத்தார்கள்.

நேராக கோயம்பேடு பஸ்ஸ்டான்ட் சென்றார்கள் இருவரும், அங்கிருந்து ஒரு பஸ்ஸில் மகளை ஏற்றிவிட்டு ராமலிங்கம் நிம்மதியாக பெருமூச்சுவிட அதைக்கண்ட அபிநயாவோ

”ஓ நிம்மதி பெருமூச்சு விடறீங்களா விடுங்கப்பா விடுங்க, முதல் மாசம் சம்பளம் வாங்கிட்டு உங்க முன்னாடி கெத்தா வந்து நிக்கறேன்” என சவாலாக பேச அவரின் முகம் மலர்ந்தது.

”தாராளமா வா இப்ப கிளம்பு டாட்டா” என சொல்லிவிட அவளின் முகம் சூம்பிப் போனது

ராமலிங்கத்திற்கும் மகளை இப்படி தனியாக அனுப்பி வைக்க வருத்தமாக இருந்தாலும் விளையாட்டுத்தனமாக பொறுப்பில்லாமல் வாழும் மகளுக்கு பாடம் புகட்டவும் அவளை உயர் நிலைக்கு கொண்டு வரவும் எண்ணியே இந்த வேலைக்கு அனுப்பி வைத்தார், அவருக்கு தெரியாது 50 ஆயிரம் சம்பளம், வேலை பளு இல்லை, சாதாரண வேலை என நம்பி மகளை அனுப்பி வைத்தார், ஆனால் அந்த காட்டேஜ் பற்றிய உண்மையை அவரிடம் யாரும் சொல்லவில்லை

அபிநயாவும் தன் தந்தைக்கு சோகமாக டாட்டா சொல்ல அந்நேரம் பஸ் கிளம்பியது, அபிநயாவும் துக்க பெருமூச்சுவிட்டவள் தனது செல்போனில் விக்கிபீடியா மூலம் ஏற்காடு பற்றிய விசயங்களை படித்தபடியே பயணப்பட்டாள்.

இதுவரை அவள் சென்னையை விட்டு வேறு எங்கும் எதற்காகவும் எந்த ஊருக்கும் சென்றதில்லை இதுவே முதல் முறை தனியாளாக புது இடத்திற்கு செல்லப்போகிறாள் புது அனுபவம் கிடைக்கப் போவதை நினைத்து அவளுக்குள் சற்று பயமும் ஆர்வமும் எழுந்தது. புது ஊரில் எப்படி ஒரு மாதம் ஓட்டுவது எப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும் அதை எப்படி சமாளிக்கலாம் வேலை எந்தமாதிரி இருக்கும் முதலாளி எப்படிப்பட்டவர் ஒரு மாதம் தன்னால் அங்கு தாக்குபிடிக்க இயலுமா என்பதை பற்றியெல்லாம் அவள் சிறிதும் யோசிக்கவில்லை

மாறாக தனது யூட்யூப் சேனலுக்கான கன்டன்ட் வீடியோ அந்த ஊரில் கிடைக்குமா கிடைக்காதா அப்படி கிடைத்தால் எந்தளவுக்கு வியூவ்ஸ் கிடைக்கும் மக்கள் தனது வீடியோக்களை வரவேற்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி சிந்தித்தபடியே பயணித்துக் கொண்டிருந்தாள் அபிநயா.