Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 8

கல்லூரி முதல்வர் அறையில் இருந்தனர் பிருத்திவியும்,சுமித்ராவும். அழுதழுது கண்கள் வீங்கி இருந்தது சுமித்ராவிற்கு,பிருத்திவிக்கோ யார் இதை செய்திருப்பார்கள் என்ற யோசனை தானே தவிர பயமெல்லாம் இல்லை.கல்லூரி முதல்வர்,

“இதுக்கு என்ன பதில் சொல்லுர பிருத்திவி…நான் உன்கிட்டேந்து இதை எதிர்பார்க்கல….”என்று கூற அதுவரை ஏதோ யோசனையில் இருந்தவன்,

“சார் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க….நான் உங்க கேள்வி எல்லாத்துக்கும் பதில் சொல்லுறேன்…”என்றவன் வேறு எதுவும் பேசாமல் வெளியில் சென்றுவிட்டான்.

சுமித்ராவிற்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை.எந்த தவறும் செய்யாமல் இப்படி கூனி குறுகி நிற்பது மனதையும்,உடலையும் துவல செய்தது.நேற்றைய நிகழ்வின் தாக்கமே இன்னும் மறையாமல் இருக்க இன்று முளைத்த புதிய சிக்கலில் மூளை மறத்த நிலை தான் அவளுக்கு.

நேற்று பிருத்திவியிடம் கோபமாக பேசிவிட்டு தனது அறைக்கு வந்த சுமித்ரா தனது மனபாரம் வடியும் வரை அழுகையில் கரைந்தாள்.பின் தன் மனதில் இருந்து பிருத்திவியின் நினைவுகளை அழிக்க முயன்றவளுக்கு தோல்லவியே மிஞ்சியது.இனி தன்னுடைய ஒரே இலக்கு படிப்பு மட்டும் தான் என்று தனக்குள் கூறிக் கொண்டவாறே தூங்க முற்பட தூக்கம் தூர போனது.

சுமித்ராவின் மனது முழுவதும் பிருத்திவியின் வார்த்தைகளே ரீங்காரமிட தன் காதுகளை பொத்திக் கொண்டாள்.பிருத்திவி இவ்வாறு தன்னை கேவலமாக பேசுவான் என்று சுமித்ரா நினைக்கவில்லை.தன்னை பேசவிடாமல் பிருத்திவி தன்னை குற்றவாளி போல் பேசியது மேலும் அவன் மேல் கோபத்தை தான் கொடுத்தது.அதே கோபத்தில் அவனை மனதில் திட்டியபடி அன்றைய இரவை ஓட்டினாள்.

காலை எழுந்து கல்லூரி கிளம்பிக் கொணெ்டிருந்த வேளையில் தன்னை விடுதி பொறுப்பாளர் அழைப்பதாக ஒரு மாணவி வந்து கூற,சுமித்ரா அவரைக் காண சென்றாள்.அவரோ உன்னை கல்லூரி முதல்வர் அழைக்கிறார் என்று கூறவும் அவர் எதற்கு தன்னை அழைக்கிறார் என்று யோசித்தவாறே சென்றாள்.

சுமித்ரா கல்லூரி முதல்வர் அறையின் முன் நின்றபடி எதற்கு அழைத்திர்கிறார் என்று யோசனை செய்தவாறே நிற்க அவளை கண்ட சில மாணவர்கள் ஏதோ பேசிக் கொண்டே சென்றார்கள் முதலில் இதை கவனிக்காத சுமித்ரா பின் தன்னை வருவோர் போவோர் என்று அனைவரும் ஒருமாதிரியாக பார்ப்பதும்,பேசுவதுமாக இருப்பதை அப்போது தான் கவனித்தாள்.ஏன் இப்படி செய்கிறார்கள் என்று யோசனை செய்தவாறே நிற்க அவளை முதல்வர் அழைப்பதாக கூறினார் பியூன்.

சுமித்ரா உள்ளே சென்றவுடன் அவளை முறைத்தவாறே,

“என்னம்மா இதெல்லாம்…”என்று சில போஸ்டர் போன்றவைகளை அவள் முன் நீட்ட,அதை வாங்கி பார்த்தவளுக்கு உலகமே இருண்டது,நேற்று அவளும் பிருத்திவியும் மாலை மரத்தடியில் பேசியதை யாரோ புகைப்படம் எடுத்திருந்தனர்.அவர்கள் ஒன்று நெருங்கி எல்லாம் அமரவில்லை ஆனால் முதல்வர் காட்டிய படங்களில் இருவரும் நெருங்கி அமர்ந்திருப்பது போல் இருந்தது.அதுமட்டும் இல்லாமல் புகைப்படத்தின் கீழ் இருவரையும் இணைத்து சில காதல் வசனங்கள் எழுதப்பட்டு இருந்தது.

“சார் இதெல்லாம் யாரோ வேணும் தப்பா சித்தரிச்சிருக்காங்க சார்….நாங்க எப்போதும் அங்க உட்கார்ந்து தான் படிப்போம் சார்….”என்று கூற அவரோ,

“இதுல உங்க இரண்டு பேரையும் பார்த்தா படிக்கிற மாதிரி தெரியலையே…உங்க கையில புத்தகம் எதுவும் இல்லை…பார்த்தா பேசிக்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு.,..நீ சொல்லுர மாதிரி நீங்க பாடத்தை பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்கனு வச்சுக்கிட்டாலும்…..ஏன் இவ்வளவு நெருக்கமா உக்கார்ந்து பேசனும்….”என்று கேட்க சுமித்ராவிற்கு கண்கள் கலங்கியது.

முதல்வர் சுமித்ராவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தான் பிருத்திவி வந்தது.அவனைக் கண்டவுடன் சுமித்ராவிற்கு சற்று தெம்பு வந்தது போல் இருந்தது.ஆனால் அவனோ சுமித்ரா என்ற ஒருவள் அருகில் இருக்கிறாள் என்பதே பார்க்காமல் முதல்வரிடம் பேசிவிட்டு செல்ல,சுமித்ராவிற்கு மனதே விட்டு போனது.தன்னை காக்க யாரும் வரமாட்டார்கள் என்பது புரிந்தது.

பிருத்திவி சென்றவுடன் சுமித்ராவின் புறம் திரும்பி,

“இங்க பாரும்மா சுமித்ரா…இந்த போஸ்டர் நம்ம காலேஜ் முழுசும் யாரோ கொடுத்திருக்காங்க……”என்று கூற,சுமித்ராவோ,

“சார் எனக்கு எதுவும் தெரியாது சார்…நான் எதுவும் பண்ணலை…நாங்க இரண்டும் பேசிக்கிட்டு தான் இருந்தோம்….”என்று அழுகையுடன் கூற,முதல்வருக்கு புரிந்தது நடந்ததில் இந்த பெண்ணின் தவறு இல்லை என்பது புரிகிறது இருந்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அல்லவா அவர் இருக்கிறார்.கல்லூரியின் வழக்கப்படி இதுபோல் விவகாரங்கள் நடந்தால் அதில் சம்மந்தப்பட்ட மாணவர்களை நீக்க வேண்டும் என்பது விதிமுறை.சற்று நேரம் அமைதியாக இருந்தவர் பின் ஒரு முடிவுடன்,

“இங்க பாரும்மா…நீ சொல்லுரது உண்மைனு நான் நம்பனும்னா அதுக்கு நீ தப்பு செய்யலைனு நிருப்பிக்கனும்… உனக்கு இன்னைக்கு சாய்ந்திரம் வரை டைம் தரேன்….இதுக்குள்ள நீ நிருப்பிக்க முடியலைனா உன்னையும்,பிருத்தவியும் காலேஜ் விட்டு நீக்க வேண்டி வரும்…”என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

முதல்வர் அறையில் வந்த சுமித்ராவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.பிருத்தவியிடம் சென்று உதவி கேட்க மனது இடம் கொடுக்கவில்லை.இனி என்ன செய்வது என்று யோசனை செய்தவாறே வர அவளின் எதிரே வந்தாள் கீதா,

“சுமி…என்னடி இது…”என்று தன் கையில் உள்ள போஸ்டரைக் காட்டிக் கேட்க,சுமித்ராவோ அவளைக் கட்டிக் கொண்டு அழவே தொடங்கிவிட்டாள்.தோழியின் நிலை அறிந்து அவளை அணைத்து ஆறுதல் கூறினாள்.அப்போது அவர்களிடம் வந்த சில மாணவர்கள் சுமித்ராவை கிண்டல் செய்வது போல் பேச மேலும் சோர்ந்து போனவளை கீதா தான் கல்லூரி விடுதிக்கு அழைத்து வந்தாள்.

காலை முதல்வரிடம் பேசிவிட்டு சென்ற பிருத்திவி தன் நண்பர்கள் மூலம் நேகா இருக்கும் இடம் தெரிந்து கொண்டவன்.அவளை தேடி சென்றான்.அவனுக்கு இது அனைத்தையும் நேகா தான் செய்திருக்க வேண்டும் என்பது புரிந்தது.அவளது வன்மத்தை தான் அவளது முகத்திலேயே பார்த்தானே.ஆனால் அவள் இந்த அளவிற்கு கீழ் இறங்குவாள் என்று பிருத்திவி எதிர்பார்க்கவில்லை.

கல்லூரி விடுதியில் சுமித்ராவோ அழுகையில் கரைய கீதா அவளின் அருகிலேயே இருந்தாள்.இவ்வாறு மாலை வரை பொழுது கழிய பிருத்திவியை பற்றி எந்த தகவலும் இல்லை.சுமித்ராவின் நிலை மேலும் பயத்தில் மோசமடைய கீதாவால் அவளை சமாளிக்க முடியவில்லை.முதல்வர் தன்னை அழைத்துவிடுவாரோ என்று பயந்தவாறே இருக்க கீதாவும் அவளுடன் தான் இருந்தாள்.அப்போது சுமித்ராவை விடுதி பொறுப்பாளர் அழைக்கிறார் என்று கூறவும் சுமித்ராவிற்கு கை,கால்கள் நடுங்கியது.அதே நடுக்கத்துடன் பொறுப்பானரைக் காண வந்தாள்.

“சுமித்ரா இந்தாமா உனக்கு போன் வந்திருக்கு…”என்று கூற,சுமித்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை அந்தளவிற்கு பயந்து போயிருந்தாள்.அவளது நிலை உணர்ந்த கீதா கைபேசியை வாங்கி பேசினாள்.சுமித்ராவோ கீதாவையே பார்த்துக் கொண்டிருக்க அவளது திகைத்த முகமே ஏதோ சரியில்லை என்று மனது கூற யார் என்று வாயசைத்துக் கேட்டாள்.கீதா பொறு என்னும் விதமாக கை காட்டிவிட்டு பேசி முடித்தவள் சுமித்ராவிடம்,

“சுமி….உங்க அப்பாக்கு உடம்பு சரியில்லையாம்டி…ஹாஸ்பெட்டல்ல சேர்த்து இருக்காங்கலாம்…”என்று பதட்டத்துடன் கூற,ஏற்கனவே பயத்தில் இருந்தவளுக்கு இப்போது கேட்ட செய்தியில் தன் உடலின் சக்தி எல்லாம் வடிய மயங்கிவிட்டாள்.அங்கு இருந்த அனைவரும் பயந்து தான் போயினர்.கீதா அவளை தாங்கியவாறே மயக்கத்தை போக்க தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தாள்.

அதேநேரம் கல்லூரி முதல்வர் அறையில் பிருத்திவி நேகாவின் லேப்டாப்பை காட்டிக் கொண்டிருந்தான்.அவனையே முறைத்தபடி நின்றிருந்தாள் நேகா.பிருத்திவி காட்டிய படங்களை அனைத்தையும் பார்த்த முதல்வர் நேகாவிடம்,

“என்னம்மா இதெல்லாம்….நீ தான் இந்த போஸ்டர் அடிச்சியா…”என்று கோபமாக கேட்க,நேபகாவோ,

“சார் எனக்கு ஒண்ணும் தெரியாது சார்…என்னை இந்த பிருத்திவி மிரட்டி கூட்டிட்டு வந்தான் சார்….”என்று அப்பாவியாக நடிக்க,அவளை அடித்தே கொல்லும் ஆவேசம் எழுந்தது பிருத்திவிக்கு இருக்கும் இடம் கருதி அமைதி காத்தவன்,

“சார் இந்த போஸ்டர் எல்லாம் நேகா தான் அடிச்சாங்கனு நிருபிக்க என்கிட்ட சாட்சி இருக்கு…”என்றவன் வெளியில் சென்று ஒருவரை அழைத்து வந்தான்.அவரை அங்கு கண்டவுடன் நேகாவிற்கு அதுவரை இருந்த வரட்டு தைரியம் வடிய இப்போது பயம் பிடித்துக்கொள்ள,

“சார்…என்னை மாட்டிவிடனும்னே பிருத்திவி பொய் சாட்சி எல்லாம் கொண்டு வந்துருக்கான்….”என்று கோபமாக கத்த,அவளது கோபத்தை பார்த்து உதடு வளைத்து சிரித்தவாரே,

“யார் பொய் சொல்லுரானு இப்ப தெரிஞ்சிடும்…”என்று கூறியவன்,அவன் அழைத்து வந்த நபரை பேசுமாறு செய்கை செய்ய,

“சார் நான் பிரண்டிங் பெர்ஸ்ல வேலை பார்க்குறேன் சார்…நேத்து இந்த பொண்ணு என்று நேகாவை காட்டியவர் வந்து இந்த போட்டவை பிரண்ட் பண்ண சொல்லி என்கிட்ட கத்தையா பணத்தை கொடுத்துட்டு போயிடுச்சு சார்…காசுக்கு ஆசைப்பட்டு நானும் இந்த பொண்ணு சொன்ன மாதிரி அடிச்சுக் கொடுத்தேன் சார்….எனக்கு வேறு எதுவும் தெரியது சார்…”என்று நடுங்கியவாறே கூறினார்.

பிருத்திவி முதல்வரிடம் மேலும் ஒரு வீடியோ பதிவை காட்டினான்.அதில் உள்ள பதிவில் நேகா அந்த பெர்ஸ்க்குள் செல்லவது பதிவாகி இருந்தது.

“சார் இப்போ உங்களுக்கே புரியும் இது எல்லாம் யாரோட வேலைனு…இதுல என் மீதோ,சுமித்ரா மீதோ எந்த தப்பு இல்லைன்றது உங்களுக்கே இப்ப தெரிஞ்சிருக்கும்….”என்று கூறினான்.

“ம்ம்…இப்ப புரியுது பிருத்திவி…நீ போகலாம்…”என்று கூறியவர்,பின் நேகாவின் பெற்றோருக்கு அழைத்து வர சொன்னவர் நேகாவின் செயலைக் கூறி கல்லூரியை விட்டு நீக்கினார்.நேகாவின் பெற்றோருக்கு தங்கள் மகள் இப்படி ஒரு தரம் தாழ்ந்த செலை செய்வாள் என்று எதிர்பாரக்காதவர்கள் நேகாவை அழைத்துக் கொண்டு சென்றனர்.

முதல்வர் அறையில் இருந்த வெளி வந்த பிருத்திவி நேராக சுமித்ராவைக் காண தான் சென்றான்.கல்லூரி விடுதியில் அவளை பற்றி கேட்க அவர்கள் இப்போது தான் முதல்வர் அறைக்கு சென்றதாக தகவல் தர பிருத்திவிக்கு புரிந்தது எதற்கு அழைத்திருப்பார் என்று.அவனும் முதல்வர் அறை நோக்கி சென்று கொண்டிருந்த நேரம் அவனின் கைபேசி அழைக்க எடுத்தவனுக்கு வீட்டில் இருந்து தாய்க்கு அடிப்பட்டுவிட்டது என்ற தகவல் வர மற்ற விஷயங்களை மறந்தவன் தன் தாயைக் காண சென்றுவிட்டான்.

தன் தந்தையின் உடல் நிலை சரியில்லை என்றவுடன் மயங்கிய சுமித்ராவை கீதா தான் தண்ணீர் தெளித்து எழுப்பினாள்.மயக்கத்தில் இருந்து எழுந்தவள்,

“கீதூ…நான் உடனே அப்பாவை பார்க்கனும்டி…நான் கிளம்புறேன்….”என்று கூறிக் கொண்டிருக்கும் போது தான் ஆபிஸ் பியூன் வந்து சுமித்ராவை கல்லூரி முதல்வர் அழைப்பதாக கூறி அழைக்க,சுமித்ராவிற்கு அப்போது தான் இன்று காலையில் நடந்த சம்பவம் அனைத்தும் நியாபகத்திற்கு வர தன் நிலை எண்ணி மேலும் அழுகை தான் வந்தது.அவளது அழுகை கண்ட கீதா தான் அவளை சமாதானம் செய்து முதல்வர் அறைக்கு அழைத்து சென்றாள்.

முதல்வர் அறைக்குள் நுழைந்த சுமித்ராவின் நிலை கண்டு பயந்து விட்டார் கல்லூரி முதல்வர்.அழுது அழுது முகம்மெல்லாம் வீங்கி,தலை கலைந்து என்று பார்க்கவே பரிதாபமாக தெரிந்தாள்.

“சார் நான் எந்த தப்பு செய்யலை சார்…”என்று மீண்டும் அழ தொடங்க,அவளை தடுத்தவர்,

“நீ எந்த தப்பும் பண்ணலைனு எனக்கும் தெரியும்மா….இப்ப தான் பிருத்திவி வந்தான்…”என்றவர்,பிருத்திவி கூறிய அனைத்தையும்,நேகாவின் செயலையும் கூறினார்.அனைத்தையும் கேட்ட சுமித்ராவிற்கு தன் மீது தவறு இல்லை என்பதை எண்ணி மகிழ்வதா இல்லை தந்தையின் நிலை எண்ணி அழுவதா என்று தெரியவில்லை.அவள் மீது தவறு இல்லை என்று கூறிய பிறகும் சுமித்ராவின் முகம் தெளியாமல் இருப்பதைக் கண்டு அருகில் இருந்த கீதாவிடம் விசாரிக்க அவள் சுமித்ராவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதை கூறினாள்.

சுமித்ராவின் நிலை கண்டு முதல்வருக்கு கூட பாவமாக இருந்தது.பின் அவர் சுமித்ரா ஊட்டி செல்ல ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார்.சுமித்ரா அனைத்தையும் இயந்திர கதியில் செய்தாள்.அவளின் மனது முழுவதும் தந்தையை பற்றியே இருந்தது.கல்லூரியில் இருந்து கிளம்பும் முன் ஒருமுறை நல்லசிவத்திற்கு அழைத்தாள்.அவரும் இவளை கிளம்பி வரும்படி கூறினாரே தவிர கார்மேத்தின் நிலையை கூறவில்லை.சுமித்ரா கேட்டதற்கு கூட ஐசியூ வில் உள்ளார் என்று தான் கூறினார்.

சுமித்ராவும் அதற்கு மேல் துருவவில்லை அவளுக்கு உள்ளுக்குள் பயம் வேறு ஆட்டிப்படைக்க அப்பாக்கு ஒண்ணும் ஆக கூடாது கடவுளே என்று ஊட்டி அடையும் பிராத்தனை செய்தபடி சென்றாள்.ஆனால் அவளது பிராத்தனையை கடவுள் கேட்கவில்லை போலும் சுமித்ரா கார்மேகத்தை காண மருத்துவமனை அடைந்த நேரத்திற்கு முன்பே அவரது உயிர் அவரை விட்டு பிரிந்து இருந்தது.

கார்மேகத்தின் இழப்பிற்கு பின் சுமித்ராவின் வாழ்க்கையில் இருள் சூழ்ந்து கொண்டது.நல்லசிவம் ஒருவர் தான் அவளை சற்று தேற்றி கொண்டு வந்தார்.அவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் சுமித்ரா மீண்டும் கல்லூரி செல்லவில்லை.அதில் அவருக்கு வருத்தமும் கூட.சுமித்ராவோ தன் தந்தையின் இழப்பில் இருந்து வெளி வராமல் மிகவும் ஒடுங்கி தான் போனாள்.

மறுநாள் கல்லூரி வந்த பிருத்திவி சுமித்ராவை தேட அவள் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை அதனால் ஊட்டி சென்றுள்ளாள் என்ற செய்தி மட்டுமே கிடைத்தது.பிருத்திவியும் இன்று வருவாள் நாளை வருவாள் என்று பார்த்திருக்க அவள் வரவேயில்லை.கீதாவிடம் விசாரிக்க அவள் தந்தையின் இறப்பிற்கு பின் ஊட்டியிலேயே வேறு கல்லூரியில் சேர்ந்துவிட்டதாக கூறினாள்.சுமித்ரா அவ்வாறு தான் அவளிடம் கூறியிருந்தாள்.மீண்டும் கல்லூரிக்கு வந்து அனைவரையும் எதிர்கொள்ளும் நிலையில் அவள் இல்லை அதனால் கீதாவிடம் பொய் உரைத்தாள்.

பிருத்திவிக்கும் சுமித்ராவின் நியாபகங்கள் இருந்தாலும் பரிட்ச்சை நெருங்கி வரும் காரணத்தால் அவளது நினைவை ஒதுக்கி வைத்து பாடத்தில் கவனம் வைத்தான்.அதன் பின் அவனது மேற்படிப்பு தேவையான ஏற்பாடுகளில் செய்வதில் சுமித்ரா என்பவளை முழுமையாக மறந்து தான் போனான்.பிருத்திவி சுமித்ரா வேறு கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்திருக்க அவளோ தன் தந்தையின் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள்.

தன் பழைய நினைவுகளில் உழன்றவாரே தூங்கியும் போனாள் சுமித்ரா.காலை பொழுது ரம்மியமாக புலர்ந்தது.குயில்களின் ராகத்தில் கண்விழித்த சுமித்ராவிற்கு உடம்பெல்லாம் வலிப்பது போல் இருந்தது.நேற்றைய பயணம் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவளது மனதையும்,உடலையும் பாதித்திருந்தது.

இன்று வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை உணர்ந்தவள் எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு காலை உணவை எளிமையாக முடித்துக் கொண்டு தொழிற்சாலைக்கு கிளம்பிவிட்டாள்.வீட்டிலிருந்து டீ தொழிற்சாலைக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும்.

காலை பொழுதின் ரம்மியத்தை ரசித்தபடி தொழிற்சாலையை அடைந்தாள்.அங்கு தன் தந்தை பார்த்த கணக்கர் வேலையை தான் சுமித்ராவும் பார்த்தாள்.இவளுக்கு கணினியும் தெரியும் என்பதால் இவள் வந்தவுடன் கணினியிலேயே கணக்குகளை பதிவிட தொடங்கினாள்.

நல்லசிவத்திற்கு சொந்தமாக டீ தொழிற்சாலை மற்றும் டீ தோட்டம் இரண்டும் இருந்தது.அவருக்கு இரு மகன்கள் அவர்கள் இருவரும் வெளிநாட்டில் இருக்கின்றனர்.அங்கு ஏதோ தொழில் செய்வதாக கார்மேகம் ஒரு முறை கூறியிருக்கிறார்.இங்கு ஊட்டியில் நல்லசிவம் மட்டும் இருக்கிறார்.அவரது துணைவி இரண்டு வருடங்கள் முன்பு இறைவனிடி சேர்ந்திருந்தார்.

நல்லசிவத்திற்கு மனைவி இறந்தபின் தொழிற்சாலை தான் வீடு போல் கிடப்பார்.அவரது அனைத்து கணக்கு வழக்குகளும் சுமித்ரா ஒருவள் தான் பார்த்துக்கொள்கிறாள்.அதனால் காலை தொழிற்சாலைக்குள் நுழைந்தாள் சுமித்ராவிற்கு வேலை சரியாக இருக்கும். அது ஒருவகையில் சுமித்ராவிற்கு பிடித்த விஷயமும் கூட தன் தனிமையை போக்க முடிந்தளவிற்கு வேலைகள் செய்வதிலும்,புதிய விஷயங்களை கற்று கொள்வதிலும் நேரத்தை செலவிடுவாள்.

வேலை நேரம் முடிந்து எப்போதும் போல் வீடு வந்தவளின் நினைவுகளை மீண்டும் பிருத்திவி ஆக்கரமித்துக் கொண்டான்.என்ன இது அவனை பார்த்ததுட்டு வந்ததிலிருந்து அவன் நியாபகம் அதிகமா வருது சுமி இது உனக்கு நல்லதுக்கு இல்லை என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.அவனுக்கு உன் நியாபகம் எல்லாம் இருக்குமா என்று தன் மனதுடன் பேச நீ தேவையில்லாததை பற்றி நினைக்காதே என்று மூளை எச்சரிக்கை செய்தது.

இவ்வாறு அந்த வாரம் முழுவதும் சுமித்ராவிற்கு பிருத்திவியின் நியாபகங்கள் வந்து வந்து போக முதலில் திணறியவள் பின் வந்தாலும் கண்டுகொள்ளாததை போல் இருந்துவிட்டாள். அன்றும் எப்போதும் போல் காலை பொழுதில் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளுக்கு பிருத்திவியின் நியாபகங்கள் மீண்டும் படையெடுக்க,

“அடங்குடி என்னமோ அவன் உன்னை பத்தியே நினைச்சிக்கிட்டு இருக்குற மாதிரி தான்…இந்த நேரத்திற்கு உன் பேரு கூட அவனுக்கு மறந்து போயிருக்கும்…போடி போ….போய் பொழப்ப பாரு….”என்று அவளது மனசாட்சி கிண்டல் பேச,தன் நினைவுகளில் இருந்து மீண்டவள் தொழிற்சாலைக்கு செல்ல தயாராகி வீட்டிலிருந்து நடந்து வந்து கொண்டிருக்க அவளின் எதிரே காரில் சாய்ந்தபடி அதே வசிகரிக்கும் புன்னைகையுடன் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் பிருத்திவிதேவ்.

Advertisement