Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 7

பிருத்திவிக்கு மனது ஆரவேயில்லை யார் மீதோ உள்ள கோபத்தை சுமித்ராவிடம் காட்டிவிட்டு வந்தது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.வகுப்பில் இருந்து சுமித்ரா கசங்கிய முகத்துடன் வெளி வருவதை பார்த்தவனுக்கு தன் மீதே கோபம்.பொதுவாக பிருத்திவி யாரிடமும் இப்படி கோபத்தை காட்டுப்பவன் இல்லை ஆனால் இன்று அவனையும் மீறி வெளிப்பட்டுவிட்டது.இது அனைத்திற்கும் நேற்று இரவு தனக்கு வந்த அழைப்பு தான் காரணம் என்று நினைத்தான்.

நேற்று இரவு தனது இரவு உணவை முடித்துக் கொண்டு தனது அறைக்கு வந்த பிருத்திவி தனக்கு பிடித்த பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டு இருக்க அப்போது அவனது கைப்பேசி அழைத்தது.யார் இந்த நேரத்தில் அழைக்கிறார்கள் என்று யோசித்தவாறே கைபேசியை எடுக்க புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது.யாராக இருக்கும் என்று யோசனை செய்தவாறே அழைப்பை ஏற்றான்.

“ஹலோ….”

“ஹாய் பிருத்தவி….”என்று ஒரு பெண்ணின் குரல் கேட்கவும் முதலில் யார் என்று யோசித்துக் கொண்டிருக்க,

“என்ன பிருத்திவி யாரு பேசுறானு யோசிக்கிறியா….”என்று நக்கலாக கேட்க,பிருத்திவிக்கு பெயர் கூறாமலே தெரிந்து போனது அழைத்திருப்பது நேகா என்று.இவளுக்கு எப்படி தன் நம்பர் தெரிந்தது என்று யோசித்தவன்,இவள மாதிரி ஆளுங்களுக்கு தெரியாம இருந்தாதான் அதிசயம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு,

“சொல்லு எதுக்கு போன் பண்ண…”என்று கடினமாகவே கேட்க,

“என்கிட்ட பேசும் போது மட்டும் உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது பிருத்தவி…இதே அந்த பட்டிக்காடு கிட்ட பேசும் போது…அப்படி சிரிச்சு போசுற….”என்று கோபமாக கேட்க,பிருத்திவிக்கு கோபம் எல்லை கடந்தது,

“ஏய் சுமியை பத்தி ஏதாவது தப்பா பேசுனா…என்ன செய்வேனே தெரியாது…உன்னை மாதிரி அவ கிடையாது அவளை உன்னோட ஒப்பிடாத…. வைடி போனை…”என்று பிருத்திவி கோபமாக கத்திவிட்டு போனை வைக்க போக,

“ஏய் என்ன சொன்ன என்னோட அவளை ஒப்பிடக்கூடாதா…எவ்வளவு திமிரு உனக்கு…உன் பிரண்ட் அந்த பட்டிக்காடு ரொம்ப ஒழுக்கமா…என்னமோ அன்னைக்கி சொன்ன படிக்கிற வயசுல இந்த காதல் அதுல்லாம் எனக்கு நம்பிக்கையில்லைனு…இப்ப உன் பிரண்ட் அவ உன்னை லவ் பண்ணுறா…என்ன செய்யபோற…”என்று கோபமாக கத்த அதை கேட்க அந்த பக்கம் பிருத்திவி இல்லை அவன் போனை வைத்திருந்தான்.

போனில் கத்திக் கொண்டிருந்த நேகாவிற்கு மறுமுனையில் யாரும் இல்லை என்பது உறைக்கவே சில நிமிடங்கள் எடுத்தது.அவளுக்கு பிருத்திவி கூறிய வார்த்தை மேலும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த வன்மத்தை கிளரிவிட்டிருந்தது.என்னை ரொம்ப அசிங்கப்படுத்திட்ட பிருத்திவி உன்னையும்,அந்த பட்டிக்காட்டையும் சும்மா விடமாட்டேன் என்று மனதில் கருவிக் கொண்டாள்.

நேகா கோபமாக கத்தும் போதே பிருத்திவி போனை காதில் இருந்து எடுத்துவிட்டான் தான் ஆனால் அதையும் தான்டி நேகாவின் குரல் அவனுக்கு கேட்டது.அதோடு நேகா சுமித்ராவை பற்றிக் கூறிய அனைத்தும் கேட்க அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல் போனை அணைத்துவத்துவிட்டான்.இரவு முழுவதும் பிருத்திவிக்கு தூக்கமே இல்லை நேகா கடைசியாக கூறிய சுமித்ரா உன்னை விரும்புகிறாள் என்ற வார்த்தை மட்டும் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

ஒருநிமிடத்தில் என்னவெல்லாம் பேசிவிட்டாள் பாவி என்று நேகாவை திட்டிதீர்த்தான்.அவனுக்கு சுமித்ராவின் மீது நம்பிக்கை இருந்தது.தங்கள் இருவருக்குள்ளும் இருப்பது நட்பு மட்டுமே என்று உறுதியாக நம்பினான்.பின் சிறிது நேரம் பாடல் கேட்டவன் அவ்வாறே உறங்கியும் போனான்.காலை எழும் போதே நேரம் தாழ்ந்து தான் எழுந்தான் அதனால் மதியம் போல் கல்லூரி வந்தவன் முன்பு மீண்டும் வந்தாள் நேகா,

“என்ன பிருத்திவி நைட் எல்லாம் தூக்கம் இல்லை போல….”என்று நக்கலாக கேட்க,அவளை அலட்சியம் செய்து கடக்க நினைக்க,அவளோ இவனை போகவிடாமல் குறுக்கே நின்றவள்,

“இன்னிக்கி நீ மதியம் தான் வருவேனு உன் பட்டிக்காடு கிட்ட சொல்லையா…பாவம் உன்னை தான் தேடிக்கிட்டு இருந்துச்சு…”என்று எள்ளலுடன் கூற,

“ஏய் ச்சீ..உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது…விலகு எப்ப பாரு மேல வந்து விழுந்திக்கிட்டு…”என்று வார்த்தைகளை கடித்து துப்பியவன் அவளைக் கடந்து சென்றுவிட்டான்.செல்லும் அவனையே கண்ட நேகா,

“போ..போ…எங்க போயிட போற என்னைக்காவது ஒரு நாள் மாட்டுவ….அன்னைக்கு இந்த நேகா யாரு காட்டுறேன்…”என்று கருவிக் கொண்டு சென்றாள்.

அன்றைய வகுப்பு ஆரம்பிக்கும் பொதே பிருத்திவுக்கு மனதே சரியில்லை நேகாவின் பேச்சால் கோபம் தலைக்கேற அமர்ந்திருக்க அப்போது தன்னை யாரோ கவனிப்பது போலவே இருக்க முதலில் இந்த நேகாவாக தான் இருக்கும் என்று நினைத்தவன் அவளது இடத்தை காண அங்கே அவள் இல்லை.வேறு யாராக இருக்கும் என்று யோசித்தவாறே கண்களால் அலச கடைசி இறுக்கையில் சுமித்ரா இவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

முதலில் சாதாரணமாக தான் காலை வரவில்லை என்று நினைத்து பார்த்திருப்பாள் என்று நினைத்தவன் பின் வகுப்பில் கவனம் வைக்க,சுமித்ராவின் பார்வை பிருத்திவியை விட்டு அகலவில்லை அவனையே பார்த்துக் கொண்டு இருக்க இப்போது பிருத்திவிக்கு சுமித்ராவின் பார்வையின் வித்தாயாசம் புலப்பட ஏற்கனவே நேகா பற்ற வைத்த நெருப்பு மேலும் பற்றி எரிய தொடங்கியது.

வகுப்பு முடிந்ததும் சுமித்ரா இவனிடம் பேச வர எங்கே அவளை காயப்படுத்தவிடுவோமோ என்று கருதி தான் பிருத்திவி விலகி போனது ஆனால் அவளது கசங்கிய முகத்தை கண்ட பின் அவனுக்கு குற்றவுணர்வு ஏற்பட அவளின் பின்னே வந்து அவளை அழைத்தான்.

“சுமி…”என்று பிருத்திவியின் குரல் கேட்க அதுவரை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று நீங்குவது போல் உணர்ந்த சுமிர்தா,

“சொல்லுங்க தேவா….”என்று கேட்க,அவளது இந்த அழைப்பும் பார்வையும் புதுசாக இருக்க பிருத்திவிக்கு முதல் முறையாக சுமியின் மீது சந்தேகம் எழுந்தது.அவளைக் கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்க,சுமித்ராவிற்கு அதெல்லாம் தெரியவில்லை அவளோ தன் மனதில் உள்ளதை அவனிடம் இன்று கூறிவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான்.

சுமித்ரா தனது மனதில் உள்ளதை கூற நினைத்தது சரிதான் ஆனால் அவள் பிருத்திவியின் மனநிலையை கவனிக்கவில்லை.அதனால் அவள் அடைய போகும் துன்பத்திற்கு அவளே வித்திட்டாள் என்று தான் கூற வேண்டும்.

நல்ல தோழியாக மட்டுமே பார்த்த சுமித்ராவின் விழுகளில் இன்று நேசத்தைக் கண்ட பிருத்திவிக்கு கோபம் கட்டுகடங்காமல் வந்தது.படிக்கும் வயதில் காதல் இதில் எல்லாம் பற்று இல்லை அவனுக்கு,மேலும் அவனின் அம்மா தான் தனக்கு நல்ல துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்தான்.

தனது எந்த செய்கை சுமித்ராவின் மனதை கலைத்திருக்கும் என்பது தான் பிருத்திவியின் மனதை அரித்துக் கொண்டிருந்தது.இதில் சுமித்ராவின் பார்வை மேலும் கோபத்தை தூண்ட,

“சுமி…உன்கிட்ட கொஞ்சம் பேசனும்…”என்று இறுக்கமாகவே கேட்டான்.சாதாரணமான நாளாக இருந்திருந்தால் சுமித்ராவிற்கு பிருத்திவியின் குரல் மாற்றம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு அவள் தான் தனக்கான உலகில்  இருந்தாளே இதில் பிருத்திவியின் முக மாற்றத்தை கவனிக்கவில்லை.அவன் கேட்டதற்கு சரி என்று தலையாட்டிவிட்டு அவனின் பின்னே நடக்க அவர்கள் எப்போதும் அமரும் மரத்தின் கீழ் அமரந்தனர்.

சிறிது நேர்த்திற்கு இருவரிடமும் எந்த பேச்சும் இல்லை.யார் முதலில் ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க சுமித்ரா தான் முதலில் தொடங்கினாள்,

“தேவா நானே உங்கிட்ட பேசனும் தான் இருந்தேன்…”என்றவளுக்கு மனதில் பல போராட்டங்கள் தான் அவன் தன் காதலை ஏற்றுக் கொள்வானா என்று ஒருவேளை நிராகரித்தால் என்ன செய்வது என்று பல யோசனைகள் வலம் வர,

“என்ன சொல்லு சுமி.,…”என்று அவளது சிந்தனையை தடை செய்வது போல் ஒலித்தது பிருத்திவியின் குரல்.அவனது முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்தவாறே,

“தேவா…அது…அது வந்து எப்படி சொல்ரதுனு தெரியலை…என்னால சொல்லாமலும் இருக்க முடியல..அது நம்ம நட்புக்கு செய்யுற துரோகமா தெரியுது…நான் செய்யுறது தப்புனு மூளை சொல்லுது அதை மனசு கேட்க மாட்டேங்குது….”என்று சற்று தயங்கியவள் பின் இன்று கூறிவிட வேண்டும் என்ற முடிவுடன்,

“நான் சொல்ல போறது கேட்டு நீங்க என்னை தப்பா நினைக்க கூடாது…..”என்றவள்.தன் கண்களை இறுக முடிக்க கொண்டு,

“நான் உங்களை விரும்புறேன் தேவா….”என்று கூறியேவிட்டாள்.சுமித்ரா தன் மனதில் உள்ளதை கூறியவுடன் உள்ளம் நடுங்க கண்களை திறந்து பிருத்திவியை ஏறிட,அவனோ எந்தவித சலனத்தையும் முகத்தில் காட்டாது அவளை பார்த்திருந்தான்.அவனின் முகத்தில் ஒருவித வெறுமை குடிகொண்டிருந்தது,அதைக் கண்டவள் நெஞ்சம் நடுங்க,

“தேவா….”என்று அழைக்க,அவனோ அதே நிலையில் தான் இருந்தான்.அவனது பார்வை அவளை குற்றம் சாட்டுவது போல் இருந்தது.இதை தன்னிடம் இருந்து அவன் எதிர்பார்க்கவில்லை என்று அவனது முகமே காட்டிக் கொடுத்தது.முதல்முறையாக சுமித்ராவிற்கு தான் ஏதோ பெரிய தவறு செய்துவிட்ட உணர்வு.

“தேவா நான்…”என்று ஏதோ கூறவர,அவளை கையுர்த்தி தடுத்தவன்,

“உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல சுமி…உன்னை நான் நல்ல தோழியா பார்த்தேன்…ஆனா நீ..ச்சீ…”என்று முகம் அருவருத்துக் கூற,சுமித்ராவிற்கு அப்படியே பூமியின் அடியில் புதைந்து விட மாட்டோமா என்று இருந்தது.தன் நிலையை புரியவைக்க எண்ணி அவனிடம் பேச முனைய அவனோ அதை காது கொடுத்து கேட்டகவில்லை.

பிருத்திவிக்கு ஏற்கனவே நேகா ஏற்றி வைத்த நெருப்புடன் சேர்ந்து இப்போது சுமித்ராவின் பேச்சும் சேர்ந்து கொள்ள கோபம் தலைக்கேற தன்னிலை இழுந்து போனான்.தான் தோழியாக நினைத்தவள் பொய்து போனாள் என்ற கோபம்.இதில் பிருத்திவி ஒன்றை மறந்து போனான் பலபேரின் வாழ்க்கை நட்பில் தொடங்கி பின் காதலாக மாறியதுண்டு இதில் தவறு இல்லை என்பதை மறந்துவிட்டான்.

“போதும் சுமி…பேசாத நீ இப்படினு நான் நினைக்கலை….என்னைக்காவது உன்னை மனசை கலைக்கிற மாதிரி பேசியிருக்கேனா….எப்படி தான் படிக்கிற சமயத்தில காதல் கீதல்னு விழுரிங்களோ….உன் மேல எவ்வளுவு நம்பிக்கை வச்சு உன் அப்பா உன்னை இவ்வளவு தூரம் படிக்க அனுப்பியிருப்பார்….அவரை அவரது நம்பிக்கையை அழிக்கிறோம்னு உனக்கு தோணல…என்ன பொண்ணு நீ…உனக்கு போய் உதவனும் நினைச்சேன் பாரு என்னை சொல்லனும்….”என்று என்ன பேசகிறோம் என்பதை உணராமலே வார்த்தைகளை விட சுமித்ராவிற்கு அதற்கு மேல் முடியவில்லை,

“போதும்…நிறுத்துங்க…”என்றவள்,

“நான் செஞ்சது பெரிய தப்பு தான் மன்னிச்சிடுங்க….அதுக்காக என்னை ரொம்ப கேவலமா பேசாதீங்க….நான் என்ன சொல்லவரேனு கேக்கறதுக்கு நீங்க தயாரில்லை எனக்கு புரியது….அதுக்காக நீங்க என்னவேனா பேசுவீங்களா…போதும்…இனி ஒரு வார்த்தை பேசாதீங்க….”என்று கையெடுத்து கும்பிடுவது போல் செய்துவிட்டு சென்றுவிட்டாள்.

சுமித்ரா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த பிருத்திவிக்கு தான் செய்தது சரியா தவறா என்ற யோசனை தான்.அவளை காயப்படுத்திவிட்டோம் என்பது மட்டும் நன்கு புரிந்தது இருந்தும் தான் செய்தது நல்லது தான் என்று தனக்குள் கூறிக் கொண்டு தன் வீடு சென்றுவிட்டான்.

எப்போதும் மலர்ந்த முகத்துடன்,உற்சாகமாக வரும் மகன் இன்று சோர்ந்து போய் வரவும் என்ன என்று விசாரித்த வாசுகியிடம் கல்லூரியில் நடந்த அனைத்தையும் கூறினான்.மகன் கூறுய அனைத்தையும் கேட்ட வாசுகி,அவனிடம்,

“ஏன் கண்ணா காதலிக்கிறது ஒண்ணும் தப்பில்லையே….”என்று கேட்க பிருத்திவி தாயை முறைத்து பார்த்தவன்,

“நானும் தப்புனு சொல்லையே ம்மா…ஆனா படிக்கும் போது இதெல்லாம் சரியாவராது….”என்று கூற,அவனது தலையை ஆதரவாக கோதிய வாசுகி,

“நல்ல பிள்ளைடா நீ…மத்த பிள்ளைகள் எல்லாம் இந்த வயசுல காதலிச்சிட்டு சுத்துராங்க….நீ என்னடான என் பின்னாடி சுத்திக் கிட்டு இருக்க…போடா…”என்று கிண்டல் போல கூறினாலும் தன் மகனை நினைத்து பெருமையே.இருந்தும் மகன் அந்த பெண்ணிடம் நடந்து கொண்டது தவறு தான் என்று புரிந்தவர்,

“கண்ணா…நீ பேசினது சரி தான்..ஆனா பேசின விதம் தான் தப்பு…..நீ பொறுமையா உன் மறுப்பை கூறியிருக்கலாம்….நாளைக்கு அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கேளு…”என்றவிட்டு சென்றுவிட்டார்.

பிருத்திவியும் சுமியிடம் நாளை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தான்.தன் அன்னையும் நீ செய்த்து தவறு என்று கூறிவிட்டு செல்ல மனதில் குற்றவுணர்ச்சி அதிகரித்தது.பொறுமையாக அவளிடம் பேசியிருக்கலாமோ,அவள் ஏதோ தன்னிடம் கூறவந்தாளே சற்று பொறுமையாக கேட்டிருக்க வேண்டுமோ என்றெல்லாம் நினைத்தவனுக்கு தூக்கம் தூர போனது.

மறுநாள் சுமித்ரா மற்றும் பிருத்திவியின் வாழ்வில் பல மாற்றங்களை கொண்டுவந்தது.காலைவேளை பரபரப்பாக கல்லூரி கிளம்பிக் கொண்டிருந்தான் பிருத்திவி.அப்போது அவனது கைபேசி அழைக்க எடுத்தவனுக்கு மறுபக்கம் கூறப்பட்ட செய்தியில் உறைந்து தான் போனான்.

Advertisement