Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 6

ஊட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த புகைவண்டி.இரவு நேர பயணம் என்பதால் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர்.சுமித்ரா மட்டும் தனது இருக்கையில் படுத்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் இருந்தாள்.மனதில் இன்று நடந்தவையே சென்று கொண்டிருந்தது.புகைவண்டியின் நடனத்திற்கு ஏற்ப பிருத்திவியின் நினைவுகளும் அவள் முன் நடனமாட மங்கை அவளோ தொய்ந்து தான் போனாள்.

கீதா தனது திருமணத்திற்கு வரற்புறுத்தி அழைக்கவும் தான் வருகிறேன் என்று கூறினாள்.ஆனால் அதன் பிறகு பலமுறை யோசித்தாள் போகலாமா வேண்டாமா என்று குழம்பி தவித்தவள் பின் சென்றுவருவோம் என்று முடிவு செய்தாள்.கல்லூரி நான்காம் ஆண்டு பாதியில் படிப்பை விட்டுவிட்டு சென்னையை விட்டு வந்தவள் பின் இப்போது தான் வருகிறாள்.அவளையும் அறியாமல் கண்கள் கலங்கி தான் போனது.யாரை தனது வாழ்நாளில் இனி பார்க்கவே போவது இல்லை என்று நினைத்திருந்தாளோ இன்று அவனை பார்த்தது மட்டும் அல்லாது மனதை புண்படும் படி பேசிவிட்டு வந்திருக்கிறாள் அதுவே அவள் மனதை மிகவும் வருத்த கண்கள் மேலும் கலங்கியது. தன்னையும் அறியாமல் “ஐ ம் சாரி தேவா…”என்று அவளது உதடுகள் உச்சரித்தது.

“தேவா….”என்று மீண்டும் அந்த பெயரை உச்சரித்து பார்த்தாள்.தன்னையும் அறியாமல் அவனது மலர்ந்த முகம் கண்முன்னே தோன்றி மறைந்தது.தனக்கு அந்த பெயரை கூறும் அதிகாரம் இருக்கிறதா என்று தனக்குள் கேட்டுக் கொண்டவளுக்கு பதில் தான் இல்லை.கீதா திருமணத்தில் யாரோ தன்னை கவனிப்பதை உணர்ந்தவள் யார் என்று சுற்றும் முற்றும் பார்க்க,அவள் கண்களில் தனது எதிர் பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பிருத்தவியும்,சூர்யாவும் விழுந்தனர்.

பிருத்தவியை இங்கு காண்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை.சுமித்ராவிற்கு பிருத்திவி கண்டவுடன் மனதில் ஒருவித பரவசம் அதுவும் தன்னை அவன் அவ்வபோது பார்ப்போது போல பிரம்மை அவளுக்கு மேலும் மனதை படபடக்க செய்தது தான் ஆனால் அவளது மூளை அவனை ஒருமுறை பார்த்தற்கு பல அவமானங்களை சந்தித்துவிட்டாய் அதனால் பார்க்காதே என்று கட்டளையிட முயன்று தன் மனதை அடக்கினாள்.

சுமித்ரா என்ன தான் மனதை அடக்கினாளும் அவளையும் மீறி மனதும்,கண்ணும் பிருத்திவியை ரசிக்க தொடங்கினாள்.இது நல்லத்திற்கு இல்லை என்று மீண்டும் மூளை அவளுக்கு எச்சரிக்கை செய்தது. அதனால் மனதில் பிருத்திவியின் மேல் இருந்த ஆவலை துடைத்து எறிந்தாள்.

சுமித்ரா கீதாவை வாழ்த்த மேடை ஏறும் போதே பிருத்திவியும் வருவதை பார்த்துவிட்டாள்.அவளது மனது வேகமாக துடிக்க தொடங்க,மூளையோ அவனுக்கு உன்னை நியாபகம் இருக்குமா என்று அவசரமாக கேள்வி எழுப்ப சற்று முன் உணர்ந்த அத்தனையும் வடிந்து போனது.கீதாவிடம் பேசும் போது பிருத்திவி தங்களை அழைத்தது பின் தன்னையே அவன் பார்த்தது என்று காயப்பட்ட மனதை மயில் இறகை கொண்டு வருடியது போல் இருந்தது தான்.ஆனால் இது தனக்கு நிலைக்காத ஒன்று என்று தெரிந்த பின்னும் நான் அதன் பின் செல்வது மடத்தனம் என்பதால் தான் பிருத்திவியை கண்டு கொள்ளாமல் இருந்தது, தன்னிடம் அவன் பேச முற்படும் போது கூட தவிர்த்தது.

பிருத்திவியை பற்றி நன்கு தெரியும் சுமித்ராவிற்கு அதனால் தான் அவனை உதாசீனப்படுத்தும் படி நடந்து கொண்டாள் அவன் தன்னிடம் பேச முனைய மாட்டான் என்று நினைத்திருக்க,அவளது நினைப்பை பொய்யாக்கும் படி இருந்தது பிருத்திவி கடைசியாக தன்னிடம் நடந்து கொண்ட முறை.அவனுக்கு கோபம் வருவது அரிது ஆனால் வந்துவிட்டாள் அதை கட்டுப்படுத்தவும் முடியாது என்று அவளுக்கு நன்கு தெரியும்.தான் ஒன்று நினைத்து அவனை தவிர்த்திருக்க அதுவே அவனது கோபத்தை தூண்டியிருக்கிறது என்று அறியாமல் போனாள்.இவ்வாறு அவனை பற்றி நினைக்கக் கூடாது என்று கூறிக் கொண்டே அவனை பற்றிய சிந்தனையுடனே உறங்கியும் போனாள்.

விடியற்காலை ஊட்டியை அடைந்த சுமித்ரா தனக்கான பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.அவலாஞ்சி அது தான் அவளது ஊர்,ஊட்டியில இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது.எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று இருக்கும் தேயிலை தோட்டங்களும்,கண்ணை கவரும் நீர் வீழ்ச்சிகளும் பார்த்தாலே மனதை கவரும் இடம்.

சிவம் தேயிலை தோட்டம் என்ற பெயர் பலகை தாங்கி நின்றது அந்த தேயிலை தோட்டம்.அங்கு இருக்கும் தேயிலை தோட்டங்களில் இது தான் பெரிய தேயிலை தோட்டம்.அங்கு தான் சுமித்ராவின் தந்தை கார்மேகம் வேலை செய்தார்.சுமித்ரா பிறந்தது,வளர்ந்தது எல்லாம் இங்கு தான்.நல்லசிவம் தேயிலை தோட்டத்தின் உரிமையாளர்.மிகவும் நல்ல மனிதர்.தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு சுமித்ரா தந்தையின் பணியை செய்து வருகிறாள்.அவள் தங்குவதற்கு என்று சிறிய அறையை அவர்கிளின் வீட்டின் அருகில் ஒதுக்கி கொடுத்திருந்தார் நல்லசிவம்.

தனது அறைக்கு வந்த சுமித்ரா தனது பேக்கை கட்டிலில் பேட்டுவிட்டு அவளும் விழுந்தாள்.இன்று வேலைக்கு விடுமுறை கூறியிருந்தாள்.கட்டிலில் படுத்தவளின் நினைவுகளை மீண்டும் பிருத்திவியே ஆக்கரமிக்க அவளது நினைவுகளும் தன் போல் பின்னோக்கி  சென்றது.  

நல்லசிவத்தின் தந்தையின் கீழ் தான் கார்மேகத்தின் தந்தை கணக்கராக வேலை செய்தார்.கார்மேகத்தின் தந்தை இறந்த பின் கார்மேகம் தந்தையின் பணியை செய்ய தொடங்கினார்.கார்மேகம் தனது வேலையில் கெட்டி அதனால் அவருக்கு அங்கு தனி மரியாதை உண்டு.நல்லசிவத்திற்கு கார்மேகம் நல்ல நண்பரும் கூட.சுமித்ரா பிறக்கும் போதே அவளின் தாய் இறந்துவிட,சுமித்ராவிற்கு தாயாகவும்,தந்தையாகவும் இருந்தார் கார்மேகம்.

சுமித்ராவின் பள்ளி பருவம் முழுவதும் ஊட்டியில் தான் கழிந்தது.தன் பள்ளி முடித்து வந்தவுடன் தன் தந்தைக்கு உதவியாக இருப்பாள்.கார்மேகத்திற்கு சுமித்ரா என்றால் உயிர் அவளை ஒரு குறையும் இல்லாமல் தான் வளர்த்தார்.பள்ளி முடித்தபின் கல்லூரியும் கார்மேகம் ஊட்டியின் அருகிலேயே சேர்க்க நினைக்க,நல்லசிவம் தான் சென்னை போன்ற நகரத்தில் படித்தால் சுமித்ரா நன்றாக வருவாள் என்று கூறி சேர்த்தவிட்டார்.கார்மேகத்திற்கு பெண்ணை அவ்வளவு தூரம் அனுப்புவது கஷ்டமாக இருந்தாலும்,படிப்பு அவள் வாழ்க்கைக்கு முக்கியம் என்று தன்னை தேற்றிக் கொண்டார்.   

சுமித்ராவின் பள்ளி படிப்பு முழுவதும் தமிழ் வழி கல்வியே ஆனால் கல்லூரி ஆங்கில வழி என்பதால் கல்லூரி சேர்ந்த முதலில் மிகவும் திணறி தான் போனாள்.ஊட்டியில் சிறிய ஊரில் பிறந்து வளர்ந்த சுமித்ராவிற்கு சென்னை போன்ற மாநகரில் பொருந்துவது சற்று கடினமாக தான் இருந்தது.இதில் கல்லூரி முழுவதும் ஆங்கில மொழியே ஆட்சி செய்ய சுமித்ராவிற்கு சாதாரணமாக பேசுவதற்கு கூட ஆங்கிலம் திக்கி திணறி தான் வரும்.அதனாலே அவளை பட்டிக்காடு என்று வகுப்பில் உள்ளவர்கள் கிண்டல் செய்ய சோர்ந்து தான் போனாள் பெண்.

தன்னை எண்ணியே கழிவிரக்கமாக போக ஒரு நாள் தனது வகுப்பறையில் அழுது கொண்டிருந்தவளை கீதா தேற்றி கொண்டிருந்தாள்.அவள் ஒருவள் தான் சுமித்ராவிடம் வகுப்பறையில் சற்று இயல்பாக பேசுவாள்.அவளும் இவளை போல் ஆங்கிலம் சரளமாக பேச சற்று திணறி தான் போனாள்.இத்தனைக்கும் கீதா ஆங்கில வழி கல்வி பயின்றவள் தான் இருந்தும் மற்றவர்கள் போல் சரளமாக பேசவரவில்லை அவளுக்கு. அதனால் வீட்டில் கூறி ஆங்கிலம் பேசுவதற்கு சிறப்பு வகுப்பு சேர்ந்துவிட்டாள்.அப்போது அங்கு வந்த பிருத்திவி சுமித்ராவிடம் வந்து,

“ஹாய்..சுமித்ரா….”என்றான்.அழுகையில் மூக்கை உறுஞ்சியவாரே அவனை நிமிர்ந்து பாரக்க,

“ஐ ம் பிருத்திவிதேவ்……”என்றான்.பெண்கள் இருவரும் தயங்கியவாரே ஹாய் என்று கூறினர்.அவர்களை பார்த்து புன்னகைத்தவாரே எதிரில் அமர்ந்தவன்,

“சுமித்ரா…உன் கிட்ட கொஞ்சம் பேசலாமா…”என்று கேட்க,சுமித்ராவோ தயங்கியவாரே தலையை ஆட்டினாள்.

“இங்க பாரு சுமித்ரா…காலேஜ்ல எல்லாரும் கிண்டல் பண்ணறாங்கனு அழுகிறது எல்லாம் சின்ன குழந்தை தனமா இருக்கு….இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் உடைஞ்சு போனா வெளி உலகம் இதவிட மோசமா தான் இருக்கும்…அப்ப என்ன செய்வ…”என்று கேள்வி கேட்க சுமித்ரா திருதிரு என்று முழித்தாள்.அவன் கூறுவதும் சரிதானே தனக்கு வெளி உலகம் தெரிய வேண்டும் என்பதற்காக தானே நல்லசிவம் அங்கிள் தன்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்து சேர்த்தது.சுமித்ராவை வெளிவுலகம் தெரியாமலே கார்மேகம் வளர்க்க நல்லசிவம் தான் அவ்வாறு செய்யாதே அவளது எதிர்காலத்திற்கு நல்லதில்லை என்று கூறி கல்லூரி படிக்க வெளியில் சேர்த்தது என்று தனக்குள்  யோசனை செய்து கொண்டிருக்க,

“என்ன யோசனை பலமா இருக்கு….”என்று பிருத்திவி கேட்க,அவனை நிமிர்ந்து பார்த்த சுமித்ரா,

“இல்ல நீங்க சொல்லரது தான் என் அங்கிள் சொன்னாரு…எனக்கு இன்னும் வெளிவுலகம் தெரியலைனு…அதனால தான் என்னை இங்க படிக்க சேர்த்துவிட்டார்….”என்று தான் மனதில் நினைத்ததை கூற,

“ம்ம்…கரெட்டா தான் செஞ்சிருக்கார் உன் அங்கிள்….”என்றவன்,அவளிடம்,

“உனக்கு இங்கிலீஷ் சரளமா பேச வரலனா…அதுக்கு நீ ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போ…அதை விட்டுவிட்டு இப்படி நீ அழுத்துக்கிட்டு இருந்தா எல்லாம் சரியாகிடுமா….”என்று கேள்வி எழுப்ப,அதுவரை அமைதியாக இருந்த கீதா,

“நானும் அதை தான் இவக்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன்….நானும் கிளாஸ் போறேன் இவளையும் அங்க ஜாயின் பண்ணு சொன்னா…நீ போற கிளாஸ் ரொம்ப தூரம் என்னால அவ்வளவு தூரம் வர முடியாதுனு சொல்லுரா….”என்று கூற,

“சரி கீதா படிக்கிற கிளாஸ் ரொம்ப தூரம்னா இங்க பக்கத்தில இருக்குற ஏதாவது கோச்சிங் சென்டர்ல சேரு……”என்று பிருத்திவி கூற,

“எனக்கு எங்க இருக்குனு தெரியதே….”என்று சுமித்ரா கூற,அவளைக் கண்டு புன்னகைத்தவன்,

“சரி எனக்கு தெரிஞ்ச சென்டர் பக்கத்துல தான் இருக்கு அங்க சேர்ந்து படிக்கிறியா…”என்று கேட்க

“படிக்கிறேன்…”என்று ஆர்மாக கூறினாள்.அவளது முகத்தில் உள்ள தெளிவைக் கண்டவன்,

“தட்ஸ் குட்….நான் இன்னைக்கு சொல்லுறேன் நீ கீதாவோட போ….”என்று கூறிவிட்டு எழுந்து கதவின் அருகில் சென்றவன் அவளிடம் திரும்பி,

“இனி இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழக்கூடாது புரியுதா….”என்று ஏதோ சிறு குழந்தைக்கு கூறிவது போல கூற சுமித்ராவும் வேகமாக தலையாட்டினாள்.அவனும் வந்ததில் இருந்து சுமித்ராவை கவனிக்கிறான் வகுப்பிற்கு வரும் போதே ஏதோ நடுக்கத்துடன் பயந்தவாறே தான் வருவாள்.

சூர்யா கூட ஒருமுறை அவனிடம் கூறினான் இந்த பெண்ணை வகுப்பில் அனைவரும் கிண்டல் பேசுகிறார்கள் என்று.பிருத்திவிக்கு கோபம் தான் அவர்களிடம் சென்று பேசினால் அது வேறு மாதிரி சித்தரிக்கப்பட்டுவிடும் என்று நினைத்தவனுக்கு சுமித்ராவின் மேலும் கோபம்.அவர்கள் பேசுகிறார்கள் என்றால் இவள் ஏன் பயப்பட வேண்டும் என்று மனதில் திட்டினான்.

இன்று வகுப்பறையில் தனது வண்டி சாவியை தவர விட்டுவிட்டான் அதை எடுக்க வரும் போது தான் சுமித்ரா,கீதாவின் உரையாடலை கேட்டான்.அதற்கு சுமித்ரா பயந்தபடி பேசுவதைக் கேட்டவனுக்கு மேலும் கோபம் வந்தது தான் முயன்று தன்னை அடக்கியவன் அவளிடம் பேச வந்தான்.அவளிடம் பேசியதில் பிருத்திவிக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்தது அவள் வெளியுலகம் தெரியாமலே வளர்ந்திருக்கிறாள் என்று.அதில் இருந்து அவளை வெளி கொண்டு வர வேண்டும் எண்ணியவன் அவளிடம் பேசி புரியவைத்தான்.

சுமித்ராவும் பிருத்திவி கூறிய சென்டருக்கு அன்று மாலையே சென்று சேர்ந்துவிட்டாள்.தனக்கு சரியான நேரத்தில் உதவி செய்த பிருத்திவியின் மீது தனி மதிப்பு ஏற்பட்டது சுமித்ராவிற்கு.அன்றிலிருந்து சுமித்ராவிற்கு பாடத்தில் எந்த சந்தேகம் வந்தாலும் தயங்காமல் நேரே பிருத்திவியிடம் தான் சென்று நிற்பாள்.பிருத்திவியும் எந்தவித பிகுவும் பண்ணாமல் அவளுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பான்.இப்போது அவளை யாராவது எதாவது கூறினால் கூட கண்டு கொள்ளாத மாதிரி கடந்துவிடுவாள்.அவளது கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே.முதல் வருட முடிவில் ஒரளவிற்கு திக்காமல் ஆங்கிலம் பேச தேறியிருந்தாள்.

படிப்பில் முதலிடம் என்று கூறமுடியாது ஒரளவிற்கு நல்ல மதிப்பெண்கள் பெற்றாள்.அந்த வருட விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த மகளிடம் நிறைய மாற்றங்களைக் கண்ட கார்மேகத்திற்கு மனதில் நிம்மதி பிறந்தது.எங்கே மகள் புது இடத்தில் கஷ்டப்படுகிறாளோ என்று பயந்து கொண்டிருந்த தந்தைக்கு இப்போது மனதில் இருந்த கலக்கம் நீங்கியது.

வருடங்கள் வேகமாக ஓடியது சுமித்ரா இறுதி வருட படிப்பில் இருந்தாள்.பிருத்திவிக்கும் அவளுக்கும் இடையில் அழகான நட்பு வளர்ந்து இருந்தது.இவர்களின் நட்பைக் கண்டு அவர்கள் வகுப்பில் படிக்கும் நேகாவிற்கு பொறாமையாக இருக்கும்.ஏனென்றால் அவளும் பிருத்தவியிடம் நட்பு என்ற பெயரில் அவனிடம் சற்று வரம்பு மீறி பழக நினைக்க அவளின் எண்ணம் புரிந்த பிருத்திவி அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் சென்றுவிடுவான்.அதனால் அவளுக்கு பிருத்திவியின் மேல்  இருந்த கோபம் சுமித்ராவின் மீது வன்ம்மாக மாறியது.

அப்படி என்ன தன்னிடம் இல்லாதது அந்த பட்டிக்காட்டு பெண்ணிடம் உள்ளது என்று வன்மமாக நினைத்தவள்.இருவரையும் எப்படியாவது அனைவர் முன்பும் அவமானப்படுத்த வேண்டும் என்று மனதில் கூறிக் கொண்டாள்.இதில் எப்போதும் மலர்ந்த முகத்துடன் வலம் வரும் சுமித்ராவைக் கண்டாள் அவளுக்கு மேலும் கோபம் தலைக்கு ஏறும்.

நேகாவும் இரண்டுமுறை சுமித்ராவை பயமுறுத்துவது போல் பிருத்திவியிடம் ஒதுங்கி இரு என்று கூறினாள்.ஆனால் சுமித்ராவோ அவள் கூறியதை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் சென்றுவிட்டாள்.இந்த பட்டிக்காடுக்கு எவ்வளவு கொழுப்பு உனக்கு இருக்குடி என்று தன் மனதில் வன்மத்தை வளர்த்துக் கொண்டாள்.

இந்நிலையில் சுமித்ராவிற்கு பிருத்திவி நண்பன் என்பதை தாண்டி பிடிக்க தொடங்கியது தன் நினைப்பு தவறு என்று மூளை எச்சரித்த போதும் அவனைக் கண்ட உடன் மனம் அவளையும் மீறி அவனை ரசிக்க தொடங்கியது.ஆனால் பிருத்திவி எந்தவித மாற்றமும் இல்லாமல் எப்போதும் போல் தான் இருந்தான்.சுமித்ராவை தனது தோழியாக பார்த்தவனுக்கு அவளது பார்வையின் மாற்றங்களை கவனிக்க தவறிவிட்டான்.

சில நாட்களாக சுமித்ராவை கவனித்த கீதா அவளிடம் விசாரிக்க தன் மனதில் பிருத்திவியை பற்றி நினைப்பை அவளிடம் கூறியவள்,

“எனக்கு பயமா இருக்கு கீதூ…தேவாக்கு இது தெரிஞ்சா என்னை பத்தி தப்பா நினைப்பார்ல…”என்று கேட்க,கீதாவிற்கு என்ன கூறிவது என்று தெரியவில்லை.அதனால் அமைதியாக இருக்க,

“கீதூ…என்னடி ஏதோ யோசிக்கிற…”என்று கேட்க,கீதாவோ,

“சுமி எனக்கு சரியா சொல்ல தெரியலைடி….ஆனா நீ செய்றது தப்பு மாதிரி தான் தெரியுது…”என்று கூற சுமித்ராவிற்கு தான் மனது ஒருநிலையில் இல்லை என்ன செய்வது என்று யோசித்தவள் கடைசியாக என்ன நடந்தாலும் பரவாயில்லை தன் மனதில் உள்ளதை பிருத்திவியிடம் கூறிவிடலாம் என்று முடிவு செய்தாள்.அவன் தன்னை என்ன திட்டினாலும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று பலமுறை தனக்குள் கூறிக்கொண்டாள்.

சுமித்ராவிற்கு முன்போல் பிருத்திவியிடம் நட்பு என்ற பெயரில் காதல் செய்வதெல்லாம் நல்லதாக படவில்லை.அதனால் அவளே தனது மனதில் உள்ளதை கூற வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.அவள் நினைத்துது போல் மறுநாள் காலை எப்போதும் போல் கல்லூரி சென்றவள் பிருத்தவியின் வருகைக்காக காத்திருந்தாள்.அன்று பிருத்தவி மதிய நேரத்திற்கு தான் கல்லூரிக்கே வந்தான்.வந்தவன் முகம் இறுக்கமாக இருந்தது.

சுமித்ரா அவனிடம் பேச செல்ல அவன்,

“சுமி எனக்கு வேலையிருக்கு நான் கிளம்புறேன்….”என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.பிருத்திவி அவ்வாறு கூறிவிட்டு செல்லவும் சுமித்ராவிற்கு முகமே செத்து போனது போல் ஆனது.இத்தனை நாள் பழக்கத்தில் ஒரு முறை கூட முகம் சுணங்கியது இல்லை அவன்.இன்று தன் முகத்தைக் கூட பாராமல் சென்றது மனதை வதைக்க அதே நினைவில் விடுதி நோக்கி நடந்தாள்.

கல்லூரியின் உள்ளே தான் விடுதியும் இருந்தது அவள் தனது விடுதி கட்டிடத்தை அடையும் போது,

“சுமி…”என்று அழைத்தப்படி வந்தான் பிருத்திவி.

“சொல்லுங்க தேவா…”என்று முகம் மலர சுமித்ரா கேட்டாள்.அதுவரை அழுத்திய ஏதோ ஒன்று இறங்கியது போல் சுமித்ராவிற்கு இருந்தது.பிருத்திவி மீண்டும் கண்டதில் அவளது முகமும்,அகமும் மலர்ந்து தான் போனது.அவளது அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் பிரிதிபலித்தது.அவளையும் மீறி அவளது காதல் மனது பிருத்திவியை ரசிக்க தொடங்கியது.ஆனால் இதில் சுமித்ரா ஒன்றை கவனிக்க தவறிவிட்டாள் தன்னையே கூர்மையாக பார்த்துக் கொண்டு இருந்த பிருத்திவியின் முகத்தில் இருந்த கடுமையை.

Advertisement