Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 5

கீதா-சுதர்சன் திருமணம் இனிதே முடிவடைய சுமித்ரா அவர்களை வாழ்த்த மேடை ஏறினாள்.பிருத்திவி அவள் மேடை ஏறுவதை பார்த்துக் கொண்டே அவனும் சூர்யாவை இழுத்துக் கொண்டு மேடை ஏறினான்.கீதா தோழியை கண்ட மகிழ்ச்சியில் அருகில் வந்த சுமித்ராவை அணைத்துக் கொண்டு,

“சுமி….எப்படி இருக்கடி…நான் பயந்துக்கிட்டே இருந்தேன் நீ வருவியா மாட்டியோனு….”என்று கூறி கண் கலங்க,

“ஏய் கீது என்ன இது சின்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டு….நான் தான் கண்டிப்பா வரேன் தானே சொன்னேன்…”என்று தோழியை வலுகட்டாயமாக தன்னிடம் இருந்து பிரித்த சுமித்ரா கீதாவின் கண்களை தொடைத்துவிட,

“ரொம்ப அழாத கீத்ஸ் அப்புறம் உன்னோட மேக்கப் கலைஞ்சிடும்…”என்று பிருத்திவியின் குரல் பின்னிருந்து கேட்டகவும் இருவரும் திரும்பி பார்க்க,அடுத்தவர் மனதை மயக்கும் புன்னகையுடன் நின்றிருந்தான் பிருத்திவி.அவனின் பின்னால் சுத்ரசனுடன் பேசியபடி நின்றிருந்தான் சூர்யா.

“ஹாய்….பிருத்திவி…”என்ற கீதா வரவேற்பாக புன்னகைத்தாள்,பிருத்திவியின் கண்களோ கீதாவின் பக்கத்தில் நின்ற சுமித்ராவிடமே இருந்தது.அவளோ இவனை ஒரு அறிமுகமற்ற பார்வை பார்த்தவள் பின் திரும்பிக் கொண்டாள்.பிருத்திவியின் பார்வை உணர்ந்த கீதா தான்,

“பிருத்திவி…இது சுமித்ரா…உனக்கு நியாபகம் இல்லை…”என்று அவன் நியாபகம் வைத்திருப்போனோ என்ற எண்ணத்தில் கீதா அவனுக்கு சுமித்ராவை அறிமுகப்படுத்த.பிருத்திவியோ இந்த திருமணத்திற்கு தான் வந்ததன் காரணமே அவள் தான் என்று எவ்வாறு கூறுவான்.இருந்தும் சுமி தன்னைக் கண்டதும் குறைந்த பட்சம் அதிர்ந்து போவாள் என்று நினைத்து வந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அவளோ இவனை ஒருபொருட்டாகவே கருதவில்லை.

மனிதர்கள் மனம் தான் எத்தனை வித்தியாசமான ஒன்று எது தன்னை வேண்டாம் என்று ஒதுங்கி போகிறதோ அதன் பின் ஓடுகிறது.ஆம் அதே நிலையில் தான் இப்போது பிருத்திவியும் இருந்தான் சுமித்ரா தன்னை கண்டுகொள்ளாதது அவனுக்கு மனதிற்கு அவ்வளவு பாரமாக இருந்தது.சூர்யாவிடம் கூட இயல்பாக பேசியவள் இவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.அனைவரும் ஒன்றாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு கீழே இறங்க பிருத்திவியின் கால்களோ சுமியின் பின்னே சென்றது.

சுமித்ராவின் பின்னே சென்ற பிருத்திவியை தடுத்த சூர்யா,

“டேய் வா போகலாம்…”என்றான்.அவனும் நன்கு உணர்ந்தான் சுமித்ரா பிருத்திவியை தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை என்று.மனதில் சிறு கோபம் தான் அப்படி என்ன இந்த பெண்ணிற்கு அவன் மீது கோபம் என்று.அவன் எங்கு அறிவான் சுமித்ரா,பிருத்திவியின் கடந்தகால கசப்பை சுமித்ரா மட்டுமே அனுபவித்தாள் என்று.அதனாலே அவனை தன்னிடம் இருந்து தள்ளி நிறுத்தினாள்.

“ப்ச் விடு மச்சி….நான் அவகிட்ட பேசனும்….”என்று பிடிவாதமாக பிருத்திவி கூற,சூர்யாவிற்கோ எங்கே அவள் பிருத்திவியை ஏதாவது மனது புண்படும்படி பேசிவிடுவாளோ என்ற பயம் அதனால் நண்பனை இங்கிருந்து அழைத்து சென்றுவிட வேண்டும் என்ற நோக்கில்,

“இல்ல மச்சி நீ வா போலாம்…”என்று சூர்யா நண்பனின் கையை விடாமல் பேசினான்.ஆனால் அவன் கூறுவதை கேட்கும் நிலையில் தான் பிருத்திவி இல்லை.

“ப்ச்…கைய விடுடா…”என்று கோபமாக கூறியவன் தன் கையை பிடுங்கி கொண்டு சுமித்ரா சென்ற திசை நோக்கி விரைந்தான்.சூர்யாவிற்கு பிருத்திவியின் கோபம் எதனால் என்று புரியவில்லை இருந்தும் நண்பனின் பின்னே சென்றான்.சுமித்ராவை தேடி வந்த பிருத்திவி அவள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அங்கே ஓரமாக நின்று கொண்டான்.அவனின் பின்னே வந்த சூர்யாவும் அவனுடன் நின்று கொண்டு,

“ஏன்டா இப்படி சுத்தர…அவ தான் உன்னை கண்டுக்கவே மாட்டேங்குறாள்ல….விடு டா…”என்று சூர்யா பிருத்திவியின் காதுகளில் கூற,பிருத்திவியோ எதுவும் கூறாமல் சுமித்ராவை பார்த்தபடியே இருந்தான்.சுமித்ரா சாப்பிட்டு விட்டு எழுந்து கை கழுவிட்டு வர,வேகமாக அவளின் குறுக்கே வழியை மறித்தபடி நின்றான் பிருத்திவி.அவன் அவ்வாறு வருவான் என்று எதிர்பாராத சுமித்ரா அவனை மேல் இடிக்காமல் இரண்டடி பின் வைத்தாள்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்….”என்று பிருத்திவி கூற,சுமித்ராவோ அவனை முறைத்தவள்,

“உங்கிட்ட பேச எனக்கு ஒண்ணும் இல்லை மிஸ்டர்.பிருத்தவி….”என்று வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு மேடை நோக்கி சென்றுவிட்டாள்.

பிருத்திவிக்கு சுமித்ராவின் பதிலில் ஆச்சரியம் மேல் ஓங்க செல்லும் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.சூர்யாவோ தன் எதிரே நடப்பவற்றை ஏதோ அதிசயம் போல் பார்த்துக் கொண்டு நின்றான்.ஏன்னென்னாறல் பிருத்திவி யாரிடமும் இவ்வாறு வழிய போய் பேசக் கூடியவன் கிடையாது.அதுவும் தன்னை உதாசீனப்படுத்துபவர்களை திரும்பியும் பார்க்க மாட்டான்.அப்படிபட்டவன் இன்று சுமித்ரா இவ்வளவு பேசிய பிறகும் ஒன்றும் கூறாமல் இருப்பது அவன் மனதில் பல கேள்விகளை தொடுத்தது.

பிருத்திவியிடம் பேசிவிட்டு மேடை ஏறிய சுமித்ரா,மீண்டும் தன் தோழிக்கு ஒருமுறை வாழ்த்து தெறிவித்துவிட்டு,

“கீது…நான் கிளம்புறேன்டி….”என்றாள்.

“என்னடி அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்லர….இன்னும் கொஞ்ச நேரம் இருடி….நிறைய பேசனும்….”என்று கெஞ்ச,

“ஓய்…நாம என்னடி பேச போறோம்…அங்க பாரு உன் ஆள் உன்னையே பார்த்துக்கிட்டு இருக்காரு….அவரு கூட பேசு….”என்று கிண்டல் போல் கூறியவள்,பின்

“இப்ப கிளம்பனா தான் நான் கரெட் டையமுக்கு டிரைன்ல ஏற முடியும்….”என்று கூறிவிட்டு சுதாகரனிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு கீழ் இறங்க,அவளின் எதிரே மீண்டும் நின்றான் பிருத்திவி.அவனை கண்டு கொள்ளாதவள் போல் இவள் தாண்டி செல்ல முற்பட,

“சுமி நில்லு…”என்று பிருத்திவி கத்த,அவளோ எதையும் காதில் வாங்காதவள் போல் மண்டபத்தின் வெளியில் சென்றுவிட்டாள்.பிருத்திவிக்கு தன்னைக் கண்டு கொள்ளாமல் செல்லுபவளைக் கண்டு கோபம் தலைக் கேறியது முயன்று தன்னை கட்டுப்படித்தியவன் வேகமாக அவளின் பின்னே சென்றான்.சூர்யாவும் இவர்களின் பின்னே ஓடினான்.

மண்டபத்தின் வாயிலில் ஏதாவது ஆட்டோ கிடைக்கிறதா என்று சுமித்ரா சாலையை பார்த்துக் கொண்டு இருக்க,அவளிடம் வேகமாக வந்த பிருத்திவி பின்னிருந்து அவளின் கையை வேகமாக பிடித்து இழுக்க இதை எதிர்பாராதவள் அவனின் மேலே மோதி நின்றாள்.

“ஏய் என்ன ரொம்ப ஓவரா பண்ணிக்கிட்டு இருக்க….நான் பேசனும்னு சொல்லுறேன் நீ பாட்டுக்கு போயிக்கிட்டே இருக்க….”என்றவன் அவளது கைகளை அழுத்தமாக பிடித்து உலுக்கியபடி கேட்க.பிருத்தவியின்  இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத சுமித்ரா தன் கைளை அவனிடம் இருந்து விடுவித்துக் கொள்ள போராடி தோற்றுக் கொண்டு இருந்தாள்.அந்தளவிற்கு இரும்பென இறுகி இருந்தது பிருத்திவியின் பிடி.

“பேச விருப்பமில்லைனு சொன்னா இது என்ன அதிகபிரசங்கி தனம் கையை விடுங்க பிருத்திவி….”என்று சுற்றுமுற்றும் பார்துக் கொண்டே கூறினாள் சுமித்ரா.பிருத்திவிக்கு அவளின் தவிப்பு ஏதோ போல் இருக்க,

“நான் சொல்ரத கேட்பேன்னு சொல்லு விடுறேன்….”என்று அப்போதும் தன் காரியத்தில் கண்ணாக கேட்டான்.அதற்குள் இவர்களின் அருகில் வந்த சூர்யா,

“டேய் என்னடா இது சுமி கையை விடு…யாராவது பார்த்த தப்பாயிடும் விடு….”என்று கூற,பிருத்திவியோ பிடிவாதமாக,

“முதல்ல நான் சொல்லரத இவ கேட்க சொல்லு…அப்புறம் விடுறேன்….”என்று கூற.சூர்யாவிற்கோ இவன் ஏன் இவ்வாறு செய்கிறான் என்று தான் இருந்தது.சிறிது நேரம் அவனுடன் போராடிய சுமித்ரா பின் அவனை முறைத்தபடியே,

“சரி நான் கேட்கிறேன்…முதல்ல கையை விடுங்க….”என்று கோபமாக கூறினாள்.அவளுக்கு பிருத்திவியின் இந்த செயல் சற்று பயத்தை கிளப்பியிருந்தது.எப்போதும் தன்னை பார்க்காதவர்களை திரும்பியும் பார்க்காமல் சென்றுவிடுவான் அதனாலே அவள் அவ்வாறு நடந்து கொண்டாள்.அவனை உதாசீனபடுத்தினால் தன்னிடம் பேச முனைய மாட்டான் என்று சுமித்ரா நினைத்திருக்க,பிருத்தவிக்கு அவளின் உதாசினம் தான் மேலும் அவளிடம் பேசியே தீர வேண்டும் என்ற வெறியை உருவாக்கியது என்று அவள் அறியாள்.

சுமித்ரா கூறிய பிறகும் பிருத்திவி அவளின் கையை விடாமல் பிடித்துக் கொண்டு அவளை முறைத்தபடி இருக்க,சூர்யா தான்,

“டேய் அதான் சுமி நீ சொல்லவரத கேட்குறேனு சொல்லுராள்ல…முதல்ல அவள் கையை விடு…”என்று பிருத்திவியின் கைகளில் இருந்த சுமியின் கையை விடுவித்தான்.தன் கை விடுபட்டவுடன் கைகளை நன்றாக உதரியவள்,

“உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா…”என்று கோபமாக பொரிய,

“அவன் உன்கிட்ட நல்ல விதமா தான் பேச வந்தான் நீ தான் அவனை உதாசீனப்படுத்தின….அதனால் தான் இப்படி நடந்துகிறான்….”என்று இம்முறை சூர்யா தன் நண்பனிற்காக பேச,சுமித்ராவோ அவனை தன்னால் முடிந்தமட்டும் முறைத்தாள்.

“இங்க பாரு இந்த முறைக்கிற வேலையெல்லாம் வச்சுக்காத….நீ ஒழுங்கா நான் சொல்லவரதே முன்னாடியே கேட்டுருந்தா…இந்த பிரச்சணையே வந்திருக்காது….”என்று கோபமாக கூறியவன் பின் தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்டு,

“உன்கிட்ட மன்னிப்புகேக்க தான் இவ்வளவு தூரம் வந்தேன்….என்னை மன்னிச்சிடு…அன்னக்கி நான் அமைதியா இருந்திருக்க கூடாது….”என்று மேலும் ஏதோ கூற வர அவன் கூறும் முன் கை உயர்த்தி தடுத்த சுமித்ரா,

“முடிஞ்சு போன விஷயங்களை மீண்டும் கிளற வேண்டாம்….மன்னிப்பு கேக்குற அளவுக்கு நீங்க எந்த தப்பும் பண்ணல…..”என்று கண்கள் சிவக்க கூறியவள் வேகமாக சென்றுவிட்டாள்.

சுமித்ரா சென்ற பிறகும் பிருத்திவி அவள் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டு இருக்க,அவனது தோள்களை தொட்டான் சூர்யா,

“டேய் மச்சி…வா போகலாம்…”என்று அவனை அழைத்துக் கொண்டு தங்கள் பைக் நிறுத்தும் இடத்திற்கு சென்றான்.இருவரும் எதுவும் பேசவில்லை.பிருத்திவி ஏதோ யோசனை செய்தவாறே வர,சூர்யாவோ அவனது முகத்தை பார்த்தவாறே வந்தான்.தங்கள் பைக்கின் அருகில் வந்தவுடன்,சூர்யா அதை சாவிக் கொண்டு இயக்க பிருத்திவி அமைதியாக அமர்ந்து கொண்டு வந்தான்.மண்டபத்திலிருந்து நேராக பிருத்திவியின் அறைக்கு சென்றனர்.வீடு வந்த பிறகும் பிருத்திவி ஏதோ யோசனை செய்த படி இருக்க,

“டேய் என்ன தான் உன் பிரச்சணை….ஏன் இப்படி மூஞ்சிய ஒரு மாதிரி வச்சுக்கிட்டு இருக்க…அதான் அவ நீ எந்த தப்பும் பண்ணலனு சொல்லிட்டு போயிட்டாள்ல….அப்புறம் என்டா ஒரு மாதிரி இருக்க…”என்று சூர்யா நண்பனின் அமைதி கண்டு கேட்டான்.

“ப்ச்….ஒண்ணுமில்ல டா….எவ்வளவு கோபமா பேசிட்டு போறா பாத்தியா….எவ்வளவு கோபம்….மேடத்துக்கு கோபம் வருமுன்றது இப்ப தான் எனக்கு தெரியது…”என்று குறுநகையுடன் பிருத்திவி கூற,சூர்யா அவனை விசித்திரமாக பார்த்தான்.நண்பனின் பாரவை உணர்ந்த பிருத்திவியும்,

“என்னடா அவ என்னை திட்டிட்டு பேறா நான் சிரிச்சிக்கிட்டு இருக்கேன்னு பார்க்குறியா…”என்று கேட்க,சூர்யா பதில் ஏதும் கூறாமல் பார்த்துக்கொண்டு இருக்க,பிருத்திவியோ தன் கட்டிலில் வசதியாக படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்தவறே,

“அதான் மச்சி எனக்கு புரியலை…..நியாமா பார்த்தா எனக்கு கோபம் தான் வரனும்…ஆனா வரமாட்டேங்குது….ஏன் அப்படி…”என்று அவனிடமே கேட்க,சூர்யாவோ நண்பனின் நடவடிக்கையில் விழிகள் விரிய பார்த்துக் கொண்டு இருந்தான்.அவனுக்கு பிருத்திவியின் இந்த பரிமாணம் புதிதாக இருந்தது.அவன் வாயடைத்து போய் பிருத்திவியை பார்த்துக் கொண்டு இருக்க,

“என்னடா இப்படி பார்க்குற….”என்று கேட்டவன்,பின்னே தானே,

“எனக்கே என்னோட செயல் புதுசா தான் இருக்கு…ஏன் அப்படினு தெரியலைடா….”என்றவன் மீண்டும் விட்டத்தை பார்த்தவறே படுத்திருந்தான்.

“டேய் உனக்கு என்ன ஆச்சு…”என்று சூர்யா பயந்தவாறே கேட்க,

“எனக்கே தெரியலைடா…இன்னக்கி ஏதோ ஆகிடுச்சு எனக்கு….ஆனா என்ன ஆச்சுனு தான் புரியலை…”என்று கூற,

“ஏய் நீ சுமித்ராவை….”என்று ஏதோ கேட்க வந்தவன்,பின் பிருத்திவி ஏதாவது கூறிவிடுவானோ என்று அமைதியாக,

“லவ் பன்றேனானு கேட்கிறியா….இல்லைடா எனக்கு இதுவரைக்கும் அப்படி எதுவும் தோணல…ஆனா அவளோட அந்த பாராமுகம் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது….ஏன் தான் புரியலை….”என்று ஏதேதோ கூறி சூர்யாவை நன்கு குழப்பிவிட்டான் பிருத்திவி.

பிருத்திவியும் அதே நிலையில் தான் இருந்தான்.அவன் மனது ஒருநிலையில் இல்லை சுமித்ரா எப்போதும் போல் பேசியிருந்தாள் அவனுக்கு ஒன்றும் தெரிந்திருக்காதோ என்னவோ.அவள் ஏதோ தன்னை கண்டவுடன் ஒதுங்கி சென்றது அவன் மனதை பாத்தித்திருந்தது.அவளது புறக்கணிப்பு தன் மனதை ஏன் இவ்வளவு பாதிக்கிறது என்று தன்னையே கேட்டு கொண்டவன்,மனக்கண் முன் அவளது காதோரம் நடனமாடிய சிறிய ஜிமிக்கி வேறு அடிக்கடி வந்து போய் மனதை மேலும் அலக்கழித்தது.தனக்கு ஏற்படும் இந்த உணர்வு தான் காதலா என்று கேட்டாள் நிச்சியம் இல்லை என்பது தான் அவனின் பதில்.

கல்லூரி காலங்கிளல் சுமித்ரா பிருத்திவிக்கு,நல்ல தோழி.சுமித்ராவின் கல்லம் கபடமற்ற பேச்சு தான் பிருத்திவிக்கு அவளிடம் மிகவும் பிடித்த ஒன்று.அனைத்தும் நல்லதாகவே இருந்திருக்கும் சுமித்ரா பிருத்திவியிடம் தன் காதலை கூறும் வரை.அதன் பின் அனைத்தும் மாறி போனது பேச்சுக்கள் இருவரிடமும் குறைந்தது.

இத்தனைக்கும் பிருத்திவி அவளிடம் எப்போதும் போல் தான் பேசினான் ஆனால் சுமித்ராவால் தான் அவனிடம் இயல்பாக பேசமுடியவில்லை அதனால் அவளே ஒதுங்கிவிட்டாள்.அதன் பின் பிருத்தவியும் ஒதுங்கிவிட்டான்.ஆனால் இன்று அவள் தன்னிடம் இருந்து ஒதுங்கிவது ஏதோ ஒருவகையில் பிருத்திவியை பாதித்தது.அது ஏன் என்று தான் புரியவில்லை.சில உணர்வுகளை உடனடியாக நம்மால் புரிந்து கொள்ள முடியாது காலம் தான் அதனை நமக்கு உணர்த்தும்.

Advertisement