Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 4

பிருத்திவியின் அலுவலகம் அன்று சற்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.இன்று அவர்கள் எதிர்பார்த்த பெரிய புராஜெக்டின் முடிவு தெரியும் நாள் அதனால் அனைவரும் சற்று எதிர்ப்பார்ப்புடன் பிருத்திவியின் அறையை பார்த்துக் கொண்டு இருந்தனர்.பிருத்திவியின் அறையில் சூர்யா சற்று பதட்டத்துடன் அமர்ந்திருக்க பிருத்திவியோ அமைதியாக தனக்கு வந்த மின்னஞ்சல்களை நோட்டமிட்டு கொண்டிருந்தான்.

“என்ன நாம தான் இப்படி டென்ஷனா இருக்கோம் இவன் ரொம்ப கூலா இருக்கான்…”என்று பிருத்திவியை பார்த்தபடி இருந்தான் சூர்யா.தன் மடிக்கணினியில் இருந்து தலைநிமிர்த்திய பிருத்திவி சூர்யா தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு,

“என்னடா…ஏன் என்னையே பார்த்துக்கிட்டு இருக்க….”என்று புன்னகையுடன் கேட்க,சூர்யாவின் நிலை தான் இன்னும் மோசமானது.பிருத்திவியின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை அவனால்.

“சரியான அழுத்தக்காரன்…என்ன நினைக்கிறானு தெரியலையே…இன்னும் ஜே.பி குரூப்-ல் இருந்து எந்த தகவலும் வரதாத பார்த்தா புராஜெக்ட் நமக்கு கிடைக்கலனு தான் தோனுது…ஆனா இவன் என்ன மனநிலையில இருக்கான் தான் தெரியலை….”என்று தனக்குள் புலம்பியபடி இருக்க,சரியாக அப்போது பிருத்திவிக்கு அழைப்பு வந்தது.அவனும் அதை ஏற்று பேசிக் கொண்டிருக்க சூர்யாவோ அவனது முகத்தை தான் பார்த்தபடி இருந்தான்.

“ஓகே சார்…”என்று பேசிவிட்டு பேசியை வைத்தவுடன் அவனிடம் விரைந்த சூர்யா,

“என்னடா அந்த ஜே.பி குரூபிலேந்து போனா….”என்று ஆர்வமாக கேட்க,பிருத்திவியோ இல்லை என்பதாக தலையசைத்தான்.

“டேய் எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு…இன்னுமா டென்டர் ரிசல்ட் வரல….”என்று சூர்யா கேட்க பிருத்திவியோ,

“அது காலையிலேயே வந்துடுச்சுடா…”என்று அவனை அதிர வைத்தான் பிருத்திவி.

“என்னது காலையிலேயே வந்துடுச்சா…ஏன்டா என்கிட்ட சொல்ல…”என்று சூர்யா கேட்க,அவனின் கேள்விக்கு சிரிப்பை மட்டும் பதிலாக தந்தவன்,அனைவரையும் மீட்டிங் ஹாலிற்கு அழைத்தான்.

அனைவரும் மீட்டிங் ஹாலில் குழுமியவுடன்,

“ஹாய் பிரண்ட்ஸ்…எல்லாரும் எப்படி இருக்கீங்க…”என்று பொதுவாக விசாரித்தான்,அனைவரின் நலனை கேட்ட பின்,

“பிரண்ட்ஸ்…நமக்கு அந்த ஜே.பி குரூப் புராஜெக்ட் கிடைக்கல….”என்று நேரிடையாக விஷயத்தை போட்டு உடைத்தான்.ஆம் பிருத்திவி காலையில் வந்தவுடனே அவனது மின்னஞ்சலில் அவனுக்கு தகவல் வந்திருந்தது.அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று.பிருத்திவிக்கு அதை படித்தவுடன் சிறு ஏமாற்றம் ஏற்பட்டது என்னவோ உண்மை தான்,ஆனால் அந்த ஏமாற்றம் ஜே.பி குரூப்பின் சேர்மென் கங்காதரன் தனக்கு அழைத்து பேசும் வரைதான்.

பிருத்திவி ஏமாற்றமாக உணர்ந்தது சில நொடிகளே பின் தன்னை மீட்டுக் கொண்டு தன் வேலையில் ஆழ்ந்த சில நிமிடங்களில் அவனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வரவும் எடுக்க,மறுமுனையில் பேசியவர் கங்காதரன்,பொதுவாக விசாரித்தவர் பின் டென்டர் விஷயத்திற்கு வந்தார்,

“மிஸ்டர்.பிருத்திவி…உங்க டென்டர் கோட்டிங் எல்லாம் பார்த்தேன்…நல்லா பண்ணியிருந்தீங்க….நாங்க செலக்ட் பண்ணதுல உங்களோடது ரெண்டாவது இடத்துல இருந்துச்சு…சில காரணங்களால உங்களுக்கு டென்டர் கொடுக்க முடியலை..பட் யூ டன் இட் வெல் மேன்….நான் கூட இந்த மாதிரி சின்ன கம்பெனி எப்படி கொடுப்பீங்க பார்க்க தான் உங்க புரோப்போஸல்ல ஒத்துக்கிட்டேன்….பட் உங்க அவுட் கம் நல்லா இருந்துச்சு…அதனால தான் நானே தனிப்பட்ட முறையில உங்கள கூப்பிட்டேன்…வாழ்த்துக்கள் மேன்…”என்று கூறிவிட்டு பேசியை அனைக்க பிருத்திவிக்கு மனதில் இவ்வளவு நேரம் அழுத்திய பாரம் விலகியது போல் ஒரு உணர்வு.

இவை அனைத்தையும் தன் அலுவலக நண்பர்களிடமும் பகிர்ந்தவன் பின் அனைவரிடமும்,

“வெல்டன் பிரண்ட்ஸ்….நமக்கு புராஜெக்ட் கிடைக்கல அப்படின்றது வருத்தமா இருந்தாலும்,நம்மளோட உழைப்பு வீணாகல…..எனக்கு என் டீம் மேல இன்னும் நம்பிக்கை கூடி தான் போச்சு….நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…”என்று கூறிவிட்டு அனைவர் முகத்தையும் பார்க்க அவர்களுக்கும் சிறிய மகிழ்ச்சி.நமக்கு புராஜெக்ட் கிடைக்கவில்லை என்றாலும் தாங்கள் பந்தையத்தில் தோற்றகவில்லை என்று புரிந்தது.பின் அனைவரும் தங்கள் வேலையை பார்க்க தொடங்க சென்ற பின் மீட்டிங் ஹாலில் பிருத்திவி மற்றும் சூர்யா மட்டுமே இருக்க சூர்யாவோ,பிருத்திவியை முறைத்தபடி இருந்தான்.அவனின் முறைப்பை சட்டை செய்யாதவன்,

“டேய் மச்சி…இன்னைக்கு வெளில போகனும் டா கிப்ட் வாங்க…”என்று கூற,சூர்யாவிற்கு இவன் என்ன பேசுகிறான் என்றே புரியவில்லை.அதனால் திருதிருவென முழிக்க செல்லமாக அவனின் தலையில் தட்டிய பிருத்திவி,

“டேய் என்ன மறந்துட்டியா…நாளைக்கு கீதா கல்யாணம் இருக்கு அதுக்கு தான் கிப்ட் வாங்க கூப்பிடுறேன்….”என்று கூற,சூர்யாவிற்கு அப்போது தான் நியாபகமே வந்தது,

“டேய் உனக்கு வருத்தமா இல்லையா…”என்று கேட்க பிருத்திவியோ அவனின் தோள்களை அனைத்தபடி,

“டேய் இது ஒரு பந்தயம் மாதிரி தான் உடனே வெற்றி கிடைச்சிட்டா…அதோட மதிப்பு நமக்கு தெரியாது….பல தோல்விகளை அடைஞ்சு வெற்றி பெற்றா தான் அதுக்கு மதிப்பு….”என்று பெரிய மனிதன் போல கூற சூர்யாவிற்கு இந்த பிருத்திவி வேறு விதமாக தெரிந்தான்.அதாவது சரியாக கூறவேண்டும் என்றால் பழைய பிருத்திவியாக,ஆம் பிருத்திவி எப்போதும் இப்படி தான் மிகவும் நிதானமாக யோசிப்பான்.அதுவே அவனுக்கு பல நேரங்களில் பக்க பலமாக இருந்திருந்தது.

பிருத்திவியின் தாய்,தந்தையின் இறப்பிற்கு பிறகு தான் அவன் தன் இயல்பை துளைத்திருந்தான்.எங்கும்,எதிலும் கோபம்,விரக்த்தி என்று முற்றுலும் வேறு ஒருவனாக தான் மாறிபோனான்.நெடுநாட்களுக்கு பிறகு நண்பனை பழைய படி பார்த்ததில் சூர்யாவிற்கு மனநிறைந்து போனது.சூர்யா தன்னையே பார்பதைக் கண்ட பிருத்திவி,

“டேய் நீ சரியில்ல…”என்று அவன் முன் சொடுக்கிட்டு கூற,அவனது பேச்சை முதலில் கவனிக்காதவன்,

“என்னடா சொன்ன…”என்று கேட்டு வைத்தான்.அதில் மலர்ந்து இருந்த பிருத்திவியின் முகம் மேலும் விரிய,

“ஒண்ணுமில்லை டா…”என்று நமுட்டு சிரிப்புடன் கூற,அவன் கூறியதிலேயே தெரிந்தது ஏதோ ஏடாகூடமாக பேசியிருக்கிறேன் என்று புரிய,

“டேய் என்னடா சொன்ன சொல்லு…”என்று பிடிவாதமாக கேட்க,பிருத்திவி தான் கூறியதை கூற அவனை தோள்களில் சாத்தினான் சூர்யா.பின் இருவரும் கீதாவின் திருமணத்திற்கு கிப்ட் வாங்கிவிட்டு வீடு சென்றனர்.மறுநாள் விடியல் தன் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டுவர போவது தெரியாமல் நல்ல உறங்கினான் பிருத்திவி.

வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாவும்,சுதர்சனும் வீற்றிருக்க,இருவரும் நலமுடன் வாழவேண்டும் என்பதற்காக ஐயர் மந்திரங்களை ஓதிக் கொண்டு இருந்தார்.இவற்றை எல்லாம் கீழே அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர் நண்பர்கள் இருவரும்.சூர்யா கருமசிரத்தையாக மணமக்களை பார்த்தபடி இருக்க,பிருத்திவி மணமக்களை பார்பதும் பின் சுற்றம் பார்பதுமாக இருந்தான்.

ஏதெச்சையாக பிருதிவியைக் கண்ட சூர்யா,அவன் பக்கவாட்டில் யாரையோ பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு,

“யாரை டா தேடிக்கிட்டு இருக்க…”என்று கேட்க,பிருத்திவி பதில் கூறாமல் தங்களுக்கு எதிரில் இருந்த மகளிர் இருக்கையில் இரண்டாவது வரிசையை பார்த்துக் கொண்டு இருந்தான்.அவன் தேடும் ஒருவள் அங்கு தான் அமர்ந்திருந்தாள் ஆனால் அவனுக்கு அவளின் பக்கவாட்டு தோற்றம் பாதி தான் தெரிந்தது.அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணி சற்று பருமனாக இருந்ததால் அவனுக்கு சரியாக தெரியவில்லை.

தன் கேள்விக்கு பதில் கூறாமல் எங்கோ பார்த்துக் கொண்டு இருந்த நண்பனை உலுக்கிய சூர்யா,

“டேய் யாரை டா தேடுக்கிட்டு இருக்க…”என்று மீண்டும் கேட்க,

“ப்ச்…இருடா நானே அது அவ தானானு சரியா பார்க்க முடியாம இருக்கேன்…”என்று கூற,சூர்யாவிற்கு  இவன் யாரைக் கூறுகிறான் என்று தலையும் புரியவில்லை காலும புரியவில்லை.

“என்னடா சொல்லுற…”என்று மீண்டும் கேட்க,அப்போது பிருத்திவியின் முகத்தில் சிறிய புன்னகை தெரிந்தது.அவன் கண்ட திசையில் பார்வையை திருப்பியவனின் கண்களில் விழுந்தாள் சுமித்ரா.அவர்களுக்கு எதிர்புறம் இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தாள்.

பிருத்திவியின் கண்களில் அவளது காதுகளில் அசைந்தாடும் ஜிமிக்கி கண்களை கவர,அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.பிருத்திவிக்கு தன் கண்களை அவளிடம் இருந்து எடுப்பது மிகவும் சிரமமாக போனது.அவனது மனதில் ஒரு புதுவித பரவசம் உண்டாவதை போல் உணர்ந்தான்.என்ன இது இப்படி அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறோமே என்று அவனது அறிவு அவனுக்கு எச்சரிக்கை செய்தாலும் மனது அதை ஏற்க மறுத்தது.

சூர்யவோ பிருத்திவியின் முகத்தில் வந்து போன உணர்வுகளை படிக்க முயன்று தோற்றவன்.அவனை உலுக்கி,தன்புறம் திருப்பினான்.தன் கவனம் சிதறியதால் கடுப்பான பிருத்திவி,

“ப்ச் என்னடா…”என்று சற்று கடுப்பாகவே கேட்க,சூர்யாவோ அவனை முறைத்தவரே,

“இப்ப எதுக்கு நீ சுமியே பார்த்துக்கிட்டு இருக்க…”என்று கேட்டான்.சூர்யா பிருத்திவி சுமித்ராவை ரசிக்கும்படி பார்க்கிறான் என்று எல்லாம் நினைக்கவில்லை.ஏற்கனவே இருவருக்கும் சில காரணங்களால் முட்டிக் கொண்டனர் அதே போல் இன்றும் ஏதாவது நடந்துவிடுமோ என்று பயம்.பிருத்திவி சூர்யா கேட்டதற்கு பதில் கூறாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருக்க சூர்யாவிற்கு மேலும் பயம் பிடித்துக் கொண்டது.

“டேய் ஏன்டா இப்படி பார்த்துக்கிட்டே இருக்க…திரும்பியும் நீ ஏதும் ஆரம்பிச்சிடுடாதடா….”என்று கெஞ்சம்படியாக கேட்டான்.

“டேய் நீ ஏன் இப்படி பயப்படுற…”என்று பிருத்திவி நண்பனின் திடீர் பயத்தில் யோசனையாக கேட்க,

“டேய் எனக்கு தெரியும் அன்னக்கி காலேஜ்ல சுமி தான் அப்படி பண்ணானு…..நீங்க எல்லாரும் அவளை எங்க கொண்டுபோய் நிறுத்தீனங்கனு…..நான் அன்னக்கி காலேஜ் வரலை அதனால் எனக்கு முழுவிபரம் தெரியலை…”என்று மேலும் என்ன என்ன கூறியிருப்பானோ,அவனது பேச்சை இடைமறித்த பிருத்திவி,

“டேய் நீ ஏன் இப்ப பழசை பத்தி பேசிக்கிட்டு இருக்க…..நானே அவகிட்ட மன்னிப்பு கேட்கனும் தான் பார்த்தேன்….”என்றான்.நீ உண்மையிலேயே அதனால தான் அவளை அப்படி பார்த்தியா என்று அவனது மனசாட்சி அவனிடம் கேள்வி எழுப்பியது அதை முயன்று ஒதுக்கினான்.சூர்யா தன்னை நம்பாமல் பார்பதை உணர்ந்த பிருத்திவி,

“டேய் நிஜமா…நான் அவகிட்ட மன்னிப்பு கேட்க தான் அவளை பார்த்தேன்…”என்று தலையில் சத்தியம் குறையாக கூறியபின் தான் விட்டான்.

திருமணம் இனிதே முடிந்ததது மணமக்களுக்கு பரிசுகளை கொடுத்தபடி சொந்தங்கள் இருக்க சூர்யா பிருத்திவியை அழைத்தான்.பிருத்திவியோ சுமித்ரா எப்போது மேடை ஏறுவாள் என்று அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“டேய் என்ன அவளையே பார்க்குற…வா போய் கிப்ட் கொடுத்துட்டு வரலாம்…”என்று மீண்டும் அழைக்க,

“ப்ச் இருடா….சுமித்ரா ஏறும் போது நாமும் போவோம்…”என்று கூற சூர்யாவிற்கு இவன் மீண்டும் எதை இழுக்கபோகிறான் என்கிற பயம் தான் மேலும் அதிகமானது.

இதை எதையும் அறியாது தன் தோழியின் திருமணத்தை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் சுமித்ரா.கழுத்தில் சிறிய செயின்,காதில் சிறிய ஜிமிக்கி,கைகளில் ஒரு பக்கம் வளையல்,ஒரு பக்கம் வாட்ச் என்று மிக சாதாரணமாக இருந்தாள்.அவள் எப்பொதும் இப்படி தான் தன்னை அழுகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லாம் நினைக்கமாட்டாள்,தவிர அவளுக்கு அது வரவும் வராத ஒன்று.நடுத்தர உயரம்,அளவான முடி என்று மிக சாதாரணமாக தோற்றமளிக்கும் பெண்.

தோழியின் திருமணம் என்பதால் பச்சை பட்டு உடுத்தியிருந்தாள் அது அவளுக்கு பொருத்தமாக இருந்தது.என்ன முன்பு இல்லாது ஒன்று தற்போது அவளிடம் இருந்தது.அது நிமிர்வு,எதையும் தாங்கும் மனவலிமை இவை இரண்டும் வாழ்க்கை அவளுக்கு கற்று தந்த பாடம்.அதுவே அவளை சற்று பொலிவாக காட்டியது.யாரை தன் வாழ்நாளில் இனி பார்க்க போவதில்லை என்று நினைத்திருந்தாளோ அவனை இன்னும் சில நிமிடங்களில் காணபோகிறது தெரியாமல்.தோழியின் மலர்ந்த முகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

சிலநேரங்களில் வாழ்க்கை விசித்திரமானது சிலருக்கு பல துன்பங்களை தந்தாலும் அவர்களை அதில் மூழ்க விடாமல் ஊன்றுகோள் ஒன்றை தந்து கரைசேர்த்துவிடும்.இதில் பிருத்திவியின் ஊன்றுகோளாக சுமித்ரா மாறுவாளா,இல்லை சுமித்ராவின் ஊன்றுகோளாக பிருத்திவி மாறுவானா என்பதை காலம் தான் கூற வேண்டும்.   

Advertisement