Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 3

காலை எப்போதும் எழும் நேரத்திற்கு எழுந்துவிட்டான் பிருத்திவி.இரவு நல்ல உறங்கியதின் பலன் காலை உடல் மற்றும் மன சோர்வு நீங்கி இருந்தது.தன் கட்டிலில் இருந்து எழுந்தவன் தன் கை,கால்களை அசைத்து சோம்பல் முறித்திவிட்டு தன் நண்பனை காண,அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

பிருத்திவியின் முகத்தில் சிறிய புன்னகை மலர்ந்தது.இன்று ஞாயிறு என்பதால் நிதானமாக தன் காலை கடன்களை முடித்துவிட்டு வெளியில் வந்தான்.அப்போதும் சூர்யா நல்ல உறக்கத்தில் இருக்க குனிந்து அவனது  சோர்ந்த முகத்தை பார்த்த பிருத்திவிக்கு மனதில் குற்ற உணர்வு.தன்னால் தன் நண்பனும் கஷ்டபடுகிறானே என்று பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன்,பால் வாங்க சென்றான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சூர்யாவை எழுப்பியது அவனது கைபேசியின் ஒலி.அரை தூக்கத்தில் அதை எடுத்தவன் காதுக்கு வைக்க,

“என்ன சார் இன்னும் தூக்கம் போகலையா…”என்று நக்கலாக கேட்டாள் அனிதா.சூர்யாவோ அதே தூக்க நிலையில்,

“ம்ம்…ஆம் பேபி…”என்று கூற,அவனது பதிலில் கடுப்பான அனிதா,

“டேய்..இப்ப எந்திரிச்சு பத்து நிமிஷத்துக்குள்ள வீட்டுக்கு வரல…”என்று மிரட்டல் போல கூற,சூர்யாவும் தூக்கம் கலைந்து,

“வரலனா என்னடி பண்ணுவ…”என்று சவால் விடுவது போல கேட்க,

“நான்,அத்தையை கூட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு போயிடுவேன்…அப்புறம் நீ தனியா திண்டாடனும் பார்த்துக்கோ…”என்றுவிட்டு அவனின் பதிலை எதிர்பாராமல் வைத்துவிட்டாள்.

சூர்யா எங்க அவள் கூறியது போல் செய்துவிடுவாளோ என்று அஞ்சி வேகமாக எழுந்து குளியல் அறைக்கு செல்ல,இதை அனைத்தையும் மலர்ந்த முகத்துடன் இருவருக்கும் காபி தயார் செய்து கொண்டிருந்தபடி பார்த்துக் கொண்டு இருந்தான் பிருத்திவி.அவன் சூர்யா பேசியை வைக்கு முன் வீடு வந்தவன்,நண்பனின் அதிர்ந்த முகத்தைக் கண்டே புரிந்து கொண்டான் அனிதா தான் பேசியிருப்பாள் என்று.இது ஒவ்வொரு முறையும் நடக்கும் கூத்து தான்.

சூர்யாவின் சொந்த தாய் மாமன் மகள் தான் அனிதா.இருவருக்கும் சிறு வயதில் இருந்தே பிடித்தம்,அதுவே காதலாக மாறியது..சூர்யாவின் அப்பா இருந்த வரை அவர்களுக்கு பணத்திற்கு பிரச்சனை இல்லாமல் தான் இருந்தனர்.அவர் இறந்த உடன் சூர்யாவிற்கு பண பிரச்சனை முளைத்தது.எங்கே தன்னிடம் வந்துவிடுவானோ என்று பயந்தே உறவுகள் ஒதுங்கினர்.

அனிதாவின் அப்பா மட்டும் தன்னால் ஆன உதவிககளை செய்வார்.அனிதா வீடு நடுத்தர வர்க்கம்,அதோடு அவருக்கு இரு பெண் பிள்ளைகள்.அவரின் வருமானத்தை நம்பி தான் அவரது குடும்பமும் இருந்தது என்பதால் தன்னால் முடிந்த வரை செய்வார்.சூர்யாவும் சரி,அவனின் அம்மா திலகவதியும் சரி அனாவசியமாக அவரிடம் உதவி கேட்கமாட்டனர்.அதுவே அவர்கள் மேல் நன்மதிப்பை கொடுத்திருந்தது.அதனாலே சூர்யா வேலையில் அமர்ந்தவுடன் தன் இளைய மகள் அனிதாவின் விருப்படியே அவளை சூர்யாவிற்கு மணமுடித்து கொடுத்தார்.

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வந்த சூர்யா வேகாமாக கண்ணாடி முன் நின்று தலைவார அவன் முன்னே காபியை  நீட்டினான் பிருத்திவி.சூர்யாவிற்கு அப்போது தான் பிருத்திவியின் நியாபகமே வந்தது.ஏனென்றால் அவன் தான் தன் மனைவி தந்த அதிர்ச்சி வைத்தியத்தில் இருந்தானே.பின்னே அனிதாவும்,திலகாவும் அவன் மாமா வீட்டுக்கு சென்றுவிட்டால் திரும்பி அழைத்துவருது மிகவும் கடினம் பின் இவன் பாடு தான் திண்டாட்டம் ஆகிவிடும் அதனால் எப்போதும் சூர்யாவை மடக்க அனிதா இந்த வார்த்தை தான் உபயோகிப்பாள்.

தன் கையில் உள்ள காபியை வாங்காமல் ஏதோ யோசனையில் இருந்த நண்பனை கண்டு புன்னகைத்தவாரே,

“என்ன மச்சான் இன்னும் தூக்கம் தெளியலையா….இரு அனிதாவுக்கு போன் போடுறேன்….”என்று பிருத்திவி கூற,சூர்யவோ அனிதா என்ற பெயரைக் கேட்டவுடன்,

“டேய் நல்லவனே….அதை மட்டும் செஞ்சிடாதடா…உனக்கு புண்ணியமா போகும்….”என்று கை எடுத்து கும்பிடு வைக்க,பிருத்திவி சிரித்தவாறே,

“சரி சரி பொழைச்சு போ…இந்தா காபியை குடிச்சிட்டு போ…”என்று கொடுக்க சூர்யாவும் மறுக்காமல் வாங்கி பருகியவன் சிறிது நேரம் நாளை வேலைகளை பற்றி பேசிவிட்டே சென்றான்.

சூர்யா சென்றவுடன் காலை உணவை கடையில் வாங்கி உண்டான்.பின் அறையை சுத்தப்படுத்திவிட்டு துவைக்க வேண்டிய துணிகளை எல்லாம் துவைத்து போட்டான்.எப்போதும் ஞாயிறு வந்தால் அவனுக்கு வீட்டை ஒழுங்கு படுத்த,துணிகளை துவைக்க என்று அதற்கே நேரம் மதியம் வரை சென்றுவிடும்.பின் மதிய உணவை உட்கொண்டு சற்று நேரம் ஓய்வெடுப்பவன்,பின் அடுத்த வாரத்திற்கான துணிகளை இஸ்திரி செய்து எடுத்து வைத்துவிட்டு,மாலை போல தன் சொந்த வீட்டிற்கு செல்வான்.

பிருத்திவி வீட்டை சக்கரவர்த்திக்கு அடமானம் வைத்திருந்தாலும் வீட்டில் யாரும் இல்லை.பிருத்திவி தான் எப்போதும் ஞாயிற்றுகிழமைகளில் சென்று வீட்டை சுத்தப்படுத்திவிட்டு வருவான்.சில சமயங்களில் சூர்யாவும் அவனுடன் வந்து வீட்டை சுத்தம் செய்வான்.

சக்கரவர்த்தி முதலில் பிருத்திவியிடம் நீ இதே வீட்டில் இருந்துகொள் என்று தான் கூறினார்.ஆனால் பிருத்திவி தான் பிடிவாதமாக மறுத்துவிட்டான்.அவனுக்கு மனதில் இந்த வீட்டை மீட்கவேனும் தான் சம்பாதிக்க வேணடும் என்று உறுதி.எங்கே நாம் அதே வீட்டில் இருந்தால் நம் குறிகோளின் வேகம் குறைந்துவிடும் என்று தான் வெளியே இருப்பது.

முதலில் மறுத்த சக்கவர்த்திக் கூட அவனின் மனதை அறிந்தபின் கட்டாய படுத்தவில்லை.பிருத்திவியும் தனக்கு வரும் வருமானத்தில் தன் தேவைக்கு போக மீதி வருமானத்தை சக்கவர்த்திக்கு அனுப்பிவிடுவான்.இதனால் ஒரளவிற்கு சக்கரவர்த்திக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்திருந்தான்.தன் வீட்டை சுத்தபடுத்திவிட்டு தன் அறைக்கு திரும்பிய பிருத்திவிக்கு தன் போல் உடல் சோர்ந்து போனது.

இரவு உணவை எளிமையாக முடித்துக் கொண்டவன் தன் படுக்கையில் விழ அதீத உடல் உழைப்பின் சோர்வு அவனை ஆட்கொள்ள தன் போல் தூக்கம் அவனை ஆட்கொண்டது.

காலை ஒன்பது மணிக்கெல்லாம் தன் அலுவலகத்தில் இருந்தான் பிருத்திவி.அவனது அலுவலகம் கிண்டியில் இருந்தது.அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் பல நிறுவனங்கள் இயங்குகின்றன,அதில் நம் பிருத்திவியின் ப்ரெண்ட்ஸ் மென்பொருள் நிறுவனமும் ஒன்று.நிறுவனத்தின் சரிபாதியாக சூர்யாவும் இருந்தான்.தன் முன்னேற்றத்தின் உறுதுணையாக இருந்த சூர்யா,சக்கரவர்த்தி போன்ற தோழமை உள்ளங்களிற்காகவே இந்த பெயரை தேர்வு செய்தான்.

பிருத்திவியின் அலுவலகம் சிறியது தான்.மொத்தம் பத்து பேர் தான் அங்கு வேலை செய்கின்றனர்.அவர்களுக்கு இன்றளவும் எதிர்ப்பார்த்த அளவு பெரிய புராஜெக்ட் கிடைக்காத காரணத்தால் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருந்தனர்.இவர்களுடன் வேலை செய்யும் பத்து பேரில் ஐந்து பேர் பொறியியல் கடைசி வருடம் படிக்கும் மாணவர்கள்.வீட்டின் சுமை போக்க பகுதி நேர வேலை பார்ப்பவர்கள்.

காலைவேளை முடிக்கவேண்டிய வேலைகளை பட்டியல் இட்டபடி பிருத்திவி இருக்க சூர்யாவும் அவனுடன் இணைந்து கொண்டான்.இவர்கள் இருவருக்கும் நேரம் என்பது கிடையாது சிலநேரங்களில் அலுவலகம் தான் இவர்களின் வீடு என்று கூறலாம்.ஆனால் மற்றவர்களுக்கு காலை பத்து மணிக்கு தொடங்கி இரவு ஏழு மணி வரை வேலை நேரம் வரையறுத்து இருந்தனர்.அனைவரும் அவர்களின் நேரத்திற்கு வந்தவுடன் அவர்களை மீட்டிங் ஹாலிற்கு அழைத்தான் பிருத்திவி.

மீட்டிங் காலில்,

“குட் மார்னிங்…பிரெண்ட்ஸ்….”என்று மலர்ந்த முகமாக அனைவருக்கும் காலை வணக்கம் வைத்தவன்,அதே புன்னகையுடன்,

“பிரெண்ட்ஸ்….நம்ம எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ்…”என்று பீடிகையுடன் நிறுத்த மற்றவர்கள் ஆர்வமாக,

“என்ன சார் சொல்லுங்க….”என்று ஆர்வமாக கேட்டனர்.

பிருத்திவி அனைவர் முகத்திலும் தெரிந்த ஆர்வத்தைக் கண்டு உற்சாகத்துடன்,

“பிரெண்ட்ஸ்….இவ்வளவு நாள் நாம எதிர்பார்த்த மாதிரி பெரிய புராஜெக்ட் கிடைக்க போகுது….பெங்களூர்ல இருக்குர ஜே.பி குரூப் கம்பெனி பத்தி உங்க எல்லாருக்கும் தெரியும்…அவங்க இங்க சென்னையிலும் ஒரு பிராஞ்ச் ஓபன் பண்ண போறாங்க….அதுக்கு நாம டென்டர் கொடுக்க போறோம்…”என்று கூற அனைவர் முகமும் மலர்ந்தது.

ஜே.பி குரூப் பெரிய தொழில் குடும்பம்.அவர்களின் கீழ் பல தொழில்கள் உள்ளன.அதில் டென்டர் கொடுக்கவே முன் அனுமதி தேவை.அதில் தங்களுக்கும் அனுமதி கிடைத்ததே பெரிய வரம் போன்று தான் என்று கருதினர்.அவர்கள் அனைவருக்கும் எப்படியாவது இதில் வெற்றி பெற வேண்டும் என்று உத்வேகம் இருந்தது.

அனைவரும் என்ன செய்ய வேண்டும் கேட்க தொடங்கினர்.யாருக்கும் பயமோ,தடுமாற்றமோ இல்லை.அவர்களின் ஈடுபாட்டைக் கண்ட பிருத்திவிக்கு திருப்தியாக இருந்தது.

பிருத்திவியும் இதை தான் எதிர்பார்த்தான்.பெரிய புராஜெக்ட் என்றவுடன் யாரும் பயப்படுகிறார்களா என்று தான் கவனித்தான்,அப்படி ஒன்று யாரின் முகத்திலும் தென்படவேயில்லை.அதில் ஒருவித பெருமிதம் அவனுக்கு.இவர்களை வேலைக்கு எடுக்கும் போதே கூறியிருந்தான் இது இப்போது ஆரம்பிக்கும் புதிய கம்பெனி அதனால் தங்கள் பெயரை நிலைநாட்ட அதிக அளவில் சாவல்களை சந்திக்க வேண்டி வரும் அதை எதிர்கொள்ள தயாராக இருந்தால் மட்டும் வேலைக்கு சேரலாம்.இல்லையென்றால் வேறு வேலை தேடி கொள்ளுங்கள் என்று கூறி அவர்களிடம் கையோப்பமும் வாங்கி இருந்தான்.

அலுவலகத்தின் உரிமையாளர் பிருத்திவி தான் என்ற போதிலும் தனக்கு கீழ் வேலை செய்பவர்களை தனது நண்பர்களை போலவே அரவணைத்து செல்வான்.அதனாலே அங்கு வேலை செய்பவர்கள் அனைவருக்கும் பிருத்திவியின் மேல் தனி மரியாதை.அதிலும் அந்த மாணவர்களுக்கு பிருத்திவி என்றால் தனி பிரியம் உண்டு.அதற்கு காரணம் பிருத்திவி அவர்களுக்கு வேலை மட்டும் கத்துக்கொடுக்காமல் அவர்களின் இறுதி வருட புராஜெக்டிற்கும் உதவியும் செய்கிறான்.

அனைவருக்கும் அவர்களுக்கான வேலையை பகிர்ந்து கொடுத்துவிட்டு தன் இருக்கையில் வந்து பிருத்திவி அமர ,அவனின் பின்னே வந்த சூர்யா,

“டேய் மச்சான் எனக்கு ஒரு டவுட் டா…”என்று கேட்க,அவன் என்ன கேட்க போகிறான் என்று தெரிந்து போதிலும் சிரித்துக் கொண்டே,

“கேளு மச்சி…”என்றான்.

“டேய் எப்படி டா…நீ டென்டர் பண்ண அனுமதி வாங்குன…”என்று பிருத்திவி நினைத்தது போல கேட்க,அவனும்,

“டேய் நான் அந்த ஜே.பி குரூப் சேர்மேன் கங்காதரனை சந்தித்தேன் டா….அவரு எப்போதும் வர ஹோட்டலுக்கு நானும் சாதாரணமா போற மாதிரி போயி அவர் கிட்ட பேசினேன்…அவர் நீங்க டென்டர் கோட் பண்ணுங்க பார்க்கலாம்னு சொல்லி அனுமதி கொடுத்தார்….”என்று கூற சூர்யா நண்பனை கட்டிக் கொண்டு சுற்றினான்.

“டேய் மச்சான்…சூப்பர் டா….எனக்கு நம்பிக்கையிருக்கு டா….கண்டிப்பா நமக்கு டென்டர் கிடைக்கும்…”என்று நம்பிக்கையாக கூறியவன்,நண்பனின் மலர்ந்த புன்னகையைக் கண்டு,

“டேய் மச்சி….நீ உன் வாழ்க்கை இனி நல்ல இருக்கும்னு என் மனசுக்கு தோணுதுடா…”என்று மனதார கூற,நண்பனின் அன்பில் நெகிழ்ந்த பிருத்திவியும்,

“என் வாழ்க்கை இல்லைடா நம்ம வாழ்க்கை நல்லா தான் இருக்கும்…”என்று திருத்தி கூறினான் பிருத்திவி.பின் இருவரும் தங்களின் வேலையில் மூழ்கினர்.அன்று இரவு ஒன்பது மணிவரை வேலையிருந்தது இருவருக்கும்.பின் இருவரும் அவரவர் இருப்பிடம் சென்றனர்.இதே போல் மூன்று நாட்கள் வேலையில் மும்மரமாக இருந்தனர் அனைவரும்.

பிருத்திவி நினைத்தற்கு ஒருபடி மேலே அனைவரும் உழைத்திருந்தனர்.டென்டர் அனுப்பவேண்டிய நாளிற்கு ஒருநாள் முன்பே அனைத்தையும் சரிபார்த்து இரவே ஜே.பி குரூப்பிற்கு அனுப்பிருந்தான்.அதன் முடிவு ஒரு வாரம் கழித்து தான் அறிவிக்கப்படும்.அலுவலகத்தில் அனைவரிடம் டென்டர் அனுப்பிவிட்டதை அறிவித்தவன்,அதன் முடிவு வரும் வரை முடிக்கவேண்டிய வேலைகளை முடிக்கும் படி கூறினான்.புராஜெக்ட் ஒருவேலை தங்களுக்கு கிடைத்தால் மற்ற வேலைகளை பார்ப்பது சற்று கடினமாக இருக்கும் என்பதால் மற்ற முடிக்க வேண்டிய வேலைகளை முன்பே முடிக்க வேண்டும் என்று நினைத்தான்.இவ்வாறு ஒருவாரம் சென்றது.அன்று ஞாயிறு எப்போதும் போல் வீட்டு வேலைகளை சீக்கரம் முடித்த பிருத்திவி,

“டேய் சூர்யா…எங்கடா இருக்க…பிஸியா…”என்று தன் கைபேசியில் கேட்க,சூர்யா அப்போது தன் மனைவி மற்றும் தாயை மாமன் வீட்டில் வீட்டுவிட்டு வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினான்.அவனை ஒரு மாலின் பெயரைக் கூறி அங்கு அழைத்தான் பிருத்திவி,சூர்யா நேரே அங்கு வந்துவிடுவதாக கூறிவிட்டு வைத்தான்.

மாலில் புட்கோர்ட்டில் அமர்ந்திருந்தனர் நண்பர்கள் இருவரும்.சூர்யா,

“டேய் மச்சி நாளைக்கு டென்டர் பத்தி ரிசல்ட் தெரிஞ்சிடும் டா….”என்று சற்று பதட்டத்துடன் கூற பிருத்திவியோ,

“ம்ம்…”என்று கூறியதோடு நிறுத்திக் கொண்டான்.அவன் என்ன நினைக்கிறான் என்று சூர்யாவால் கணிக்க முடியவில்லை.அதனால் பிருத்திவியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க பிருத்திவியோ,

“டேய் மச்சான் என்னை ஏன் டா இப்படி பார்க்குற…”என்று புன்னகைத்தவறே கேட்டான்.

“டேய் மச்சான் நீ தைரியமா தான இருக்க…”என்று தன் சந்தேகத்தை கேட்க,அவன் முன்பு நடந்த விஷயங்களினால் இவ்வாறு கேட்கிறான் என்று புரிந்து கொண்ட பிருத்திவியும்,

“டேய் மச்சி…நான் தைரியமா தான் இருக்கேன்…இந்த டென்டர் கிடைச்சா சந்தோஷம் தான் கிடைக்கலனா கண்டிப்பா உடைய மாட்டேன்..அடுத்த என்ன செய்யனும் தான் நான் யோசிப்பேன்…”என்று தெளிவாக கூற கேட்ட சூர்யாவின் மனதிற்கு இதமாக இருந்தது.இருவரும் பொதுவாக பேசிக் கொண்டிருந்தபோது,

“ஹாய் பிருத்திவி,ஹாய் சூர்யா…”என்று ஒரு பெண்ணின் குரல் கேட்கவும் இருவரும் திரும்ப,அங்கே அவர்களை கண்டு புன்னகைத்தவாறே நின்றிருந்தாள் அவர்களின் கல்லூரி தோழி கீதா.

“ஹேய் நீ கீதா தான…”என்று பிருத்திவி கேட்க,ஆம் என்று தலையாட்டியவள்,அவர்களின் அருகில் வர அவளின் பின்னே ஒரு ஆடவனும் வந்தான்.அவர்களின் டேபிலில் அமர்ந்த கீதா,

“ஹேய்…இது என் வருங்கால கணவர் சுதர்சன்…”என்று அந்த ஆடவனை அறிமுகப்படுத்தினாள்.அவனும் இவர்களை கண்டு சிநேக புன்னகை சிந்தினான்.பின் நண்பர்கள் மூவரும் தங்கள் கல்லூரி காலங்களை பற்றி பேசிக் கொண்டு இருந்தனர்.சுதர்சனும் எந்த பாகுபாடின்றி அவர்களுடன் அவனின் கல்லூரி அனுபவங்களை பகிர அங்கே அழகான நட்பு உருவானது.இறுதியில் கீதா கிளம்பும் போது தன் திருமண பத்திரிக்கையை இருவருக்கும் வைத்தவள் இருவரையும் அழைப்புவிடுத்தாள்.அப்போது பிருத்திவி திடீர் என்று கீதாவிடம்,

“நம்ம செட் எல்லாருக்கும் கொடுத்திருக்கியா…”என்று கேட்க,கீதாவோ,

“இல்லை பிருத்திவி…நான் சுமியை தவிர வேற யார்கிட்டேயும் டச்சுல இல்லை….அவளுக்கும் உங்களுக்கும் மட்டும் தான் வச்சிருக்கேன்…”என்றவள் கண்டிப்பாக திருமணத்திற்கு வருமாறு கட்டளையிட்டு விட்டே விடைபெற்றாள்.கீதா சென்றவுடன் ஏதோ யோசனையில் இருந்த பிருத்திவியை உலுக்கிய சூர்யா,

“டேய் என்ன யோசனை…”என்று கேட்க பிருத்திவியோ ஒன்றும் இல்லை கூறினாலும் மனது கீதா கூறிய சுமி என்ற பெயரிலேயே இருந்தது ஒருவாறு பிருத்திவியின் அறைக்கு வந்தனர் நண்பர்கள் இருவரும்.சூர்யாவின் வீட்டில் யாரும் இல்லை என்றால் அவனும் பிருத்திவி கூட தான் தங்குவான்.அனிதா அவளின் அக்கா குழந்தையை பார்க்க பிறந்தகம் சென்றிருந்தாள் தன் மாமியாரையும் அழைத்துக் கொண்டு.அதனால் சூர்யாவிற்கு இருநாட்கள் பிருத்திவியுடன் தான் கழியும்.

சூர்யா வந்தவுடன் படுக்கையில் விழுந்துவிட பிருத்திவிக்கு சுமியின் நினைவுகள் அலைமோதின.

“சுமி…சுமித்ரா….”என்று அவளின் பெயரை கூறியவன் முகத்தில் புன்னகை.அவளும் இவர்களுடன் படித்தவள் தான்.தமிழ் மீடியத்தில் இருந்து வந்ததால் சுமித்ராவிற்கு ஆங்கில வழி பாடம் சற்று கடினமாக இருக்க அவளுக்கு எப்போதும் பிருத்திவி தான் சொல்லிக் கொடுப்பது.இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது.அதை சுமித்ரா காதல் என்ற பெயரில் மாற்றாத வரை.

“எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு தேவா….”என்று கண்களில் காதல் தந்தும்ப அவள் கூறியது இன்றும் பிருத்திவியின் கண்களில் இருந்தது.பொறுமையாக தன் மறுப்பை அவளிடம் வெளிப்படுத்தியிருக்கலாம் என்று பலநாட்கள் யோசித்திருக்கிறான்.ஆனால் காலம் கடந்த பின் யோசனை செய்து என்ன பயன்.அவளை மனது புண்படும்படி பேசியதோடு அல்லாமல் அவளுக்கு தன் உதவி தேவைபடும் நேரத்தில் உதவி செய்யாமல் அமைதியாக இருந்தது எவ்வளவு பெரிய தப்பு என்று நினைத்தவனுக்கு மனது கனக்க தான் செய்தது.

தன் நினைவுகளில் முயன்று தன்னை மீட்டவன் இந்த தடவை கீதா கல்யாணத்தில அவ கிட்ட எப்படியாவது மன்னிப்பு கேட்டனும் என்று தனக்குள் கூறிக் கொண்டான் பிருத்திவி.எந்த செய்கையால் அவளை திட்டி அனுப்பியிருந்தானோ,அதே செய்கை அவன் செய்யபோவது தெரியாமல் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தான்.சுமித்ராவின் வரவு பிருத்திவியின் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டுவருமா இல்லை மீண்டும் அவனை துன்பத்தில் ஆழ்த்துமா.

Advertisement