Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 20(2)

ஆறு வருடங்களுக்கு பிறகு,

பிருத்திவி,சுமித்ராவின் வாழ்வில்  அனைத்தும் நல்லவிதமாக சென்றது.பிருத்திவியின் கடின உழைப்பின் பலன் அவனது நிறுவனம் நல்ல வளர்ச்சியில் இருந்தது.சுமித்ராவும் இப்போது கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறாள்.

தற்போது பிருத்திவியின் வீட்டில் சுமித்ரா கத்திக்கொண்டு இருந்தாள்.

“நான் சொல்லுறத யாரும் இங்க கேட்குறது இல்லை…எல்லாம் அவங்க இஷ்டம் தான்….ஏய் பிரணவ்….எங்கடா இருக்க…”என்று கத்த,

“அம்மா….நான் ரெடி….”என்றபடி வந்தான் பிருத்திவி சுமித்ராவின் சீமந்த புத்திரன் பிரணவ் தேவ்.உருவமும் சரி குணமும் சரி அப்படியே அவனது தந்தையை கொண்டு பிறந்திருந்தான்.பிரணவிற்கு இப்போது ஐந்து வயதாகிறது.வெள்ளை நிற முழுக்கை சட்டை சாம்பல் நிற பேண்ட் என்று அப்படியே பிருத்திவியை உறித்து வைத்தை போல் மகனை கண்ட சுமித்ராவிற்கு மனதிற்குள் பூரிப்பு.

“அப்படியே தேவா தான்…”என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

“அம்மா…அம்மா…”என்று பிரணவ் அவளின் முன் கையாட்டவும் கலைந்தவள்,

“ஆங்….என்னடா….”என்று கேட்க,

“போச்சு…நான் ரெடிம்மா…”என்று கூற,மகனின் தலையை செல்லமாக வருடிவிட்டவள்,

“சரி எங்கடா உன் பாப்பா இரண்டையும் காணும்…”என்று கேட்க,

“தாத்தா கூட இருக்காங்க மா….”என்றவன் வெளியில் கார் வரும் சத்தம் கேட்கவும்,

“அம்மா…அப்பா வந்தாச்சு…”என்று கூறிக் கொண்டே ஓடினான்.கார் வரும் அரவாரம் கேட்கவும் தன் தலையில் கை வைத்த சுமித்ரா,

“போச்சு…இன்னும் கிளம்பலைனு திட்டபோறாங்க….எல்லாம் இந்த குட்டீஸ் பண்ற வேலை….”என்று தன் மகள்களை தேடி போனாள் சுமித்ரா.

குழந்தைகள் அறையில்,

“ஏய்…உனக்கு இந்த டிரஸ் நல்லவே இல்லைடி…”என்று கூறினாள் தேன்நிலா.

“எனக்கு நல்லா தான் இருக்கு போடி…”என்றாள் தேன்மொழி.

“இப்ப இரண்டு பேரும் கிளம்பல அம்மா வந்து நம்ம எல்லாரையும் திட்டபோறா…”என்று கூறியவாரே அறை முழுவதும் கலைந்து கிடந்த உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் நல்லசிவம்.

நல்லசிவம் தனது மகன்கள் கொடுத்த தொந்தரவு தாங்காமல் அவர்களின் பெயரில் சொத்து அனைத்தையும் எழுவிட்டு ஒரு முதியோர் இல்லத்தில் போய் தங்கிக் கொண்டார்.அவரின் தொழிற்சாலையில் வேலை செய்த ஒருவரின் மூலம் சுமித்ராவிற்கும்,பிருத்திவிக்கும் தகவல் வர,புறப்பட்டுவிட்டனர் இருவரும்.தன் தந்தைக்கு பின் தந்தையென பாவித்தவரை அப்படி நிராதரவாக பார்க்க மனது ஆரவில்லை சுமித்ராவிற்கு அதனால் அவள் தங்களுடன் வந்துவிடும் படி அழைக்க முதலில் மறுத்த நல்லசிவம்,பின் சுமித்ரா,

“என்னை உங்க பொண்ணா நினைச்சீங்கனா எங்க கூட கிளம்புங்கப்பா….”என்று கேட்க,அவளது அப்பா என்ற வார்த்தை  அனைத்தையும் மறக்க செய்ய தன் மகளுடன் கிளம்பிவிட்டார்.நல்லசிவம் பிருத்திவியின் வீட்டிற்கு வந்தவுடன் சுமித்ராவை சட்டபடி தன் மகளாக தத்தெடுத்துக் கொண்டார்.

அதில் அவருக்கு அத்தனை சந்தோஷம்.மகன்கள் இருவரும் தங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று சென்றுவிட நிலைகுலைந்து போனவருக்கு சுமித்ராவுடான வாழ்வு மிகவும் அமைதியை தந்தது என்று தான் கூற வேண்டும்.

அவ்வபோது பிருத்திவிக்கும் அவருக்கும் முட்டிக் கொள்ளும் தான் ஆனால் அந்த சண்டைகளில் இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள அன்பு மட்டுமே வெளிபடும் அதுவே அவர்களின் பிணைப்பை மேலும் பலப்படுத்தியது.

“ஏய் நிலா….மொழி….இரண்டுபேரும் கிளம்பிட்டீங்களா இல்லையா….”என்று சுமித்ராவின் குரல் வெளியில் கேட்டது.

“அச்சோ…அம்மா வந்துட்டாங்க….”என்று இருவரும் ஒருசேர கூற,அவர்களை கண்ட நல்லசிவத்திற்கு சிரிப்பு தான் வந்தது.பிருத்திவி சுமித்ராவின் இரட்டையர்கள்.உருவம்,செயல் அனைத்தும் அன்னையை கொண்டே இருந்தனர்.

“தாத்தா…அம்மா…”என்று ஏதோ கூறிக் கொண்டிருக்க அறைக்குள் வந்துவிட்டாள் சுமித்ரா.வந்தவள் அறையின் அலங்கோலத்தை கண்டு முறைக்க,அவள் எங்கே பேத்திகளை திட்டிவிடுவாளோ என்ற நினைத்த நல்லசிவம்,

“இதோ கிளம்பிட்டாங்க சுமிமா….நீ போ இப்ப வந்துடுவாங்க…”என்று சமாளிக்க பார்க்க,

“அப்பா…நீங்க இவங்க இரண்டு பேருக்கும் சப்போர்ட் பண்ணாதீங்க…”என்றவள்,மகள்களின் புறம் திரும்பி,

“உங்ககிட்ட நான் டிரஸ் எடுத்து கொடுத்துட்டு தான போனேன்….அப்புறம் எதுக்கு எல்லா டிரஸையும் இப்படி களைச்சு போட்டு இருக்கீங்க…”என்று சற்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டிருக்கும் சமயம்,

“என் செல்லகுட்டிங்களா…என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க…”என்றபடி வந்தான் பிருத்திவிதேவ்.அறைக்குள் வந்தவன் கண்டது நல்லசிவத்தின் கால்களை கட்டிக் கொண்டு நின்ற தன் இரு ரோஜாக்களையும் தான்.மருண்ட விழிகளுடன் நின்றிருந்தனர்.அவர்களின் எதிரே சுமித்ரா கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு நிற்க,புரிந்தது போனது தகப்பனுக்கு தன் செல்லங்கள் ஏதோ குறும்பு செய்துவிட்டு மனைவியிடம் திட்டுவாங்குகின்றனர் என்று.

“குட்டிமா…என்னடா…”என்று கேட்க,அதுவரை தன் அம்மாவிற்கு பயந்து தாத்தாவின் கால்களை கட்டிக் கொண்டு நின்றவர்கள் தன் தகப்பனின் குரலைக் கேட்டவுடன்,

“அப்பா….அம்மா பாப்பா திட்டி…திட்டி…”என்று இருவரும் ஒரு சேர தகப்பனிடம் அன்னையை பற்றி புகார் வாசிக்க,சுமித்ராவிற்கு மேலும் கோபம் பொங்கியது.

“ஏய்…என்ன அப்பா வந்ததும் தப்பிக்கலாம்னு பார்கிரீங்களா….உதைவாங்குவீங்க…”என்று கண்களை உருட்டி மிரட்ட,அவ்வளவு தான் இரண்டும் தன் தகப்பனைக் கட்டிக் கொண்டு அழ தொடங்கியது.மகள்கள் அழுதால் பிருத்திவிக்கு பிடிக்காத ஒன்று,அவர்கள் அழுவது பொறுக்காமல்,

“என் குட்டிமால…அழாதீங்கடா…பட்டு…”என்று கொஞ்சியவன்.

“ஏய் ஏன் குழந்தைகளை திட்டுற…”என்று போலியாக மனைவியை திட்ட,அவர்கள் இருவருக்கும் அழுகை நின்று சிரிப்பு வந்தது தன் அன்னை திட்டுவாங்குவதைப் பார்த்து.பிருத்திவியும்,நல்லசிவமும் சிறிமிகள் இருவரையும் கிளப்ப,பிரணவும் அவர்களுக்கு உதவினான்.

“நான் இவங்களை கிளப்புறேன் மித்து….நீ போய் ரெடியாகு….போ…”என்று பிருத்திவி மனைவியை கிளப்ப,அவளோ அவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்துவிட்டு சென்றாள்.இது எப்போதும் நடக்கும் ஒன்று தான்.ஒருவழியாக பிருத்திவியின் குடும்பத்தினர் அனைவரும் கிளம்பி வர,சரியாக அதே நேரம் சூர்யாவின் குடும்பமும்,சக்கவர்த்தியும் அவரது மனைவியும் வந்தனர்.

“மாமா…நான் ரெடி…எப்படி இருக்கேன்….”என்று கேட்டான் கபிலன்.சூர்யா,அனிதாவின் மூத்த மகன்.

“மாமா…நான் தான நல்லா இருக்கேன்…நீங்க சொல்லுங்க…”என்றபடி வந்தான் அவர்களின் இளைய மகன் விமலன்.இதுபோல் எப்போதும் இருவரும் போட்டிப் போட்டுக் கொள்வர்.என்னதான் போட்டி போட்டாலும் இருவருக்குள்ளும் பொறாமை என்பது இருக்காது.அவர்கள் இருவருக்கும் பிருத்திவி என்றால் உயிர்.இருவரையும் அணைத்த பிருத்திவி,

“இரண்டு பேரும் அழகா தன்டா இருக்கீங்க செல்லங்களா…வாங்க கிளம்புவோம்….”என்று கூற,சூர்யாவைக் கண்டவுடன் அவனிடம் தாவியிருந்தனர் இரட்டையர்கள் இருவரும்.சூர்யாவிற்கு பிருத்திவியின் இரட்டையர்கள் மீது தனி பிரியம் அவனக்கு மகள் இல்லாத குறையை அவர்கள் இருவரும் தான் தீர்த்தனர்.சக்கரவர்த்தியும் இப்போது இவர்களின் பக்கத்தில் தான் வீடு வாங்கி வந்துவிட்டார்.அவரது பிள்ளை இப்போது வெளிநாட்டில் இருக்கிறான்.இன்னும் சில மாதங்களில் அவனும் சென்னை வந்துவிடுவான் குடும்பத்துடன்.

அனைவரும் இப்போது பிருத்திவிக்கு விருது அளிக்கும் விழாவிற்கு வந்திருந்தனர்.அவர்கள் செய்த புராஜெக்ட் சிறந்த முறையில் வந்ததிற்கு அந்த புராஜெக்டின் லீடர் என்ற பொறுப்பில் பிருத்திவிக்கு விருது அறிவித்திருந்தனர்.அவர்களுடன் வேலை செய்பவர்களையும் தனியாக அழைத்திருந்தான் பிருத்திவி.

விழா தொடங்கி பிருத்திவிக்கு விருது அறிவிக்கப்பட,அவன் மேடையில் ஏறி அங்கிருந்தவர்களுடன் பேச,சிறிது நேரத்தில் அவர்கள் பிருத்திவியின் குழு முழுவதையும் அழைத்தனர்.பிருத்திவியின் குழு அனைவரும் மேடை ஏற அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த விருதை பெற்றனர்.அனைவர் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி தாண்டவமாடியது.தன்னுடன் இருப்பவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்லும் பிருத்திவியின் பாங்கு அவனுக்கு நல்ல மனிதர்களை பெற்று தந்தது.

இரவு பிருத்திவியின் வீட்டில் தான் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.அனைவரும் வந்தும் விளையாட்டு,பாட்டு என்று சில கேலிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அனைவருமே மனநிறைவுடன் பங்கேற்றனர்.விருந்து முடிந்து அனைவரும் கிளம்பியவுடன்.சூர்யாவின் குடும்பமும்,சக்கரவர்த்தியின் குடும்பமும் மட்டும் இருந்தது.அவர்கள் அனைவரும் சற்று நேரம் பேசிவிட்டு பின் புறப்பட்டு சென்றனர்.

அனைவரும் சென்றவுடன் நல்லசிவமும் அவரின் அறைக்கு படுக்க சென்றார்.அவரின் பின்னே கதை கூறுங்கள் என்று வால் பிடித்து சென்ற பிள்ளைகளை தடுத்து தங்கள் அறையின் உள்ளே அவர்களுக்காக ஏற்படுத்திய விளையாட்டு அறையில் விளையாடுமாறு கூறினாள் சுமித்ரா.பிருத்திவியும் வெளி வேலைகளை முடித்துவிட்டு தங்கள் அறைக்கு வர,அங்கே விளையாட்டு அறையில் பிள்ளைகள் விளையாடி கொண்டிருந்தனர்.அவர்களை ஒருவித மனநிறைவுடன் கண்களால் ரசித்தவன்,உடல் அலுப்பு தீர குளிக்க சென்றான்.

குளித்து முடித்தவன் மனைவியை தேட அவளோ சமையல் அறையில் அனைவருக்கும் பால் ஆத்திக் கொண்டிருந்தாள்.சமையல் அறைக்குள் பூனை போல நுழைந்து பின்னிருந்து மனைவியை அணைத்தான்.அவனது கைகளை மேலும் இழுத்துக் கொண்ட சுமித்ரா,

“தேவா……”என்று காதலாக அழைக்க,அவனும்,

“ம்ம்…சொல்லு மித்து…”என்றான் குழைவாக.அவளை தன் புறம் திருப்பி அவளது முன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன்,

“தேங்க்ஸ்டி மித்து…நீ எனக்கு கிடைச்ச வரம்…நீ இல்லனா நான்…”மேலும் கூற வந்தவனை அவனது உதட்டில் ஒற்றை விரல் வைத்து தடுத்தவள்,

“முதல்ல இப்படி பேசுறத நிறுத்துங்க….இந்த வாழ்க்கை நம்மளுக்கு கடவுள் கொடுத்த வரம்…அதை நாம நல்ல முறையில வாழ்ந்துகிட்டு இருக்கோம்….”என்று உணர்ந்து கூற,அவனும் மனைவியின் பேச்சை கேட்டபது போல்,

“ம்ம்…நீ சொல்றதும் உண்மை தான் மித்து….”என்று கூறினான்.

“சரி விடுங்க…நான் போய் எல்லாருக்கும் பால் கொடுக்கனும்….”என்று கூற,பிருத்திவியின் பிடி மேலும் இறுகியது.அவனது விரல்களின் அழுத்தை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனை காண,அவனது கண்களில் அளவுகடந்த காதல் நிரம்பி வழிந்தது.

“என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு….”என்று கேட்டவாறே அவனது கைகளில் இருந்து விடுபட முயல,

“மித்து..என்னை பாரேன்…”என்று அவளது தாடை தொட்டு திருப்பியவன் அவளது முகத்தை நிமிர்த்த,அடுத்து அவன் என்ன செய்வான் என்று ஊகித்தவள்,அவனது இடையில் கிச்சுகிச்சு மூட்ட,அதில் அவனது பிடி தளரவும்,

“இன்னைக்கு உங்க பொண்ணுங்க முன்னாடி என்னை திட்டினீங்கல…உங்களுக்கு ஒண்ணும் கிடையாது….போங்க…”என்று கோபம் போல கூறிவிட்டு சென்றுவிட்டாள்.மனைவியின் செயலில் புன்னகை பூக்க நின்றான் பிருத்திவி.

பிருத்திவி வீட்டின் வெளி கதவை பூட்டிவிட்டு ஒருமுறை நல்லசிவத்தின் அறையை திறந்து பார்க்க,அவரோ நல்ல உறக்கத்தில் இருந்தார்.பின் தங்களின் அறைக்குள் நுழைய சுமித்ரா பிள்கைளுக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.பாலைக் குடித்துவிட்டு மீண்டும் அவர்கள் விளையாட சென்றுவிட்டனர்.

“மித்து…”என்று பிருத்திவி அழைக்க,அவனிடம் சென்றவளை இழுத்து அணைத்து அவளது காது மடல்களில் குறு குறுப்பை உருவாக்க நெளிந்தவள்.அவனது தொடுகையில் எப்போதும் போல் மனதும் ,உடலும் நெகிழ நின்றாள்.இருவரும் அவர்களது உலகில் இருக்க “அம்மா,அப்பா…”என்று குழந்தைகளின் சத்தம் கேட்க முதலில் சுயத்திற்கு வந்த சுமி,பிருத்திவியின் அணைப்பில் இருந்து வெளி வந்தவள்,அவனை அப்படியே கட்டிலில் தள்ளிவிட,பிருத்திவி சுமியின் கையையும் பிடித்து இழுத்திருந்தான் அதை எதிர்பாராதவள் அவனின் மேலேயே விழந்தாள்.அதேநேரம் அவர்களது செல்வங்கள் மூன்று உள்ளே வரவும் சரியாக இருக்க,தாய்,தந்தையின் நிலையை கண்ட பிரணவ் சிரித்தவாறே,

“அம்மா நானும் நானும்….”என்று கூறிக் கொண்டே தன் தாயின் மேலே ஏற அவனின் பின்னே வால் பிடித்தபடி தன் அண்ணின் மேல் ஏற முயற்சித்தபடி இருந்தனர் தேன்மொழியும்,தேன்நிலவும்.

மகள்கள் இருவரும் ஏற முயற்சிக்கவும் பிருத்தவி,

“லட்டு….இருங்க….பிரணவ் குட்டி எந்திரிங்க பாப்பாவும் ஏறுறா பாரு கீழ விழுந்துடுவா…”என்று கூறியவுடன் அவன் இறங்க,கணவனிடம் இருந்து வேகமாக எழுந்த சுமித்ரா மகனை மடியில் வைத்துக்குள்ள,மகள்கள் இருவரும் தந்தையின் மடியில் ஏறி கொண்டு வாயை முடிய படி சிரிக்க,பிரணவும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான்.மழலைகளின் சிரிப்பொலி வீடு எங்கும் சங்கீதமாக ஒலித்துக் கொண்டிருக்க,அதில் பிருத்திவி,சுமித்ராவின் காதலும் கரைந்து கொண்டிருந்தது.வெறும் வார்த்தைகளால்  பகிரப்படும் காதலை விட ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பில் உணரப்படும் காதல் மிகவும் ஆழமானது,அதை உணர்ந்த பிருத்திவி,சுமித்ராவின் வாழ்வும் மேலும் செழிக்கட்டும்.

(சுபம்)

Advertisement