Advertisement

பிருத்திவியின் பெற்றோர் இறந்து இருவாரங்கள் ஓடியிருந்தது.அவர்களின் பிரிவை தாங்க முடியாமல் பிருத்திவி தான் மிகவும் ஒடிந்து போனான்.எப்போதும் கலகலப்பாக பழகுபவன் யாரிடமும் பேசுவதே இல்லை.தன் வீட்டின் உள்ளே அடைப்பட்டு கிடந்தான்.சூர்யா ஒருவன் தான் அவன் பேசவில்லை என்றாலும் அவனிடம் இருவார்த்தைகள் பேசி அவனையும் பேச வைத்திவட்டு செல்வான்.

சூர்யா தினமும் பிருத்திவியை கண்டுவிட்டு தான் தன் வேலைக்கு செல்வான்.அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான்.அந்த வேலை வாங்கி கொடுத்தவர் பிருத்திவியின் அப்பா ரவிசந்திரன்.என்ன தான் நல்ல மதிப்பெண்கள் பெற்று சூர்யா தேர்ச்சி பெற்று இருந்தாலும் அவன் வேலை தேடி செல்லும் இடங்களில் எல்லாம் அவனை நிராகரித்தனர்.இந்த விஷயத்தை பிருத்திவி மூலம் அறிந்து கொண்ட ரவிசந்திரன் அவனுக்கு சிபாரிசு செய்தார் ஒரு புகழ்பெற்ற கம்பெனியில்.அவர்களும் சூர்யாவின் திறமையை சோதித்து அதில் அவன் தேர்ச்சி பெற்ற பின்னே வேலையில் அமர்த்தினர்.

சூர்யா வேலையில் சேர்ந்து மூன்று மாதங்களே ஆகியிருந்ததால் அவனால் அடிக்கடி விடுமுறை எடுக்க முடியவில்லை.அதனால் தன்னால் முடிந்தவரை பிருத்திவிக்கு என்று நேரம் ஒதுக்கி அவனைக் கவனித்துக் கொண்டான்.என்ன தான் சூர்யா பிருத்திவியை கவனித்து கொண்டாலும் அவன் தனது கூட்டில் இருந்து வெளிவரவேயில்லை.

தன்னை மடிதாங்கி கொஞ்சும் தாய் இனி இல்லை,தகப்பனை போல் அல்லாமல் ஒரு நண்பனாய் தன்னை வழி நடத்திய தந்தை இனி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே  முடியவில்லை பிருத்திவியால்.தன் மனதில் உள்ளது அனைத்தையும் எப்போதும் தன் தாயிடம் தான் பகிர்வான் அவர் எப்போதும் அவனுக்கு ஒரு நல்ல தீர்வை கூறுவார்.இன்று தனக்கேன்று யாரும் இல்லை என்பதே அவனை முழுவதுமாக நிலைகுலைய செய்திருந்தது.

ஒவ்வொரு நாளும் அவனுக்கு நரகமாக மாறி இருக்க இதில் அவனை மேலும் கலங்க செய்யும் விஷயங்களும் நடந்தன.சூர்யா எப்போதும் போல் தன் வேலைகளை முடித்திவிட்டு அன்றும் பிருத்திவியை காண வர,அவனோ வரவேற்பறையில் தன் கைகளால் தலையை தாங்கியபடி அமர்ந்திருந்தான்.அவனின் முன் இருந்த மேஜையின் மேல் சில பத்திரங்கள் எல்லாம் சிதறிக் கிடந்தது.

“என்ன டா….ஏன் இப்படி உட்கார்ந்திருக்க…..என்ன இதெல்லாம்….”என்று அவன் மேஜை மேல் இருந்த பத்திரங்களை காட்டியவாறே கேட்க பிருத்திவி நிமிர்ந்து சூர்யாவை பார்த்தவன்,

“டேய் சூர்யா….”என்று கலங்கியவறே அழைக்க,சூர்யாவிற்கு பதட்டம் கூடியது,

“என்ன டா என்ன பிரச்சனை…சொல்லு…”என்று கேட்க,பிருத்திவி சற்று முன் நடந்ததை கூறினான்.

காலை எப்போதும் போல் எழுந்த பிருத்திவி தனக்கு என்று காபியை கலந்து கொண்டு பருகி கொண்டிருந்தான்.அப்போது அவனது கைபேசி அழைத்தது,யாராக இருக்கும் என்று நினைத்தவறே அழைப்பை காண அவனின் தந்தையின் நண்பர் சக்கரவர்த்தி அழைத்திருந்தார்.இவர் எதற்கு அழைக்கிறார் என்று யோசனை செய்தவாறே அழைப்பை ஏற்றான்.

“ஹலோ அங்கிள்….எப்படி இருக்கீங்க…”என்றான்.

“நான் நல்லா இருக்கேன் பிருத்திவி….நீ எப்படி இருக்க….”என்று நலம் விசாரித்தவர்,

“பிருத்திவி உன் கிட்ட கொஞ்சம் பேசனும் பா…நான் அங்க உங்க வீட்டுக்கு வரட்டுமா….உனக்கு பிரச்சனையில்லையே…”என்று கேட்க,

“என்ன அங்கிள் என் கிட்ட இதெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீங்க….நீங்க எப்ப வேணாலும் வரலாம்…”என்று அவரை அழைத்துவிட்டு வைத்தான்.கைபேசி வைத்தவனுக்கு மனதில் அவரின் குரல் சற்று பதட்டமாக இருந்தது போலவே தோன்றியது இருந்தும் நேரில் அவர் வரட்டும் பேசிக் கொள்ளலாம் என்று விட்டவனுக்கு கூடவே,என்ன விஷயமாக இருக்கும் என்றும் மனதில் கேள்வி எழுந்து கொண்டு தான் இருந்தது.

சக்கரவர்த்தி ரவிசந்திரனின் உற்ற நண்பர் மட்டும் கிடையாது,தங்கள் வீட்டில் ஒருவர் போல் பழகுபவர்.வாசுகியை தன் சொந்த தங்கை போலவே பாவித்தார்.ரவிசந்திரன்,வாசுகி திருமணத்திற்கு பிறகு தன் நண்பனுக்கு பக்க பலமாக இருந்தவரும் கூட.தன் தந்தை தொழில் தொடங்க கூட அவர் தான் உதவி செய்தார்.இவ்வாறு பிருத்திவியின் எண்ணங்கள் சக்கரவர்த்தியை பற்றியே சுழன்று கொண்டிருந்தது.

சக்கரவர்தியும் கூறியபடியே பிருத்திவியின் வீட்டிற்கு வந்தார்.அவரை வரவேற்ற பிருத்திவி வரவேற்பறையில் உள்ள சோபாவில் அமர செய்தான்.

“இப்ப கொஞ்சம் பரவாயில்லையா பிருத்திவி…”என்று கேட்டார் அந்த வீட்டை சுற்றி கண்களை சுழற்றியவரே.வாசுகி இருந்தவரை வீடே கலகலப்பாக இருக்கும்.அதிலும் சக்கரவர்த்தி வந்தால் “வாங்க அண்ணனே…”என்ற அழைப்பும்,தன் நண்பனின் சிரித்த முகமும் தன் கண்முன்னே நிழலாடின அவருக்கு.கண்கள் கலங்க அந்த வீட்டில் மாட்டப்பட்டு இருந்த ரவிசந்திரன்,வாசுகி படத்தை பார்த்தவருக்கு மனது கனக்க செய்தது.தன்னையும் மீறி அவரின் உடல் குலுங்க உடைந்துவிட்டார் மனிதர்.

சக்கரவர்த்தி அழுவதைக் கண்ட பிருத்திவிக்கும் கண்கள் கலங்கியது  முயன்று தன்னை மீட்டவன்,அவரை தேற்றி அமைதிபடுத்தி மீண்டும் சோபாவில் அமர செய்தவன்,வேகமாக சமையல் அறை சென்று அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தான்.அவரும் ஒருவாரு தன்னை தேற்றிக் கொண்டார்,

“மன்னிச்சுடுப்பா…உன்னையும் கஷ்ட்டப்படுத்திட்டேன்….”என்று வருத்தமாக கூற,பிருத்திவியோ,

“அங்கிள்…பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ்…”என்று கெஞ்சலாகவே கூறினான்.

பின் சற்று நேரம் இருவருக்குள்ளும் அமைதி சக்கரவர்த்திக்கு தான் கூறுவதை பிருத்திவி எப்படி எடுத்துக் கொள்ளவான் என்று மனதில் ஒரு தயக்கம்.பிருத்திவியும் அவரே ஆரம்பிக்கட்டும் என்று அமைதியாக இருந்தான்.

“பிருத்திவி….ஒரு முக்கியமான விஷயமா தான்பா உன்னை பார்க்க வந்தேன்…”என்று பீடிகையுடன் கூற,பிருத்திவிக்கு விஷயம் பெரியது என்று அவரது முகமே காட்டிக்கொடுத்தது.அதனால் அவன்,

“அங்கிள்…நீங்க போன் பண்ணும் போதே எனக்கு விஷயம் பெரிசு தெரியும்…எதுவா இருந்தாலும் நேரிடையா என் கிட்ட நீங்க சொல்லாம்…நான் உங்க பிள்ளை மாதிரி தான்….”என்று தன் மனதில் உள்ளதை கூற சக்கரவர்த்திக்கு மனது நெகிழ்ந்து போனது.இருந்தும் கூறப்போகும் விஷயம் அவன் மனதை சுக்குநூறாக உடைத்திவிடும் என்று நினைத்தவர்.

“பிருத்திவி…நீ புத்திசாலி நான் சொல்ல போறது உனக்கு எப்படி இருக்கும்னு என்னால சரியா சொல்ல முடியல…ஒருவேளை நீ மொத்தமா உடைஞ்சா கூட மனச தேதிக்கிட்டு அந்த விஷயத்திலேந்து நீ எப்படி வெளி வரனும் தான் பார்க்கனுமே தவிர ஒடுங்கி உக்கார்ந்துட கூடாது…எனக்கு வாக்கு குடு….அப்ப தான் நான் இதை உன்கிட்ட சொல்லுவேன்…”என்று கெஞ்சலாக கேட்க,பிருத்திவியும் மறுப்பேதும் கூறாமல் சத்தியம் செய்தான்.

பிருத்திவிக்கு தன் தாய்,தந்தையே போய்விட்டனர் அதையே கடந்து வந்துவிட்டேன்.அதை விட பெரிய துன்பம் என்ன வரப்போகிறது என்று நினைத்தான்.அதனால் சக்கரவர்த்தி கேட்டவுடன் சத்தியம் செய்தான்.பிருத்திவியிடம் சத்தியம் வாங்கிவுடன் சக்கரவர்த்தி தன் கைபையில் இருந்து சில பத்திரங்களை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

பிருத்திவியும் அவர் கொடுத்த பத்திரங்களை கவனமாக படித்தான்.அதில் இருக்கும் சாராம்சம் இது தான்,அதாவது ரவிசந்திரன் தனது கடையை விரிவாக்கம் செய்ய ஒரு இடம் வாங்கினார் அதற்கு அவருடன் இணைந்திருந்த இரு பங்குதார்களிடம் இருந்தும் பணம் வாங்கி முதலீடு செய்திருந்தார்.அவர்கள் இப்போது பணத்தை திருப்பி கேட்கின்றனர்.

பிருத்திவி பத்திரம் முழுவதையும் படித்தவன் சக்கரவர்த்தியிடம்,

“அந்த நிலத்தை வித்து அவங்களோட பணத்தை கொடுத்திடலாம் அங்கிள்…இதுல என்ன பிரச்சனை இருக்கு…”என்று கேட்டான்.சக்கரவர்த்திக்கு மனதிற்குள் திக் என்று இருந்தது அப்போ இவனுக்கு எதுவும் தெரியாதா ரவி எதையும் இவன்கிட்ட சொல்ல போல என்று நினைத்தவர்,

“தம்பி அப்பா உன்கிட்ட சில விஷயங்களை சொல்ல போல…”என்றவர் ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்துவிட்டு பேச தொடங்கினார்,

ரவிசந்திரனுக்கு தன் கடையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு முக்கிய சாலையில் இடத்தை பார்த்து பேசியிருந்தார்.அவரும் தொழிலில் இணைந்திருந்த இருவரும் சேர்ந்து அந்த நிலத்தை வாங்கலாம் என்று பேசி முடிவு செய்திருந்தார்.அவர்களும் முக்கிய சாலை நல்ல லாபம் வரும் என்ற காரணத்தினால் ரவியின் கோரிகைக்கு சம்மதம் தெரிவித்து பணமும் கொடுத்தனர்.

Advertisement