Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 17

சூர்யாவின் வீட்டில் அனிதா,

“ஏன் இவ்வளவு நேரம்….காலையில வந்தவர் இப்ப தான் வரீங்க….”என்று கோபமாக கேட்டுக் கொண்டிருக்க,சூர்யாவோ குளித்து முடித்து வந்தவன்,

“ஏய் அனி ப்ளீஸ் டி…ரொம்ப பசிக்குது…நான் சாப்பிட்டு வரேன் அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து சண்டை போடலாம் டி செல்லம்ஸ்….”என்று கண் சிமிட்டி விஷம்மாக சொல்லிவிட்டு செல்ல,

“இவனை….”என்று செல்லமாக பல்லைக் கடித்தாள் அனிதா.

தனது இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குள் வந்து கதவை அடைத்தவன் கண்களில் கட்டிலில் கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்தாவறே,

“இவளை எப்படி மலையிறக்குறது…”என்று எண்ணியபடியே வந்து அவளது பக்கத்தில் அமர்ந்தான்.

“இப்ப எதுக்குடா என் இப்படி பக்கத்தில உட்காருர….”என்று கடுகடுத்துவிட்டு தள்ளி அமரப் போனவளை சட்டென இடையில் கை கொடுத்து இழுத்து தன் மடியில் அமர வைத்தவன்,

“என்னடி ரொம்ப தான் பண்ணுற…ஒரு வாரம் கழிச்சு வந்திருக்கேன் இப்படி சண்டை கோழி மாதிரி சிலித்துக் கிட்டு நிக்குற….”என்று அவளது முதுகில் இதழ்களால் கோலம் போட்டவாறே கேட்க,கணவனின் அணைப்பிலும் அவனது இதழ் ஒற்றலிலும் நெகிழத் தொடங்கிய மனதை முயன்று கட்டுக்குள் கொண்டு வந்து,

“ஏய் விடுடா என்னை…எதாவது பேசி என்னை மயக்குலாம்னு பார்க்காத….அடிச்சிடுவேன்…..”என்று அவனிடம் இருந்து விலக முயன்றபடி கத்த,சூர்யா அவளது முயற்சிகளை முறியடித்தபடி இடைவளைத்து இழுத்து அவளது பட்டான அதரங்களை தன் அதரங்களால் மூடினான்.சிறிது நேரம் இருவருக்கும் இடையே பேச்சுகள் இல்லாமல் போக,அனிதாவின் கோபம் முற்றிலுமாக காணாமல் போனது கணவனின் இதழொற்றலில்.சில நிமிடங்கள் கழித்தே மனைவியை விட்டவன்,

“என்ன மேடம் இப்போ கோபம் போயிடுச்சா….”என்று விஷமமாக கேட்க,

“டேய்….”என்று செல்லமாக திட்டிவிட்டு அவனை தலணையால் அடிக்க,

“ஏய் போதும் போடி…”என்று கூறி அவளை தன் புறம் இழுக்க,அப்போது சூர்யாவின் கைபேசி சிணுங்கியது.இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று நினைத்தவாறே அதனை எடுக்க பிருத்திவி தான் அழைத்திருந்தான்.இவன் எதுக்கு கூப்பிடுறான் என்று நினைத்தாவறே காதில் வைக்க,அந்த பக்கம் பிருத்திவியின் கலக்கமான குரலைக் கேட்ட சூர்யாவிற்கு ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது.

“டேய் மச்சி…என்ன ஆச்சு முதல்ல பொறுமையா சொல்லு…”என்று சூர்யா பிருத்திவியிடம் கேட்க,பிருத்திவி சுமித்ரா இன்னும் வீடு வரவில்லை என்ற விபரத்தை கூற அடுத்த பத்து நிமிடங்களில் சூர்யா பிருத்திவியின் வீட்டில் இருந்தான்.அனிதாவும் சூர்யாவுடன் வந்துவிட்டாள்.இருவரும் பிருத்திவியின் நிலைக் கண்டு சற்று பயந்து தான் போயினர்.

தலை கலைந்து சட்டை முழுவதும் வேர்வை வழிந்து,கை,கால் ஒருவித நடுக்கத்துடன் வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்தான்.சூர்யாவிற்கு நண்பனின் நிலையைக் கண்டு கண்களில் தன்போல் கண்ணீர் கோர்த்தது.ஓடி வந்து பிருத்திவியை அணைத்தவன்,

“டேய் மச்சி கலங்காதடா…சுமித்ரா எங்கேயும் போயிருக்க மாட்ட கண்டுபிடிச்சிடலாம்டா….”என்று கூறினான்.அனிதாவும் பிருத்திவியை தேற்றும் விதமாக,

“அண்ணா பயப்படாதீங்க….மதியம் கூட நான் போன்ல பேசினேன்…கொஞ்சம் வேலையிருக்கு வெளில போகனும்னு சொன்னா…இங்க தான் பக்கத்தில் போயிருப்பா…”என்று கூற,அதுவரை தரையை வெறித்தப்படி இருந்தவன்,

“இல்லமா…பக்கத்தில உள்ள எல்லா இடத்திலேயும் தேடிட்டேன்…போனும் போக மாட்டேங்குது…எனக்கு பயமா இருக்கு…”என்று நடுக்கத்துடன் கூற,பார்த்த இருவருக்கும் கஷ்டமாக இருந்தது.

“அண்ணா எதுக்கும் திரும்பியும் ஒருமுறை நாம தேடி பார்க்கலாம்….நீங்க இப்படி இடிஞ்சு போனா எப்படி தேடுறது வாங்க ப்ளீஸ்….”என்று பலவாறு பிருத்திவியை தேற்றினாள் அனிதா.

பின் சூர்யாவும்,பிருத்திவியும் மீண்டும் தேடுதல் படலத்தைத் தொடங்கினர்.ஆனால் இருவருக்கும் தோல்வியே மிஞ்சியது.பிருத்திவி,

“டேய் சூர்யா…எனக்கு மித்துவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோனு பயமா இருக்கு…”என்று கூற,சூர்யாவுக்குமே அதே மனநிலை தான் இருந்தும் வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

“டேய் நீயா மனசை போட்டு ஒழட்டிக்காத…வா முதல்ல போலீஸ்ல போய் புகார் கொடுக்கலாம்….”என்று கூற,பிருத்திவிக்குமே சூர்யா கூறுவது தான் சரியென பட,

“சரிடா….போலாம்…”என்றான்.

இருவரும் காவல்துறையில் புகார் கொடுத்துவி்ட்டு வந்தனர்.பிருத்திவி சூர்யாவிடம்,

“டேய்….மணி பத்து ஆச்சு…நீ விட்டுக்கு போ…நான் பார்த்துக்குறேன்…”என்று கூற,சூர்யாவோ,

“சுமித்ரா கிடைக்காம….நான் எங்கேயும் போறதா இல்லை….”என்று கூறினான்.

“நான் பக்கத்தில இருக்குற ஹாஸ்பிட்டலெல்லாம் தேட போறேன்டா…”என்று கூறியவன் தளர்ந்த நடையுடன் முன்னே செல்ல சூர்யாவிற்கு நண்பனின் நிலைக் கண்டு மனதே விட்டு போன உணர்வு.அனைத்தும் நண்பனின் வாழ்வில் சரியானது என்று நினைத்திருக்க,இப்போது நடந்துகொண்டிருப்பதை பார்த்தால் மீண்டும் பிருத்திவி பழைய நிலையைவிட மோசமாகிவிடுவான் போல் இருந்தது.இப்படி அனைவரையும் தவிக்கவிட்டு சுமித்ரா எங்கு தான் போயிருப்பாள் என்று நினைத்தான்.

இருவரும் பக்கத்தில் உள்ள சில மருத்தவமனைகளுக்கு சென்று விசாரித்து பார்த்தனர்.ஆனால் அங்கு சுமித்ராவைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் போக பிருத்திவிக்கும்,சூர்யாவிற்கும் மனதே விட்டு போனது போல் இருந்தது.கடைசியாக ஒரு மருத்துவமனை வாயிலின் ஓரமாக அமர்ந்த பிருத்திவி சூர்யாவைக் கட்டிக் கொண்டு அழுது தீர்த்துவிட்டான்.

“சூர்யா மித்து…மித்து…”என்று கூற முடியாமல் அழ,சூர்யாவால் நண்பனை தேற்ற முடியாமல் நின்றான்.அவனுக்குமே சுமித்ராவிற்கு என்ன ஆனது எங்கு போயிருப்பாள் என்று ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டு இருக்க,அப்போது சூர்யாவின் கைபேசி சிணுங்கியது,அனிதா அழைப்பாள் என்று நினைத்தவாறே எடுக்க அழைப்பு புது எண்ணில் இருந்து வந்திருந்தது.யாராக இருக்கும் என்று நினைத்தவாரே காதில் வைக்க,மறுபக்கம் என்ன கூறப்பட்டதோ,

“இதோ வந்திடுறோம்….இப்ப இரண்டு நிமிஷத்துல அங்க இருப்போம்….”என்று கூறியவன்,

“டேய் மச்சி கிளம்பு…”என்று பிருத்திவியை கிளப்ப,

“நான் வரலைடா…என்னை இப்படியே விடு…”என்று தன்போக்கில் ஏதேதோ கூறிக் கொண்டிருந்தான்.அவனை இழுத்துக் கொண்டு ஒரு ஆட்டோ பிடித்து பிருத்திவியின் வீடு வந்தனர்.

“டேய் சூர்யா எதுக்கு இப்ப வீட்டுக் கூட்டிடு வந்திருக்க…நான் என் மித்து இல்லாம வீட்டுக்குள்ள வரதா இல்லை…”என்று கூறி மீண்டும் ஆட்டோவில் ஏறப்பார்க்க,

“டேய் பிருத்திவி…ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளு…”என்று அவனுடன் போராட,பிருத்திவியோ,

“நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறதா இல்லை…என்னை விடு…”என்று தர்க்கம் செய்தான்.அப்போது,

“தேவா…தேவா…”என்ற அழைப்பு பிருத்திவியின் காதுகளில் எட்ட,ஒருநிமிடம் பிருத்திவிக்கு அனைத்தும் சம்பித்த நிலை,ஒருநிமிடம் தான் இது தனது மனபிரம்மை என்று தனக்குள் சொல்லிக் கொண்டவாரே ஆட்டோவில் ஏற முற்பட,

“தேவா……இருங்க…”என்று கூறியபடி தடுத்தது ஒருகரம்.அந்த தொடுகையே கூறியது இது தனது மித்து தான் என்று வேகமாக திரும்ப,அங்கே தலையில் கட்டுடன் நின்றிருந்தாள் அவனது ஆருயிர் மனைவி சுமித்ரா.அவளை பார்த்த நொடி அனைத்தும் மறந்தவன் போல்,

“மித்து….மித்து…எங்கடி போன….”என்று பிதற்றிக் கொண்டே அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.சுமித்ராவும் கணவனின் நிலை புரிந்து,

“தேவா…தேவா…இங்க பாருங்க எனக்கு ஒண்ணுமில்லை….தலையில தான் சின்ன காயம்….”என்று கூற வேகமாக அவளிடம் இருந்து விலகியவன்,

“எப்படி தலையில அடிப்பட்டுச்சு…உன்னோட போன் எங்க….நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா…”என்று கூறியவாறே அவளது தலையில் உள்ள காயத்தை ஆராய்ந்தான்.கலைந்த தலை,சிவந்த கண்களுடன்,குரல் உடைந்து கைகள் நடுக்கத்துடன் சுமித்ராவை வருடியபடி கேட்க,சுமித்ராவிற்கு மனதில் சொல்லான வலி ஏற்பட்டது.பிருத்திவியின் நிலை கண்ட சுமித்ராவிற்கு அவனை தவிர வேறு எதுவும் தெரியவில்லை என்று தான் கூற வேண்டும்.தன் போல ஏதோ பிதற்றிக் கொண்டிருந்தவனை தன் முகம் நோக்கி திருப்பிய சுமித்ரா,

“தேவா….தேவா…இங்க பாருங்க…எனக்கு ஒண்ணுமில்லை….”என்று கூறினாள்.அந்தோ பரிதாபம் ஆனால் அதை புரிந்து கொள்ளும் நிலையில் தான் பிருத்திவி இல்லை.அதைக் கண்ட சுமித்ராவிற்கு மனதின் பாரம் கூடிக் கொண்டே போக,

“தேவா….தேவா….இப்ப நான் சொல்றத கேட்க போறீங்கலா இல்லையா…..”என்று உறக்க அழைத்து பிருத்திவியின் தோள்களை உலுக்க,பிருத்திவியோ எதுவும் புரியாமல் விழிக்கத் தொடங்கினான்.சுமித்ரா கத்தியதில் அடிபட்ட இடத்தில் வலி எடுக்க அவளது கைகள் தன் போல் தலையை பிடித்துக் கொண்டது.

“மித்து…என்ன ஆச்சு…என்ன பண்ணுது….”என்று பிருத்திவி பதற அதற்குள் சுமித்ரா மயங்கி சரிய தொடங்கினாள்.

“ஏய் மித்து….மித்து…என்னடி….”என்று கத்திக் கொண்டே அவளை பிருத்திவி தாங்க,அதற்குள் பக்கத்தில் இருந்த சூர்யாவும் அவளை தாங்கிபிடித்தான்.

பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவளை அனுமதித்தனர்.அதற்குள் சூர்யா சுமித்ரா கிடைத்துவிட்டாள் என்று அனிதாவுக்கு தகவல் தர அவளும் கிளம்பி வந்துவிட்டாள்.அனைவரும் வெளியில் உள்ள இருக்கையில் அமர்ந்திருக்க,அப்போது சுமித்ராவை பரிசோதித்துவிட்டு மருத்துவர் வெளிவர,அவரிடம் விரைந்த பிருத்திவி,

“டாக்டர்…அவளுக்கு இப்ப எப்படி இருக்கு…”என்று பதட்டத்துடன் கேட்க,

“பயப்படுற மாதிரி ஒண்ணுமில்லை மிஸ்டர்.பிருத்திவி….தலையில காயம் பட்டதால கத்தி பேசக் கூடாது ஆனா இவங்க பேசியிருக்காங்க அதான் மயக்கம் வந்திடுச்சு….இன்னைக்கு ஒரு நாள் இங்க இருக்கட்டும் நாளைக்கு டிஸ்ஜார்ஜ் பண்ணிடலாம்…..”என்றவர்,அவளுக்கு சில மருந்துகளை கொடுத்துவிட்டு சென்றார்.

“இவ்வளவு நேரம் சுமி எங்க போனா…எப்படி அடிப்பட்டுச்சு சூர்யா….”என்று அனிதா கேட்க,சூர்யா,

“பஸ்ஸிலேந்து கீழ இறங்கும் போது சுமியோட பேக்கை யாரோ பிடிச்சு வேகமா இழுத்து திருடிட்டு போயிட்டானுங்க…பிடுச்சு இழுத்த வேகத்தில இவ தடுமாறி கீழ விழுந்து தலையில அடிபட்டு மயங்கிட்டா…..அப்ப பக்கத்தில இருந்தவங்க எல்லாம் சேர்ந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்காங்க……”என்று நீண்ட விளக்கம் கூற,

“உனக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சிது…”என்று பிருத்திவி கேட்க,

“சுமியை சேர்த்திருந்த ஹாஸ்பிட்டல வேலை செய்யுற நர்ஸ் தான் இப்ப சுமியை அழைச்சிக்கிட்டு வந்தாங்க அவங்க தான் சொன்னாங்க…அவங்க செல்லேந்து தான் எனக்கு சுமி கால் பண்ணா…..முதல்ல உனக்கு தான் கால் பண்ணிருப்பா போல ஆனா உன்னோட செல் சுவிட்ச் ஆப்னு வரவும் எனக்கு கால் பண்ணியிருக்கா…”என்றான்.

“நல்லவேளை சின்ன அடி…ஏதாவது பெரிசா அடி பட்டிருந்தா…நினைக்கவே பயமா இருக்கு…”என்று அனிதா கூற,பிருத்திவி அமைதியாக இறுக்கையில் அமர்ந்துவிட்டான்.மனதும்,உடலும் மிகவும் சோர்ந்து போயிருந்தது.என்ன முயன்றும் அவளை காணாமல் தேடிய நிமிடங்கள் கண்முன்னே விரிந்து மேலும் அவனை அலைக்கழிக்க தொடங்கியது.ஏன் தனக்கு மட்டும் இவ்வாறு எல்லாம் நடக்கிறது என்று தனக்குள் கேட்டுக் கொண்டவனின் மனதில் காலையில் இருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்துவிட்டிருந்தது.

Advertisement