Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 16

பிருத்திவி,சூர்யா இருவரும் டெல்லி வந்து இரு தினங்கள் ஓடியிருந்தது.புராஜக்டின் இறுதி அறிக்கைகள் அனைத்தும் ஜே.பி குரூப்பில் சமர்பித்துவிட்டனர் இருவரும்.அதில் சில திருத்தங்களை சேர்மேன் கங்காதரன் கூறியிருக்க அவற்றை செய்து முடிக்க மேலும் இரு தினங்கள் அவர்கள் அங்கு தங்க வேண்டியிருந்தது.பிருத்திவிக்கு வேலை செய்வது ஒருபக்கம் இருந்தாலும் மனது மனைவி என்ன செய்து கொண்டிருப்பாள் என்பதிலேயே சுழன்றது.அதனாலே அவனது முகம் அவ்வபோது யோசனைக்கு செல்வதைக் கண்ட சூர்யா,

“என்ன மச்சான் ஏன் ஏதோ போல இருக்க…”என்று கேட்க,

“ப்ச் ஒண்ணுமில்லைடா…”என்று கூறிவிட்டு மீண்டும் தனது மடிகணினிக்குள் தலையை  நுழைத்துக் கொள்ள,சூர்யாவிற்கு நண்பனின் செய்கை ஒன்றும் புரியவில்லை.இதற்கு மேலும் ஏதாவது கேட்டால் திட்டுவானோ என்று பயந்தே அவனது வேலைகளை தொடர்ந்தான்.சற்று நேரம் வேலையில் கவனம் வைத்த பிருத்திவிக்கு மீண்டும் சுமித்ராவின் நியாபகம் வர,இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள் என்று யோசனை செய்ய தொடங்க,அவன் முன்னே யாரோ கைபேசியை நீட்டினார்கள்.

“இந்தா முதல்ல சுமித்ராவுக்கு போன் பண்ணி பேசு….”என்று கைபேசியை நீட்டியவறே சூர்யா கூற,

“உனக்கு எப்படிடா தெரியும் நான் சுமித்ராவை பத்தி தான் நினைச்சிக்கிட்டு இருந்தேனு…..”என்று பிருத்திவி ஆச்சிரியம் போல் கேட்க,அவனைக் கண்டு முறைத்த சூர்யா,

“ம்ம்….இவ்வளவு நேரமா நீ என் மித்து என்ன செஞ்சுகிட்டு இருப்பானு….இதோட ஒரு பத்து வாட்டியாவது சொல்லிருப்ப…அதை வச்சு தான் சொல்லுறேன்….”என்று நக்கலாக கூற,பிருத்திவி முகத்தில் அசடு வழிந்தது.அதைக் கண்ட சூர்யாவோ,

“டேய் நீ வெட்கமெல்லாம் படாத….என்னால பார்க்க முடியலை….”என்று பல்லை கடித்தவாறே கூறினான்.

“சரி சரி விடு மச்சி….நீயும் அனிதா கிட்ட பேசனும்னா பேசிக்க…..”என்று அசராமல் கிண்டல் செய்தான்.

“இவன் பொண்டாட்டிக்கிட்ட பேசனும்னா நானும் பேசனுமா…என்ன கொடுமை டா ஆண்டவா….”என்று மனதிற்குள் நினைத்தவன்,தனது வேலைகளை கவனிக்க செல்ல,பிருத்திவி சுமித்ராவிற்கு அழைப்பு விடுத்தான்.இரு ரிங்குகள் சென்ற பிறகே அழைப்பு ஏற்கப்பட்டது.

“ஏய் மித்து எங்க போன….எவ்வளவு தடைவை கூப்பிடுறது…..”என்று போனில் காய,அந்த பக்கம் மௌனம்.

“ஏய் ஹலோ….மித்து…மித்து…”என்று அவள் இருக்கிறாளா இல்லையா என்று சரிபார்த்துவிட்டு அழைக்க,

“ப்ச்…இருக்கேன் தேவா….ஏன் இப்படி கத்துறீங்க…”என்று சற்று சலிப்பாக வந்தது சுமித்ராவின் குரல்.

“என்னடி ஏன் இப்படி சலிச்சிக்குற….”என்று இவனும் சற்று கோபமாக கேட்க,

“பின்ன என்ன இரண்டு தடவை தான் கூப்பிட்டு இருக்கீங்க…..அதுக்கு எவ்வளவு தடவை கூப்பிடுறது எங்க போயிட்டனு கேட்குறீங்க….”என்று அவளும் சற்று காரமாகவே பதில் தர,பிருத்திவி்க்கு மனது சுணங்கியது.எனக்கு தோன்றுவது போல் இவளுக்கு என் பிரிவு மனதை பாதிக்கவில்லையா…நான் மட்டும் தான் இவளை நினைத்து இங்கு கலங்குகிறேன்…இவளோ எந்தவித கலக்கமும் இல்லாமல் என்னிடம் பேசுகிறாள்….எனக்கு ஏற்பட்ட பாதிப்பு இவளுக்கு ஏற்படவில்லையோ…என்று பலவேறு சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தான்.

“ஹலோ….தேவா..தேவா…இருக்கீங்கலா…”என்று சுமித்ரா அந்த பக்கம் கத்த,அது சூர்யாவின் காதில் விழுந்தது.என்ன இப்படி கத்துரா என்று நினைத்துக் கொண்டு பிருத்திவியைப் பார்க்க அவனோ ஏதோ சிந்தனையில் இருந்தான்.இவன் என்ன அப்பப்ப எங்கோ போயிடுறான் என்று நினைத்தவன்,

“டேய் மச்சி….மச்சி…”என்று பிருத்திவியின் தோள்களை உலுக்க,

“ஆங்…என்ன மச்சான்….”என்று கேட்க,சூர்யாவோ,

“டேய் போன்ல சுமித்ரா….”என்று கைபேசியை காட்ட,அப்போது தான் சுமித்ராவுடன் பேசிக் கொண்டிருந்தது நியாபகத்திற்கு வந்தது பிருத்திவிக்கு,

“ஆங்….ஹலோ….மித்து….”என்று அழைக்க,அந்த பக்கம்

“ஹலோ…தேவா….என்ன ஆச்சு…”என்று பதட்டமாக கேட்டாள் சுமித்ரா.தான் பேசியதில் கணவனுக்கு கோபம் என்று உணர்ந்தவள் அவனை சமாதனப்படுத்தும் எண்ணத்தில் கூப்பிட அவனோ பதிலே அளிக்கவில்லை.அதனால் என்னவோ ஏதோ என்று பயந்தவள் கைபேசியிலே உறுத்து அழைத்தாள்.

“ஆங்..மித்து நான் லையன் தான் இருக்கேன்….சொல்லு…”என்று கூற,

“தேவா…கோபமா….நான் மாடியில துணி காயப்போட போயிருந்தேன்…அதான் போன் எடுக்கலை….”என்று விளக்கம் கூற,இங்கு பிருத்திவி வெறும்,

“ம்ம்…”என்று கூறினான்.

“என்ன தேவா ரொம்ப கோவமா…..சாரி…நான் ஏதோ கோபத்துல பேசிட்டேன்….”என்று வருந்தி கூற,பிருத்திவியும் மனைவியின் கலக்கம் பிடிக்காமல்,

“சரிடா விடு….நான் கோவப்படலை….”என்று கூறியவன் சற்று நேரம் வேறு பேசிவிட்டு வைத்தனர்.சுமித்ரா பேசி வைத்தும் பிருத்திவியின் முகம் ஏதோ யோசனையில் இருக்க,அதனைக் கண்ட சூர்யா,

“என்ன தான் மச்சி பிரச்சனை…ஏன் ஏதோ போல இருக்க….என்கிட்ட சொல்லு என்னால முடிஞ்சா உதவுறேன்…”என்று கூறினான்.

“ச்சு…என்னனு தெரியலைடா…என் மனசு முழுக்க இப்ப மித்து தான் இருக்கா…அவளை என் மனசு விரும்புதுனு நான் உணர்ந்துட்டேன்….ஆனா அவ என்னை போல உணர்ந்தாளானு தான் தெரியலை…அதான் என்னவோ போல இருக்கு….”என்று தன் மனதை மறையாமல் கூற,அவனது தோள்களை தட்டிய சூர்யா,

“டேய் மச்சி…நீ எப்படி உன் மனசை உணர்ந்தியோ…அதே போல சுமித்ராவும் கண்டிப்பா உணர்ந்திருப்பாடா…நீ தேவையில்லாம மனசை உழட்டாத…உன்னை நேர்ல பார்த்தும் அவ மனசை கண்டிப்பா உன்கிட்ட சொல்லுவா பாரு…”என்று நண்பனுக்கு நம்பிக்கை தந்தான்.பிருத்தவிக்கு நண்பனின் வார்த்தைகள் ஏதோ சுகத்தை தர அதுவரை இருந்த மனகலக்கம் நீங்கி,தன் வேலையில் கவனமானான்.

பிருத்திவியும்,சூர்யாவும் மேலும் இரு தினங்கள் இருந்து வேலைகளை முடித்துக் கொடுத்தனர்.கங்காதரன் எதிர்பார்த்ததைவிட புராஜக்ட் நல்லமுறையில் வந்திருந்தது.அதில் அவருக்கு பிருத்திவியின் மீது தனி மதிப்பு உருவானது.

“மிஸ்டர்.பிருத்திவி தேவ்….யூ டன் ஏ வெல்டன் ஜாப் மேன்….ஐ ம் இம்பிரஸ்….”என்று தன் மனதை மறையாமல் அவனிடம் பகிர்ந்து கொண்டார்.பிருத்திவியும் எந்த பிகுவும் பண்ணாமல்,

“தேங்க்யூ சார்…”என்றான்.கங்காதரனுக்கு நேர் கொண்ட பார்வையுடன் தன் மனதில் உள்ளதை தைரியமாக பகிரும் பிருத்திவியை மிகவும் பிடித்திருந்தது.

“உன்னோட இந்த முயற்சி மேலும் வளர என்னோட வாழ்த்துக்கள் மேன்…”என்று கூறியவர்.அடுத்து வரும் அவர்களது ஒரு ஹோட்டல் வேலையையும் அவனுக்கு கொடுத்தார்.

“உன் கிட்டேந்து நல்ல அவுட் கம்மை இந்த வேலையிலும் எதிர்பார்க்குறேன் மேன்…ஆல் தி பெஸ்ட்….”என்று கூறி அனுப்பி வைத்தார்.

பிருத்திவிக்கும்,சூர்யாவிற்கும் தலை,கால் புரியாத நிலை.தங்களின் அயராத உழைப்பின் பலனை கடவுள் தங்களுக்கு தருகிறார் என்று மனதார கடவுளை வேண்டியவர்கள்.தங்களின் கம்பெனிக்கு அழைத்து அனைத்தும் நல்லவிதமாக முடிந்தது என்று கூறிவிட்டு அடுத்து வேலையும் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர்.அவர்களுக்கும் பிருத்திவி கூறிய விஷயத்தைக் கேட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

மனநிறைந்த உணர்வுடன் பிருத்திவியும்,சூர்யாவும் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினர்.சென்னை திரும்பியவர்கள் நேராக வீட்டுற்கு செல்லாமல் கடை வீதியில் திறிந்தனர்.பிருத்திவி சுமித்ராவிற்கு எதாவது பரிசு வாங்க வேண்டும் என்று சூர்யாவையும் இழுத்துக் கொண்டு சுற்ற,சூர்யாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை குறைய தொடங்கியது.

“டேய்…இப்ப என்ன தான் டா பண்ணனு நீ நினைக்கிற…”என்று கத்த,பிருத்திவியோ,

“ப்ச்…மச்சி…அவளுக்கு முதல் முறையா நான் வாங்கிக் கொடுக்குறேன்….நல்லதா வாங்கி கொடுக்க வேண்டாமா…நீ என்னடானா இப்படி சலிச்சிக்குற….”என்று கூற,சூர்யாவோ,

“டேய் அதுக்குனு இப்படி கடை கடையா எவ்வளவு நேரம்டா சுத்துவ…என்னால முடியலைடா…எதாவது ஒன்னு வாங்கிட்டு நீ வா நான் இங்கேயே உக்கார்ந்து இருக்கேன்…”என்று கூறிவிட்டு அந்த கடையின் வாயிலில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

பிருத்திவியும் சூர்யாவை மேலும் சோதிக்காமல் சுமித்ராவிற்கு தங்கத்தில் தோடு ஜிமிக்கி வாங்கி கொண்டு வந்தான்.பின் இருவரும் தங்களின் வீடு வந்தனர்.சூர்யா,பிருத்திவியை அவனது வீட்டில் விட்டு விட்டு செல்ல வந்தான்.பிருத்திவியின் வீடு பூட்டியிருக்கவும்,

“என்ன மச்சான் வீடு பூட்டியிருக்கு…”என்று சூர்யா கேட்க,

“நான் வருவேனு அவகிட்ட சொல்லைடா….இங்க பக்கத்தில எங்காயவது போயிருப்பா….”என்றவன் தன் கையில் வைத்திருந்த சாவிக் கொண்டு திறந்தான்.சூர்யாவும் சரி என்னும் விதமாக தலையாட்டி விட்டு சிட்டாக பறந்துவிட்டான்.

வீட்டிற்குள் வந்த பிருத்திவி தனது பெட்டியை ஓரமாக வைத்துவிட்டு முதலில் மனைவிக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தான்.அது முழுதாக அடித்து ஓய்ந்தது.சரி ஏதாவது வாங்க போயிருப்பாள் என்று நினைத்தவன்.அவள் வருவதற்கு முன் குளித்துவிட்டு வரலாம் என்று குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக்கு கொண்டு வந்தான்.பின் சமையலறையில் என்ன இருக்கிறது என்று பார்த்தவன்,மதியம் செய்த குழம்பும்,சாதமும் இருக்க அதை போட்டுக் கொண்டு உண்டான்.

“என்ன இவ்வளவு நேரம் ஆச்சு…இன்னும் மித்துவை காணும்….”என்று நினைத்தவன் மீண்டும் அவளுக்கு அழைப்பு விடுக்க அழைப்பு எடுக்கப்படவில்லை.இப்போது பிருத்திவிக்கு மனது துணுக்குற்றது,

“எங்கு போயிருப்பாள்…போனை ஏன் எடுக்கலை….”என்று யோசித்தவன்,தனது வீட்டை பூட்டி விட்டு பக்கத்தில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்கு சென்று தேடி பார்த்தான் அங்கு அவள் இல்லை என்று தெரிந்ததும்.பக்கத்தில் உள்ள பார்க் மற்றும் பக்கத்தில் உள்ள சில இடங்களில் தேடியவனுக்கு தோல்வியே மிஞ்சியது.நேரத்தை பார்க்க அது இரவு ஏழு மணி என்று காட்டியது.ஒருவேளை வீடு வந்திருப்பாளோ,போன் ஏதாவது சரியில்லையோ என்று பல எண்ணங்கள் சுழல வீடு வர அங்கே வீடு பூட்டப்பட்டு இருந்தது.

பிருத்திவியின் மனதில் அதுவரை இருந்த உடலின் சக்தியெல்லாம் வடிந்தது போல் இருந்தது.மனதில் பலதரப்பட்ட எண்ணங்கள் அலை மோத தலையில் கை வைத்தப்படி அமர்ந்துவிட்டான்.மனது அவளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்தவாறே சூர்யாவிற்கு அழைக்க,அடுத்த பத்து நிமிடங்களில் சூர்யாவும் பிருத்திவியின் இருப்பிடம் வந்துவிட்டான்.

தனது வாழ்வே தொலைத்தப்படி அமர்ந்திருந்த நண்பனைக் கண்ட சூர்யாவிற்கு இதயம் விம்மியது.தனது நண்பனை தேற்றி இருவரும் தேடும் படலத்தை தொடர,நேரம் கடந்ததே தவிர சுமித்ராவைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.பிருத்திவிக்கு நேரம் செல்ல செல்ல மனதில் நம்பிக்கை குறைய தொடங்கியது.நடுங்கும் மனதுடன்,

“மித்து…எங்கடி போன….என்னை விட்டு எங்கேயும் போயிடாதடி…”என்று உருப்போட்டப்படி அமர்ந்துவிட்டான் பிருத்திவி தேவ்.

Advertisement