Advertisement

 உன்னில் உணர்ந்தேன் காதலை 11

தனது வீட்டில் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தாள் சுமித்ரா.அவளது கண்கள் கலங்கியபடி இருந்தது.வீட்டின் வெறுமையுடன்,மனதின் வெறுமையும் சேர்ந்ததால் தன் சக்தி முழுதும் வடிந்தது போல இருந்தது.எப்போதும் உள்ள தனிமை தான் ஆனால் இன்று ஏதோ மனதை அழுத்துவதாக இருக்க,தன் தாய்,தந்தையின் ஆதரவை தேடியது பெண்ணின் மனம்.தன்னை இப்படி தவிக்கவிட்டு சென்றுவிட்டனரே என்று வாய்விட்டே அழுதுவிட்டாள்.இத்தனை நாட்களில் இவ்வளவு உடைந்தது இல்லை,தன் பலவீனத்தை மற்றவர் முன் காட்டக் கூடாது என்று முயன்று தன்னை திடமாக காட்டிக் கொண்டிருக்க இன்று அனைத்தையும் உடைத்து எறிந்துவிட்டான் பிருத்திவிதேவ்.

பிருத்திவியை பற்றி நினைத்தாலே சுமித்ராவிற்கு ஒருபுறம் குளுமையான நினைவுகளும்,மற்றொரு புறம் வென்மையான நினைவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அவளை தாக்கி நிலைகுலைய செய்துவிடும்.அதனாலே அவனது நினைவுகளை முயன்று மனதில் இருந்து அழித்தாள்.அவனது நினைவுகள் முழுவதும் அழிந்துவிட்டதாக அவள் நினைத்திருக்க அவ்வாறு இல்லை என்று விதி அவளுக்கு நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டது இந்த சில நாட்களிலேயே.

கீதா திருமணத்தில் அவனை கண்டதில் இருந்தது மனதில் அழிந்துவிட்டதாக நினைத்த அனைத்தும் அவள் கண் முன்னே தோன்றியது.ஏற்கனவே அவனை மனதில் நினைத்தற்கு ஒரு முறை பட்ட துன்பமே போதும் மீண்டும் அதே போல் ஒரு துன்பத்தை ஏற்க மனது தயாராயில்லை என்பதால் தான் பிருத்திவி அவளிடம் பேச வந்த போது கூட பேசாமல் வந்தது.

தனது ஊருக்கு திரும்பிவிட்டால் அவனது நினைவுகள் மறைந்துவிடும் என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்.ஆனால் ஊட்டி வந்த நாளில் இருந்து அவனது நினைவு ஏதோ ஒரு வகையில் அவளை படுத்திக் கொண்டு தான் இருந்தது.அதனாலே தன் கவனம் முழுவதையும் வேலையில் செலுத்தினாள்.அதில் அவளுக்கு வெற்றியும் கிட்டியது என்று தான் சொல்லவேண்டும்.அலைக்கழிந்த மனது சற்று சமன்பட தொடங்கிய நேரம் தான் அதனை அழிக்கும் விதமாக மீண்டும் அவளது வாழ்வில் வந்தான் பிருத்திவிதேவ்.

சுமித்ரா பிருத்திவி ஊட்டி வரை வந்து நிற்பான் என்று நினைக்கவில்லை.அவனது வருகை சுமித்ராவிற்கு அதிர்ச்சி என்றால்,அதில் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் நடக்க சுமித்ராவால் ஒருநிலையில் இருக்க முடியாமல் போனது.அதுவும் பிருத்திவியின் வலியும்,ஏக்கமும் நிறைந்த பார்வை நெஞ்சை பிழிந்தெடுக்க செய்தது.தன்போல் அவளது நினைவுகளும் மாலை நடந்த நிகழ்விற்கு சென்றது.

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ சுமி….”என்று பிருத்திவி சுமித்ராவின் முகத்தை தன் கைகளில் ஏந்தி கேட்க,சுமித்ராவிற்கு சில நிமிடங்கள் பிடித்தது அவன் என்ன கூறுகிறான் என்று.அவனது தொடுகையிலேயே அதிர்ந்தவள்,அவனது பேச்சை கவனிக்கவில்லை.அவளது அதிர்ந்த முகத்தைக் கண்டு புன்னகைத்த பிருத்திவி,

“சுமி…”என்று அவளை உலுக்க,அதில் தன் நிலை பெற்ற சுமித்ரா,

“என்ன…என்ன…கேட்டீங்க….”என்று தடுமாற்றமாக கேட்க,அவளது பதட்ட முகத்தை ரசித்தவாறே,

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ…”என்று பிருத்திவி மீண்டும் கூற,தன் முகத்தில் இருந்த அவனது கைகளை பொறுமையாக எடுத்தவள் அவனிடம் இருந்து சற்று தள்ளி அமர்ந்து கொண்டு,

“என்ன திடீர்னு….ஏன்….”என்று தடுமாற்றமும்,அதே சமயம் அவனை ஆராயும் பார்வையுடன் கேட்டாள்.

பிருத்திவியும் ஒரு நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டு தன் கடந்த காலத்தில் அனைத்தையும் கூறினான்.தன்னுடைய தற்போதைய நிலையையும் கூறியவன்,

“அம்மா,அப்பா போனதுக்கு அப்புறம் எனக்கு எதுலேயும் பற்றே இல்லை சுமி….ஏதோ வாழ்ந்து தான் ஆகனும்னு கடமைக்கு வாழ்க்கை போயிட்டு இருக்கு….ஆனா கீதா கல்யாணத்தில உன்னை பார்க்கனும் தான் வந்தேன்….உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும் தான் உன்கிட்ட பேச வந்தேன்..ஆனா நீ நான் என்ன சொல்ல வரேனு கூட கேட்காம கோபமா பேசிட்டு போயிட்ட….முதல்ல கோபம் தான் உன்மேல…கொஞ்சம் நிதானமா யோசிச்சா உன் கோபமும் நியாம்னு தான் மனசு சொல்லுச்சு….”என்றுவிட்டு சுமித்ராவின் முகத்தை காண,அவளோ நீ உன் மனதில் உள்ள அனைத்தையும் கூறி முடி என்பது போல் அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.கண்களில் அப்பட்டமான பயம் தெரிந்தது.அவளது கண்களில் தெரிந்த பயம் பிருத்திவிக்கு மனதை கணக்க செய்ய,வேகமாக அவளது முன் மண்டியிட்டவாறு,

“சுமி…ப்ளீஸ்….நான் முழுசா சொல்லுற வரைக்கும் நீயா எந்த முடிவு எடுக்காத…ப்ளீஸ்….என்னை நம்பு…நான்…நான்…”என்று ஏதோ கூற வந்தவன் தடுமாற்றத்துடன் நிறுத்திவிட்டு சுற்றுமுற்றும் பார்ப்பது போல் கண்ணீரை துடைக்க,சுமித்ராவிற்கு தன் எதிரில் அமர்ந்து இருந்த பிருத்திவி முழுவதும் வேறாக தெரிந்தான்.அவனது பேச்சில் கோபம் மனதில் கனன்றாலும்,அவனது கண்ணீர் அவள் மனதை பாதிக்க தான் செய்தது.அவனோ தன் முகத்தை திருப்பியபடி தன் பலவீனத்தை மறைத்தபடி இருக்க,ஒருகட்டத்தில் அவனை அவ்வாறு காண முடியாத சுமித்ரா,

“தேவா…”என்று அவனது தோள்களை பற்றி திருப்பி ,தன் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர வைத்தவள்,தன் கைபையில் இருந்த தண்ணீர் பாட்டிலையும் தந்தாள்.அவனும் மறுப்பு ஏதும் கூறாமல் வாங்கி குடித்தான்.

“நான் எதுவும் நினைக்கல…நீங்க சொல்லவந்ததை முழுசா சொல்லுங்க…நீங்க கீழ்தரமான ஆள்கிடையாது எனக்கு தெரியும்…நான் எப்போது உங்களை அந்த மாதிரி எல்லாம் நினைக்க மாட்டேன்…”என்று சுமித்ரா கூற,பிருத்திவிக்கு அதுவரை மனதில் அழுத்திக் கொண்டிரிந்த பெரிய பாரம் இறங்கியது போல் இருந்தது.தன் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ள சுமித்ரா தான் தனக்கானவள் என்று மனதும் அழுத்தமாக கூறியது.அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க,அவனது பார்வையின் வீச்சை தாங்க முடியாதவள்,

“நீங்க சொல்லுரீங்களா…இல்லை நான் கிளம்பவா…இது ஒண்ணும் சென்னை கிடையாது ஊட்டி இங்க சீக்கிரம் இருட்டிடும்….சீக்கிரம் சொல்லுங்க…”என்று முறைத்தபடி கூற,பிருத்திவி அதுவரை இருந்த இறுக்கம் நீங்கி சிரித்துவிட்டான்.

“சுமித்ரா பேக் டூ த பார்ம்….”என்று அவளது கோபத்தைக் கண்டு கூற,சுமித்ராவின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டவன் சுமித்ராவிடம்,

“என்ன சொல்ல அன்னைக்கி நடந்த சம்பவத்தில என்னை மாதிரி நீயும் பாதிச்சு தான் போயிருப்ப…எனக்கு அப்போ அது தோணவேயில்லை…அந்த போஸ்டர் எல்லாத்தையும் பார்த்தவுடனே எனக்கு இந்த வேலையை யார் செஞ்சிருப்பா தான் தோணுச்சே தவிர உன்னை பத்தி யோசிக்க மறந்து போயிட்டேன்……எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் என் புத்திக்கு அய்யோ நீ என்ன செஞ்சிருப்பனே உரைச்சுது…நிஜமா உன்னை பார்க்க தான் உன் ஹாஸ்டலுக்கு வந்தேன்….நீ அப்ப தான் பிரன்ஸ்பாலை பார்க்க போயி இருக்குறதா சொன்னாங்க உன்னை பார்க்கலாம்னு தான் திரும்பியும் காலேஜ்க்கு வந்திட்டு இருக்குறப்ப தான் என் அம்மா கீழ விழுந்துட்டாங்கனு எனக்கு போன் வந்துச்சு…நான் உடனே அவங்களை பார்க்க போயிட்டேன்….அதுக்கப்புறம் நீ எப்படியும் நாளைக்கு காலேஜ் வருவ அப்ப பேசிக்கலாம்னு நினைச்சேன்…ஆனா அதுக்கு அப்புறம் உன்னை பார்க்கவேமுடியாது நான் நினைக்கலை…..”என்றவன் அவளது முகத்தை பார்த்து,

“சாரி சாரி சுமி…உன்னோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம் ஆகிட்டேன்…”என்று கூற,சுமித்ரா திகைத்துவிட்டாள் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று நினைக்க,அவளது முகமாற்றத்தை வைத்தே கண்டு கொண்டவன்,

“எனக்கு எல்லாம் தெரியும் சுமி….கீதா கிட்டேந்து உன்னோட நம்பர்,வீட்டு விலாசம் எல்லாம் வாங்கின உடனேயே நான் நல்லசிவம் சாருக்கு போன் செஞ்சு பேசி உன்னை பத்தி தான் கேட்டேன்…..அவர் முதல்ல நான் யாரு என்னனு விசாரிச்சாரு…அதுக்கு அப்புறம் நம்ம காலேஜ் கடைசிய எடுத்த குரூப் போட்டோ எல்லாத்தையும் அவரோட கைபேசிக்கு அனுப்பிவச்சேன்….அதுக்கு அப்புறம் தான் உன்னை பத்தி எல்லாத்தையும் சொன்னாரு…உங்க அப்பா இறந்தது..அப்புறம் நீ காலேஜ் போகமாட்டேன் சொன்னது,அப்புறம் அவரோ தொழிற்சாலையிலேயே வேலையில இருக்குறது வரைக்கும் சொன்னார்…சாரி சுமி…நீ இப்படி இருப்பனு நான் நினைக்கவேயில்லை…கீதா சொன்னப்ப நீ வேற காலேஜ்ல படிச்சிட்டு இருப்பனு தான் நினைச்சேன்…இப்படி நான் நினைக்கவேயில்லை….”என்று உடைந்துவிட்ட குரலில் கூறினான்.

சுமித்ராவிற்கு அதிர்ச்சி தான் பிருத்திவி நல்லசிவத்திடம் பேசியிருப்பது,தன்னை பற்றி தெரிந்து கொண்டது என்று அவளுக்கு மனது நிலையில்லாமல் தவிக்க செய்ய,அப்போது ஒன்று உரைத்தது அவளுக்கு பிருத்திவி தன் தவறுக்கு பிராயிசித்தம் செய்ய தன்னை திருமணம் செய்ய நினைக்கிறானோ என்று நினைத்தவளுக்கு மனது மேலும் வலிக்க தொடங்கியது.தன் உதடுகளை கடித்து அழுகை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தவாறே பிருத்திவியை பார்த்தாள்.

அவளது முகத்தை வைத்தே அவளது மனதை படித்தவன்,

“இப்ப தான சொன்ன நான் கீழ்தரமா எல்லாம் யோசிக்கமாட்டேனு…இப்ப என்மேலேயே சந்தேகப்படுற பத்தியா….உன் நிலைமைக்கு நான் காரணமாயிட்டேனு குற்றவுணர்ச்சியில உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேனு நினைக்கிறியா…”என்று அவளை சரியாக கணித்து கேட்க,அவளோ தலையை நாலா புறமும் ஆட்ட,ஆடிய தலையை தன் கை கொண்டு நிறுத்தியவன்,

“மண்டு…மண்டு…நான் அப்படி நினைப்பேனா…சரியான மண்டு டி நீ…..”என்று செல்லமாக திட்ட,அதில் ரோஷம் வரப்பெற்றவள்,

“நான் ஒண்ணும் மண்டு இல்லை…நீங்க இப்படி திடீர்னு வந்து கல்யாணம் அது இதுனு பேசுனா நான் என்னத்தை நினைக்கட்டும்…”என்று தன் மூக்கை உறுஞ்சியவாரே மூக்கு நுனி சிவக்க பேச,அவளது மூக்கை செல்லமாக பிடித்து ஆட்டியவன்,

“அப்ப என்கிட்ட நேரடியா கேட்க வேண்டியது தான……ஏன் திடீர்னு கல்யாணம் பேசுறனு……”என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்க,அவனது முக வசீகரத்தில் சுமித்ராவிற்கு முகத்தில் வெட்க பூக்கள் பூக்க தன் அதை அவனிடம் இருந்து மறைக்கு பொருட்டு தன் முகத்தை வேறு புறம் திருப்பினாள்.

“ரொம்ப அழகா வெட்க படுற சுமி…”என்று அதற்க்கும் பேச,

“அய்யோ போதும் ப்ளீஸ்…”என்றுவிட்டாள் சுமித்ரா.பிருத்திவியும் அதுவரை இருந்த விளையாட்டு தனத்தை விட்டவன்,

“சுமி…நான் சொல்லரத முழுசா கேட்டுட்டு அதுக்குப்புறம் உன்னோட முடிவ சொல்லு….”என்று அவளை நேர்பார்வையுடன் கூறினான்.அவளும் அவன் கூறியதற்கு சரி என்னும் விதமாக தலையை ஆட்டினாள்.

“சுமி…நான் உன்னை காதிலிக்குறேன் அப்படி எல்லாம் பொய் சொல்லமாட்டேன்…எனக்கு உன்னை எப்போதும் பிடிக்கும் அது எப்படி சொல்லரது…காலேஜ்ல சின்ன குழந்தை மாதிரி எல்லாத்துக்கும் பயந்துக்கிட்டு நடுங்குன ஒரு பொண்ணை பார்த்ததும் எப்படியாவது அவளை அந்த பயம் அப்படின்ற கூட்டுலேந்து வெளில கொண்டு வரனும் யோசிச்சேன்…அதனால தான் நானே உன்கிட்ட பேசினேன்…..அதுக்கு அப்புறம் நம்ம நல்ல நண்பர்கள் ஆனோம்….எல்லாம் நல்லா தான் போனுச்சு..நீ உன் காதலை சொல்லுர வரைக்கும்…”என்று அவளை திரும்பி பார்த்துக் கூற அவளோ அன்றை நாளின் தாக்கம் இன்று தன்னிடம் உள்ளது என்பது போல் தன் கைளால் கைபையை இறுக பற்றிக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.அவளது உடல் மொழியே அவள் தான் பேசியதை இன்றும் அவள் மறக்கவில்லை என்பதை உரைக்க,பிருத்திவிக்கு தான் செய்த மடத்தனத்தால் குற்றவுணர்வு ஏற்பட்டது.

கைபையை பற்றியிருந்த சுமித்ராவின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டவன்,

“சாரி சுமி…நான் அன்னைக்கி அப்படி பேசியிருக்கக் கூடாது…தப்பு பெரிய தப்பு..உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்….எல்லாம் அந்த நேகாவால வந்தது…”என்று கூற,அதுவரை தன் குனிந்த தலை நிமிராமல் இருந்த சுமித்ரா,நேகாவின் பெயரைக் கேட்டுதும் நிமிர்ந்து பார்க்க,பிருத்திவி அன்று இரவு நேகா தன்னிடம் பேசியதைக் கூறினான்.

“நீயும் அவ சொன்ன மாதிரியே காதலிக்கிறேனு சொன்னதும் எனக்கு கோபம் அதிகமாயிடுச்சு..என்ன பேசுறேனு கூட தெரியாம நான் பேசிட்டேன்…..அப்புறம் அம்மா தான் நான் செஞ்சது தப்பு எனக்கு புரியவச்சாங்க……அடுத்த நாள் காலேஜ் வந்ததும் உன்கிட்ட மன்னிப்புக் கேட்கலாம் நினைச்சேன்..அதுக்குள்ள அந்த நேகா குரங்கு இல்லாத வேலையெல்லாம் செஞ்சுவச்சுடுச்சு….சாரி சுமி…ரியலி சாரி…மன்னிப்பு கேட்குறாதலா நீ அன்னைக்கி அனுபவிச்ச வேதனை மறையாது தான் ஆனா நான் மன்னிப்புக்கேட்கலானா என் மனசாட்சி என்னை கொன்னுடும்….”என்று குரல் கமற் கூற,சுமித்ரா அவனது கையின் மேல் தன் மற்றொருகையை கொண்டு தட்டிக் கொடுத்தாள்.அந்த தொடுகையே அவள் தன் மன்னிப்பை ஏற்றுக் கொண்டாள் என்று கூறியது.

மீண்டும் சில நொடிகள் மௌனத்தில் கரைய வானம் இருள தொடங்கியது,சுமித்ராவிற்கு நேரமாகும் என்று புரிந்தவன் தன் மனதில் உள்ளதை கூறினான்.

“கீதா கல்யாணத்துல உன்னை பார்த்துட்டு வந்ததுக்கு அப்புறம் நீ என்னை ரொம்ப தொந்தரவு செஞ்ச…ஏன் உன்னை நினைவு அடிக்கடி வருதுனு எனக்கு நானே கேட்டுக்கிட்டேன் ஆனா விடைதான் தெரியல…பார்தவுடனே காதல் அப்படின்றது எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை…ஆனா நீ அவ்வளவு உதாசினப்படுத்தினப்புறமும் எனக்கு உன் மேல கோபம் வரல….நீ இவ்வளவு பேசுவீயா அப்படின்ற எண்ணம் தான்….ஏதோ ஒருவகையில உன் நினைப்பு எனக்கு உள்ளுக்குள்ள சுகமா இருந்துச்சு…முதல்ல இது என்ன விபரீதமா நான் யோசிக்கிறேனு நானும் நினைச்சேன்…ஆனா இந்த தடவை என் மனசு உனக்கு இப்ப ஒரு துணை தேவை…அது ஏன் உன்னை விரும்பின சுமித்ராவா இருக்கக்கூடாது அப்படி கேட்க…நானும் மனசு சொல்லுற படி இந்த தடவை கேட்டுபார்ப்போம்னு வந்துட்டேன்…”

“ஆனா இங்க வந்ததுக்கு அப்புறம் தான் நான் கேட்க வந்ததது தப்போ நினைச்சேன்…அதுவும் உன்னை பார்க்குற வரைக்கும் தான் உன்னை பார்த்ததுக்கப்புறம்…நீ என்கிட்ட கோபப்பட்டது,நான் சாப்பிடலைனு சொன்ன உடனே என்னை ஒரு குழந்தை மாதிரி கைபிடிச்சு அழைச்சிட்டு போன பத்தியா….அப்பவே நீ எனக்கானவ தான்னு முடிவே பண்ணிட்டேன்…ஆனா  நான் மட்டும் முடிவு பண்ணி என்ன பண்ண மேடம் மனசு என்ன சொல்லுது தெரிஞ்சிக்கனுமே அதான்….”என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் கூறிவிட்டு சுமித்ராவைக் காண அவளோ தலைகுனிந்தபடியே அமர்ந்திருக்க,அவளது தலை மெல்ல நிமிர்த்தியவன்,

“சுமி..எனக்கு புரியுது…நீ உடனே சொல்லனும் இல்ல…நல்லா யோசி நாளைக்கு நான் இதே இடத்துல உனக்காக காத்திருப்பேன்…அப்ப உன் முடிவ சொன்னா போதும்….உன்முடிவு எதுனாலும் எனக்கு நீ நேர்ல வந்து தான் சொல்லனும்…நான் உனக்காக இங்க காத்திருப்பேன் மறந்துடாத….நீ வந்து பேசற வரைக்கும் இந்த இடத்தைவிட்டு நகர மாட்டேன்….”என்றுவிட்டு சுமித்ராவை அவளது வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டான்.அவன் சென்ற பின் வீட்டின் உள் வந்த சுமித்ராவிற்கு மனது ஒரு நிலையில்லாமல் தவிக்க செய்தது.கரைசேர்க்க யாருமில்லாமல் தத்தளிக்கும் ஓடத்தை போல் அவளது மனதும்,உடலும் தத்தளிக்க தொடங்கியது.

Advertisement