Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 9

கீதா திருமணம் முடிந்து இருதினங்கள் முடிந்திருந்தது.பிருத்திவி இந்த இரு தினங்களாக ஏதோ யோசனையிலேயே இருக்க,அவனை கவனித்த சூர்யா,

“என்னடா ஒரு மாதிர இருக்க….”என்று கேட்க,

“ஒண்ணுமில்லை டா…”என்று கூறுவான்.இவ்வாறு மேலும் இரு தினங்கள் சென்றது.பிருத்திவி வெளியில் எப்போதும் போல் தன்னைக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் ஏதோ ஒன்றில் உழன்று கொண்டிருந்தான்.சூர்யாவும் இரண்டொருமுறை கேட்டதற்கு பிருத்திவி ஒண்ணுமில்லை என்பதையே கூற.சூர்யவும் அவனாக கூறட்டும் என்றுவிட்டுவிட்டான்.

அன்றும் அவ்வாறு தன் கணினி முன் கண்கள் இருந்தாலும் மூளை எங்கோ இருக்க,வேலை விஷயமாக சூர்யா இருமுறை அழைத்தவன் பதில் இலை என்றவுடன்,

“டேய்…நல்லவனே….”என்று பிருத்திவியின் தோள்களை உலுக்க,அதில் சுயத்திற்கு வந்த பிருத்திவி,

“டேய் என்ன….”என்று சலி்ப்பாக கேட்க,சூர்யா அவனை விநோதமாக பார்த்தவன்,

“டேய் உனக்கு என்ன பிரச்சனை…ஏன் ஒருமாதிரி இருக்க….”என்று கேட்க,பிருத்திவியும் அவனை பார்த்து,

“தெரியலைடா…நான் ஏன் இப்படி இருக்கேன்…எனக்கே தெரியலை…என் நாள் முழுதும் அந்த சுமித்ரா எடுத்துக்குறா டா…..”என்று கூற,இப்போது விழிப்பது சூர்யாவின் முறையானது.இவன் எதுக்கு இப்ப சம்மந்தமே இல்லாம சுமித்ராவை பத்தி பேசுறேன்…என்று யோசித்தவன்.

“இப்ப எதுக்குடா சுமித்ராவை பத்தி பேசுற…”என்று சூர்யா புரியாமல் கேட்க,

“எனக்கும் அது தான்டா புரியலை…கீதா கல்யாணத்துல அவளை பார்த்திலிருந்து….அவ நியாபகம் அதிகமா வருது….ஏன்னு எனக்கே புரியலை….ஏதோ ஒன்னு அவகிட்ட என்னை இழுத்திட்டு போற மாதிரி இருக்கு…”என்று தன் நெற்றியை தேய்தவாறே கூற,சூர்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

“டேய் என்னடா சொல்லுற…எனக்கு ஒண்ணும் புரியலை….நீ அவளை விரும்புறியா….”என்று கேட்க,

“எனக்கு சரியா தெரியலைடா….ஆனா அவ என்னை உதாசினப்படுத்தினது மனசுக்கு கஷ்டமா இருக்கு…..அவகிட்ட பேசி என் மேல தப்பில்லைனு புரிய வைக்கனும்டா…”என்று முகத்தில் தீவிரத்துடன் பிருத்திவி கூற,சூர்யா அவனை விநோதமாக பார்த்தான்.

ஏனென்றால் பிருத்திவி இப்படி ஒரு பெண்ணின் பின் எல்லாம் சென்றதில்லை.அதுவும் தன்னை உதாசினபடுத்தியவர்களை ஏற்றெடுத்தும் பார்க்கமாட்டான்.அப்படிப்பட்டவன் இன்று சுமித்ராவிடம் பேசியே ஆக வேண்டும் என்று கூறுவது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

சூர்யா தன்னை பார்பதை உணர்ந்த பிருத்திவி,

“டேய் என்னடா அப்படி பார்க்குற….”என்று கேட்க,சூர்யாவோ,

“டேய் மச்சி…எனக்கு சரியா சொல்ல தெரியலை….ஆனா நீ இப்படியே இருந்தனு வை நம்ம கம்பெனிக்கு தான் நஷ்டம்…அதை மட்டும் மனசுல வச்சு சீக்கிரம் நல்ல முடிவா எடு….”என்று கூறியவன்,

“சரி…இப்ப எதுக்கு உன்னை கூப்பிட்டேன்னா…ஜே.பி குரூபில் இருந்து ஒரு மெயில் வந்திருக்கு…அதை பாரு…”என்றுவிட்டு சென்றுவிட்டான்.

சூர்யா சென்ற பின்பு தன் கணினியை இயக்கி மின்னஞ்சல்களை பார்த்தவன்,ஜே.பி குரூப் இருந்து வந்த மின்னஞ்சலை திறந்தான்,அதில் புராஜெக்டடை எடுத்த நாதன் குரூப் கம்பெனி முதற் கட்ட வேலைகளை சரியாக செய்யாத காரணத்தால் அவர்களை நீக்கி விட்டனர் என்றும் அதனால் ஏற்கனவே சமர்பித்த புராஜெக்ட் அறிக்கையை மீண்டும் சற்று விரிவாக்கம் செய்து சமர்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.இதுவும் முதல் முறை செய்தது போல் தான் முடிவு கூறப்படும் என்றும் கூறிப்பிட்டு இருந்தனர்.அறிக்கை சமர்பிக்க மூன்று வாரங்கள் கெடு விதித்திருந்தனர்.

அனைத்தையும் படித்த பிருத்திவிக்கு வானில் பறக்காத குறை தான்.தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இந்த முறை எந்தவித குறையும் இல்லாமல் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று நினைத்தவன்.மனதில் சில திட்டமிடல்கள் செய்து கொண்டவன்.அனைவரையும் மீட்டிங் ஹாலிற்கு அழைத்தான்,அனைவரும் குழுமிய பின்,

“ஹலோ பிரண்ட்ஸ்….உங்க எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ்…”என்று தனக்கு ஜே.பி குரூப்பில் இருந்து வந்த மின்னஞ்சல் பற்றி கூறினான்.பின்,

“பிரண்ட்ஸ்…இது நமக்கு கிடைச்சிருக்குற இரண்டாவது வாய்ப்பு…இதுல நாம கண்டிப்பா ஜெயிக்க ட்ரை பண்ணனும்…ஆல் தி பெஸ்ட்….”என்று கூறிவிட்டு மீண்டும் தன் இருக்கையில் அமர,அவனிடம் வந்த சூர்யா,

“ப்பா…இப்ப தான்டா எனக்கு நிம்மதியா இருக்கு…பிருத்திவி பேக் டூ த பார்ம்…”என்று ஆறதழுவி கூற,அவனது அணைப்பில் இருந்து விலகியவன் செல்லமாக அவன் தலையில் கொட்டிவிட்டு,

“டேய் நான் எங்கடா தொலைஞ்சேன்…இப்ப பேக் டூ த பார்ம்முனு சொல்லுர…”என்று கேட்க,சூர்யாவோ,

“நீ கொஞ்ச நாளாவே இங்க இல்லைடா…உன்னை பார்த்து நம்ம ஆபிஸ் ஸ்டாப்ஸ் கூட கேட்டாங்க…ஏன் ஒருமாதிரி இருக்கனு…எனக்கே தெரியலை நான் எப்படி சொல்ல…அதான் உன்கிட்ட காலையில சொன்னேன்…”என்று கூறினான்.தனக்காக இவ்வளவு யோசிக்கும் கிடைக்கும் நண்பன் கிடைத்தது கடவுள் கொடுத்த வரம் என்று மனதில் கடவுளுக்கு நன்றி உரைத்தவன்,

“சாரி மச்சான்…எனக்கே என் மனசுல ஓடுறது என்னனு புரியலை இதுல உன்னையும் சேர்த்து குழப்ப வேண்டாம்னு நினைச்சேன்…”என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான்.

“டேய் உன்னை பத்தி எனக்கு தெரியாதா…சரி இப்ப தெளிஞ்சிட்டல்ல…”என்று சூர்யா கேட்க,அவனை பார்த்து புன்னகைத்தவன்,

“இல்லை…”என்னும் விதமாக தலையாட்ட,சூர்யாவோ,

“டேய் என்ன என்னதான்டா நினைச்சிக்கிட்டு இருக்க சொல்லி தொலை…உனக்கு சுமித்ராவை பிடிச்சிருக்கா….”என்று தலையில் கை வைக்காத குறையாக கேட்க,

“அதை கண்டுபிடிக்க தான் நான் ஊட்டி போறேன்…அவளை பார்த்து பேச…”என்று கூறிவட்டு நண்பனின் முகம் பார்க்க,அவனோ உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்தான்.

“டேய் நீயா டா இப்படி மாறிட்ட…”என்னும் விதமாக பார்க்க,

“யெஸ்…நான் நானா இல்லை…அதனால தான் அவளை பார்க்க போறேன்….அதுவரைக்கும் புராஜெக்ட் வொர்க்…..நீ தான் பார்க்குற….”என்று மேலும் ஒரு இடியை இறக்க,

“டேய் நல்லவனே….”என்று சூர்யா அலறியே விட்டான்.அவனை அணைத்த பிருத்திவி,

“என்ன மச்சி இப்படி ப்ரீஸ் ஆகிட்ட…” என்று கேட்க,சூர்யாவோ அதிர்ச்சியிலேயே இருக்க…அவனது தோள்கைளை பலமாக உலுக்கிய பிருத்திவி,

“டேய்…டேய்….என்னடா இப்படி நிக்குற….”என்று கூற,தன்னிலை பெற்ற சூர்யா,

“டேய் என்ன விளையாடுறியா…நான் நான்…எப்படி தனியா…என்னால எல்லாம் முடியாது…”என்று பதட்டத்துடன் கூற,பிருத்திவி,

“டேய் எதுக்கு இப்படி பதட்டப்படுற…எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு…..”என்று கூற சூர்யாவின் முகம் தெளியாமல் இருந்தது,

“இவனை…”என்று மனதில் நினைத்த பிருத்திவி,

“டேய் மச்சி…இப்படி எத்தனை நாளைக்கு சேர்ந்தே செய்வ…நீயும் தனியா செய்ய டா…அப்ப உனக்குள்ள இருக்குற திறமை மறையாம இருக்கும்…”என்று கூறிவிட்டு சூர்யாவின் முகம் காண இப்போது அவனது முகம் சற்று தெளிந்து இருந்தவன்,

“சரிடா…நான் பண்ணுறேன்..ஆனா நீ எப்ப வருவ…”என்று கேட்க,

“ம்ம்…கண்டிப்பா இரண்டு இல்ல மூனு நாள்ல வந்துருவேன்….”என்று கூற,

“இரண்டு இல்ல மூனு நாள்லா…எதுக்கு டா இத்தனை நாள்…அங்க என்ன பண்ண போற…சுமித்ராகிட்ட பேசிட்டு வர தான போற…”என்று கேட்க,அதற்கு பிருத்திவி,

“ஆமாம்..”என்னும் விதமாக தலையாட்டினானே தவிர வேறு எதுவும் பேசவில்லை.சூர்யாவும் அதற்கு மேல் அவனை துருவவில்லை.சூர்யாவிடம் கூறியது போல் அடுத்த நாளே கிளம்பியும்விட்டான்.கீதாவிடம் இருந்து அவளது முகவரி வாங்கி ஊட்டி வந்துவிட்டான்.

சுமித்ரா இருந்த வீடு தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு என்று கட்டிகொடுத்தது.அதனால் அந்த வீதியில் உள்ள வீடுகள் அனைத்தும் ஒரேமாதிரி அமைப்பு கொண்டதாக இருக்கும்.அதனால் பிருத்திவிக்கு சுமித்ராவின் வீடு எது என்று தெரியவில்லை.அதனால் குடியிருப்பு பகுதியின் தொடக்கதிலேயே நின்று கொண்டான்.

பிருத்திவிக்கு இது ஒரு புது அனுபவம் போல் இருந்தது மனதில் ஏதோ பதட்டம் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது.ஏன் இவ்வாறு உணர்கிறோம் என்று கேட்டால் விடை தான் தெரியவில்லை.ஏதெதோ எண்ணங்கள் மனதில் வலம் வர பிருத்திவி சோர்ந்துவிட்டான்.இவ்வாறு அவனது மனதுடன் சண்டையிட்டு கொண்டிருக்கும் போது தான் சுமித்ரா தன் விட்டில் இருந்து வெளி வந்தாள்.

முதலில் கவனிக்காதவன் பின் ஏதோ உந்த யார் வருகிறார்கள் என்று பார்க்க மஞ்சள் வண்ண சுடியின் மேல் சிவப்பு நிற ஸ்வெட்டர் அணிந்து நடந்து வந்து கொண்டிருந்தாள் சுமித்ரா.முன்பு போல் குனிந்து நடுங்கி கொண்டு வரமால் நடையில் ஒரு வித நிமிர்வு,கண்களோ எதிரில் உள்ள இயற்க்கையை ரசித்த படி வந்து கொண்டிருந்தாள்.பிருத்திவியின் கண்கள் அவளையே பார்த்துக் கொண்டு இருக்க அவளோ இவனை கவனிக்காமல் கடக்க அதுவரை மலர்ந்து இருந்த பிருத்திவியின் முகம் கூம்பி போனது.அவளுக்கு தன் நியாபகம் வரவில்லையா என்று நினைத்தவனுக்கு அதுவரை இருந்த உற்சாகம் வடிந்தது.

பிருத்திவி தனது மனதுடனே போராடிக் கொண்டிருக்க அவன் முன்னே சுமித்ரா வந்ததை அவன் கவனிக்கவில்லை.முதலில் யாரோ என்று தான் கடக்க நினைத்தவள் பின் ஊன்றி கவனித்தவளுக்கு பிருத்திவியை கண்டவுடன் மனது படபடக்க தொடங்கியது.அதே தடதடக்கும் மனதுடன் அவனை நெருங்கினாள்.அவனோ தன் வருகையை உணராது ஏதோ தீவிர யோசனையில் இருக்க,அவனின் முன் கைகளை ஆட்ட அப்போதும் அவன் அதே நிலையில் இருக்க,அவனது தோள்களை தொட அதில் உணர்வு பெற்றான்.

தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவன் தன் முன்னே சுமித்ரா நின்று கொண்டிருப்பதைக் கண்டவனுக்கு சோர்ந்த முகம் மீண்டும் பிரகாசமாகியது,

“ஹாய்….சுமித்ரா…”என்று உற்சாகமாக கூற,அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள்,

“ஹாய்…நீங்க எங்க இங்க….”என்று கேட்க,அவனோ எந்த தயக்கமும் இல்லாமல்,

“உன்னை பார்க்க தான் வந்தேன்….”என்று கண்கள் மின்ன கூற,அவனை விநோதமாக பார்த்தவாறே,

“எதுக்கு…”என்று அடுத்த கேள்வியை தொடுக்க,பிருத்திவியோ,

“ஏய் சுமி…என்ன நீ கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு இருக்க……உன்னை பார்க்க வந்திருக்கேன் என்னை உன் வீட்டுக்கு எல்லாம் கூப்பிட மாட்டியா…..”என்று கேட்க,

“அது தான் நானும் கேட்கிறேன் இவ்வளவு தூரம் நீங்க எதுக்கு என்னை பார்க்க வந்திருக்கீங்க….”என்று மீண்டும் அதையே கேட்க,

“உன்கிட்ட மன்னிப்பு கேட்க தான்….”என்று அவனும் அதிராமல் கூற,சுமித்ராவின் கண்கள் சற்று சுருங்கி விரிந்தது போல் தோன்றியது பிருத்திவிக்கு.

“இதுக்கு நான் முன்னாடியே பதில் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்….”என்று கூற,பிருத்திவியோ அவளது ஒட்டாத தன்மையில் கோபம் வர,

“இங்க பாரு சுமி…நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்…இப்படி ரொட்டுல நின்னு பேசமுடியாது…”என்று இறுக்காமாக கூறிக் கொண்டிருக்க,அவனை கையுர்த்தி தடுத்தவள்,

“இங்க பாருங்க பிருத்திவி…நீங்க இவ்வளவு மெனக்கடனும்னு அவசியமே இல்லை…அன்னைக்கு நடந்ததுல உங்க தப்பு எதுவும் இல்லை….நீங்க அதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை….இதுக்காகவா இவ்வளவு தூரம் வந்தீங்க….உங்க நேரத்தை வீணாக்காம கிளம்புங்க…”என்றவள் தனக்கு வேலைக்கு நேரமாவதை உணர்ந்து,

“எனக்கு வேலைக்கு நேரமாச்சு…நான் வரேன்…”என்று கூறிவிட்டு அவனது பதிலைக் கூட எதிர்பாராமல் வேகமாக சென்றுவிட்டாள்.

தன் தொழிற்சாலை வரும் வரையிலுமே வேகம் தான்.என்னதான் பிருத்திவியிடம் கோபமாக பேசுவது போல் பேசிவிட்டு வந்தாளும் மனதும்,மூளையும் நீ கொஞ்சம் அதிகமாக தான் பேசுகிறாய் என்று ஒருங்கே கூறியது.இரண்டையும் ஒருநிலை படுத்தி அடக்கியவள்,தான் செய்தது தான் சரி என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

மனதின் படபடப்பை அடக்கியவாறே தன் இருக்கையில் அமர்ந்தவளை வேலை இழுத்துக் கொண்டது.தனது வேலையில் முழுகி இருந்தவளை அங்கு வேலை செய்யும் பணியாள் வந்து கூப்பிடவும்,நிமிர்ந்தவள்,

“என்ன கணேசன் அண்ணா…”என்று கேட்க,

“உன்னை அய்யா கூப்பிட்டாருமா….”என்று கூறிவிட்டு செல்ல,சுமித்ராவிற்கு எதற்காக என்னை அங்கிள் கூப்பிட்டுருப்பார் என்று யோசனை செய்தவாறே அவரது அலுவலக அறைக்கு வந்தவள்,அனுமதி கேட்டு உள்ளே நுழைய,அங்கே நல்லசிவத்திற்கு எதிர்புற நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்த பிருத்திவியைக் கண்டவுடன் அதிர்ந்துவிட்டாள்.

Advertisement