Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 1

சென்னையின் புறவெளியில் அமைந்துள்ள ஒரு சிறிய தேனீர் கடையில் அமர்ந்திருந்தான் பிருத்திவி.அவனது கண்கள் கடையின் எதிர் புற சாலையை வெறித்து கொண்டிருந்தது.அவனது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் விழுந்தபடி இருக்க அதை கவனிப்பார் தான் யாரும் இல்லை.மனதின் வெறுமையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டான்.தன்னிடம் இருக்கும் பலவீனம் யாரிடமும் தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இரும்பு மனிதன்.

பிருத்திவி தன் நினைவுகளில் இருக்க அப்போது எதிர் புற சாலையில் வேகமாக வந்த ஒரு இரு சக்கர வாகனம்,எதிரில் சைக்கிளில் வந்த பையனை இடித்திருந்தான்.இதில் சைக்கிளில் வந்த சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.கீழே விழுந்த பையன் தட்டு தடுமாறி எழ முயற்சி செய்து கொண்டிருக்க,அந்த இருசக்கர வாகன ஓட்டியோ எந்தவித சலனமும் இல்லாமல் செல்ல பார்க்க,அப்போது இடியென இறங்கியது பிருத்திவியின் கரம்,

“ஏன்னடா…ஏன் கண்ணு தெரியல உனக்கு…இப்படி தான் வண்டி ஓட்டுவியா….”என்று கத்தியவரே அந்த வண்டியோட்டியின் மூக்கிலே ஒரு குத்து விட்டான்,அந்த வண்டியோட்டி நிலை தடுமாறி கீழே விழந்தான்.பிருத்திவி பக்கத்தில் விழுந்துகிடந்த சைக்களில் வந்த பையனை தூக்கிவிட்டவன்,அந்த சிறுவனுக்கு எதாவது அடிப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்தான்.

பிருத்திவியின் குத்தால் கீழே விழுந்த வண்டியோட்டி எழுந்து,பிருத்திவியை அடிக்க முற்பட,அதற்குள் அவனை எட்டி உதைத்திருந்தான் இன்னொருவன்.

“வாடா சூர்யா…இவனை நாலு மிதி மிதி…”என்று விட்டு மீ்ண்டும் சிறுவனின் கை,கால்களை ஆராய,சிறுவனின் இடது கையிலும் காலிலும் சிராய்த்து ரத்தம் வந்து கொண்டிருந்தது.ரத்தத்தைக் கண்டவுடன் பிருத்திவியின் கைகள் நடுங்க துவங்கியது.அவனது கண்முன்னே சில சம்பவங்கள் நினைவில் வர அவனது உடலும்,மனதும் ஒரு சேர நடுங்கியது.

“டேய் பிருத்திவி….”என்று சூர்யா அவனது தோள்களை உலுக்கவும் தன் நிலைக்கு வந்தான் பிருத்திவி.

“ஆங்…என்ன டா…”என்று வினவ நண்பனின் தற்போதைய நிலை அறிந்த சூர்யா,

“இங்க வா…இங்க உட்கார்…”என்று பிருத்திவியை எதிரில் இருந்த தேனீர் கடையில் அமர வைத்தவன்,அவனது கையில் ஒரு சோடாவை திணித்து குடிக்குமாறு செய்கை செய்தான்.பிருத்திவிக்குமே தற்போது தேவைபடுவது போல் இருக்க அவனும் மறுக்காமல் குடித்தான்.அதற்குள் சூர்யா அந்த சிறுவனின் பெற்றோரை தன் கைபேசியின் மூலம் வரவழைத்தவன் அவர்களிடம் சிறுவனை ஒப்படைத்திருந்தான்.

பிருத்திவிக்கு இப்போது சற்று நிதானம் வந்திருந்தது.எதிர் புற சாலையை நோக்க சூர்யா சிறுவனிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.பிருத்திவியின் கண்கள் அந்த வண்டியோட்டியை தேட அவன் அகப்படவில்லை.சிறுவனும்,அவனது பெற்றவர்களும் சென்றவுடன் பிருத்திவியின் அருகே சூர்யா வர,

“டேய்…எங்க டா போனான் அந்த பல்சர் வண்டிக்காரன்…”என்று கேட்க அவனை முறைத்த சூர்யா பதில் ஏதும் கூறாமல் கடையில் தேனீர் வாங்கி அருந்த,நண்பனின் செய்கையில் கடுப்பான பிருத்திவி,

“டேய் நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் பதில் சொல்லுடா…”என்று ஆத்திரமாக கேட்க,

“அவன் போயிட்டான்….”என்று சாதாரணமாக கூறினான் சூர்யா.

“என்னது போயிட்டானா…எப்படி டா அவன விட்ட….ச்ச உன்னை போய் நம்புனேன் பாரு….அவன நானே மிதிச்சே கொன்னுருப்பேன்….”என்று வார்த்தைகளை கடித்து துப்ப,சூர்யாவோ எந்தவித சலனும் இல்லாமல்,

“சாரி டா மச்சான் நீ அவன கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடலாம்னு இருந்தது எனக்கு தெரியாது…ஒண்ணு பண்ணலாம் நாம இன்னைக்கி பூரா இந்த கடையிலேயே உக்கார்ந்து இருப்போம்…எப்படியும் போனவன் திரும்பி வருவான் அப்ப அவனை நீ மிதிச்சு தான் கொல்லு இல்ல அடிச்சே கொல்லு…ஒண்ணும் பிரச்சனை இல்லை….”என்று சூர்யா படு நக்கலாக கூற பிருத்திவிக்கு தன் தவறு சற்று புரிய தொடங்கியது.

நண்பனின் குனிந்த தலையை காண சகிக்காமல் சூர்யா,

“டேய் மச்சான்…சாரி டா…”என்று அவனும் வருந்தி கூற,அவனது கைகளை பற்றிக் கொண்ட பிருத்திவி,

“என்னடா இது என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு….நீ என்னோட தப்பை சுட்டிக்காட்டுன இதுல என்ன தப்பு இருக்கு….ஆனா மச்சான் என்னால முடியல டா என் கண்ணுமுன்னாடி அப்படி நடந்தவுடனே நான் என்னோட கட்டுப்பாட்டுல இருக்க மாட்டேங்குறேன்….நான் என்ன செய்யட்டும்….”என்று கலங்கிய கண்களுடன் பாவமாக கேட்டவனை இறுக அணைத்துக் கொண்டான் சூர்யா.

பிருத்திவியின் கண்ணீர் சூர்யாவின் தோள்பட்டையை நினைத்தது.சிறு குழந்தை போல அழுபவனை தேற்றும் வழி தெரியாமல் தவித்து தான் போனான் சூர்யா.ஒருவாறு அவனை சமாதானப்படுத்தி பிருத்திவியின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.ஒரே ஒரு அறை தான் பிருத்திவியின் வீடு.

அந்த அறையில் ஒரு கட்டில்,மற்றும் பிருத்திவியின் துணிகள் அடங்கிய பை,அத்தியாவச தேவைக்கு தேவையான சில சாமான்கள் மட்டுமே இருந்தன.பிருத்திவியை அவனது கட்டிலில் அமர செய்தவன்,அவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தான்.பிருத்திவியும் கீ கொடுத்த பொம்மை போல நண்பன் சொல்லியதை செய்தான்.சுயமாக சிந்திக்கும் நிலையில் அவன் இல்லை என்பது அவனக்கு நன்கு புரிந்தது.அதனால் முடிந்தளவிற்கு நண்பனை வருத்தாமல் இருக்க வேண்டும் என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

அப்போது அழைப்பு மணி அடிக்கவும் பிருத்திவிக்கு யாராக இருக்கும் என்ற எண்ணம் ஓடியதே தவிர எழுந்து கதவை எல்லாம் திறக்கவில்லை.குளியல் அறையில் இருந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த சூர்யா கதவை திறக்க அவர்களுக்கான உணவு வந்திருந்தது.அதனை வாங்கி விட்டு உள்ளே வந்த சூர்யா,

“டேய் என்ன இப்படியே உக்கார்ந்து இருக்க…போ…போய் முகத்தை அலம்பிட்டு வா…சாப்பிடலாம்…”என்றான் கட்டளையாக.

“ம்ப்ச் எனக்கு வேண்டாம் டா…நீ சாப்பிடு…”என்று கூறிவிட்டு படுக்க எத்தனிக்க,

“சரி அப்ப எனக்கும் வேண்டாம்….நான் சாப்பாட்டை திருப்பிக் கொடுத்துட்டு வந்துடுறேன்…”என்று கூறிவிட்டு வெளியில் செல்ல முற்பட,

“ப்ச் ஏன்டா என் உயிரை வாங்குற…எனக்கு பசிக்கல அதோட விடேன்…உனக்கே தெரியும் இன்னைக்கி என்ன நாள்னு…”என்றவனின் கலங்கிய கண்கள் எதிரே இருந்த தன் தாய்,தந்தையின் படத்தில் பதிந்தது.அவர்கள் ஒரு விபத்தில் தங்கள் உயிரை நீத்து இருந்தனர்.அவனது தொண்டை குழி ஏறி இறங்கியது ஒரு நிமிடம்.பிருத்திவியின் தவிப்புகளை சூர்யா கண்கள் கலங்க பார்த்துக் கொண்டு நின்றானே தவிர அவனைக் கட்டுபடுத்தவோ,ஆறுதல் சொல்லவோ இல்லை.இப்படி புலம்பியாவது அவனது மனதின் காயங்கள் வெளிவரட்டும் என்று தான் எண்ணினான் சூர்யா.

“ஏன்டா ஏன்டா என்னை இப்படி தனியே விட்டுட்டு போனாங்க…சொல்லுடா…சொல்லுடா…”என்று தாய்,தந்தையின் படத்தை பார்த்தவாறே கேட்டவன் சூர்யாவின் சட்டையை பிடித்திருந்தான்.அவனது செயல்களை ஒரு கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் சூர்யா.

நண்பனின் மனவலியை தன்னால் போக்க முடியவில்லையே என்று எப்போதும் போல் யோசனை தான் அவனுக்கு.என்ன செய்கிறோம் என்று புரியாத நிலைக்கு பிருத்திவி சென்று கொண்டிருக்கிறான் என்றால் நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது சூர்யாவிற்கு.அவனையும் அறியாமல் கண்ணீர் துளிகள் அவனது சட்டையை பிடித்திருந்த பிருத்திவியின் கைகளை நினைக்க அதில் தன்னிலை பெற்ற பிருத்திவி,

“அய்யோ…என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்கேன் நான்….”என்று சத்தமாக கத்தியவன் தன்னையே அறைந்து கொண்டான்.

“டேய் டேய் வேண்டாம் விடு விடுடா…”என்று சூர்யா தடுக்க பிருத்திவியோ,

“டேய் மச்சான் தெரி….தெரியாம பண்ணிட்டேன் டா…நீயும் என்னை விட்டு போயிடாத டா…”என்று கெஞ்ச தொடங்க அதற்கு மேலும் தாங்க மாட்டாதவன் ஓங்கி அறைந்திருந்தான்.

“பளார்…”என்ற சத்தம் மட்டும் தான் கேட்டது பிருத்திவிக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை.நண்பன் கன்னத்தில் அடித்ததன் விளைவாக கன்னங்கள் எரிய பிருத்திவியின் கைகள் தன் போல் கன்னத்தை தடவிக் கொண்டது.

“என்ன டா…கொஞ்சம் விட்டா ரொம்ப ஓவரா பேசுற…என்னை என்ன நினைச்ச நீ….உன்னை விட்டுட்டு ஓடி போயிடுறவன் மாதிரியா இருக்கு…அப்படி பார்த்தா என்னைக்கோ ஓடியிருக்கனும்…..”என்று கேட்டவாறே பிருத்திவியின் சட்டை பிடித்து உலுக்கியவன்,ஒரு கட்டத்தில் அவனை உதறிவிட்டு கட்டிலில் சோர்ந்து கைகளை தலைக்கு தாங்கியபடி அமர்ந்துவிட்டான்.தனது வார்த்தை சூர்யாவை மிகவும் காயப்படுத்திவிட்டது என்பதை உணர்ந்த பிருத்திவி.சூர்யாவின் அருகில் சென்று அவனின் கீழே அமர்ந்து அவனது கைகளை எடுத்துவிட்டவன்,அவனது கலங்கிய விழிகளை சந்திக்க முடியாமல்,

“டேய் மச்சான்…டேய்…”என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.தொண்டைக்குழி அடைக்க,அவனின் நிலை உணர்ந்த சூர்யாவும் கோபத்தை விடுத்து இறுகி அணைத்துக் கொண்டான்.இருவரின் கண்ணீரும் அவர்களது தோள்பட்டையை நினைத்தது.ஆழ்ந்த அர்த்தமான நட்பு அவர்களது.பிருத்திவியின் அனைத்து துயரங்களிலும் தந்தையாய்,தாயாய்,நண்பனாய் என்று பல பரிமாணங்களில் இருந்தவன் சூர்யா,அப்படிபட்டவன் அவனை விட்டு போய்விடுவானா என்ன.

சில துயரங்களை வார்த்தைகளால் வடிக்க முடியாது.சிலர் அழுதே தங்கள் துயரத்தைக் கரைத்துவிடுவர்,சிலர் தன்னை நெருங்கியவர்களிடம் இப்போது பிருத்திவி செய்தது போல் கோபமாக வார்த்தைகளை விட்டு கரைக்க முயற்சி செய்வர்.இதில் பெரும்பாலோர் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர்களாக தான் இருப்பர்.

தாயைப் போல மடிதாங்கி கொண்டான் தன் நண்பனை சூர்யா.மடியில் படுத்திருந்த பிருத்திவியின் கண்களில் உணவு பொட்டலங்கள் விழ வேகமாக எழுந்தான்.திடீர் என்று பிருத்திவி எழவும் பயந்து போன,

“டேய் என்னடா ஆச்சு…ஏன் இப்படி எந்திரிச்ச…”என்று பதட்டத்துடன் வினவ,அவனது குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்த பிருத்திவிக்கு குற்றவுணர்ச்சியாகி போனது.தனது செய்கையலால் தான் அவன் இந்தளவிற்கு பதறுகிறான் என்பது நன்கு புரிந்தது.அவனிடம் மன்னிப்பை வேண்டி மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல்,

“நீ சாப்பாட்டை பிரிச்சு வை…நான் போய் முகத்தை கழுவிட்டு வரேன்….”என்றுவிட்டு குளியல் அறை நோக்கி சென்றான்.சிறிது நேரத்தில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வர,சூர்யாவும் உணவு பொட்டலங்களை பிரித்து வைத்துக் கொண்டிருந்தான்.தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு சூர்யாவின் எதிரில் அமர்ந்து உண்ண தொடங்கினான் பிருத்திவி.அவன் உண்பதை பார்த்துவிட்டே சூர்யாவும் தனது உணவை உண்ண தொடங்கினான்.சாப்பிட்டு முடிக்கும் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

இருவரும் உண்டுவிட்டு அமைதியாக இடத்தை சுத்தம் செய்து கொண்டிருக்க அப்போது சூர்யாவின் கைபேசி அழைத்தது.அவனது மனைவி அனிதா தான் அழைத்திருந்தாள்.அழைப்பை ஏற்று பேசிவிட்டு வைத்தான்.அதுவரை அமைதியாக இருந்த பிருத்திவி அவன் கைபேசியை வைத்தவுடன்,

“சரி மச்சி நீ வீட்டுக்கு கிளம்பு…”என்று கூற,அவனை முறைத்த சூர்யா பதில் எதுவும் கூறாமல் படுப்பதற்கு ஆயத்தமானான்.

“டேய் மச்சி தங்கச்சி ஏதாவது நினைச்சுக்க போகுது டா….நீ கிளம்பு நான் பார்த்துக்குறேன்….”என்று கூறிக் கொண்டிருக்க சூர்யவோ இவனது பேச்சை சட்டை செய்யாமல் படுத்துவிட்டான்.

“டேய்…டேய் மச்சான்….”என்று சூர்யாவை எழுப்ப முற்பட,அவனோ இவனது அழைப்பை பொருட்படுத்தாமல் புரண்டு படுத்தவன்,கண்களை மூடியபடியே,

“டேய் நீ என்ன தான் என்னை அடிச்சு எழுப்புனாலும் நான் எந்திரிக்க மாட்டேன்….நான் இப்ப போனா உன் தங்கச்சி என்னை அடிச்சே கொன்னுடுவா….ஏற்கனவே சொல்லி தான் அனுப்பி வைச்சா இன்னக்கி அவங்க அண்ணனை விட்டு எங்கேயும் நான் போகக்கூடாதாம்….இன்னிக்கி ஒரு நாள் மட்டும் நீ என்னை சகிச்சிக்கிட்டு தான் ஆகனும்….”என்று தகவல் தந்தவன்,தன் தூக்கத்தை தொடர்ந்தான்.இனி தான் என்ன கூறினாலும் அவன் செல்ல போவது இல்லை என்பதை உணர்ந்த பிருத்திவியும் தூங்க முற்பட்டான்.

பிருத்திவி கண்களை மூடி தூங்க முற்பட்டாலும் தூக்கம் அவனுக்கு எட்டா கனியாக தான் இருந்தது.இரண்டு நிமிடங்கள் தன் கட்டிலில் புரண்டவன்,பின் தன்னால் சூர்யாவின் தூக்கமும் கெடும் என்று நினைத்தவன் எழுந்து அமர்ந்தான்.தூக்கம் மிகவும் அத்தியாவசியமான ஒன்று அதுமட்டும் அல்லாமல் அவனும் நாளையிலிருந்து தங்கள் அன்றாட வேலைகளை தொடங்க வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்.எழுந்து படுக்கையின் பக்கத்தில் இருந்த சிறிய மேஜையில் இருந்த தூக்க மாத்திரையில் ஒன்றை விழுங்கி கொண்டு படுத்தவனை தூக்கம் ஆட்கொண்டது.அவனது சீரான மூச்சே அவன் நன்கு உறங்கி விட்டான் என்பதை உணர்த்த தன் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான் சூர்யா.

தன் படுக்கையை விட்டு எழுந்தவன் பிருத்திவியை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.பிருத்திவி பார்பதற்கு கலையாக இருப்பான்.ஆறடி உயரமும்,கட்டுமாஸ்தானா உடல் வாகும் அவனை அழகனாகவே காட்டும்.எப்போதும் மலர்ந்த முகமாக தான் இருப்பான்.அவன் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி மற்றவர்களை மிகவும் இழுக்கும் ஒன்று குறிப்பாக பெண்களை.அனைவரிடமும் தோழமையுடன் பழகுபவன்.எப்போதும் புன்னகையுடன் இருக்கும் நண்பனின் தற்போதை நலுங்கிய தோற்றம் கண்ணில் விழ சூர்யாவின் கலங்கிய கண்கள் தன் போல் அவனின் பெற்றோரின் புகைப்படத்தை தான் பார்த்தது.தங்கள் மகனின் நிலை அறியாமல் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“ஏன்பா ஏன் அவனை விட்டுட்டு போனீங்க….எல்லாம் உங்களால தான் உங்க பிரிவால தான் இப்படி ஆகாட்டான்….என்ன செஞ்சு அவனை திரும்பிக் கொண்டுவரதுனே எனக்கு தெரியலையே….”என்று மனதிற்குள் பிருத்திவியின் பெற்றொருடன் சண்டையிட்டவனின் நினைவுகள் சற்று பின்னோக்கி சென்றன,

ரவிசந்திரன்,வாசுகியின் ஒற்றை வாரிசு பிருத்திவிதேவ்.ரவிசந்திரனின் குடும்பம் சற்று வளமான குடும்பம்.அவர் வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்கும் பெரிய அளவிலான கடை வைத்திருந்தார்.ரவிசந்திரன்,வாசுகி திருமணம் காதல் திருமணம்.ஏழ்மையான குடும்ப பெண்ணான வாசுகியை காதலிக்க ரவிசந்திரன் வீட்டில் இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.முதலில் தன் தாய்,தந்தையிடம் பொறுமையாக எடுத்து சொல்லி புரிய வைக்க முயற்சி செய்து தோற்றவர்,ஒருகட்டத்தில் அவர்களை எதிர்த்து வாசுகியை தன் சரிபாதி ஆக்கிக் கொண்டார்.

ரவிசந்திரனின் திருமணத்திற்கு பிறகு அவரின் பொற்றவர்கள் தொடர்பு முற்றிலும் அருந்து போனது.வாசுகி வீட்டிலும் இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்களும் வாசுகியிடம் பேசுவதையே நிறுத்தி இருந்தனர்.இருவிட்டாரின் விலகல் ரவிசந்திரனையும்,வாசுகியையும் பாதிக்க செய்ததுதான்.ஒருகட்டத்தில் அவர்கள் தங்கள் மனதை தேற்றிக் கொண்டு தங்கள் வாழ்வை தொடங்கினர்.

வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்கும் கடையை தொடங்கினார் ரவிசந்திரன்.அவருடைய தாத்தா வழி சொத்துக்கள் அவருக்கே கொடுத்திரிந்தனர் அவரின் பெற்றவர்கள்.அதை மூலமாக கொண்டு கடையை ஆரம்பித்தார்.சென்னையில் முக்கிய வீதியில் கடை அமைந்ததால் அவருக்கு நல்ல லாபம் கொடுத்தது.வாசுகியும் கணவனின் மனம் அறிந்து குடும்பத்தை வழிநடத்த அவர்களின் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருந்தது.

அவர்களின் மகிழ்ச்சியை மேலும் கூட்டும் வகையாக அவர்களின் செல்ல பிள்ளையாக பிறந்தான் பிருத்திவிதேவ்.உருவத்தில் தாயை போல கலையான முகத்தையும்,குணத்தில் தந்தை போல் கவரும் பேச்சைக் கொண்டும் இருந்தான்.

பிருத்திவிக்கு தன் தாய்,தந்தை மேல் அளவற்ற பாசம்.அதிலும் வாசுகி மகனிடம் ஒரு நண்பனை போலவே பழகுபவர்.பிருத்திவி வீட்டில் எவ்வளவு சேட்டைகள் செய்த போதிலும் வெளி உலகிற்கு தாய்,தந்தை சொல் தட்டாத பிள்ளை.பெற்றவர்களும் மகனின் முகத்தை வைத்தே அவனின் விருப்பத்தை அறிந்து அவனுக்கு செய்து கொடுப்பர்.எப்போதும் அவர்களின் வீட்டில் கலாட்டாக்களுக்கு பஞ்சம் இருக்காது.வாழ்வில் துயரம் என்பது என்ன என்று தெரியாதைவாறே வளர்த்தனர் பிருத்திவியின் பெற்றவர்கள்.

பிருத்திவியும் தனக்கு கொடுக்கப்படும் சுந்திரத்திற்கு வெளியில் பறந்தாலும் கட்டுப்பாட்டுடன் தான் இருப்பான்.அவனது நண்பர்களும் அவ்வாறு தான் இருக்கவேண்டும் என்று நினைப்பவன்.உற்ற நண்பர்கள் என்று தன்னை குறுக்கி கொள்ளாமல் அனைவரையும் அரவணைத்து நட்பை வளர்த்துக் கொள்வான் அவனது தந்தை போல.

பிருத்திவியின் வாழ்வு வண்ணமயமாக தான் சென்றது அவனது இருபத்தைந்தாவது வயது வரை.அவன் பொறியியலில் தகவல் தொழில்நூட்பத்தில் படிப்பை முடித்திவிட்டு மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றிருந்து ஆறுமாதங்கள் ஓடியிருந்தது.அப்போது ஒருநாள் அவனுக்கு இந்தியாவில் இருந்து வந்த செய்தி அவனது வாழ்வையே புரட்டிப்போட்டது.ரவிசந்திரனும்,வாசுகியும் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருப்பதாக செய்தி வந்திருந்தது.

பிருத்திவிக்கு முதலில் கைபேசியில் வந்த செய்தியை கிரகிக்கவே சில நிமிடங்கள் ஆனது.அவனது உடலும்,உள்ளமும் நடுங்க என்ன செய்வது என்று எதுவும் யோசிக்க முடியாமல் மூளை மறத்த நிலை.மீண்டும் இசைத்த கைபேசியின் ஒலியில் நிகழ்வுக்கு வந்தவன்.கைபேசியை காண சூர்யா தான் அழைத்திருந்தான்.வேகாமாக கைபேசியை ஏற்றவன் அவனிடம் தாய்,தந்தையையின் நலத்தை விசாரிக்க அவனோ முதலில் நீ கிளம்பி வா என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தான்.அடுத்த இந்தியா செல்லும் விமானத்தில் தனக்கு பயணச்சீட்டை உறுதி செய்தான்.

பிருத்திவி ஆயிரம் முறையேனும் அவர்களுக்கு எதுவும் ஆகியிருக்கூடாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டவாறே தான் சென்னை வந்தான்.தன் தாய்,தந்தை அனுமதிக்கப்பிட்டிருந்த மருத்துவமனைக்கு செல்ல அங்கே அவன் கண்டதோ அவர்களின் உயிரற்ற உடல்களை தான்.இருவருமே விபத்து நடந்த இடத்திலேயே உயிர் நீத்திருந்தனர்.

பிருத்திவிக்கு கட்டிவைத்திருந்த தைரியம் எல்லாம் வடிய அவர்களை கட்டிக் கொண்டு அழுகையில் கரைந்தான்.சூர்யாவிற்கோ பிருத்திவியை எவ்வாறு தேற்றுவது என்றே தெரியவில்லை.இருந்தும் பிருத்திவி தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதால் சூர்யா அவனை சற்று தேற்றி மற்ற காரியங்களை செய்ய வைத்தான்.

தன் தாய்,தந்தையருக்கு செய்ய வேண்டிய ஈம சடங்குகளை இயந்திரகதியில் முடித்தான்.அனைத்தும் முடிந்து ஓய்ந்து போய் அமர்ந்திருந்தவனை தேற்றும் வழி தெரியாமல் சூர்யா திண்டாடினான்.பிருத்திவிக்கு என்று நண்பர்கள் பட்டாளம் அதிகம் தான் என்றாலும் அவர்கள் கடமைக்கு என்று வந்து சென்றிருந்தது வேறு பிருத்திவியை மேலும் துவல செய்திருந்தது.அவனது துயர நேரத்தில் அவனுடன் பக்கபலமாக நின்றவன் தான் சூர்யா.

சூர்யாவிற்கு பிருத்திவியின் இன்றைய நிலையை நன்கு அறிவான்.அவனும் இதுபோல் தான் அன்று தன் தந்தையை இழந்து நின்றான்.எதுவும் புரியாத நிலை தான் அப்போது சூர்யாவின் உறவுகள் இறப்பிற்கு வந்ததோடு தங்கள் கடமை முடிந்தது என்று சென்றுவிட்டனர்.சூர்யாவின் தந்தை அவன் கல்லூரியில் முதலாம் ஆண்டின் போதே மாரடைப்பால் இறந்துவிட அவனை தேற்றி மீட்டுக் கொண்டு வந்தவன் பிருத்திவி தான்.அந்த சம்பவத்திற்கு பிறகு சூர்யாவிற்கு பிருத்திவியின் மீது தனி பிரியம்.

Advertisement