Advertisement

இடம் 5
“Well Done!!” (வெல் டன்) என்ற எழுத்துக்களை காண்பித்து விட்டு அடுத்து “Level Completed” (லெவல் கம்ப்ளீட்டட்) என்ற பதத்தையும் அதற்கு கீழே மூன்று நட்சத்திரங்களும் அதில் இரண்டு நட்சத்திரங்கள் மஞ்சள் நிறத்தில் நிரம்பி ஒளிர்ந்து கொண்டும், மற்ற ஒன்று ஒளியிழந்தும் காணப்பட்டது. அதற்கு கீழே score என்று அந்த லெவலுக்கான மதிப்புக்களையும், அதற்கும் கீழே Next என்ற பதத்துடன் ஒரு பச்சை நிற கட்டமும் இருந்தது. அதை தொடட்டவுடன் ஆயிரத்தி நூற்றி நாற்பத்தி ஆறாவது கட்டத்திற்கு(level) அழைத்து சென்றது அந்த ஆன்ட்ரிய்ட் மொபைலில் உள்ள ஒரு விளையாட்டு செயலியில்.
அந்த விளையாட்டு செயலியில் விளையாண்டு கொண்டு இருந்தது வேறு யாரும் அல்ல… நம் நாயகி கீர்த்தி ப்ரியம்வதா தான்.
அவள் பாதி விளையாட்டில் இருக்கும் போதே அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது. வேறு யார் அவளுக்கு அழைப்பார்கள்… மிதுனிடம் இருந்து தான் அந்த அழைப்பு.
“ஹலோ மித்து. என்ன இந்த நேரத்துக்கு கூப்பிட்டு இருக்க??” என்று கேட்டாள் கீர்த்தி
“ஹேய் கீரிக்குட்டி… என்ன பண்ற??” என்று பதிலுக்கு கேட்டான் மிதுன்… அவள் ஒரு கேள்வி கேட்டாள் அவளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல்.
“வேற என்ன பண்ண போறேன்!!!. கேம் தான் விளையாண்டுட்டு இருக்கேன்” – கீர்த்தி.
“எப்ப பாத்தாலும் அந்த கேம்லயே தலையை விட்டுட்டு இரு. அப்படி என்ன தான் இருக்கோ அதுல” என்று திட்டியவன், “சரி சரி அரை மணி நேரத்தில் ரெடி ஆகிடு. நம்ம வெளியே போறோம்” என்று கூறி முடித்தான்.
“அடேய்… இப்ப மணி என்ன தெரியுமா??. எட்டு தான் ஆகுது. ஞாயித்து கிழமைல இந்த நேரத்துக்கு யாரும் எழுந்து கூட இருக்க மாட்டாங்க. ஆனா நான் 6 மணிக்கே எழுந்து துணி எல்லாம் துவைச்சி காயப் போட்டுட்டு வந்து இப்போ தான் படுத்தேன். இன்னும் டீ கூட குடிக்கல. அப்பறம் இன்னும் சமைக்கனும்… சாப்பிடனும்…. அரை மணி நேரம்லாம் பத்தாது” என்று பெரிய கதையை அளந்து விட்டு, “ஆமா… எதுக்கு இன்னிக்கு வெளிய… அதுவும் இவ்ளோ சீக்கிரமே…” என்று அதன் பின் தான் நினைவு வந்தவள் போல் கேட்டான்.
“டீ இப்போ ரொம்ப முக்கியம். காலைல சாப்பாடுலாம் வெளியே போய் சாப்பிட்டுகலாம். நீ குளிச்சி ரெடி ஆகி மட்டும் வா போதும். எங்கே என்னனு போகும் போது முடிவு பண்ணிக்கலாம். நியாபகம் வச்சிக்கோ. சரியா அரை மணி நேரம்… ரெடியா இரு” என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான் மிதுன்.
‘அய்யோ… இவனோட… அரை மணி நேரத்துல வந்து காலிங் பெல் அடிக்க ஆரம்பிச்சிடுவான். பாவம் கவிக்கா… நேத்து நைட்டே லேட்டா தான் வந்தாங்க. எழுந்துடுவாங்க… அவங்க தூக்கத்த கெடுக்கனே வேணும்னே விடமா பெல் அடிப்பான். அவனுக்கும் இவங்களுக்கும் மட்டும் ஒத்தே போறதே இல்ல’ என்று மனதில் எண்ணி கொண்டே அவசர அவசரமாக குளித்து விட்டு வந்தாள்.
சரியாக இருபத்தி ஐந்து நிமிடங்களில் தயாராகி, தனது வீட்டின் கதவை திறந்து வைத்தாள்… அவன் வந்து காலிங் அடிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில்… அதன் பின் தனக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து தனது பையில் வைத்தாள். சரியாக அரை மணி நேரத்தில் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றான் மிதுன்.
அது வரையும் சங்கவி எழவில்லை என்பதால், வாட்ஸ் அப்பில் அவளுக்கு, “அக்கா… கோயிங் அயுட் வித் மிதுன்…” என்று அனுப்பி விட்டு, கதவோடு இருந்த அந்த பூட்டை பூட்டி விட்டு சாவியை எடுத்து தனது பையில் போட்டாள்… உள்ளே கவி இன்னும் உறங்கி கொண்டு தான் இருப்பதால். அதன் பின் மிதுனுடன் கிளம்பினாள் கீர்த்தி.
சங்கவியிடமும் ஒரு சாவி இருக்கிறது. வெளியே செல்வது என்றால் அவள் கதவை உள்பக்கமாக இருந்து திறந்து கொள்வாள்.
மிதுன் முதலில் கீர்த்தியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றான்.
அங்கே அவர்கள் காலை உணவை முடித்து கொள்ள, அடுத்தது அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்கு அழைத்து சென்றான்.
அங்கே அருள்பாலித்து கொண்டிருக்கும் அன்னையை வணங்கி விட்டு, பிரகாரத்தில் அமர்ந்து இருந்தனர்.
“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கீரிக்குட்டி” என்று அவளுக்கு தன் வாழ்த்தை தெரிவித்தான்.
அவனை ஒரு கணம் விழி விரிந்து நோக்கி விட்டு, “நன்றி” என்ற ஒற்றை சொல்லுடன் முடித்து விட்டாள்.
ஏனோ அவளுக்கு இந்த வருடம் பிறந்த நாள் கொண்டாடும் மன நிலை இல்லை. சென்ற வருடம் எவ்வாறு சென்றது இந்த நாள் என்று நினைக்கும் போது… மிகவும் வேதனையாக இருந்தது அவளுக்கு. இந்த வேதனைக்கு பேசாமல்… என்று அவளது உள் மனம் புலம்பி கொண்டு இருந்ததை மிதுனின் குரல் கலைத்தது.
“சரி சொல்லு கீர்த்து. இன்னிக்கு எங்க போலாம்??” என்று கேட்டான் மிதுன்.
“என்ன எங்க போலாம்??. நீ தான் சொல்லனும் எங்க போக கூட்டிட்டு வந்தனு” – கீர்த்தி.
“அட!! இன்னிக்கு உன் பிறந்த நாள் தான. சோ இன்னிக்கு உனக்கு பிடிச்ச ப்ளேஸ்க்கு தான் போகனும். அது தான் யூனிவர்செல் ரூல்(Universal rule)” – மிதுன்.
“ப்ச்ச்… இது ஒன்னும் அவ்ளோ ஸ்பெஷல் ஆன நாள் இல்ல. எப்பயும் போல தான். எங்கனா போகனும்னா சொல்லு. இல்லனா வீட்டுக்கு போகலாம்” என்று சலிப்பான குரலில் சொன்னாள்.
நேற்று இரவில் இருந்து அவளது பள்ளி, கல்லூரி தோழமைகள் எல்லாம் வாழ்த்துக்கள் கூறினர். ஆனால் அவளது பெற்றோரிடம் இருந்தோ, அவளது உற்ற உறவுகளிடம் இருந்தோ ஒரு அழைப்பு… ஏன் ஒரு செய்தி கூட வரவில்லை. தோழமைகளுக்கு உரிய பதிலை அளித்து சிறிது நேரம் பேசிவிட்டு, மன வருத்தத்தை போக்க தான் கேம் விளையாடினாள் அந்த இரவில்… கிட்டதட்ட ஐம்பது லெவல்களை ஒரு மூச்சில் முடித்து விட்டாள். அதன் பின் தூக்கம் கண்களை சுழட்ட தான் உறங்கினாள்.
கடந்த ஒரு வருடமாக தான் அந்த கேமை விளையாண்டு கொண்டு இருக்கிறாள் கீர்த்தி. தனது தனிமை மற்றும் ஓய்வு நேரங்களில்… துக்கம், சோகம், மன வருத்தம், தனிமை, இனிமை, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளையும் மற்ற நினைவுகளையும் தவிர்க்க… ஏனென்றால் அவள் மனம் இன்னும் யாரிடமும் இந்த உணர்வுகளை பகிர விரும்பவில்லை. மிதுனிடம் அவள் நெருக்கமாய் உணர்ந்தாலும் அவள் உள்ள கிடங்கை காட்ட விரும்பவில்லை.
இத்தனை எண்ணங்களிலும், மிதுன் அவளுக்கு இந்த நாளில் வாழ்த்தி வெளியே அழைத்து வந்தது மனதின் ஒரு ஓரம் மகிழ்ச்சியை அளித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. மிதுனிடம் அவள் ஒரு விதமான பந்தத்தை உணருகிறாள். ஆனால் கண்டிப்பாக அது காதல் கிடையாது. அன்பு… பாசம்… நட்பு… சகோதரம்… இன்னும் பல.
“சரி சரி… நானே ப்ளான் பண்ணுறேன். எல்லார மாறியும் நீயும் ஆசிரமம் போவேன் குழந்தைங்க கூட விளையாடுவேன் அப்படினு சொல்லுவ நினைச்சேன்” என்றான் மிதுன்.
சிறிதாக வாயை திறந்து அவனை மேலும் கீழும் பார்த்தவள், “சே சே… அதெல்லாம் நான் பண்ண மாட்டேன். வாழ்க்கை என்ன சினிமாவா?? கதையா??. எல்லாரும் அவங்க வாழ்க்கைய மட்டும் தான் பாக்க செய்வாங்க. அதனால அங்க போய் நேரம் செலவு செய்ய பெரும்பாலும் விரும்ப மாட்டாங்க” என்றாள்.
“எனக்கு தெரிஞ்சவங்களே நிறைய பேர் அதை செய்யறாங்க” என்றான் மிதுன்.
“ஓஓ…. அப்படியா??. சரி அவங்க செஞ்சிட்டு போறாங்க… ஆனா எனக்கு விருப்பம் இல்ல” என்றாள் கீர்த்தி.
மிதுன் கீர்த்தியை பற்றி நினைத்து இருந்த குணங்களுக்கு இது மாறாக தோன்றியது அவனுக்கு.
“ஏன் கீர்த்தி அப்படி சொல்லுற??. அது நல்ல செயல் தான??” என்று கேட்டான். ஆனால் அவனை அறியாமலே அவன் அவளை கீர்த்து/கீரிக்குட்டி என்ற அழைப்பில் இருந்து மாற்றி.
“எது?? நல்ல செயலா??. சரி ஒவ்வொருத்துருக்கும் ஒவ்வொரு மாறி தோணும். எனக்கு அப்படி தோணல. அதனால நான் பண்ணறது இல்ல” என்று சொன்னாள்.
“எப்படி உனக்கு மட்டும் அது கெட்டதா தெரியுது??” என்று சற்று கோவமாகவே கேட்டு விட்டான் மித்து அவளை பற்றிய தன் கணிப்பு தவறாக இருப்பதால்…
ஏனோ அவள் இளகிய மனம் உடையவள்… குழந்தை மனம் உடையவள்… என்ற அவன் எண்ணங்கள் மாறுவது போல் தோன்றியது மிதுனுக்கு.
இவ்வுலகில் முக்கால் பங்கு மனிதர்கள் இப்படி தான் உள்ளனர். ஒருவரை பார்த்தவுடன் அல்லது இரண்டு மூன்று நாள் பழக்கத்தில் அவர்கள் இப்படி தான் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர். அந்த முடிவு தவறாகும் பச்சத்தில் அந்த ஒருவர் மேல கோபம் கொள்கின்றனர். அதுவும் அந்த சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்கும் முன்னே அந்த முடிவையும் எடுத்து விடுகின்றனர். நிறைய உறவுகள்… அது நட்போ!! காதலோ!! திருமண வாழ்வோ!! தங்கள் பிரிய இந்த அவசர முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் சில உறவுகளில் அந்த விளக்கம் கேட்டும் அதை ஏற்று கொள்ள முடியாமலும் விலக்கப்படுகின்றன.
இப்போது கீர்த்தி மற்றும் மிதுனிடத்தில் இந்த சின்ன கருத்து வேறுபாடு எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மிதுன் கீர்த்தியிடம் விளக்கம் கேட்டதே நல்ல அறிகுறியாக தான் தெரிகிறது. பார்ப்போம்.
“அது கெட்டதுனு நான் சொல்லவே இல்லையே!!. அதே போல் எனக்கு நல்லதாகவும் தெரியவில்லை” என்றாள் கீர்த்தி.
அய்யோ குழப்புறாளே.. என்று நினைத்தவன் அவளை தான் பார்த்தான்.  எப்படினு சொல்லு என்று சொல்லுவது போல் இருந்தது அந்த பார்வை.
“இப்ப என் பிறந்த நாளுனு அங்க எல்லாருக்கும் ஸ்பெஷல் சாப்பாடு போடறோம்னு வச்சிக்கோ. அப்ப இன்னிக்கு ஒரு நாள் சாப்பிடுவாங்க… நாளைக்கு?? நாளை மறுநாள்?? அதற்கு அடுத்த நாள்??. நம்மளும் தினமும் போய் போடுவோமா??. இல்ல… அப்பறம் பசங்க அதுக்கு ஏங்க ஆரம்பிச்சிடுவாங்க. பெரிய பசங்க புரிஞ்சிப்பாங்க. சின்ன பசங்க??.. யாருக்காவது பிறந்த நாள் வருமா!! இங்க வந்து சாப்பாடு போடுவாங்களா?? அப்படினு நினைப்பாங்க. மறைமுகமா அவங்கள பிச்சை எடுக்க வைக்கற மாறி எனக்கு தோணும் அது” என்று அவளது மனதில் உள்ளதை சொன்னாள்.
மிதுனுக்குமே அப்படி ஒரு கோணம் இருப்பது அவள் சொல்லும் வரை தோணவில்லை. அதும் மறைமுக பிச்சை என்பது அவன் மனதை மிகவும் பாதித்தது. அப்பனா யாரும் அங்க போக கூடாதா?? அவங்களுக்கு உதவ கூடாதா?? என்று தோன்றியது.
அதை மறைக்காமல் கேட்டு விட்டான். அதற்கு அவளது கோணத்தில் உள்ள பதிலை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
கொடுப்பாள்…

Advertisement