Advertisement

இடம் 30
எவ்வளவு தான் யோசித்து, அறிந்து, புரிந்து, வளர்ந்து, மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவு முன்னேறினாலும், தன் குடும்பம், தனக்கு என்று வரும் போது குழந்தையாய் தான் மாறி போகின்றனர். அதே போல் தான் பிரியாவும், தனது அப்பாவிடம் அனைவரின் மீதும் குற்ற பத்திரிக்கை வாசித்து கொண்டு இருந்தாள்.
“மாமா கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தாமா பா… அப்ப யாருமே என்கிட்ட பேசல…” என்றவள் தொடர்ந்து சரவணாவை நோக்கி கையை நீட்டி, “மாமா கூட என்கிட்ட பேசல… ஒரு வேள நான் மாமாவ கட்டிக்க மாட்டேன் சொன்னது… அவருக்கு கோபம் நினைச்சிட்டேன். அடுத்து அவருகிட்ட என்ன பேசறதுனு பயமா இருந்துச்சி” என்று சொன்னாள்.
அடுத்து அவள் இன்னொருவரை பற்றி கூறும் முன் சரவணா இடை புகுந்து, “அச்சோ… மாமா அப்படி எல்லாம் நினைக்கலடா குட்டி… எனக்கு தெரியாது இல்ல… நீயும் சம்மதிக்கலனு… அதான் கொஞ்சம் கோபமா இருந்துட்டேன். சாரி டா” என்று அவள் அருகில் வந்து கூறினான் சரவணா.
“ஆன்… ஆன்… எனக்கு இப்போ தெரியும் மாமா. ஆனால் அப்ப எனக்கும் தெரியாது இல்ல” என்று சொன்னவள், அடுத்து தன் தாயை பற்றி கூறினாள்.
“பா… அம்மா இருக்கில்ல… முத எல்லாம் சாப்பிட வா… சாப்பிட வானு… அந்த அந்த நேரம் ஆன போதும்… கூப்டுட்டே இருக்கும் இல்ல… ஆனா அப்ப என்ன கண்டுக்கவும் இல்ல… வூட்டுல சமைக்கவும் இல்ல… வந்து அது பொறந்த வூட்டுல உக்காந்துகிச்சி. நான் இங்க வந்தாலும், எல்லாரும் மூஞ்சை திருப்பிட்டு திருப்பிட்டு போனாங்க… எனக்கு வரவே பயமா இருந்துச்சி… நான் இருந்தா சும்மா சிரிச்சி பேசிட்டு இருந்தா கூட அமைதி ஆகிடுவாங்க. எனக்கு அப்ப ஏதோ நான் இவங்க மகிழ்ச்சிய கொடுக்க வந்தவ மாறி இருக்கும்” என்று ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்து பார்த்து தான் தந்தையுடம் சொன்னாள்.
“அப்பறம் தமிழ் தான் எனக்கு சாப்பாடே கொண்டு வந்து கொடுத்தா… மத்தவங்க யாரும் என்ன கண்டுக்கல… நான் இங்க இருக்கறதும் யாருக்கும் புடிக்கல” என்று தலையை குனிந்து கொண்டே சொன்னவள், “அப்பறம் உனக்கு கூட என்ன புடிக்காம போச்சி தான பா. அதான் நீயும் என்கிட்ட பேசாம இருந்த??!. நீங்க எல்லாம் பக்கத்துல இருந்து பேசாம இருந்தது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சி.  நீங்களும் என்னால மகிழ்ச்சியா இல்ல. நான் இருந்தா நீங்க ஆனந்தமா இருக்க மாட்டீங்கனு நினைச்சி தான் நான் போனேன் பா” என்று இவ்வளவு நேரம் யாரிடம் குறைகளை கூறி கொண்டு இருந்தாளோ, அவர் மேல குற்றம் வாசித்தாள்.
அதற்கு அவர் எதுவும் சொல்லாமல் இருக்க, சித்தம்மாள் முன் வந்து, “உன்னால எங்களுக்கு என்ன வருத்தம். எ ஆச பேத்தி நீ. பக்கத்துலயே இருந்து உன்ன வளத்தேன். கல்யாணம்னு ஒன்னு முடிஞ்சி வந்தா எல்லாரும் அது சம்மந்தமா வேல எல்லாம் முடிக்க தான் இருப்பாங்க. ஒரு ஒரு வாரத்துக்காவது வேல இருக்கும். அதான் எல்லாம் அத பாத்துட்டு இருந்தாங்க” என்று சொல்ல, அவரை தொடர்ந்து, “ஏண்டி எங்களுக்கு உன் மேல கோவப்பட கூட உரிமை இல்லயா??. நாங்க பாத்து வளத்த புள்ள நாங்க சொல்லறத கேட்கும்னு ஒரு நம்பிக்க எங்களுக்கும் இருந்து இருக்கும்ல. திடீர்னு நீ மாத்தி பேசவும் எங்களுக்கு ஏத்துக்க முடியல” என்று பிரியாவின் பெரிம்மா சொன்னார்.
“இல்ல பெரிம்மா…” என்று பிரியா திக்க, அற்புதம், “ஏண்டி நம்ம முக்கால்வாசி நாள் எங்க அம்மா வீட்டுல தான் சாப்பிடுவோம். என்னமோ அத மட்டும் குறைனு அப்படி சொல்லிட்டு இருக்க… இதுக்கு முன்ன நான் உன்கிட்ட பேசாம இருந்ததே இல்லயா??. மனசு புத்தகமா… உடனே உடனே அடுத்த அடுத்த பக்கத்துக்கு திருப்ப, எங்களுக்கும் உன் கிட்ட எதிர்பார்ப்பு இருந்து இருக்கும்ல… அது நடக்கலனதும் கோவம் வந்துடுச்சி. அதுக்கு நீ வூட்ட வுட்டு போவயா??” என்று இன்னுமே மனசு கேட்காமல் தான் பேசினார்.
பிரியா அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க, “சரி… போதும்… எல்லாம் நிறுத்துங்க…” என்ற சண்முகம் தனது மகளை நோக்கி திரும்பினார்.
“அந்த நேரத்துல நம்ம மாறியே தான் பிரியாவும் யோசிச்சி இருந்து இருப்பா!!. நம்ம பெரியவங்க யாராவது ஒருத்தர் ஒத்தாசையா இருந்து இருந்தா இந்தளவுக்கு வந்து இருக்காது. அப்பாவ மன்னிச்சிடுடா… நான் உன்கிட்ட எல்லாத்தையும் பேசி புரிய வச்சி இருக்கனும்” என்று அவளை பார்த்து சொல்ல, “என்னயும் மன்னிச்சிடு பா. நானும் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு பண்ணாம உங்க யார் கிட்டயாவது பேசி இருக்கனும்” என்று அவளும் கூறி முடித்தாள்.
அதன் பின் குடும்பம் அனைத்தும் பிரியாவுடன் பேசி கொண்டு இருக்க, எங்க வேல பண்ணுறா?? என்ன பண்ணுறா?? எங்க தங்கி இருக்கா?? ப்ரெண்ட்ஸ் யாராவது இருக்காங்களா?? என்று எல்லாத்தையும் பேசி கொண்டு இருந்தனர்.
சரவணா இப்போது தனது அலைபேசியை எடுத்து கொண்டு வெளியே சென்றான். இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே தேவ், இரு முறை அழைத்தான். அந்த தவறிய அழைப்புகளை பார்த்து விட்டு அவனுக்கு அழைக்க தான் சென்றான்.
“ஆன்… அண்ணா…” என்று அழைப்பை ஏற்றவுடன் தேவ் சொல்ல, “சொல்லு தேவ்… எதுக்கு கூப்பிட்டு இருந்த??” என்று சரவணா கேட்டான்.
“அண்ணா… அதான் எல்லாரும் இன்னிக்கு வந்துடுவாங்கனு சொன்னீங்க இல்ல. அதான் வந்துட்டாங்களா?? கீர்த்துவ எதுனா சொன்னாங்களா?? என்ன ஆச்சினு கேக்க தான் ணா கூப்பிட்டேன்!!” என்று சொன்னான் தேவ்.
“ம்ம்ம்… எல்லாரும் வந்தாச்சி… எல்லாம் பேசியும் முடிச்சாச்சி. ஒன்னும் பிரச்சனை இல்ல” என்று சொன்ன சரவணா, மேலும் நடந்தவற்றை கொஞ்சம் மேலோட்டமாக சொன்னான்.
அதை எல்லாம் கேட்டு கொண்ட தேவ், அன்று அவன் தாயிடம் பேசியதை எண்ணி பார்த்தான். அவன் அம்மா சொன்னதை போல் தான் அனைவரும் எண்ணி இருக்கின்றனர்.
“அவங்க
‘அம்மா… நீங்க ஒரு தீர்க்கதரிசி மா’ என்று மனதுக்குள் தன் அம்மாவை மெச்சி கொண்டவன், சரவணாவின் பேச்சில் கவனம் செலுத்தினான்.
“ம்ம்ம்… சரி ஓகே ணா… ரொம்ப அழுதுட்டாளா??” என்று மெதுவாக கேட்டான் தேவ்.
சரவணாவுக்கு சிரிப்பு தான் வந்தது, இவ்வளவு நேரம் என்ன சொன்னேன் அதை எல்லாம் விட்டு விட்டு, அவள் அழுதாளா என்பது தான் இவனுக்கு பெரிய பிரச்சனையா?? என்று. ஆனாலும் அவள் மேல் இவ்வளவு அக்கறை வைத்து இருப்பது, சரவணாவுக்கும் மகிழ்ச்சியே!!.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்று சரவணா தேவ்வுக்கு சொல்ல, தேவ்வும், “சரி ணா… அப்போ எல்லா பிரச்சனையும் ஓவர் தான!!!. நான் ஊருக்கு கிளம்பலாம் இருக்கேன் ணா” என்று சொன்னான்.
“ஏன் டா?? அதுக்குள்ள… நான் உங்க இரண்டு பேர் பத்தியும் மாமாகிட்ட பேசலாம் நினைச்சேன்” என்றான் சரவணா.
“இல்ல ணா. என் மாமா பையன் மதன் கல்யாணம் முடியனும். அதுக்கு அப்பறம் பேசிக்கலாம். அதுக்குள்ள நான் கீர்ததுவ வேற சமாதான படுத்தனும்ல. அவ அங்க வந்ததும் பேசி சரி பண்ணலாம். அப்பறம் நானே வந்து மாமா கிட்ட பேசறேன் ணா” என்று தனது எண்ணத்தை கூறினான் தேவ்.
“சரி ஓகே… எப்ப கிளம்பற??” என்று கேட்டான் சரவணா.
“இன்னிக்கு நைட் ணா” – தேவ்.
“சரி… முடிஞ்சா வரேன்” – சரவணா.
“ஓகே ணா. பாய்” என்று அழைப்பை துண்டித்தான் தேவ்.
அதன் பிறகு வீட்டின் உள்ளே வந்த சரவணா, மற்றவர்களுடன் இணைந்து கொண்டான்.
“பிரியா குட்டி… எத்தன நாள் லீவ் போட்டு இருக்க??. திரும்ப எப்ப போகனும்??” என்று கேட்டான் சரவணா.
“ஒரு வாரம் மாமா. அடுத்த ஞாயித்து கிழமை கிளம்புனா போதும்” என்று சொன்னாள்.
“என்னது??. திரும்ப போகனுமா??” என்று சித்தம்மாள் கேட்க, “ஆமா பாட்டி” என்று பிரியா பதில் சொன்னாள்.
மற்றவர்களும் புரிந்து கொண்டனர், நன்றாக இருந்து இருந்தால் யாரும் அவள் வேலைக்கு செல்வதை தடுத்து இருக்க மாட்டோம் அல்லவா!!! என்று.
அன்று இரவு தேவ் ஊருக்கு கிளம்பும் போது அங்கு சரவணாவும், சுந்தரும் அவனை வழி அனுப்ப வந்து இருந்தனர்.  அவர்களிடம் சிறிது நேரம் பேசி விட்டு சென்னை கிளம்பினான் தேவாமிர்தன்.
இங்கு கீர்த்தியோ ஒரு வார விடுமுறையையும் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழித்தாள்.
ஒரு வாரம் முடிந்து அவள் ஊருக்கு கிளம்ப தயாராகும் போது, குளிக்கற சோப்பு, துணி துவைக்கற சோப்பு, ஷாம்பூ எல்லாம் இருக்கா??. வாங்கிட்டு வரவா??. நெறுக்கு தீனி என்ன வேணும்??. முறுக்கு, தேன் மிட்டாய், கடல பருப்பி வாங்கிட்டு வரவா?? என்று நடுவில் இருந்த ஒரு வருடமும் இவள் தான் அனைத்தையும் செய்து கொண்டாள் என்பதை மறந்து, கல்லூரி செல்லும் போது அவளுக்கு பேக்கிங் பண்ண என்ன பண்ணுவார்களோ அதே போல் கேட்டனர் அவர்கள் எல்லாம்.
“அது எல்லாம் இருக்கு. ஆனா திங்க மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க பா” என்று சிரிப்புடன் கூறினாள் பிரியா.
ஒரு வழியாக, மூட்டை முடிச்சை கட்டி முடித்து இருக்க, சண்முகமும், சரவணாவும் வந்து அவளை பஸ் ஏற்றி விட்டனர்.
இப்போது தான் கீரத்திக்கும் மனதுக்கு நிறைவாய் அமைதியாய் மகிழ்ச்சியாய் இருந்தது.
அவள் மனதுக்குள், இதுக்கு எல்லாம் தேவ்க்கு தான் நன்றி சொல்லனும். அவன் மட்டும் இங்க வரலனா, நான் பயந்துகிட்டு அங்கயே இருந்து இருப்பேன். இதை எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு இழந்து இருப்பேன் என்று மனதில் எண்ணி கொண்டாள்.
பாவம்!! அவனை வேற வருத்தப்படுற மாறி திட்டிட்டோம். அவனுக்கு முதல ஒரு தேங்க்ஸ்ஸு, ஒரு பெரிய சாரியும் சொல்லனும். நேருல போய் சொல்லலாம் என்று நினைத்து கொண்டு பேருந்தில் கண் மூடி உறங்கி விட்டாள்.
கொடுப்பாள்…
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே…
நன்றி!!!
இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀

Advertisement