Advertisement

இடம் 28
கீர்த்தி வி்ட்டு சென்ற பின் தேவ் சோகமாக இருக்க, அவன் தோளை ஒரு கரம் தொட்டு தன் இருப்பை உணர்த்தியது.
திருப்பி பார்த்தான்… சரவணா தான்…
“என்ன தம்பி??. பிரியா கூட சண்ட போல…” என்று கேட்டான்.
“ஆமா ணா… நான் நல்லது நினைச்சி தான் இங்கே வந்தேன். ஆனா…” என்று தவறாக செய்து விட்டோமோ என்ற எண்ணத்தில் இடைவெளி விட்டு இடைவெளி விட்டு பேசினான் தேவ்.
“நீ செஞ்சது தப்புனு சொல்ல முடியாது. அதே போல் பிரியா பேசறது தப்புனும் சொல்ல முடியாது” என்று சரவணா அவன் தோளை தட்டி கொண்டே சொன்னான் சரவணா.
“அது எப்படினே இரண்டு பேருமே சரினு ஆகும்??” – குழப்பமாக தேவ்.
“அது அப்படி தான்” – சரவணா.
தேவ் முறைக்க, “சரி சரி… உக்காரு” என்று அங்கே இருந்த ஒரு திண்ணையில் அமர சொன்ன சரவணா, தானும் அமர்ந்தான்.
“அதாவது நம்ம ஏன் எப்பவுமே முன்னாடி போய், பாதுகாப்பு கொடுக்கறேன்ங்கற பேருல நமக்கு பின்னாடி ஒழிச்சி வைக்கனும். அவங்கள முன்னாடி விட்டு கூட நம்ம அவங்க துணையா அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கலாம்ல” என்று சரவணா கேட்க, ‘இதுக்கும் இப்ப அவ வந்து பேசிட்டு போனதுக்கும் என்னங்க சம்மந்தம்’ என்ற ரீதியில் தேவ் அவனை பார்த்தான்.
“ஹாஹா… நீ இப்ப எதுக்கு இத சொல்லறேன்னு நினைக்கறது புரியுது. ஆனா சில சின்ன சின்ன செயல்கள் தான் பெரிய பெரிய செயல்களுக்கு அடித்தளமா இருக்கு. இப்ப பிரியா வந்து சொன்னது, நான் தப்பே பண்ணாலும் அத சரி பண்ற வாய்ப்பு எனக்கு குடு. நீ என் கூட துணையா இருனு தான். எல்லாத்தையும் நீயே பண்ணி, அவள உன் பின்ன ஒழிஞ்சிக்க வைக்கற. நாள பின்ன வேற ஏதாவது பிரச்சனை வந்தாலும், அவ யாராவது வந்து சரி பண்ணுவாங்களானு தான எதிர்பாப்பா??” என்று கேட்டான் சரவணா.
இப்போது லேசாக புரிவது போல் இருந்தது தேவ்வுக்கு.
“ம்ம்ம்… இப்படி யோசித்து பாரேன். உனக்கு ரொம்ப வேண்டியவங்களுக்கு எதுனா உடல் உறுப்பு தேவைப்படுது… அவ்வளவு ஏன் இரத்தம் தேவைப்படுது. பிரியாவுது ஒத்து போகும்னு தெரிஞ்சா, அவ விருப்பம் இல்லாம, அவ உடல் நிலை தெரியாம, ஒரு நல்லதுக்கு தான்னு அவள நீ அத பண்ண வைக்கலாமா??” என்று கேட்டு அவனது குழப்பத்திற்கு ஒரு முற்றும் போட்டான் சரவணா.
“ஓஓஓ… ஆனா நான் இப்படி யோசிக்கல…” – தேவ்.
“ம்ம்ம்… புரிஞ்சது” – சரவணா.
“ஆனா இவள இப்படி எப்படி சமாதானம் பண்ணறது??” – தேவ்.
“எனக்கு தெரிஞ்சி பிரியாவுக்கு உன் கூட சண்டை போடவோ, உன்ன வருத்தப்பட வைக்கவோ விருப்பம் இல்ல. உன்கிட்ட பேசுனா கண்டிப்பா வார்த்தைகள்ல கட்டுப்பாடு இருக்காது. உன்ன வருத்தப்படுத்தும்னு தான் பேசாம இருந்து இருக்கா நினைக்கறேன்” என்று சரவணா கணிப்பை கூறினான்.
“அப்ப நான் தான் வழிமந்தமா போய் வாங்கி கட்டிட்டு வந்து இருக்கனா??” என்று சரவணாவை தொடர்ந்து கூறினான். மேலும் அவனே, “பரவாயில்ல… அவள பத்தி புதுசா ஒன்னு தெரிஞ்சிகிட்டனே” என்று சொல்லி கொண்டான்.
“அப்ப அவள சுலபமா சமாதானப்படுத்திலாம் சொல்லறீங்க??” – தேவ் சரவணாவிடம்.
“அதே தான்” – சரவணா.
தலையை ஆட்டி கொண்டே தேவ் யோசிக்க, “சரி நீங்க பாருங்க. நான் வெளியே போய்ட்டு வரேன்” என்று சொல்லி விட்டு சரவணா கிளம்பினான்.
அவருக்கு பதில் சமிக்கை செய்து விட்டு, தனது எண்ணங்களில் முழ்கினான் தேவ்.
மதிய நேரம் ஆக, பெரியவர்கள் அனைவரும் வந்து விட்டனர்.
அனைவரும் உள்ளே வந்து அமர  தமிழ் அனைவருக்கும் ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
அனைவரும் தண்ணீர் அருந்த, அங்கே இருந்த பிரியாவை முதலில் பார்த்தது சங்கரின் பசங்க தான்.
“சித்தி” என்று கத்தி கொண்டே அவளிடம் செல்ல, முதலில் எல்லோரும் அவர்கள் தமிழை தான் சொல்கிறார்கள் என்று நினைத்தார்கள். பின்னர் தான் அது பிரியா என்று தெரிய, ஒவ்வொரும் ஒவ்வொரு மனநிலையில் அவளை பார்த்தனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் இருந்த ஒரு பொதுவான உணர்ச்சி, கோபம் தான்.
‘எப்படி சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு போகலாம்??’ என்று கீர்த்தியின் பெற்றோரும், ‘இவ்ளோ நாள் எங்க இருந்தா என்ன பண்ணறா எதுவும் தெரியல!!’ என்று சங்கரும், அவன் மனைவியும் எண்ண, ‘இப்ப என்னத்துக்கு இங்க வந்தாளாம்??’ என்று கீர்த்தியின் பெரியம்மாவும், ‘இப்ப என்ன குண்டு போட போறாளோ!!’ என்று சித்தமாளும் என சித்தம் கலங்கி இருந்தனர் அனைவரும்.
எல்லோரும் எதுவும் பேச ஆரம்பிக்கும் முன், தமிழ், “எல்லோரும் இப்ப தான வந்தீங்க!!. களப்பா இருக்கும். அதனால போய் குளிச்சிட்டு வாங்க. சாப்பிட்டு ஆறுதலா பேசலாம்… எதுவும் எங்கையும் ஓடி போய்டாது” என்று சொன்னாள்.
உடனே கீர்த்தியின் பெரியம்மா, “ஓடி போய்ட்டு தான வந்து இருக்கு!!. திரும்ப போகாதுனு என்ன நிச்சயம்??” என்று குத்தலாக சொல்ல, அற்புததிற்கும் சண்முகத்துக்கும் வருத்தமாய் இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் எதும் பேசாமல் அமைதியாய் இருந்தனர்.
“பெரிம்மா… அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம். இப்ப போய் எல்லாம் குளிச்சிட்டு வாங்க” என்று சொல்லி அனுப்பி வைத்தாள் தமிழ்.
என்ன கோபம் தான் இருந்தாலும் தன் மகளை ஒருவர் ஓடி போனவள் என்று  சொல்வதை, அற்புதத்தால் ஏற்க முடியவில்லை.
தமிழ் கேட்டு கொண்ட படியே அனைவரும் கலைந்து செல்ல, தமிழ் தனது அலைபேசியை எடுத்து கொண்டு தனியாக சென்றாள்.
சரவணாவுக்கு அழைத்து, “மாமா எங்க இருக்கீங்க??. எல்லாரும் வீட்டுக்கு வந்துட்டாங்க. சீக்கிரம் வாங்க” என்று அவன் அழைப்பை ஏற்றவுடன் கூறினாள்.
“இங்க பக்கத்துல தான் இருக்கறேன். வரேன். அவங்க வந்ததும் எதுனா சண்டய ஆரம்பிச்சாங்களா??” என்று சரவணா கேட்க, “ஆமா மாமா. பெரிம்மா தான் சுருக்குனு பேசிட்டாங்க. அற்புதம் சித்திக்கு கூட மூஞ்சே இல்ல” என்று சோகமாக சொன்னவள், “சரி மாமா. நீ சீக்கிரம் வா. நான் அவங்க எல்லாத்தையும் சாப்பிட்டு பேசிக்கலாம் சொல்லி வச்சி இருக்கேன்” என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தாள் தமிழ்.
கீர்த்தியும், அவர்கள் மேல் பொய் சொன்ன குற்றசாட்டு இருந்தாலும், தான் சொல்லி கொள்ளாமல் சென்றது பெரிய தவறு என்று புரிந்தது. நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் எல்லாம் தினமும் செய்திகளில் கேட்கிறார்கள் தானே.
அந்த யோசனையிலே கீர்த்தி இருக்க, தமிழ் உள்ளே வந்தாள்.
“ஏய்!!!… பிரியா…. வா வந்து எல்லாம் எடுத்து வை… வந்துடுவாங்க” என்று அவளை அழைத்து கொண்டு சென்றாள் தமிழ்.
இவர்கள் அனைத்தையும் எடுத்து வைக்க, குடும்பத்தார் அனைவரும் வந்து சேர்ந்தனர்.
தமிழ் பரிமாற அனைவரும் உண்டு முடித்தனர். அதை தொடர்ந்து சரவணாவும் வர, சரவணா, தமிழ், பிரியா மூவரும் ஒன்றாய் அமர்ந்து உண்டனர்.
அது வரை பொறுத்தது போதும் என்று அற்புதம் தான் ஆரம்பித்தார்.
“அடியேய்… எங்கடி போய் தொலஞ்ச… நீ வேலைக்கு தான் போறேன்னு தெரிஞ்சாலும், எங்க எப்படி இருப்பனு தெரியாம எவ்ளோ பயந்து போய் இருந்தோம். தெரியுமா??. நீ சொன்ன மாறி உன் விருப்பப்படி தானடி எல்லாம் பண்ணோம். இதா இவன்” என்று சரவணாவை காட்டி, “மட்டும் நீ எங்க இருக்க என்ன பண்ணறனு சொல்லனா எதுவும் தெரியாம பைத்தியம் புடிச்சி போய் இருக்கும்டி எனக்கு” என பிரியாவை திட்ட தொடங்கினார்.
அடுத்து சண்முகம், “நீ என்கிட்ட சொல்லி இருக்கலாம்…. எதா இருந்தாலும், நான் பாத்துட்டு இருந்து இருப்பேன். நீ இப்படி பண்ணுவனு நான் கொஞ்சம் கூட நினைக்கல. இரண்டு தடவ நான் உன் மேல வச்சி இருந்த நம்பிக்கைய உடச்சிட்ட” என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
“உனக்கு இவ்வளவு ஏத்தம் இருக்க கூடாதுடி. என்னமோ இவ பாட்டுக்கு எல்லா முடிவும் எடுக்கறா!!!. யாரும் எதுவும் சொல்லாம கண்டுக்காம இருக்காங்க. அதான் இப்படி எல்லாம் பண்ணிட்டு திரியறா…” என்று பிரியாவின் பெரியம்மா சொல்ல, அடுத்து ஆளாளுக்கு ஒன்று பேசினர்.
கீர்த்தி அவர்கள் சொல்வதை எல்லாம் அமைதியாய் கேட்டு கொண்டு இருந்தாள். சரவணாவும் அவர்களை பேச விட்டு பார்த்து கொண்டு இருந்தான்.
அவர்கள் எல்லோரும் தங்களது உணர்ச்சி கொந்தளிப்பை கொட்டி தீர்த்தவுடன், சரவணா பேச ஆரம்பித்தான்.
“பிரியாவோட பஞ்சாயத்தை அப்பறம் பாக்கலாம். அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்” என்று சரவணா சொல்ல, எல்லோரும் அமைதியா இருக்க அவன் குரல் சத்தமாய் கேட்டது.
அனைவரும் அவனை கேள்வியாய் பார்க்க, சித்தம்மாள் தான், “என்ன தம்பி கேட்கனும்??” என்று கேட்டார்.
சண்முகத்திற்கு புரிந்து விட்டது… அவன் எதை பற்றி கேட்க போகிறான் என்று, எனவே அவரும் அமைதியாய் பார்த்தார் அவனை.
“எனக்கு கல்யாணம் நின்ன அப்போ, பிரியாகிட்ட கேட்டு அவ சம்மதிக்கலனு… ஏன் யாரும் என்கிட்ட சொல்லல??” என்று அவன் கேட்ட கேள்வியிலே அனைவரும் அவனை அதிர்ச்சியாய் பார்க்க, “அதை விட முக்கியமா, பிரியா வேண்டாம்னு மறுத்தும், நீங்க ஏன் என்கிட்ட வந்து பிரியா இல்லனா தமிழ்… இரண்டு பேருல யாரையாவது ஒருத்தர கல்யாணம் பண்ணி ஆகனும்னு சொன்னீங்க??” என்று சண்முகத்தை பார்த்து கேட்டான்.
சங்கர் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க, சண்முகம் எந்த வித பதட்டமும் இல்லாமல் அவனை நோக்கினார்.
சரவணா மேலும், “நான் தமிழுக்கு பதிலா, பிரியாவையே கட்டிகிறேன் சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க?? அவளை கட்டாயப்படுத்தி இருப்பீங்களா?? இல்ல எதுனா சொல்லி ப்ளாக் மெயில் பண்ணி இருப்பீங்களா??” என்று கோபமாகவே கேட்டான்.
‘ஆமால்ல… அப்ப என்ன பண்ணி இருப்போம்??’ என்று மற்றவர்கள் யோசிக்க, சண்முகம் அதற்கும் கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல், தனது பதிலை கூறினார்.
அந்த பதிலை தெரிந்து கொள்ள பிரியாவும், ஆர்வமாய் இருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்முகம் தற்போது உண்மையை தான் சொல்கிறாரா அல்லது தற்போதுள்ள சூழ்நிலையை பொறுத்து சமாளிக்கிறாரா என்பது போல் தான் இருந்தது… அனைவரின் பார்வையும்…
கொடுப்பாள்….

Advertisement