Advertisement

இடம் 27
கீர்த்தி தனது சொந்த ஊருக்கு வந்து சேரும் போது, மணி கிட்டதட்ட இரவு பத்து முப்பது. போக்கு வரத்து அதிகமாக இல்லாமல் தெருவே வெறிச்சென்று இருக்க, பயப்படாமல் தனது இல்லம் நோக்கி நடை போட்டாள்.
தனது வீட்டிற்கு சென்று பார்க்க, வீடு பூட்டி இருந்தது. எங்க போய் இருப்பாங்க?? என்று ஒரு தனக்குள்ளே கேட்டு கொண்டு, தனது பாட்டி வீட்டை நோக்கி நடந்து சென்றாள். இங்கே இல்லை என்றால் கண்டிப்பாக அங்கே தான் இருப்பார்கள் என்று அவளுக்கு தெரியும் அதனால். ஆனால் அங்கேயும் அவளால் தனது பெற்றோரை காண இயலாது என்று தெரியாமல் இருந்தாள்.
சரவணாவும், தமிழும் இரவுணைவை முடித்து படுத்து கிட்டதட்ட இரண்டு மணி நேரங்களுக்கு மேல் இருக்கும். ஆனால் இன்னும் இருவரும் உறங்கவில்லை. உறக்கம் வரவுமில்லை.
இத்தனை நாள் இல்லாமல் இன்று ஒரு அறையில் படுக்க தமிழுக்கு சிறு தயக்கம் இருந்தது. தங்களுக்குள் இருந்த மன வேறுபாட்டை பேசி தீர்த்து கொண்டாலும், உடனடியாக மண வாழ்க்கையில் இணைய மனம் வரவில்லை. வாழ்க்கையில் கடந்த நாட்கள் திரும்ப வராது என்று புரிந்து தான் தமிழ், சரவணாவிடம் அனைத்தையும் கூறினாள். இருந்தாலும் இந்த தயக்கம்… ஏன் என்று தான் புரியவில்லை அவளுக்கு.
சரவணாவோ, நாளை தங்கள் குடும்பத்தார் வந்தவுடன், அவர்களிடம் என்ன எல்லாம் கேட்க வேண்டும், அடுத்து பிரியாவை சென்று அழைத்து வர வேண்டும், அடுத்தது பிரியாவுக்கும் தேவாவுக்கும் திருமணம் குறித்து பேச வேண்டும் என்ற எண்ணங்களில் முழ்கி இருந்தான். தனக்கருகில், தூக்கத்தை துளவி கொண்டு இருக்கிறாள் என்று புரியாமல் தனது எண்ணங்களில் மிதந்து கொண்டு இருந்தான்.
விடிய விடிய முழித்து இருப்பார்களோ என்னவோ தெரியவில்லை… அதற்கு இடம் கொடாமல், ‘டக்… டக்… டக்…’ என அவர்களது வீட்டு கதவு தட்டப்பட்டது.
இந்த நேரத்தில் யாராய் இருக்கும்?? என்ற எண்ணத்துடன் தமிழ் கதவை திறக்க செல்ல சரவணா தடுத்து, “நீ இரு. நான் போய் பாக்கறேன்” என்று சென்று கதவை திறந்தான்.
எதிரே கீர்த்தி பிரியம்வதா, சோர்வுடன் நின்று இருந்தாள்.
“ஏய்!!!. குட்டி… என்ன நீங்களே கிளம்பி வந்துட்டீங்களா” என்று மகிழ்வுடன் கேட்டான் சரவணா.
“ஆமா மாமா… நானே வீட்டில் இருந்து பேசனும் தோணுச்சி மாமா” என்று சொன்னவள், “எங்க மாமா தமிழ் அக்கா??. அம்மா பாட்டி அப்பா எல்லாம்??” என்று கேட்டாள்.
அப்போது தமிழ் வந்து, “நீ உள்ள வாடி முதல்ல” என்று உள்ளே இழுத்து செல்ல, சரவணா கதவடைப்பு விட்டு வந்தான்.
“தமிழு எப்படி இருக்க??” – புன்னகையுடன் பிரியா.
“யாரை கேட்டுடி யார்கிட்டயும் சொல்லாம வீட்டை விட்டு போன??” என்று முறைப்புடன் கேட்டு கொண்டே பிரியாவின் வலது கையின் முழங்கைக்கு மேல இருந்த சதையை பற்றி கிள்ளினாள் தமிழ்.
“ஆஆஆ… அய்யோ… அம்மா… வலிக்குது…” என்று கத்தியவள், அங்கே இருந்த அவளது தாய் மாமனை பார்த்து, “என்ன மாமா சும்மா வேடிக்க பாத்துட்டு இருக்க வந்து காப்பாத்து” என்று கூறினாள் பிரியா.
“ஏண்டி… வலிக்கற மாறியே கிள்ளல… அதுக்கே இத்தனை ஆர்பாட்டம் பண்ற… நடிப்பு கள்ளி” என்று சொன்னவள், “நாட்டுல எத்தனை நடக்குது. அப்டி என்ன ஆத்திரம்?? சொல்ல கொள்ளாம போற அளவுக்கு??” என்று கேட்டாள் தமிழ்.
“தெரில தமிழ்… அப்ப நான் இங்க இருக்கறது சரி இல்ல தோணுச்சி… நான் அதிகப்படியா இருக்க மாறி இருந்தது” என்று சோகமான குரலில் கூறினாள்.
“சரி… சரி… விடு… இப்ப எல்லாம் சரி ஆகிட்டுல்ல… எதுனா மீதி இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். எல்லாம் வந்த அப்பறம்” என்றான் சரவணா.
அதுவரை சோகமாக இருந்த பிரியா, “ஆமா எல்லாம் எங்க போய்ட்டாங்க?? யாரையும் காணோம்” என்று அப்போது தான் நினைவு வந்து கேட்டாள்.
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட…” என்ற தமிழ், “சாப்பிட்டயா??” என்று கேட்டாள்.
‘இல்ல’ என்று உதட்டை பிதுக்கி தலையை ஆட்டினாள் பிரியா.
“சரி இரு. எதுனா செஞ்சி எடுத்துட்டு வரேன்” என்று சமையலறையை நோக்கி சென்றாள்.
பிரியாவின் அருகே வந்த சரவணா, “என்ன குட்டி?? தேவ்கிட்ட பேசுனயா??” என்று கேட்டான்.
“இல்ல மாமா” – பிரியா.
“நல்ல பையன் தான் மா. எனக்கு சரி தான். ஆனாலும் வீட்டுல பேசலாம். இந்த சின்ன காரியம் பண்ணதுக்கு கோபப்படாதடா. உனக்கு நல்லதுனு நினைச்சி தான பண்ணான்” என்று சொன்னான்.
தேவ்வை பற்றி விசாரிக்க பணிந்து இருந்த சரவணா தோழன், “மேலோட்டமா விசாரிச்ச வர நல்லவிதமா தான் சொன்னாங்க” என்று சொன்னவன் மேலும் மதன் பற்றியும், அவனுக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடிக்கவிருப்பது பற்றியும், தேவ்வின் தாய் தந்தை பற்றி எல்லாம் கூறினான். அது எல்லாம் திருப்திகரமாக இருக்கவும், வீட்டில் பேசி அவர்களுக்கே திருமணம் செய்ய எண்ணி இருந்தான் சரவணா.
அவள் யோசனையில் இருக்க, “சரி சாப்பிட்டு நீயும் தமிழும் படுத்துக்குங்க” என்று சொல்லி விட்டு ஒரு கயிற்று கட்டிலை எடுத்து வாசலில் காத்தாட படுத்து கொண்டான்.
தமிழ் எடுத்து வந்த உணவை உண்டு விட்டு, அவளுடன் சென்று சரவணாவின் அறையில் படுத்து கொண்டாள் பிரியா.
அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு தான் எழுந்தாள் பிரியா.
எழுந்து வெளியே வந்து பார்க்க, அங்கே தேவ் அமர்ந்து தமிழிடமும், சரவணாவிடமும் பேசி கொண்டு இருந்தான்.
“என்ன தமிழ் அண்ணி நீங்க??. உங்க தங்கச்சிய இப்படியா இவ்வளவு நேரம் தூங்க வச்சி அழகு பாக்குறது” என்று கேட்டு கொண்டு இருந்தான்.
“அட விடுங்க தேவ், நேத்து ரொம்ப நேரம் கழிச்சி தான.. அதுவும் தூரம் பஸ்ல வந்து இருக்கா!!. களப்பா இருக்காதா??” என்று பதிலுக்கு பேசி கொண்டு இருந்தாள் தமிழ்.
அவர்கள் இவளது தூக்கத்தை பற்றி பேசி கொண்டு இருந்தது கூட இவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அது என்ன அண்ணி?? என்று தான் யோசனையாக அவர்களை பார்த்தாள்.
“என்ன தமிழ்??. புதுசா வந்தவங்க எல்லாம் உன்ன அண்ணினு கூப்பிடுறாங்க” என்று கேட்டாள் பிரியா.
அதற்கு தமிழ் பதில் சொல்லும் முன் முந்தி கொண்ட தேவ், “அது ஒன்னும் இல்ல கீர்த்து”, என்று தமிழை காட்டி, “இவங்களுக்கு நான் தம்பியா இருந்தா, நீ எனக்கு தங்கச்சி ஆகிடுவியாம்” என்றவன் தொடர்ந்து, சரவணாவை காட்டி, “இவங்களுக்கு தம்பியா இருந்தா கட்டிக்கும் முறை ஆகிடுவியாம். அதான் இவருக்கே தம்பியா இருக்கலாம் முடிவு பண்ணி, இவங்கள அண்ணியா தத்து எடுத்துகிட்டேன்” என்றான் தேவ்.
அவன் சொன்னதை கேட்டு முறைத்த பிரியா, அதற்கு மேல் அவருக்கு முக்கியதுவம் கொடுத்து அவனை நோக்காமல், “எல்லாரும் எப்ப வருவாங்க??” என்று கேட்டாள்.
“மதியத்துக்கு மேல ஆகிடும்னு சொன்னாங்க” என்று தமிழ் பதில் தர, “ம்ம்ம்” என்று தலையை ஆட்டினாள்.
அனைவரும் அமர்ந்து காலை உணவை முடிக்க, சரவணா, “நான் வெளியே போயட்டு வரேன்” என்று சொல்லி விட்டு  கிளம்பினான்.
தமிழும் தனது சமையலறை அரசாங்கத்தில் நுழைய, தேவ், “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் கீர்த்து” என்று சொன்னான்.
கீர்த்தி, “இல்ல…” என்று சொல்ல ஆரம்பிக்க, அவளது கை பிடித்து, வெளியே தோட்டத்திற்கு அழைத்து சென்றான்.
“சொல்லு கீர்த்து!!. நான் என்ன பண்ணிட்டேன்னு கோபமா இருக்க??” என்று கேட்டான்.
“என்ன பண்ணிட்டயா?? நீ என்ன பண்ணல??” என்று கேட்டவள், அவன் இன்னும் புரியாமல் இருக்க, “யார கேட்டு இங்க வந்த??. எங்க மாமாகிட்ட நீ எதுக்கு பேசுன?? முதல்ல நீ யாரு இங்க வந்து என்ன பத்தி பேச??” என்று அவனை பார்த்து சரமாரியாக கேள்விகளை கேட்டாள் கீர்த்தி.
‘நீ யாரு??’ என்று அவள் கேட்டதும், தேவ்வுக்கு ஒரு மாதிரியாகி விட்டது.
“கீர்த்து… நான் உனக்காக தான்…” என்று ஏதோ சொல்ல வர, அதை விடாமல், “என்ன எனக்காக… நான் உன்ன நம்பி தான என்னை பத்தி எல்லாம் சொன்ன… ஆனா நீ என்ன பண்ண… என் வாழ்க்கைய நீ எப்படி உன் கையில எடுக்கலாம்??. ம்ம்ம்??” என்று கேட்டாள்.
“ஆமா.. ஆனா உன்ன உன் குடும்பத்து கூட சேத்து வக்க தான்… நான் இங்க வந்தேன்” என்று அவன் இன்னும் தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் கீர்த்தி, “இல்ல.. உனக்கு புரியல தேவ்… நீ எனக்கு நல்லது பண்ணறதா நினைச்சி… என் வாழ்க்கைல எனக்குனு இருக்க சில கடமைகள், உரிமைகள நீ எடுத்துக்கற… எனக்கு நீ எப்படியோ… ஆனால் என் குடும்பத்துக்கு நீ யாரோ தான!!!.. இருபது வருடமா நம்ம வளத்த பொண்ணு நம்ம கிட்ட பேசறதுக்கு பயந்துகிட்டு, வேற ஒருத்தங்க அதுவும் பாத்து பழகி வெறும் மூணு மாசமே ஆன ஒருத்தங்க துணையை தேடி இருக்குனு வருத்தப்படுவாங்கல” என்று சொன்னவள், “அவங்க மாமாவ கல்யாணம் பண்ணிக்க சொன்னப்ப கூட நான் யாரையும் எனக்கு உதவி பண்ணுங்கனு கேக்கல… என்னோட முடிவ நானே தான் சொன்னேன். அது என்னோட உரிமை, அவங்களுக்கு என்ன புரிய வக்கறது என்னோட கடமை. அத நான் யாருக்கு விட்டு கொடுக்க விரும்பல” என்றாள்.
அதை கேட்டு என்ன சொல்வது என்று புரியாமல் தேவ் இருக்க, “உண்மையில நீ எனக்கு உதவி பண்ணனும் நினைச்சி இருந்தா, நான் பண்ண தப்ப எனக்கு புரியல வச்சி, அத என்னையே சரி பண்ண வச்சி இருக்கனும். உனக்கு புரியுதா??. ஒருத்தங்களோட நல்லது கெட்டது எல்லாம் அவங்க தான் அனுபவிக்கனும். நான் பண்ண தப்புக்கு உனக்கு தண்டனையோ, நீ பண்ண நல்லதுக்கு எனக்கு சன்மானமோ கிடைக்காது. அது தேவையுமில்ல” என்று சொல்லி விட்டு வீட்டின் உள்ளே சென்று விட்டாள் கீர்த்தி.
கீர்த்தி இவ்வாறு எல்லாம் நினைக்க கூடும் என்று தேவ் சத்தியமாக கனவில் கூட எண்ணவில்லை. அவளுக்கு உதவ தான் நினைத்தான். அவளை மகிழ்விக்க எண்ணினான். அதற்காக தான் இங்கே வந்து சரவணாவிடமும் பேசினான். ஆனால் அதுவே அவளை, அவனை பார்த்து, ‘நீ யார்??’ என்று அவன் நினைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தேவ் இருக்க, அவன் தோளின் மீது ஒரு கரம் பதிந்தது.
கொடுப்பாள்…

Advertisement