Advertisement

இடம் 26
தமிழரசியை தேடி வந்த சரவண வேல் அவளை சமையல் அறையில் கண்டு கொண்டான்.
அவன் தான் கொண்டு வந்த செய்தியை அவளிடம் சொல்ல நினைக்க, அதற்குள் தமிழ் அவனை கிண்டல் செய்ய, தான் கொண்டு வந்த செய்தியை பின்னுக்கு தள்ளி விட்டு இப்போது இந்த பஞ்சாயத்தை பார்ப்போம் என்று எண்ணி விட்டான். முன்னாடி அவன் மனதில் இருந்த தடைகள் எல்லாம் இப்போது தேவ் வந்து விளக்கியவுடன், விலகி விட்டது என்பது தான் உண்மை.
அந்த பக்கம் திரும்பி பாத்திரங்களை துலக்கி கொண்டு இருந்த தமிழின் கையை பற்றி தன் பக்கம் திருப்பினான் சரவணா.
‘எதை பத்தி பேச போறாங்களா இருக்கும்??’ என்று மனதில் எண்ணி கொண்டே, அவன் இழுத்த இழப்பிற்கு அவன் பக்கம் திரும்பினாள் தமிழ்.
கேள்வியாக தமிழ் அவனை பார்க்க, “நீ தானடி மூஞ்ச மூஞ்ச திருப்பிட்டு போன!! என்கிட்ட பேசமா… இப்ப ஏதோ நானே எல்லாம் பண்ண மாறி பேசற!!” என்று கேட்டான் சரவணா.
“ஆமா… நான் மூஞ்ச திருப்பிட்டு தான் போனேன். அதுக்கு காரணம் இருக்கு. ஆனா நீங்க மட்டும் எப்படி இருந்தீங்களாம்??” என்று கேட்டாள் தமிழ்.
அவள் சொன்ன கடைசி வாக்கியத்தை கண்டு கொள்ளாமல் விட்டு தள்ளியவன், “அது என்ன உனக்கு மட்டும் ஒரு காரணம் இருக்கு??. என்கிட்ட மூஞ்சு கொடுத்து பேசாம இருக்க” என்று தனக்கு தேவையானதை முதலில் கேட்டான்.
தலையை குனிந்து சில வினாடி யோசித்து, சிறிது தயங்கி, பின் ஒரு முடிவுடன் சொல்லி விடலாம். சொல்லி பிரச்சனையை முடித்து வாழ்க்கையை தொடரலாம். எவ்வளவு நாள் தான் வாழ்க்கையை வீணாக்குவது. வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை என்று எண்ணி சொல்ல தொடங்கினாள் தமிழ்.
அவனிடம் இருந்து கொஞ்சம் தள்ளி நின்று, அங்கிருந்த ஸ்லாப்பில் சாய்ந்து கொண்டு சொல்ல தொடங்கினாள்.
“எனக்கு சின்ன வயசுல இருந்தே உங்களை ரொம்ப புடிக்கும். உண்மையா சொல்லனும்னா உங்களுக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணதும் எங்க வீட்டுலயோ இல்ல நம்ம சொந்த காரங்கள யாரையாவது தான் பாப்பீங்கனு நினைச்சேன். ஆனால் நீங்க வெளியே பாத்தீங்க. இருந்தாலும் சரி ஓகே, நீங்க நல்லா இருந்தா சரினு நினைச்சேன். அப்பறம் அந்த பொண்ணு போனதும், நம்ம பிரியாவ கட்டி வைக்க கேட்ட உடனே சரினு சொல்லிட்டீங்க… எப்படி உங்களால அப்படி சொல்ல முடிஞ்சது??. அதுவும் நம்ம பிரியாவ…” என்று சொல்லி அவன் முகத்தை பார்த்தாள். ஆனால் சரவணா எதுவும் சொல்லாமல் கைகளை கட்டி கொண்டு அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.
“ச்சே… எனக்கு உங்களையும் பிரியாவையும் பாக்கும் போது, அவளுக்கு கூட இருந்து எல்லாம் சொல்லி கொடுத்த அம்மா அப்பா மாறி தான் தோணும். எப்படி சாப்பிடனும்ல இருந்து நீச்சல் வரைக்கும் நீங்க தான சொல்லி கொடுத்தீங்க??. எப்படி உங்களால அப்படி சம்மதம் சொல்ல முடிஞ்சது??. ஆனால் பிரியா எனக்கு விருப்பம் இல்லனு சொல்லிட்டா… இல்லனா…” என்று சொல்லி விட்டு, அப்படி நடக்கவில்லை என்ற ஒரு அசுவாச பெரு மூச்சையும் விட்டாள்.
“அடுத்து அப்பா வந்து என்கிட்ட நான் சம்மதம் சொல்லிட்டேன். ஏன்னா எனக்கு தான் உங்களை புடிக்குமே!!. ஆனால் நீங்க உடனே சம்மதம் சொன்னது எனக்கு புடிக்கல. எப்படி உடனே உடனே பொண்ண மாத்தனதும் சம்மதம் சொல்ல முடியும்??. ம்ம்ம்??” என்று அவனை நிமிர்ந்து பார்த்து தலையை சற்று உயர்த்தி ‘ஏன்?’ என்பதை குறிப்பதாய் தனது வலது கையின் கட்டை விரலை மட்டும் உயர்த்தி மற்ற நான்கு விரல்களையும் மடக்கி வைத்து கேட்டாள்.
இப்போதும் சரவணாவிடம் இருந்து எந்த எதிர் வினையும் அவளுக்கு கிட்டவில்லை. ஆனால் ஆரம்பித்த தமிழால் இப்போது நிறுத்த முடியவில்லை. விரும்பவும் இல்லை.
“முதல்ல பொண்ணு தேடும் போது நான் கண்ணுக்கு தெரில. ஆனா உங்களுக்கு ஒரு பிரச்சனைனு வரும் போது, அந்த நேரத்துல யாரும் கிடைக்கலனு என்ன தேர்ந்தெடுத்த மாறியும் ஒரு எண்ணம். அதுவும் அந்த பொண்ணு போனதும் என்கிட்ட முதல்ல வந்து கேக்கல… பிரியாவ தான் பாத்தீங்க. அவ மறுத்த அப்பறம் தான் என்கிட்ட வந்தீங்க எல்லாம்… ஏன் நான் கடைசி ஆப்ஷனா இருந்தேன். நான் என்ன அவ்வளவு மட்டமா போய்ட்டனா??” என்று கேட்டு, தனது மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் சொல்லி முடித்தாள்.
“அப்பறம் ஏன் உங்களை கல்யாணம் பண்ணிகிட்டேன்னு கேட்டீங்கனா… உங்கள எனக்கு புடிக்கும்… சின்ன வயசுல இருந்தே உங்க மேல விருப்பம். கல்யாணம் பண்ணிக்க ஆசை. அதான்… அதுக்காக மட்டும் தான். அதே போல் நீங்க எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நிக்கறது எனக்கு புடிக்கல. அதுக்காகவும் தான்” என்று தான் எடுத்த முடிவின் காரணத்தையும் சொன்னாள் தமிழ்.
அவளை பேச விட்டு பொறுமையாக எல்லாம் கேட்ட சரவணா, தற்போது அவளுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.
“தமிழு… இங்க பாரு… நான் உன்கிட்ட இத உறுதியா சொல்ல முடியும். அது வந்து என்னன்னா… பிரியாவ கல்யாணம் பண்ண நான் சம்மதிக்கல. என்கிட்ட வந்து என்ன சொன்னாங்கனா பிரியா சரி சொல்லிட்டா நீ அவளை கல்யாணம் பண்ணிக்கோனு. அதனால எனக்கு பிரியா மேலயும் கோவம் தான். நான் ஒத்துகலைனு தான் உன்ன கல்யாணம் பண்ண சொன்னாங்கனு நினைச்சேன். பிரியாவும் சம்மதிக்கலனு எனக்கு இப்ப தான் தெரியும்” என்று சொன்னவன், தேவ்வை சந்தித்தது, அவன் சொன்னது மற்றும் பிரியாவுடன் பேசியது என எல்லாம் சொன்னான் சரவணா.
அவனும் ஒப்பு கொள்ளவில்லை என்பதுவும், தன்னை திருமணம் செய்யவும் சரவணாவை கட்டாயப்படுத்தினார்கள் என்பதுவும், தமிழுக்கு ஆறுதலாய் இருந்தது என்றதில் எந்த பொய்யுமில்லை. அவள் முகம் சிறிது தெளிவு பெற்றது அதன் பின்.
அதையும் குறித்து கொண்ட சரவணா, மேலும் தொடர்ந்து, “ஆனால் முதல்ல சொந்தத்துல பாத்தாங்கடா. எனக்கு இருபத்தி ஏழு வயசுல பாக்க ஆரம்பிச்சாங்க நினைக்கறேன். அப்ப நீ சின்ன பொண்ணு… இருபது வயசு தான்… நான் தான் வேணாம் சொல்லிட்டேன்… சின்ன பொண்ணுனு… ஆனா உனக்கு சில ஆசைகள் இருக்கும் கட்டிக்க போறவன பத்தினு நினைச்சி தான் உன்கிட்ட பேசல… அதும் இல்லாம பிரியா வீட்டை உட்டு போனது கூட ஒரு மாறி வருத்தமா இருந்தது. என்னால தானோனு… இப்ப தான் அது குறைஞ்சி இருக்கு” என்று சொன்னவன், “உனக்கு என்ன புடிக்கும்னு முன்னாடி தெரியாது. தெரிஞ்சி இருந்தா உன்ன வருத்தப்படுத்தி இருக்க மாட்டேன். மன்னிச்சிக்க” என்று அவளது கைகளை பற்றி கொண்டு சொன்னான் சரவணா.
தமிழும் கண்ணை எடுக்காமல் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.
“ஆனா ஏன் முதல்ல பிரியாவ கேட்டாங்க… உன்ன கேக்காமானு எனக்கு சத்தியமா தெரியாதுடா… நாளைக்கு எல்லாம் வந்துடுவாங்க இல்ல. அவங்ககிட்ட கேட்டுக்கலாம். சரியா??” என்று அவளது தலையில் கை வைத்து கொண்டு கேட்டான்.
“ம்ம்ம்” என்று மண்டையை ஆட்டிய தமிழ், சிறிது நேரம் அப்படியே இருந்தாள். பின்னர் நினைவு வந்தவளாய், “சரி… சரி… நேரமாச்சி… மதிய சோத்துக்கு… வா… சாப்பிடுவயாம். எடுத்து வக்கறேன்” என்று சொல்லி அவனிடம் இருந்து பிரிந்து, உணவு பாத்திரங்களை எடுத்து கொண்டு வெளியே கூடத்திற்கு சென்றாள் தமிழ்.
அவனும் கை கால் கழுவி விட்டு வந்து சாப்பிட அமர்ந்தான்.
அவனுக்கு பரிமாறி கொண்டே, “மாமா… இப்பவும் நான் உனக்கு சின்ன பொண்ணு மாறி தான் தெரியுறனா இல்ல…” என்று சற்று தயக்கத்துடன் தான் கேட்டு கொண்டு இருக்க, சரவணா இடையிட்டான்.
“பொண்டாட்டி மாறி தான் தெரியுற” என்று சொல்லி, தனது கையில் எடுத்து வைத்து இருந்த ஒரு வாய் சாதத்தை அவளுக்கு ஊட்டி விட்டான். சிரிப்புடன் அவளும் வாங்கி உண்டாள்.
இருவருக்கும் சில கேள்விகள் இருந்தாலும், அது எல்லாம் அவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட கேள்விகள் இல்லை என்பதால், இருவரும் மிக சாதாரணமாக சொல்ல போனால் அன்னோனியமாக பேச ஆரம்பித்து இருந்தனர். அவர்கள் கேள்விகள் அனைத்திற்கும் நாளை அவர்கள் குடும்பத்தார் வந்தவுடன் விடைகள் தெரிந்து விடும்.
“சரி மாமா. நீ சாப்பிடு. நான் போய் எனக்கும் ஒரு தட்டு எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி விட்டு எழுந்து உள்ளே சென்றாள்.
சரவணா தமிழை காதலிக்கிறானா என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவள் மட்டும் தான் தன் மனைவி. தான் அவளுக்கு மட்டும் தான் சொந்தம் என்ற முடிவை அவன் திருமணத்தின் போதே எடுத்து விட்டான். ஆனாலும் அவளுக்கு பிடிக்குமா என்ற உறுத்தல் இருந்தது. அதுவும் இப்போது இல்லை. அவன் மனதில் இருந்த தடைகள், குழப்பங்கள், கவலைகள் எல்லாம் முடிந்த போல் ஒரு எண்ணம் அவனுக்கு. அதனால் புன்னகை முகத்துடன், தனது மனைவியுடன் அமர்ந்து உண்டான்.
தனது ஹோட்டல் அறையில், தேவ் உணவை ஆர்டர் செய்து விட்டு அமர்ந்து, தன் தாய்க்கு அழைத்தான்.
அந்த பக்கம் அவர் எடுத்தவுடன், “அம்மா” என்று அவசரமாக அழைத்தான்.
“ஏன் இப்படி கத்துற?? என்ன ஆச்சி??. ஆமா சாப்பிடுற நேரம் ஆச்சி. சாப்பிட்டயா??” என்று தான் ஒரு தாய் என்பதை நிரூப்பித்தார் அம்பிகா.
“ஆன்… இன்னும் இல்ல மா. இப்ப தான் ஆர்டர் பண்ணி இருக்கேன். வந்துடும் ஒரு பத்து நிமிடத்துல” என்றவன், “அம்மா.. நான் போய் கீர்த்து மாமாட்ட பேசிட்டேன் மா” என்று அங்கே நடந்தவைகளை சொன்னான் தேவ்.
அவன் சொன்னதை எல்லாம் பொறுமையாக “ம்ம்ம்” கொட்டி கொண்டே கேட்டார் அம்பிகா.
“ஆனா அம்மா… இந்த கீர்த்து ஏன் என் மேல கோவமா இருக்கானு தான் எனக்கு தெரியல மா. உனக்கு ஏன்னு தெரியுதா??” என்று கேட்டான் தேவ்.
“டேய் அமிர் பையா… எனக்கு எப்படி டா தெரியும்” என்று அம்பிகா கேட்க, “அப்பறம் அன்னிக்கு மட்டும் அவங்க கல்யாணத்துல இப்படி தான் எல்லாம் நினைச்சி இருப்பாங்கனு சொன்ன” என்று கேட்டான்.
“டேய்… அது பெரியவங்க அவங்க சூழ்நிலை வச்சி அப்படி நினைச்சி இருப்பாங்கனு தோணுச்சி. அதான் சொன்னேன். ஆனா இப்ப இருக்க பசங்க எல்லாம் என்ன யோசிக்கறீங்கனே புரிய மாட்டிங்குதே. அப்பறம் எப்படி நான் கணிக்கறது. நீ பேசாம அவளுக்கு போன் பண்ணி பேசி பாரு” என்றார் அவர்.
“ம்ம்.. ஆனா அம்மா” என்று அவன் பேசி கொண்டு இருக்கும் போதே அவன் அறை கதவை தட்டினார் யாரோ.
“அம்மா ஒரு நிமிடம். சாப்பாடு வந்துடுச்சினு நினைக்கறேன்” என்று சொல்லி கொண்டே போய் வலது கையால் கதவை திறந்து உணவை வாங்கி கொண்டான்.
“சரி பா… முத சாப்பிடு… சாப்பிட்டு அப்பறம் கீர்த்திக்கு போன் பண்ணி பேசு” என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தார்.
‘ம்ம்… நான் பண்ணா தான் அவ எடுக்க மாட்டீங்கறாளே’ என்று முணங்கி கொண்டே சாப்பிட ஆயுத்தமானான் தேவ்.
கொடுப்பாள்…

Advertisement