Advertisement

இடம் 24
“தமிழுக்கும் எனக்கும் கல்யாணம் முடிஞ்சி வந்தப்புறம்… பிரியா என்ன ஏதோ ஏக்கமா பாப்பா… ‘என்ன ஏன் மாமா வேண்டாம் சொன்னனு’ கேக்கற மாறி எனக்கு தோணும் அந்த பார்வை. அதனாலயே என்னால அவகிட்ட பேச முடியாது” என்று பெரு மூச்சு விட்டவன், “சில நேரம் தோணும் நம்ம பிரியா இப்படிலாம் நினைக்க மாட்டானு. ஆனா அவ நடந்துக்கறத பாத்தா எனக்கு அப்படி தான் தோணுச்சி. அப்பறம் கொஞ்ச நாள்ல வேலைக்கு போறேன்னு யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாம கிளம்பி போய்ட்டா. இங்க என்னையும் தமிழையும் சேத்து பாக்க முடியாம தான் கிளம்பிட்டானு இருந்துச்சி. அதா அவ எங்க இருக்கா என்ன பண்ணறானு தெரிஞ்சாலும், அவள போய் பாக்கல… அவகிட்ட பேசல” என்று தனது அன்றைய நிலையை முழுவதும் சொல்லி முடித்தான் சரவண வேல்.
சரவணாவின் கடந்த கால நிகழ்வில் எந்த இடையூறும் செய்யாமல், அவன் சொல்வதை முழுமையாக பொறுமையாக கேட்டான் தேவ்.
பிறகு சிறு யோசனையுடன், “ஆனா கீர்த்தி என்கிட்ட சொன்னது வேற மாறி இருந்துச்சி” என்றவன் கீர்த்தி சொன்னதை முழுவதுமாக இவர்களிடம் சொல்லி முடித்தான்.
சுந்தர், “கண்டிப்பா இது நம்ம வீட்டு பெரியவங்களோட வேலையா தான் இருக்கனும்” என்றான்.
“ம்ம்ம்” என்ற சரவணா இன்னும் யோசனையுடனே, “ஆனா மாமா ஏன் என்கிட்ட வந்து ‘நீ பிரியா இல்லனா தமிழ் இரண்டு பேருல யாராவது ஒருத்தர கட்டிக்கனும்’ சொன்னாங்கனு தெரில. அது கண்டுபிடிக்கனும். எனக்கு அவர்கிட்ட ஒரு கேள்வி இருக்கு. அதுக்கு அவர் சொல்லற பதில் மட்டும் அப்படி இருந்துச்சி. அவ்வளவு தான்” என்று பல்லை கடித்து கொண்டே சொன்னான் சரவணா.
அவன் என்ன நினைத்து கொண்டு இப்படி பேசி கொண்டு இருக்கிறான் என்று சுந்தருக்கும், தேவ்வுக்கும் புரியவில்லை. ஆனால் சுந்தர் மட்டும் நினைத்தான்… இவன் மட்டும் எதாவது கண்டு புடிச்சான்.  பெருசா எதாவது செஞ்சி வச்சிடுவான். இவனை கொஞ்சம் பக்கத்துல இருந்து பாத்துக்கனும் என்று.
சிறிது நேர அமைதிக்கு பின் சரவணா, “சரி தேவ். அப்பறம்??” என்று கேட்டான்.
தேவ் அடுத்து என்ன கேட்கிறான் என்று புரியாமல் திருதிருவென முடித்தான்.
அதில் சிறிதாய் வர இருந்த சிரிப்பை அடக்கி, “எங்க குடும்பத்துல இருக்க மிஸ்அண்டர்ஸ்டேன்டிங்-ஆ சரி பண்ண மட்டும் நீங்க இங்க வரலனு எனக்கு தோணுது. உங்களுக்கு எப்படி தோணுது மிஸ்டர்.தேவாமிர்தன்??” என்று கேட்டான் சரவணா.
தேவ்வும் எதையும் மறைக்காமல், தெளிவாக அவன் நிலை மற்றும் கீர்த்தியின் நிலையை கூறினான்.
“கீர்த்திக்கு நீங்க முழு மனசோட எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டீங்கனு ஒரு எண்ணம். அதான் உங்ககிட்ட பேசி எல்லாம் சரி பண்ணலாம்னு வந்தேன்” என்று முடித்தான்.
‘என்னை எப்படி இப்படி நினைக்கலாம்… அவளுக்கு ஒரு நல்லது நடக்குதுனா… அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை கிடைக்குதுனா அத நான் எப்படி தடுப்பேன். அவ மகிழ்ச்சி தான் என்னோட ஆனந்தம். அது அவளுக்கு புரியலையா??’ என்று சரவணாவின் ஒரு மனம் எண்ண, அவனது மறு மனமோ, ‘நீ மட்டும் அவளை தப்பா நினைச்சி அவள ஒதுக்கி வைக்கல’ என்று கேட்டது.
‘ஆமா… சரி தான்… என்னை மாறியே தான் பிரியாவும் நினைச்சி இருக்கா. முதல்ல இந்த பையனை பத்தி இன்னும் கொஞ்சம் விசாரிச்சிட்டு அப்பறம் என்ன பண்ணுறதுனு முடிவு பண்ணலாம்’ என்று மனதுடன் பேசி ஒரு தீர்வு கண்டு விட்டான் சரவணா.
“சரிங்க தேவ். நான் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு. அதுக்கு முன்ன வீட்டுல இருக்கவங்க கிட்ட கொஞ்சம் பேசி தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கு. அது எல்லாம் முடிஞ்சதும் நம்ம இத பத்தி பேசலாம்” என்று தேவ்வை நோக்கி சொன்னான் சரவணா.
“ம்ம்… சரிங்க” – தேவ்.
“இது பிரியாவுக்கு தெரியுமா??” என்று சரவணா கேட்டு கொண்டு இருக்கும் போதே கீர்த்தியிடம் இருந்து வீடியோ கால் வந்தது. தேவ்வும் ஆர் கோளாரில் அட்டன் செய்து விட்டான்.
“ஹாய் கீர்த்து” முகம் முழுவதும் புன்னகையுடன் தேவ் சொல்ல, சரவணாவும் சுந்தரும் தலையில் கை வைத்து கொண்டு குனிந்து கொண்டனர்.
“என்ன சார் போன காரியம் உங்களுக்கு சாதகமா நடந்துடுச்சி போல… அதான் புன்னகை மன்னனா காட்சி கொடுக்கறீங்களோ!!” என்று கீர்த்தியும் அவனது சிரிப்பை கண்ணாடி போல் பிரதிபலித்து கேட்டாள்.
“கிட்டதட்ட முடிஞ்ச மாறி தான்” என்று இன்னும் புன்னகை மாறாமலே கூறி, “இப்ப நான் எங்க இருக்கேன் கண்டுபுடி பாக்கலாம்??” என்று சின்ன குறும்பு குரலில் கீர்த்தியிடம் கேட்டான் தேவ்.
“இந்த கால்க்கு முன்னாடி வரை தெரியாம இருந்து இருக்கும். இப்ப தெரிஞ்சிடும் மாமா” என்று சுந்தர் சரவாணாவிடம் சொல்ல, சரவணாவும் தேவ்வை ஒரு பார்வை பார்த்து விட்டு, சுந்தரிடம் ‘ஆமா’ என்பதை போல தலையசைத்து, “எல்லாம் அவன் செயல்” என்று தலையை வானத்தை நோக்கி உயர்த்தியவாறு கூறினான்.
இங்க காலில் கீர்த்தி, “எங்க இருக்க??. எதோ வேல சம்மந்தமானு சொன்னயே அங்க தான…” என்று கீர்த்தி சொல்லி கொண்டே, இத்தனை நேரம் பார்த்து கொண்டு இருந்த தேவ்வின் விட்டு சுற்று புறத்தை சிறிது உற்று பார்த்தாள்.
சில வினாடிகளிலே அது எந்த இடம் என்று கண்டு பிடித்து விட்டாள். அங்கயே பிறந்து வளர்ந்து வால் இல்லா வாணரமாய் தனது கூட்டத்துடன் சுற்றி திரிந்த இடங்களில் அதுவும் ஒன்று தான் என்று.
“தேவ்… நீ… நீங்க எங்க ஊருலயா இருக்கீங்க??” என்று லேசான படபடப்புடன் கேட்டாள் கீர்த்தி.
“ஆமா” என்றவன் அடுத்த கேள்வியாக, “யார் கூட இருக்கேனு சொல்லு பாக்கலாம்??” என்று கேட்டான் அவளை ஆச்சரியப்படுத்திடும் ஆனந்தப்படுத்திடும் நோக்கத்துடன்.
சரவணா, “பாவம் இந்த தம்பிக்கு அடுத்து என்ன நடக்கும்னு தெரில. எவ்வளவு ஆர்வமா சொல்லிட்டு இருக்கு பாரு” என்று சுந்தரிடம் சொல்லி கொண்டு இருந்தான்.
“யாரு கூட??” என்று சத்தமாக கேட்டாள். சத்தியமாக அந்த குரலில் மகிழ்ச்சியும் இல்லை… படபடப்பும் இல்லை… ஆர்வமும் இல்லை… அது தேவ்வுக்கு புரியவும் இல்லை. அவன் தான் குஷி மூடில் இருக்கிறானே…
“அங்க பாரு” என்று சரவணா மற்றும் சுந்தர் பக்கம் தனது அலைபேசியை திரும்பி காட்டினான். அவர்கள் இருவரும் அவளை பார்த்து கையை அசைத்து “ஹாய் பிரியா” என்றனர்.
“மாமா… அண்ணா…” – கீர்த்தி.
“பிரியா மா… எப்படி இருக்க??” – சுந்தர்.
“நல்லா இருக்கேன் னே. நீங்க?? அண்ணி தம்பி எல்லாம் எப்படி இருக்காங்க??” – கீர்த்தி.
“எல்லாம் நல்லா இருக்காங்க மா. நீ இங்க இருந்தே எல்லாம் சொல்லி புரிய வச்சி இருக்கலாம்மா. இவன்கிட்ட சொல்ல புடிக்கலைனாலும்” என்று சரவணாவை காட்டி சொல்லி விட்டு தன்னை காட்டி, “என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல” என்று ஆதங்கமாக சொன்னான்.
“இல்லனே… எனக்கு அப்ப என்ன பண்ணறதுனே தெரில. அதான்” என்று சமாளிப்பாக சொல்லி விட்டு அடுத்து தனது மாமனின் முகம் பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.
“மாமா… எப்படி இருக்க?? தமிழ் எப்படி இருக்கு?? அம்மா அப்பா பாட்டி பெரிய மாமா அத்த அச்சு சஞ்சு எல்லாம் எப்படி இருக்காங்க??” என்று கண்ணில் சிறிது நீர் படர்ந்தவாறே கேட்டாள்.
“ம்ம்… எல்லாம் நல்லா இருக்காங்க…” என்று சொன்ன சரவணா மெதுவாக தயங்கி தயங்கி, “ரொம்ப சாரி குட்டி. உன்ன தப்பா நினைச்சிட்டேன்” என்று சொல்லி நடந்தவற்றை கூறினான்.
“தேவ் வந்து எல்லாம் சொன்னப்பறம் தான் எனக்கு எல்லாம் தெரிஞ்சது. உன்னையும் புரிஞ்சது. மறுபடியும் மன்னிச்சிக்க குட்டி” என்று சொன்னான் சரவணா.
“என்ன மாமா நீ??. நானும் அப்படி தான உன்ன தப்பா நினைச்சேன். என்னையும் மன்னிச்சிக்க மாமா” என்று அவளும் சொல்ல, அவர்கள் மாறி மாறி பேசி கொண்டு இருந்தனர்.
தேவ் பாவமாக நானும் இங்க தான் இருக்கேன். என்கிட்டயும் பேசுங்க என்று சொல்ல முடியாமல் உம்மென்று அமர்ந்து இருந்தான். எல்லாம் வெளிபுறத்துக்கு தான். உள்ளே மகிழ்ச்சியாக தான இருந்தான்.
சிறிது நேரம் இவர்கள் மூவரின் பாச அலப்பறைகள் முடிய சரவணா, “சரி குட்டி… தேவ்கிட்ட போன் கொடுக்கறேன்” என்று சொல்லி அலைபேசியை கைமாற்றினான்.
தேவ் வாங்கி ஆசையாக, “கீர்த்து” என்க, அவள், அவன் முகத்தை கூட பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.
தேவ் புரியாமல் குழப்பமாக அலைப்பேசியை பார்க்க, இருவரும் அவனை பாவமாக பார்த்தனர்.
“என்னாச்சி தேவ்??” – சுந்தர் கேட்டான்.
“கட் ஆகிடுச்சி போல. நான் அப்பறம் பேசிக்கறேன்” தேவ் அது தான் உண்மை என்று அவர்களுடன் சேர்த்து தனக்கும் சொல்லி கொண்டான்.
“அது கட் ஆகல மாப்பிள்ள. கட் பண்ணிட்டா” சுந்தர் விவரிக்க, “என்ன?? ஏன்??” என்று புரியாமல் தேவ் கேட்டான் அவனை பார்த்து.
“அவ தான் உன் மேல கோவமா இருக்கா இல்ல. அது தான்” என்று அவன் கேள்விக்கான பதில் சரவணாவிடம் இருந்து வந்தது.
“ஆனால் ஏன் கோவம்??. நான் என்ன பண்ணேன்” என்று தேவ் மீண்டும் புரியாமல் தான் கேட்டான்.
“அது அவளே வந்து சொல்லுவா” என்று சுந்தர் சொல்ல, அவனை தொடர்ந்து சரவணா, “அவ வந்து திட்டுனா அது எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. திட்டிட்டு அத எல்லாம் மறந்துடுவா” என்று சொல்லி விட்டு இருவரும் சென்று விட்டனர்.
போகும் வழியிலே சரவணா, தனது தோழன் ஒருவனுக்கு அழைத்து தேவ்வை பற்றியும் அவனது குடும்பத்தை பற்றியும் விசாரித்து சொல்லுமாறு கேட்டு கொண்டான்.
சுந்தர், “இந்த தேவ் பயல பாத்த நல்ல பய மாறி தான் மாமா தெரியுது. எதுக்கும் அவன் விசாரிச்சிட்டு சொல்லட்டும். அப்பறம் பாத்துக்கலாம்” என்று தனது தோழனிடம் சொன்னான்.
“எனக்கும் அவ நல்லவனா தான் தெரியுது. பாப்போம்” என்று பேசி கொண்டே மீதி தூரத்தை கடந்து வீட்டுக்கு சென்றனர்.
அங்கே தேவ், “நான் என்னடா பண்ணேன்” என்று வடிவேலுவின், ‘நான் எதுக்குடா சரிபட்டு வர மாட்டேன்’ என்ற பாவப்பட்ட ரியாக்ஷனுடன் அமர்ந்து இருந்தான்.
அவனுக்கு நேர் மாறாக அங்கே கீர்த்தி, “அவன் எப்படி அப்படி பண்ணலாம்” என்று கவுண்டமணியின், “அவன் ஏன்டா என்ன பாத்து அப்படி ஒரு கேள்வி கேட்டான்” என்ற கோப ரியாக்ஷனுடன் நடந்து கொண்டு இருந்தாள்.
கொடுப்பாள்…

Advertisement