Advertisement

இடம் 23
சரவண வேல் சொல்லி இருந்த இடத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்பே வந்து அமர்ந்து இருந்தான் தேவ்.
தேவ் வந்து அமர்ந்த சில நொடிகளில் சரவணா மற்றும் சுந்தர் தனி தனி வண்டிகளில் இரு வேறு திசையில் இருந்து வந்தனர். இருவரும் வண்டியை நிறுத்தி விட்டு, தேவ் அருகில் வந்து முதல் முறை பார்ப்பதால், “நீங்க தேவாமிர்தன்??” என்று கேட்டு உறுதி படுத்தி கொண்டனர்.
“நான் தான் சரவண வேல். இது என் நண்பன் சுந்தர்” என்று அறிமுகப்படுத்தி கொண்டான்.
அதன் பின் மூவரும் அங்கு இருந்த கல் மேடையில் அமர்ந்தனர். யார் பேச்சை ஆரம்பிப்பது என்று புரியாமல் சில நிமிடங்கள் அமைதியில் கழிந்தது.
மீண்டும் சரவணாவே, “சொல்லுங்க… ஏதோ முக்கியமான செய்தியை பத்தி பேசனும் சொன்னீங்க??” என்று கேட்டான்.
“இந்த நீங்க வாங்க போங்க எல்லாம் வேண்டாமே. நான் உங்களை விட சின்ன பையன் தான். என்னை தேவ்னே கூப்பிடுங்க” என்று சொல்லி அதற்கு சரவணாவின் சிரிப்புடன் கூடிய ஒப்புதலான தலையசைப்பை பெற்ற பின், “கீர்த்தியை பத்தி பேச தான் வந்தேன்” என்றான் தேவ்.
“ம்ம்ம்… சொல்லுங்க பிரியாவை பத்தி என்ன??” என்று அமைதியாய் கேட்டான் சரவணா.
“வந்து… நீங்க ஏன் கீர்த்தியை கண்டுக்கவே இல்ல. இப்ப அவ எப்படி இருக்கானு ஒன்னும் தெரிஞ்சிக்கல” என்று கேட்டான்.
“யார் சொன்னா?? இப்ப பிரியா இந்த கம்பெனில வேல பாக்குறா. இந்த இடத்தில தங்கி இருக்கா. அவ ப்ரெண்ட் பொண்ணுக்கு கூட இப்ப கல்யாணம் ஆக போகுது. அதனால புதுசா யாரையாவது அந்த ரூம்ல தங்க வைக்க தேடிட்டு இருக்காங்க” என்று தற்போது நடக்கும் காரியம் வரைக்கும் சொன்னான் சரவணா.
இதை சத்தியமாக தேவ் எதிர்பார்க்கவில்லை. கீர்த்தியை பற்றி என்றளவில் அவர் கணித்தது அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் இவ்வளவு விசயம் தெரிந்து இருக்கும் என்று எண்ணவில்லை என்பதை அவன் முக மாற்றத்தில் இருந்தே புரிந்து கொண்டார்கள்.
நானும் இப்படி தான் முத முத கேட்டுட்டு ஷாக் ஆனேன் என்று சுந்தர் மனதில் தேவ்வை பார்த்து சொல்லி கொண்டான்.
“அப்போ என்ன பத்தி தெரியுமா??” தயக்கமாகவே கேட்டான் தேவ்.
“ம்ம்ம்…. தெரியும். என்ன நான ப்ரெண்ட்னு நினைச்சேன். ஆனா இப்ப பாத்தா அப்படி இல்லனு தோணுது” வார்த்தைகள் சந்தேகமானதாக இருந்ததாலும் குரல் சரியாய் தான் சொல்கிறேன் என்று திடமாக ஒலித்தது.
“ம்ம்ம்” என்று தலையசைத்தவன், “எனக்கு கீர்த்தியை புடிச்சி இருக்கு. அவளுக்கும் தான். ஆனா எங்க கல்யாணம் நடக்காது. வீட்டுல யாரும் ஒத்துக்க மாட்டாங்க… முக்கியமா எங்க மாமானு சொன்னா!!. அவரு ஒத்துக்கிட்டா தான நம்ம கல்யாணம்ன்னா” என்றான் தேவ்.
‘என்ன கீர்த்திக்கும் புடிச்சி இருக்கா??. எப்படி?. சரி… அப்பயும் ஏன் வீட்டுல ஒத்துக்க மாட்டாங்கனு சொன்னா?. அதிலயும் நான்??. நான் ஏன் ஒத்துக்க மாட்டேன். என்ன பத்தி அவளுக்கு தெரியாதா??. அவ மகிழ்ச்சி தான எங்களுக்கு எல்லாம் முக்கியம். ஒருவேளை இப்படி இருக்குமோ முதல்ல ஒருத்தரை புடிச்சி இருக்கு சொல்லிட்டு இப்ப வேற ஒருத்தங்கள புடிச்சி இருக்குனு சொல்லறதாலயோ!!?’ என்று கொண்டு இருந்தான் சரவணா.
அவன் அமைதியை சிறிது நேரம் பொறுத்து கொண்ட தேவ் மீண்டும் அவனே, “நீங்க யோசிக்கறது புரியுது. நீங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியும் அவ உங்களை மறுத்தது உங்களுக்கு வருத்தமா தான் இருக்கும். ஆனா அவ நிலைமையில் இருந்து கொஞ்சம் யோசிச்சி பாத்த அவ பக்கம் இருக்க நியாயம் புரியும்” என்று மேலும் எடுத்து சொன்னான்.
சுந்தர் வரும் போதே எதுவும் பேச கூடாது. அவர்களை பேசுவதை கவனிக்க மட்டுமே வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வந்து இருந்தான். அதை அருமையாக கடைப்பிடித்தும் கொண்டு இருந்தான். ஆனால் இப்போது அது தகர்ந்தது.
“என்ன சொல்லறீங்க தேவ்?? எனக்கு புரியல!!. பிரியா மறுத்துட்டாளா??” என்று கேட்டான் வேக வேகமாக சரவணாவிற்கு முன்பே.
அவர்களை புரியாமல் பார்த்த தேவ், “ஆமா” என்று கூறி கொண்டே தலையை ஆட்டினான்.
“இல்லயே பிரியா சம்மதிச்சிட்டா. ஆனா சரவணா தான் சம்மதிக்கல. அதான் தமிழ கட்டி வச்சாங்க” என்று சுந்தர் சொல்ல, “இல்ல… கீர்த்தி என்கிட்ட என்ன சொன்னானா… மாமா சம்மதிச்சிட்டாங்கனு எல்லாரும் என்கிட்ட பேச வந்தாங்க. நான் முடியாதுனு சொல்லிட்டேன். அது தான் என் மேல எல்லாருக்கும் கோவம். மாமா கூட என்ன புரிஞ்சிக்கலனு சொன்னா” என்று தேவ் சொன்னான்.
“இதுல ஏதோ பெரிய குழப்பம் இருக்குனு நினைக்கறேன்” சுந்தர் யோசனையுடன் சொன்னான்.
தேவ் இன்னும் அறியா குழந்தை புரியா பாலகனாய் தான் இருந்தான். அவனுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை அதனால் தான்.
“எனக்கு புரியல.. இதுல என்ன குழப்பம்??. ஆமா நீங்க என்ன சொன்னீங்க??. இவரு சம்மதிக்கலனா.. ஆனா கீர்த்தி…” என்று இழுத்து அவனும் குழப்பத்தை புரிந்து கொண்டான்.
இப்போது எல்லாதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், “நீங்க சொல்லுங்க… என்ன நடந்ததுனு உங்க பக்கம் இருந்து”  என்று தேவ் கேட்டான் சரவணாவை நோக்கி.
“என் கல்யாணத்துக்கு நான் ரெடி ஆகிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு ஒரே சலசலப்பு சத்தம். என்னனு பாக்க வெளிய போனேன்” என்று சொல்லி கொண்டு இருந்தான் சரவணா.
சரவணா தனது அறையில் இருந்து வெளியே வர அங்கே அவனது தாய் மற்றும் அண்ணன் நின்று கொண்டு இருந்தனர்.
“என்ன மா?? என்ன ணா?? என்ன சத்தம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு??” என்று கேட்டான்.
“அது வந்து…” சங்கர் இழுக்க, “நாசமா போறவ… இவ்ளோ நாள் அமைதியா இருந்துட்டு இப்ப ஓடி போய்ட்டாலாம் கன்னு” என்று சித்தம்மாள் பட்டென்று செய்தியை உரைத்தார்.
ஒரு நிமிடம் தன் காது அதன் பணியை சரியாய் தான் செய்கிறதா என்ற சந்தேகம் கொண்டான் சரவணா. ஏனோ தன் கல்யாணம் நின்று விட்டது என்பதை அவன் மனம் நம்பவில்லை.
முதலில் பவித்ராவின் தொலைபேசி எண் இவனுக்கு கிடைத்த போது, அவளுக்கு பேச அழைத்தான். அவள் இவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தாள். இவன் கேட்பதும் பொதுவான நல விசாரிப்புகளாகவே இருந்தது. இவனை பற்றி தெரிந்து கொள்ள அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்போது அது அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. கூச்ச சுபாவம் உள்ளவர்கள் போல… நாட்கள் சென்றால் சரி ஆகி விடும் என்று எண்ணி, தன் கல்யாணத்தை பற்றி சிந்தனையை திரும்பினான்.
ஆனால் அப்போதே யோசித்து, பேசி தீர்த்து இருக்க வேண்டுமோ என்று தற்போது எண்ணினான்.
எல்லோரும் போல இவனும் தன் கல்யாண வாழ்வை எண்ணி பல கற்பனைகள் வளர்த்து வைத்து இருந்தான். எல்லாம் பவித்ராவுடன் தான். அது இல்லை என்பதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.
சிலர் இவனிடமே வந்து, பவித்ராவை பற்றி திட்டி இவனை நல்ல விதமாக கூட பேச… அது கூட அவன் காதில் விழவில்லை. அமைதியாய் மண மகன் அறையில் சென்று அமர்ந்து விட்டான்.
அறையில் இருந்த நாற்காலியில் தலையை பின்னால் சாய்த்து கொண்டு கண்களை மூடி கொண்டு நிலைமையை கிரகிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான். வெளியே நடக்கும் பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தெள்ள தெளிவாக அவன் காதுகளில் விழுந்து கொண்டு இருந்தது. ஒரு புறம் சரவணா பற்றி நல்லவையாகவும், ஒரு புறம் அவனை பற்றியே தூற்றியும் பேசி கொண்டு இருந்தனர்.
சில மணி நேரங்கள் கடக்க, ஒரு முடிவு எடுத்து விட்டான். இத்தனை பேச்சுகளுக்கும் பின் அவனுக்கு திருமணத்தில் இருந்த ஆசையே போய் விட்டது.
சுந்தர் அவன் தற்போது என்ன யோசித்து கொண்டு இருப்பான் என்பதை கண்டு கொண்டான். சிறு வயது முதலே நம்முடன் இருக்கும் தோழமையின் தனி திறமை அது.
தான் கண்டு கொண்டதை சங்கரிடம் சென்று, “மாமா… எனக்கு என்னவோ சரவணா இனி கல்யாணமே வேண்டாம்னு முடிவு எடுத்துடுவானோனு தோணுது மாமா” என்று சொன்னான்.
அதை கேட்ட சில வினாடி இடைவெளியில் தனது அன்னை தனது முதல், இரண்டாவது அக்காவின் கணவர்கள் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களிடம் பேசி, பிரியாவை சரவணாவுக்கு முடிப்பது என்று முடிவெடுத்தனர். அதன்படி ஒரு குழு பிரியாவிடமும், மற்றொரு குழு சரவணாவிடமும் சென்றது.
சங்கர், “டேய் சரவணா… என்ன யோசிட்டு இருக்க??” என்று கேட்க, “ஒன்னும் பெருசா இல்ல” என்று பதில் சொன்னான்.
“சரிடா.. நாங்க எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு பண்ணி இருக்கோம். உனக்கும் நம்ம பிரியாவுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு” என்று சொன்னான் சங்கர்.
“என்ன??. என்ன டா லூசு தனமா பேசிட்டு இருக்க?. பிரியாவ போய் நான் எப்படி கல்யாணம் பண்ண முடியும். அறிவு இருக்கா??” என்று கோபமாக கேட்டான்.
“நீ புரியாம பேசாதடா… பிரியா கூட கல்யாணத்துக்கு சரி சொல்லிட்டா. இப்ப மட்டும் கல்யாணம் நடக்கல. யார் யார் என்ன பேசுவாங்கனு சொல்ல முடியாது. உனக்கு இனி பொண்ணு பாத்தாலும் நம்மள தான் குறை சொல்லுவாங்க. அதனால கம்முனு வந்து பிரியா கழுத்துல தாலி கட்டு” என்று சிறிது கோபத்துடன் கூறினான் சங்கர்.
சுந்தர் கூட, “ஆமாடா மாமா. ஒத்துக்கோ” என்று சொன்னான்.
“டேய் நீயும் அவங்க கூட சேர்ந்துட்டு இப்படி பேசி தொலயாதடா” என்று மற்றவர்களிடம் காட்ட முடியாத கோபத்தை சுந்தரிடம் காட்டினான்.
“நான் தூக்கி வளத்த புள்ள. பிரியாவ எனக்கு கட்டி வக்கிறத பத்தி இனி யாரும் பேச கூடாது. புரியுதா??” என்று கோபத்துடன் தனது நிலைப்பாட்டை திடமாக கூறினான்.
பிறகு சிறிது நேரத்தில், பிரியாவின் அப்பா சண்முக சுந்தரம் வந்து, “டேய் மாப்பிள்ள” என்று அழைத்தார்.
“மாமா… பிரியாவ இதுல இழுக்காம என்ன வேணா பேசுங்க மாமா” என்று சொன்னான் சரவணா தளர்வான குரலில்.
“இல்ல மாப்பிள்ள. அத பத்தி இல்ல. தமிழ உனக்கு கட்டிக்க சம்மதமா??. மத்த எல்லாருக்கும் சம்மதமாம்” என்று கேட்டார்.
சிறிது நேரம் அவன் யோசனையில் இருக்க, “டேய் மாப்பிள இங்க பாருடா… உங்க அக்கா ஆத்தா எல்லாம் உனக்கு இன்னிக்கே கல்யாணம் நடக்கனும்னு இருக்காங்க. ஒன்னு பிரியா இல்லனா தமிழ்… நீயே முடிவு பண்ணிக்கோ” என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார்.
வெளியே வந்த அவர் மற்றவர்களிடம், “அவன் தமிழ கட்டிக்க சம்மதம் சொல்லிடுவான். போய் அடுத்த வேலைய பாருங்க” என்று சொன்னார், அவனை பற்றி அறிந்த படியால்.
உள்ளே சரவணா, தனது சண்முக மாமாவை பற்றி நன்கு அறிந்து இருந்ததால், கண்டிப்பாக இருவரில் ஒருவரை தனக்கு கட்டி வைத்து விடுவார் என்று. அதனால் தான் தூக்கி வளர்த்த பிள்ளைக்கு, தமிழ் எவ்வளவோ பரவாயில்லை என்று அவனது எண்ணம் சென்றது.
சில நிமிடங்களுக்கு பிறகு சுந்தர் வந்து, “சித்தப்பா… சரவணா தமிழ கட்டிக்க சம்மதம் சொல்லிட்டான்” என்றான்.
அதன் பின் என்ன?? மங்கல வாத்தியங்கள் முழங்க, தமிழின் கழுத்தில் தாலியை கட்டினான்.
கொடுப்பாள்…

Advertisement