Advertisement

இடம் 21

தேவ்வின் தாயையும் அத்தையும் சந்தித்து வந்ததில் இருந்து கீர்த்தி அவனிடம் சொல்லி, அவனது தாயிடம் கீர்த்தி – தேவ்வின் திருமணம் சாத்தியமில்லை என்று சொல்லுமாறு கூற வேண்டும் என்று இருந்தாள். ஆனால் அவனிடம் அவளால் அதை கூற தான் முடியவில்லை. ஏனென்றால் அவன் தான் ஒரு வாரத்தில் கீர்த்தியின் ஊருக்கு செல்ல இருப்பதால் பயங்கர பிஸியாக இருந்தேன்.

உதாரணமாக ஒரு தொலைபேசி உரையாடல்.

“தேவ்” – கீர்த்தி.

“சொல்லுடா கீர்த்து” – தேவ்.

“சாப்டீங்களா??” – கீர்த்தி.

“ஆன்… அதெல்லாம். நீ சாப்டயா டா??” – தேவ்.

“நானும் சாப்பிட்டேன்” – கீர்த்தி.

“சரி. கீர்த்து என்ன பண்ணுறாங்க??” – தேவ்.

“ஒன்னும் பண்ணல. சும்மா தான் இருக்கா!!!. நீங்க என்ன பண்ணுறீங்க தேவ்??” – கீர்த்தி.

“கொஞ்சம் வேல… அதான் பாத்துட்டு இருக்கேன்” – தேவ்.

“ஓஓஓ… அப்ப ப்ரீ ஆகிட்டு பேசறீங்களா??. ரொம்ப பிஸியா?” – கீர்த்தி.

“பரவாயில்ல நீ பேசுடா. அடுத்த வாரம் ஊருக்கு போறேன்ல. அதான் இதெல்லாம் முடிச்சிடலாம்னு சீக்கிரமா பண்ணிட்டு இருக்கேன். வெயிட் பண்ணி பேசனும்னா நீ இரண்டு வாரம் கழிச்சி தான் பேச முடியும். பரவாயில்லையா??” – தேவ்.

“சரி… அப்படி என்ன அவசரமான வேல அது… அடுத்த வாரத்துல பண்ண வேண்டி இருக்கு. இவ்ளோ சீக்கிரமா எல்லா வேலையையும் முடிக்கற அளவுக்கு??” – கீர்த்தி.

“அது ரொம்ப முக்கியமான வேல… முடிஞ்சதும் சொல்லுறேன். உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல போறேன்” – தேவ்.

தேவ் அவ்வாறு சொன்னது மகிழ்வாய் இருந்தாலும், எதை பற்றி பேச இந்த அழைப்பு என்பது நினைவு வந்து, அவளை மகிழ்ச்சிக்கு 144 தடை உத்தரவு விதித்தது. அதற்கு பணிந்து அவளது மகிழ்ச்சியும் வெளி வராமல் உள்ளேயே அடங்கி விட்டது.

“ம்ம்… சரி” என்றவள், மேலும் தொடர்ந்து, “வந்து… தேவ் உங்க அம்மா உங்ககிட்ட என்ன பத்தி எதுனா பேசுனாங்களா??” என்று கேட்டாள்.

அவனிடம் இருந்து எந்த மறுமொழியும் வரவில்லை.

அதனால் கீர்த்தியே தொடர்ந்து, “அவங்க நினைக்கிறது நடக்காதுனு அவங்ககிட்ட சொல்லறீங்களா தேவ்!!!. அவங்க ஆசையை வளத்துக்க போறாங்க” என்று கூறினாள் கீர்த்தி.

அப்போதும் அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

“தேவ்…” ஒரு சில நொடிகள் இடைவெளி விட்டு மீண்டும் “தேவ்” என்று அழைத்தாள் கீர்த்தி.

தனது காதில் இருந்து அலைபேசியை எடுத்து பார்த்தாள்… 02:12 என்று இருந்த நொடிகள் அதிகரித்து கால் இன்னும் தொடர்பில் இருப்பதை உறுதி செய்தது… கட் ஆகவில்லை. பிறகு ஏன் அவன் பேசவில்லை. நான் சொன்னது அவனுக்கு பிடிக்கவில்லையோ!!என்று எண்ணி கொண்டு மீண்டும் அவனது பெயரை அழைத்தாள்.

“ஆன்… ஆன்… சொல்லுடா கீர்த்து. ஒன்னு கேட்டாங்க அதுக்கு பதில் அனுப்பிட்டு இருந்தேன். என்ன சொல்லிட்டு இருந்த??” என்று கேட்டான்.

“ஒன்னும் இல்ல தேவ். நீங்க உங்க வேலய பாருங்க. நான் அப்பறம் பேசறேன்” என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தாள்.

இவ்வாறு தான் அந்த ஒரு வாரமும் சென்றது. அவனிடம் மற்ற செயல்களை பேசும் நன்றாக இருக்கும் அவன்… கல்யாணத்தை பற்றி பேசும் போது மட்டும் வேலையாகி விடுவான்.

அதை அவன் வேண்டும் என்றே செய்கிறானா?? இல்லை உண்மையில் வேலை வந்து விடுகிறதா?? என்று அவளுக்கு புரியவில்லை.

ஆனால் எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு. கீர்த்தியிடம் பொய்யான வாக்குறுதி… அதாவது தனது தாயிடம் பேசி கல்யாணம் பற்றிய பேச்சை நிறுத்துகிறேன் என்று சும்மா கூட சொல்ல விருப்பம் இல்லாமல் தான் அவன் தவிர்க்கிறான் என்று… பார்ப்போம்.

இன்று…

தேவ் ஊருக்கு சென்ற பின், கீர்த்தி தன் அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்தாள்.

புதிதாக வேலைக்கு எடுத்த இரண்டு பேரில் ஒருவருக்கு அவள் தான் மென்டர். என்ன செய்ய வேண்டும்?? என்ன செய்ய கூடாது?? என்று சொல்லி கொடுத்து விட்டு, ஒரு மிக சிறிய டாஸ்க்கையும் அசைன் செய்தாள்.

மதிய உணவு இடைவேளையின் போது, மிதுன், கவி மற்றும் கீர்த்தி ஒரு மேடையில் அமர்ந்து உண்டு கொண்டு இருந்தனர்.

மித்து, “கல்யாணத்துக்கு இன்னும் மூணு வாரம் தான் இருக்கு. எப்ப இருந்து லீவ் போடற??” என்று கேட்டான்.

கவி, “கல்யாணத்துக்கு ஒரு மூணு முன்னாடி இருந்து, கல்யாணம் முடிஞ்சி ஒரு ஒரு வாரம் லீவ் போடறேன். கிட்டதட்ட மூணு வாரம் வரும்” என்று கூறினாள்.

“அடேசாமி… மூணு வாரம்லாம் லீவ் போட விட்டுட்டாங்களா உங்க டீம்ல!!” என்று ஆச்சரியமாக கேட்டாள் கீர்த்தி.

“ம்ம்… கொடுத்துட்டாங்க” என்று தனது டீமை நினைத்து அல்ப்ப பெருமைப்பட்டு கொண்டு ஆமோதித்தாள் கவி.

“ஏய் கவி!!! லாங் லீவ் எடுத்தா சனி ஞாயிறு கூட லீவ் கணக்கில் எடுத்துப்பாங்க. அதனால முடிஞ்சா கல்யாணம் முடிஞ்சி வர ஒரு நாள் வெள்ளி கிழமை போல வந்துட்டு போ கவி” என்று சொன்னான் மித்து.

“ஓஓ… பாக்கறேன் மித்து. முடிஞ்சா வந்துட்டு போறேன்” என்றாள் கவி.

“ஏய் கீரி குட்டி!!. கவி ரூம் வேக்கேட் பண்ணிட்டா நீ மட்டும் தான. அவ கிளம்புன அப்பறம் நீ தான் ரொம்ப கடினப்படனும்ல சோத்துக்கு” கிண்டலான சிரிப்புடன் கேட்டான் மித்து.

“ம்ம்ம்… அதுக்கு நான் இனிமே காலைல விரதம் இருக்கலாம்னு நினைக்கறேன். எனக்கு நல்லா சமைக்க தெரிஞ்ச ஹவுஸ் மேட்டா வரணும்னு. அப்பறம் மதியமும் நைட்டும் இங்க ஆபிஸ் கேன்டீன்லயே சாப்பிட்டு போய்டலாம் பாக்கறேன். ஒருத்திக்குனு மட்டும் என்ன சமைக்கறது??” சமாளிப்பாக கீர்த்தி.

“சமைக்க தெரியாததுக்கு எப்படி சமாளிக்குது பாரு…” கவி சொல்ல, “போடு” என்று மித்துவும் கவியும் ஹை ஃபை செய்தனர்.

கீர்த்தி அவர்களை பார்த்து முறைக்க, “சரி சரி… கிண்டல்லாம் அப்பறம்… யார்னா ரூமுக்கு வரேன் சொல்லி இருக்காங்களா??. முடிஞ்ச வரை கவி கிளம்பறத்துக்குள்ள வர மாறி இருந்தா நல்லா இருக்கும். நீ தனியா இருக்கனும் இல்லனா” என்று கேட்டான் கீர்த்தியிடம்.

“இன்னிக்கு தான் நம்ம ஆபிஸ் ப்ளாக்ல போடனும் மித்து. பாக்கலாம். கவிக்கா போகும் போது அவங்க அட்வான்ஸ் அமொன்ட் கொடுத்து அனுப்பனும். யாருனா வந்துட்டாங்கனா அவங்க கிட்ட வாங்கி கவிக்கா கிட்ட அப்பயே கொடுத்துடலாம். இல்லனா நா கொடுத்துட்டு அப்பறம் வர புது ஹவுஸ் மேட் கிட்ட வாங்கிக்கலாம்” என்று சொன்னாள் கீர்த்தி.

“ஒன்னும் அவசரம் இல்ல கீர்த்திமா. நான் லீவ்லாம் முடிஞ்சி வந்து கூட வாங்கிக்கறேன். அதுக்குன்னு நீ அவசர படாத நல்லவங்களா பாத்து வச்சிக்கலாம். லேட் ஆனாலும் பரவாயில்ல.  அது வரை நம்ம பக்கத்து வீட்டுல எங்க டீம் ஒரு பொண்ணு இருக்கு. அவங்க கூட இருந்துக்கோ நைட் மட்டும்” என்று சொன்னாள் கவி.

“ம்ம்ம்… சரிக்கா பாக்கறேன்” என்று ஒப்பு கொண்டாள் கீர்த்தி.

“நம்ம டீம்க்கு புதுசா ஒரு ஜூனியர் பொண்ணு வந்து இருக்குல்ல… அந்த பொண்ணு எங்க ஸ்டே பண்ணி இருக்காம்??” – மித்து.

“அந்த பொண்ணு நம்ம ஆபிஸ் பக்கத்துலயே ஒரு பிஜீல. ஏன் கேக்கற??” – கீர்த்தி.

“அந்த பொண்ண உன் வீட்டுக்கு வர சொல்லலாம்னு தான்” – மித்து.

“ஹாஹா… வாய்ப்பில்ல ராஜா” கவி தான் சிரிப்புடன்.

“ஆமா மித்து. வர மாட்டாங்க. நம்ம ப்ளாக்லயே போடுவோம். வரவங்க வரட்டும்” என்றாள் கீர்த்தி.

“ஏன் வர மாட்டாங்க??” குழப்பமாக கேட்டான் மித்து.

“அது அப்படி தான். வர மாட்டாங்கனா வர மாட்டாங்க தான்” மீண்டும் கீர்த்தி.

“ஏன்??” உண்மையிலே புரியாமல் தான் கேட்டான் மித்து.

“உனக்கு அதெல்லாம் புரியாது காமாட்சி??” சிரிப்புடன் கவி விசுவின் வசனத்தை அடித்து விட, கீர்த்தி பெரிதாக சிரித்தாள்.

“ஏய்!! என்னங்கடி… என்னயே கிண்டல் பண்ணி சிரிக்கறீங்களா!!” என்று அவர்கள் இருவரின் தலையிலும் கொட்ட, இவர்கள் அவனை கிள்ள என்று அந்த நாளை கழித்தனர்.

மாலை கீர்த்தி தேவ்வுக்கு அழைக்க அவன் எடுக்கவில்லை. அவன் தான் டிராவலில் இருந்தான். இரண்டு முறை அழைத்து பார்த்து விட்டு, விட்டு விட்டாள்.

இங்கு கீர்த்தியின் வீட்டில்…

சரவண வேலின் வீட்டில் நுழைந்த தேவ், அங்கே ஈர தலையுடன் போராடி கொண்டு இருந்த தமிழரசியை தான் முதலில் பார்த்தான். பார்த்ததும் அவளது வயது மற்றும் கழுத்தில் இருக்கும் தாலியை கொண்டு புரிந்து கொண்டான் அவள் யாரென்று. அவள் தான் தமிழரசி என்றும், சரவண வேலின் மனைவி என்றும்.

“வணக்கம் சிஸ்டர்” – தேவ்.

“வணக்கம். வாங்க..” என்று சொல்லி அங்கு இருந்த திண்ணையில் மர சொல்லி விட்டு உள்ளே சென்று ஒரு சொம்பில் நீர் எடுத்து வந்து கொடுத்தாள். சம்பர்தாயத்திற்காக அதை வாங்கி ஒரு முழுங்கு குடித்தான்.

“நீங்க?? யாரை பாக்க வந்து இருக்கீங்க??” என்று கேட்டாள் தமிழ்.

“நான் தேவாமிர்தன்ங்க. இங்க சரவண வேல்னு…” என்று இழுக்க, “ஆமாங்க. இந்த வீட்டுல தான் இருக்காரு” என்று சொன்னாள்.

அவள் தன் கணவன் என்று சொல்லாததை குறித்து கொண்டு, “அவரை பாக்க தான் வந்தேன்” என்றான் தேவ்.

“அவரு இப்ப வெளியே போய் இருக்காரு. அவரு வர சாயந்தரம் ஆகிடும்” என்று சொன்னவள், “நீங்க எங்க தங்கி இருக்கீங்க??. உங்க நம்பர் கொடுத்துட்டு போங்க. அவரு வந்ததும் உங்களுக்கு கூப்பிட சொல்லுறேன்” என்றாள்.

“சரிங்க. இங்க பக்கத்துல தான். இந்த ஹோட்டலில் தங்கி இருக்கேன்” என்று சொன்னவன், “அப்பறம் தேவாமிர்தன்னு மட்டும் சொன்னா அவருக்கு தெரியாது. அதனால சென்னையில இருந்து வந்து இருக்காங்க. உங்ககிட்ட முக்கியமா ஒன்னு பேசனுமாம்னு சொல்லுங்க சிஸ்டர்” என்று கேட்டு கொண்டான்.

“சரிங்க” என்று சொன்னவள், ஒரு வித யோசனையுடனே தலையை ஆமோதிப்பாக அசைத்தாள்.

“இந்தாங்க… இதுல என் நம்பர் இருக்கு. இதுக்கு கால் பண்ண சொல்லுங்க” என்று தனது விசிடிங் கார்ட்டை கொடுத்தான் தேவ்.

“ம்ம்” என்று சின்ன ஒலியை எழுப்பி விட்டு, அந்த கார்ட்டை வாங்கி கொண்டாள் தமிழ்.

“சரிங்க வரேன்” என்று புறப்பட்டு விட்டான் தேவ்.

அவன் சென்றதும் இவரு யாராய் இருப்பாரு என்று யோசனையிலே அன்றைய பொழுதை கழித்தாள்.

மாலை நெருங்க, வெளியே சென்ற சரவணா வந்து விடுவான் என்று அவனுக்கு தேவையான சிற்றுண்டியை செய்ய தயாரானாள் தமிழ்.

ஆன்… இது சொல்லவில்லை பாருங்களேன்… வீட்டில் இருக்கும் அனைவரும் வேண்டுதல் என்ற பெயரில் கோவிலுக்கு சென்று உள்ளனர் வேல இருக்கு என்ற பெயரில் சரவணாவைவும், அவனுக்கு துணைக்கு என்ற பெயரில் தமிழையும் மட்டும் வி்ட்டு விட்டு.

தனியாய் இருந்தாலாவது பேசவாவது செய்வார்களா என்ற நம்பிக்கையில்!!!.

ஆமாம் இந்த தமிழுக்கும், சரவணாவுக்கும் என்ன பிரச்சனை யாரால் இருக்கும்??. இன்னிக்கு வரட்டும் அந்த சரவணா. அவங்க இரண்டு பேரும் பேசறத வச்சி கண்டு புடிச்சிடலாம்.

கொடுப்பாள்…

Advertisement