Advertisement

இடம் 20
வீட்டுக்கு சென்ற தேவ், “அம்மா நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்” என்று தனது தாயிடம் சொன்னான்.
“சரிடா. எப்ப கல்யாணம் பண்ணலாம்??. நாளைக்கு எனக்கு கொஞ்சம் வேல இருக்கு. அதனால நாளானைக்கு பண்ணலாமா??” என்று சிரிப்புடன் அம்பிகா கேட்டார். அவன் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் அன்று வீட்டுக்கு வந்து சொன்ன நினைவுடன்…
கல்லூரி முதல் ஆண்டு முதல் நாள் சென்று விட்டு வீட்டுக்கு வந்த தேவ், “அம்மா நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். அந்த பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடு” என்றான்.
“என்னடா சொல்லற??” – அம்பிகா.
“ஆமா அம்மு… இன்னிக்கு தான் பாத்தேன். அந்த பொண்ணும் பர்ஸ்ட் இயர் தான் போல… பர்ஸ்ட் இயர் கம்ப்யூட்டர் டிப்பார்டமென்ட்க்கு வழி கேட்டுட்டு இருந்தது” என்றான் தேவ்.
“ஓகோ” – அம்பிகா.
“எனக்கு ரொம்ப புடிச்சிடுச்சி. நான் லவ் பண்றேன். நான் படிச்சி முடிச்சதும் அந்த பொண்ணு வீட்டுல பேசி நீ தான் கல்யாணம் பண்ணி வைக்கனும்” – க்யூட்டான முக பாவத்துடன் தேவ்.
“அதெல்லாம் முடியாது. நீ லவ் பண்ணா நான் ஏத்துக்கனுமா??. முடியாது. எனக்கு அந்த பொண்ணு அவங்க குடும்பம் எல்லாம் புடிச்சா தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வருவா” என்று விளையாட்டுக்கு பேசுகிறான் என்று தெரிந்தாலும் தனது கருத்தை கூறினார்.
“சரி சரி” என்றவன் அடுத்த நாள் கல்லூரி சென்று விட்டு சோகத்துடன் வந்தான்.
“என்னடா ஆச்சி??” – அம்பிகா.
“அந்த பொண்ணு வேண்டாம்மா நமக்கு” சோகமாக தேவ்.
“நான் எப்படா ஏத்துகிட்டேன்?? வேண்டாம்மானு சொல்லுற??” – அம்பிகா.
ஆனால் அதை தேவ் கண்டு கொண்ட மாதிரி கூட தெரியவில்லை.
“அந்த பொண்ணு எங்க டிபார்ட்மென்ட் தான். ப்ர்ஸ்ட் இயர் தான். ஆனா பி.ஜி. என்ன விட ஆறு வருடம் பெரியவங்க. கல்யாணம் ஆகி இப்ப பி.ஜி பண்ண வந்து இருக்காங்க” என்று அதே பாவமான முகத்துடன் கூறினான்.
“ஹாஹா” என்று சிரித்தவர், “அமிர் கண்ணா நீ எதுக்கு கவலைப்படுற??. அம்மா எதுக்கு இருக்கேன். நான் நல்ல அழகான பொண்ணா பாசமான பொண்ணா உனக்கு கண்டு புடிக்கிறேன். இப்போ அமிர் குட்டி நல்லா படிக்கற வேலைய மட்டும் பாப்பாங்களாம்” என்று கூறி அவனது தலையை வருடி விட்டார்.
பெற்றோர்க்கு அவர்கள் பிள்ளைகள் செய்தது எந்த காலத்திலும் மறக்காது. இப்போதும் அதே முதல் வருட மாணவனாய் அவனை நினைத்தே அந்த எப்ப கல்யாணம் பண்ணலாம் என்று கேட்டார் அம்பிகா.
“அம்மா நான் விளையாடல… சீரியஸா சொல்லறேன்” என்றான் தீவிரமான முகத்துடன்… நான் வளர்ந்து விட்டேன். என்ன சொல்கிறேன் என்பதை புரிந்து தான் சொல்கிறேன் என்னும் பாவத்தை குரலில் கொண்டு வந்து.
அவன் குரலில் அவன் உண்மையாகவே தான் சொல்கிறான் என்று புரிந்து கொண்டவர், ஒரு நிமிடம் திகைத்து, “யாரு அந்த பொண்ணு??. எந்த ஊரு??. அவங்க குடும்பம் என்ன பண்ணறாங்க??. எப்படி உனக்கும் அவளுக்கும் பழக்கம்??” என்று பல கேள்விகளை அவனை நோக்கி கேட்டார்.
தனது தாயின் கேள்விகளை காதில் வாங்கியவன், அவரை அழைத்து சென்று ஒரு சோபாவில் அமர வைத்து ஒவ்வொரு வினாவுக்கான விடையையும் கூற தொடங்கினான்.
“அம்மா மெதுவா… ஒவ்வொரு கேள்வியா கேளு மா. இப்ப என்ன அவளை பத்தி தெரியனும் அவ்ளோ தானே!!. அவ பேரு கீர்த்தி பிரியம்வதா. ஊரு அது. அங்க அவங்க விவசாயம் பண்ணிட்டு இருக்காங்க. இது தான் அவங்க குடும்பம். இப்போ இங்க சென்னைல தான் வேல பாத்துட்டு இருக்கா. அவளுக்கும் என்ன புடிச்சி இருக்கு. என்ன அவங்க வீட்டுல கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்களோனு கொஞ்சம் பயப்படுறா!!. நான் அவங்க வீட்டுல பேசலாம்னு நினைக்கிறேன். உனக்கு ஓகே வா??” என்று மனப்பாடம் பண்ணி வைத்து ஒப்பிப்பது போல் அனைத்தையும் சொல்லி அவரது சம்மதத்தையும் கேட்டான்.
“எல்லாம் முடிவு பண்ணிட்டு அப்பறம் என்கிட்ட வந்து கேக்கற??” என்று பொய் கோபத்துடன் கேட்டார் அம்பிகா.
“சே…சே… அப்படி இல்லமா. முத சம்மதிக்க வச்சிட்டு அப்பறம் தான் அவங்க வீட்டுல சம்மதம் கேக்கறது” என்றான் தேவ் கண்ணை சிமிட்டி கொண்டே.
“சரி… சரி… நான் அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு அப்பறம் ஏன் முடிவ சொல்லுறேன்” என்று சொல்லி விட்டு விட்ட தன் வேலையை பார்க்க சென்று விட்டார்.
கீர்த்தி குடும்பத்தில் நடந்ததை தனது தாயிடம் சொல்ல சிறிது தயங்கினான் தேவ். கீர்த்தியின் குடும்ப உறுப்பினர்களும் தனது தாயும் ஒரே தலைமுறையை சேர்ந்தவர்கள் தான். பெரும்பாலும் அவர்களுக்கு பொதுவான கருத்துக்கள்… இப்படி தான் இருக்க வேண்டும் அப்படி தான் இருக்க வேண்டும் என்பது போல இருக்கும். அதே போல தன் தாயும் கீர்த்தியை தவறாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணி தான் சொல்லாமல் மறைத்தான். ஆனால் அவனால் அது முடியவில்லை. மனம் அமைதி பெறவில்லை. சொல்லி இருக்கலாமோ என்றே எண்ணி கொண்டு இருந்தான்.
சரி முதலில் கீர்த்தியை அம்மாவுக்கு அறிமுகப்படுத்தலாம். அப்பறம் இத பத்தி சொல்லிக்கலாம் என்று முடிவு எடுத்து அடுத்த இரண்டு நாளில் இருவரையும் சந்திக்க வைத்தான். கூடவே மதனின் அன்னையும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படியாப்பட்ட சந்திப்பு ஆனாலும் அது பெரும்பாலும் ஒன்று அது காலை/மதியம்/இரவு உணவு பொழுதாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டி பொழுதாகவோ தான் இருக்கும்.
அப்படி இந்த சந்திப்புக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த நேரம் மாலை நேர சிற்றுண்டி பொழுது தான்.
“வணக்கம் மா” என்று பொதுவாய் இருவரையும் பார்த்து சொன்னாள் கீர்த்தி பிரியம்வதா.
“வா மா… உட்காரு. நான் தான் அமிரோட அம்மா… அப்பறம் இவங்க அவனுக்கு அத்த… மதனோட அம்மா” – அம்பிகா.
அவளுக்கு மதனை தெரியும் என்பதால் அதையும் சேர்த்து சொல்லி விட்டார் அம்பிகா. மேலும் மதனுக்கு பார்த்து இருக்கும் பெண் சங்கவி இவள் அறை தோழி என்பதுவும் இவர்களுக்கு தெரியும். பெயரை கேள்வி பட்டவர்கள் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் கிட்டியது.
“என்ன படிச்சி இருக்க??” – மதன் அம்மா.
“அட நம்ம நாட்டுல முக்கால்வாசி பேரு படிச்ச படிப்பு தான் மா. பொறியியல்” – சன்ன சிரிப்புடன் கீர்த்தி.
அவர்களும் சிரிப்புடன், “அதுவும் சரிதான். இவங்க எல்லாம் படிக்கறனால இன்ஜீனியரிங் காலேஜ் கட்டறாங்களா?? இல்ல நிறைய காலேஜ் கட்டி வச்சி இருக்கறதால இவங்க எல்லாம் படிக்கறாங்களா??னு தெரில” என்று கூறினார்கள்.
அப்படியே சில நேர பேச்சு போக, “உங்க வீட்டுல வந்து நாங்க பேசவா??” என்று கேட்டார் மதனின் அம்மா.
“இல்ல மா. இது சரி வராதுனு நான் தேவ்கிட்டயே சொல்லிட்டேன் மா” என்றாள் கீர்த்தி.
“நீ புடிச்சி இருக்குனு சொன்னதா அமிர் சொன்னான்!!” என்று சந்தேகமாக அம்பிகா கேட்க, “அமிர்??” என்று கேள்வியாக கீர்த்தி பார்த்தாள்.
முன்னாடி அவர் அமிர் என்று பெயரை பயன்படுத்தியதை அவள் கவனிக்கவில்லை. அம்மா அத்தை என்ற பதமே முதன்மை பெற்று அவளது மூளையில் பதிந்து இருந்தது. அப்படி கவனித்து இருந்தால் இந்த ‘கேள்வி பார்வை’க்கு வேலை இல்லாமல் போய் இருக்கும்.
“அது தேவ் தான். வீட்டுல அமிர்னு தான் கூப்பிடறது. அவங்க தாத்தா பேரு தேவ்னு வரும். அதான்” என்று சொல்லி விட்டு அவள் பதிலை எதிர்பார்த்தார்.
“எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க மா. ஏற்கனவே என் மேல கோவமா இருந்தாங்க. நான் இங்க வேலைக்கு வந்தது இன்னும் கோவம் வந்து இருக்கும்” என்று கூறினாள் கீர்த்தி.
“எல்லாம் எப்படி மா… உடனே ஏத்துப்பாங்க நம்ம தான் பேசி புரிய வைக்கனும். மதன் கல்யாணம் முடிஞ்சதும் நாங்க வந்து பேசறோம்” என்று கூறினார் மதன் அம்மா.
“இல்ல மா… அது வந்து” என்று கீர்த்தி கூற அதை எல்லாம் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
“எப்படி மா வந்த?? இங்க இருந்து உன் வீட்டுக்கு போக தூரமா?? நாங்க உன்ன விட்டுட்டு போகவா??” என்று முன்பு பேசியதை விட்டு அடுத்த பேச்சுக்கு தாவினர்.
நடுவில் புகுந்து சம்மந்தம் இல்லாமல் முதலில் பேசியதற்கு எப்படி மறுப்பு சொல்வது என புரியாமல், “பக்கம் தான் மா. நான் போய்ப்பேன்” என்று கூறி விட்டாள்.
அவர்கள் சென்றவுடன் தேவ்வை தான் மனதுக்குள் திட்டினாள்… இன்று மாலை அழைத்து, “ஏய்!! அம்மா உன்ன பாக்கனும் சொன்னாங்க… ஈவ்னிங் அந்த ரெஸ்டாரண்ட் போய்டு…” என்றவுடன் அழைப்பை துண்டித்து விட்டான்.
இங்கே வந்தால் அவர் வந்தால் அவர் கல்யாணத்தை பத்தி பேசுவார் என்று அவள் எண்ணவில்லை. தான் யோசித்து இருக்க வேண்டுமோ… தேவ் அம்மா ஏன் தன்னை பார்க்க வேண்டும் என்று கூறினார் என்று. அவன் காதலை வீட்டில் சொல்லி இருக்கக்கூடும் என்று வள் எண்ணவில்லை.
சரி எப்படி இருந்தாலும், தன்னை பற்றி தெரிந்தால் இவருக்கும் என்னை புடிக்காமல் போய் விடும் என்று நினைத்து கொண்டாள்.
ஆனால் அவளுக்கு எங்கே  தெரிய போகிறது… நேற்றே, தேவ் தன் தாயிடம், அவளை ஒரு மூன்றாம் பாலாய் வைத்து அனைத்தையும் கூறி விட்டான் என்றும், அதற்கு அவர் அவர் நடுநிலையாய் ஒரு நீதிபதியாய் தனது தீர்ப்பை கூறி விட்டார் என்றும்.
பின்னர் சொல்லலாம் என்று தான் நினைத்து இருந்தான் தேவ். ஆனால் தன் தாயிடம் அனைத்திற்கும் தீர்வு இருக்கும் என்பது காந்தம் போல் தேவ்வின் மனதில் ஒட்டி கொண்ட நம்பிக்கை. அதனால் கீர்த்தியை பார்க்கும் முன்னே தன் தாயிடம் அனைத்தையும் கூறி பதிலையும் பெற்று கொண்டான்.
சூழ்நிலை எவ்வாறு இருந்து இருக்கும்… அந்த நிலைமையில் எல்லோரின் எண்ணமும் எவ்வாறு இருந்து இருக்கும் என்றும் தனது தாயின் வாயிலாக கண்டு கொண்டவன், அடுத்து கீர்த்தியின் வீட்டை நோக்கிய தனது பயணத்தை உறுதி செய்தான். அவனுக்கும் அவன் தாய்க்கும் இருக்கும் ஒரே ஒரு சந்தேகம் சரவணாவை பற்றியது தான்… அவன் எப்படி பட்டவன் என்று!!!. அதை சரவணாவிடம் பேசும் போது தான் புரிந்து கொள்ள முடியும் என்று எண்ணி கொண்டான்.
அம்பிகாவும் தேவ்வை வைத்து கொண்டே தனது கணவரிடம் அவனது காதலை பற்றி கூறி விட்டார். பத்து நிமிட பெண் பார்க்கும் படலத்தில் முடிவு செய்வதை போல முப்பது நிமிடம் அவளை பார்த்து இருக்கிறார். கணிக்காமல் இருப்பாரா அவளை… மேலும் அவளது கடந்த காலம் வேறு தெரிந்து இருக்க சொல்லவும் வேண்டுமா??!!. நந்தகோபாலன் சம்மதமும் கிடைத்து விட்டது அமிருக்கு.
அடுத்து அலுவலகத்தில் இவனுக்கு என்று ஒதுக்கி இருந்த வேலைகளை ஐந்து நாட்களில் மடமடவென முடித்து கொடுத்து விட்டான். அதில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் அதை கௌதம் சமாளித்து கொள்வான் என்ற நிம்மதியுடன் இதோ சரவணாவின் வீட்டு வாசலில் சரவண வேலின் மனைவி தமிழரசியின் முன் நிற்கிறான்.
கொடுப்பாள்…

Advertisement