Advertisement

இடம் 18
கீர்த்தியின் ஸ்டெடி ஹாலிடேஸில் படிப்பதை தவிர, தனது மாமனின் கல்யாணத்திற்கு தேவையான மற்ற அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, தனது மாமன் பிள்ளைகளுடன் ஆட்டம் போட்டு விட்டு மீண்டும் தனது கல்லூரி விடுதிக்கு சென்றாள் தனது இறுதி தேர்வுக்காக…
தேர்வு நடந்த ஒன்றரை வாரமும் எந்த கொண்டாட்டமும் இல்லாமல், ஷிப்ட் போட்டு படிப்பதிலே கழிந்தது.
“நீ நைட் எப்ப படுப்ப” – ஒருத்தி.
“ஒரு மணிக்கு மேல” – மற்றொருத்தி.
“அப்ப நீ படுக்கும் போது என்ன எழுப்பி விட்டுட்டு படு. நான் இப்ப போய் தூங்கறேன்” – முதலாமவள்.
“சரி” என்று விட்டு படிக்க அமர்ந்தாள் அவள்.
தேர்வு எழுதி விட்டு வந்த அன்று மதியம் படுத்து தூங்கி விட்டு மீண்டும் இரவில் படிப்பது என்றே சென்றது.
ஆரம்பித்த தடமும் தெரியாமல் முடிந்த மாயமும் புரியாமல் கீர்த்தியின் கல்லூரி வாழ்க்கை முடிந்து விட்டது.
அன்று இறுதி தேர்வு முடிந்த நாள் மட்டுமில்லாமல் மொத்தமாக விடுதியை காலி செய்து கிளம்பும் நாள்…
இன்று ஒரு இரவு தங்குபவர்கள் தங்கலாம்… ஆனால் அடுத்த நாள் காலை உணவு இங்கு சமைக்கப்பட மாட்டாது. அதே போல் நாளை காலை பதினொரு அளவில் விடுதி இழுத்து மூடப்படும் என்பதால் அனைவரும் இன்றே கிளம்ப உள்ளனர்… ஒன்றிரண்டு நபர்களை தவிர… ஆனால் நம் நாயகியின் தோழிகள் அனைவரும் இன்றே கிளம்புகின்றனர்.
எல்லோரின் பெற்றோரும் வந்து இருக்க,  “அம்மா நல்லா இருக்கீங்களா??”, “அப்பா எப்படி இருக்கீங்க??”, “அண்ணா அக்கா பாப்பா தம்பி எல்லாம்  நல்லா இருக்காங்களா??” என்று தனது தோழிகளின் உறவுகளை பற்றி கேட்டு கொண்டு இருந்தனர்.
கீர்த்தியையும் அழைத்து செல்ல சங்கர் வந்து இருந்தான். கல்யாண மாப்பிள்ளை என்பதால் சரவணா வரவில்லை. இல்லையென்றால் அவளை அழைத்து செல்ல அவன் தான் வந்து இருப்பான்.
தனது பெட்டிகளை எடுத்து கொண்டு கீர்த்தி மூன்றாம் தளத்தில் இருந்து கீழே இறங்க அவளது தோழிகளும் அவளை உடமைகளை எடுத்து வந்து காரில் அருகில் வைத்தனர். ஒரே முறையில் அனைத்தும் காரில் ஏறிவிட்டது.
கீர்த்தியும் மற்றவர்களின் உடமைகளை எடுத்து வந்து கிரவுண்ட் ப்ளோரில் வைத்து விட்டு, “அடிக்கடி போன் பண்ணுங்கடி”, “வருடம் ஒரு டைம்மாது நம்ம பாத்துடனும்”, “எங்க மாமாக்கு இரண்டு நாளில் கல்யாணம்… முடிஞ்சா வந்திடுங்கடி” என்று சில பல நிறைவேறா பொய் வாக்குறுதிகளை சொல்லி கொண்டு கிளம்பினாள்.
வீட்டிற்கு வந்த கீர்த்தியை கண்டு கொள்ள தான் ஆள் இல்லை. அடுத்த நாள் மண்டபத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் அனைவரும் பரபரப்பாக சுற்றி கொண்டு இருந்தனர்.
அந்த நாளும் கடந்து அடுத்த நாள் கல்யாணம் இன்று நிச்சயதார்த்தம் என்று அளவில் வந்து இருந்தது காலம்.
பவித்ரா பேச தெரியாத பொம்மை போல் பதுமையாய் அலங்கரிக்கப்பட்டு மேடையில் அமர்ந்து இருந்தாள். சரவண வேலுக்கு இது பல நாட்கள் தள்ளி நடக்கும் திருமணம் என்பதால் மகிழ்ச்சி பொங்க அமர்ந்து இருந்தான்.
ஆம்… அவனுக்கு தற்போது வயது முப்பத்தி இரண்டு… ஐந்து வருடமாய் பெண் தேடி கொண்டு இருந்தனர். இப்போது தான் அமைந்து இருக்கிறது.
தமிழரசி கீர்த்தியிடம், “ஏன்டி உங்க மாமாவுக்கு மூஞ்சில ஒரு ஒளி வட்டம் தெரியுற மாறி இல்ல” என்று கேட்டாள்.
கீர்த்தியும், “ஆமா கா… அது தான் கல்யாண கலையாம்…” என்று சிரிப்புடன் கூறி விட்டு, “ஆமா அது என்ன உங்க மாமா… உனக்கு மாமா இல்லையா??” என்று தனது பாட்டியின் அக்காவின் பேத்தியிடம் கேட்டாள் கீர்த்தி.
“ஆமா… ஆமா… மாமா தான்” என்று ஒரு மாதிரி குரலில் கூறியவள், அடுத்து யாரோ கூப்பிட அவர்களிடம் பேச சென்று விட்டாள்.
நிச்சய பத்திரிக்கை வாசித்து முடிக்க, எல்லோரும் உணவு உண்ண பந்தி நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
அங்கே ஏற்கனவே பந்தி நடந்து கொண்டு இருக்க, கீர்த்தியும் தமிழும் அதில் ஒரு ஆளாய் இருந்தனர்.
“அந்த வரிசைக்கு தண்ணி ஊத்திடு பிரியா” என்று தமிழ் சொல்ல, “சரி தமிழ்” என்று கீர்த்தியும் அங்கு செல்ல, மற்றொரு வரிசையில் ரசம் கேட்க அந்த வாலியை வைத்து இருந்தவரிடம் ஒருவர் சொல்ல என்று பந்தி ஆர்பாட்டமாக இருந்தது.
சிறிது நேரத்தில் பொண்ணு மாப்பிள்ளை வந்து உண்ண அவர்களுக்கு பரிமாறினார்.
நாளை காலை ஆறு மணி போல் முகூர்த்தம் என்பதால், பொண்ணுக்கு நான்கறை மணிக்கே அலங்காரம் செய்ய ஆரம்பித்தது விடுவர் என்பதாலும் அனைவரையும் சீக்கிரம் உறங்க சொன்னார்கள். ஆனால் அது எல்லாம் மணபெண்ணுக்கு தான். மற்றவர்களுக்கு இல்லை என்பதால் மற்றவர்கள் அனைவரும் ஒரு மணி வரை நாயம் அடித்து விட்டு பிறகு தான் உறங்கினர்.
அவர்கள் உறங்க தான் காத்திருந்தது போல் பவித்ரா அவளது காதலனுடன் சென்று விட்டாள்… அவளது வளமான வாழ்வை நோக்கி. ஆனால் இங்கே இருப்பவர்களின் வாழ்வு எப்படி இருக்கும் என்று அவள் கவலைப்படவில்லை. தன்னை பற்றி யோசிக்காதவர்களை பற்றி தான் ஏன் யோசிக்க வேண்டும் என்று நினைத்தாளோ!!! சென்று விட்டாள்.
மணி மூன்றரை ஆக ஒவ்வொருவராக எழுந்தனர். அடுத்து மணப்பெண்ணை எழுப்ப சென்ற பவித்ராவின் தாய்க்கு அவள் கண்ணில் அகப்படவில்லை. சிறிது சிறிதாக இந்த செய்தி கசிந்து அனைவரையும் அடைந்தது.
ஒரு பக்கம் மாப்பிள்ளை வீட்டின் பக்கம் இருந்த சிலர் பெண் வீட்டாரை திட்டி கொண்டு இருக்க, ஒரு பக்கம் மாப்பிள்ளை வீட்டாரையும் மாப்பிள்ளையை பற்றியும் சிலர் புரளி பேசி கொண்டு இருந்தனர்.
சரவணாவின் குடும்பம் மட்டும் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தது. இந்த மாதிரி ஒரு சூழலில் காலம் காலமாய் என்ன செய்வார்கள்?! அதை தான் இவர்களும் செய்ய முடிவெடுத்தனர். அது தான் இப்போது சொந்தத்தில் கட்டி கொள்ளும் முறை உள்ள பெண்ணை பார்த்து இதே முகூர்த்தம் மணம் முடித்து வைப்பது என்று.
அப்படி கட்டி கொள்ளும் முறை உள்ள பெண்களை கணக்கு எடுக்க, முதல் ஆளாய் இருந்தது நம் நாயகி கீர்த்தி பிரியம்வதா தான். சொந்த அக்கா மகள் வேறு.
கீர்த்தியும், தமிழும் ஒரு அறையில் இருக்க அங்கே வந்த அற்புதம், “பிரியா… மாமாவ நீ கல்யாணம் பண்ணிக்கோடா இந்த முகூர்த்ததிலே” என்று கேட்டார்.
ஒரு முழு நிமிடம் உறைந்து போய் நின்று விட்டாள் நம் நாயகி.
குரல் மெதுவாய் இருந்தாலும் அது அவளிடம் சம்மதம் கேட்பது போல் இல்லை.
ஆழ்ந்த மூச்சு எடுத்து கொண்டு, “ம்மா… இல்லமா… மாமாவ என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது மா” என்று தனது எண்ணத்தை தெளிவாக கூறினாள் கீர்த்தி.
“ஏய்… ஏன்டி??. இப்போவே அவனை பத்தி எல்லாம் தப்பு தப்பா பேச ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப கல்யாணம் நடக்கலனா இனி எப்பவும் நடக்காதோனு பயமா இருக்கு. நம்ம குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்க. உன் மாமன நினைச்சி பாரு. அஞ்சு வருடமா தேடி இப்ப தான் அமைச்சது. அதுவும் இப்படி ஆகி போச்சி. இதுக்கே அவன் ரொம்ப வருத்தத்தில் இருக்கான். இது அப்பறம் கல்யாணம் நடக்குமா நடக்காதானு ஒரு கேள்வி குறி வந்தா பாவம்டி” என்று கண்ணீர் கண்களுடன் கூறினார்.
“ம்மா… புரியாம பேசாதமா… மாமாவே இத ஏத்துக்க மாட்டாரு” என்று கீர்த்தி கூற, “அவன் சரின்னு சொல்லிட்டான்” என்று அடுத்த குண்டை தூக்கி போட்டார் அற்புதம்.
இந்த செய்தியை கீர்த்தியால் நம்புவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
தனது மாமாவா இப்படி சொன்னார்??. சரவணா மாமாவா?? ஒத்துக்கிட்டாங்களா?? எப்படி??
மீண்டும் ஒரு உறைநிலையை கடந்து இயல்பு நிலைக்கு திரும்பி, “ம்மா என்னால நம்ப முடியல. மாமா சரின்னு சொல்லி இருக்க மாட்டாங்க” என்றாள் மீண்டும் மீண்டும் அதையே.
“ஏய்!!! நான் சொல்லுறது உனக்கு புரியுதா இல்லையா!!! அவன் ஒத்துக்கிட்டான்” என்றார் அற்புதம் சிறிது சத்தமாக.
“இல்லமா” என்று திரும்ப கீர்த்தி ஆரம்பிக்க, “ஏய்” என்ற அவரின் சத்தத்தில் அது அடங்கியது.
“இப்ப அவனை நீ கல்யாணம் பண்ணிக்கற அவ்வளவு தான்” என்றார்.
அவரின் சத்தத்தில் அங்கு வந்து இருந்தார்கள்… கீர்த்தியின் தந்தை, அவளது முதல் மாமனின் மனைவி, அவளது பெரியம்மா மற்றும் அவரது கணவன், அவளது அக்கா… யாரும் அற்புதத்தின் வார்த்தைக்கு எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. அதிலே புரிந்து கொண்டாள் அவர்களது எண்ணமும் அது தான் என்று.
ஒரு திடமாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருந்தாள் கீர்த்தி.
சில நிமிட அமைதிக்கு பிறகு கண்களை மூடி கைகளை இறுக்க மூடி கொண்டே, “எனக்கு இந்த கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல. என்னால மாமாவ கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்று தெளிவாக பிசிறில்லாத குரலில் அனைவருக்கும் பொதுவாய் கூறி முடித்தாள் கீர்த்தி பிரியம்வதா.
அவளது குடும்பத்தில் யாரும் கீர்த்தியிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்கள் முகத்தில் இருந்தே புரிந்து கொள்ளலாம். ஏன்னென்றால் கீர்த்தி அவளது குடும்பத்தின் மீது வைத்து இருந்த பாசம் அனைவரும் அறிந்ததே. அவள் இப்படி சொன்னதை அவர்களால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.
“இவ்வளவு சொல்லியும் உனக்கு மனசு வரலையா?? நம்ம குடும்பம் மானம் மரியாத… உன் மாமன் மானம் மரியாத… அவன் மனசு… அவன் எவ்வளவு வருத்தப்படுவான்னு எதையுமே புரிஞ்சிக்காம பேசற இல்ல” என்று அற்புதம் தனது ஆதங்கத்தை அழுகையுடன் சொல்லி முடித்தார்.
எல்லாருமே கீர்த்தியின் மீது சிறிது கோபத்துடன் தான் இருந்தனர்.
கீர்த்தி பெரியம்மா, “என் புள்ளக்கி கல்யாணம் ஆகாம இருந்து இருந்தா நானே கூட பண்ணி வச்சி இருப்பேன். உன்ன தான அவன் அவ்வளவு பாசமா அப்படி பாத்துக்கிட்டான். இப்ப அவனையே தூக்கி எறிஞ்சிட்ட இல்ல” அவர் ஒரு புறம் புலம்ப…
கீர்த்தியின் அப்பாவோ எந்த பக்கம் யாருக்கு சாதகமாக பேச என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தார்.
அவருக்கு இருவருமே முக்கியம்… பிள்ளை போல் இருந்த சரவணாவும், தனது பிள்ளையும்… இருவருமே முக்கியம். ஆனால் அவரிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது அவள் ஒப்பு கொள்வாள் என்று. அது இல்லை என்றவுடன் தனது பிள்ளையை தான் சரியாக கணிக்கவில்லையோ என்று ஒரு அதிருப்தி இருந்தது.
அதன் பின் கீர்த்தி சொன்னதை கேட்ட யாரும் அவளை வற்புறுத்தவில்லை… அதே போல் அவளிடம் முகம் கொடுத்தும் பேசவில்லை.
கொடுப்பாள்…

Advertisement