Advertisement

இடம் 17
ஒரு அழகிய மாலை வேளையில் அந்த ஆடிடோரியத்தில் பெண்கள் மட்டும் குழுமி இருந்தனர்.
மேடையில் அந்த பள்ளியின் தாளாளர், முதல்வர் இன்ன பிற பொருப்புகளில் இருப்பவர்களும் தங்களது உரையை நடத்தி கொண்டு இருந்தனர். ஆனால் அங்கே குழுமி இருந்த மாணவிகளோ தங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல என்ற விதத்தில் தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டு இருந்தனர்.
அவர்கள் உரை எல்லாம் முடிய மேடையில் நடன நிகழ்ச்சி ஒன்று இரண்டு இருந்தது. அதற்கு பாடல்கள் போடப்பட மேடையில் அந்த மாணவிகள் ஆட கீழே அமர்ந்து இருந்த மாணவிகள் அனைவரும் கை மட்டும் தட்டி கொண்டு அவர்களது இருக்கையில் பசை போட்டார் போல ஒட்டி கொண்டு இருந்தனர்.
அப்படியே அரை மணி நேரம் கழிய அனைத்து முக்கிய பொருப்பில் இருப்பவர்களும் சென்று விட்டனர்.
“சரி… இப்போ நீங்க எல்லாம் கொண்டாடுங்க” என்று சொல்லி விட்டு அந்த பெண்கள் தங்கி இருக்கும் விடுதியின் வார்டனும் சென்று விட்டார்.
அதன் பின் குத்து பாட்டுகள் போடப்பட, அங்காங்க இருந்த மாணவிகள் அனைவரும் சிறு சிறு குழுக்களாய் மாறி அப்படி ஒரு ஆட்டம் போட்டு கொண்டு இருந்தனர். அங்கே தான் நம் நாயகி கீர்த்தியும் அவளது தோழிகளுடன் ஒரு குழுவாய் செம்ம ஆட்டம் போட்டு கொண்டு இருந்தாள்.
(தங்களுக்கு பிடித்த பாடல்களை இங்கே இட்டு நிரப்பி கொள்ளுமாறு எழுத்தாளரான என்னால் தாழ்மையாக கேட்டு கொள்ளப்படுகிறது).
கீர்த்தியும் அவளது தோழிகளும் பேசி வைத்து ஒரே போல் ஆடை அணிந்து இருந்தனர். ஏழு மணி முதல் எட்டு மணி வரை வியர்வை வழிய வழிய இடை விடாத அப்படி ஒரு ஆட்டம் போட்டு விட்டு, “சரி… வாங்க… சாப்பிட்டு வந்து மீதியை கண்டினியூ பண்ணலாம்” என்று அவர்களுள் ஒருத்தி அழைக்க எல்லாரும் சென்றனர்.
ஆடிடோரியத்தில் இருந்து வெளியே வர அங்கே தான் விளையாட்டு மைதானம் இருந்தது.
“ஏய்!!.. சாப்பாடு எல்லாம் பாஸ்கட் பால் கேர்ட்ல வச்சி இருக்காங்கலாம். வாங்க போலாம்” என்று ஒருத்தி சொல்ல அவளை தொடர்ந்து கீர்த்தியும் அவளது தோழிகளும் நடந்தனர்.
ஒரு வாரமாய் அவர்கள் தேர்ந்து எடுத்து கொடுத்த அசைவ உணவு வகைகள் அனைத்தும் இருக்க, தோழிகள் அனைவரும் சென்று அவர்களுக்கு வேண்டியவை அனைத்தையும் வாங்கி வந்து ஒரு திண்டில் அமர்ந்து பேசி கொண்டே உண்டு கொண்டு இருந்தனர்.
அப்படி என்ன அந்த நாள் என்று யோசிக்கிறீர்களா??… அன்று ஹாஸ்டல் டே… அது தான் இத்தனை ஆர்பாட்டம்… ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த விழா… ஆனால் இந்த வருடம் இவர்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது. ஏன்னென்றால் கீர்த்தி மற்றும் அவளது தோழர்களுக்கு இந்த வருடம் தான் கல்லூரி இறுதி ஆண்டு. நாளை முதல் ஸ்டெடி ஹாலிடேஸ் தொடங்குகிறது. அதன் பின் தேர்வுக்கு தான் வருவார்கள்.
வேண்டுமளவு உண்டு விட்டு அடுத்து ஐஸ்கீரிம், ப்ரூட் சாலட், பழச்சாறு எல்லாம் வைத்து இருக்கும் இடமான இன்டோர் கேம்ஸ் கோர்ட்டை அடைந்தனர். அதையும் உண்டு விட்டு மீண்டும் ஆடிடோரியம் சென்று விட்ட ஆட்டத்தை தொடர்ந்தனர்.
மணி பனிரெண்டு ஆக பாடல்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு விடுதிக்கு செல்ல சொன்னார்கள். அதை எல்லாம் கேட்கும் ரகமா அவர்கள், அப்போது தான் நமது தோழிகள் ட்ரெயின் ஓட்ட, தெரிந்தவர் தெரியாதவர், வேற டிபார்ட்மெண்ட், சீனியர், ஜுனியர் என அனைவரும் அதில் தொத்தி கொள்ள அந்த ஆடிடோரியத்தையே ஒரு ரவுணட் வந்தனர்.
பாடல் எல்லாம் நிறுத்தப்பட வேறு வழி இன்றி அனைவரும் விடுதிக்கு சென்றனர். ஆனாலும் போகும் வழி எங்கும் கத்தி கொண்டே சென்றனர்.
போன வாரம் தான் பாய்ஸ் ஹாஸ்டல் டே நடந்தது. ஆடிடோரியத்தில் இருந்து பாய்ஸ் ஹாஸ்டல் செல்ல கேர்ள்ஸ் ஹாஸ்டல் தாண்டி தான் செல்ல வேண்டும். அப்போது அவர்கள் போட்ட சத்தத்தை விட இவர்கள் சத்தம் அதிகமாக இருக்க வேண்டும் என்று தொண்டை வத்த கத்தி கொண்டே சென்றனர்.
கீர்த்தியும் அவளது தோழிகளும் அறைக்கு வந்தும் அமைதியாக இல்லாமல், தங்களது மொபைலில் பாடலை போட்டு ஆடி கொண்டு இருந்தனர். எல்லாம் முடித்து அவர்கள் உறங்க நேரம் அதிகாலை மூன்றை தாண்டி இருந்தது.
அனைத்து மாணவிகளும் இன்று அவர்களது வீட்டிற்கு செல்ல உள்ளனர். கொஞ்ச பேர் காலை ஒன்பது மணிக்கே கிளம்பி சென்று விட்டனர்.
நமது நாயகி தான் காலை பதினொன்றை மணி வரை உறங்கி கொண்டு இருந்தாள். அவளது அறையில் இருந்து மற்ற இருவரும் கிளம்பி விட்டனர். பக்கத்து அறையில் இருந்த மற்றொரு தோழி வந்து, “கீர்த்தி எழுந்திரு” என்று இவளை எழுப்பினாள்.
“ம்ம்ம்” என்று புரண்டு எழுந்து அவளை பார்க்க அவளும் தயார் ஆகி இருந்தாள் வீட்டிற்கு செல்ல…
“சீக்கிரம் போய் பல்லு விளக்கிட்டு வா. சாப்பிட போலாம்” என்றாள்.
“ஏய் உமா… ரெடி ஆகிட்டயா நீயும்??” – கீர்த்தி. உமா தலையசைக்க, “இவளுங்க எல்லாம் எப்ப டி எழுந்து கிளம்பனாங்க??” – கீர்த்தி.
“உன்ன எழுப்பனா நீ தான் எழுல… லேட் ஆன வெயில்ல போகனும்னு காலைல நேரமாவே கிளம்பிட்டாங்க. நான் உன்ன எழுப்பறேன் சொல்லிட்டேன்” என்றாள் அந்த உமா.
அதன் பின் கீர்த்தியும் ப்ரஷ் ஆகி வர இருவரும் சென்று உண்டு விட்டு வந்தனர். முக்கால்வாசி ஹாஸ்டல் காலி ஆகி இருந்தது. மீதம் இருந்தவர்கள் இப்போது கிளம்பி கொண்டு இருந்தனர்.
“கீர்த்தி… எப்போ கிளம்பற??” என்று கேட்டாள் உடன் இருந்த அவள்.
“ரெண்டு மணி கிட்ட… இப்ப எங்க ஊரு பஸ் இருக்காது. அங்க போய் பஸ் ஸ்டாப்ல உட்கார இங்க இருந்துட்டே போவேன்” என்றாள் கீர்த்தி.
“சரிடி… நான் இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பறேன்” என்றாள் உமா.
கிளம்பி வந்த உமா, “ஏய் கீர்த்தி… காலேஜ் பஸ் கரெக்ட்டா ரெண்டு மணி வரை தான் பஸ் ஸ்டாப்புக்கு போகுமாம். அதனால நீ கொஞ்சம் சீக்கிரமே கிளம்பிக்கோ” என்று சொல்லி விட்டு அவளுக்கு பாய் சொல்லி விட்டு கிளம்பினாள் உமா.
அதன் பின் கீர்த்தியும் கிளம்பி தனது ஊரை வந்து அடைந்தாள். அப்போது மணி இரவு எட்டு இருக்கும். அவளை அழைத்து செல்ல சரவண வேல் வந்து இருந்தான்.
“மாமா எப்படி இருக்கீங்க??” – கீர்த்தி.
“நல்லா இருக்கேன். நீ??” – சரவணா
“சூப்பர் மாமா” என்று பேசி கொண்டே அவர்களது வீட்டை அடைந்தனர்.
அற்புதத்தின் வீடு சரவணாவின் வீட்டிற்கு அருகில் தான் இருக்கிறது. அவளை அங்கே விட்டு விட்டு தன் இல்லம் சென்றான் சரவணா.
அற்புதமும் சண்முகமும் வாசலிலே நின்று கொண்டு இருந்தனர். தனது உடைமைகளை எல்லாம் வீட்டினுள்ளே வைத்து கொண்டே தனது பெற்றோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டு இருந்தாள்.
“ம்ம்ம்… மா என்ன சோறு?? ரொம்ப பசிக்குது” என்றாள் கீர்த்தி.
“தோசை” என்று அவளது அம்மா சொல்ல, “ஆரஞ்சு சட்னியா??” என்று அவள் கேட்டாள்.
அவள் அம்மா தலையசைக்க, “ஐஐஐ… சூப்பர்” என்று ப்ரஷ் ஆக சென்றாள்.
தக்காளி சட்னியை தான் அவள் ஆரஞ்சு சட்னி என்கிறாள்… அதன் நிறத்தின் காரணமாக.
அவள் வந்ததும் தோசை சுட்டு போட போட கணக்கு வழக்கில்லாம் உள்ளே சென்று கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் போதும்மா என்ற சொல்லுடன் நிறுத்தி கொண்டாள்.
சிறிது நேர பேச்சிற்கு பின் மூவரும் சென்று உறங்கி விட்டனர்.
மீண்டும் கீர்த்தி எழுந்தது, அடுத்த நாள் காலை தனது மாமாவின் பசங்களின் குரல் வண்ணத்தால் தான். அதாவது அவளது தாயின் முதல் தம்பி சங்கரின் பிள்ளைகள்.
“அக்கா… எந்திரி… சீக்கிரம் வா. வெளிய போலாம் சொன்னாங்க” என்று அவளை எழுப்பி கொண்டு இருந்தனர்.
“ஆன்… எழுந்துட்டேன்… எழுந்துட்டேன்டா…” என்று சொல்லி கொண்டே எழுந்தாள். அவள் எழும் வரை அவர்கள் அமைதியாய் இருக்க போவதில்லை என்று அவளுக்கு தெரியும்.
இன்று அவர்கள் அனைவரும் துணி எடுக்க செல்ல உள்ளார்கள். அவளது தாய் அற்புதத்தின் கடைசி தம்பி.. தங்க கம்பி… சரவண வேலின் திருமணத்திற்காக…
இங்கே இவர்கள் வீட்டில் இருந்து அற்புதம், சரவண வேல், சங்கரின் மனைவி, சரவணாவின் தாய் சித்தம்மாள், கீர்த்தி மற்றும் சங்கரின் மகன்கள் இருவர் கிளம்பி இருந்தனர். பெண் வீட்டாரின் பக்கம் பவித்ரா மணபெண், அவளது தாய், தந்தை மற்றும் சித்தி கிளம்பி இருந்தனர்.
பவித்ரா அங்கே வந்து பெரிதாக இவர்கள் குடும்பத்தில் கலந்து கொள்ளவில்லை. அவள் தாயுடன் மட்டும் பேசி கொண்டு இருந்தாள். கீர்த்தி இரு முறை பேச முயற்சித்து விட்டு அமைதியாகி விட்டாள்… புதிதாய் பேசுபவர்களிடம் பேச கூச்சம் போல்… எங்க போய்ட போறாங்க நம்ம வீட்டுக்கு தான வரனும் என நினைத்து கொண்டாள்.
இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க உள்ளது. கீர்த்தி இறுதி தேர்வுகள் முடிந்த மூன்றாம் நாள்.
பவித்ராவை பெண் பார்க்க செல்லும் போதும் கீர்த்தி கல்லூரியில் இருந்ததால் அவளை புகைப்படத்தில் தான் பார்த்தாள். நேரில் பார்க்கவும் அழகாய் தான் இருந்தாள். ஆனால் பேச்சு மட்டும் வைத்து கொள்ளவில்லை இவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களுடன்.
அவளுக்கு தான் விருப்பமில்லையே… இந்த திருமணத்தில்… அவளது பெற்றவர்களிடம் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அதனால் பவித்ரா ஒரு ப்ளான் செய்து விட்டாள்.
“அம்மா… எனக்கு இந்த டிரஸ் தான் வேணும்” என்று தனது தாயிடம் ஒன்றை எடுத்து காட்டினாள் கீர்த்தி.
“இது வேணா எடுடி. வேற எடு” அற்புதம் பதிலுக்கு கூற, பாவமாய் தனது மாமனை பார்த்தாள் கீர்த்தி.
“ஏன்கா இதுவே எடுத்துக்கட்டுமே” அவளுக்கு சாதகமாய் சரவணா பேச, “டேய்… கருப்பு வேண்டாமுனு தான் சொல்லறேன்” என்றார் அற்புதம்.
“சரி விடு” என்று கீர்த்தியிடம் சொன்னவன், “இந்த மாடல்ல வேற கலர் இருந்தா எடுத்து தாங்க” என்று கடை சிப்பந்தியிடம் கேட்டான்.
“அது ஒரே கலர் இருக்குங்க. மத்த எல்லாம் தீந்திடுச்சி… வர இரண்டு நாள் ஆகும்” என்றார் அவர் பதிலுக்கு.
மீண்டும் தனது தேடுதல் வேட்டையை தொடங்கி, கரும்பச்சை நிறத்தில் ஒரு ஆடையை எடுத்து முடித்தாள் கீர்த்தி. மேலும் ஒரு புடவையும் இன்க் ப்ளூ நிறத்தில் எடுத்து முடித்தாள்.
“மாமா… நாங்க கேண்டீன் போறோம். நீங்க எடுத்து முடிச்சிட்டு கால் பண்ணுங்க. அம்மா எப்ப கேட்டாலும் இப்ப தான் போனேன் சொல்லுங்க” என்று தனது சரவணாவிடம் சொல்லி விட்டு கொஞ்சம் காசையும் வாங்கி கொண்டு தனது பெரிய மாமா சங்கரின் பசங்களுடன் சென்று விட்டாள்.
சரவணாவின் திருமணத்தை நினைத்து அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க, அவர்கள் பார்த்த பெண்ணுடன் அது நடக்கவில்லை.
ஆனால் எல்லோரும் ஆசைப்பட்டது போல் கீர்த்தியுடன் நடக்காமல் தமிழரசியுடன் நடந்தது விதியின் விசித்திரமான விளையாட்டு என்று தான் சொல்ல வேண்டும்.
கொடுப்பாள்…

Advertisement