Advertisement

இடம் 16
காலை எழுந்து உணவு உண்டு விட்டு ஆறுதலாக தனது படுக்கையில் படுத்து இருந்தாள் கீர்த்தி.
இன்று மதிய உணவிற்கு மேல் தான் தேவ்வும், கீர்த்தியும் சந்திக்க இருக்கின்றனர்.
பதினொரு மணிக்கு தனது மொபைலில் அலாரம் வைத்து விட்டு கண்களை மூடி தனது படுக்கையில் படுத்து விட்டாள்.
தூங்கி விட்டாள் என்று சொல்ல முடியாது. விழித்து இருக்கிறாள் என்றும் சொல்ல முடியாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் இருந்தாள். கவியும் வந்து அவளை பார்த்து விட்டு தனது அறைக்கு சென்று விட்டாள்.
‘டிக்… டிக்… டிக்…’ என சரியாக 11 மணி 00 நிமிடத்திற்கு அலாரம் அடித்து தனது பணியை சரியாக செய்தது.
அந்த சத்தத்தில் எழுந்தவள், வெளியே வந்து கவியுடன் சேர்ந்து மதிய உணவை சமைத்து முடித்தாள். இருவரும் பொதுவாக பேசி கொண்டே உண்டு முடித்தனர்.
அதன் பிறகு தனது அறையின் உள்ளே சென்று பொறுமையாக இன்று எந்த ஆடையை போட்டு கொள்ளலாம் என்று தேடி, ஒரு கரு நிற பளாசா பேன்டயும் அதற்கு பொருத்தமாக ஒரு பிங்க் நிற மேலாடையும் எடுத்து வைத்து விட்டு குளித்து விட்டு வந்தாள். பிறகு அந்த ஆடையை அணிந்து அதற்கு ஏற்றவாறு தலையில் முன்பிருந்து முடிகளை பின்னலிட்டு பின்புறமாக உள்ள முடிகளை விரித்து விட்டாள். தனக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டு தனது அறையில் இருந்து வெளி வந்தாள் கீர்த்தி. அப்போது மணி 2யை கடந்து இருந்தது.
வெளி வந்தவள் கவியிடம் சென்று, “நான் வெளிய போய்ட்டு வரேன் கா… பாய்” என்று சொன்னாள்.
“எவ்வளவு தூரம் போறடா??. பக்கம்னா ஸ்கூட்டி எடுத்துட்டு போ. வரப்ப பஸ்க்கோ ட்ரைன்கோ வெயிட் பண்ண தேவை இல்ல. சீக்கிரம் வந்துடலாம்” என்று கேட்டாள் கவி.
சிறிது நேரம் யோசித்தவள், “சரி கா. நான் ஸ்கூட்டியே எடுத்துட்டு போறேன்” என்று சொல்லி விட்டு சாவியை எடுத்து கொண்டு கிளம்பினாள்.
நேராக அவள் சென்ற இடம் கடற்கரை தான். அங்கு தான் தேவ் அவளை வர சொல்லி இருந்தான். தானே வந்து அழைத்து கொள்வதாக தான் முதலில் கூறினான். ஆனால் அவள் தான் மறுத்து விட்டாள்.
அவன் சொன்ன இடத்தை அடைந்தாள். இன்னும் தேவ் வந்து இருக்கவில்லை. சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து அந்த வானை நோக்கி கொண்டு இருந்தாள்.
அவசர அவசரமாக அவளை அடைந்த தேவ், “கீர்த்தி… மன்னிச்சிடுடா கிளம்பும் போது ஒரு கால் வந்தது. அத பேசிட்டு வர நேரம் ஆகிடுச்சி. நீ எப்பா வந்த??. ரொம்ப நேரம் தனியா இருந்தயா??” என்று வந்ததும் மன்னிப்பை யாசித்து விட்டு, காரணத்தை தெரிவித்து விட்டு அதன் விளைவுகளை பற்றி கேட்டான் தேவாமிர்தன்.
“அச்சோ ரொம்ப நேரம்லாம் ஆகி இருக்கல தேவ். நீங்க அத நினைச்சி கவலபடாதீங்க” என்று ஒரு புன்னகையுடன் அவனுக்கு பதில் அளித்தாள் கீர்த்தி பிரியம்வதா.
தலையசைத்து விட்டு அவனும் ஒரு புன்னகையுடன் அவளுக்கு அருகில் அமர்ந்து விட்டான்.
நேரங்கள் சில கடக்க இருவரும் எதுவும் பேசி கொள்ளவில்லை. இருவருக்கும் தெரியும் எதை பற்றி பேச இங்கு வந்து உள்ளனர் என்று. கீர்த்தி அவன் கேட்டதும் பதில் சொல்லலாம் என்று இருந்தாள். தேவ் சிறிது நேரம் இந்த தனிமையை ரசிக்கலாம். அதன் பின் அவளது முடிவு என்னவென்றாலும் அதை பற்றி தான் யோசிக்க முடியும் என்று அமைதியாய் இருந்தான்.
கீர்த்தி மூன்று முறைக்கு மேல் அவனை திரும்பி பார்த்து விட்டு வேடிக்கை பார்க்க, தேவ் போதும் என்று நினைத்து அவளுடன் உரையாடலை தொடங்கினான்.
“என்னை உனக்கு புடிக்குமா கீர்த்து??” எந்த ஒரு முன்னுரையும் முகாந்திரமும் இல்லாமல் சட்டென கேட்டு விட்டான். அதற்கு அவளது மறுமொழியும் பட்டென வந்து விழுந்தது.
“புடிக்கும் தேவ்”.
“என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமா??” என்று கேட்டான் தேவ்.
நேற்று அவளது மனமே இந்த கெஸ்டீன் பேப்பரை லீக் பண்ணி விட்டதல்லவா!!. அதனால் அவளது பதில்கள் எந்த தடையுமின்றி பட்டென வந்தது.
“என்னால உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது தேவ்” – கீர்த்தி.
கீர்த்தி லாவகமாக கல்யாணம் செய்ய விருப்பமா?? இல்லையா?? என்ற வினாவுக்கான விடையை தவிர்த்து விட்டு ஒரு பதிலை கூறினாள். ஆனால் அதை அவனும் கண்டு கொண்டு அவளது லாவகத்தை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டான்.
என்ன தான் அவளது பதில் என்னவாக இருந்தாலும் அதை எண்ணி வருந்தாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றே யோசிக்க வேண்டும் என்று அவன் நினைத்து இருந்தாலும், அப்போது சட்டென அதை செயல்படுத்த முடியவில்லை. தான் எந்த விதத்தில் தாழ்ந்து விட்டோம் அவளின் பார்வையில் என்று எண்ணினான்.
ஒரு முழு நிமிட இடைவெளிக்கு பின், “ஏன் கல்யாணம் பண்ண முடியாதுனு தெரிஞ்சிக்கலாமா??” என்று கேட்டான் அவளை பார்க்காமல்.
அவளும் அவனை பார்க்காமல், “சில தனிப்பட்ட காரணங்கள்” என்று சொல்லி முடித்தாள்.
இப்போது அவளை திரும்பி பார்த்தவன், “என்ன பிடிக்காதது தான் காரணம்னா நீ அதை என்கிட்ட சொல்லிடலாம். நான் உன்னை தொல்ல பண்ண மாட்டேன். அதே போல் என் பிராமிஸ நான் காப்பாத்துவேன்” என்று முதல் முறை அவளிடம் தனது விருப்பத்தை சொல்லும் போது அவனது வாக்குறுதிகளை நினைவு படுத்தி சொன்னான் தேவ்.
அவனை தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்வதை விட, தனது சூழ்நிலையை அவனுக்கு சொன்னால் நன்றாக இருக்கும். அவன் தன்னை புரிந்து கொள்வான் என்று தோன்றியது அவளுக்கு.
நேற்று பல முறை யோசிக்கும் போது தோன்றாத இந்த எண்ணம் இப்போது இவன் அருகில் இருக்கும் போது தோன்றியது.
ஒரு முறை மூச்சை நன்றாக இழுத்து விட்டு அவனிடம் எல்லாம் சொல்ல தன்னை ஆயுத்தப்படுத்தி கொண்டாள். ஆம்.. முடிவெடுத்து விட்டாள். தேவ்விடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வது… அதன் பின் அவனது முடிவை பொருத்து தன் குடும்பத்திடம் பேசுவது என்று.
“தேவ்… எனக்கு உங்களை புடிக்கும் தேவ். கல்யாணம் பண்ணிக்க கூட விருப்பம் தான். ஆனா எங்க வீட்டுல அவங்க முழு மனசா என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டாங்க தேவ். அவங்களுக்கு நான்… என்னை…” என்று அடுத்து எப்படி சொல்வது என்று திணற அவள் கையை பிடித்து அழுத்தி கொடுத்தான் தேவ்.
“ரிலாக்ஸ்… எல்லா வீட்டுலயும் பொண்ணு காதல்னு சொன்ன ஒத்துக்க மாட்டாங்க தான். நம்ம பேசி புரிய வைக்கலாம்” என்று அது தான் காரணம் என்று எண்ணி கொண்டு ஆறுதல் படுத்தினான் தேவ்.
“ப்ச்ச்.. தேவ்.. அது காரணம் இல்ல” என்று அவள் சொல்ல, “பின்ன??” என்று புரியாமல் கேட்டான் தேவ்.
“எங்க மாமாவோட கல்யாணம் அப்போ தான் எல்லாமே மாறிடுச்சு” என்று வெறுமையான குரலில் கூறினாள் கீர்த்தி.
அவன் அவளையே பார்த்து கொண்டு இருக்க, அவள் தொடர்ந்தாள்.
“எங்க அம்மா பேரு அற்புதம். அப்பா சண்முக சுந்தரம். அம்மா கூட பிறந்தவர்க மூணு பேரு ஒரு அக்கா இரண்டு தம்பிங்க… அதுல கடைசி தம்பி பேரு சரவண வேல். அவங்களுக்கு தான் ஒரு ஒன்பது மாசம் முன்னாடி கல்யாணம் வச்சி இருந்தாங்க. அப்ப நான் காலேஜ் கடைசி வருடம் படிச்சிட்டு இருந்தேன்” என்று தன்னை பற்றிய முன்னுரையை கூறிவிட்டு அதன் பின் நடந்தவைகளை அவனிடம் முழுதாக கூறினான்.
அதை எல்லாம் கேட்ட தேவ் என்ன சொல்வது என்று புரியாமல் இருந்தது சில விநாடிகளே…
அவளது இரு கைகளையும் தனது இரு கைகளால் பிடித்து கொண்டு, “இதுல உன் பக்கம் எந்த தப்பும் இருக்க மாறி எனக்கு தெரிலடா. அதே போல அந்த நேரத்துல அவங்களுக்கும் வேற வழி தெரிஞ்சி இருக்காது. அதனால தான் உன்ன உங்க மாமாவ கல்யாணம் பண்ணிக்க சொல்லி இருப்பாங்க. நம்ம அவங்களுக்கு சொல்லி புரிய வைக்கலாம்” என்றான் தேவ்.
“புரிஞ்சிப்பாங்களா??” ஏக்கமாய் வந்தது அவள் குரல்.
“கண்டிப்பா…” – தேவ்.
“ம்ம்ம்” என தலையை ஆட்டியவள், “ஆனா நான் திரும்ப வீட்டுக்கு போனா என்னை திட்ட மாட்டாங்களா??. நான் அவங்களுக்கு பெரிய துன்பத்தை தான கொடுத்துட்டு வந்து இருக்கேன். மாமா என்னை பத்தி என்ன நினைப்பாரு. எனக்கு எதும்னாலும் அவரு தான் முன்னாடி வந்து நிப்பாரு. இப்ப அவரையே வருத்தப்படுத்திட்டு வந்த மாறி ஒரே கில்டியா இருக்கு” என்று தனது மனதில் தோன்றியதை எல்லாம் பேசி கொண்டு இருந்தாள். இத்தனை நாள் இதை பற்றி பேச ஆள் இல்லாமல் மனதில் கிடந்ததை எல்லாம் அவனிடம் கொட்டி கொண்டு இருந்தாள்.
பொறுமையாக அனைத்தையும் கேட்டவன், அவளுக்கு ஆறுதல் சொல்லி பக்கத்தில் இருந்த ஒரு உணவு விடுதிக்டு அழைத்து சென்று சின்னதாய் உண்ண வைத்தான். பின் அவள் கவியின் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு தனது வீட்டுக்கு செல்ல துணையாய் தேவ் வந்தான்.
அவள் அவளது வீட்டிற்குள் சென்றவுடன் அந்த அப்பாரட்மென்டில் சிறிய பார்க் போன்ற இடத்தில் அமர்ந்து ஒருவருக்கு அழைப்பை விடுத்து அங்கே வர சொன்னான்.
வந்தது வேறு யாரும் அல்ல… மிதுன் தான்… அவன் தேவ்வுக்கு கீர்த்தியின் தொலை பேசி எண்ணை கொடுத்தது…
கீர்த்தி சொன்ன கதைகளை எல்லாம் முடிந்த அளவு சுருக்கமாய் தேவ் மிதுனிடம் சொன்னான்.
“எனக்கு என்னவோ கீர்த்தியோட மாமாகிட்ட முத பேசனா எதாவது முடிவு எடுக்கலாம் நினைக்கறேன்” என்று மிதுன் சொல்ல, “எனக்கும் அதே தான் தோணுச்சி” என்று அவனை ஆமோதித்தான் தேவ்.
“ஆனாலும் கீர்த்திக்கு உன் மேல ரொம்ப நம்பிக்கை போல…” என்று மித்து மெலிதான குரலில் சொன்னான்… இத்தனை மாதங்கள் தன்னுடன் இருந்தும் தன்னிடம் இதை எல்லாம் அவள் பகிர்ந்து கொள்ளவில்லையே என்று.
“ம்ம்ம்..” என்றவன், “ஆனா அவளுக்கு ரொம்ப தயக்கம்… யாருக்கு தெரிஞ்சாலும் அவளை கெட்டவனு நினைச்சிடுவாங்கனு ஒரு எண்ணம் போல” என்று சொன்னான் தேவ்.
“ஆனா உன்கிட்ட அப்படி தோணல போல” மீண்டும் மிதுன்.
“தெரியல… ரொம்ப நாளா மனசுல இருந்ததால ஒரு சந்தர்பம் வரும் போது சொல்லிட்டானு நினைக்கறேன்” என்றான் தேவ். புரிந்தது என்று தலையசைத்தான் மிதுன்.
அடுத்த ஏழாம் நாள் அந்த கிராமத்தின் சாலையில் தேவ்வின் கருநிற மகிழுந்து நகர்த்து கொண்டு இருந்தது கீர்த்தியின் வீட்டை நோக்கி.
அந்த பெரிய வீட்டின் காம்பவுண்டின் அருகில் காரை நிறுத்தி விட்டு இறங்கி உள்ளே நடந்தான் தேவ். சென்னை போல அங்கே வாட்ச் மேன் எல்லாம் இருப்பது இல்ல. அதனால் கேட்டை திறந்து அவனே உள் நுழைந்தான்.
அங்கே ஒரு இளம் பெண் மஞ்சள் நிற புடவை அணிந்து, குனிந்து முன்புறமாக எல்லா முடிகளையும் போட்டு துண்டை வைத்து தனது முடிகளை அடித்து காய வைத்து கொண்டு இருந்தாள்.
தேவ் போய், “ஹலோ… இங்க சரவண வேல்” என்று அவன் கேட்கும் போது தான் நிமிர்ந்து முடிகளை பின்புறமாக போட்டாள் அவள்… அழகாய் இருந்தாள் அவள்…
கீர்த்தி சொன்னவற்றில் இருந்து அவள் யார் என்று ஒருவாறு கணித்து விட்டான்… அவள்… தமிழரசி… சரவண வேலின் மனைவி…
கொடுப்பாள்…

Advertisement