Advertisement

இடம் 14
அம்பிகா அன்று மதனின் வீட்டிற்கு அமிருடன் வந்து இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அமிர் அவருக்கு தான் அழைத்து மதனின் மனநிலையை கூறி இருந்தான்.
அன்று அவரின் பதிலை கேட்ட அமிருக்கும் ஒரு தெளிவு ஏற்ப்பட்டது. கிட்டதட்ட அதே போல் தான் நேற்று கீர்த்தியும் கவிக்கு கூறினாள். அதனால் தான் மாமியாரும் மருமகளும் என்று எண்ணினான் அமிர். அவன் மனதில் எப்படி இருந்தாலும் கீர்த்திக்கும் தனக்கும் திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்ற எண்ணம் இருந்தது. அதன் விளைவு தான் அந்த மாமியார் மருமகள் என்ற பதம்.
சரி அப்படி என்ன தான் கீர்த்தி கூறினாள்.
“அவர அண்ணானு தான கூப்பிட்டு பேசி வச்சி இருக்கேன். இப்ப போய் கல்யாணம்னு சொன்னதும் சரி சொன்னா என்னை பத்தி என்ன நினைப்பாரு??” என்று கேட்டாள் கவி.
அதை கேட்டதும் ஒரு நிமிடம் இருவருக்கும் என்ன சொல்வது என்று புரியவில்லை.
பின் சுதாரித்து மித்து தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்.
“கவி… இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. இத காரணமா காட்டி இந்த மாப்பிள்ள வேண்டாம் சொல்லறது ரொம்ப சின்னபுள்ள தனமா இருக்கும்” என்றான்.
“ஆமாக்கா… நம்ம வாழ்க்கையில் எத்தனையோ பேர எத்தனையோ சூழ்நிலைல சந்திச்சி இருப்போம். அப்போ அன்னிக்கி இருந்த சூழ்நிலைல அவர அண்ணானு கூப்பிட வேண்டியதா போச்சி. அவ்ளோ தான்” என்றாள் கீர்த்தி.
“ஆனாலும்…” என்று கவி இழுக்க, “சரி. இப்படி யோசிச்சி பாருங்க அக்கா. அன்னிக்கு நம்ம அவருகிட்ட ரொம்ப எதார்த்தமா பேசுனனோம். எப்படி??” என்று புருவத்தை உயர்த்தி, கையை நீட்டி கட்டை விரலை தவிர மற்ற நான்கு விரல்களையும் லேசாய் மடக்கி வைத்து கேட்டாள்.
“அவரு அவரை அண்ணானு கூப்பிட சொன்னதால தான. அவரு நம்மள கம்பர்ட்டபிள்ளா பில் பண்ண வச்சி இருக்காரு. அப்பறம் புதுசா பாத்த நம்மகிட்ட ரொம்ப கொழஞ்சி கொழஞ்சி பேசல. அதுல இருந்தே அவரு நல்லவரு தெரியலையா கா!!” என்று கேட்டாள்.
“ஆமா தான்” – கவி.
“அது மட்டுமில்லாம, இப்ப நம்ம சொல்லுற உறவு முறை எல்லாம் நம்மளா நம்ம நெருங்கிய சொந்தங்கள வச்சி சொல்லிகிட்டது தான். அது எல்லாம் சரியா இருக்கனும் கிடையாது. ஒரு பத்து தலைமுறைக்கு முன்னாடி ஒரு அண்ணா தம்பி இருந்து இருக்கலாம்… காலம் போக போக அந்த குடும்பங்கள் பிரிஞ்சி இருக்கும். அப்பறம் யாருனோ தெரியாதவங்களா ஆகி இருப்பாங்க. எதோ ஒரு வகையில உன் வயசுலயே உனக்கு ஒரு பேத்தி கூட இருக்கலாம். அதெல்லாம் நமக்கு தெரியாது. சோ ஒரு வார்த்தை சொன்னனு அத புடிச்சிட்டு தொங்காத…” என்று ஒரு பெரிய விளக்க உரையை கூறி விட்டு ஒரு குவளை நீரை எடுத்து அருந்தினாள்.
இது… இது தான்… அமிரின் தாயும் அவனிடம் கூறியது. ஆனால் வேறு வார்த்தைகளில், வேறு கோணத்தில்.. ஆனால் அர்த்தம் இது தான்.
‘அடடா!!! மாமியாரும் மருமகளும் ஒரே மாறி எண்ணம் கொண்டவங்களா… கிட்டதட்ட ஒரே மாறி பேசறாங்களே!!!. பிற்காலத்துல பெரிய பிரச்சனை எதும் இல்லாம இருப்பாங்க நினைக்கறேன். வந்தாலும் அவங்களே சரி பண்ணிப்பாங்க. நம்ம தலையிட தேவையில்ல’ வியந்து எதிர்கால திட்டத்தையும் போட்டு விட்டான் மனதிற்குள்ளே.
அவர்கள் மீண்டும் பேச்சை ஆரம்பிக்க, கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பினான் தேவ்.
“அதே தான் கவிமா. அந்த அண்ணாங்கற வார்த்தைக்காக நீ அவர ஒதுக்க வேணாம். ஆனா அந்த வார்த்தைக்கு உணர்வு இருந்தா கண்டிப்பா நீ வேணாம் சொல்லிடலாம். சரியா??” என்று கேட்டான் மித்து.
“ம்ம்ம்… புரிஞ்சது” என்று மித்துவை பார்த்து மண்டையை ஆட்டி விட்டு, கீர்த்தி கையை பிடித்து புன்னகைத்த கவி, “ஆனாலும் நீ இப்படி எல்லாம் யோசிப்ப… இப்படி எல்லாம் பேசுவனு நினைக்கல கீர்த்து” என்று ஆச்சர்யமாகவே சொன்னாள்.
“ஈஈஈ” என்று தனது பல்லை காட்டியவாறே வலது கை ஆள்காட்டி விரலால் தனது பின்னந்தலையை கீறினாள் கீர்த்தி. மித்துவும் அவளிடம் ஏதோ வம்பு வளர்க்க என பேசி கொண்டே உணவை உண்டனர்.
கவியின் மனதை புரிந்து கொண்ட தேவ், இதுவே போதும் என்று அவர்கள் பார்க்கும் முன் கிளம்பி விட்டான். அவனது அடுத்த திட்டம் தனது தாய் அம்பிகாவை வர வைத்து அவனுடன் பேச வைப்பது.
அதை நிறைவேற்ற தான் இன்று இங்கு வந்து இருக்கிறார் அம்பிகா.
அமிர், மதன் மற்றும் அம்பிகா சில பொதுவான பேச்சுக்கு பின், மதனுக்கு வந்த வரனை பற்றி கேட்டார். அவர் இந்த நேரத்தில் இங்கு வரும் போதே புரிந்து கொண்டான் மதன், இதை பற்றி தான் பேச போகிறார் என்று.
அம்பிகாவும் சுற்றி வளைக்காமல், “அந்த பொண்ணு உன்ன அண்ணானு கூப்பிட்டது தான் உன் பிரச்சனையா??” என்று கேட்டார்.
“ம்ம்ம்… அப்படியும் சொல்லிக்கலாம் அத்த” தயக்கத்துடனே மதன்.
“இங்க பாரு மதன். நம்ம ஊருல நம்ம யார பாத்தாலும் எதுனா முறை வச்சி தான் கூப்பிடுவோம். நம்மள பொருத்த வரைக்கும், நம்மள விட கொஞ்சம் பெரியவங்கனா அண்ணா அக்கா, இன்னும் பெரியவங்கனா அத்த, மாமா, வயசானவங்கனா தாத்தா, பாட்டி அப்படி தான் கூப்பிடுவோம். ஆனா கடைசி வரை அந்த உறவு அப்படியே இருக்கும்னு சொல்ல முடியாது. நம்ம இப்ப கூப்பிட்டுகிட்டு இருக்கற முறையும் சரினு சொல்ல முடியாது. இவ்வளவு ஏன் சின்ன தொழில்ல இருந்து பெரிய தொழில் வச்சி இருக்கவரைக்கும்… அப்படி தான். பஸ் கண்டக்டர்ட இந்த இடம் ஒரு டிக்கெட் அண்ணானு சொல்லுவோம். டாக்டர் அங்கிள் எனக்கு கை ரொம்ப வலிக்குதுனு சொல்லுவோம். ஒருத்தங்கள தெரியாத இடத்துலயோ இல்ல அவங்களுக்கு மரியாத குடுக்கனும்னாவோ நம்ம அப்படி தான் சொல்லுவோம்” என்றார்.
“ம்ம்ம்… சரி தான் அத்த” என்று தெளிவில்லாத மனதுடனே கூறினான் மதன்.
“கண்டிப்பா அந்த பொண்ணுக்கு உன் மேலயோ உனக்கு அந்த பொண்ணு மேலயோ சகோதர உணர்வு வந்தா விட்டுடலாம். சும்மா பேச்சு முறைக்காக சொல்லி இருந்தா யோசிக்கலாம் தப்பு இல்ல தான. அந்த பொண்ணு கிட்ட பேசி பாரு. அப்பறம் கூட உன் முடிவ சொல்லு” என்றார் அம்பிகா.
“இல்லனா அந்த சந்திப்பே நடக்கலனு நினைச்சிக்கோ அதுவும் இல்லனா அது சார் மாதிரி உன்ன குறிப்பிட்டு சொல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தைனு நினைச்சிக்கோ. சோ அந்த ஒரு வார்த்தை சொன்னனு அதயே புடிச்சிட்டு தொங்காத… உன் உணர்வுக்கு மதிப்பு கொடுத்தா போதும்” என்று ஒரு வழி சொல்லி முடிவெடுக்க விட்டார்.
இதற்கு மேல் அவன் குழம்பாமல் சரியான முடிவு எடுத்தால் நன்றாய் இருக்கும்.
அதன் பின் இருவரும் யோசிக்க, எத்தனையோ படங்களில் கூட இந்த மாறி வந்து இருக்கு. நம்ம மட்டும் இவ்ளோ யோசிக்கலாம் என்று எண்ண, படக்காட்சிகள் நினைவு வந்தது.
“ப்ரதர் எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு” நஸ்ரியா ஆர்யாவிடம்.
“தம்பி ரோஸ் மில்க் வாங்கி தரேன்டா” சமந்தா விஜய்யிடம்.
இதை எல்லாம் விட இவர்களது நிலைமைக்கு ஏற்றார் போல், “அண்ணா நாங்க பக்கத்து வீட்டுல புதுசா குடி வந்து இருக்கோம். அம்மா சக்கர வாங்கிட்டு வர சொன்னாங்க” என்று ஸ்ரீ திவ்யா விஷ்ணுவிடம்.
அப்பறம்… என்று மூளை இன்னும் நினைவடுக்கில் ஏதேனும் தகவல்கள் இது தொடர்பாக உள்ளதா என்று தேட, போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போய்ட்டு இருக்கு என்று மனம் வந்து அந்த வேலையை தடுத்து நிறுத்தியது.
இதே போல் தானே பேச்சை ஆரம்பிக்க பேசினோம் என்று யோசித்து விட்டு அடுத்தவர் மனதை புரிந்து கொண்டு முடிவு எடுக்கலாம் என்று எண்ணினர்.
அதே போல் எல்லோரும் சேர்ந்து அவர்கள் இருவருக்கும் ஒரு மீட்டிங் அரேன்ஞ் செய்தனர்.
“ஹாய்” – மதன்.
“ஹலோ” – சங்கவி.
“வணக்கம் அன்ட் வெல்கம்” என்று மதன் இலகுவாக சொல்லி ஒரு புன்னகையை அவள் முகத்தில் வர வைத்தான்.
அதன் பின் சில பேச்சுக்களில் அந்த சந்திப்பு வெற்றிகரமாக முடிந்து இருவரும் வீட்டில் தங்களது சம்மதத்தை சொல்லி விட்டனர். மேலும் இன்னும் நான்கு மாதங்கள் கழித்து திருமணம் என்று முடிவு எடுத்தனர் அவர்கள் வீட்டில். அந்த இடைவெளியை அவர்களும் பயன்படுத்தி ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து கொள்ள முடிவெடுத்தனர்.
சோ அவர்கள் தொலைபேசியிலும், சிற்சில சந்திப்புகளிலும் தங்களுடைய மனதை அடுத்தவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக காட்டி, பிற்கால வாழ்க்கைக்கு தேவையான புரிதலை வளர்த்து கொண்டு இருந்தனர்.
அப்படியே நாட்கள் சில கடக்க, அன்று கீர்த்தி அவளது அலுவலகத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து வேலை செய்யாமல், தனது மடிகணினியையும், தனது குறிப்பேட்டையும் எடுத்து கொண்டு அங்கும் இங்கும் யாரோ ஒருவரை வைத்து பேசி கொண்டே குறிப்புகள் எடுத்து கொண்டு இருந்தாள்.
கொடுப்பாள்…

Advertisement