Advertisement

இடம் 13
அந்த கிராமத்தில் ஒரு பெரிய மரத்தின் அடியில், அதன் நிழலில் இருந்த பெரிய கல்லில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர் இருவர்.
அதில் ஒன்று சரவண வேல், மற்றொன்று அவனின் நண்பன் சுந்தர்.
பொதுவாக ஒரே ஊரில் இருப்பவர்கள், சொந்த காரர்ளாகவே இருப்பர். அதே போல் தான் சரவண வேலும் சுந்தரும் ஒன்றாக படித்து இருந்தாலும், சரவண வேல் சுந்தருக்கு மாமா முறை வரும். கீர்த்தி ப்ரியம் வதா, சுந்தருக்கு தங்கை முறை வரும்.
“டேய் மாமா… உனக்கு எப்படி அப்படி நினைக்க தோணுச்சி… தங்கச்சி அப்படி பண்ணி இருக்கும்னு எனக்கு இப்ப கூட நம்பிக்கை இல்ல” என்று சுந்தர் சரவண வேலிடம் கூறினான்.
“ஆனா அவ அப்படி தான் மாப்பிள நடந்துகிட்டா” – சரவண வேல்.
“நம்ம கண்ணு முன்னாடியே வளந்த புள்ள மாமா. எப்படி அப்படி பண்ணி இருக்கும்??. நம்ம வீட்டுல இன்னொரு தடவ கேட்கலாமா??” என்று சுந்தர் கேட்டான்.
“எனக்கும் முதல்ல அப்படி தான் மாப்பிள்ள தோணுச்சி. ஆனா கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்கு வந்ததும் அவ பண்ணது எல்லாம் பாத்தா அது தான் உண்மைனு தோணும்” என்றவன் தொடர்ந்து மேலும் கோபமான குரலில், “வீட்டுல யார்கிட்டயும் ஒரு வார்த்த கூட சொல்லமா, யாரோ ஒருத்தர் கிட்ட சொல்லிட்டு வீட்ட விட்டு போய் இருக்கா. வீட்டுல மத்தவங்கள கூட விடுடா. என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல. சின்ன வயசுல இருந்து எது வேணும்னாலும் என்கிட்ட தான வந்து நிப்பா. இதையும் சொல்லி இருந்தா மாட்டனா சொல்லி இருப்பேன்” என்று சுந்தரை பார்த்து கேட்டான்.
“ஆனா நீ மாட்டனு சொன்னது தான மாமா பிரச்சனை. நீ சரின்னு சொல்லி இருந்தா ப்ரியா இப்ப இங்கே தானே இருந்து இருப்பா” என்று சுந்தர் பொறுமையாக கேட்டான்.
“அதுக்காக எதுல என்னனு யாருக்கிட்ட கேட்கறோம்னு ஒரு தெளிவு வேண்டாமா??” அவன் எதை பற்றி கூறுகிறான் என்று புரிந்து கொண்ட சரவணன் கோபத்துடன் கூறினான்.
“சரி சரி. அத விடு. அதுவே உண்மையானு தெரில. அத சொல்லி இப்ப சண்ட போட வேண்டாம்” என்று அவனை அமைதி படுத்தியவன், “அதுக்காக அப்படியே விட்டுடுட முடியுமா??. என்ன இருந்தாலும் சின்ன புள்ளடா. எங்க என்ன பண்ணுதுனு தெரிஞ்சிக்காம இருக்கலாமா?!” என்று கேட்டான் சுந்தர்.
“தெரிஞ்சி வச்சிக்கலைனு தெரியுமா??. எங்க இருக்கா என்ன பண்ணுறா எல்லாம் தெரியும். பாதுகாப்பா தான் இருக்கா” என்ற சரவண வேல் மேலும் அவன் தகவல்களை கேட்டு சேகரிக்கும் முன் அங்கே இருந்து சென்று விட்டான்.
சுந்தர் தான் மனதில், ‘வெளியே எல்லார்கிட்டயும் வெறுக்கற மாறி நடிச்சிகிட்டே அவள பத்தி எல்லாம் தெரிஞ்சி வச்சி இருக்கான். ம்ம்ம்… இவன் போய் பேசுனா எல்லாம் சரி ஆகிடும். ஆனா அத மட்டும் பண்ண மாட்டான். சரி கொஞ்ச விட்டு பிடிப்போம்’  என்று எண்ணியவன், ‘அய்யோ இன்னும் நிறைய பேசனும் நினைச்சனே. முக்கியமானத பத்தி பேசறதுக்குள்ள ஓடிட்டானே’ என்று புலம்பி கொண்டே தன் வேலையை பார்க்க சென்று விட்டான்.
இங்கே சென்னையில்,
மதிய உணவு உண்ண அந்த டேபிளில் அமர்ந்து இருந்தனர் கீர்த்தி மற்றும் சங்கவி.
“ப்ச்… இந்த மித்துவ பார்த்து ரொம்ப நாள் ஆகுது” என்று கவி சிறிது சலிப்புடன் கூற.
“ஆமாக்கா… என் டீம்னு தான் பேரு… நானே வேலைய தவிர அவன்கிட்ட வேற எதுவும் பேச முடியறது இல்ல. அவ்ளோ பிசி சாரு” என்று அதே சலிப்புடன் கீர்த்தியும் கூறினாள்.
“ம்ம்ம்” – கவி.
“பாருங்க. எப்பவும் மித்து கூட தான காலைல வருவோம். இப்போ பாருங்க… உங்க ஸ்கூட்டில தனியா வரோம். மார்னிங் டாக்ஸ் எல்லாம் மிஸ் பண்ணுறேன் கா” என்று சோகமாக கூறினாள் கீர்த்தி.
“ஆனா இருந்தாலும்… ரொம்ப வேல போலகா. பாவம். இங்க ஆபிஸ் வரணும். அப்பறம் வீடு கட்டறத போய் பாக்கனும். அதும் இல்லாம கொஞ்சம் ஸ்டோர்ஸ்க்கு எல்லாம் கேட்டலாக்(Catalogue) எல்லாம் பண்ணி கொடுக்கறாங்க. அதும் இல்லாம புதுசா வேலைக்கு எடுத்த பசங்க கூட வந்துட்டாங்க. அவங்களையும் பாத்துக்கணும். ம்ம்ம்… அதான் நம்ம கூட ஸ்பெண்ட் பண்ணற டைம் கம்மி ஆகிடுச்சி. அவங்க அவங்க வாழ்க்கையில எல்லாரும் முன்னேறுவாங்க இல்ல. நமக்காக காத்திருக்கனும்னு இல்ல. ஆனா நமக்கு உதவி தேவை அப்போ இருப்பேன்னு ஒரு நம்பிக்கை கொடுத்து இருக்காரு இல்ல கா. அதுவே போதும்” என்று அவனுக்கு இப்போது பரிந்து கொண்டு தன் மனதில் இருப்பதை எல்லாம் பேசினாள் கீர்த்தி.
இதை மட்டும் மிதுன் கேட்டு இருந்தால் மிகவும் மகிழ்ந்து இருப்பான். அன்று கீர்த்தியின் பிறந்த நாள் அப்போது கோவிலில் அவள் பேசியதை கேட்ட மித்துவுக்கு கீர்த்தி தன்னையும் நம்பவில்ல என்று எண்ணினானே!!!. ஆனால் இப்போது அவள் வாயால் அவளுக்கு தேவையான போது அவன் உதவுவான் என்ற அவளது நம்பிக்கை… கேட்டு இருந்தால் மகிழ்ந்து இருப்பான்.
“ம்ம்ம்… புரியுது… நான் உங்க இரண்டு பேருகிட்ட ஒரு முக்கியமான செய்தி சொல்லனும். அது கொஞ்சம் எனக்கு முடிவு எடுக்க உதவி பண்ணனும்” என்று கூறினாள்.
அந்த பேச்சு போய் கொண்டு இருக்கும் நேரத்திலே மிதுன் அங்கே வந்து சேர்ந்தான்.
மிதுன், “ஹாய் கேர்ள்ஸ்… எப்படி இருக்கீங்க??” என்று புன்னகையுடன் கேட்டான்.
“வா மித்து” என்று பொதுவாக இருவரும் கூறினார்கள்.
“மித்து… உனக்கு இன்னிக்கு முக்கியமான வேலை எதுனா இருக்கா??. இல்லனா நம்ம டின்னர் போலாமா??” என்று மெல்லிய குரலில் மெதுவாக கேட்டாள் கவி.
அவளது குரலில் இருந்தே அதை புரிந்து கொண்டவன், “சரி போலாம். இப்போ சாப்பிடுங்க” என்று மூவரும் ஒன்றாக உண்டார்கள்.
வேலையை முடித்து கொண்டு அனைவரும் அவர்களது வீட்டிற்கு சென்றனர். இரவு உணவு நேரத்திற்கு தகுந்த நேரம் பார்த்து மூவரும் ஒரு உணவு விடுதிக்கு சென்றனர்.
உணவை ஆர்டர் செய்து விட்டு, அதற்காக காத்திருக்கும் நேரத்தில் பேசி விடலாம் என்று நினைத்தாள் கவி.
“வந்து எனக்கு வீட்டுல மாப்பிள பாத்து இருக்காங்க” என்று சொன்னாள்.
“ஏய்!!! சூப்பர் கங்க்ரெட்ஸ்.” – மிதுன்.
“காங்கோ கவிக்கா” – கீர்த்தி.
“உனக்கு மாப்பிள்ள பிடித்து இருக்கா??” – மிதுன்.
“அது தான் எனக்கு தெரியல” என்று கவி சோர்வுடன் சொன்னாள்.
ஆனால் இது எதெர்ச்சியாக நடக்கிறதா??!! இல்லை எல்லாம் விதியின் மாஸ்டர் ப்ளானா??!! என்று தெரியவில்லை. அதே உணவு விடுதிக்கு தான் தேவ்வும் வந்து இருந்தான். அவர்களிடம் பேச அவன் அருகில் செல்லும் போது தான் அந்த இறுதி உரையாடல் நடந்தது. அதனால் அவர்களிடம் சென்று பேசாமல்… அருகில் இருந்த டேபிளில், அவர்கள் பேசுவது கேட்குமாறு அவர்களுக்கு முதுகு காட்டி அமர்ந்து விட்டான். அவனுக்கு இதுவும் நல்லது தான் என்று தோன்றியது, மதனிடம் மேலும் பேசும் முன் இவர்கள் மனநிலை தெரிந்து கொண்டால் அதற்கு தகுந்தது போல் அவனிடம் பேசலாம் என்று. அதாவது இவர்கள் மறுப்பது போல் தோன்றினால், மதனின் எண்ணம் சரி தான் என்று பேசலாம்… இல்லை இவர்கள் சரி என்றால் அவனிடம் பேசி புரிய வைக்கலாம்… அதற்கு பிறகு அவன் முடிவு தான் என்று.
“ஏன் அப்படி சொல்லுற??. பிடிச்சது பிடிக்கல தெரியலைனா… அவங்க கிட்ட பேசி பாத்துட்டு முடிவு எடுக்கலாம் நினைக்கறீயா??” என்று கேட்டான் மித்து.
“ம்ம்ம்… அதுவும் தான். அதுக்கு முன்னாடியே ஒரு குழப்பம்” அதே குழம்பிய குரலிலே சொன்னாள்.
“என்னக்கா குழப்பம்??” யோசனையுடன் கீர்த்தி கேட்டாள்.
“அது வந்து…” என்று ஒரு வேகத்தில் அவள் சொல்ல ஆரம்பிக்கும் போது உணவு கொண்டு வந்து வைத்தார்கள். அதனால் அமைதி ஆகி விட்டாள். ஆனால் பேச்சை ஒருவன் கேட்டு கொண்டு இருக்கிறான் என்று தெரியாமல், யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று அவர்கள் உணவை வைத்து விட்டு சொல்லும் வரை அமைதியாய் இருந்தாள்.
அவர்கள் சென்றவுடன் ஒரு பெரு மூச்சை விட்டு, “அது வந்து… மாப்பிள்ளை யாருனா… அன்னிக்கு நம்ம தியேட்டர்ல பாத்தமே அவங்க தான்.” என்று சொன்னாள்.
“யாரு?? தேவ்வா??” என்று அதிர்ச்சியாக கேட்டது கீரத்தியல்ல மித்து தான்.
கீர்த்தியின் மனதில், ‘என்கிட்ட அப்படி இப்படி எல்லாம் பேசுனாங்க… இப்ப வீட்டுல இருந்து பொண்ணு பாத்து இருக்காங்கலாம்… எப்படி அதை ஏத்துக்கலாம் இவரு. எவ்வளவு தைரியம் இருக்கனும். இதுக்கு இருக்கு உங்களுக்கு’ என்று புலம்பி கொண்டும் ஏன் என்றே தெரியாமல் அவனை திட்டி கொண்டும் பின்னால் அவனிடம் உரிமை இருக்குமா என்று தெரியாமல் அவனுக்கு ஒரு தண்டனையும் யோசித்து கொண்டு இருந்தாள்.
அதற்குள் கவி, “சே சே. அவரு இல்ல. அவரு கூட வந்தாரு இல்ல. அவரு” என்று சொன்னாள்.
அப்போது காரணம் புரியாமல் ஒரு நிம்மதி கீர்த்தியிடம் தோன்றியது.
“அந்த அண்ணாவா?? பேரு கூட மதன்” என்று கேட்டாள் கீர்த்தி.
“ஆமா அப்பறம் எக்ஸாக்ட்லி அது தான் பிரச்சனை” என்று மறுமொழி கூறினாள் கவி.
இருவரும் புரியாமல் அவளை பார்க்க, அதை விளக்கி கூறினாள்.
“அவர அண்ணானு தான கூப்பிட்டு பேசி வச்சி இருக்கேன். இப்ப போய் கல்யாணம்னு சொன்னதும் சரி சொன்னா என்னை பத்தி என்ன நினைப்பாரு??” என்று கேட்டாள்.
தேவ்வுக்கு தோன்றியது இது தான். இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கறாங்களே!!! என்பது தான். ஆனால் தற்போது நிச்சயமாக கவியின் முடிவு கீர்த்தியும், மிதுனும் பேசும் படி தான் அமையும் என்று புரிந்தது. மேலும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் அவர்களது முடிவு எதை நோக்கி செல்லும் என்பதை அறிய கூர்ந்து கவனித்தான்.
அடுத்தடுத்து அவர்களுடன் நடந்த உரையாடலை கேட்டவன் மனம் மகிழ்ந்தது மட்டும் அல்லாமல் முகமும் புன்னகையில் விரிந்தது. அடடா!!! மாமியாரும் மருமகளும் ஒரே மாறி எண்ணம் கொண்டவங்களா… கிட்டதட்ட ஒரே மாறி பேசறாங்களே!!! வியந்தவன், அதன் பின் அவர்கள் அங்கே இருந்து கிளம்பும் முன் தேவ் அங்கே இருந்து சென்று விட்டான். அடுத்து என்ன செய்யலாம் என்ற முடிவுடன்.
கொடுப்பாள்…

Advertisement