Advertisement

                             உனை பிரிந்த பின்பும் காதல்

1

அன்பை தேடும் எனக்கும்.,
அன்பே  இல்லா உனக்கும்.,
முடிச்சு போடும் வாழ்க்கை
முற்று பெறுமா., 
முடிவு பெறுமா., 
காலங்கடந்து காதல் 
செய்வோமா.,
காதலே இல்லாமல்
காலங்கள் கடக்குமா…, 

புகழ்பெற்ற மருத்துவமனை வளாகம்., காலை வேளையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அந்த மருத்துவமனையில் இல்லாத வசதிகளே இல்லை எனலாம்., எல்லா பிரிவிற்கான மருத்துவ வசதியும் அங்கு உண்டு.. அது மட்டுமல்லாமல் அங்கு மருத்துவத்திற்கு என்று வந்தால் குணமாகாதவர்கள் எவரும் இல்லை., எனும் சொல்லும் அளவிற்கு நல்ல தரமான மருத்துவ வசதியும் மருத்துவமும் அங்கு கிடைக்கும்…

நான்கு நண்பர்கள் சேர்ந்து தொடங்கிய மருத்துவமனை அது. அவர்கள் நால்வரும் மருத்துவர்கள்., அவர்களின் மனைவியரும் மருத்துவர்கள்., அவர்கள் பிள்ளைகளும் மருத்துவர்கள்., எனவே அந்த நாலு குடும்பத்திலுள்ளவர்களே ஒவ்வொரு துறையிலும் தனித்துவம் பெற்று., அவர்கள் மருத்துவமனையில்  முன்னோடியாக நிற்கும் அளவிற்கு., திறமை வாய்ந்தவர்கள். அவர்கள் குடும்பமே மருத்துவ குடும்பம் என்னும் அளவிற்கு வளர்ச்சிபெற்று நின்றது., நண்பர்கள் நால்வரும்  மிகவும் ஒற்றுமை ஆனவர்கள்., அவர்கள் குடும்பமும் அப்படித்தான்…

நான்கு பேரின் பிள்ளைகளுக்கும் மணமாகி வீட்டிற்கு வந்த மருமகன்.,  மருமகள்., என அனைவரும் மருத்துவர்களே அக்குடும்பத்தில் திருமணமாகாத ஒரே ஆள் மித்ரன் மட்டுமே., மித்ரன் டாக்டர் கந்தசாமியின் மகன்., மருத்துவமனை தொடங்கிய தோழர்கள் நால்வரில் ஒருவர் அவர்..

மற்ற மூவரின் மகன்களுக்கும் மித்ரனின் வயது தான்., ஆனால் ஏனோ மித்ரனுக்கு திருமணத்தின் மீது பெரிய அளவிற்கு ஈடுபாடு எல்லாம் கிடையாது.,  அவனுக்கு அவன் தொழில் தான் எல்லாம் என்னும் அளவிற்கு தொழில் மட்டுமே குறி என்பது போல தான் இருப்பான்…

எனவே தான் திருமணம் வேண்டாம் என்று தள்ளிக் கொண்டே வந்து, இதோ வயது முப்பது தாண்டுகிறது.,  எனவே இப்போது திருமணம் கண்டிப்பாக முடித்தே ஆக வேண்டும் என்ற சூழலில் பெண் பார்க்க ஒரு திருமண தகவல் நிலையத்தில் சொல்லி வைத்திருந்தனர்.

அது மட்டுமல்லாமல் நாலு பேர் குடும்பமும் சேர்ந்து அவனை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னதால் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு சம்மதம் என்ற வார்த்தை அவன் வாயிலிருந்து வந்திருக்கிறது..

அவனைப் பார்க்கும் மருத்துவர்களும் சரி., மருத்துவமனை ஊழியர்களும் சரி மனிதன் என்ற உருவிலிருக்கும் ரோபோ என்று தான் நினைப்பார்கள்., ஏனெனில் அந்த அளவிற்கு தன் முகத்தில்  எந்த உணர்வையும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டான்., அவனுக்கு எப்படி இருப்பது பிடிக்கும் என்று கூட வீட்டில் தெரியாது…

சிறுவயதில் இருந்தே படிப்பு படிப்பு என்று சொல்லி வளர்க்கப்பட்டது ஒன்று.,  மற்றொன்று தாயும் தந்தையும் மருத்துவர்கள் என்பதால் எப்பொழுதும் வேலை வேலை என்று அதிலே அதிக கவனம் செலுத்தியது.., அப்பொழுது தான் மருத்துவமனை தொடங்கிய புதிது, என்பதால் பிள்ளைகளை அருகிலிருந்து மித்திரனின் பெற்றவர்கள் வளர்க்கவில்லை., அவனுடைய சகோதரி அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு வளர்ந்துவிட்டாள். ஆனால் இவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை., ஆனாலும் தன் படிப்பில் கவனம் வைத்து படித்தவன் வீட்டில் மருத்துவம் தான் என்று சொல்வார்கள் என்று தெரிந்து மருத்துவத்தை தேர்ந்தெடுத்து படித்தான்.,  நரம்பியல் சிகிச்சையில் நிபுணன்…

மித்ரனின் அக்கா., அக்கா கணவர் என அனைவரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள்., அக்காவிற்கு இரண்டு பிள்ளைகள் இது தான் டாக்டர் கந்தசாமி குடும்பம்..

மற்றவர்கள் நட்பு வட்டத்தில் இருக்கும் குடும்பங்கள்., எல்லோரும் உரிமையாக பேசக்கூடியவர்கள் உரிமையாக நடந்து கொள்ளக் கூடியவர்கள்…

மித்ரன் இப்போது தான் திருமணத்திற்கு சம்மதித்து இருப்பதால் பெண் பார்க்கும் படலங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது., ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது போல அழகிலும் படிப்பிலும் சிறந்த பெண் கிடைக்காததால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது…

டாக்டர் சிவசங்கர் ., அவர் மனைவியும் மருத்துவர் தான் மகன் இப்பொழுது தான் மருத்துவம் கடைசி வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறான்., சென்னையில் இவர்களும் மற்றொரு ஓரத்தில்  மருத்துவமனை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் டாக்டர் குடும்பம் தான்.,

இவர் மருத்துவமனையிலும் நிறைய பேர் வேலை பார்க்கிறார்கள்., மனைவி கவர்மெண்ட் அரசு மருத்துவமனையில் வேலையும்., மீதி நேரங்களில் அவர்கள் மருத்துவமனையில் சேவையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். இவர்களது இன்னொரு மகள் அதாவது மூத்தமகள் சாரூபா தாய் தந்தையர் சிறுவயதிலிருந்தே வேலை வேலை என ஓடியதில் அவளுக்கு மருத்துவம் மேலிருந்த ஆசையே ஓடி விட்டது.  எனவே மருத்துவம் எடுக்கவே மாட்டேன் என்ற பிடிவாததோடு என்ஜினியரிங் முடித்து., அதில் எம்.ஈ  படித்து பெங்களூரில் உள்ள மிகச்சிறந்த கம்பெனியில் வேலையில் இருக்கிறாள்.

படித்தது எல்லாம் விடுதி வாசம் தான். எனவே கல்லூரி படிப்பு., மேற்படிப்பு.,  இப்பொழுது வேலை என அனைத்தும் விடுதியில் கழிந்து கொண்டிருக்கிறது.,

வீட்டிற்கு வந்தால் இருந்து பேசுவதற்கோ.,  வந்தவளை வா என உபசரிப்பதற்கோ., தாய் தந்தையருக்கு நேரம் கிடையாது. உடன் பிறந்தவனும் கடைசி வருடம் மருத்துவ படிப்பில் இருப்பதால் அவனையும் எதிர்பார்க்க முடியாது., ஏற்கனவே தனிமை பிடிக்காது., எனவே அங்கு பெங்களூரில் தோழிகளோடு இருந்து விடுவாள்., வேறுவழியின்றி எப்போதாவது சென்னை வரும் நேரம் மட்டும் தனியே இருந்து கொள்வாள்..

அவளும் படித்து முடித்து பணியில் சேர்ந்து ஒன்றரை வருடத்திற்கு மேல் ஆனதால் இப்பொழுது அவளுக்கும் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கியிருக்கிறது., கண்டிப்பாக மருத்துவர் வேண்டாம் என்ற கட்டுப்பாடு தான் மாப்பிள்ளை பார்க்க சம்மதித்திருக்கிறாள்…

“சாரூ சீக்கிரம் வா., போலாம் ஆபீஸ கட்டிட்டு அழாத., சீக்கிரமா வா வா”., என்று அவசர படுத்தினாள் தோழி சித்தாரா..

“ஆமா., இது எங்க அப்பா வீட்டு ஆபீஸ் பாரு.,நான் கட்டிக்கிட்டு அழுவதற்கு., நானே கடுப்புல வரேன் பேசாம வா”… என்றாள்.

“ஏண்டி., என்னாச்சு எப்ப பாத்தாலும் கம்ப்யூட்டர் கட்டிட்டு அழுவ., இன்னைக்கு என்ன ஆச்சு கம்ப்யூட்டர் கூட சண்டை போட்டியா”… என்றாள் சித்தாரா…

“நம்ம ஹெட்  கடுப்பேத்துறார்.,  சித்து., ப்ரோக்ராம் எதோ சரியில்லையாம்.,  அத திருப்பி கொஞ்சம் செக் பண்ணி கொடுத்துடு போ னு  சொல்றாரு., அதான் நாளைக்கு பார்க்கிறேன், இல்லாட்டி  ரூமுக்கு போயிட்டு பார்க்கிறேன்  அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டேன்”., என்றாள்.

“இதுக்கு பேசாம நீ உங்க வீட்ல உள்ளவங்கள மாதிரி டாக்டர் கே படித்திருக்கலாம்., இங்க வந்து முட்டிக்கிட்டு நிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது”.. என்றாள்.

“ஸ்ஸ் சப்பா அத பத்தி பேசாத,  இதாவது பரவாயில்ல., காலையில பத்து மணிக்கு வந்தா.,  அட்லீஸ்ட் ஏழு மணி அல்லது எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு போயிடலாம்., ஆனால் அதெல்லாம் அப்படி கிடையாது விடிய விடிய ஹாஸ்பிடல் இருந்தாக்கூட வேலை இருந்து கொண்டே இருக்கும்”.. என்றாள்.

“அது எப்படி சொல்ற., நிறைய டாக்டர்ஸ் குடும்பத்தையும் பார்த்துட்டு ஹாஸ்பிடல் போயிட்டு தான் இருக்காங்க”.. என்றாள்.

“இருக்காங்கப்பா., ஃபேமிலி குடும்பம் எல்லாத்தையும் பாத்துட்டு தங்களோட தொழிலையும் கான்சன்ட்ரேட் பண்ற டாக்டர்ஸ் இருக்கத்தான் செய்றாங்க.,  இல்லன்னு சொல்லல., ஆனா எங்கம்மா அப்பா வந்து அவங்க ஹாஸ்பிடல்ல பெஸ்ட் ஆ கொண்டு வரணும்., சின்ன ஹாஸ்பிடலா இருந்தாலும் பெஸ்ட் ஆ கொண்டு வரணும்னு நினைக்கிறாங்க.,  அவங்க எல்லாம் பாராட்டை எதிர்பார்க்கும் கேட்டகிரி..,  அவங்கள பொறுத்தவரைக்கும் பேர் வாங்கணும்.,  தன்னுடைய பெயரை சொன்னா எல்லாருக்கும் தெரியனும்.,  எங்க அம்மாவும் அப்பாவும்  ரொம்ப சின்சியரா ஃபேஷன்ட்ஸ் கவனிக்கிறது ஆகட்டும்.,  எல்லாமே நல்ல சின்சியரா பண்ணுவாங்க., அவங்களைப் பொறுத்தவரை   ஹாஸ்பிடல் தான் அவங்களோட உலகம்., வீட்டில் இருக்கனும் னு யோசிக்கவே மாட்டாங்க., இப்ப அதுக்கு ஏத்தாப்ல என் தம்பியும் மெடிசின் எடுத்துட்டான்., இன்னும் மூன்று பேரும் ஹாஸ்பிடல்ல உட்காந்துக்குவாங்க.,  வீடு என்று ஒன்று இருப்பதே மறந்துடுவாங்க”…. என்றாள்.

“அவங்க  அவங்க தொழில் அவங்களுக்கு தெய்வம் டி.,  அவங்களோட லெவல்ல அவங்க நல்லா இருக்கணும்னு ஆசை படுறாங்க,  இதுல என்ன தப்பு இருக்கு., நீ ஏன் இப்படி யோசிக்கிற மாத்தி யோசிச்சுப் பாரு., அவங்க பீல்ட் ல அவங்க கால் ஊண்ணனும் னு நினைக்கிறாங்க..,  அவங்களுக்கு தினந்தினம் படிக்கிறதுக்கு ஒரு விஷயம் இருக்கும்., மெடிக்கல் பீல்ட் பொருத்தவரைக்கும் புதுசு புதுசா நோய் வரும் ., அதுக்கு தகுந்த மாதிரி புதுசு புதுசா படிக்கணும்., நோய்க்கு என்ன ட்ரீட்மெண்ட் னு  பார்க்க வேண்டியது டாக்டரோட கடமையாகிறது., அப்படி யோசிச்சு பாரு எத்தனை பேர் உயிரை காப்பாத்துறாங்க.,  அப்படி யோசி.., நீ ஏன் இப்படி யோசிக்கிற”.. என்றாள்.

“தாயே” என்று அவளைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு “இதோட விட்று, எனக்கு உண்மையிலே அந்த பீல்ட்  பிடிக்கல அதனால தான் நான் அந்த பீல்டு வேண்டாம்  னு தான் இங்கே வந்தது., ஏன் னு தெரியலை சின்ன வயசிலிருந்து அப்படி பார்த்து பார்த்து.,  இந்த மாதிரி ஒரு பீல்டுக்கு நம்மளும் போனா., நாளைக்கு நம்ம பிள்ளைகளும் இப்படித்தானே தனியா வளரனும்., என்று ஒரு பயம் வந்துருச்சு..,  அந்த பீல்டு வேண்டாம்னு ஒதுங்கிட்டேன் அவ்வளவுதான்”… என்றாள்.

“சரி வீட்டில் மாப்பிள்ளை பார்க்க சரி னு  சம்மதம் சொல்லிட்டியே., பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா, ஏதாவது அலையன்ஸ் வந்துச்சுன்னு சொன்னாங்களா”…. என்றாள்.

Advertisement