Advertisement

அத்தியாயம் 6

 

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்என்னை

அறியாமல் நுழைந்துவிட்டாய்

கடிகாரத்தில் துளிநொடி

நேரத்தில்எந்தன்

உயிரோடு கலந்துவிட்டாய்

எனக்கு என்னானது

மனம் தடுமாறுது

விழி உனைத் தேடித்தான்

ஓடுது தேடுது”

முதல் ஒரு வாரம் அவனது பழக்கவழக்கங்களுக்கும் வேலை நிலைகளுக்கும் பழகிக்கொள்ள முதலில் திணறித்தான் போனாள்….

    ஒரு வாரத்திற்குப் பிறகு அவனது பழக்கவழக்கங்கள் இவளுக்கு ஓரளவு தெளிவாக தெரிய தொடங்கியது… காலையில் ஐந்தரைக்கு எழுந்து கொள்பவன்., இரவு தூங்குவதற்கு பதினொன்றரை மணி ஆகும் சில நேரங்களில் நேரம் இழுத்துக்கொள்ளும்….

   அவனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவளுக்கு என சில நேரம் ஒதுக்க தவறவில்லை….. அவளுக்குத் தேவையான விஷயங்களை கவனிப்பதிலும் அவளை கவனித்துக் கொள்வதிலும் கவனம் செலுத்தினாலும் அவனது வேலை அதற்கான அதிக நேரம் கொடுக்கவில்லை….

    ஒரு மாதம் சென்ற நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தாலும் இடையில் ஏதோ குறைவது போலவே இருவருக்கும் ஒரு உணர்வு இருந்து கொண்டே இருந்தது….

    அன்று பெரியம்மாவிடம் இருந்து பவித்ராவிற்கு போன் வந்தது…. பவி மா நாளைக்கு ரஞ்சன் ஓட பிறந்த நாள்…

    அத்த தேங்க்ஸ்  நாளைக்கு நான் ஜமாய்க்கிறேன்… என்று சொன்னாள்…

        அதுக்காக மட்டும் சொல்லல அவன் ரொம்ப டென்ஷனா ஆவான்…..  ஏன்னா அவன் பிறந்த உடனே அவங்க அம்மா இறந்துட்டா…. அவனுக்கு பிறந்தநாள் அப்படிங்கிறத  விட அவங்க அம்மாவோட இறந்தநாள் அப்படிங்கிறது மட்டும் தான் அவனுக்கு ஞாபகம் இருக்கும்…. அவன் அன்னைக்கு எப்பவுமே டென்ஷனா தான் இருப்பான்….  அவன் எங்க கூட இருந்தவரைக் அப்படித்தான் இருந்தான்….

இப்போ எப்படி இருக்கான்னு எங்களுக்கு தெரியல ஆனா நீ பாத்துக்கோ….

ஒஒ… சரி அத்தை நான் பார்த்துக்கிறேன் அவங்க அம்மா போட்டோ ஏதாவது இருக்கா அவங்ககிட்ட…

    இல்லம்மா அவன் வச்சிகில்லை அவன் கோபப்பட தான் செய்வான்… அவங்க அம்மா பாட்டி  ஒருதடவ அவங்க அம்மா பத்தி பேசினதுக்கு சுயநலம் பிடித்தவங்க அவங்கள பத்தி பேசாதீங்க ன்னு.,  சொல்லிட்டான்…. ஏன் இப்படி சொன்னான் ன்னு இப்ப வரைக்கும் தெரியல…. திரும்ப அவன கோபப்படுத்த கூடாது என்பதற்காக  நாங்க யாரும் அவன் கிட்ட இதை  பத்தி  பேசறது இல்ல…. நீ அவனை மட்டும் பார்த்துக்கோமா மனசு அளவுல நொந்து போய் இருக்கான்…. ஆனால் எதையுமே எங்ககிட்ட காட்டிக்க மாட்டான்….

     சரி அத்தை நான் பாத்துக்குறேன்….

   அன்று மாலை அவன் வரும்போதே சற்று டென்ஷனாக இருப்பது போலவே இவளுக்கு தோன்றியது….  ஒருவேளை அத்தை சொன்னதை யோசித்துக் கொண்டே இருந்ததால் அப்படி தோன்றுகிறதோ என்று நினைத்துக் கொண்டாள்….

   அவனுக்கு எப்பவும் போல் எப்போதும் போல வேலை இருந்தாலும் அவனது உணவு விஷயங்களையும் மற்றவற்றையும் எப்போதும் போல கவனித்துக் கொண்டாள்…

   ஏதாவது பிறந்தநாள் பரிசாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தாள்….

திருமணத்திற்கு பிறகான அவனுடைய முதல் பிறந்தநாள் என்ற நினைவுகளோடு ஆனால் என்ன கொடுப்பது என்று தெரியவில்லை…. நாளை அவனிடம் அனுமதி வாங்கிக்கொண்டு வெளியே கடைக்கு சென்று வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்….

    நடு இரவில் எழுப்பி பிறந்தநாள் வாழ்த்து சொல்வோம் என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்….  ஆனால் அவன்  என்றைக்கும் விட அன்று சீக்கிரமாகவே வந்து படுத்துவிட்டான்… எப்படி எழுப்ப என்று யோசித்துக் கொண்டே இருந்தால் ஒரே அறை ஒரே படுக்கையை உபயோகித்தாலும் இருவரும் இன்னும் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்காததால் அவனை எழுப்பவும் யோசித்துக் கொண்டே இருந்தாள்….

   சரி காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைவுகளோடு படுத்து சற்று நேரத்தில் எல்லாம் அவன் தூக்கம் இல்லாமல் உருண்டு உருண்டு படுப்பதை கட்டில் காட்டிக் கொடுத்தது….  எப்படி கேட்பது என்பதை யோசித்துக் கொண்டே இருந்தாள்… எப்போதும் அவன்  பேசுவது கூட அன்று பேசாததால்., அவன் அலுவலக டென்ஷனா இல்லை அத்தை சொன்னது போல ஏதேனும் யோசனையா என்ற நினைவுகளோடு அவனிடம் பேச்சு கொடுக்கவும் தயங்கி நின்றாள்….

   சற்று நேரம் பொருத்து பார்த்து அவன் தூங்காமல் எழுந்து கொள்வதும் அமர்ந்து கொண்டு தலையை கோதிக்கொண்டு  இருப்பதை., தூங்காமல் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்ததால் சற்று நேரம் கழித்து அவனது மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருப்பதை புரிந்துகொண்டு மனம் படும் பாட்டையும் ஒரு மருத்துவராக அவளால் புரிந்து கொள்ள முடிந்தது… அவர்களது மருத்துவப்படிப்பில் சைக்காலஜியை படித்திருப்பதால் என்ன நினைப்பான் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது….

   இவள் எழுந்ததை கூட உணராமல் எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்…

சற்று நேரம் பொருத்து பார்த்தவள் அவனிடம் எந்த அசைவும் இல்லை என்றவுடன் மெதுவாக அவன் புறமாக நகர்ந்து அமர்ந்து தோளை தொட்டு சிவாமா என்றாள்…

அவளது அழைப்பு கேட்டவுடன் மெதுவாக திரும்பி பார்த்தவன் கண்கள் கலங்கி இருப்பது இரவு விளக்கின் வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது… மெதுவாக அவனது கையை கோர்த்துக் கொண்டு  அவன் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டாள்….

    என்ன ஆச்சும்மா….

    எப்படி அம்மு என்ன விட்டுட்டு போக அவங்களுக்கு மனசு வந்துச்சு என்றான்….

    பெரிய சுயநலம் இல்ல டா அவங்களுக்கு என்றான்….

    அவனை பேசவிட்டு இவள் அமைதி காத்தாள்…

    அவங்களுக்குப் பிடிக்காத வாழ்க்கை அப்படிங்கிற காரணத்திற்காக அவங்க போனாங்க…..  அப்புறம் என்னை ஏன் பெத்தாங்க…

   அப்பா இருந்தும் அநாதை டா நானு….  அம்மா பிறந்த உடனே போயிட்டாங்க….  என்ன பொறப்புடா நானு…. வரம் வாங்கிட்டு வந்திருக்கேன் போல அப்படி…  அதற்குமேல் அவனை பேசவிடாமல் வாயை மூடினாள்…..

        மீதிய நாளைக்கு பேசுவோம்…  இப்போ என் கிட்ட வாங்க என்று அவனை அருகில் அழைத்து மடியில் சாய்த்துக் கொண்டாள்….

              சற்று நேரம் அமைதியாக படுத்திருந்தவன்….

          அம்மு நா உன்னை கட்டிக்கட்டுமா… என்றான்…. அவள் மடியில் இருந்து தலை எடுக்காமல்…..

       அவன் தலையை கோதி விட்டுக் கொண்டிருந்தவள்., அப்படியே அவன் முகத்தை திருப்பி குனிந்து அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள்….

     அம்மு என்றான் கரகரத்த குரல் உடன்… அவன் உணர்ச்சியின் பிடியில் இருக்கிறான் என்பது அவளுக்கு தெளிவாக தெரிந்தது….

   ம்ம்… சொல்லுங்க மா…. எல்லாத்துக்கும் என்கிட்டே பெர்மிஷன் கேட்கணும்னு அவசியம் இல்ல நான் உங்க வைஃப் என்று அவன் கேட்டதற்கு அனுமதி கொடுத்தாள்….

   மடியிலிருந்து எழுந்த அவன் அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சொன்ன வார்த்தை ஒரு நிமிடம் அவள் உயிர் வரை சென்று வலித்தது….

     நான் குழந்தையா இருக்கும்போது யாரும் முத்தம் கொடுத்தார்களா என்று எனக்கு தெரியாது…. ஆனால் எனக்கு விவரம் தெரிஞ்சு எனக்கு கிடைச்ச முதல் முத்தம்  உன்னோடது என்றான்….

    வேகமாக அவன் நெஞ்சில் புதைத்திருந்த முகத்தை தூக்கி  அவன் முகம் பார்த்தவளுக்கு கண் கலங்கியது…. பின்பு வேகமாக எழுந்து அவனை தன்னோடு அணைத்துக் கொண்டு அவன் முகமெங்கும் முத்தம் பதிக்க தொடங்கினாள்….

    அம்மு என்ற அவனது குரல் அவ்வப்போது வந்தாலும் அவனும் அவள் கொடுத்த முத்தத்திற்கு ஏற்ப பதில் முத்தம் கொடுக்கத் தொடங்கினான்….

   அன்றே அவர்களின் வாழ்க்கைக்கான அடுத்த அத்தியாயம் தொடங்கியது….

   காலை எப்பொழுதும் எழும் நேரத்தை விட தாமதமாகவே எழுந்து வந்தான்…. அவன் வரும்போது இவள் குளித்துவிட்டு அவனுக்கு தேவையான சில வேலைகளை எப்போதும் போல செய்து கொண்டிருந்தாள்….

    எப்போதும் செய்யும் சில உடற்பயிற்சிகளை அன்று விட்டுவிட்டு அவள் நடமாடுவதை ரசித்து கொண்டிருந்தான்…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவனுக்கு முதன்முறையாக வாழ்த்து தெரிவித்தாள்…

      சிரித்துக்கொண்டே அவள் முகத்தை விடாமல் பார்த்துக் கொண்டே இருந்தான்…

     சிவமா டைம் ஆகுது கிளம்புங்க., உங்க பிஏ வந்துட்டாங்கன்னா கிளம்ப முடியாது…. வரும் போதே நாலு பைல  தூக்கி கிட்டே வருவாங்க….  அதனால முதல்ல கிளம்பி இருங்க என்று சொல்லிக் கொண்டிருந்தாள்…..

  எனக்கு விவரம் தெரிஞ்சு நான் ஒரு பொண்ணோட கொண்டாட்ட முதல் பிறந்தநாள்… இதுவரைக்கும் பிரண்ட்ஸ் எல்லாம் கூட இருந்து இருக்காங்க ஆனா நான் பிறந்த நாள் கொண்டாடுவது கிடையாது… ஏன் யாரும் பிறந்தநாள் விஷ் கூட பண்ணினது கிடையாது… காரணம் நான்தான் என அம்மாவோட இறந்தநாள் அப்படிங்கறது  ஃபிரண்ட்ஸ்க்கு தெரியும் அப்படிங்கறதால யாரும் சொல்ல மாட்டாங்க…  பெரியம்மாவும் வேற எதுவும் சொல்ல மாட்டாங்க…. ஆனா இன்னைக்கு நீ சொல்ற பிறந்தநாள் வாழ்த்து சிரிச்சிட்டே கேட்கிற அளவுக்கு நான் வந்து இருக்கேன் என்னை என்னாலேயே நம்ப முடியல போ….

    இது அனைத்தையும் அவன் கிளம்பிக் கொண்டே அவளோடு பேசிக் கொண்டிருந்தான் நம்ப முடியலையா என்றாள்… சிரித்துக்கொண்டே அமைதியாக அவன் நிற்கவும் அருகில் சென்று கழுத்தை கோர்த்து இழுத்து அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தாள்…

Advertisement