Advertisement

அத்தியாயம் 1

 

வளையாமல் நதிகள் இல்லை

வலிக்காமல் வாழ்க்கைஇல்லை ”

ஹாஸ்பிடலிருந்து கிளம்பியவள் நேராக அவள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தாள்.. மருத்துவமனையில் இருந்து வந்ததற்கான அறிகுறி…. அவள் மேல் அடித்த மருந்து வாடையில் தெரிந்தது….. வந்தவுடன் சுத்தம் செய்துகொண்டு உடை மாற்றிய பின் டிவி போட்டுவிட்டு சோபாவில் அமர்ந்தாள்… யாருமற்ற தனிமை அவளது கடந்த காலத்தை அவளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தது…..

அன்று அதிகாலை ஷிப்ட் டிரைனிங்…. ஹாஸ்பிடல் செல்லும் முன் அவளுக்கான உணவை தயாரித்து வைத்துவிட்டு தான் சென்றிருந்தாள்….

உணவே எடுத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்…. காபி டேபிளில் இருந்த அவளுடைய கல்லூரி கால போட்டோவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்…..

அதே நேரம் அந்த வீட்டில் இவளுடன் தங்கி இருந்த அவளுடைய தோழி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள்…

நினைச்சேன் டி….. நீ இப்படித்தான் உக்காந்துட்டு இருப்ப ன்னு….

பொய் தானே சொல்ற…… என்கவும்… அவள் முறைத்துப் பார்க்க….

சுமி…. நீயும் ரமேஷ் ம் காலையிலே வெளியே போயிட்டு என்ன எப்படி நினைச்சேன் ன்னு சொல்ற….. நம்புற மாதிரி கதை விடு…. உனக்கு ரமேஷ் பக்கத்துல இருந்தா சுத்தி என்ன நடக்கு ன்னு கூட தெரியாது….. நீ என்ன நெனச்ச….

லூசு மாதிரி பேசாதடி… ஐந்து பேர் படிக்க வந்தோம்…. நிர்மல் ரீனா ரெண்டு பேரும் ஜெனரல் மெடிஷன் எடுத்தாங்க…. நானும் ரமேஷும் நியூரோ எடுத்தோம்…. நீ மட்டும் அனஸ்தெடிக் எடுத்த….. காலேஜிலிருந்து நம்ம அஞ்சு பேரும் எவ்வளவு திக் ஃப்ரெண்ட்ஸ்….

ஏன் சுமி இப்போ ஏதாவது மாறிடுச்சு நினைக்கிறாயா….

அவர்களின் ஆசையே ஹையர் ஸ்டடிஸ் க்கு லண்டன் வரணும் ன்னு தான்….. இப்போது ஐந்து பேரும் அங்கு தான்…

இடையில் மூன்று மாசம் நீ லீவு போட்டுட்டு போகாம இருந்திருந்தால்… உன் ஸ்டடிஸ் இன்னும் கொஞ்ச நாள்ல முடிஞ்சிடும்….. இப்ப பாரு உனக்கு எக்கச்சக்கம் லீவ் தேவைப்படும் என்ன பண்ண போற….

 லீவு போட்டு… லீவு போட்டு படிப்பேன்..

 எப்படி டி இப்படி இருக்க….. உங்க வீட்ல யார்ட்டயாவது சொல்லுவோம்….

அது எதுக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டாம்….

அப்பா எவ்வளவு அவசரப் பட்டாங்க இந்த விஷயத்துல…. அவங்க தங்கச்சி சொல்றத கேட்டாங்க இல்லை…. இப்ப குறை சொல்றாங்க…. மாற்றி மாற்றி பேசுறாங்க.. இப்படியே இருக்கட்டும்…. யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டாம்…..

உன் பிடிவாதத்தை மாற்ற முடியாது… ஒழுங்கா சாப்பிடு….. எர்லி மார்னிங் போனவ…. இப்ப பத்தாக போகுது….. ஒழுங்கா சாப்பிடு…..

 நீ சாப்டியா என்ன… இல்லன்னா வா சேர்ந்து சாப்பிடலாம்….

சற்று அமைதிக்கு பின்….

சுமி நான் லவ் பண்றேனா…. என்ன….

ஏன்டி…. ஏன்….

எப்பவும் பார்க்கிற அதே இலண்டன் ரோடு தான…. அதே மரம்…. அதே செடி…. அதே ஹாஸ்பிட்டல் … ஆனா எல்லாம் அழகா தெரியுது…. லவ் பண்ணினா இப்படி தான் இருக்குமா….

தாயே பரதேவதை முதல்ல சாப்பிடு…. அப்புறம் யாரு யாரு அழகா இருக்கான்னு சொல்லு….. நானும் லவ் பண்ணினா எப்படி இருக்கும் ன்னு சொல்லுறேன்….

சாப்பிட்டுக்கொண்டே சுமியிடம் கதை பேசிக் கொண்டிருந்தாள்…

சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தவள்…. அமைதியாக இருக்கவும்….

சுமி கேட்கத் தொடங்கினாள்…. ஏன் இப்படி இருக்க….. என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்க…….

 எனக்கென நல்லா தான் இருக்கேன்…. அவரை மட்டும் தான் நெனச்சிகிட்டு இருக்கேன்…..

நினைச்சிட்டு இருந்தா எல்லாம் மாறிவிடுமா….

ஏன் மாறனும் அப்படியே இருக்கட்டும்….

உங்க வீட்ல இத பத்தி பேச கூடாதுன்னு. ப்ராமிஸ் வாங்கிட்ட …. நீயும் எங்க கிட்ட சொல்ல மாட்ட….. அப்புறம் எப்படி தெரிஞ்கிறது…..

தெரிஞ்சி என்ன ஆகப் போகுது…..

 இது உன்னோட வாழ்க்கை டா…..

நாங்களாவது படிப்பை முடிச்சுட்டு இங்கே ஒர்க் பண்ற பிளானில் இருக்கோம்…. நீ இந்தியா போகணும் ங்கிற…. எப்படி சமாளிப்ப தனியா இருந்து……

சமாளித்து விடுவேன்….. நீ ரொம்ப பீல் பண்ணாதே…. வீக் என்ட் எங்க போகணும் ன்னு இப்பவே ப்ளான் பண்ணு…. இல்லன்னா கடைசி நேரம் ரமேஷ் பாடு திண்டாட்டம் ஆயிடும்……..

ரீனா என்ன ஆனா…. ஷிப்ட் கூட லீவு போட்டா……

அவ நிர்மலோட ரிலேஷன் வீட்டுக்கு போய் இருக்கா…. இப்ப வந்திருவா…..

காலையிலேயே வா….

ம்ம்ம்…. ஏதோ… ப்ரையர் மீட்டீங்…

ஆமா…. இது என்னடி….. புது பழக்கம் உன் செல்ல லாக் பண்ணி வச்சிருக்க…. எங்களுக்கு தெரிய கூடாதுன்னு மறைக்கிற அப்படித்தானே….. இந்தியால இருந்து வந்த பிறகு தான் மாறிட்ட…

பின்ன என்னடி எப்ப பாத்தாலும் அவங்களை பற்றி கேட்டுட்டு இருக்கீங்க…. என் செல்ல எடுத்து பாக்குறீங்க…. முன்னாடி என்ன இப்படியா……. வேண்டாம் தெரிஞ்சிக்கவே வேண்டாம் விட்ருங்க……

 முன்னாடி உனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது….. இப்ப அப்படியா உன் மேல நாங்க யாரும் அக்கறை எடுத்துக்க கூடாதா…..

சுமியை கட்டிக் கொண்டவள்…. என் மேல அக்கறை எடுக்க உங்களைத் தவிர யார் இருக்கா….. மற்ற விஷயங்கள் எதுவும் பேசாதீங்க….. நான் இப்பவும் நல்லா தான் இருக்கேன் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது….. ஏன் பயப்படுறீங்க…. ஏன் இன்னமும் யோசிக்கிறீங்க…. நம்புங்க இது எல்லாம் சரியாயிடும்…..

நீ சந்தோஷமா இருந்தா போதும் எங்களுக்கு அது தான் முக்கியம்…. தனியா இருந்துருவீயோ ன்னு பயமா இருக்கு…..

நான் ஏன் தனியா நிக்க போறேன் எனக்குத்தான் ஸ் எனத் தொடங்கியவள்….

அப்படியே நிறுத்தி விட்டு வேறு பேச்சுக்கு தாவினாள்…..

ஆமாடி அந்தப்பெயரை ஒரு நாளைக்கு 1000 தடவை மந்திரம் மாதிரி சொல்லு….. ஆனா எங்களுக்கு தெரிஞ்சிர கூடாதுன்னு மறைத்து வச்சுக்கோ….

ஒரு அமைதியான சிரிப்புடன்…. சுமியின் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்…..

அதே நேரம் இந்தியாவில் பெங்களூரில் புகழ்பெற்ற இடத்தில்…. உள்ள வீட்டில் டாக்டர் ஷ்யாம் அவன் தாயாரிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தான்…..

ஏன்டா இப்படி இருக்க…. நேரத்துக்கு சாப்பிட மாட்டியா…. மணி இப்பவே 3 ஆகுது….

அம்மா ….. முக்கியமான கேஸ் முடிச்சிட்டு வரதுக்கு லேட்டாயிடுச்சு….. என்னமோ டாக்டர் தொழிலை பற்றி தெரியாத மாதிரி பேசுறீங்க…. அப்பாவும் இப்படித்தான் இருந்தாரு….. டாக்டர் க்கு சாப்பாடு தூக்கம் இதுக்கு எல்லாம் டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது……

ஏண்டா டாக்டரும் மனுஷங்கதானே…..

ஆமா இல்ல ன்னு யார் சொன்னா….. ஆனா அதுக்காக அடுத்த உயிரை காப்பாற்றுவதை விட…. மத்தது முக்கியம் இல்லம்மா….

உனக்கு எது முக்கியமோ….முக்கியம் இல்லையோ…. எனக்கு இந்த வீட்டுக்கு சீக்கிரம் மருமக வரணும்… அதுதான் முக்கியம்….

 அது சரி இப்ப மதிய சாப்பாடு போடுற ஐடியா இருக்கா இல்லையா….

அய்யோ நீ உட்காரு டா…… அவன் சாப்பிட அமரவும்…. அவன் தந்தையும் வந்து சேர்ந்து கொண்டார்…. சாப்பிடும் போது இருவரும் ஹாஸ்பிடல் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்…. அன்றைய ஹார்ட் ஆப்பரேஷன் பற்றி சொல்லிக்கொண்டிருந்தான்….. அவன் இதய அறுவை சிகிச்சை நிபுணர்…

ஷ்யாம் மாமா மூணு தடவ போன் பண்ணிட்டார் டா….

அதைப் பற்றி ஏன் சொல்றீங்க…..

நான் என்ன சொல்ல வர்றேன்னா…

நீ எனக்கு அந்த குழம்பு கொஞ்சம் எடு…. என்று ஷியாமின் அப்பா சொல்லவும்…. ஷ்யாம் கைகழுவ எழுந்து போய்விட்டான்….

எனக்கு இன்னைக்கு தான் பேச சந்தர்ப்பம் கிடைச்சிருச்சு பேசவிடாமல் பண்ணிட்டீங்களே…..

உன் வேலைய மட்டும் பாரு…. நீ மட்டும் அவன் பேச்சை மதிச்சி ., சொதப்பாம  இருந்திருந்தா….. இந்நேரம் பேரன் பேத்தி இருந்திருக்கும்….

அந்த பொண்ணு தான் இவன லவ் பண்ணவே இல்லையே ங்க….

 ஆமா… பண்ணல… நீ பேச போய் தான்… இவங்கிட்ட ப்ரண்ட்டா கூட பேச மாட்டேன் ன்னு சொல்லிட்டா… நீ சும்மா இருந்திருந்தால் அந்த பொண்ணே இவனுக்கு கல்யாணம் பேசியிருக்கும்….

அந்த பொண்ணு…. எங்க அப்பா அம்மா சொல்லுறவங்கள தான்…. கல்யாணம் பண்ணுவேன் சொன்னா ல…..  ஏன் என் பையனுக்கு என்ன குறைச்சல்….

உனக்கு வாய் அதிகம் ஆனது தான் குறைச்சல்….. இப்ப தனியா நிக்கிறது யாரு…. நம்ம பிள்ளை தானே…..

அவன் தனியா நிற்கக்கூடாது ன்னு… தான்…. கல்யாணம் பேச ஆரம்பிக்கேன்…. நீங்கதான் தடுக்கிறிங்க…..

 கொஞ்சம் பொறு அவசரப்படாதே…

அதேநேரம் ஷ்யாம் தன் அறையில் ஏன்டா பப்பு….. இந்த காலத்திற்கு உதவாத சென்டிமென்ட் கூட சுத்திக்கிட்டு இருக்க…. மாறவே மாட்டியா என்று புலம்பிக் கொண்டிருந்தான்….

உனக்காக எவ்வளவு நாள் வேனும்னாலும் காத்திருப்பேன்…..என்னை புரிஞ்சுக்கோ…..

என்னை மன்னித்து உன் நட்பு கொடு என்று தன் கைப்பேசியில் இருந்த புகைப்படத்தை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தான்….. யார் பண்ணுன தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனை…. அது எனக்கு மட்டும் ன்னா… தாங்கிக்கிவேன்…. நீ அனுபவிக்கும் போது இன்னும் கஷ்டமா இருக்கு…. காதல் ன்ற வார்த்தை கூட நம்மளை பிரிக்கும் ன்னு…. எனக்கு தெரியாம போயிடுச்சு…… ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்த கடைசிவரைக்கும் காதலை ஏத்துக்கவே இல்ல…. உனக்கு காதல் வரவும் இல்லை…. கடைசி வரைக்கும் நீங்க என்னோட ப்ர்ண்ட் மட்டும் தான் என்று…..

இப்ப பழைய படி ப்ர்ண்ட் ஆவது ஏற்றுக்கொள்….. காத்துகிட்டு இருக்கேன்….

ஹாஸ்பிடலில் அவன் பின்னே சுற்றிக்கொண்டிருக்கும்…. ரமாவையும் இதை சொல்லியே தடுத்துக் கொண்டிருந்தான்…. ரமா அவன் பப்புவின் தோழி…..

அதே சமயம் ஹைதராபாத் ல் மீட்டிங் முடிந்து வேகமாக வெளியே வந்து கொண்டிருந்தான் சிவரஞ்சன்…

அவன் பின்னேயே… அவனுடைய உதவியாளரும்., மீட்டிங்கிற்கு உடன் வந்த சில அலுவலகப் பணியாளரும் ஓடிவந்தனர்…

மொத்தமாக நடந்த கலெக்டர் மாநாடு அது….. அங்கு தன் உதவிக்கென வந்திருந்த உதவியாளரும்…. அலுவலக சார்பாக வந்திருந்த சில பணியாளர்களும் இருந்தனர்…. மாவட்ட வாரியாக சில பிரச்சினைகள் பேசப்பட்டது…. சில மாதங்களுக்கு முன்பு தான் மாற்றலாகி ஹைதராபாத் வந்திருக்கிறான்….

மிகவும் நேர்மையாக இருந்தாலும்…. சில நேரங்களில் வேறு வழியின்றி விட்டுக் கொடுத்துப் போவதும் உண்டு…. மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்…. அரசு அலுவலகங்களில் நடக்கும் பிரச்சனை….

இதற்குமுன் இருந்த கலெக்டரால் சில பிரச்சனைகள் தீர்க்கப் படாமல் இருக்க…. அதற்கான கேள்விகள் இவன் முன்வைக்கப்பட்டது…. அந்த கோபத்தில் மீட்டிங் முடிந்து வேகமாக வெளியேறினான்…..

வெளியேறிய பின் யாருடனும் பேசவில்லை மறுநாள் அலுவலகத்தில் சந்திப்பதாக சொல்லி விட்டு கிளம்பினான்….

பணியாளர்கள் சற்று பயந்து தான் போயினர்….. தங்கள் முன் நிறுத்தி வைக்கப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று…. அந்த பழைய கலக்டர் அதை செய்யாவிட்டாலும் அலுவலக பணியாளர்கள்….. அவர்களுடைய வேலையை கலெக்டரின் தொய்வாள் இவர்களும் விட்டு வைத்திருந்தனர்…. இப்போது எதைச் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்….

கார் பயணத்தின்போது முழுவதும் பழைய நினைவுகள் கிளறி அவனை தவிக்க வைத்தது…..

பக்கத்தில் நீயுமில்லை

பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை

சுவாசிக்க ஆசையில்லை ”

மனம் மறந்து இருந்தாக எண்ணிய ஞாபக அலைகளை அள்ளித் தெளித்தது….

நினைவுகளில் கண் கலங்கினாலும் வெளியே காட்டாமல் ஒரு பெருமூச்சுடன் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்….

அலுவலகம் வந்து இறங்கி…. சற்று நேரத்தில் மீட்டிங் விவாதிக்கப்பட்ட விஷயங்களை அலுவலகத்தில் மீட்டிங் வராமல் இருந்தவர்களோடு கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும்படி ஏற்பாடு செய்தான்…. அங்கு டெப்டி கலெக்டர் ஆக இருக்கும்… ஜாஸ்மின் என்ற பெண் இவனுடன் வந்ததிலிருந்து கொஞ்சம் அதிகமாக உரிமை எடுத்து பழகுவது போல் தெரிந்தது……

சார் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரவா…..

உங்க வேலை எது உண்டோ அதை மட்டும் பாருங்க தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதீங்க…. அன்டர் ஸ்டண்ட்…

உங்களுக்கு காபி குடுப்பது தப்பா சார் என்றால் கொஞ்சும் குரலுடன்….

அது உங்க வேலை இல்லை…. என் தேவையை பாத்துக்க எனக்கு தெரியும்….. என்றான் கோபத்துடன்…. ப்ளீஸ் கோ அவுட்….

வெளியே வந்து உதவியாளரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்….ஏன் இவ்வளவு கோபம் சாருக்கு… எதுவும் பிரச்சனையா… என்றாள்…

அவளைப் பற்றி தெரிந்த உதவியாளர்…. சாருக்கு பொம்பளைங்கன்னா பிடிக்காது….ரொம்ப பேசாதீங்க திட்டு வாங்கி ஒரு வழியா ஆயிருவீங்க… என்று சொல்லி வைத்தார்…

அவள் மனதிற்குள் பேசிக் கொண்டாள்…. ஏதாவது நாளைக்கி காரியம் சாதிக்கலாம் என்று பார்த்தேன்…. சரியான சிடுமூஞ்சியா இருக்காரு …. என்று திட்டிக்கொண்டே வெளியே அவள் இடத்திற்கு சென்றாள்….

மாலைக்குள் அலுவலகம் முழுவதும் உதவியாளர் சொன்ன விஷயத்தை பரவச்செய்தாள்…. கலெக்டரின் காதிற்கு வந்தாலும்…. அவன் கண்டு கொள்ளவே இல்லை மனதிற்குள் நல்லதுக்குதான் என்று நினைத்துக் கொண்டான்….

வீட்டிற்கு வரும் வழியில் உண்மைதான்…. பெண்கள் அனைவரும் சுயநலவாதிகள்….. உன் ஒருத்தியை தவிர என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்….

என் மேல உனக்கு கோபம் இருக்கலாம்…. என்னைக்காவது ஒரு நாள் என்னை கண்டிப்பா நீ புரிஞ்ச்சிப்ப…. அந்த நம்பிக்கையில் தான் இருக்கேன்….. உனக்கு ஏற்றவன் நான் இல்லைன்னு மனசுல தோன்றியது உண்மை தான்….

தினமும் மனசார…. உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு தான் இருக்கேன்…. உனக்கு புரியுமா… புரியாதா….. ன்னு தெரியல ஆனா என்ன மன்னிச்சிடு….

கடைசி வரைக்கும் உன் நினைப்பு மட்டும் எனக்கு போதும்….. நீ எங்க இருந்தாலும் சந்தோஷமா இருந்தால்…. எனக்கு அதுவே பெரிய சந்தோஷம்….

தேடி தவிக்கும்

உள்ளங்களுக்கு

இடையே ……

காதல் கொஞ்சம்

சடுகுடு ஆடுகிறது

 

காதல் வந்து பூக்கும்

உள்ளம் எது என்று

யாருக்கும் தெரியாது…”

Advertisement