மேடையில் ஐயர் ஓம குண்டத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வர சொல்லி அனைவரையும் வேலைக்கு ஏவிக்கொண்டிருக்க, இவற்றை பார்த்தபடி சந்தானம் மற்றும் சீனிவாசன் அமர்ந்து இருந்தனர்.
“ ரொம்ப சீக்கிரமா வந்துட்டோமா சீனி, கொஞ்சம் பொறுத்து கிளம்பி இருக்கலாமோ ? “
“ இல்ல சரியா தான் வந்திருக்கோம் ண்ணா, நாமா தான் கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பிடுவோமே, அதுனால முன்ன வரது தான் சரி “
“ம்ம்ம்…” என்று மேடையை பார்த்திருந்த சந்தானத்தை பார்த்த சீனிவாசன் “ இப்போ பேசுனா சரியா இருக்கும் “ என்று எண்ணியபடி
“ஆமாடா சீனி, இப்போவே கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சா இன்னும் இரண்டு வருஷம் போகட்டும்னு சொல்றா அவ அம்மா “ என்று அவர் சலித்துக்கொள்ள
“அண்ணி சொல்றதும் சரி தான ண்ணா, மகா வயசு என்ன ஆகுது, இப்போ தான இருபது தொடங்குது, ஒரு இருபத்தி மூனுக்குள்ள முடிப்போம் ண்ணா”
“ம்ம்ம் சீனி. அத தான் நானும் யோசிக்கிறேன் “
“அண்ணா இப்போ நான் அத பத்தி பேசல ண்ணா. நம்ம மகா வேலை விஷயமா பேசணும் “ என்று நிறுத்தி சந்தானம் முகம் கான
“ மகா வேலையா ? என்ன உளறுற சீனி, நம்ம வழக்கத்துல பொண்ணுங்கள வேலைக்கு அனுப்பி பழக்கம் இல்லன்னு தெரியும் தான “
“அது தெரியும் ண்ணா, ஆனா அந்த பழக்கம் தான் அந்த காலத்தோட போச்சே, இப்போ நம்ம சொந்தத்துலயே எத்தன பேரு பொண்ணுங்கள வேலைக்கு அனுப்புறாங்க ண்ணா”
“அவனுங்க அனுப்புனா என் பொண்ண நான் அனுப்பனுமா, அதான் நம்ம கடை இருக்கே அப்படி வேலைக்கு போகணும்னா அங்க வர சொல்லு “
“அண்ணா… என்ன இப்படி பேசுறீங்க. நம்ம மகா படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை பாத்தா தான கௌரவமா இருக்கும், நம்ம கடைலன்னா வெளி உலகம் பத்தி தெரியாமலேயே போயிரும் ண்ணா “
“ இப்போ வேலைக்கு போயே தீரனும்னு அந்த கழுதை சொல்றால சீனி…” என்று சந்தானம் முறைக்கவும் இவர்கள் பின்னே இருந்து
“ அத்தான்…. எப்படி இருக்கீங்க…..” என்று குரல் கேட்கவும் இருவரும் திரும்பி பார்த்தனர்.
அங்கு சிரித்த முகமாக அமர்ந்திருந்தவரை பார்த்து சந்தானம்
“நீங்கா….. நம்ம கல்யாணி பெரியம்மா பொண்ணு தான ம்மா….” என்று சந்தேகமாக கேட்கவும்
“ஆமா… அத்தான்… ஞாபகம் இருக்கா என்ன “ என்று அவர் சந்தோஷமாக அவர் அருகே சேரை நகர்த்தி போட்டு பேசவும்
“ஆ… ம்மா எப்படி மறக்க முடியும். என் பொண்டாட்டிக்கு பிடிச்ச தங்கச்சி ஆச்சே நீ…” என்று சீனிவாசன் சிரிக்கவும்
“ ம்ம்ம்…. அத்தான் அக்காக்கு என்ன ரொம்ப பிடிக்கும்….” என்று பெருமூச்சை இழுத்து விட்டவள் மனதை தேற்றிக்கொண்டு
“அப்புறம் அத்தான் பெரிய அக்கா எப்படி இருக்காங்க பசங்க எங்க? யாரையும் கூட்டிட்டு வரலயா அத்தான் “
“இல்லம்மா எல்லாருக்கும் காலேஜ் இருக்கு ம்மா. ஆமா.. நீ யாரையும் கூட்டிட்டு வரலயா ம்மா “ என்று சந்தானம் கேட்கவும்
“ம்ம் இல்ல ண்ணா பையனுக்கு காலேஜ் இருக்கு அவரும் வேலைன்னு போய்ட்டாரு”
“ஒத்தையா வாம்மா வந்திருக்க…” என்று சீனிவாசன் அவரை பார்க்க
“ இல்ல அத்தான் அண்ணா பையன் வரேன்னு சொல்லிருக்கான் “
“அப்போ சரிம்மா “ என்று தலையசைக்கவும் அவர் தயங்கிய படி
“அத்தான் நீங்க பேசுனத இத்தன நேரம் கேட்டுட்டு தான் இருந்தேன். தப்பா நினைக்கலன்னா நான் அதை பத்தி கொஞ்சம் பேசவா அத்தான்? “ என்று கேட்கவும் சந்தானம்
“ம்ம்ம் சொல்லும்மா…” என்று தலையசை மறுநொடி
“படிச்ச படிப்பு எப்பவும் வேஸ்டா ஆக கூடாது அத்தான். பொண்ணுங்களுக்கு வேலை தான் முக்கியம்…” என்று பேச தொடங்கியவர் சந்தானம் சரி என்று ஒத்துக்கொண்டு தலையை அசைக்கும் வரை பேச்சை நிறுத்தவே இல்லை.
இங்கு கண்ணாடி முன் நின்று தலையை வாரி முடித்தவன், டேபிளில் இருந்த வாசனை திரவத்தை தாராளமாக அவன் மீது அடித்துக்கொண்டு, தன்னை திருப்பி திருப்பி கண்ணாடியில் பார்த்துக்கொண்டான்.
“அழகன் டா இன்பா நீ…” என்று அவனுக்கு அவனே நெட்டி முறித்து கோண்டு சொல்லவும் அவன் பின்னே இருந்து ஒரு குரல்.
“உலக அழகனாவே இருந்தாலும் கல்யாணத்துக்கு பேன்ட் போடாம போனா பைத்தியம்னு நினைப்பாங்கடா மாமா..” என்ற குரலில் திரும்பி பார்த்தான் இன்பா.
அவன் நண்பன் மகேஷ் தான் நின்று இருந்தான்.
அவனை மேலிருந்து கீழ் வரை பார்க்க அவன் பார்வையை புரிந்து
“அது அம்மா கொஞ்சம் பசத்த அள்ளி தெழிச்சிடாங்க மாமா அதான் இப்படி லைட்டா வீங்கி இருக்கு “ என்று அவன் முகத்தில் இருந்த வீக்கத்தை தொட்டு பார்த்து வலியில் முகத்தை சுருக்கியவனை பார்த்து
“ நீ எப்படிடா உள்ளே வந்தே…” என்று கேட்டு கொண்டே இடையில் வெறும் உள்ளாடையை மட்டும் அணிந்தபடி நடந்து சென்றான் இன்பா
“என்கிட்ட உன் வீட்டு ஸ்பேர் கீய கொடுத்து வச்சிருந்த..லடா அத வச்சி தான் மாமா வந்தேன் “
“ ஓ…… சரி… ஸ்பேர் கீ போட்டு வர அளவு என்னடா பண்ணி வச்ச மாமா…” என்று பேசியபடி நடந்து கிட்சன் சென்றான்.
அவன் பின்னாலேயே சென்ற மகேஷ் “ அது மாமா நேத்து ஃபுல் போதையில பென்டிரைவ்வ தொலைச்சிட்டேன் டா. இப்போ அது இல்லாம ஆபிஸ் போனா என்ன தொலச்சிடுவாங்க…டா“ என்று தலையை சொரிந்தவன் முன்னே பென்டிரைவ்வை ஆட்டி காட்டவும்
“மாமா…. இத பாக்க என் பென்டிரைவ் மாதிரியே இருக்கு டா…”
“மாதிரிலாம் இல்ல, உன்னுடையது தான் “ என்று அவனிடம் தூக்கி போடவும் அதை கேட்ச் பிடித்த மகேஷ்
“ இது எப்படிடா மாமா உன் கிட்ட வந்திச்சி “ என்று ஷாக் ஆக பாக்க
“அ…. பறந்து வந்திச்சி, அழ பாரு. டேய் போதையில யார் வீட்டுக்கு போறன்னு கூடவா தெரியாது உனக்கு”
“ அதெல்லாம் எவ்ளோ போதையில இருந்தாலும் கரெக்டா வீட்டுக்கு போயிடுவன்டா. ரோட்ல எல்லாம் விழுந்து வைக்க மாட்டேன் “ என்று உறுதியாக சொன்வனின் மண்டையில் கொட்டிய இன்பா
“கீளிச்ச…. நேத்து குடிச்சிட்டு உன் வீடுன்னு இங்க வந்து என்ன டார்ச்சர் பண்ணதும் இல்லாம ஸ்டேடியா பொவன்னு வேற சொல்ற “
“ என்ன மாமா சொல்ற? இங்க வந்தேனா நானா? அன இப்போ எங்க வீட்டுல இருந்து தானடா வரேன் “ என்று குழம்பியவனை பார்த்து
“நைட்டு தோசைக்கு ரசம் தான் வேணும்னு கேட்டு டார்ச்சர் பண்ணியே….. அப்போவே உங்க வீட்டுல உன்ன டெலிவரி பண்ணிட்டு வந்துட்டேன் “ என்று அவன் கையில் காப்பியை இன்பா கொடுக்கவும்
“ என்னது தோசைக்கு ரசமா நானா கேட்டேன்? அதான் அம்மா அப்படி கலிவி ஊத்துனாங்களா என்ன அப்போ இந்த வீக்கத்துக்கு காரணமும் நீ தானா ?“ என்ற மகேஷிக்கு சிரிப்பையே பதிலாக கெடுத்தவன் அவன் தோளில் கை போட்டு
“ இதோ பாரு மாமா…. இப்பவும் சொல்றேன் என்ன மாதிரி மன்த்லி ஒன்ஸ் எடுத்துக்கோ. இப்படி டெய்லி அடிக்காதடா. ஏன்னா…. குடிச்சா… நீ… நீயா இருக்க மாட்டிக்கிற…” என்று தோளில் கை போட்டு நின்ற இன்பாவின் கோலத்தில்
“அந்த வெண்ணை வெங்காயத்தை நான் பாத்துக்குறேன் நீ முதல்ல போய் பேன்டை போடுடா. வீட்டுல தனியா இருந்தா எப்படி வேணா இருப்பியா டா? கண் அவிஞ்சு போச்சி “
“உன்ன யாருடா கீழ பாக்க சொன்னா “ என்று பேசியபடி பேன்டை போட்டவன்
“சரி மாமா….. வீட்ட பூட்டிட்டு போ எனக்கு டைம் ஆச்சி நான் கெளம்புறேன் அத்தை வெயிட் பண்ணுவாங்க“ என்று சென்று விட்டான்.
கீழே பார்க்கிங்கில் இன்பா அவனின் பல்சர் மீது ஏறி அமர்ந்த மறு நொடி அவனின் போன் சத்தம் போட்டது.
உதட்டில் தோன்றிய புன்னகையுடன் அழைப்பை எடுத்து காதில் வைத்தான்.
“ஏ…. இன்பா எவ்ளோ நேரம் டா.. இங்கே கல்யாணமே முடிஞ்சிடும் போல. கல்யாணத்துக்கு வரியா இல்ல காலி மண்டபத்த பாத்துட்டு போவோம்னு வரியா…” என்று பல்லை கடித்து கொண்டு பேசும் சித்ராவின் குரலில் இருந்த கோபத்தை புரிந்தவனாக
“இதோ கிட்ட வந்துட்டேன் அத்தை ஒரு பைவ் மினிட்ஸ் அத்தை…” என்று சமாளித்து போனை வைத்தவன் சொன்னது போல ஐந்து நிமிஷத்தில் மண்டபத்தை அடைந்திருந்தான்.
பைக்கை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு மண்டபம் உள்ளே நுழைந்து அவன் அத்தையை தேட அங்கே சித்ரா யாரோ இருவருடன் அமர்ந்து பேசி கொண்டிருப்பது தெரியவும் நேராக அவர்கள் அருகே சென்றான் இன்பா.
“ அத்தை…..” என்று அழைத்தபடி அவர் அருகே சென்று இவன் நிற்க
“வாடா இன்பா எவ்ளோ நேரம் வெயிட் பண்றது “
“அது கொஞ்சம் டிராபிக் அத்தை “ என்று எப்போதும் சொல்லும் பொய்யை சொல்லி விட்டு அவர் காட்டிய இடத்தில் அமர்ந்து கொண்டான்.
உடனே சித்ரா இன்பாவை காட்டி “ இதோ இவன் தான் என் அண்ணா பையன் இன்பரசன் ஒரு பெரிய கம்பெனில ஆடிட்டரா இருக்கான்” என்று சந்தாணம் மற்றும் சீனிவாசனை பார்த்து அறிமுகம் படுத்தவும் இன்பா கைகளை கூப்பி இருவருக்கும் வணக்கம் வைத்தான்.
“ பரவாயில்லையே ம்மா நல்ல படிப்புலாம் படிச்சி இருக்கார் தம்பி “
“ ஆமா அத்தான், இவன் கம்பெனில தான் வேலை இருக்குன்னு சொன்னேன். நம்ம மகா பொண்ண அங்க வந்து இன்டர்வியூ அட்டன் பண்ண சொல்லுங்க. அங்க கிடைச்சா என் அண்ணன் பையன் பக்கத்துல இருந்து பாத்துப்பான்ல “ என்று சிரித்தவரை முறைக்க முடியாமல் கடுப்புடன் பார்த்தான் இன்பா.
“இல்ல சித்ரா தம்பிக்கு எதுக்கு சிரமம் “
“அட சிரமம்லாம் இல்ல அத்தான், அந்த கம்பெனி கூட உங்க வீட்டுக்கு பக்கம் தான் அத்தான். அவ போயிட்டு வர சுலபமா இருக்கும் “
“அப்படியா பக்கத்துலயேவா வேலை?” என்று ஏதோ யோசித்தவராக இன்பாவின் முகத்தை பார்க்க, அவனோ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல மண்டபத்தை சுற்றி பார்த்து கோண்டிருந்தான்.
அதை பார்த்த சித்ரா இன்பாவின் காலை மிதித்து விட, அவன்
“அ…. அத்தை காலு ” என்று சத்தமாக கத்தி விடவும்
“அச்சோ இன்பா தெரியாம மிதிச்சிட்டேன் டா…” என்று சிரித்து மழுப்பியவர், அவனுக்கு கண்ணை காட்ட அதன் அர்த்தம் புரிந்தவன்.
“இந்த அத்தைய..” என்று நொந்து கொண்டவனாக ஒரு கார்டை கொடுத்து மறுநாள் ரெஸ்யூம் ஓடு இன்டர்வியூக்கு வர சொன்னான்.
அதன் பிறகு அந்த கார்டை வாங்கிக் கொண்டு கல்யாணம் முடிந்து இவர்களும் கிளம்பி விட்டனர்.
இன்பா முகத்தை தூக்கி வைத்து கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தவனிடம்
“இதையே சொல்லி சொல்லி எத்தனை பேருக்கு வேலை வாங்கி தர வச்சிருக்க தெரியுமா அத்தை? எனக்கு இந்த சொந்தங்கள பிடிக்காதுன்னு தெரிஞ்சும் நீ இப்படி என்ன பண்ண வைக்கிற அத்தை…”
“இன்பா…தங்கம் அந்த மகா பொண்ணு நல்ல பொண்ணு டா, சொந்தம் னு பார்க்காம ஏதோ தெரிஞ்சவுங்கன்னு பண்ணுடா…”
“அதான் கார்ட் கொடுத்துருக்கேனே இதுக்கு மேல என்ன பண்ண? “
“டேய் ரொம்ப பேசாம வண்டிய எடு” என்று சித்ரா பைக்கில் ஏறி அமரவும், இன்பா வாய்க்குள்
“நான் ரொம்ப பேசுறேனா நேரம் தான் ” என்று முனங்கிய படி சென்றான்.
அதன் பின் இரவு சமையல் சித்ரா உடன் சமைத்து இருவரும் உண்ட பிறகே சித்ரா வீடு சென்றார்.
மறுநாள் காலை எப்போதும் போல பைக்கில் ஆபிஸை அடைந்த இன்பா பார்க்கிங்கில் பைக்கை விட்டு விட்டு உள்ளே நுழைய அங்கே நுழைவாயிலில் மகா அவள் சித்தப்பா சீனி உடன் ஏதோ பேசிக்கொண்டு நின்றாள்.
முதலில் இவர்களை கவனிக்காதவன் பின் ஏதோ தோன்ற திரும்பி பார்த்தான். அவன் கண்ணில் சிக்கியது அவளின் கார்கூந்தல் அதை பார்த்தவன் மனதில் ஏதோ குறுகுறுப்பு தோன்ற அப்படியே நகர்ந்து அவள் பக்கவாட்டில் சென்று தூரத்தில் இருந்து அவள் முகம் பார்த்தான்.
கையில் ஃபைலை இறுக்கமாகப் பிடித்தபடி கண்கள் அலைபாய ஒருவிதத் தடுமாற்றத்துடன் ஏதோ பேசியபடி நின்றவள், அடிக்கடி அந்த ஃபைலை இருக்கி நெஞ்சோடு பிடித்துக்கொண்டும், அடிக்கடி நாவால் உதட்டை ஈரமாக்கிக் கொண்டும் நின்றவளைப் பார்த்தவன்.கண்கள் பெரிதாக விரிய அப்படியே அசையாது நின்று விட்டான்.
உடல் எங்கும் புது இரத்தம் பாய ஏதோ ஒரு வித பரவசம் கால்கள் அவளிடம் செல்ல துடிக்க கண்கள் அவளை விட்டு நகர்வேனா என்று சண்டி தனம் செய்ய அவனை மறந்த நிலை.
என்ன இது இப்படி ஒரு உணர்வு? ஏதோ நெடுநாள் தேடித் திரிந்த பொருள் கை சேர்ந்த உணர்வு. ஒரு வித சந்தோஷம், பயம், பதட்டம் என்று முகத்தில் அத்தனை உணர்வுகளையும் தேக்கி நின்றுகொண்டிருந்தான்.
பார்த்தான் அவளை, அவனின் அவளாக போறவளை. இன்பாவின் இன்பமாக போகின்ற மகாவை பார்த்து அவனை மறந்து நின்றான்.
அன்றிலிருந்து அந்த நொடியிலிருந்து வெறும் இன்பாவாக இருந்தவன் மகாவின் இன்பாவாக மாறிப்போனான்.