அத்தியாயம்28

பிரித்தாளும் சேர்ந்தாலும் என் காதல் என்றும் நீயே…..

சென்னையில் மூன்று மாதங்களில் கதையை எழுதி முடித்த ஜெனிஷா அதன் முதல் புக் காப்பியை கையில் எடுத்து பார்த்தாள். அதன் அட்டை படத்தில் “தங்கமே…” என்ற வார்த்தைகள் கொட்டை எழுத்தில் பொறிக்கப்பட்டு இருக்க அதை பார்த்து சிரித்தவள்.

“மேம் இதை பார்த்து என்ன ரியாக்ஷன் தர போறாங்களோ “ என்றவள் அன்றே மகாவை காண புறப்பட்டு சென்றிருந்தாள்.

மகா தற்போது இருப்பது இன்பாவின் அப்பா அம்மா வீட்டில் தான். இன்பா சென்ற பின் அவனின் நினைவுகள் அதிகம் இருக்கும் இடம் இது என்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்துவிடுவாள்.

அவன் அப்பா அம்மா வாழ்ந்த வீட்டை தற்போது வரை அன்று போல இன்பா ரசித்த இடத்தை எல்லாம் அழகாக பராமரித்து வருகிறாள்.

ஜெனிஷா அந்த பெரிய வீட்டின் முன் நின்று அண்ணாந்து வீட்டை பார்த்தவள்.

“சென்னையில இப்படி ஒரு பாரம்பரிய வீடா “ என்று வாயை பிளந்து கொண்டு அந்த வீட்டை ரசித்த படியே நின்று கொண்டிருந்தாள்.

அப்போது எங்கோ இருந்து ஒரு பந்து அவள் கையில் பலமாக வந்து மோதி விட ஜெனிஷா வலி தாங்காது கத்தியிருந்தாள்.

அவள் சத்தத்தில் பயந்து போய் சிறுவர்கள் இவளை சுற்றி நின்று

“அச்சோ ஆன்ட்டி….சாரி, சாரி தெரியாம பட்டுருச்சு சாரி ஆன்ட்டி “ என்று வித விதமாக மன்னிப்பு கேட்டு நிற்க ஜெனிஷா நெஞ்சில் கை வைத்த படி

“டேய் தம்பிகளா…. திரும்பி கூட ஒரு வாட்டி அடிச்சிக்கொங்கடா ஆனா ஆண்டினு மட்டும் கூப்பிடாதீங்கடா “ என்றவளை அந்த ஆறு சிறுவர்களும் மேலும் கீழும் பார்த்துவிட்டு ஒருவர் முகம் ஒருவர் பார்த்து கொள்ள.

அவர்களின் பார்வையில் ஜெனிஷா “ என்னங்கடா இப்படி பார்க்கிறீங்க “ என்று கையை தேய்த்த படியே கேட்கவும் அவர்களுள் சிறியவனான ஒருவன்

“இல்ல பாக்க ஆண்டி மாதிரி இருக்க உங்கள எப்படி பொய் சொல்லி அக்கான்னு கூப்பிடுறதுன்னு தான் பாக்குறோம் “ என்றவனை பார்த்து முறைத்தவள்.

“ஜான் சைஸ் இருந்துட்டு என்ன வாய்டா “

“நான் எங்க வாய் பேசுனேன் உண்மைய தான சொன்னேன்.” என்று தோளை உலுக்கி நின்றவனை பார்த்து முறைத்தவள்.

“ பால மேல அடிச்சதும் இல்லாம என்ன கிண்டல் வேற பண்றிங்களா….. உங்க அம்மா அப்பா எங்கடா “ என்ற கேள்விக்கு சிறுவர்கள் ஒன்று போல வீட்டை நோக்கி கை நீட்டவும் ஆறு பேரையும் புரியாமல் பார்த்தவள்.

மீண்டும் மகா மேம் கொடுத்த கார்டை திருப்பி பார்த்து விட்டு “ டேய் தம்பிகளா உங்களுக்கு மகா மேம்ம தெரியுமா “

“ம்ம்ம்…. தெரியுமே அவங்க எங்க பெரியம்மா தான் நீங்க பெரியம்மா தேடியா வந்திருக்கீங்க? “

“ என்னது பெரியம்மாவா அப்போ நீங்க எல்லாம் சுபா மேம் குணா மேம் ஜெயா மேம் பசங்களா “ என்று ஆசையாக ஆறு பேரையும் இவள் பார்த்து நிற்கவும்.

சிறுவர்கள் உஷாராக அவளை ஒரு அடி பின்னே நகர்ந்து பார்த்து

“ யார் நீங்க எதுக்கு எங்களை பத்தி கேக்கிறீங்க எங்க அம்மா அப்பா யாருன்னா உங்களுக்கு என்ன “ என்று கோரசாக கேட்டு நின்றவர்களை ஒரு நிமிடம் புரியாமல் ஏன் இந்த கேள்வி என்று பார்த்தவள்.

பின் புரிந்ததும் புன்னகைத்து விட்டு “ என்னடா மகா மேம் ட்ரெயினிங்கா. பரவால எல்லாம் அலர்ட்டா தான் இருக்கீங்க “ என்று கன்னம் கிள்ள கை எடுத்து சென்றவளை விட்டு நன்றாக நுகர்ந்து நின்றவர்கள்.

“நீங்க இன்னும் யார்னு சொல்லல ஆண்டி “

“ அடேய் ஆண்டின்னு சொல்லாதீங்கடா நெஞ்சி வலியே வந்திடும் போல “ என்று நெஞ்சை பிடித்துகோண்டு நின்றவளை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவரும் நெருங்க வில்லை அதை பார்த்த ஜெனிஷா.

“பசங்க ரொம்ப தெளிவு தான் போல ” என்று முணுமுணுத்தபடி, “சரி தம்பிங்களா எனக்கு நேரம் ஆகுது, நான் உங்ககிட்ட அப்பறம் பேசுறேன் “ என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல முயன்றவளை,

வழியை மறைத்து நின்ற ஆறு பேரும், “ நே…. நீங்க யாருன்னு தெரியாம வீட்டுக்குள்ள நாங்க விட மாட்டோம் “

“அட பாவிங்களா என்ன ஏதோ டெரரிஸ்ட் ரேஞ்சுக்கு பாக்குறீங்களே டா “ என்று நொந்தவள் என்ன செய்ய என்று தவித்து நிற்கும் போதே வீட்டில் உள்ளே இருந்து லேகா ஓடி வந்து,

“டேய் வாலுங்களா, ஜெனிய மறைச்சி என்னடா பண்றீங்க “ என்று ஆறு பேரையும் நகர்த்த அவர்களுள் பெரியவனான தானுஷ்,

“ உங்களுக்கு இவுங்கள தெரியுமா அக்கா “

“ம்ம்ம் தெரியும் டா என் ஃபிரண்டு தான் இவுங்க “ என்றதும் அனைவரும் நகர்ந்து நிற்கவும்,

“ லேகா இவுங்கலாம் யார் பசங்க கொஞ்சம் இன்ட்ரோ பண்ணி விடுங்களேன் “ என்றவளுக்கு சிரித்தபடி அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.

சுபாவுக்கு இரு மகன்கள், பெயர் யுவன், நவின்.

குணாவிற்கும் இரு மகன்கள், பெயர் தனுஷ், அர்வின்.

ஜெயாவுக்கு இரட்டை மகன்கள், பெயர் அர்ஜூன், அரவிந்த். இவர்களே இந்த கூட்டத்தில் சிறு பிள்ளைகளாக இருந்தனர்.

“ சூப்பர் அப்போ எல்லாருக்கும் பாய் பேபி தானா “

“இல்ல இவுங்களுக்கு எல்லாருக்கும் ஒரு குட்டி சிஸ்டர் இருக்கா பேரு ஐலா ஜெயா சித்தி பொண்ணு மூனு வயசு தான் ஆகுது உள்ள இருக்கா “

“ஓ…. சூப்பர் சூப்பர் நான் பார்க்கலாமா “

“தாராளமா” என்று உள்ளே அழைத்து செல்ல அங்கே உள்ளே கூடத்தில் குணா பேசிக்கொண்டிருந்தவள் ஜெனியை பார்த்து தலையசைக்க இவளும் தலையசைத்த படி உள்ளே சென்றாள்.

வீடு விசாலமாகவும் அழகாகவும் அந்தக் காலத்து வீடாகவே உள்ளேயும் இருக்க அவற்றை சுற்றிப் பார்த்தபடி வந்தாள் ஜெனிஷா.அங்கே ஒரு அறையில் குழந்தை சிரிப்பு சத்தோடு மகாவின் சத்தமும் கேட்க அங்கே சென்று பார்த்தாள்.

மகாவின் மடியில் ஐலா அழகாக அமர்ந்திருக்க அவளுடன் சிரித்து கதை பேசியபடி இருந்தாள்.

ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்க அதை கவனித்தபடி அமிர்தம் மறு பக்கம் அமர்ந்திருந்தார்.

ஜெனியை பார்த்த மகா “ஏ… ஜெனி எப்படி இருக்க…” என்று புன்னகை மாறாமல் கேட்டவளுக்கு,

“ம்ம்ம் நல்லா இருக்கேன் மேம் “ அவள் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து “ எப்படி இருக்கீங்க மேம் “ என்று அமிர்தத்திடம் இவள் விசாரிக்க,

“அட பாட்டி-ன்னு கூப்பிடு ம்மா … நீ எப்படி இருக்க அங்க டெல்லில வச்சி சரியா பேச முடியாம போயிடுச்சி. டீ காப்பி எதாவது குடிக்கிறியா “

“இல்ல பரவாயில்ல பாட்டி குடிச்சிட்டு தான் வந்தேன் “

“அட வீட்டுக்கு வந்துட்டு எதுவும் வேணான்னா எப்படி நீ இரு இதோ வரேன் “ என்று எழுந்து சென்றவர்,

“அப்பறம் லேகா அந்த குட்டிய கொஞ்சம் பாத்துக்கோ அந்த வயர புடிச்சி இழுக்குறா “

என்று சொல்லிவிட்டு அவர் சென்று விட,

“உடம்பு எப்படி இருக்கு மேம் இப்போ பரவாயில்லையா “

“இப்போ ஓகே தான் ஜெனி அப்பறம் புக் என்ன ஆச்சி “ என்று ஆர்வம் மின்ன கேட்டவருக்கு அந்த புக்கை எடுத்து அவர் கையில் கொடுக்கவும் அதை ஆனந்தமாக வாங்கியவர் அந்த அட்டை படத்தையே தொட்டு தடவி,

“நேம் சூப்பர் ஜெனி அழகா இருக்கு புக் தங்கமே…. சூப்பரா இருக்கு என் இன்பா கூப்பிடுற மாதிரியே இருக்கு “ என்று அந்த அட்டை படத்தையே பார்த்துக்கொண்டிருந்தவரை,

“வெளியவே பாத்தா எப்படி மேம் உள்ளயும் பாருங்க “

“அது இப்போ படிக்க மாட்டேன், பொறுமையா, நிதானமா நிறுத்தி தான் படிப்பேன்” என்று நெஞ்சோடு அதை அணைத்து பிடித்துக் கொண்டாள்.

அவளின் செயலில் சிரித்த ஜெனிஷா, “சரி மேம், நான் அப்போ கிளம்புறேன். நீங்க உடம்ப பாத்துக்கோங்க” என்று புறப்பட போனவளை நிறுத்தி மதிய உணவு உண்ண வைத்து விட்டே அனுப்பினர். அப்போதும் அவள் செல்லும் போது ஜெனிஷா

“புக் ரிவ்யூ கேட்க வருவேன் மேம். ஒரு வாரத்துல படிச்சி ரெடியா வைங்க” என்று சொல்லி விட்டு சென்றவளுக்கு தெரியவில்லை மறுநாளே இங்கு வந்து நிற்போம் என்று.

எதுவும் அறியாது மகிழ்ச்சியாக கை அசைத்து சென்றவளை வாசல் வரை சென்று லேகா அனுப்பி வைக்க உடன் சென்றாள்.

“லேகா மேம்க்கு இப்போ ஓகேவா?”

“ம்ம்ம்… ரொம்ப இம்ப்ரூவ்மென்ட் இல்ல. நாளும் ஒரு நம்பிக்கை வந்திருக்கு. அம்மாவ சரி பண்ணிரலாம்னு அம்மா கூட முன்ன மாதிரி ஜாலியா இருக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க சிஸ்டர்ஸா சேர்ந்து பேசி சமச்சின்னு அம்மா செம ஹாப்பி தெரியுமா?”

“நிஜமாவா லேகா?” என்று ஜெனிஷா மகிழ்ச்சியாக கேட்டு நிற்க, லேகா

“நேத்து கூட நாலு பேரும் பாயசம் பண்றேன்னு கிட்சனை கோதறி வச்சி பாட்டி கிட்ட அத்தனை திட்டு வாங்குனாங்க.”

“என்னது இந்த வயசுல பாயசம் பண்ண தெரியாம திட்டு வாங்குனாங்களா?”

“ஆமா ஜெனி, இங்க அம்மாக்கு தான் ஓரளவு சமைக்க தெரியுமாம். மத்த சித்திகளுக்கு சுத்தமா தெரியாதாம். வீட்லையே இன்ன வரை ஏதோ ஒப்பேத்திட்டு இருக்காங்களாம்.

இதுல நேத்து அம்மாவ சேர்ல உக்கார வச்சி அவங்க சொல்ல சொல்ல பருப்பு பாயசம் செய்றேன்னு அதை தீய வச்சி சோதப்பிட்டாங்க. அதை பார்த்த பாட்டி அப்பறம் மூணு பேரையும் தொரத்தி தொரத்தி அடிக்கிறன்னு சூப்பரா இருந்துச்சி.”

அதை கேட்டு ஜெனியும் சிரித்தபடி இருக்க லேகா அவள் கைகளை திடீரென்று பிடித்து, “ரொம்ப தேங்க்ஸ் லேகா, அம்மா கேட்டதும் அவங்களுக்கு புக் எழுதி தந்ததுக்கு.”

“அட விடுங்க லேகா, எங்க மேம்காக நான் எது வேணா செய்வேன், இந்த சின்ன விஷயம் செய்ய மாட்டேனா?” என்றவளை அணைத்து விடுவித்தவள்

“அடிக்கடி மெசேஜ், கால் பண்ணுங்க ஜெனி” என்று விட்டு அவளை அனுப்பி வைத்துவிட்டால்.

அதன் பின் மகா அந்த புத்தகத்தை அனைவரையும் அனுப்பி வைத்து விட்டு ஒரு ஒரு பக்கமாக ரசித்து படுத்த படி இருந்தவளுக்கு நேரம் போவதே தெரியாமல் இரவு ஆகிவிட அமிர்தம்

“மகா வா… சாப்பிட்டு அப்பறம் படி” என்று அவளை இழுத்து சென்று விட்டார். அதன் பிறகும் இரவு மாத்திரை உண்டதால் மீதம் படிக்க முடியாமல் போய்விட அதை அவள் அருகில் வைத்தபடி தான் படுத்தும் உறங்கினாள்.

அவள் அருகில் படுத்த அமிர்தம் மகாவை ஒரு பார்வை பார்த்து விட்டு தான் உறங்கி போனாள்.

தினமும் ஒரு வேலை, டீரிப்ஸ், நிறைய மாத்திரை என்று அவளின் மூளையில் இருந்த கட்டி சிறிது குறைந்து காணப்படவும் டாக்டர்கள்

“எண்ணும் கொஞ்சம் குறைஞ்சா போதும் ஆப்ரேஷன் செய்து நல்ல படியா ட்யூமரை ரிமூவ் செய்து விடலாம்” என்று உறுதியாக சொல்லியிருக்க அத்தனை சந்தோஷம்.

இவை அனைத்தையும் கேட்டு மகா மகிழ்ந்தாளா? என்றால் அது அவளுக்கே தெரியாத ஒன்று. இவளுக்கு பிரெய்ன் ட்யூமர் என்று சொன்ன போதும் பயப்படாமல் எப்படி இருந்தாளோ அதே போல் தான் இப்பவும் “ஓ… அப்படியா” என்று தான் இருந்தாள்.

அந்த ரிசப்ஷனில் அனைவரும் என்ன நினைச்சி இருக்கா இவள் என்று தான் யோசித்து இருந்தனர். ஆனால் இப்போது டாக்டர்கள் நம்பிக்கையாக இப்படி சொல்லவும் அவளுக்கு சரியானல் போதும் என்று தான் மகிழ்ந்தனர்.

கதிரவனுக்காக வானம் செம்மையை பூசிக்கொண்டு காத்திருந்த அந்த விடிந்தும் விடியாத நேரத்தில் மகாவின் தூக்கம் கலைந்து விட கண்களை திறந்து பார்த்தாள்.

அருகில் அமிர்தம் உறங்கி கொண்டு இருக்கவும் திரும்பி நேரத்தை பார்க்க அது நான்கரை என்று காட்டியது.

“யாரும் என்னும் முழிக்கல போல “ என்று மெதுவாக எழுந்து அமர்ந்தவள், வீட்டின் அமைதியில் அவளின் தங்கை புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து அறையை விட்டு வெளியே சென்றாள்.

அறையை விட்டு வெளியே வரவும் பறவைகள், அணில்கள் சத்தம் இசையாக வீட்டின் பின்புறம் கேட்க, கால்கள் தானாகவே அங்கே நகர்ந்து சென்றன.

வெளியே வானம் இளஞ்சிவப்பு கலந்த நீலமாக காட்சியளிக்க, அதை பார்த்தபடி பின் திண்ணையில் அமர்ந்தாள். அப்போது அவள் காதில் கேட்ட சத்தத்தில்

“ நீங்க சொன்ன மாதிரியே சத்தம் கேட்குதுடா, கேட்கவே சூப்பரா இருக்கு “ என்று கண்களை மூடிக்கொண்டு சாய்ந்து இருந்தவள் காதில்

“ம்ம்ம் டா தங்கமே “ என்ற சத்தத்தில் உதடு சிரிக்க கண்களை திறக்காத மகா

“ இப்போதான் வரணும்னு தோணுச்சா இன்பா “

“ இல்ல இப்போதான் என்ன உன் கிட்ட காட்ட முடிஞ்சுது தங்கமே…” என்றவனின் பதிலில் கண்களை வேகமாக திறந்து அவனை பார்க்க, இன்பா அழகாக சிரித்தபடி அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

கண் இமைக்க மறந்து அவனை பார்த்து இருந்தவள் “ இது உண்மையா நீ தானடா “ என்று கைகள் நடுங்க அவனை தொட போக அதற்குள் இன்பா அவள் கையை இறுக பிடித்துக்கொண்டு

“ உன் இன்பா தான் ம்மா …” என்ற அடுத்த நொடி அவள் தோளில் சாய்ந்து அத்தனை அழுகை இத்தனை ஆண்டின் பிரிவிற்கும் சேர்த்து அழுதுகொண்டிருந்தவளின் தலையை தடவி விட்டவன்.

“தங்கமே…. அழாத…” என்றவனுக்கும் என்ன பேச என்று தெரியாமல் அவளை நெஞ்சில் புதைத்துக்கொண்டு அப்படியே இருந்து விட்டான்.

எத்தனை நேரம் அப்படியே இருந்தார்கள் என்று தெரியவில்லை மகா கண்களை துடைத்தபடி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து

“திருப்பியும் என்ன விட்டு போயிடுவியா டா “ என்ற கேள்விக்கு மௌனமாக அவளை பார்த்தவன்.

“என் கூடவே இருக்கியா தங்கமே…” என்று அவள் முகம் தாங்கி நெற்றியில் முத்தம் வைக்கவும். முகம் பிரகாசமாக மாற சரி என்று வேகமாக தலையசைத்தவளை அவன் தோளில் சாய்த்துக்கொண்ட இன்பா அவள் தலைமீது இவன் தலை சாய்த்துக்கொண்டான்.

அங்கு உதயமாகும் கதிரவனை இருவருமாக இணைந்து பார்த்தனர் அவர்கள் மட்டும் அங்கு இணையவில்லை இருவரின் உயிரும் தான். உன்னில் நான் என்னில் நீ கலந்த முடிவில்லா பயணத்தை இந்த இரு காதல் மனங்களும் தொடங்கினர்.

காலை மணி ஐந்து ஆகியிருக்க சத்தியா இரவு பணியை முடித்துக்கொண்டு அப்போது தான் உள்ளே நுழைந்தான்.

“இந்த மகா தூங்காம எங்க எழுந்து போனா “ என்று புலம்பியபடி அமிர்தம் எழுந்து வர அவரை பார்த்த சத்தியா

“என்ன ஆச்சு பாட்டி, அம்மா எங்க போனாங்க? “

“உள்ள தூங்கிட்டு இருந்தா, முழிச்சி பார்த்த அவள காணோம் “

“காணோமா அம்மாவ இங்க தான் இருப்பாங்க பாட்டி “ என்று இருவரும் மகாவை அழைத்தபடி தேடி சென்றனர்.

சத்தியா பின்புறம் வாசல் திறந்து இருப்பதை பார்த்து அங்கே சென்று பார்க்க மகா சுவற்றில் தலை சாய்ந்தபடி மடியில் புத்தகத்தை வைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தவன்.

“பாட்டி அம்மா இங்க தான் உக்காந்துட்டு இருக்காங்க “ என்றபடி மகா அருகில் சென்று

“என்னம்மா இது இவ்ளோ சீக்கிரமா எழுந்து இங்க உக்காந்திருக்கீங்க “ என்று அவள் தோளை தொட அசைவே இல்லை அதில் பயந்த சத்தியா மகாவின் முகம் பார்க்க புன்னகை முகமாக கண்கள் மூடி அமர்ந்தவள் போல் தான் தெரிந்தது.

அதில் “ அம்மா…. அம்மா….” என்று உலுக்க மகா உடல் சரிந்து கீழே விழ போக அவளை தாங்கி பிடித்த சத்தியா “ அம்மா….” என்று கத்தியிருந்தான்.

அவன் சத்தத்தில் அனைவரும் எழுந்து வந்து பார்த்து கத்தி கதறி நம்ப முடியாமல் மகாவை உலுக்க அந்த குடும்பமே நிலை குழைந்து தான் போனது.

மகாவின் உடலை இறுதி சடங்கிற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க அத்தனை மக்கள் கூட்டம் வந்து பார்த்து சென்று கொண்டிருந்தனர்.

இவை அனைத்தையும் கைகோர்த்த நிலையில் காற்றில் அசையாடும் உருவங்களாக

“ ரொம்ப கஷ்டப்படுறாங்க இன்பா பார்க்க கஷ்டமா இருக்கு “

“ஆமாடா தங்கம் நம்ம பசங்க ரெண்டு பேரும் உடைஞ்சு போய்ட்டாங்க “ என்றவனை அதிர்ந்து பார்த்தவள்.

“ நம்ம பசங்கள உங்களுக்கு தெரியுமா இன்பா “

“ அட, என்னடி லூசு தனமா தங்கமே நான் தான் இத்தனை வருஷமா உங்க கூடவே இருந்து உங்கள பார்த்துட்டு தான இருந்தேன் எனக்கு தெரியாம எப்படி இருக்கும் “

“ எல்லாம் பார்த்துட்டு இருந்தீங்களா அப்போ அந்த கனவுல வந்து நீங்க பேசுனது “

“ம்ம்ம் நான் தான்டா உன்னை அப்படி பார்க்க முடியாம தான் பேச வந்தேன் “

“அதுக்கு அப்புறமா ஏன் நீங்க என் கனவுல வரவே இல்ல அதுவும் அம்மா இன்னொரு கல்யாணம் பத்தி பேசுனப்போ எப்படி உடைஞ்சு தனியா அழுதேன் அப்ப கூட நீங்க வரலையே “ அதை கேட்ட இன்பா திரு திரு என முழித்த படி

“ அது வந்து தங்கமே….” என்று இழுத்து நிறுத்த அவனை சந்தேகமாக பார்த்த மகா “ ஒழுங்கா உண்மையை சொல்லுங்க “ என்று மிரட்டவும்

“அது நீ வேற கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கனும்னு உன்ன பார்க்க வரல தங்கமே “ அதை கேட்டு தலை சாய்த்து பார்த்த மகா

“எப்படி… உன்ன மறந்து வேற கல்யாணம் பண்ணிகிட்டா நான் சந்தோஷமா இருப்பன்னு நினைச்சியா “ என்று முறைத்தவள் அவள் பாட்டுக்கு அவன் கையை தட்டிவிட்டு செல்ல

“அட மட்டி எருமை எப்போ என்ன பேசணும்னு உனக்கு புரியுதா “ என்று அவன் தலையில் அவனே தட்டிக்கொண்டு மகா பின்னே

“தங்கமே…. எங்கடா போற நான் அது அப்போ நினைச்சதுடா “

“எப்போவா இருந்தா என்னங்க உங்க ஆசைய நிறைவேத்த வேணாமா “

“என்னது ஆசைய நிறைவேத்த போறாளா… “ என்று முனங்கியவன் “டேய்… தங்கமே…. என்னடா சொல்ற “

“ம்ம்ம்…. இங்க வேற பையன் யாராவது கல்யாணத்துக்கு கிடைக்கிறாங்களான்னு பார்க்குறேன் “

“ அச்சோ…. தங்கமே….. உனக்கு நான் இருக்கும் போது வேற யாரும் எதுக்குடி என்ன வேணும்னா இன்னொரு வாட்டி கல்யாணம் பண்ணிக்கோ “

“அ…. பனை மரத்துல பாதி உயரத்துல இருக்குற நீ எல்லாம் எனக்கு வேணாம் “ என்றபடி காற்றில் கலைந்து வேகமாக சென்றவள் பின்னயே

“தங்கமே…. தங்கமே…. மன்னிச்சிடு தங்கமே ….” என்று கொஞ்சிக்கொண்டு இருவரும் ஒருங்கே செல்ல இவர்களை பார்த்துக்கொண்டிருந்த காலம் சிரித்த படி

“ எத்தனை பிறப்பு எடுத்தாலும் எத்தனை காலம் சென்றாலும் அவளுக்கு அவள் தான் இருவரின் உயிர் இன்று போல் என்றும் இணைந்தே இருக்கும். அவனின் அவளும் அவளின் அவனும் இருவருமே “ என்று பார்த்து ரசித்தது.

முற்றும்…….