அத்தியாயம்25

“தங்கமே….தங்கமே….. எழுந்திரி டி….. நேரம் ஆச்சு ….” என்ற இன்பாவின் குரலில் இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்தவள் எழுந்து அமர்ந்தாள்.

ரூமில் இன்பாவைக் காணாது சுற்றி பார்க்க நேரம் எட்டை தொட்டிருந்தது.

“அய்யோ… இவ்ளோ நேரம் தூங்கிட்டேனா…“ என்று பதறியவள் குளியல் அறை புகுந்து வேகமாக ரெடியாகி ரூமை விட்டு வெளியே வர

“இதை குடிச்சிட்டு பேகை பிரிப்பேர் பண்ணி எடுத்துட்டு வா தங்கம்” என்று கையில் டீ கப்பை கொடுத்து விட்டு இன்பா செல்லவும்

“இன்பா நீங்க குடிச்சிட்டீங்களா …” என்று சத்தமாக மகா கேட்க

“ம்ம்ம் டா தங்கம் டைம் ஆச்சு நீ போய் எடுத்து வை “ என்று அவளை அனுப்பி வைத்தவன் சமையல் அறையில் தேங்காய் சட்னியை தாளித்து கொண்டு தோசை ஊற்றிக் கொண்டும் நின்றான்.

திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் வாழ்க்கை சிறு ஓடை போல சந்தோஷம், சண்டை என்று பல ஏற்ற இறக்கங்களை பார்த்து நகர்ந்து கொண்டிருந்தது.

சுபா, குணா இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் மகா யூ.பி.எஸ்.சி யில் அவளின் இரண்டாம் நிலை தேர்வுக்காக கிளம்பி கொண்டு இருக்கிறாள்.

அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வந்த மகாவுக்கு, இன்பா தோசையை ஊட்டி விட்டு இவனும் உண்டு என்று இருவருமாக கிளம்பி சென்றனர்.

தேர்வு எழுதும் இடத்தில் இறக்கி விட்ட இன்பா “ பயப்படாம நல்லா எழுதணும் தங்கம், யூ கேன் டூ இட் “

என்று அவளை அனுப்பி வைத்தவன் அவளுக்காக காத்திருக்க தொடங்கினான்.

இரண்டு மணி நேரம் கழித்து முகம் பளிச்சென்று வந்தவளை சிரித்த முகமாக வரவேற்ற இன்பா

“ என்ன தங்கம் முகம் ஜோலிக்குது நல்லா எழுதியிருக்கியா? “

“ம்ம்ம் இன்பா கஷ்டமா வரும்னு பயந்தேன் பட் எல்லாம் ஈசியா தான் வந்திச்சி “

“அப்போ கண்டிப்பா ட்ரீட் வைக்கணுமே தங்கம் “

“ம்ம்ம்…. அதெல்லாம் வச்சிறேன் “ என்று முகம் சிவந்து நின்றவளின் கையை அழுத்திய இன்பா.

“பப்ளிக் டா தங்கம் வீட்டுக்கு போலாம் “ என்று இருவரும் பைக்கில் ஏறி சென்றனர்.

“ தங்கம் ஹோட்டல்ல சாப்பிட்டு போலாம் டா “ என்று விட்டு இருவரும் ஒரு ஹோட்டலுக்கு சென்றிருந்தனர்.

மதிய வேலை என்பதால் ஹோட்டல் கூட்டமாகவே இருக்க, இன்பா, மகா இருவரும்  டேபிளில் சென்று அமர்ந்து உணவு ஆர்டர் செய்து அமர்ந்திருக்கும் நேரம்.

இவர்களின் எதிரே இருந்த டேபிளில் ஒரு வயது குழந்தை ஒன்று இன்பாவை கை காட்டி அழுவதை பார்த்த மகா இன்பாவிடம் அதை காட்டி

“அந்த பாப்பா ரொம்ப நேரம் உங்கள பாத்து தான் அழுற ங்க “

“அப்படியா?” என்று திரும்பி பார்த்தவன் அந்த குழந்தை கை நீட்டி அழவும்

“இதோ வரேன்தங்கம்”

என்று அந்த டேபிளில் சென்று அந்த குழந்தையிடம் அருகே தான் சென்றான்.  அந்த குழந்தையோ தேம்பி தேம்பி அழுதவள் இன்பா வரவும் அவன் மீது தாவி ஏற முயல அவனும் குழந்தையை வாங்கிக் கொண்டான்.

குழந்தை இவனிடம் வரவும் அழுகையை நிறுத்திவிடவும் , அந்த குழந்தையின் பாட்டி

“ சாரி ப்பா தம்பி! அது அவுங்க அப்பா ஊர்ல இருக்காங்க உங்கள பாக்க அவுங்கள மாதிரியே இருக்கு தம்பி. அதான் பாப்பா உங்கள அவ அப்பான்னு நினைச்சி அழுது தம்பி “ இதை கேட்டு இன்பாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

அந்த குழந்தையும் அடிக்கடி இன்பாவின் முகத்தை பார்ப்பதும் அவன் தோளில் சாய்வதுமாக இருப்பதை பார்த்தவன்.

“அப்பாவ ரொம்ப மிஸ் பண்றா போல, நீங்க சாப்பிடுங்க அது வரை நான் பாப்பாவ பாத்துக்குறேன்”

“அன தம்பி….” என்று அவர் தயங்க இன்பா

“பரவாளங்க நீங்க சாப்பிடுங்க அதுவரை பாப்பாவ வச்சிக்கிறேன் “

என்று மகா அருகில் வந்து அமரவும் மகா குழந்தையின் கன்னம் கிள்ளி

“ஓய் பாப்பா இங்க பாருங்க, இங்க பாருங்க” என்று எத்தனை முறை கூப்பிட்டும் குழந்தை இன்பாவை விட்டு தலையை கூட திருப்பாமல் அவன் முகத்தையே பார்ப்பதை பார்த்த மகா,

“ரொம்ப ஏங்கி இருக்கா இன்பா குழந்தை.”

“ம்ம்ம்…” என்றவன், அவனும் சாப்பிட்டு அந்தக் குழந்தையின் அம்மாவிடம் கேட்டு அவர் கொடுத்த உணவை ஊட்டி விட , அந்தக் குழந்தையும் செம்மத்தாக சாப்பிட்டு முடித்தது.

சிறிது நேரம் கழித்து அந்தக் குழந்தையின் அம்மா வந்து குழந்தையை தூக்கிக்கொண்டு செல்ல, குழந்தை அத்தனை அழுகை அழுதது.

இன்பாவின் கழுத்தை கட்டிக்கொண்டு வர மாட்டேன் என்று அழுது தீர்த்த குழந்தைக்கு, அவள் அப்பாவின் வாய்ஸை போட்டு காட்டி கஷ்டப்பட்டு தூக்கி சென்றனர்.

அதில் இன்பா, மகா இருவருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட, மகா

“நமக்கும் இப்படி பாப்பா இருந்தா நல்லா இருக்கும்ல இன்பா” என்ற கேள்விக்கு அவனும் ஆமாம் என்று தலையசைத்தான்.

பின் இருவரும் கிளம்பி அவர்கள் அப்பார்ட்மெண்ட்டுக்கு சென்று விட்டனர்.

அங்கு சென்றும் மகா முகம் ஏதோ யோசனையாகவே இருப்பதை பார்த்த இன்பா,

“தங்கம்……” என்ற அழைப்புக்கு சட்டென பறந்து வரும் மகா, இவளை அழைத்தது கூட தெரியாமல் ஏதோ யோசனையில் இருந்தவளை.

“மகா…..” என்ற இன்பா போட்ட சத்தத்தில் திடுக்கிட்டு அவனை பார்த்து திரும்பியவள்.

“என்ன இன்பா ஏன் இப்படி கத்துறிங்க?” என்று சாதாரணமாக கேட்டவளை அயர்ந்து போய் பார்த்தான்.

இதற்கு முன் மகா என்று தெரியாமல் அழைத்தால் போதும் முகத்தை ஏழு முழத்துக்கு தூக்கி வைத்துக்கொண்டு அவன் பின்னாலேயே அடுத்து தங்கமே என்ற அழைப்பு கேட்கும் வரை சுற்றும் மகா, இப்போது அவன் அழைப்பில் கவனம் இன்றி இருப்பவளை அருகில் அழைத்து அமர செய்தவன்.

“என்னம்மா என்ன யோசிக்கிற?”

“ஒன்னும்… ஒன்னும் இல்லையே” என்று தலையை திருப்பியவளை கூர்ந்து பார்த்தவன்.

“அப்போ ஏதோ இருக்கு கரெக்டா தங்கமே?” என்றதும் முழித்த மகா

“அது இன்பா….” என்று தயங்கி நிறுத்த,

“என்ன பிரேக் போட்டு யோசிக்கிற என்னன்னு முழுசா  சொல்லு.”

“நமக்கு மேரேஜ் முடிஞ்சி இத்தனை வருஷம் ஆகியும் ஏன் இன்பா இன்னும் பாப்பா வரல” என்று சோகமாக முகத்தை வைத்து கேட்ட மகாவின் மூக்கை பிடித்து ஆட்டியவன்.

“இதை தான் தலையில போட்டு குழப்பிட்டு இருந்தியா டா?”

“ம்ம்ம் இன்பா” என்று தலையசைத்தவளின் தலையில் கை வைத்தவன்,

“நம்ம பாப்பா சீக்கிரம் வந்து உன்ன டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு கொஞ்சம் பொறுமையா வராங்களோ என்னமோ டா.”

“ப்ச் விளையாடாத இன்பா, அம்மா கூட இப்போலாம் அடிக்கடி கேக்குறாங்க உன் படிப்புக்காக தள்ளி போடுறியான்னு.”

“நம்ம தான் அப்படி எதுவும் பிளான் பண்ணலையே தங்கம் இல்லன்னு சொல்ல வேண்டியது தான.”

“அதை சொல்லிட்டேன், அதுக்கு தான் அம்மா என்ன ஹாஸ்பிடலுக்கு கூப்பிடுறாங்க.”

என்று தலையை குனிந்தவளை பார்த்து முறைத்தவன்.

“ஏ… செக்கப்னா எனக்கும் சேர்த்து தான பண்ணுவாங்க. அப்போ நம்ம தான சேர்ந்து போகணும். உன்ன மட்டும் கூட்டிட்டு போய் என்ன பண்ண போறாங்க அத்தை.”

“அது வந்து இன்பா “என்று திகைத்து நின்றவளின் தோளில் கைபோட்டு அணைத்த இன்பா.

“என்ன டா உனக்கு….. என்ன இப்போ ஹாஸ்பிடல் போய் பார்க்கணுமா?” என்றதுக்கு ஆம் என்று அவள் தலையசைக்கவும்.

“சரி நாளைக்கு நானும் வரேன். இரண்டு பேருக்கும் பார்ப்போம்” என்றவனை நிமிர்ந்து பார்த்த மகா.

“உங்களுக்கு ஆசையா இல்லையா இன்பா நமக்குன்னு பாப்பா வேணும்னு “அதில் அவள் தலை மீது இவன் தலை சாய்த்த இன்பா.

“எனக்கு உன்னை தாண்டி தான் டா தங்கம் மத்தது எல்லாம். என் ஆசை உன் ஆசைன்னு தனி தனியா எதுவும் இல்லடா தங்கம்.

நீ, நான் ன்னு தனி தனியா இல்லாம நாமன்னு எப்போவோ ஒன்னா கலந்துட்டோம் டா.

இதுல என் ஆசை உன் ஆசை ன்னு தனியா இருக்கா என்ன?” என்றவனை புரியாமல் பார்த்து வைத்த மகா.

“புரியிற மாதிரி பேசுங்க  இன்பா….” என்று முகத்தை சுருக்கியவளை பார்த்து புன்னகைத்த அவன்.

“என்னில் கலந்து நீயும் உன்னில் கலந்த நானும்னு சொல்ல வந்தேன் டா “ இதில் மேலும் மூக்கு விடைக்க முறைத்தவள்.

“இப்போ பாப்பா வேணும்னு சொல்றிங்களா இல்லயா”

என்று இடுப்பில் கை வைத்து நின்றவளை அப்படியே ஒற்றை கையில் தூக்கியவன் நடந்து பால்கனி செல்ல.

“இப்படி பொம்மை மாதிரி என்ன தூக்காதீங்கன்னு எத்தனை வாட்டி இன்பா சொல்றது” என்று அவன் கழுத்தை கட்டி கொண்டு மகா முறைக்கவும்.

“சும்மா முறைச்சு முறைச்சு பார்க்காத டா தங்கம்.” என்று இருவரும் பேசியபடி பால்கனியில் போடப்பட்டிருந்த சோபாவில் மகாவை மடியில் வைத்தபடி அமர்ந்தான் இன்பா.

“என்னடா தங்கம் வெயிட்டே நீ இல்ல” என்றவனின் காதை திருகி பிடித்து.

“மனசாட்சியோட பேசுடா கல்யாணம் அப்ப இருந்த வெயிட்ல எட்டு கிலோ ஏறி இருக்கேன் டா. நீ என்னன்னா வெயிட்டே இல்லன்னு சொல்லற “

“அட போ தங்கம் எனக்கு என்னமோ நீ வெயிட்டா ஆன மாதிரியே தெரியல” என்று மகா கன்னம் கடித்தவனை தள்ளி விட்டு அவன் மார்பில் சாய்ந்து கொண்ட மகா சூரிய அஸ்தமனத்தை இருவரும் அமைதியாக ரசித்து கொண்டு இருந்தனர்.

“இன்பா நம்ம ஏன் வர வீக் எண்ட் உங்க அப்பா அம்மா வீட்டுக்கு போக கூடாது” என்று கேட்டவளுக்கு சரி என்பது போல தலையை அசைத்தான்.

மகாவுடன் திருமணம் முடிந்து இரு வருடத்தில் அவன் அம்மா அப்பா வீட்டை திருப்பி வாங்கியிருந்தான் மகா மற்றும் இவன் பெயரில்.

அதில் அனைவருக்கும் அத்தனை சந்தோஷமும் கூட. அதிலும் மற்றவர்களை காட்டிலும் இன்பா தான் மிகவும் சந்தோஷமாக இருந்தான்.

“தங்கம் நம்ம ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டு இங்க வந்து செட்டில் ஆகிடலாம்,இங்க நம்ம மட்டும் தனியா ஜாலியா இருக்கலாம் டா தங்கம்,

இங்கு சாயங்காலம் நேரம் சூரியன் மறையும்போது அவ்ளோ அழகா பறவைலாம் கத்தும் டா அத உன் கூட கைய கோத்துட்டு ரசிச்சி பாக்கணும் டா தங்கம்” என்று அத்தனை கனவுகளை ரசித்து சொல்லியிருந்தான் இன்பா.

அதை வைத்தே மகா மாதத்திற்கு இரண்டு முறை அங்கே இன்பாவை அழைத்துக்கொண்டு சென்று விடுவாள்.

அதுப்போல தான் இப்பவும் அவள் சொல்லவும் வேகமாக தலையசைத்தான் இன்பா.

“அந்த வீடு எனக்கு ரொம்ப ஸ்பெஷல் டா தங்கம்.”

“ம்ம்ம்….தெரியும் இன்பா.”

“நம்ம கடைசி காலம் அங்க தான்டா இருக்கனும்” என்றவன் வாயில் பட் என்று ஒன்று வைத்தவள்.

“இப்படி பேச கூடாதுன்னு எத்தனை வாட்டி டா சொல்றது” என்று முகம் சிவந்து கத்தியவளை பார்த்து சமாளிப்பாக சிரித்து வைத்தவன்.

“அது சாரிடா தங்கம்…. திருப்பி அப்படி சொல்ல மாட்டேன்” என்று கன்னத்தில் தப்பு போட்டவனை அணைத்து கொண்டவள். எதுவும் பேசாமல் அப்படியே இருக்கவும்

“ ஏன்டா தங்கம் கோபமா “ என்று கேட்டவனுக்கு பதில் சொல்லாமல் மகா எழுந்து அவள் அருகில் இருந்த சேரில் அமைதியாக அமர்ந்து கோண்டாள்.

“டேய் தங்கம் சாரிடா அப்படி பேச மாட்டேன் டா “ என்று எத்தனை சாரி கேட்டும் மகா கோபமாகவே இருக்கவும்.

சிறிது நேரம் அங்கேயே சுற்றி சுற்றி வந்தவன் ஐடியா வந்தவனாக எங்கேயோ சென்று விட மகா

“என்ன விட்டுட்டு எங்க போறாரு ? “ என்று முனங்கினாலும் அந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தாள்.

“இவருக்கு இதே வேலையா போச்சு அபசகுனமா பேசாதீங்கனா கேக்குறாங்களா. ஒரு நாள் முழக்க இந்த கோவத்த பிடிச்சி வச்சுக்கணும் அப்போ தான் அடுத்த வாட்டி இப்படி பேச யோசிப்பாங்க “

என்றவள் நேரத்தை பார்ப்பதும் இன்பா வீடு திரும்பி விட்டானா என்று பார்ப்பதுமாக இருக்க சிறிது நேரம் காக்க வைத்த பிறகு தான் அவனும் வந்தான்.

வந்தவன் கையில் இரண்டு பார்சலோடு வந்து அவள் முன்னே வைத்து விட்டு அவள் முகத்தை பார்க்க

“என்ன இது “ என்று அவனை புருவம் சுருக்கி மகா பார்க்க

“ அது ஆப்ஷன் ஏ, இது ஆப்ஷன் பி தங்கம் “

“என்னது?”

“அது உன்ன சமாதானம் செய்ய ரெண்டு ஆப்ஷன் எடுத்துட்டு வந்திருக்கேன் டா இதுல ஒன்னு சூஸ்  “ என்று கையை காட்டியவனை மேலும் கீழும் பார்த்து வைத்தவள்.

அதில் ஒன்றை எடுத்து திறந்து பார்க்க ஸ்வீட் பப்ஸ் அதுவும் மகாவிற்கு பிடித்த வகையில் சூடாக இருக்கவும்

“ ஆப்ஷன் ஏ சூப்பர் தான் “ என்றபடி அடுத்த பார்சலை திறக்க அதில் இருந்ததை பார்த்து கண்களை மூடி திறந்து வர இருந்த சிரிப்பை அடக்கிய படி

“என்ன இது இன்பா “ என்று கோபமாக கேட்பது போல அவள் கேட்கவும் “ ம்ம்ம்…. அல்வா அப்புறம் மல்லிப்பூ டி “

அதை கேட்டு முறைத்தவள் “ வர வர ரொம்ப கெட்டு போய்டிங்க இன்பா கண்ட படத்தை பாக்குறத நிறுத்துங்க “

“ அடியே தங்கம்! சண்டை போட்டு இப்படி சமாதானம் ஆன தான அந்த சண்டைக்கு மரியாதை “ என்று கண்களை சிமிட்டி தோள்களை உலுக்கியவனை அடிப்பது போல சென்ற மகா

“உங்கள…” என்று அவன் மேலேயே முகத்தை புதைத்து கொண்டாள் நாணத்தில்.

இப்படியாக இன்பா மகாவை சமாதானம் கொஞ்சம் ஓவராக செய்து விட்டு களைப்பில் தூங்கி போனார்கள்.

அன்று இன்பாவின் கையில் நிம்மதியாக உறங்கிவளுக்கு தெரியவில்லை இந்த நாள் அடுத்து இது இவளுக்கு கிடைக்கவே போவது இல்லை என்று.

இன்பாவின் அணைப்பில் சுகமாக உறங்கி கொண்டிருந்த மகா ஏதோ வயர் கருகும் நாற்றத்தில் கண்களை விழித்தாள்.

“என்ன எரியிர ஸ்மெல் வருது “ என்றபடி எழுந்து சுற்றிப் பார்த்துவிட்டு ஹாலுக்கு சென்றவளின் உடல் பயத்தில் நடுங்கி.

“இன்பா….” என்று கத்தியிருந்தாள். நள்ளிரவு நேரம் மணி இரண்டை தொட்டிருக்க திடீரென்று கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தவன், அவன் மனைவி குரல் கேட்ட திசையை நோக்கி ஓடிச் சென்றான்.

அங்கே ஹால் முழுக்க நெருப்பு சிறிது சிறிதாக பரவிக்கொண்டிருப்பதை பார்த்தவன் வேகமாக அதை அணைக்க தொடங்கினான்.

ஆனால் பலன் தான் பூஜ்யம் ஆனது. சிறிது நேரத்தில் தீ மளமளவென வேகமாக பரவி அந்த ஹால் முழுக்க எரியவும் வேறு வழியின்றி திகைத்து நின்ற மகாவை இழுத்துக்கொண்டு பெட்ரூம் உள்ளே வர அங்கேயும் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

அதில் பயந்த மகா இன்பாவை அனைத்துக்கொண்டு பயத்தில் “இன்பா…. இன்பா வா….இங்க இருந்து போயிடலாம் …” என்று பிதற்றிக்கொண்டு இருந்தவளை உலுக்கி,

“ஏ…. தங்கம்… தங்கம் இங்க பாருங்க ஒன்னும் ஆகாது டா பயப்படாத “ என்று உலுக்கி அவளை நிலைப்படுத்திவன்

பால்கனி நோக்கி சென்று கீழே உதவிக்கு கத்த பல பேர் அலறும் சத்தம் கேட்டு பயந்தவனாக.

சுற்றி பார்த்தான் கருப்பு புகை எங்கும் பரவியிருக்க அனைத்தும் பற்றிக்கொண்டு எரிந்து கொண்டிருந்தது.

வயர் மூலம் ஷார்ட் சர்க்யூட் ஆகி நெருப்புக்கு அந்த அப்பார்ட்மெண்டே இரையாகி இருந்தது.

இவர்கள் நிற்கும் இடத்திலும் நெருப்பு பரவ தொடங்க மகா இரும்ப ஆரம்பித்தாள். அப்போது இன்பாவின், தலைக்குள் ஓடியது ஒன்று மட்டும் தான் “ என் தங்கம்…. அவளை காப்பாத்தனும் என் தங்கம்….. என் தங்கம்…. “

நீ இன்றி நான் உயிரில்லா மெய் என்பதை மறந்தாயோ ?….

அந்த அப்பார்ட்மெண்டில் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க, இன்பா சுற்றி பார்த்து விட்டு எதோ முடிவு எடுத்தவனாக

அவள் கன்னம் பற்றியவன் அவள்  இதழில்  அவன் இதழை வைத்து வன்மையாக ஒரு முற்றுகை, அவளின் உயிரில் கலந்திடும் முத்தம், இனி உன்னோடு உன் உயிரோடு கலந்து இருப்பேன் என்று சொல்லாமல் சொன்ன முத்தம்.

இதுவே உன்னுடன் என் கடைசி முத்தம் என்று கண் கலங்க முத்தம் கொடுத்துப் பிரிந்தவன், சற்றும் யோசிக்காமல் மகா உணரும் முன் அவளைத் தூக்கியவன் பால்கனிக்கு மறுபுறத்தில் போட்டுப் பிடித்துக் கொண்டு நின்று விட்டான்.

“இன்பா… இன்பா…. என்ன பண்றிங்க “ என்று கத்தியவளை சிரித்த முகமாக பார்த்தவன் இருந்த இடத்திலும் மெல்ல மெல்ல தீ பரவியது.

அது அவன் மீதும் பட, கொஞ்சம் கொஞ்சமாக உயிருடன் எரியத் தொடங்கினான் இன்பா.

இது எதுவும் தெரியாத மகா அவன் கையைப் பிடித்து தொங்கியபடி

“ இன்பா இன்பா…. எனக்கு பயமா இருக்கு இன்பா…. என்ன மேல தூக்குங்க…. “ என்று கத்தியபடி அவனை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தவளின் முகத்தில் அவனின் கண்ணீர் துளிகள் வந்து சொட்டு சொட்டாக விழவும் தான் இன்பாவை கூர்ந்து பார்த்தாள் மகா.

அவனைச் சுற்றி நெருப்பு எரிந்து கொண்டிருக்க, இன்பா வலியை பல்லை கடித்துக்கொண்டு தாங்கிக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்து பதறியவள் “ இன்பா…….” என்று சத்தமாக கதறியிருந்தாள்.