அத்தியாயம் -2

எது காதல்?

இரு மனங்களின் இணைவே காதல்.

பால் குக்கரில் இருந்து வரும் சத்தம் சங்கீதமாக காதில் கேட்க கைகளை உயர்த்தி நெட்டி முறித்தபடி கண்களைத் திறந்தாள் மகா.

“என்ன ஒரு அருமையான காலைப் பொழுது…” என்று சொல்லி முடிப்பதற்குள் தொப் என்று கால் வந்து வயிற்றில் விழ,

“அம்மா…” என்று கத்தியபடி அருகில் திரும்பிப் பார்த்தாள்.

அவளின் தங்கை ஜெயா தான் காலைப் மேலே போட்டிருந்தாள். “இவளா….” என்று  மூச்சை இழுத்து விட்டவள் அவள் காலை தள்ளி விட்டு வேகமாக அடுத்தக் கால் வருவதற்குள் கட்டிலை விட்டு எழுந்து நின்றாள்.

“இவளுங்களோட…. டெய்லி கட்டில விட்டு எந்திருக்கிறதே சாதனையா இருக்கு”

 என்று அழுத்து கொண்ட படி கட்டிலைத் திரும்பி பார்க்க வரிசையாக அவளின் மூன்று தங்கைகளும் ஒருவர் மீது மற்றவர் கால் கைகளை போட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.

இவள் மகாலட்சுமி, அப்பா சந்தானம், அம்மா அமிர்தம். சென்னையில் ஒரு முக்கியமான இடத்தில் அவளின்  தாத்தா சென்னைக்கு பிழைப்புக்காக வந்து போது வாங்கிப் போட்ட இடத்தில் வீடு கட்டி அண்ணனும் தம்பியுமாக இருக்கின்றனர்.

அண்ணன் சந்தானம், தம்பி சீனிவாசன் இருவரும் சேர்ந்து ஒரு சிறிய அளவில் துணிக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகின்றனர்.

பெரிய அளவில் எடுத்து நடத்த ஆசை இருந்தும் அகல கால் வைக்க பயந்து இந்நாள் வரை பெரிய முன்னேற்றம் இல்லையென்றாலும் எந்த ஒரு பின்னேற்றமும் இன்றி நன்றாகவே நடத்தி வருகின்றனர்.

அண்ணன் தம்பி ஒற்றுமை பார்த்து பெற்றோர்கள்,  என்றும் இவர்கள் இப்படியே இருக்க வேண்டும் என்று ஒரே வீட்டில் இருந்தே அக்கா தங்கை இருவரையும் அண்ணன் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தனர்.

அதன்படி ஒற்றுமையாகத்தான் இருவரும் இருந்தனர். மாடியில் தம்பி வீடு கட்டி இருக்க, கீழே அண்ணன் என்று அனைத்தும் நன்றாகத்தான் சென்றது.

சந்தானம் மற்றும் அமிர்தம் இவர்களுக்கு திருமணம் முடிந்து அடுத்த ஆண்டே பெண் குழந்தை பிறக்க, ‘லட்சுமி வந்து பிறந்திருக்கா’ என்று அவளுக்கு மகாலட்சுமி என்று பெயர் வைத்தனர்.

அதற்கு அடுத்த ஆண்டு தம்பி சீனிவாசன் மற்றும் கல்யாணி இவர்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்க அடித்ததும் லட்சுமி என்று சுபலட்சுமி என்று பெயர் வைத்தனர்.

அடுத்த ஆண்டு அமிர்தத்திற்கு மீண்டும் பெண் குழந்தை பிறக்க குணலட்சுமி என்று பெயர் வைத்தனர். மூன்றும் பெண் பிள்ளைகளாகப் போக பையன் ஒருவன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று காத்திருக்க.

அடுத்து கல்யாணிக்கும் பெண் பிள்ளையே வந்து பிறக்கவும் வருத்தம் தான். இருந்தும் அதை ஒதுக்கி விட்டு ஜெயலட்சுமி என்று பெயர் வைத்தனர்.

இப்படி நான்கு பெண் பிள்ளைக்கும் ஓரே போல லட்சுமி என்று பெயர் வைத்து சந்தோஷமாக இருந்தனர்.

ஜெயலட்சுமி பிறந்து மூன்று மாதத்தில் கல்யாணி உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட, இரண்டு பெண் பிள்ளைகளுடன் கலங்கி போய் நின்றார் சீனிவாசன்.

இப்படி தனித்து நிற்கும் தம்பி நிலை பொறுக்காது குழந்தைகளுடன் தனியே மாடியில் இருப்பது சரியில்லை என்று அவரையும் கீழேயே வர சொல்லி விட்டார் சந்தானம்.

அதன்பின் மேலிருந்த போர்ஷனை வாடகைக்கு விட்டு இங்கேயே இருந்து விட்டார் சீனிவாசன். சந்தானமும் அமிர்தமும் கூட நான்கு பிள்ளைகளையும் ஒன்று போலத்தான் வளர்த்து இருந்தனர்.

இங்கு மகா அந்த பெரிய கட்டிலில் ஏடக்குடமாக தூங்கும் மூவரையும் பார்த்து விட்டு நேரத்தைப் பார்க்க அது ஐந்தரை என்று காட்டவும் அமைதியாக முகம் கழுவி பல் துலக்கி விட்டு வெளியே சென்று விட்டாள்.

ஹாலை தாண்டி கிட்சன் அறைக்குள் செல்ல அங்கே அமிர்தம் காய்கறி களை வெட்டிக்கொண்டு இருந்தார்.

அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு சமையல்  மேடையை எட்டி பார்க்க, ஒரு புறம் இட்லி வெந்து கொண்டு இருக்க மறு அடுப்பில் சாப்பாடு வெந்து கொண்டு இருந்தது.

சாம்பாரை அடுப்பின் பக்கத்தில் ஆற வைத்திருந்தார் அனைத்தையும் பார்த்தபடி காப்பி கலக்க சென்றாள் மகா.

“என்னடி..மகா எல்லாம் முழிச்சிட்டாங்களா “ என்று அவளை பார்த்துவிட்டு அமிர்தம் கேட்க

“மூணும் முழிச்சிட்டா இவ்வளவு அமைதியாவா இருக்கும்மா… “ என்று காப்பியை ஒரு கிளாஸில் ஊற்றி கொண்டு ஊதிக்குடித்துக் கொண்டிருந்தவளை பார்த்து.

“ப்ச்.. இவளுங்க..ல நைட் பத்து மணி வரை சீரியல் பார்த்துட்டு தூங்குனா காலைல எங்க எந்திரிக்க முடியும் “

“எல்லாம்….நீ பழக்கி விட்ட பழக்கம் தானம்மா “

“உக்கும்….அவளுங்களை ஒன்னும் பேசிட கூடாதே…. உனக்கு“ என்று நொடித்துக் கொண்டவர் நேரத்தை பார்த்து விட்டு

“அச்சோ… மகா, நேரம் ஆச்சுடி சமையல் வேற முடிக்கணும் போய் எழுப்பி விடுடி அவளுங்களை “ என்று கெஞ்சி கேட்கவும்

“ இப்படி முதல்லயே கேட்டா என்ன “ என்பது போல பார்வையை பார்த்து விட்டு காப்பியை கலந்து எடுத்து சென்றாள் மகா.

உள்ளே அறையில் கட்டில் அருகில் காப்பியை வைத்தவள். லைட்டை போட்டு விட்டு சுற்றும் மின்விசிறியை அனைத்து விட்டு அங்கே கட்டிலில் கீழே அனாதையாக விழுந்து கிடந்த போர்வையை மூவரின் மீதும் போர்த்தி விட்டு வெளியே சமத்தாக சென்று விட்டாள்.

சற்று நேரத்தில் வியர்க்க தொடங்கவும் முதலில் எழுந்த ஜெயா சமத்தாக நேரத்தை பார்த்து விட்டு காப்பியை குடித்த படி அருகில் இருந்த குணாவை எழுப்பி விட்டாள்.

அவளும் எழுந்து நேரத்தை பார்த்து விட்டு காப்பியை குடித்த படி அருகில் பார்க்க சுபா போர்வையை தலைவரை மூடிக்கொண்டு ‘காத்தே இல்லனாலும் நான்  தூங்குவேன்டா ’ என்பது போல நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

“டைம் ஆச்சு எழுந்திரு சுபா “ என்று குணா எழுப்பியும் அவள் எழாமல் போக அவளை பார்த்த ஜெயா மற்றும் குணா அப்படியே கட்டிலில் இருந்து அவளை கீழே உருட்டி விட்டனர்.

போர்வையோடு தொப் என்று கீழே விழுந்தவள்

“அ…….” என்று கத்திய படி கோபமாக எழுந்து இருவரை முறைக்க இருவருமே எதுவும் தெரியாதது போல காப்பி குடித்துக் கொண்டிருக்கவும்.

“ஏண்டி குண்டச்சிங்கள… என்ன ஏண்டி தள்ளி விட்டிங்க “ என்று சுபா கத்த

“என்ன குண்டச்சின்னு கூப்பிடாதன்னு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன்டி… “ என்று குணா கோபமாக காப்பியை கீழே வைத்து விட்டு எகிற

“அப்போ குண்டாத்தான்னு கூப்பிடவா “ என்று சுபா நக்கலாக சிரித்து அவளை வெறிப்பேற்றவும்

“ஏ… பெருச்சாளி வாயை அடக்கு டி இல்ல… நீ பண்ற வேலைய உன் டிபார்ட்மெண்ட் ஃபுல்லா பரப்பிடுவேன் “

“நீ என்ன பத்தி சொன்னா நானும் உன்ன பத்தி சொல்லுவேனே… “ என்று நக்கலாகவே  சுபா பேசவும்

“என்ன பத்தி என்னடி சொல்லுவ “ என்று அவளை முறைத்து பார்த்தாள்  குணா

“நீ எஸ்ஸம்ல பிட் சேர் பண்ணி பாஸ் ஆனத சொல்லுவேன் டி “

“நீ அதை சொன்னா நான் நீ அந்த நியூ காலேஜ் சாருக்கு ரூட் விடுறத சொல்லுவேன் டி “ என்று குணா சொல்ல என்று சண்டை ஆரம்பம் ஆனது.

சுபா மற்றும் குணா இருவரும் எலியும் பூனையும் போல தான் அடித்து கொள்வார்கள். இப்படி இருவர் இருந்தார்கள் என்றாள் ஜெயாவோ நல்ல பிள்ளை போல இருவர் போடும் சண்டையை சமத்தாக பெரியவர்களிடம் போட்டுக் கொடுத்து விட்டு நல்ல பேரை வாங்கி கொள்வாள்.

அதன் பிறகு என்ன இது தெரிந்து மீண்டும் மூவருக்குள்ளும் சண்டை நடக்கும் இப்போதும் அப்படியே இருவரும் மாற்றி மாற்றி உண்மையை வாக்கு மூலமாக சொல்லிக் கொண்டு போவதை நோக்கியா போனில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்த படி காப்பியை குடித்துக் கொண்டிருந்த ஜெயா

“என்ன சுபா உனக்கு டேஸ்டே இல்ல. போயும் போயும் அந்த சாருக்கா ரூட் விடுவ “ என்ற இவள் சத்தத்தில் தான் இருவரும் அவளை கவனிக்கவே செய்தனர்.

கையில் போனை ஆட்டிய படி ஜெயா சிரித்து கொண்டு இருக்க அவளை பார்த்த சுபா மற்றும் குணா இருவரும் முகத்தை ஒரு நிமிடம் மாற்றி மாற்றி பார்த்து கொண்டு அப்படியே அவள் மீது பாய்ந்து விட்டனர்.

“ஏ…. பன்னி இறங்கு டி …” என்று ஜெயா கத்த

“அவ கையை பிடி குணா நான் அவள அசையாம பாத்துக்குறேன் “ என்று சுபா கத்த

“ஏ…பெருச்சாளி அவளை நல்லா பிடி….” என்று அந்த அறையே போர்க்களம் போல் சத்தம் வெளியே வரை கேட்கவும், மகா

“ஏ…… என்ன பண்ணிட்டு இருக்கீங்க நான் அங்க வரணுமா…” என்று ஒரு அதட்டல் தான் அத்தனை சத்தமும் நின்று வீடு பழைய படி அமைதியாகி விட்டது.

“நான் எத்தனை வாட்டி பேய் மாதிரி கத்தி கிளம்புங்கடி ன்னு கத்துன அப்போலாம் சத்தம் அமைதியாச்சா… வர வர இந்த வீட்டுல என் பேச்சுக்கு மரியாதையே இல்லாம போச்சி “

 என்று அமிர்ந்தம் புலம்பிய படி சமையலை பார்க்க அந்த புலம்பல் காதில் விழுந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் நால்வருக்கும் உணவு எடுத்து வைத்து கொண்டிருந்தாள் மகா.

அமிர்ந்தம் சொன்னது போல மூவரும் அமிர்ந்தம் பேச்சை கேட்டு நடப்பதை விட மகாவின் பேச்சை கேட்டு நடப்பதே அதிகம் மகா சத்தம் போட்டாள் போதும் நல்ல பிள்ளையாக அமைதியாகி விடுவார்கள்.

அதற்கு என்று மகாவும் அவளின் தங்கைகளை எப்போதும் போட்டு அதட்டி உருட்ட மாட்டாள். பல முறை இவர்கள் போடும் சண்டைகளை ரசித்து பார்த்து கொண்டிருப்பவள் தேவை பட்டால் மட்டுமே சத்தம் போடுவாள்.

சிறு வயதிலயே அமிர்ந்தம் மகாவிடம் இதை தான் அடிக்கடி சொல்லி இருக்கிறார். ‘நீ தான் மூத்தவள் நீ தான் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அதை கேட்டு வளர்ந்தவளும் அதன் படி தான் நடந்துகொள்ளவும் செய்தாள்.

மூத்தவள் என்பதுக்கா வயது பெரியவள் என்றும் அர்த்தம் இல்லை மகாவுக்கு 20 என்றாள், சுபா க்கு 19, குணா க்கு 18, ஜெயாக்கு 17 என்று நால்வருக்கும் ஒரு வயது தான் வித்தியாசம்.

இருந்தும் மகா அவள் வயதிற்கு ஏற்ப எப்போதும் இருக்க மாட்டாள் எப்போதும் பொறுப்பை தோள் மீது சுமந்து திரிபவள் போல தான் இருப்பாள்.

அதனாலேயே வீட்டில் அவள் பேச்சுக்கு அனைவரும் தலையசைத்து தான் பழக்கம்.

அரை மணி நேரத்தில் மூவரும் குளித்து கையில் சீப்போடு மகா பவ்யமாக முன்னே வந்து நிற்கவும்.

மகா தலையை லேசாக சாய்த்து கண்களை சுருக்கி இவர்களை பார்க்கவும் அவள் பார்வை புரிந்தவர்களாக

“அதுக்கா….” என்று ஜெயா இழுக்க

“ டைம் ஆச்சு அதான்…” என்று குணா சுபாவை இடித்து நீ பேசு என்பது போல கண் காட்டவும் அவளும்

“ சும்மா சிம்பிளா வேகமா எதாவது வாரி விடு க்கா ப்ளீஸ் “ என்று மூவரும் ப்ளீஸ் போடவும்

“சரி வந்து தொளைங்க….” என்று வெளியே வரந்தாவுக்கு முன்னே செல்ல. பின்னே குணா கையோடு ஸ்டூல் ஒன்றை எடுத்து வந்து போட்டதும் அதில் ஏறி நின்று தலை வாரிவிட தொடங்கினாள் மகா.

மகா என்னதான் மூத்தவள் என்றாலும் நால்வரில் அவளே உயரத்தில் சிறியவள்.

அனைவரையும் விட உயரம் குறைவு என்றாலும் அதற்கு மாறாக அனைவரையும் விட அவள் முடி நீளமாக அவளின் முட்டியை தாண்டி தரைக்கு சற்று மேலே வரை நீண்டு இருக்கும்.

எத்தனை முறை அவள் அதை வெட்டி விட்டாலும் வளர்ந்து கொண்டே போகிற முடியை என்ன தான் செய்ய என்று விட்டு விட்டாள்.

அதன் விளைவு தரைக்கு சற்று மேலே வரை நீண்டு அடர்ந்து இருக்கும் முடி.

அவளை கடந்து செல்பவர் கள் அனைவரும் ஒரு முறையாவது இவள் கூந்தலை பார்த்து வியக்காமல் செல்ல மாட்டார்கள்.

அப்படி இப்படி என்று மூவரையும் கல்லூரிக்கு அனுப்பி விட்ட பிறகு தான் மகா மற்றும் அமிர்தத்திற்கு மூச்சே வந்தது.

“இங்கேயே இத்தனை ஆட்டம் போட்டா காலேஜ்ல என்னவெல்லாம் பண்ணுவாள்..களோ பாவம் உங்க காலேஜ் டீச்சரு”

“ஒரே காலேஜ் ஆனாலும் டிபார்ட்மெண்ட் வேற தானம்மா அதெல்லாம் அமைதியா தான் இருப்பாங்க”

“என்னவோ ஒழுங்கா இருந்தா சரி…. வா மகா நம்ம போய் சாப்பிடுவோம்” என்று அமிர்தம் எழப் போக அவரை தடுத்தாள் மகா.

“அம்மா அப்பா கிட்ட இன்னைக்கு மறக்காம பேசு ம்மா” என்று முகத்தை சோர்வாக வைத்துக்கொண்டு பேசவும் அவள் முகத்தை பார்த்த அமிர்தம்.

“வருத்தப்படாத மகா… அப்பா கிட்ட பேசி எடுத்து சொல்லி பார்ப்போம் ஒத்துப்பாங்க ஏன் உங்க சித்தப்பா உனக்கு தானே சப்போர்ட் பண்றாரு அப்புறம் என்ன”

“ம்ம்ம் ம்மா…”

“இப்படி முகத்தை சோகமா வைக்காம வா சாப்பிட போலாம்….” என்று அவளை இழுத்து சென்றுவிட்டார்.

மகா பிகாம் படிப்பை முடித்து இரண்டு மாதங்களாக வீட்டில் தான் இருக்கிறாள்.

அவளின் ரிசல்டும் போன வாரம் தான் வந்தது. நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் ஆகியிருந்தாள் மகா.

அடுத்து என்ன செய்யலாம் என்று ஆர்வமாக இவள் இருக்க இவள் வீட்டிலோ திருமணம் ஆகும் வரை வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி விட்டனர்.

மகாவுக்கு யூபிஎஸ் கிளாஸ் சேர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசை அதை அப்பாவிடம் கூறினாள் அவர் யோசித்து கூட மறுத்து விட்டார்.

“இன்னும் இரண்டு வருஷத்துல கல்யாணம் பண்ணி வச்சிருவோம் அதோட எங்க கடமை முடிஞ்சிது. அது வரை வீட்டுல தான் இருக்கணும். அத விட்டிட்டு எதாவது உளறாத அந்த படிப்பு எல்லாம் பொண்ணுக்கு எதுக்கு” என்று சொல்லிவிட உடைந்தே போனால் மகா.

அதன் பிறகு சோகத்தில் இருந்தவள் அப்போதே அம்மாவிடம் “அட்லீஸ்ட் என்ன வேலைக்காவது போக விடுங்கம்மா” என்று கேட்கவும் அதற்கு அவர்

“நைட் பேசினா அப்பா கத்துவாரு நாளைக்கு காலைல சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போயிட்டு வந்ததும் பேசுறேன் ம்மா” என்று அமைதி படுத்தி வைத்திருந்தார்.

ஆனால் அதை கேட்காமல் மகா இரவு சித்தப்பாவிடம் இதை பற்றி பேசவும் நன்றாக யோசித்த சித்தப்பா

“நான் அப்பா கிட்ட பேசி பார்க்கிறேன் ம்மா” என்று இவளுக்கு உறுதுணையாக நிற்கவும் மகாவுக்கு அத்தனை மகிழ்ச்சி.