“அது அத்தை…. என்ன தான் அவ கண்ணுல எனக்கான லவ் வ பாத்தாலும் அதுக்கூட ஒரு பயமும் தெரியும்.
அந்த பயம் என்ன பாக்கும் போது எல்லாம் என்கிட்ட காதலை மட்டும் சொல்லிடாத இன்பான்னு அவ தடுக்குற மாதிரியே இருக்கும் அத்தை “
“என்னடா இன்பா சொல்ற “
“ஆமா த்தை ஏன் இன்னைக்கு கூட பாத்தியா அவ எப்படி இருந்தான்னு. ஏதோ இறுக்கமா முகத்தை வச்சிட்டு.
என் மகா அப்படி இருக்கவே மாட்டா அத்தை “ இன்பா சொன்னதை கேட்டு சித்ரா யோசித்தபடி இருக்க
இன்பா சித்திராவின் முகத்தை பார்த்தபடி தான் அமர்ந்து இருந்தான்.
“நீ சொல்றதும் சரிதான்டா இன்பா, அந்த மகா பொண்ணு முகமே சரியில்ல தான்”
“இப்போ என்ன அத்தை பண்ண?”
“எனக்கு தெரிஞ்சி அந்த பொண்ணு உன் காதல ஏத்துகிட்டு காதலிக்கிறதுக்கு வாய்ப்பே இல்லடா இன்பா.”
“அத்தை….” என்று அதிர்ச்சியில் கத்தியவனின் வாயில் ஒரு அடியை பட் என்று போட்டவர்.
“நேரம் பன்னிரண்டு டா, இப்படி கத்தி போற வர பேய்யெல்லாம் கூப்பிட்டு விட்டுறாத. அப்பறம் சாத வீடு, பேய் வீடா ஆகிடும்” என்றவரை பாவமாக இன்பா பார்க்கவும்.
“முகத்தை அப்படி வைக்காம நான் சொல்றத முழுசா கேளு. அந்த பொண்ணு, வீட்டுக்கு பயந்துதான் இப்படி இருக்கோன்னு தோணுது டா.”
“ஓ… அப்படியா…. அப்போ நான் வேணா அவங்க அப்பா அம்மா கிட்ட போய் உங்க பொண்ண நான் லவ் பண்றேன் கட்டி வைங்கன்னு சொல்லவா?”
“ம்ம்… நீ அப்படியே போய் சொல்லு அடுத்த மாசமே வேற ஒரு பையனுக்கு அவள கட்டி வச்சிடுவாங்க. நீ எங்கிருந்தாலும் வாழ்கன்னு அனுப்பி வச்சிட்டு வா…” அதை கேட்டு கோபமான இன்பா.
“அத்தை இப்படி பேச்சுக்கு கூட சொல்லாத, அவ என் தங்கம் அத்தை…” என்று முறைத்தவனின் தலையில் ஒன்று போட்ட சித்திரா.
“அப்போ அவசரம் படாத டா முந்திரிகொட்ட. நீ லவ் பண்றது அவங்க வீட்டுல யாருக்கு தெரிஞ்சாலும் பிரச்சனை தான்.”
“எது சொன்னாலும் இப்படி ஏதாவது சொன்னா நான் என்ன அத்தை பண்ண?” என்று சிணுங்கியவனை பார்த்து சிரித்தவர்.
“நீ என்ன பண்ணனும்னு நான் சொல்றேன், அது வரை மகா பொண்ணு கிட்ட இருந்து தள்ளியே இருடா.”
“அச்சோ அது ரொம்ப கஷ்டம் ஆச்சே…” என்று அவன் பதற.
“மகா வேணுமா? வேணாமா டா?”
“ம்ம்ம் வேணும் அத்தை…” என்று தலையை தொங்க போட.
“அப்போ நான் சொல்றத மட்டும் செய்யி போதும்.” அதற்கு சரி என்பது போல இன்பா தலையசைக்கவும்.
“சரி நேரம் ரொம்ப ஆச்சு நான் போய் தூங்குறேன் இன்பா.” என்று அவர் எழுந்து சென்றுவிட்டார்.
சென்றவரை சிறு புன்னகையுடன் பார்த்த இன்பா, கண்களை மூடி தலை கோதி தன் இடது பக்க தோளை தடவி பார்த்து கொண்டு மூச்சை இழுத்து விட்டவன் நாசியில் இன்னும் அவள் மணம் வீசுவது போல பிரம்மை தோன்றவும் உதடுகள் தானாக பாடலை முணுமுணுத்தது.
“தங்க தாமரை மகளே வா அருகே
தத்தி தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே..” என்று கண்கள் மூடி இன்பா பாட்டு பாடிய படி இருக்க
“அடச்சீ…. போய் தூங்கு, நைட் பாடுற பாட்ட பாரு.
இவன் வா வா ன்னு பாடுறதுல போற வர எதவது வந்துடேன்னு வந்து உக்கார போது “
என்று சித்திரா குரல் கேட்கவும் உதட்டை கடித்து சிரித்த படி “அத்தை என் தங்கத்தை நினைச்சி பாட கூட விட மாட்டிக்கிறிங்களே….” என்று புலம்பிய படி எழுந்து சென்று விட்டான்.
மறுநாள் காலையே அவள் வீட்டுக்கு சென்ற சித்திரா அமிர்தத்திற்கு போனில் அழைத்தாள். முன்தினமே இன்பாவின் பார்வை மகாவையே சுற்றி வருவதை உணர்ந்தவர் எதுக்கும் இருக்கட்டும் என்று ஜெயாவிடம் அவள் அம்மாவின் நம்பரை வாங்கி வைத்திருந்தாள்.
அதன் மூலமே போனில் அழைத்தார் சித்திரா, அந்த பக்கம் அமிர்தம் போனில் வந்த புது நம்பரை பார்த்தவர்
“யாரு….” என்று எண்ணியபடி போனை எடுத்து காதில் வைத்தார்.
“ அக்கா ….. எப்படி இருக்கீங்க நான் தான் சித்திரா பேசுறேன் “
“ஹா… சொல்லுங்க சித்திரா எப்படி இருக்கீங்க “ என்று சிரித்த முகமாக போன் பேசிய படி பாத்திரம் விலக்க தொடங்கினார் அமிர்தம்
“ நான் நல்லா இருக்கேன் அக்கா. உங்க கிட்ட பேசணும்னு தான் நேத்து ஜெயா கிட்ட கேட்டு நம்பர் வாங்கினேன் க்கா “
“அப்படியா இந்த ஜெயா பொண்ணு சொல்லவே இல்லையேம்மா “
“சின்ன பொண்ணு தான க்கா மறந்திருப்பா “
“என்ன சின்ன பொண்ணோ இவ வயசுல வீட்டல இருந்த அத்தனை வேலையும் அத்துப்படியா இருந்தேன். இவளுங்க என்ன ன்னா விடிய விடிய தூங்கிட்டு இருக்காங்க “
“பிள்ளைங்க தான க்கா கொஞ்சம் நேத்து வீட்டுக்கு வரவே லேட் ஆச்சுல அதான் தூங்குறாங்க போல “
“ம்ம்ம்… எனக்கும் தான் க்கா “ என்று ஒரு நிமிடம் தயங்கிய சித்திரா
“அக்கா மதியம் வேலையெல்லாம் முடிச்சிட்டு பக்கத்துல இருக்க கோயிலுக்கு வர்றீங்களா க்கா “
“ கோயிலுக்கா இன்னைக்கு என்ன விசேஷம் சித்திரா “ என்று பேசியவர் பாத்திரத்தை கழுவுவதை நிறுத்தி விட்டு போனை ஒழுங்காக காதில் வைத்தபடி கேட்க
“ விசேஷம்லாம் இல்ல க்கா சும்மா சாமிய பாத்துட்டு வரலாம்னு தான் “
“எந்த கோவிலுக்கு போலாம் சித்திரா “
“உங்க வீட்டு பக்கத்துல இருக்க கோவிலுக்கு போலாம் அக்கா “
“எங்க வீட்டு பக்கத்துலனா நாகத்தம்மன் கோவில் தான் இருக்கு அங்க போலாமா சித்திர “
“ம்ம்ம் சரி க்கா மதியம் ஒரு மூணு மணிக்கா வந்துடுறேன் நீங்களும் வந்திருங்க க்கா “
“சரிம்மா “
“அப்போ வச்சிறன் க்கா” என்று சித்திரா வைத்து விட, போனை பார்த்த அமிர்தத்திற்கு ஏதோ தோன்ற அதை யோசித்தபடி மீண்டும் பாத்திரம் துலக்க தொடங்கி விட்டார்.
அமிர்தம் வருவதாக சொன்ன பிறகே நீண்ட மூச்சை இழுத்து விட்டபடி எழுந்து சென்றார் சித்திரா.
அமிர்தம் இடம் சொன்னது போல சரியாக மூன்று மணிக்கு கோவில் வாசலில் ஆர்வமாக கையில் அர்ச்சனை தட்டோடு நின்று கொண்டிருந்தார்.
சித்திரா வந்து சில நிமிடங்கள் கழித்தே அமிர்தம் வேகமாக நடந்து கோவிலுக்குள் நுழைய, வாசலிலேயே சித்திரா நிற்பதை பார்த்து விட்டு,
“என்ன சித்திரா உள்ள சாமிய கும்பிட்டு இருக்க வேண்டியது தான”
“அது பரவாயில்லக்கா உங்க கூட சேர்ந்து கும்பிடலாம்னு தான் நின்னேன்”
“சரி வா உள்ள போலாம்”
என்று இருவரும் பூ வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல, அங்கே ஐயர் இடம் அர்ச்சனை கூடையோடு சித்திரா இன்பாவின் ஜாதகத்தையும் சேர்த்து நீட்டி,
“பையனுக்கு பொண்ணு பார்க்க போறோம் சாமி, அம்மன் காலடியில் வச்சி கொடுங்க”
என்று சொல்லி கண்களை மூடிக்கொள்ள, இவற்றை பார்த்த அமிர்தம்
“நாம நினைச்ச விஷயம் தான் போலயே” என்று எண்ணியபடி கண்களை மூடிக்கொண்டார்.
பின் அர்ச்சனையை முடித்து கொண்டு இருவரும் ஒன்றாக கோவிலை சுற்றி வந்து ஒரு இடத்தில் அமர்ந்தனர்.
“சித்திரா இன்பா தம்பிக்கு பொண்ணு பாக்குறீங்களா”
“ஆமா அக்கா இப்போ தான் இருபத்தேழு நடந்திட்டு இருக்கு அதான் இப்போவே பார்க்க தொடங்கலாம்னு”
“ம்ம்ம் நல்லது தான், நல்ல பையன் இன்பா அவனுக்கா பொண்ணு அமைய கஷ்டம் உடனே கிடைக்கும் பாரு”
“அதான் க்கா அதை பத்தி தான் பேச வந்தேன். நேத்து நம்ம மகாவ பாத்தேன் நல்ல தங்கமான பொண்ணா இருக்கா… அதான் இன்பாவுக்கு கேட்க வந்தேன்” என்று அமிர்தம் முகம் பார்க்க அவர் முகத்தில் குழப்பம்.
“என்ன ஆச்சு க்கா என்ன யோசிக்கிறீங்க இன்பா பத்தி யோசிக்கிறீங்களா உங்களுக்கு தெரியாதது இல்ல இன்பா ஓட பொறுப்பை பத்தி நல்ல பையன் நல்ல சம்பளம் சொந்த வீடுன்னு இருக்கான். நான் சொல்றதுல நம்பிக்கை இல்லனா நீங்களே கூட போய் விசாரிச்சி பாருங்க க்கா”
“அட சித்திரா நிறுத்து. நான் அதை பத்தி யோசிக்கல சித்திரா இது வேற”