Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 24

 

                                   துர்கா திருவிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. அன்று இரவுநீங்க வெளியே போறிங்களா.. இல்ல நான் போகவா??” என்று கேட்டு சண்டையிட்டது தான். திரு அவளிடம் பேச வந்தபோது கூட, அவனை கண்டு கொள்ளாமல் கதவை அடித்து மூடி விட்டாள்.

 

                                 மொட்டை மாடியில் இருந்த அறையின் சாவியும் துர்காவிடமே இருக்க, திரு அன்று முழுவதும் மொட்டைமாடியில் தான் கிடைக்க வேண்டும் என்று புத்திக்கு புரிந்தாலும், இருக்கட்டும் என்றே கூறிக் கொண்டாள் அவள்.

 

                                  அவளை பொறுத்தவரை அவள் வாழ்வின் மிக முக்கிய தருணம். எத்தனை பேருக்கு கிடைத்து விடுகிறது இந்த வரம். எத்தனையோ பேர் ஏங்கி கொண்டிருக்க, கேட்காமலே கடவுள் வரம் கொடுத்தும் கூட அந்த சந்தோஷத்தை முழுதாக அனுபவிக்க முடியாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் துர்கா.

 

                                   திருவின் செயல் அவளை அந்த அளவிற்கு பாதித்து இருந்தது. அப்படி என்ன குடி தேவையாக இருக்கிறது இவனுக்கு ?? என்று நினைக்க நினைக்க வேதனையே மிஞ்சியது. அதுவும் இன்று தான் புதிதாக ஒரு தொழில் ஆதி எடுத்து வைத்திருக்க, அந்த நல்ல நாளில் இப்படி குடித்து கூத்தடிக்க வேண்டுமா என்று எண்ணிக் கொண்டவள் இம்முறை அவனை விடுவதாகவே இல்லை.

 

                                  இனி இவன் குடிக்கவே கூடாது என்று அவள் அளவில் திடமாக முடிவெடுத்துக் கொண்ட பின்னரே நிம்மதியாக உணர்ந்தாள் அவள். பசி என்பதே இல்லாமல் போனாலும், வயிற்றில் புதிதாக முளைத்திருக்கும் ஜீவனை மனதில் நிறுத்தியவள், கொஞ்சமாக கொறித்து வைத்தாள்.

 

                                  சாப்பிடும் போது கணவன் நினைவு வந்தாலும், பட்டினி கிடக்கட்டும் என்று முடித்துக் கொண்டாள். பாத்திரங்களை ஒதுங்க வைத்தவள் செய்திருந்த பாயசத்தையும் குப்பையில் கொட்டிவிட்டு சென்று படுத்து விட்டாள்.

 

                                அடுத்த நாள் திரு பேச முற்பட்டும் பதில் பேசவே இல்லை. ஒரு வார்த்தை கூட வாயைத் திறந்து பேசவே இல்லை.திரு போராடி பார்த்தவன் அதற்குமேல் முடியாமல் கடைக்கு கிளம்பி இருக்க, கடைக்கும் செல்லவில்லை அவள். திரு அழைத்தும் கூட சட்டமாக அமர்ந்து கொண்டாள்.

 

                               உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்பது போல தான் இருந்தது அவள் செய்கைகள். பேசுவது இல்லை ஏன் அவன் முகத்தை கூட பார்க்கவில்லை அவள். சாப்பிட வந்தால் உணவை எடுத்து வைத்துவிட்டு அறைக்குள் சென்று மறைந்து விடுகிறாள். அவள் கையை பிடித்து இழுத்து அமர்த்தியபோதும் கூட அவனை திரும்பி பார்க்கவில்லை அவள்.

 

                              திருவுக்கு இந்த துர்கா புதிது. ஒருகாலத்தில் துர்கா அமைதி என்று நம்பிக் கொண்டிருந்தவன் தான். ஆனால் இப்போது இந்த ஒரு மாத வாழ்விற்கு பிறகு அவளின் இந்த அமைதி நரகமாக இருந்தது. அதுவும் அவன் ஏதோ கொலைக்குற்றம் செய்து விட்டது போல அவள் மொத்தமாக ஒதுங்கி கொண்டது திருவை அத்தனை பாதித்தது.

 

                               இந்த இரண்டு நாட்களில் துர்கா இல்லாத திரு எப்படி இருப்பான்?? அவன் வாழ்க்கை என்னவாக இருக்கும் ?? என்று புரிந்துவிட்டது திருவுக்கு. துர்கா பேசினாலே போதும் என்ற நிலைக்கு அவன் வந்திருக்க, அவனை அலைய விட்டவளோ இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவே நடமாடிக் கொண்டிருந்தாள்.

 

                                இதோ இப்போதும் அவன் காலை உணவிற்காக வந்து அமர்ந்திருக்க, திருவின் முன் தட்டு, தண்ணீர், உணவு என அனைத்தையும் எடுத்து வைத்து விட்டவள் சென்று அறைக்குள் அமர்ந்துவிட்டாள்.

 

                            திரு இரண்டு நாட்களாக பொறுத்து போனவனுக்கு இன்று ஆத்திரம் எல்லை மீற, தனக்கு முன்னால் இருந்த தட்டை எடுத்து வீசி இருந்தான். அது எழுப்பிய சத்தத்திற்கு துர்கா பதறி வெளியே வர, திரு அவளை முறைத்துவிட்டு அருகில் இருந்த தண்ணீர் சொம்பையும் தட்டிவிட்டு கோபமாகவே எழுந்து வெளியே நடந்து விட்டான்.

 

                             செல்லும் அவனை அமைதியாக பார்த்துக் கொண்டாள் அவன் மனைவி. அவன் வீசி எறிந்த தட்டு கீழே கிடக்க, தண்ணீர் சொம்பில் இருந்த தண்ணீர் தரையை நனைத்து இருந்தது. தான் உணவு எடுத்து வைக்காததிற்கு தான் இந்த ஆர்ப்பாட்டங்கள் என்று புரிந்தபோதும் அமைதியாகவே இருந்தாள். இன்னும் அவள் ரகசியம் ரகசியமாகவே இருந்தது.

 

                           இதுவரை திருவிடம் கூறி இருக்கவில்லை அவள். இன்னும் மருத்துவமனைக்கும் சென்று இருக்கவில்லை. இரண்டு நாட்களாகவே மருத்துவரை பார்க்க வேண்டும் என்ற யோசனை தான். ஆனால் திரு இல்லாமல் தனித்து செல்லவும் மனம் வரவில்லை என்பதால் தான் அமைதியாக இருந்தாள் அவள்.

 

                         இப்போது இவன் செயலில் மேலும் கோபம்வரபோடாஎன்று நினைத்து கொண்டவள் தான் மட்டுமே மருத்துவரை பார்த்து வருவது என்று முடிவெடுத்து கிளம்பிவிட்டாள். அவள் வேலை செய்த மருத்துவமனைக்கே வந்திருந்தாள் துர்கா. அங்கே பெரும்பாலும் அனைவருக்கும் அவளை தெரிந்திருக்க, பேசிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

                          வரவேற்பில் தன் பெயரை பதிவு செய்து கொண்டவள் அவள் முறைக்காக காத்திருக்க, அங்கு அவளை பார்த்த ஒருவர் திருவுக்கு அழைத்து சொல்லி இருந்தார். துர்காவை இரண்டு நாட்களுக்கு முன் கடை திறப்பு விழாவில் பார்த்திருக்க நன்றாகவே நினைவு இருந்தது அவருக்கு.

 

                           அவள் தனியாக வந்திருக்கவும் என்னவோ என்று நினைத்தவர் உடனடியாக திருவுக்கு அழைத்து இருந்தார். திருவுக்கும் அதிர்ச்சிதான் என்றாலும், அவளுக்கு கொஞ்சம் உடம்பு முடியலண்ணே.. என்கிட்டே சொல்லிட்டு தான் போனா..” என்று சமாளித்து வைத்தான் திரு. ஆனால் சொல்லாமல் சென்ற மனைவியின் மீது கோபமும், வருத்தமும் ஒருங்கே எழுந்தது அவனுக்கு.

 

                           அந்த கருமத்தை அன்னிக்கு தொடாமலே இருந்திருக்கலாம் என்று தலையில் அடித்துக் கொண்டவன் மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தான். அடுத்த பத்து நிமிடங்களில் அவன் மருத்துவமனையை அடைய, அங்கே சரியாக துர்காவின் முறை. துர்கா எழுந்து கொண்டவள் மருத்துவரின் அறைக்குள் நுழையப்போக திருவும் வந்து நின்றான் அவளுடன்.

 

                           அங்கிருந்த பெண் இவனை தடுக்க, துர்காவை முறைத்தவன்என் பொண்டாட்டி இவ.. என்னை விடமாட்டேன் ன்னு சொல்லுவியா நீ…” என்று அந்த பெண்ணிடம் கத்தி வைத்தான். துர்கா கண்டுகொள்ளவே இல்லை. அவள் பாட்டிற்கு உள்ளே சென்றுவிட, திரு அவளின் பின்னே சென்றான். அந்த பெண் வாயையே திறக்கவில்லை.

 

                            திருவின் தோற்றமும், அவன் முகத்தில் இருந்த கோபமும் அவளை வாய் திறக்க விடவில்லை என்பது சரியாக இருக்கும். துர்கா மருத்துவரின் முன் அமர்ந்திருக்க, அவளை கேள்வியாக பார்த்தார் அந்த மருத்துவர். அவருக்கு துர்காவை ஏற்கனவே தெரிந்து இருந்தது.

 

                              “சொல்லுங்க துர்கா..” என்று அந்த மருத்துவர் கேட்க

 

            துர்கா தயக்கத்துடன்டேட் தள்ளி போயிருக்கு டாக்டர்செக் பண்ணனும்.” என்று மட்டுமே அவள் கூற, திருவுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. இதற்குள் அந்த மருத்துவரும் துர்காவை அழைத்துக் கொண்டு இன்னொரு அறைக்கு சென்றுவிட, திரு மட்டும்தான் இருந்தான் அங்கே.

 

                           முதல்கட்ட பரிசோதனைகளை முடித்த மருத்துவர் துர்காவின் கர்ப்பத்தை உறுதி செய்துவிட, அப்படி ஒரு பொலிவு துர்காவின் முகத்தில். அந்த மருத்துவரே திருவிடமும் விஷயத்தை கூறிவிட, அவன் மகிழ்வு அவன் முகத்தில் தெரிந்தது. கண்கள் கலங்கிவிட்டது அந்த ஆறடி ஆண்மகனுக்கு.

 

                      கண்ணீரும், சிரிப்பும் கலந்த கலவையாக அவன் இருக்க, துர்காவுக்கு புரிந்தது அவன் நிலை. ஆனாலும் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் மருத்துவரிடம்  சொல்லிவிட்டு வெளியில் நடந்தாள் அவள். அவளின் இந்த செயலில் திருவுக்கு மீண்டும் கோபம் எட்டிப்பார்க்க அமைதியாகவே உடன் நடந்தான் அவன்.

             இருவரும் வெளியே வர திரு வண்டியை எடுக்கவும், எதுவும் சொல்லாமல் உடன் ஏறி கொண்டாள் துர்கா. அதே அமைதியுடன் அவர்கள் வீடு வந்து சேர, துர்கா தன்னறைக்கு செல்ல முற்படவும் அவள் கையை பிடித்து நிறுத்தினான் திரு.

 

                           துர்கா அமைதியாக நிற்க, “எதுக்குடி இப்படி செஞ்சநீ மாசமா இருக்கறத கூட என்கிட்டே சொல்ல முடியாத அளவுக்கு வேண்டாதவனா போய்ட்டேனா துர்கா நான்…” என்று அவன் ஆதங்கமாக கேட்க அதில் வருத்தமே அதிகம் இருந்தது.

 

                        அவள் மௌனத்தை பார்த்தவன்பேசு துர்காஇப்படி அமைதியா இருக்காத.. ரெண்டு நாளா என்னை சாகடிச்ச வரைக்கும் போதும்.. மரியாதையா வாயைத் திறந்து பதில் சொல்லுஎன்றவன்

 

                      “இவன்கிட்ட எதுக்கு சொல்லணும் ன்னு நினைச்சியா?? இல்ல ஒரேடியா விட்டுட்டு போய்டலாம் ன்னு திட்டம் போட்டியா..” என்று அழுத்தமாக கேட்க, துர்காவின் கண்களில் கண்ணீர்.

 

                      அவளின் இந்த அமைதியை எப்படி கலைப்பது என்று புரியவே இல்லை திருவுக்கு. இப்போதும் அவள் கண்ணீரை பார்த்ததும் வழக்கம்போல் மனம் உருக, அவள் கன்னத்தை கைகளில் ஏந்திக் கொண்டவன் அவள் கண்ணீரை அழுத்தமாக துடைத்துவிட்டான்.

 

                       “அழுத கொன்னுடுவேன் உன்னைஎன்னடி வந்தது உனக்கு.. ஏன் வாயைத் திறந்தா முத்து உதிர்ந்திடுமா?? என்கிட்டே பேசாமலே இருந்துடுவியா?? முடியுமா உன்னால ?? என்று சவாலாக கேட்டவன் அடுத்த நொடியேசத்தியமா என்னால முடியல துர்கா.. ” என்று அவள் தலையின் மீது தன் நெற்றியை சாய்த்துக் கொண்டான்.

 

                  இரு நிமிடங்களுக்கு பிறகு அவனே விலகியவன்நான் என்ன செய்யணும் துர்காநீ சொல்லு, உன்னைவிட இப்போ நம்ம குழந்தையை விட எதுவும் பெரிசு இல்லடி.. உனக்கு என்னை தெரியாதா ?? நீ சொன்னா நான் கேட்க மாட்டேனா ??” என்று திரு கெஞ்சிக் கொண்டிருக்க, துர்கா தான் வாயை திறந்த பாட்டை காணோம்.

 

                      கடுப்பான திருஉனக்கு என்கிட்டே பேச பிடிக்கலைன்னா பரவால்ல.. ஆனா நம்ம பிள்ளையை வாட்டாத.. உனக்கு என்னை பார்க்க தானே பிடிக்கலநீ வா உன் அம்மாகிட்ட உன்னை விட்டுடறேன்.. நீ அங்கேயாச்சும் நிம்மதியா இரு.. இப்படி அழுதுட்டே இருக்க வேண்டாம்.. நானும் உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன்.. வா நீ நிம்மதியா இரு…” என்று கையை பிடித்து இழுக்க

 

                       துர்கா சட்டென கையை உருவிக் கொண்டாள். இப்போது கண்ணீருடன் முறைப்பும் சேர்ந்து கொள்ள, திருஉன் புருஷன் மக்கு துர்கா.. இந்த பார்வையெல்லாம் புரியாது.. நீ வாயைத் திறந்து பேசினாதான் எனக்கு புரியும்..” என்று கூற

 

                       “என்ன புரியும்..” என்று வாயைத் திறந்தாள் துர்கா..

 

              திரு அதற்கே ஏதோ அவள் காதல் சொன்னது போல பூரித்து போயிருந்தான். இரண்டு நாட்களுக்கு பின் அவள் குரலை கேட்கிறான். சொல்லவும் வேண்டுமா.. துர்காவின் கன்னத்தை பற்றிக் கொண்டவன் அழுத்தமாக அவள் கன்னத்தில் தன் இதழ்களை பதிக்க, துர்கா அவனை தள்ளி விட்டவள் தன் கன்னத்தை புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.

 

                            “என் பக்கத்துல வந்திங்க கொன்னுடுவேன் உங்களைமரியாதையா தள்ளி போய்டுங்க.” என்றுவிட்டு அறைக்குள் நுழைந்தாள் அவள். திரு அவள் பின்னால் வந்து அணைக்கதள்ளி போயாஅதான் சொன்னியே அம்மாவீட்ல விட்டுடறேன் ன்னு.. அப்புறம் என்ன ?? ஏன் என் பின்னால வர..” என்று கத்தினாள் துர்கா.

 

                         திரு தள்ளி நிற்கஏன் என்னை அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டா உங்களுக்கு இன்னும் வசதியா இருக்குமா.. இப்படி நீங்க குடிச்சிட்டு கூத்தடிக்க நான் இடைஞ்சலா இருக்கேனாஅதான் என்னை அனுப்பிவிட பார்க்கிறீர்களா..” என்று அவள் பாட்டுக்கு கத்த, இப்போது திரு மௌனித்துக் கொண்டான்.

 

                         துர்கா ஆத்திரத்துடன் அவனை பார்த்திருக்க, திரு அவள் அருகில் அமர்ந்தவன் அவள் தோளை சுற்றி அணைத்து கொண்டான். துர்கா எழுந்து கொள்ள முற்படஅடி வாங்க போற துர்கா..” என்றவன்ஒழுங்கா என் கைக்குள்ள இரு..” என்று அவளை வளைத்துக் கொண்டான்.

 

                      துர்கா முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்க, அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் அவள் கோபமாக திரும்பவும் அவள் வாயைத் தன் கையால் மூடிவிட்டான். துர்கா திமிறும் போதேஅமைதியா இருந்தா நானே விட்டுடுவேன்.” என்றுவிட்டு பேச தொடங்கினான் திரு.

 

                     “எவ்ளோ கோபம் வருதுடி உனக்கு.. எதுக்கு இத்தனை போராட்டம், நான் குடிக்க கூடாது அதானே.. இனித் தொட மாட்டேன்.” என்றுவிட்டான். துர்கா கண்களை விரிக்கநீ இத்தனை கோபப்படும் போதே புரியுது துர்கா.. நான் சொதப்பி இருக்கேன் ன்னு. எவ்ளோ முக்கியமான விஷயம், அதைவிட எத்தனை சந்தோஷமா இருந்திருப்ப.. கெடுத்துட்டேன்ல.

 

                      “நீ பேசாம இருக்கும்போதே விஷயம் பெரிசு ன்னு தோணிடுச்சு. ஆனா இந்தளவுக்கு எதிர்பார்க்கல. என் பிள்ளைக்கு நான் நல்ல அப்பாவா இருப்பேன் துர்கா.. இனி எப்பவும் இப்படி நடக்காது. என்னை நம்பலாம் நீ.. இல்ல நம்ப மாட்டேன் ன்னு சொன்னா சத்தியம் பண்ணவா ?? ” என்று திரு முடிக்க கூட இல்லை.

 

                       துர்கா அவனை கட்டிக் கொண்டாள். அவனின் சத்தியம் தேவையே படவில்லை அவளுக்கு. அவளுக்கு வேண்டியது அவன் வாய் வார்த்தைதான்.

                     அதுவும் தான் அன்று இருந்த நிலையையும் அவன் புரிந்து கொள்ள அதற்குமேல் எதுவும் தேவையில்லை துர்காவிற்கு. அவளுக்கு திருவை தெரியும், சொன்ன சொல்லை காப்பாற்றுபவன் என்று தெரியும். எனவே அவன் வார்த்தை நிம்மதி கொடுத்தது.

 

                         திருவிக்கும் ஒரு நிம்மதியான மனநிலை தான். இதோ அவன் கைகளுக்குள் அவன் சொர்க்கம். இரண்டு நாட்களாக கண்முன் நரகத்தை காட்டிக் கொண்டிருந்தவள் இப்போது சொர்க்கமாக தோன்றினாள் அவனுக்கு. அதுவும் அவளுக்குள் இப்போது தன் உயிரும் குடி கொண்டுவிட அவர்கள் தான் அவன் வாழ்க்கையே.

 

                        அப்படி இருக்க இந்த குடிப்பழக்கம் பெரிய விஷயமாக தெரியவில்லை. அவனும் அவளை கட்டிய நாள் முதலாக மதுவை தவிர்த்து தான் வந்தான். ஆனால் அன்று கடை திறப்புக்கு பார்ட்டி என்று ஆரம்பித்து எங்கோ சென்றுவிட்டது. ஆனால் இனி என்ன வானாலும் தொடுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டான் தனக்குள்.

 

                           அவனுக்கான ஒரு குடும்பத்தை அவனுக்கு வழங்கியவன் அவன் துர்கா.. அவன் தனியன் என்ற பெயரை மாற்றி அவனை குடும்பஸ்தனாக்கியவள். அவள் கேட்ட ஒரே விடயம் இதுதான் எனும்போது வழங்குவது தப்பாக தெரியவில்லை திருவுக்கு.

 

                         இந்த இரண்டு நாள் தனிமை துர்காவின் அருமையை நன்கு உணர்த்தி இருக்க, இனி சறுக்குவதில்லை என்ற முடிவுடன் இருந்தான் அவன். அடுத்து வந்த நாட்களிலும் அவன் அதையே தொடர, துர்காவுக்கு திருவின் மீதான பைத்தியம் கூடிக் கொண்டே சென்றது.

 

                         திருவை போலவே அவனை காதலிக்க தொடங்கி இருந்தாள் அவள். அவள் பிள்ளை எப்படி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதோ அப்படியே அவன் மீதான காதலும் வளர்ந்தது அவளுக்கு. அதுவும் உடல் உபாதைகளில் அவள் சோர்வுறும் போதெல்லாம் தாயை விட அதிகமாக தாங்கி கொண்டான் அவன்.

 

                        சரத், தேவா இருவரும் இப்போதே வரவிருக்கும் சிசுவுக்கு சித்தப்பாக்களாக மாறி உரிமை கொண்டாட ஆரம்பித்திருக்க, துர்காவை அப்படி கவனித்தனர். வெள்ளியையும் திரு தன் வீட்டிற்கு மேலே இருந்த வீட்டில் குடிவைத்துவிட திரு இல்லாத நேரங்களில் வள்ளிதான் மகளுடன். வேலைக்கு போக வேண்டும் என்பதை மறந்துவிட்டார் அவர்.

 

                        துர்காவுக்கும், திருவுக்கும் சமைத்து கொடுப்பது, தன் மகளை சீராட்டுவது, தன் பேரனுடன் கதை பேசிக் கொண்டிருப்பது என்று அவர் நேரமும் வேகமாக ஓடியது. மனதளவில் மிகவும் நிம்மதியாக இருந்தார் வள்ளி.

                                           திருவே இரண்டு கடை வேலைகளையும், மற்ற வேலைகளையும் பார்த்துக் கொள்ள சரத்தும், தேவாவும் அவனுடன் நின்றனர். என்ன வேலை இருந்தாலும் இப்போதெல்லாம் நேரத்திற்கு வீட்டிற்கு வந்து விடுகிறான் திரு.

 

                      பின்னே அவன் பிள்ளைக்கு ஆறு மாதம் தொடங்கி இருக்க, அவனின் குரல் கேட்டாலே துள்ளி குதிக்க ஆரம்பித்து இருந்தது குழந்தை. எப்போதும் அவன் பிள்ளையோடு ஒரு அரைமணி நேரமாவது பேசிவிட்டு தான் உறங்க செல்வது அவன். சில நேரங்களில் இவர்களின் உரையாடல் முடிவதற்குள் துர்கா உறங்கி இருப்பாள்.

 

                      திரு என்ற மனிதன் தன்னை இப்போது முழுமையாக உணர தொடங்கி இருந்தான் துர்காவின் அருகாமையில்.

         

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement