Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 23

                                   திரு அவன் கடைக்கு முன்பணம் செலுத்தி ஒரு மாதம் கடந்திருந்தது. இதோ இன்று காலையிலேயே அவன் துர்காவை அழைத்துக் கொண்டு அவர்களின் புது கடைக்கு வந்து விட்டிருந்தான். இன்று அவர்களின் கடை திறப்பு விழா. பெரிதாக எந்த ஆடம்பரமும் செய்யவில்லை அவன். தன்னுடன் மார்க்கெட்டில் இருக்கும் சில வியாபாரிகளை மட்டும் அழைத்திருந்தான்.

                              அவர்களே குறைந்தது ஒரு ஐம்பது பேராவது இருப்பார்கள். கடை முதல் நாளே ஜே ஜெ என்று தான் இருந்தது. கடை என்றால் ஏதோ சிறிய அளவிலானது என்றுதான் நினைத்திருந்தாள் துர்காவும். ஆனால் திரு  அதிலும் ஒரு கை பார்த்திருந்தான். கடை மூன்றாக பிரிக்கப்பட்டு இருக்க, நடுவில் நீளமான ரேக்குகள் அமைக்கபட்டு இருந்தது. ஒரு புறம் முழுவதும் பால் பொருட்கள் வெண்ணெய், நெய், பன்னீர், தயிர், சீஸ் என்று அத்தனையும் இருக்க, அடுத்த வரிசை முழுவதும் எண்ணெய் வகைகள். பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கிடைக்கும் சாதாரண எண்ணெய் முதல் செக்கு எண்ணெய் வரை அனைத்தும் இருந்தது.

                            மூன்றாவது வரிசை முழுவதும் தானியங்கள், நெல், கோதுமை, சாமை, வரகு, தினை, கேழ்வரகு, சோளம், கம்பு, இவற்றுடன் பனைவெல்லம், நாட்டு சர்க்கரை, என்று இன்னுமின்னும் கூடி இருந்தது அந்த வரிசை. இன்றைய காலகட்டத்தில் மக்கள் எதையெல்லாம் மீண்டும் தேட ஆரம்பித்து இருந்தனரோ அதற்காகவே ஒரு இடத்தை ஏற்படுத்தி இருந்தான் திரு.

                          அவனின் திட்டம் இத்துடன் முடியவில்லை போல. கடையில் வாசலில் சிறிய தடுப்பு ஒன்று இருந்தது. அதற்குள் எட்டிப்பார்த்தால் நுங்கு, இளநீர், பனம் பழம், பதநீர் என்று அது ஒரு பக்கம் வீற்றிருந்தது. அந்த சாலை கோயம்பேட்டிலிருந்து வெளியேறும் முக்கிய சாலையாக இருக்க, நிச்சயம் இது வரவேற்கத்தக்க முயற்சிதான் என்று தோன்றியது துர்காவுக்கு.

                         அதுவும் இந்த பனைப்பொருட்களும், இயற்கை சார்ந்த பொருட்களும் திருவை கைவிடாது என்று முழுமையாக நம்பினாள் துர்கா. காலையிலேயே திரு அழைத்து வந்திருந்தாலும் கடையை முழுதாக அவள் இப்போது தான் பார்க்கிறாள். காலையில் அவளை நேரத்திற்கு அழைத்து வந்தவன் அவள் கைகளால் தான் கடையை திறந்திருந்தான்.

                       அடுத்து பூஜையிலும் இருவரும் ஒன்றாகவே நிற்க, ஐயர் சொன்னதுபோல் அனைத்தையும் செய்து முடித்து அவள் விளக்கேற்றி வைக்க வியாபாரம் தொடங்கியது. இதற்குள் மற்றவர்களும் வர தொடங்க திரு அவளை தன்னுடனே இருத்தி கொண்டிருந்தான். இப்போது ஆட்கள் சற்று குறையவும் நிதானமாக சுற்றி வந்தாள்.

                        அதுவும் உடன் யாரும் இல்லாமல் அவள் மட்டும் கடைக்குள் நடந்து கொண்டிருக்க, மனம் சற்று பெருமையாக உணர்ந்தது. இது அவளின் கடை. அவளுக்காகவே அவள் கணவன் ஏற்படுத்திக் கொடுத்தது என்ற நினைவே இனித்தது. ஆம்.. துர்கா ஆயில் ஸ்டோர்… கடையை பொறுத்தவரை அனைத்தும் துர்காவின் பெயரில்தான்.

                        துர்கா மறுத்தபோது கூட பெரிதாக கண்டுகொள்ள வில்லை அவன். எப்படியோ ஒரு வழியில் அவள் வாயை அடைத்து அவளை சரிக்கட்டி இருந்தான். கடையின் நிர்வாகமும் அவள்தான் என்று திரு கூறிவிட்டிருக்க, திரு நிச்சயம் தன்னை மருத்துவமனைக்கு வேலைக்கு அனுப்ப மாட்டான் என்பது தெளிவாக புரிந்து விட்டது துர்காவுக்கு.

                              ஆனால் துர்காவுக்கும் ஏனோ அது பெரிய விஷயமாக படவில்லை. அவள் இருக்கும் துரையின் முக்கியத்துவம் உணர்ந்தவள் தான் என்றாலும் கூட, இப்போது திருவுக்கு உறுதுணையாக நிற்பது என்று முடிவெடுத்துக் கொண்டாள். அவன் ஓடிக் கொண்டே இருப்பதை அவளும் பார்த்துதானே நிற்கிறாள்.

                            தன் யோசனையில் மிதந்து கொண்டே அவள் கடையை முழுவதுமாக சுற்றி முடித்து முன்பக்கம் வர, அங்கு வள்ளி, திரு, தேவா நின்றிருந்தனர். கடையின் திறப்பு விழாவிற்கு வந்தவர்களுக்கு காலை உணவை அருகில் ஒரு உணவகத்தில் திரு ஏற்பாடு செய்திருக்க, வந்தவர்கள் அனைவரும் கிளம்பி இருந்தனர்.

                         வள்ளிக்கு தான் கால்கள் தரையில் நிற்கவில்லை. அவருக்கு கிடைத்த மருமகனை பற்றி ஒரே பெருமைதான். மகளையும், மருமகனையும் பார்த்து பார்த்து பூரித்து போனார் அவர். இத்தனைக்கும் திரு இன்னமும் அவரை கடைக்குள் சேர்த்துக் கொண்டிருக்கவில்லை. இன்னும் வீட்டில்தான் இருக்கிறார். ஆனாலும் கூட மருமகன் புராணம் ஓயவே இல்லை வள்ளிக்கு.

                          துர்காவே இரண்டு முறை பேசி இருந்தும் கூட, திரு வள்ளியை கடைக்கு வேலைக்கு வர அனுமதிக்க வில்லை. துர்காவிடமும் ஏதேதோ சொல்லி மழுப்பி இருந்தான். அவள் நான் பேசியதை மனதில் வைத்து இப்படி செய்கிறீர்களா?? என்று கேட்டபோதும் கூட, நான் அப்படி செய்வேன்னு உனக்கு தோணுதா?? என்று ஒற்றைப் பார்வையில் அவளை அடக்கி விட்டிருந்தான் திரு.

                           இப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக நிற்பதை காணவும் பொங்கி கொண்டு வந்தது துர்காவுக்கு. “இந்த அம்மாக்கு நான் பொண்ணா?? இவன் பொண்ணா ன்னே தெரியல… என்னை விட அதிகமா இவனைத்தான் பார்க்குது..” என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டே தான் அருகில் வந்தாள் துர்கா.

                         அவளின் முறைப்பை பார்த்த வள்ளிக்கு பார்த்தவுடனே புரிந்து விட்டது அவளின் பார்வை. அவளை பார்த்து சிரித்துக்  கொண்டார் அவர். அவளுக்கு என்ன தெரியும்?? திருவின் மீதான வள்ளியின் பாசம். பாசம் என்பதையும் தாண்டிய ஒரு நன்றியுணர்வு அவருக்கு.

                        அவர் மார்க்கெட்டில் திக்கு தெரியாது தவித்த நேரத்தில் கைகொடுத்து தூக்கி விட்டவன் திரு. அவனுக்கு இருந்த பழக்கத்திற்கு அவர் இடத்தில அவரை விட வேகமாக வேலை பார்க்கும் தேவா, சரத் போல யாரையும் அவன் நியமித்து இருக்கலாம். ஆனால் அவரின் நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு அந்த இருபத்து மூன்று வயதில் அவரை தன்னோடு சேர்த்துக் கொண்டான் அவன்.

                       இன்று வரை நான் முதலாளி என்று உணர்த்தியதே இல்லை அவன். ஒரு தாயிடம் மகன் காட்டும் பரிவு தான் தென்படும். என்ன கொஞ்சம் முசுட்டுதனமான மகன். பாசம் கூட கண்டிப்பாகவே வெளிப்படும். மார்க்கெட்டில் அவருக்கு ஒரு பிரச்சனை என்றால் அது திருவை தாண்டித்தான் வள்ளியை தொட முடியும்.

                       இது ஒரு சாதாரணமான விஷயமாக மற்றவர்களுக்கு தெரிந்தாலும், வயது வந்த பெண்பிள்ளையை கையில் பிடித்துக் கொண்டு தனித்து நின்ற வள்ளிக்கு அதன் முக்கியத்துவம் தெரியும். அதுவும் அந்த சிறுவயதில் திருவின் பக்குவமும், பொறுப்பும் பெற்றவர்கள் இருந்து வளர்க்கும் பிள்ளைகளிடம் கூட பார்க்க முடியாது என்று அடித்து சொல்லுவார் வள்ளி.

                   இதையெல்லாம் மகளுக்கு புரியவைக்க முடியாது என்பதை விட, புரிந்தாலும் அவனுடன் போட்டிக்கு தான் நிற்பாள் என்று தெரிந்தவர் ஆகையால் அவளிடம் எதுவுமே பேசவில்லை அவர். அமைதியாகவே அவர் நிற்க அருகில் வந்தவள் திருவின் பக்கத்தில் நின்றுக் கொண்டாள்.

                  திரு அவளின் சோர்ந்த முகத்தை பார்த்தவன் அவளை அங்கிருந்த கல்லாவில் அமர்த்த, துர்கா பதட்டத்துடன் மறுத்தாள். திரு அவளை முறைத்து அங்கே அமர்த்திவிட்டு வெளியில் சென்றவன் திரும்பும்போது அவன் கைகளில் இரண்டு இளநீர் இருந்தது.

                  ஒன்றை வள்ளியிடம் கொடுத்தவன் மற்றொன்றை மனைவியிடம் நீட்ட, வாங்கி கொண்டவள் அவனை பார்க்க, தேவா ஒரு இளநீரை கொண்டு வந்து திருவின் கைகளில் கொடுத்துவிட்டு சென்றான். வள்ளி அவனுடனே வெளியே சென்றுவிட, அங்கங்கே ஒன்றிரண்டு வாடிக்கையாளர்கள் மட்டுமே இருந்தனர் கடையில்.

                      திரு துர்காவையே பார்த்து வைக்க, அவனின் பார்வையை உணர்ந்தவள் என்ன என்பதாக புருவம் உயர்த்தினாள். திரு எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாலும் பார்வையை மாற்றிக் கொள்ளவும் இல்லை. அன்று அந்த கடையில் அவள் இருந்த நேரம் முழுவதுமே திருவின் பார்வை அவளையே தொடர்ந்து கொண்டிருந்தது.

                 அவன் பேசும் பேச்சுக்களை விட இந்த பார்வை அதிகமாக வெட்கப்பட வைத்தது பெண்ணவளை. ஒரு மெல்லிய சிரிப்புடன் அவள் அங்கு அமர்ந்திருக்க, வந்த வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு   பில் போட்டு கொடுத்து கொண்டிருந்தாள். மதியம் வரையும் அவள் அங்கேயே அமர்ந்திருக்க, மதிய உணவுக்காக திரு தான் அவளை எழுப்பி வீட்டிற்கு கூட்டிச் சென்றான். தேவாவையும், சரத்தையும் கடையில் விட்டுவிட்டு சென்றவன் துர்காவை அழைத்து வந்து வீட்டில் விட்டான்.

                      வரும்போதே சரத் எடுத்து வந்து தந்திருந்த உணவையும் அவன் எடுத்து வந்திருக்க, டைனிங் டேபிளில் வைத்துவிட்டு முகம் கழுவ உள்ளே சென்றான். துர்கா முதலில் முகம் கழுவி வந்தவள் உணவை எடுத்து வைக்க, திருவும் வந்து அமர்ந்து கொண்டான் அங்கே.

                        காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்தது துர்காவை மிகவும் சோர்வாக உணர வைக்க, உண்டு முடித்தவள் வந்து சோஃபாவில் விழுந்து விட்டாள். வெளியில் இருந்தவரை சமாளித்தவள் வீட்டிற்குள் நுழையவும் துவண்டு படுத்துவிட, திருதான் என்னவாயிற்று இவளுக்கு என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

                        சிறிது நேரம் திரு அவள் அருகிலேயே அமர்ந்திருக்க, கண்திறந்து அவனை பார்த்தவள் “என்ன” என்று கேட்டாள். அவள் முகத்தை பார்த்தவன் “என்னடி ஆச்சு.. உடம்புக்கு எதுவும் முடியலையா..?” என்று கேட்க

                     அவனை முறைத்தவள் “எனக்கு தூக்கம் வருது… ராத்திரியும் தூங்கவிடல.. காலையிலயும் ராக்கோழி மாதிரி நாலு மணிக்கே எழுப்பி விட்டுடுங்க..” என்று புகார் படித்தாள்.

                   அவள் பதிலில் சிரித்தவன் ” சரியான சோம்பேறிடி நீ.. ஒரு நாள் நாலு மணிக்கு எழுந்ததுக்கு இவ்ளோ டையர்ட். நீ எல்லாம் வள்ளிம்மா பொண்ணு ன்னு வெளியே சொல்லாத.. ” என்று கலாய்த்தான் திரு.

                  துர்கா சிலிர்த்துக் கொண்டவள் “நானும் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வேலைக்கு போயிருக்கேன். இங்க வந்து தான் இப்படி ஆகிட்டேன்.. உங்களோட சேர்ந்து தான்..” என்று கூற

                  இப்போது திரு முறைத்தான்.. “நான் என்ன எட்டு மணி வரைக்குமாடி தூங்குறேன்..” என்று அவன் கேள்வி கேட்க

                 “நீங்க சீக்கிரமா எழுந்துக்கறது எல்லாம் ஓகே.. என்னை சீக்கிரமா தூங்க விடணும்ல.. ” என்று சிரிப்புடன் அவனை மடக்கினாள் துர்கா.

                திரு அவளையே நக்கலாக பார்த்து “நானும் உன்கூட தானே தூங்கறேன்..” என்று கேட்க

                “அது,.. அதெல்லாம் எனக்கு எப்படி தெரியும். உங்களால எழுந்துக்க முடியுது… என்னால முடியாதுப்பா.. வேணும்ன்னா ஒன்னு பண்ணுங்க.. நான் இனிமே தினமும் பத்து மணிக்கு தூங்கிடறேன்.. காலையில நாலு மணிக்கு எழுந்துப்பேன்..” என்று வழி சொன்னாள் துர்கா.

                  இதற்குமேல் அவளிடம் பேசுவானா திரு. இவள் அடிமடியிலே கைவைக்கிறாள் என்று புரிந்தவன் அவள் வாயை அவனுக்கு தெரிந்த வகையில் அடைத்துவிட்டு கடைக்கு கிளம்பினான். அவன் கிளம்பவும் துர்காவும் கதவை மூடியவள் உள்ளே சென்று படுத்து விட்டாள்.

                                     படுத்தது தான் தெரியும் அவளுக்கு அப்படி ஒரு உறக்கம். கடையை மொத்தமும் தோளில் தாங்கி கொண்டிருந்தது போல் தூங்கி கொண்டிருந்தாள். மாலையில் தான் விழிப்புவர, அப்போதும் ஏதோ அளவுக்கு மிஞ்சிய வசதியாகவே உணர்ந்தாள்.

                  இரவுக்கு சமைக்க வேண்டும் என்பதும் நினைவில் வர, சோர்வை ஓரம்கட்டியவள் மெதுவாக எழுந்து குளித்துவிட்டு வெளியில் வந்தாள். ஏன் இப்படி என்று யோசித்துக் கொண்டே அவள் வேலையில் கவனம் செலுத்த, குழப்பம் தீர்ந்தபாடில்லை.

                யோசித்துக் கொண்டே இருந்தவளுக்கு திடீரென தன் மாதவிடாய் நினைவு வந்தது. அவள் அன்னையின் வீட்டில் இருந்தபோது வந்தது தான் அவளுக்கு. இங்கு வந்து ஒருமுறை கூட இல்லை என்பது நினைவு வர, மெல்லிய நடுக்கம் ஓடியது உடலில்.

                    காரணமே இல்லாமல் அழுகை வருவது போல் இருக்க, அப்படியும் இருக்குமோ என்று அலைபாய்ந்தது மனது . அவளுக்கு இருக்கும் அறிகுறிகள் எல்லாம் ஒத்து வந்தாலும், அவளே முடிவு செய்து கொள்ள மனம் பயந்தது.

                    நேரத்தை பார்த்தவள் பெரிதாக நேரம் கடக்கவில்லை என்று தோன்றவும் வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டாள். அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பில் தேவையானதை வாங்கி கொண்டு அவள் வீட்டிற்கு வந்துவிட்டாலும் சோதித்து பார்க்க பயமாக இருந்தது.

                  முதலில் அதுவாக இருக்குமோ என்று சந்தேகத்தில் இருந்தவள் இந்த இடைப்பட்ட நேரத்திலேயே கடவுளே அதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று வேண்டுதல் வைக்க தொடங்கி இருந்தாள். அந்த நினைவே தித்திக்க, திரு அன்று பேசிய பேச்சுக்களும் அதற்கான தன் மறுமொழியும் கூட இப்போது நினைவு வந்தது அவளுக்கு.

                   நடந்துவிடுமோ ?? என்று எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தவள் ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சோதித்தும் பார்த்துவிட்டாள். அவள் எதை எதிர்பார்த்திருந்தாலோ அதுதான் கிடைத்திருந்தது. கண்கள் கலங்கி போக அந்த குளியலறையிலேயே வெகுநேரம் அமர்ந்து விட்டாள் துர்கா.

                 கண்ணீரும், புன்னகையும் ஒன்றாக வெளிப்பட ஒரு அழகான தருணம். குட்டி திருதான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் வயிற்றை தடவி கொண்டாள். முதலில் திருவுக்கு அழைக்க நினைத்தவள் பின் அவன் வரட்டும் என்று தன் காத்திருப்பை தொடங்கிவிட்டாள்.

                   பாதியில் விட்டிருந்த சமையலும் ஞாபகம் வர, சமையலை முடித்து விட்டு கொஞ்சம் பாயசமும் தயார் செய்து வைத்தாள். அவர்களின் தேசிய இனிப்பல்லவா… அனைத்தையும் முடித்துவிட்டவள் திருவுக்காக காத்திருக்க நேரம் ஆமை வேகம் என்பார்களே அப்படி நகர்வதாகத்தான் தோன்றியது துர்காவுக்கு.

                  அவளும் வாசலையே பார்த்திருக்க திரு வருவதாகவே காணோம். இன்று கடையின் முதல் நாள் என்பதால் வேலை அதிகமிருக்கும் என்று நினைத்துக் கொண்டவள் காத்திருக்க, திரு வரவே இல்லை.

                  அவனின் வழக்கமான நேரம் தாண்டியும் அவன் வராமல் போக, திருவை திட்டிக் கொண்டே காத்திருந்தாள் துர்கா.

               அவளின் பொறுமையை முழுதாக சோதித்தவனோ பன்னிரண்டு மணிக்கு மேல்தான் திருடன் போல் வீட்டிற்கு வந்தான். அதுவும் வந்தவன் அங்கே அமர்ந்திருக்கும் துர்காவை கூட பார்க்காமல் நேரே அறைக்கு செல்ல முற்பட அவனை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் துர்கா.

                 அவன் துர்காவின் முகத்தை பார்க்கவே இல்லை உள்ளே நுழைந்தது முதல். துர்காவும் அதை கவனித்து இருந்தாலும் அமைதியாகவே இருந்தாள். திரு குளித்து முடித்து வெளியே வர, துர்கா அசையவே இல்லை. அவள் இருந்த இடத்திலேயே இருக்க பார்வை திருவை துளைத்தது.

                   திரு அவளின் அருகில் வர, “வெளியே போங்க.. ” என்று கையை கதவை நோக்கி காட்டினாள் துர்கா. திரு அதிர்ந்து போய் பார்க்க “நீங்க போறிங்களா.. இல்ல நான் வெளியே போகவா..” என்று கேட்டவள் எழுந்து கொள்ள பார்க்க, திரு தானாகவே வாசலை நோக்கி நடக்க தொடங்கி விட்டான்.

Advertisement