Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 22

                           தன் வீட்டிற்கு வந்திருக்கும் அன்னையை அதிசயமாக பார்த்தாள் துர்கா. இவள் டீவியை மாற்றிக் கொண்டே அமர்ந்திருக்க,  வாசலில் ஏதோ நிழலாடுவது போல தோன்றவும் திரும்பி பார்த்தாள்.

                           அங்கே தன் அன்னையை கண்டவள் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க, வள்ளி தானாகவே வீட்டினுள் வந்தார்.

                             சோபாவின் கைப்பிடியின் மீது காலை நீட்டி பக்கவாட்டில் திரும்பியவாறு அவள் அமர்ந்திருக்க, வள்ளி அவளை ஆட்சேபனையாக பார்த்தார்.

                      “கல்யாணம் முடிஞ்சு புருஷன் வீட்ல இருக்க மாதிரியா இருக்க… காலை எங்க தூக்கி வச்சிட்டு எப்படி உக்கார்ந்திட்டு இருக்கா பாரேன்..” என்று அவர் முறைக்க

                      “அதானே.. எங்க அம்மாவே தான்…” என்று சத்தமாக முணுமுணுத்தாள் துர்கா..

                      “வாயை திறந்து பேசுடி… அது என்ன வாய்க்குள்ளேயே பேசிக்கற..” என்று வள்ளி சத்தமாகவே கேட்க

                     “நீ வந்தத பார்த்து என் அம்மாவா ன்னு ஒரு நிமிஷம் அப்படியே நின்னுட்டேன்.. இப்போ நீ பேசவும் தான் உறுதியாச்சு. அதைத்தான் சொன்னேன்..” என்று நக்கலாக பதில் கூறினாள் துர்கா.

               “ஏன்.. ஏன் நான் வந்ததுல என்ன ஆச்சு..” என்று அவர் புரியாமல் கேட்க

              “ஒன்னும் ஆகல.. உனக்கு என் வீட்டுக்கு வழி தெரிஞ்சிருக்கே ன்னு பார்த்தேன்..” என்றவள் “உட்காரும்மா… காஃபி போடவா..” என்றும் கேட்டு வைத்தாள்.

                மகள் விசாரிப்பது குளுமையாக இருந்தாலும், “வரக்கூடாது ன்னு இல்லடி..” என்று அவர் இழுக்க

                “அதான் வந்துட்ட இல்ல… விடு.. இப்போ என்ன?? பொண்ணை பார்க்க வந்தியா? இல்ல உன் திரு தம்பிய பார்க்கணுமா..”

                           வள்ளி அவளை முறைத்துவிட்டு “உன்னைத்தாண்டி பார்க்க வந்தேன்.. என் மக எப்படி குடும்பம் நடத்துறான்னு நான் பார்க்க வேணாமா..” என்று கூற

                  “வள்ளி…. நீ யாருன்னு எனக்கு தெரியும்.. நான் யாருன்னு உனக்கு தெரியும்..இதுல  நீ என்னை பார்க்க வந்துட்ட.. இதை நான் நம்பணுமா…” என்று ராகமாக இழுத்தாள் மகள்.

                “சரி விடு.. நீ நம்ப வேண்டாம் நான் கிளம்புறேன் போ..” என்று வள்ளி முறுக்கி கொள்ள

               “ம்மா.. உட்காரும்மா.. சரி நீ என்னைத்தான் பார்க்க வந்திருக்க.. நான் நம்பிடறேன்.. சரியா.. இப்போ உட்காரு..” என்று அவரை பிடித்து அமர வைத்தவள் “இரு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்” என்று கிட்சேனுக்குள் நுழைந்தாள்.

                  வள்ளியும் அவள் பின்னால் சமையல் அறைக்குள் நுழைய, காலையில் சமைத்த இட்லியுடன் சட்னியை வைத்து அவரிடம் துர்கா கொடுக்க, டைனிங் டேபிளில் அவளுடன் பேசிக்கொண்டே உண்ண ஆரம்பித்தார் வள்ளி. அந்த டைனிங் டேபிளை தொட்டு தடவி பார்த்தவருக்கு கண்கள் கலங்கி போனது. அவர் எங்கே அதையெல்லாம் பார்த்தார்???

                     அந்த வீட்டையும் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார் வள்ளி. இதற்கு முன் வந்து இருந்தாலும் அடுத்தவர் வீடு தானே..

                    அன்று இவர்கள் திருமணத்தன்று வந்தபோதும் வேகமாக கிளம்பி விடவே இப்போது பொறுமையாக அவர் பார்வை சுற்றி வந்தது. இப்போது அவர் மகளின் வீடு.. அந்த நினைவே சுகமாக இருக்க மகள் வசதியாக வாழ்வதில் சற்றே பெருமையாக கூட இருந்தது அந்த அன்னைக்கு.

                       மகளின் வளவள பேச்சும், இடையில் ததும்பும் சிரிப்பும் அவளின் வாழ்வை படம் போட்டு காட்ட, இந்த ஜென்மத்திற்கு இது போதும் என்ற நிலை தான் வள்ளிக்கு. அவருக்கு இப்போதைக்கு வேறு எந்த வேண்டுதலும் இல்லை இறைவனிடம்.

                       அன்று துர்கா அவசரமாக அவர் வீட்டிலிருந்து கிளம்பும் போதே தெளிவுதான் வள்ளிக்கு. ஆனால் இன்று மகள் முகத்தையும், அவளின் இலகு தன்மையையும் பார்த்து பார்த்து பூரித்து போனார் அவர். மகள் பேசுவதை கேட்டுக் கொண்டே அவர் உண்டு முடித்திருக்க, அவள் பேச்சு முழுவதும் திரு தான்.

                       அதன் பின்னும் கூட சிறிது நேரம் தாயும் மகளும் பேசிக் கொண்டிருக்க, வள்ளி அப்போது தான் மெதுவாக ஆரம்பித்தார். “துர்காம்மா.. நான் திரும்பவும் கடைக்கு போறேனே…” என்று அவர் சொன்னதும் துர்காவுக்கு அதிர்ச்சிதான்.

                       அவர் கடைக்கு சென்று கொண்டிருப்பதாக தான் அவள் இதுவரையில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

                      ஆனால், என்று நினைத்தவள் அவர் பேச்சில் கவனம் வைக்க “நான் கடைக்கு போறேன் துர்கா.. வீட்ல எவ்ளோ நேரம் சும்மாவே உட்கார்ந்திட்டு இருப்பேன்.. நீ திருகிட்ட சொல்லு..” என்று கேட்டுக் கொண்டிருந்தார் வள்ளி..

                      அவர் பேச்சை கேட்டு முடித்தவள் “நீ கடைக்கு போறதுக்கு என்கிட்டே ஏன் கேட்கிற.. நீ என்கிட்ட சொல்லிட்டு தான் இதுவரைக்கும் வேலைக்கு போனியா…” என்று கேட்டு வைக்க

                      வள்ளி அமைதியாக அவளை பார்க்க “சொல்லும்மா.. என்கிட்டே ஏன் கேட்கிற..” என்று துர்கா மீண்டும் கேட்கவும்

                         “திரு என்னை கடைக்கு வர வேண்டாம் ன்னு சொல்லிடுச்சு துர்கா… நான் சும்மாவே எவ்வளவு நேர உக்காந்திட்டு இருக்க முடியும். நீ சொன்னாதான் என்னை கடைக்கு வர விடுவேன் ன்னு சொல்லிடுச்சு.. நீ திருகிட்ட சொல்லு…” என்று வள்ளி கூறி முடிக்க, துர்காவிற்கு அதிசயமாக இருந்தது.

                          வள்ளியிடம் “திரு என்ன சொன்னாரு..” முழுசா சொல்லு..” என்று கேட்க

                       “என்ன சொல்லுச்சு.. உங்களை கடைக்குள்ள விட்டா உங்க பொண்ணு என்னை வீட்டை விட்டு துரத்திடுவா போல ன்னு சிரிச்சிகிட்டே தான் சொல்லுச்சு.. ஆனா என்னை கடைக்குள்ளவே விடல..” என்று முகத்தை சுருக்கி கொண்டார் அவர். துர்காவிற்கு சிரிப்பு வந்தது இவர்கள் அடிக்கும் கூத்தில்…

                        அவள் லேசாக சிரித்தும்விட, வள்ளி இப்போது மகளை முறைத்தார். அவர் முறைக்கவும் “சரிம்மா.. நான் பேசி பார்க்கிறேன்..” என்று மேலோட்டமாக அவள் சொல்ல

                      வள்ளி “இது உன் வேலை தான் துர்கா. எனக்கு தெரியும், நீ திருகிட்ட சொல்லு.. எனக்கு வீட்ல பொழுது போகலடி… அந்த கடையிலயும் நான் பெருசா ஒரு வேலையும் செய்ய போறது இல்ல.. சும்மாதான் இருப்பேன்… ” என்று வள்ளி வற்புறுத்தலாக கூற, துர்காவும் சரி போகட்டும் என்று முடிவெடுத்து விட்டாள்.

                       அன்று ஆத்திரத்தில் கத்தி இருந்தாலும், பொறுமையாக யோசித்து பார்க்கையில் திரு பார்த்துக் கொள்வான் என்று அவளுக்கும் தோன்றியதால் திருவிடம் பேச முடிவு செய்தாள் அவள்.

                    வள்ளியும் வந்த வேலையை முடித்துக் கொண்டு கிளம்பி விட, திருவிற்கு மதியத்திற்கு சமைத்து வைத்துவிட்டு காத்திருந்தாள்.

                    திரு மதியம் வந்தவன் அவசரமாக உண்டு முடித்து, அதே வேகத்தில் பீரோவில் இருந்து பணமும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

                        துர்கா எதுக்கு இவ்ளோ பணம்??? என்று யோசித்தாலும் எதுவும் கேட்கவில்லை. ஏதாவது தேவை இருக்கும் என்று நினைத்துக் கொண்டவள் அத்துடன் அதை மறந்து விட்டாள்.

                  அன்றைய தினம் திருவின் நேரம் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது என்று தான் சொல்ல வேண்டும். அவன் வீட்டிற்கு அருகில் இருந்த மெய்ன் சாலையில் கடை ஒன்று பார்த்திருந்தான் அவன். அந்த கடைக்கு முன்பணம் செலுத்தவே இப்போது சென்று கொண்டிருந்தான்.

                    காய்கறி வியாபாரம், லாரி இதன் வரிசையில் அடுத்ததாக எண்ணெய் சேர்ந்து கொண்டது. அதுவும் இப்போது பிரபலமாகி கொண்டிருக்கும் மரச்செக்கு எண்ணெய்…

                       இவனிடம் தொழில் செய்யும் கோயம்புத்தூரை சேர்ந்த ஒருவரிடம் இவன் ஏற்கனவே சொல்லி வைத்திருக்க, அவர் மூலமாக இரண்டு மரசெக்குகளை பேசி முடித்திருந்தான். செக்கு இன்னும் ஓரிரு நாளில் வந்துவிடும் என்ற நிலையில் இதோ கடைக்கும் முன்பணம் கொடுத்து விட்டான்.

                      அந்த கடையில் இவர்கள் தொழிலுக்கு ஏற்றவாறு உட்கட்டமைப்புகளை மற்ற வேண்டி இருக்க, அதற்காகவே அவசர அவசரமாக முன்பணம் செலுத்தி சாவியை வாங்கி கொண்டான்.

                      சரத் இதற்குள் ஆட்களை அழைத்து வந்துவிட, அவர்களிடம் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று கூறியவன் சாரத்தை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு தன் காய்கறி கடைக்கு கிளம்பினான்.

                     தேவாவிடம் சொல்லி டீயை வரவைத்து குடித்து விட்டு, அன்றைய கணக்குகளை முடித்தவன் அங்கிருந்து தன் மாலை நேர வசூலுக்கு கிளம்பிவிட்டான். வசூல் முடித்து அவன் கடைக்கு வரும் நேரம் அவனிடம் காய்கறி எடுக்கும் ஒருவர் அவனுக்கு அழைக்க, அழைப்பை ஏற்றான் திரு.

                      அவர் கூறிய விஷயத்தில் உடனே வருவதாக சொன்னவன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். அவர் ஊத்துக்கோட்டை அருகில் இருக்கும் அவரின் நண்பரின் வீட்டுக்கு அவனை அழைத்து செல்ல செல்லும் வழியெல்லாம் யோசனை தான் திருவுக்கு.

                     சரியாக வர வேண்டும் என்ற வேண்டுதலோடே கிளம்பி இருந்தான். இவை செக்கிற்கு தேவையான எண்ணெய் வித்துக்களுக்காக தான் சென்று கொண்டிருந்தான் அவன். வேர்க்கடலை, ஆமணக்கு, எள் என அவனுக்கு தேவையாக இருந்த அத்தனை வித்துக்களையும் வாங்கி தருவதாக சொல்லி இருந்தார் அவனின் நண்பர்.

                    ஆனால் விலை ஒத்து வர வேண்டுமே.. அதுவும் எண்ணெய் வித்துக்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.. விதை தேர்ந்தெடுப்பதில் தான் தொழிலே.. இவனுக்கு எதுவும் தெரியாததால் முழுதாக அவன் நண்பரை மட்டுமே நம்பி இறங்கி இருக்கிறான் என்பதால் சற்று பயம் இருந்தது.

                     ஆனால் இவன் பயத்திற்கு தேவை இல்லை என்பதை போல அந்த மனிதர் நல்லவிதமாகவே பேசினார். மேலும் விலையும் இவனுக்கு ஒத்து வருவது போலவே அவர் சொல்ல, அவரிடமே கொள்முதல் செய்து கொள்ள முடிவானது.

                    தன்னுடன் வந்த நண்பருக்கு பலமுறை நன்றி கூறி அவரை அவர் வீட்டில் இறக்கி விட்ட பின்னரே திரு தன் வீட்டிற்கு கிளம்பினான். நேரம் வழக்கமான நேரத்தை தாண்டி இருக்க, கடையை மூடி தேவா எப்போதோ சாவியை வீட்டில் கொடுத்து விட்டிருந்தான்.

                     துர்கா திருவுக்காக காத்திருந்தவள் அப்படியே சோஃபாவில் படுத்து தூங்கி விட்டிருக்க, பார்த்த திருவுக்கு சிரிப்புதான். தனக்காக பார்த்துக் கொண்டு இருந்திருப்பாள் என்று தோன்ற, கதவை மூடிவிட்டு சென்று குளித்து வந்தான். அவன் குளித்து முடித்து வெளியில் வரும் நேரம் துர்கா சமையல் அறையில் நின்றிருந்தாள்.

                  திரு அவளை பார்த்தவன் அவள் அருகில் வந்து நின்று கொண்டான். “தூக்கம் வந்தா  ரூம்ல படுத்து தூங்க வேண்டியது தான. ஏண்டி முழிச்சிட்டு இருக்கணும்…” என்று கேட்க

                     “என்ன பண்றது.. எனக்கு வாய்ச்சது  இப்படி இருக்கே.. ஒரு நாளாச்சும் நேரத்துக்கு வீட்டுக்கு வருதா.. காலையிலயும் பால்காரன் வர்றதுக்கு முன்னாடியே ஓடிட வேண்டியது.. ராத்திரி இதோ திருடன் மாதிரி பன்னெண்டு மணிக்கு..” என்று அலுத்து கொண்டாள் துர்கா..

                      “இந்த வாய் குறையுதாடி உனக்கு..” என்று கேட்டவனிடம் தோசை தட்டை நீட்டியவள் “இந்த வாய்க்கூட இல்லன்னா திருவுக்கு எப்படி பொண்டாட்டியா இருக்கறது… போய் சாப்பிடுங்க..” என்று துரத்திவிட்டாள் திருவை.

                        காலையில் குளிக்கிறேன் என்று சென்றவன் வெளியில் வரும்போதே தன் கையில் இருந்த கட்டை முழுவதும் நனைத்து விட்டிருக்க, துர்கா அவன் கைக்கட்டை பிரித்துவிட்டாள்.

                         அவன் சொன்னது போல காயம் என்னவோ குட்டியாக தான் இருந்தது. அதுவே துர்காவிற்கு நிம்மதியாக இருக்க, அவன் உள்ளங்கையை மறைப்பது போல் கட்டு போட்டிருந்த அறிவாளிகளை திட்டிக் கொண்டே ஒரு பிளாஸ்டரை மட்டும் அவன் கையில் ஒட்டிவிட்டு இருந்தாள்.

                        திருவுக்கும் இது எளிதாக இருக்க காலையிலும் மதியமும் அவனே உண்டிருந்தான். அந்த நினைவில் தான் துர்கா இப்போதும் அவனிடம் தோசையை கொடுத்து துரத்தி விட்டிருந்தாள்.

                      திரு சிரித்துக் கொண்டே வந்து டைனிங் டேபிளில் அமர, அவன் உண்டு முடிப்பதற்குள் அடுத்த தோசையை எடுத்து வந்துவிட்டாள். திரு அவள் வேகத்தில் சிரித்தவன் “துர்கா..” என்று அழைக்க நின்று திரும்பி பார்த்தாள் மனைவி.

                     அவன் ஊட்டி விடுவது போல் கையை நீட்ட “அய்யோடா.. அதெல்லாம் ஒன்பது மணிக்கே சாப்பிட்டு முடிச்சிட்டேன்.. உங்களுக்காக வெயிட் பண்றதெல்லாம் வேஸ்ட்ன்னு தெரிஞ்சும் வெயிட் பண்ணுவேனா நான்..” என்று ஏற்ற இறக்கங்களுடன் அவள் சொல்லி முடிக்க,

                     திரு அவளை முறைத்தவன் சாப்பிட தொடங்கினான்.. “ஹப்பா.. எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்த மாதிரி முறைப்பை பாரேன்.. மொதல்ல வீட்டுக்கு சீக்கிரம் வாங்க திரு சார்.. ” என்று விட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டாள்.

                      அவன் உண்டு முடிக்கும்வரை சலிக்காமல் நடந்து கொண்டிருந்தவள் இறுதியில் அவன் உண்டு முடித்ததும் இரண்டு தோசைகளை சுட்டு எடுத்து வந்து அவன் தட்டில் வைத்து விட்டாள். அவன் அவளை நிமிர்ந்து பார்க்க

                      “ஹலோ.. அது எனக்கு.. ம்ம்ம்.. இப்போ ஊட்டுங்க..” என்றவள் அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் அவள் அமர, அவனோ தலையாட்டி மறுத்தவன் தன் மடியை காட்டினான். “இங்கே உட்கார்ந்தா ஊட்டி விடறேன் ” என்பது போல

                           யோசிக்கவே இல்லை துர்கா. அவன் தலையசைத்த நொடி அவன் மடியில் அமர்ந்து கொண்டாள். திருவும் தோசையை பிய்த்து அவளுக்கு ஊட்டியவன் “சாப்பிட்டேன் சொன்ன..” என்று கேட்க

                           “ஆமா.. ஒன்பது மணிக்கு சாப்பிட்டேன்.. இப்போ தோசை சுட்டே டயர்டாகிட்டேன்.. அதான் பசிக்குது” என்றாள் துர்கா.

                   மனைவியின் பதிலில் சிரித்தவன் அவளுக்கு ஊட்ட “ஆமா.. கை வலி குறைஞ்சிருக்கா.. பெயின் இருந்தா சொல்லுங்க. ஹாஸ்பிடல் போகலாம்..” என்று அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டிருக்க, திருவிற்கு சலிக்கவே இல்லை.

                           “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டடி.. அதுவும் ஒய்யாரமா மேல ஏறி உட்கார்ந்திட்டு..” என்று திரு அவளை சீண்ட

                           “என்ன ஆகிட்டீங்க இப்போ.. என் புருஷன் மேல தான உக்காந்திட்டு இருக்கேன்.. ஒய்யாரமா உட்கார்ந்துக்கலாம்.. தப்பில்ல..” என்றுவிட, பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. தட்டில் தோசையும் இதற்குள் தீர்ந்து போயிருக்க, திரு கையை கழுவாமலே அவளுடன் அமர்ந்து வாயடித்துக் கொண்டிருந்தான்.

                         கடிகாரம் ஒலி எழுப்பி தன் இருப்பை காட்டிக் கொள்ளவும் தான் தூங்க வேண்டும் என்பதே நினைவு வந்தது அந்த புதுமணத் தம்பதிகளுக்கு.

                        துர்கா எழுந்து கொள்ளவும் திரு கையை கழுவி விட்டு அறைக்கு வந்துவிட்டான். அப்போதுதான் கடை விஷயம் துர்காவிடம் சொல்லவே இல்லை என்பது நினைவு வர, அவள் வருகைக்காக பார்த்துக் கொண்டிருந்தான்.

                                 துர்கா கையில் பாலுடன் அறைக்குள் வர, அவளை ரசனையாக தழுவிக் கொண்டது திருவின் பார்வை. இது ஆகாது என்று தலையை உலுக்கி கொண்டவன் துர்காவை அருகில் அமர்த்திக் கொண்டான்.

                                அவளிடம் தன் புது தொழிலை பற்றி கூறியவன் அதில் உள்ள சாதக பாதகங்களை கூறிக் கொண்டு இருந்தான். திரு சொல்வதில் இருந்தே ரொம்பவும் மெனக்கெட்டு இருக்கிறான் என்பது புரிந்தது துர்காவுக்கு. அவன் சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளுக்கு நம்பிக்கை இருந்தது திரு நிச்சயம் சரியாக செய்வான் என்று.

                                அவன் தொழில் சிறக்க அப்போதே அவசர வேண்டுதல் ஒன்றை கடவுளுக்கு அனுப்பி வைத்துவிட்டாள் துர்கா.. அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் தோளில் சாய்ந்திருந்தவள் அவன் முழுதாக சொல்லி முடிக்கவும் “முன்னாடியே பிளான் பண்ணி இருந்திங்களா.. இன்னொரு பிசினெசுக்கு..” என்று கேள்வி எழுப்ப

                                திரு அர்த்தமாக சிரித்தான். துர்கா அவனை நிமிர்ந்து பார்க்க “முன்னாடியே யோசனை இருந்தது.. ஆனா நேத்து தான் முடிவு பண்ணேன். என் பொண்டாட்டி வேற ஆறு பிள்ளைங்களை பெத்து கொடுக்கறேன்னு சொல்லி இருக்கா…

                                “ஒருத்தனுக்கு ஒரு பிசினஸ் கொடுத்தாலும், இன்னும் மூணு தொடங்கணுமே.. அதான் வேலையை ஆரம்பிச்சிட்டேன்..” என்று அடக்கிய சிரிப்புடன் கூற துர்காவுக்கும் சிரிப்புதான். அந்த சிரிப்புடனே அருகில் கிடந்த தலையணையை வைத்து அவனை அடித்தவள் அவன் நெஞ்சில் ஒளிந்து கொண்டாள்.

                            திரு சிரித்தாலும் கூட “நிஜமா துர்கா.. நெறைய இருக்கு.. இன்னும் நெறைய முன்னேறனும்.. ஏதாவது செய்யணும்.. இதுதான் வயசு இல்லையா.. ஓடிக்கிட்டே இருக்கணும்” என்று அவன் கனவுகளை அடுக்க, துர்கா அவனிடம் இருந்து விலகியவள் அவனை முறைத்தாள்.

                         திரு “என்னடி ” எனவும்

                     “இப்போ இருக்கறதுக்கே சார் பன்னெண்டு மணிக்கு தான் வீட்டுக்கு வர்றிங்க.. இன்னும் சேர்த்துக்கிட்டே போனா என்னை மொத்தமா மறந்துடுவீங்க போலவே…” என்று அவள் கவலைப்பட

                       “உன் கவலை உனக்கு..” என்று அவளை நக்கலடித்தான் திரு.

                         துர்கா அப்போதும் முறைக்க “உன்னை மறப்பேனாடி… உன்னாலதான் இன்னும் இன்னும் வாழனும் ன்னே ஆசை வருதுடி.. என் பொண்டாட்டி..” என்று திரு அவளை கொஞ்ச, துர்கா சிரிப்புடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்

Advertisement