Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 20

                                  திரு கமிஷனர் அலுவலகம் சென்று வந்து கிட்டத்தட்ட ஒருவாரம் கடந்திருந்தது. அன்றைய சமாதானத்திற்கு பிறகு துர்காவிற்கும் திருவுக்கும் இடையே இதுவரை பெரிதாக எந்த சண்டையும் வராமல் இருந்தாலும் அவ்வபோது ஒருவரை ஒருவர் வம்பிழுத்துக் கொண்டேதான் அலைவது. இருவருமே விட்டு கொடுப்பவர்கள் இல்லை என்பதால் வாழ்வு சுவாரஸ்யமாகவே சென்றது அவர்களுக்கு.

                                  இடையில் திரு இரண்டுமுறை அந்த காவல் அதிகாரிக்கு அழைத்து பேசி இருக்க, இவனுக்கு தெரிந்த சில தகவல்களை அவளிடம் சொல்லி இருந்தான். அவனுக்கும் சண்முகநாதனின் முடிவு தேவையாக இருந்ததே.. ஆனால் இவன் கூறிய தகவல்கள் அவன் அல்லக்கைகளை பிடிக்கத்தான் அவளுக்கு உதவியது.. சண்முகநாதன் எப்படியோ அவளின் ஒவ்வொரு திட்டத்திலும் தப்பித்துக் கொண்டே இருக்கிறான் இதுவரை.

                          தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்த அவள் மனதில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவங்களே ஓடிக் கொண்டிருந்தது. திரு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவள் சண்முகநாதனை தேடிச் சென்ற விஷயம் அவளை தவிர்த்து மிகச் சிலருக்கே தெரியும்.

                         ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் இதே போல தப்பித்துக் கொண்டே இருக்க, அவள் மனதின் ஓரத்தில் இருந்த சந்தேகம் இப்போது ஊர்ஜிதமாக தொடங்கி இருந்தது. யார் யார் என்று அவள் மனம் கணக்கிட்டுக் கொண்டே இருக்க, முகம் அத்தனை கோபமாக இருந்தது.

                           தனது அலட்சியத்தால் அவனை இதோடு மூன்றாவது முறையாக தவற விட்டிருக்கிறோம் என்று நினைத்தவளுக்கு அதை ஒத்துக் கொள்ளவோ, ஒதுக்கி தள்ளவோ முடியவில்லை. நீண்ட நேரம் இதை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவள் அடுத்து என்ன என்று முடிவெடுத்த பிறகே ஓய்ந்தாள்.

                          கடைசி முறை சண்முகநாதனை தேடிச் சென்றபோது தன்னுடன் வந்திருந்த தன் டீமை மனதில் நிறுத்திக் கொண்டவள் இப்போதும் அதே டீமை அழைத்தாள். அவர்கள் ஐந்து பேரும் அடுத்த பத்து நிமிடத்தில் அவள் முன் இருக்க, அவர்களிடம் அன்று போலவே சண்முகநாதனை பற்றிய தகவல் கிடைத்திருப்பதாக சொல்லி ஒரு முழுநிமிடம் தாமதித்தாள்.

                           அவர்களின் உடல்மொழியை வேகமாக கணக்கிட்டு கொண்டு, அன்று போலவே அவர்களிடம் அவர்களுக்கான வேலைகளை கொடுத்து பிரித்து அனுப்பி விட்டவள் தன் ஜீப்பில் ஏறிக் கொண்டாள். ஏற்கனவே அமர்ந்திருந்த டிரைவரை அவள் கீழே இறங்க சொல்ல, அவர் அவளையே பார்க்கவும் “யோவ் இறங்குய்யா…” என்று கத்தியவள் அவர் இறங்கிய அடுத்த நிமிடம் தான் ஜீப்பை எடுத்தாள்.

                          அத்தனை வேகம்… நேரம் மதியத்தை  நெருங்கி கொண்டிருக்க, வெயில் ஏற  தொடங்கி இருந்தது… அவள் வரவேண்டிய தகவலுக்காக காத்திருக்க, அவள் கேட்ட இடத்திலிருந்து தகவல் வந்து சேரவும் வேகமாக தன் அலைபேசியை எடுத்து ஆராய்ந்தவள் தன் வேலையை முடித்துவிட்ட திருப்தியில் ஏளனமாக சிரித்துக் கொண்டாள்.

                         அந்த ஜீப்பில் அமர்ந்திருந்தவள் தன் கோபத்தை அந்த வண்டியில் காட்டிக் கொண்டிருக்க, அந்த வாகனம் அவள் கைகளில் பறந்து கொண்டிருந்தது. சென்னையின் மிக ஒதுக்குபுறமான ஒரு இடத்திற்கு வந்து விட்டவள் அங்கிருந்த தன் டீமை சந்திக்க சென்றாள். அவர்கள் அனைவருமே அந்த இடத்தை ஏற்கனவே சல்லடையாக சலித்து முடித்து சோர்ந்து போய் தான் நின்றிருந்தனர்.

                           எப்போதும் தங்களுக்கு முன்னதாகவே வந்துவிடும் தங்கள் டிஎஸ்பியை இன்னும் காணாதது வேறு அவர்களுக்கு சந்தேகமாக இருக்க, அவர்கள் அப்படி காத்திருந்த நேரம்தான் புழுதியைக் கிளப்பிக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தாள் அவள்.

                            மற்ற அனைவரும் ஓரளவுக்கு அருகருகே நின்றிருக்க அவர்களுடன் சேராமல் அப்போதும் தன் மொபைலை பார்த்துக் கொண்டே தனித்து நின்றிருந்தான் அவன். அவனை கண்டவளுக்கு ஆத்திரம் தலைக்கேற அவன் அருகில் யாரும் இல்லாததை உறுதி செய்தவள் அவனை நோக்கி வண்டியை செலுத்தினாள்.

                           அவள் வந்த வேகத்திற்கு அப்படியே சென்று இடித்திருந்தால் அந்த நிமிடமே அந்த காவல் ஆய்வாளர் பரலோகம் சென்றிருப்பான். ஆனால் அவனை கொல்வது அவளின் அப்போதைய நோக்கமாக இல்லாமல் போக, சரியாக அவன் கால்களை உரசும்படி தன் வாகனத்தை நிறுத்தி இருந்தாள் அவள்.

                         எதிரில் நின்றவனோ உயிர் போய்விட்டது என்றே நடுங்கி போயிருந்தான். ஆனால் அவன் சுதாரிப்பதற்குள் வண்டியில் இருந்து இறங்கி இருந்தவள் அவனை நோக்கி சென்ற வேகத்திற்கு அவனை காதோடு சேர்த்து ஒன்று வைக்க, அடுத்த கணம் தரையில் கிடந்தான் அந்த ஆய்வாளர் ராஜேஷ்.

                            அவன் எழுவதற்கு கூட அவகாசம் கொடுக்காமல் அவனை மீண்டும் சட்டையை பிடித்து எழுப்பி நிறுத்தியவள் மீண்டும் ஒரு அறை விட அவள் கையை உதறிய வேகம் அவள் அடியின் வேகத்தை சொல்லும். அங்கிருந்த சக காவலர்கள் அவளை அதிர்ச்சியாக பார்த்தாலும் காரணமில்லாமல் இப்படி நடந்து கொள்ள மாட்டாள் என்பதால் தூரத்திலேயே நின்றனர்.

                              அவள் அடித்ததில் அந்த ராஜேஷின் உதடு கிழிந்து ரத்தம் வழிய, அது போதவில்லை போல் அவளுக்கு. அவனை ஒருவழி செய்தவள் அதிகாரமாக தன் ஜீப்பின் மீது ஏறி அமர்ந்து கொள்ள, அவளுக்கு கீழே தரையில் விழுந்து கிடந்தான் அவன்.

                             அவனை கேவலமாக பார்த்தவள் “உனக்கெல்லாம் எதுக்குடா இந்த யூனிபார்ம்…  நீ பொழைக்கிற பொழப்புக்கு எதுவுமே போடாமலே போலாமே… என்ன சன்மானம் கொடுத்தான் அந்த மாமாப்பைய… பணமா இல்ல அவன்கிட்ட இருக்க எவளாவதா.. ஏன் பொண்டாட்டி போரடிச்சிட்டாளா உனக்கு…”

                        “சும்மா எவனாவது தப்பு பண்ணாலே தொலைச்சிடுவேன்.. நீ என் டீம்ல இருந்துகிட்டே இந்த வேலை பார்ப்பியா.. உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும்.. பொம்பளைதானே என்ன பண்ணிடுவா ன்னு நெனச்சியா… நாயே.. போட்டுட்டு போயிட்டே இருப்பேன்..” என்று அவள் அழுத்தமாக உரைக்க

                            அந்த ராஜேஷோ “இதெல்லாம் சரி இல்ல மேடம்.. உங்ககிட்ட என்ன ஆதாரம் இருக்கு. எப்படி நீங்க என்னை இப்படி அடிக்கலாம்… நான் உங்கமேல புகார் பண்ணுவேன்..” என்று அந்த நிலையிலும் வாயை கொடுக்க

                           தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து குதித்து இறங்கியவள் பேசிய அவன் வாயிலேயே தன் பூட்ஸ் அணிந்த காலால் ஓங்கி ஒரு மிதி மிதிக்க, கத்தகூட முடியாமல் சுருண்டான் அவன். அவன் நெஞ்சில் காலை வைத்து அழுத்தி அவன் மேல் மண்டியிடுவது போல் லேசாக அமர்ந்து அவனை தரையோடு அழுத்தியவள் தன் கைத்துப்பாக்கியை அவன் நெற்றிப் பொட்டில் வைத்துவிட்டாள்.

                           அவன் பயத்துடன் பார்க்கும்போதே “சந்துரு..” என்று அழைத்தவள் அவன் முன்னே வரவும் “இவனை சப்போஸ் நான் போட்டுட்டா, கமிஷன்ல என்ன சொல்லுவ..” என்று அவனிடம் கேட்க

                          “சண்முகநாதன பிடிக்க போறப்போ நடந்த ஷூட்டிங்ல, சண்முகநாதன் நம்ம இன்ஸ்பெக்டரை சுட்டுட்டு தப்பிச்சிட்டான் மேடம்..” என்று கூறவும் ராஜேஷை பார்த்து நக்கலாக சிரித்தவள் அங்கிருந்த மற்றவர்களை மேலோட்டமாக ஒரு பார்வை பார்க்க “அதுதான் நடந்துச்சு மேடம்.. சந்துரு சரியாத்தான் சொல்றாரு..” என்று அனைவரும் ஒன்றுபோல் கூறவும் தன் துப்பாக்கியை அவள் சுடுவதற்கு தயார் செய்து கொண்டாள்.

                         அந்த ராஜேஷ் இப்போது அலறியவனாக அவளிடம் கெஞ்ச, “நீதான் கம்பளைண்ட் பண்ணுவியே… மேல போயிட்டு என்மேல சம்மன் அனுப்பி வை..” என்றவள் கொஞ்சம் கூட இரக்கமே காட்டாமல் அவனை முடித்தே விட்டாள். அங்கிருந்த காவலர்களுக்கும் அது பெரிய விஷயமாக தோன்றவில்லை போலும். அவர்கள் இது வழக்கம் தான் என்பதுபோல சாதாரணமாகவே நிற்க, அவன் மீது இருந்து எழுந்து கொண்டவள் தள்ளிச் சென்று நின்றுவிட்டாள்.

                       அதன்பின்பு அவள் நினைத்தது போலவே அந்த வழக்கு நகர, ராஜேஷின் மரணத்தை சண்முகநாதனின் தலையில் ஏற்றி அவன் பெயரில் என்கவுண்டர் ஆர்டரை வாங்கி கொண்டாள் அவள். தன் கையில் இருந்த அந்த கவரை பார்த்து சிரித்துக் கொண்டவள் அன்றே சண்முகநாதனுக்கு கட்டம் கட்ட தொடங்கினாள்.

                       அவள் போட்டிருந்த திட்டத்தின் முதல் படியாக, அவள் வெளியூர் செல்வது போல ஒரு மாயையை உருவாக்கியவள் அதையும் அந்த ராஜேஷின் போன் மூலமாகவே சண்முகநாதனுக்கு தெரிவித்தாள். ராஜேஷின் மரணம் டிபார்ட்மென்ட் மட்டுமே அறிந்த ரகசியமாக இருக்க, அவன் தியாகி ஆகி இருந்தான்.

                      சண்முகநாதனுக்கு தகவல் அனுப்பி விட்டவள் அவனின் எதிர்வினைக்காக காத்திருக்க, அவள் எதிர்பார்த்தது போலவே அடுத்த நான்காவது மணி நேரத்தில் மார்க்கெட்டிற்குள் நுழைந்தான் சண்முகநாதன். திருவும் அவனுக்காக ஏற்கனவே காத்திருந்ததால் உடனே அந்த அதிகாரிக்கு தகவல் கொடுத்துவிட,

                       சண்முகநாதனோ இதை எதுவும் அறியாதவனாக, திரு கடையில் இருப்பதை தன் நல்ல நேரமாக எண்ணிக் கொண்டு அங்கிருந்து மெல்ல நழுவி விட்டான். இதுதான் சரியான சமயம் என்று முடிவு செய்திருந்தவன் துர்காவை எப்படியும் தன்னுடன் இழுத்து சென்றுவிட முடிவு செய்தான்.

                      அவன் சென்னையை விட்டே தப்பிக்க திட்டம் போட்டிருக்க, அதன் கூடுதல் பலனாக துர்காவையும் தன்னுடன் தூக்கி செல்ல முடிவு செய்து விட்டான். ஆனால் இவன் சென்ற நேரம் துர்காவின் வீடு பூட்டி இருக்க, எங்கே சென்றிருப்பாள் என்ற யோசனையில் சில நிமிடங்கள் அங்கே தேங்கினான் அவன்.

                      “எங்கே போயிருப்பா” என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தவனுக்கு ஏதோ தோன்ற “பக்கத்துல எங்கேடா கோவில் இருக்கு..” என்றான் தன்னுடன் இருந்தவர்களிடம். அன்று வெள்ளிக்கிழமையாக இருக்க, கோவிலுக்கு சென்றிருப்பாளோ என்ற எண்ணத்தில்தான் அவன் அப்படி கேட்டது.

                     அவனின் நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ துர்காவும் அந்த நேரம் கோவிலில் தான் இருந்தாள். அன்று சண்முகநாதன் மிரட்டியதில் இருந்தே லேசான பயத்தோடு தான் இருந்தாள் அவள். திரு என்னதான் சமாதானம் செய்தாலும் கணவன் என்று வரும்போது பெண்களுக்கு ஏற்படும் அந்த எச்சரிக்கை உணர்வு அவளுக்கு அதிகமாகவே இருக்க, இன்று திருவின் பேச்சையும் மீறி கோவிலுக்கு வந்து விட்டிருந்தாள்.

                       இப்போது தான் அவனுக்கு அழைத்து சொல்லி இருக்க,  திட்டி தீர்த்தவன் கோவிலிலிருந்து வெளியில் வர வேண்டாம் என்று கூறி தான் கிளம்பி இருந்தான் அவள் இருக்குமிடம் நோக்கி. துர்கா கோவிலில் அம்மன் சன்னதிக்கு முன்னால் நின்று கொண்டு கண்களை மூடி இருக்க, திடீரென அவள் முகத்தில் எதுவோ அழுத்துவதை போல இருந்தது.

                       அவள் எதையோ நுகரவும், மெல்ல மெல்ல மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தாள் அவள். அவளை கைத்தாங்கலாக தாங்கி கொண்ட சண்முகநாதனின் அடியாட்கள் அவளை அப்படியே நடப்பது போலவே காட்டிக்கொண்டு மெல்ல வெளியே அழைத்து வந்திருந்தனர். கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தாலும், இவர்கள் பெரிதாக யாரின் கவனத்தையும் கவராத வகையில் கச்சிதமாக செயல்பட, துர்காவை தூக்கும் திட்டம் வெற்றிகரமாக முதல் படியை முடித்திருந்தது.

                                 ஆனால், திரு என்று ஒருவன் இருக்கும் வரை துர்காவை அவனிடம் இருந்து விலக்கவே முடியாது என்பதை மறந்து விட்டிருந்தனர் அவர்கள். ஆம்.. இவர்கள் துர்காவை காரில் ஏற்றும் சமயம் அவர்களை நெருங்கி இருந்தான் திரு.

                     தனது வண்டியை கீழே விட்டுவிட்டவன் துர்காவை தாங்கி இருந்தவனின் தோள்பட்டையிலேயே தன் மொத்த பலத்தையும் தேக்கி ஒரு குத்து விட்டிருக்க, அவனின் பிடி நழுவியது.. துர்காவை தாங்கி கொண்டவன் அவளை விலக்க பார்க்க, சண்முகநாதனோ “போடுங்கடா அவனை..” என்றிருந்தான் தன் அடியாட்களிடம்.

                     திரு துர்காவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு தன்னை நெருங்கியவனை ஒரு உதை விட, அதற்குள் அங்கிருந்த பூக்கார பெண்மணி துர்காவை தாங்கி கொண்டாள். அவள் கோவிலுக்குள் நுழையும் நேரம் அவர்தான் அவளுக்கு பூ கொடுத்திருந்தார். இப்போது அவள் மயங்கி கிடக்கவும் அவர்கள் கையிலிருந்த ஆயுதங்கள் பயம் கொடுத்தபோதும் அவளை நெருங்கி தாங்கி கொண்டார்.

                    அதோடு திருவையும் அவருக்கு ஏற்கனவே தெரிந்து இருந்தது. துர்காவை அவரின் கையில் கொடுத்துவிட்ட திரு, தன் முன் நின்றிருந்தவர்களை துவம்சம் செய்ய அந்த ஐந்து பேரால் அவன் ஒருவனை சமாளிக்க முடியவில்லை. இத்தனை கலவரத்திற்கும் சண்முகநாதன் இன்னமும் காரிலிருந்து இறங்காமல் அமர்ந்திருக்க, திரு அவன் ஆட்களை அடித்து நொறுக்கியவன் காரின் கதவை திறந்து சண்முகநாதனை இழுத்து வெளியே போட்டான்.

                       அவனுக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. போனால் போகட்டும் என்று அவன் விட்டு வைத்திருக்க, இன்று தன் மனைவியின் மீதே கைவைக்க துணிந்து விட்ட சண்முகநாதனை கொன்று போடும் அளவுக்கு வெறியில் இருந்தான் அவன்.

                        எப்போதும் திருவிடம் அடி வாங்கும் சண்முகநாதன் இன்று அவனும் திருப்பி தாக்க, அவன் எடுத்துக் கொண்டிருந்த போதை அவனை மூர்க்கனாகவே மாற்றி இருந்தது. திருவுக்கு சளைக்காமல் அவனும் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அங்கே இவர்களை சுற்றி ஒரு கூட்டம் கூடி இருந்தாலும் ஒருவரும் இவர்களை நெருங்க வில்லை.

                          திரு ஒரு கட்டத்தில் சண்முகநாதனின் இரண்டு கைகளையும் ஒடித்து விட்டவன் அவன் கழுத்தில் கையை வைத்து திருகும் நேரம் அங்கு வந்து சேர்ந்தாள் அந்த அதிகாரி. திருவின் தோள்பட்டையை பிடித்து அவனை பின்னால் இழுத்து விட்டவள் சண்முகநாதனை அவன் அடிவயிற்றுக்கு கீழே ஒரு உதை உதைத்தாள்.

                          அந்த ஒரு அடிக்கே உயிர் போவதை போல துடித்தவன் தரையில் விழ, திரு மீண்டும் அவனை நோக்கி முன்னேற போனான். அவள் திருவை அடக்கி தனக்கு பின்னால் இழுத்து விட்டவள் “ஏய்.. என்ன ரௌடியா நீ… உன் பொண்டாட்டியை பாரு.  போ.. ” என்று சத்தமிட

                        திரு அப்போதுதான் துர்காவின் நினைவு வந்தவனாக அவள் அருகில் ஓடினான். அந்த அதிகாரியோ  சண்முகநாதனை தன் ஜீப்பில் வைத்து பூட்டியவள் திருவிடம் வந்தாள். திரு துர்காவின் சுயநினைவில்லாத நிலையை எண்ணி பயந்து போயிருக்க, அவள் நிதானமாக அவள் நாடியை பரிசோதித்தவள் “ஒன்னும் இல்ல மேன்… மயக்கமருந்து தான்.. என்ன கொஞ்சம் ஹெவி டோஸ்..” என்று அசால்ட்டாக சொன்னவள் கூடவே “போய் உன் கையையும்  பாரு… தூக்கிடுவியா இவளை..” என்று கேட்க

                      திரு சாதாரணமாக பேசும் அவளை கொலைவெறியில் பார்க்க, “இதெல்லாம் தினமும் பார்க்கிறோம் நாங்க.. எனக்கு பத்தோட பதினொன்னு தான்… கிளம்பு..” என்றவள் அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் அவர்களை ஏற்றிவிட்டாள். திரு எதைப்பற்றியும் யோசிக்காமல் துர்காவுடன் கிளம்பிவிட, செல்லும் அந்த ஆட்டோவை இருநொடி தொடர்ந்து பார்த்தவள் அந்த ஜீப்பில் இருந்த சண்முகநாதனை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே வந்து தன் ஜீப்பை எடுத்தாள்.

                        அவளுக்கு நிச்சயம் அவனை உயிருடன் விடும் எண்ணம் இல்லை தான். ஆனால் அவனை அத்தனை விரைவில் கொன்றுவிடவும் அவளுக்கு மனம் வரவில்லை. அவன் மூலம் ஆக வேண்டிய காரியங்கள் அவளுக்கு அநேகம் இருக்க, அவனை தன் ரகசிய இடத்தில் வைத்து பூட்டியவள் அவனுக்கு நரகத்தை கண்முன் காட்ட தொடங்கி இருந்தாள்.

                         சண்முகநாதன் எத்தனையோ போராடியும், அவனுக்கு தெரிந்த அத்தனை உண்மைகளையும் சொல்லியும் கூட அவள் மனமிறங்கவே இல்லை… காக்கும் பணியில் இருந்தவள் சில நாட்களுக்கு மட்டும் அழிக்கும் அவதாரம் எடுக்க, அடுத்த ஒரு வாரமும் சென்னையில் திருவிழாவும், வெடி வேடிக்கைகளும் தான்…

Advertisement