Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 19

                                     சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி யின் முன்னால் அமர்த்தப்பட்டிருந்தான் திரு. அவனுக்கு முன்னால் அந்த பெண் டிஎஸ்பி அமர்ந்திருக்க, அவளோ அவளுக்கு முன்னால் இருந்த கணினியில் கவனமாக இருந்தாள்.

                                     திருவுக்கு நடப்பதெல்லாம் ஏதோ திகில் படம் பார்ப்பது போலவே இருந்தது. கமிஷனர் ஆபிசில் இருந்து போன் என்றதும் ஏதேதோ யோசனைகள் அவனிடம். நம்மை எதுக்கு கூப்பிடனும்?? என்ற யோசனையிலேயே அவன் நின்றுவிட அவன் முகத்தை பார்த்த துர்கா அவளாகவே அவன் அருகில் வந்திருந்தாள்.

                                   “என்னங்க.. என்ன ஆச்சு..” என்று கவலையாக அவள் கேட்கவும்தான் அவள் அருகில் இருப்பதையே உணர்ந்து கொண்டவன் அவளிடம் எதுவும் சொல்லாமல் மார்கெட்டிற்கு போகணும். கொஞ்சம் அவசர வேலை என்று மட்டும் கூறிவிட்டு கிளம்பி இருந்தான்.

                                   கமிஷனர் அலுவலகத்திற்கு அருகில் வந்துவிட்டு தன் மொபைலில் இருந்த எண்ணுக்கு அழைத்தவன் எங்கே வர வேண்டும்?? என்று கேட்க, ஒரு நடுத்தர வயது காவலர் அவனை தேடி வந்தவர் அவனை அழைத்து வந்து இங்கே நிறுத்தி இருந்தார்.

                                 எதிரில் இருந்த அந்த பெண் அதிகாரியும் “வெல்… மிஸ்டர் திருநாவுக்கரசு.. மார்க்கெட்ல திருண்ணா..மார்க்கெட் பைனான்சியர்..ரைட்..” என்று தோரணையாக கேட்க, திரு எதுவும் பேசவில்லை. அவன் அமைதியாகி இருக்கவும் “உட்காருங்க..” என்று எதிரில் இருந்த நாற்காலியை காட்டியவள் தன் கணினியில் ஏதோ பார்த்து கொண்டிருந்தாள்.

                               திரு அங்கே வந்து பத்து நிமிடங்கள் கழித்தே அவன் புறம் திரும்பியவள் “எதுக்கு உன்னை கூப்பிட்டேன் தெரியுமா?? ” என்று அதிகாரமாக கேட்க

                               “இல்ல மேடம் தெரியாது…” என்றான் திரு.அவன் குரலில் லேசான தடுமாற்றம் மட்டுமே இருந்ததே தவிர பயம் இல்லை என்பதை கண்டு கொண்டாள் எதிரில் இருந்தவள். அவன் கண்களிலும் கபடம் எதுவும் இல்லை என்பதும் முதல் பார்வையிலேயே அவளுக்கு புரிந்துவிட்டது. இருந்தாலும் அவனிடம் இருந்து சில தகவல்கள் தேவை என்பதால் அவனை வரவழைத்திருந்தாள் அவள்.

                                 இப்போது திருவிடம் நேரடியாகவே கேட்டுவிட்டாள். “உனக்கும் சண்முகநாதனுக்கும் என்ன பிரச்சனை.” என்று.

                              திருவுக்கு இப்போது ஏதோ புரிவது போல் இருந்தது. ஆனாலும் எனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை என்று நினைத்தவன் “எனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை மேடம்.. எதுவும் இல்லையே..” என்று சமாளிக்க

                               “எதுவுமே இல்லையா…” என்று ஆச்சரியப்பட்டாள் அவள்.

                            “உனக்கும் அவனுக்கும் ஏதோ தொழில்ல போட்டி ன்னு கேள்விப்பட்டேன்..” என்று நக்கலாக அவள் கேள்வி கேட்க

                               கொதித்துக் கொண்டு வந்தது திருவுக்கு. இருந்தாலும் இருக்கும் இடம் உணர்ந்தவனாக தன்னை அமைதிப்படுத்திக் கொண்டான். பொறுமையாகவே “நான் மார்க்கெட்ல கடை வச்சிருக்கேன் மேடம்..எனக்கும் அவனுக்கும் என்ன போட்டி இருக்க முடியும்.. எனக்கு தெரிஞ்சு அவன் கௌரவமான எந்த வேலையும் செய்யல.. அதோட அவன் செய்யுற வேலை எனக்கு பழக்கமும் இல்ல..” என்று சற்று கோபமாகவே சொன்னான் திரு.

                              அந்த அதிகாரி அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டே “அப்போ மூணு மாசத்துக்கு முன்னாடி அவன்கிட்ட தொழில் பண்ணிட்டு இருந்த பொண்ணை நீ எதுக்காக கூட்டிட்டு போன… அதுவும் அவனையும் அவன் ஆளுங்களையும் அடிச்சு போட்டுட்டு எதுக்கு அந்த பொண்ணை கூட்டிட்டு போகணும்..” என்று அவள் கையிலிருந்த பேனாவை உருட்டிக் கொண்டே கேட்க

                               “அப்படி உங்களுக்கு யார் சொன்னது மேடம்.. அந்தப்பொண்ணு வெளியூர்ல இருந்து படிக்க சென்னைக்கு வந்தவ. எப்படியோ இவனுங்ககிட்ட மாட்டி இருக்கா. அன்னிக்கு அவளை ஒரு பெரிய கைக்கு மாத்தி விட்டுட்டு போறதுதான் அவனுங்க பிளான். அவ எப்படியோ தப்பிச்சு ஓடி வந்துட்டா. என் கண்ல படவும் அவனுங்களை அடிச்சு போட்டுட்டு அவளை பஸ் ஏத்தி ஊருக்கு அனுப்பிவிட்டேன். பத்தொன்பது வயசு பொண்ணு.. திருச்சி பஸ்ல தான் ஏத்திவிட்டேன் மேடம்.நீங்க வேணா விசாரிச்சிக்கோங்க.” என்று திரு சொல்லி முடிக்க

                            அப்போதும் பார்வையை மாற்றி கொள்ளவில்லை அவள். “அப்புறம் திரு.. சமீபத்துல தான் கல்யாணம் ஆச்சுபோல..” என்று மீண்டும் கேள்வியே கேட்டாள்.

                           “ஒருவாரம் ஆகுது மேடம்..” என்று அவன் பதில் கொடுக்க

                     “ஓஹ்.. உன் பொண்டாட்டி பெரு துர்கா இல்ல. அவகூட இந்த — ஹாஸ்ப்பிடல் நர்ஸ்.. கரெக்ட்டா..” என்று கேட்கவும், திரு ஆம் என்பது போல தலையசைத்தான்.

                        அவளும் அவனை போலவே தலையசைத்துக் கொண்டே “உன் பொண்டாட்டிக்கும், சண்முகநாதனுக்கும் என்ன சம்பந்தம்..” என்று கேட்டு வைக்க

                          “இப்போதைக்கு ஒரு சம்பந்தமும் இல்ல மேடம்.. நீங்க என்ன கேட்கணுமா நேரடியாவே கேளுங்க நான் பதில் சொல்றேன்..” என்றான் திரு.

                          அவளும் சுற்றி வளைக்காமல் “சிம்பிள் திரு.. ரெண்டே கேள்விதான்.. சண்முகநாதனுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை… அவன் ஏன் உன் பொண்டாட்டியை தூக்க பிளான் போடணும்… அவ்ளோதான் கேள்வி..” என்றுவிட்டு நேராக அமர்ந்துவிட்டாள் அவள்.

                       திரு சிலநொடிகள் மௌனமாக இருந்தாலும், ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவளிடம் சொல்லி விட்டான். அவர்களின் அவசரத் திருமணம் வர அவன் சொல்லி முடிக்க “சோ அவன் ஸ்கெட்ச் போட்ட பொண்ண நீ தட்டி தூக்கி இருக்க…”

                    “ஆனால், நான் கேள்விப்பட்ட வரைக்கும் நீ இவ்ளோ பொறுமை ன்னு யாருமே சொல்லலையே.. அப்புறம் சண்முகநாதன் விஷயத்துல ஏன் இப்படி இருக்கணும்..” என்று அறிந்து கொள்ளும் பாவனையில் அவள் கேட்க

                    “என்ன பண்றது மேடம்.. என்னை நம்பி இப்போ என் பொண்டாட்டி இருக்காளே.. அதோட நான் தேடப்படற குற்றவாளி எல்லாம் இல்ல மேடம்.. அவனோட என்னால சரிக்கு சரி நிற்க முடியாது. அவன் அசிங்கத்துல பிரண்டு எழுந்து அப்படியே போவான்.. ஆனா நான் அப்படி இல்ல, என் பொண்டாட்டி ன்னு ஒருத்தி வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் அனாதை தான்.. ஆனா கேவலமான விஷயம் எதுவும் செஞ்சது இல்ல…

                      “என்னால அவன் தரத்துக்கு இறங்க முடியாது அதான் ஒதுங்கி போறேன்..” என்று திரு முடித்துக் கொள்ள, அவனை திருப்தியாக பார்த்தாள் அவள்.

                      “சரி.. சண்முகநாதனை நீ எதுவும் செய்ய வேண்டாம்.. ஆனா அவனை பத்தி எனக்கு சில விஷயங்கள் தேவைப்படுது.. நீ அதே இடத்துல இருக்கறதால உனக்கு தெரிஞ்சிருக்கலாம். நானே இதெல்லாம் செஞ்சி முடிக்க கொஞ்சநேரம் கூட ஆகாது. ஆனா எனக்கு லோக்கல்ல ஒரு ஆள் வேணும்… அதுக்குதான் உன்னை கூப்பிட்டேன்.. முடியுமா..?” என்றவள்

                      “அதோட.. எனக்கு கிடைச்ச தகவல் படி உன் பொண்டாட்டிய தூக்குறது தான் அவன் பிளான். அவன் உன்னை விடறதா இல்ல.. நானும் அவனை விடப்போறதில்ல.. நீ அப்பப்போ என்ன நடக்குது எனக்கு சொன்னா போதும்..” என்று முடித்தாள்.

                      திரு சமாளிப்பாக “இல்ல மேடம்.. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் ஆள் கிடையாது.. அவன் எங்கே இருப்பான், எப்போ வருவான் இதெல்லாம் எனக்குமே தெரியாது..” என்று கூறி நழுவ பார்க்க

                     அவள் சிரிப்புடன் “திரு.. திரு… எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்த மார்க்கெட்ல உனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்ல.. அங்க இருக்க பொறுக்கில இருந்து ரவுடி வரைக்கும் அத்தனை பேருக்கும் திருவ தெரியும். எப்படியோ விஷயங்கள் உன் காதுக்கு வந்திடும்..

                      “அதோட உன் தொடர்புக்கு அவனை முடிக்கவும் உனக்கு நேரம் ஆகாது.. வேண்டாம் விலகி இருக்க.. அதுக்குதான் சொல்றேன்.. நான் முடிச்சு விடறேன்.. நீ நான் சொல்றதை மட்டும் செய்..” என்று அவனை  ஒருவழி ஆக்கினாள் அவள்.

                   திருவுக்கு இது சரியாக வருமா?? என்று தோன்றினாலும், எப்படியோ அந்த சண்முகநாதன் விஷயம் முடிந்தால் சரி என்று நினைத்தவன் அவளிடம் சம்மதமாக தலையசைத்து விட்டான். தன் தனிப்பட்ட அலைபேசி எண்ணை அவனிடம் கொடுத்தவள் “இந்த நம்பர்ல கூப்பிடலாம் என்னை..” என்று முடித்துக்கொள்ள, திருவும் கிளம்பிவிட்டான்.

                      ஆனால் மனதுக்குள் ஏதோ பாரமேறிய ஒரு உணர்வு. இது சரிப்பட்டு வருமா? இந்த பொண்ணை நம்பி எப்படி இறங்கறது?? போலீசா இருந்தாலும் என்னைவிட சின்னதா இருக்கும் போல அந்தம்மா.. இது எப்படி அவனை பிடிச்சு.. ” என்று யோசித்துக்கொண்டே தன் கடைக்கு வந்து விட்டான்.

                     ஆனால் மனம் “இந்த போலீஸ்கார சகவாசம் வேணுமா?” என்று கேட்டுக் கொண்டே இருந்தது. அன்று முழுவதும் அதே எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க, இரவு வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

                        அவன் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழையும்போதே துர்கா அழைத்துவிட்டாள் அவனுக்கு. திரு மொபைலை எடுத்து பார்த்தவன் வீட்டிற்கு அருகில் வந்து விடவும், அழைப்பை எடுக்காமல் நேரே வீட்டிற்குள் நுழைந்து விட்டான்.

                      இவன் உள்ளே நுழைந்த நேரம் அவன் மனைவி பயந்து போன முகத்தோடு கண்கள் சிவந்து அவனுக்கு மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தாள்.. திரு உள்ளே நுழைந்தவன் கதவை மூடப்பார்க்க, “திரு..” என்று கண்ணீரோடு அழைத்த துர்கா அவனை வேகமாக நெருங்கி இறுக்கமாக அணைத்து கொண்டாள்.

                   “திரு..” என்பதை தவிர அவள் வாய் வேறு எதையுமே பேசவில்லை. அவள் அணைப்பில் எத்தனை இறுக்கம் இருந்ததோ அதே அளவிற்கு நடுக்கமும் இருக்க, திருவுக்கு என்ன ஆனதோ என்று பயம் தான் வந்தது. காலையிலிருந்து நடந்த விஷயங்கள் அவனை அலைக்கழிக்க இப்போது மனைவி நடந்து கொள்ளும் விதம் இன்னும் அவனை கலவரமாக்கியது.

                    ஒருவழியாக துர்காவை விலக்கி அவள் கண்களை துடைத்தவன் “எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க துர்கா… ” என்று அதட்ட

                  துர்காவுக்கு வார்த்தையே வரவில்லை. அவள் கண்கள் அவனை ஆராய்ந்து கொண்டே இருக்க, திரு இருந்த உளைச்சலில் “ஏய் என்னன்னு சொல்லு.. கேட்டுட்டே இருக்கேன்ல..” என்று கத்திவிட, மீண்டும் அவனை அனைத்துக் கொண்டாள் துர்கா.

                     அவன் நெஞ்சில் ஒட்டிக் கொண்டவள் “சண்முகநாதன்.. அவன்.. அவன் போன் பண்ணி.. உங்களை எதுவோ செஞ்சதா.. வெட்டி போட்டுட்டதா… ஏதேதோ சொல்லி என்னையும் தூக்க போறதா.. அவனோட என்னை..” என்றவள்  அருவருப்பில் அதற்கு மேல் சொல்லமுடியாமல் வெடித்து அழுதாள்.

                      திருவுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அழுது கொண்டிருக்கும் மனைவி இப்போது முக்கியமாகபட, என்ன பாடு பட்டிருப்பாள் ? என்பது அவள் கண்ணீரிலேயே புரிந்தது. தன்னோடு அவளை இறுக்கி கொண்டவன் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை துடைத்துவிட, மீண்டும் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.

                        “போதும்டி.. எவ்ளோ நேரம் அழுவ.. எதுக்கு அழறது விவஸ்தையே கிடையாது.. அதுதான் நான் வந்துட்டேன் இல்ல.. அப்புறமும் எதுக்கு அழுதுட்டு இருக்க… கண்ணை துடை முதல்ல.” என்று அதட்டலாக கூற, துர்கா சமத்தாக புறங்கையால் கண்களை துடைத்துக் கொண்டது. ஆனால் திருவின் நெஞ்சத்தை விட்டு அசையவே இல்லை.

                            கண்களில் இருந்த மை கன்னங்களில் லேசாக வடிந்திருக்க, புறங்கையால் கன்னம் முழுவதும் தேய்த்துக் கொண்டவள் திருவை கொள்ளையிட்டுக் கொண்டிருந்தாள். “ப்பா..” என்று முனகியவன் அவள் கண்களில் முத்தமிட்டு மைபடிந்த அவள் கன்னங்களை கடித்து வைக்க, இன்னும் திராவிடம் ஒண்டிக் கொண்டாள் துர்கா.

                             திருவும் அவளை மாற்றுவதற்காகவே அப்படி நடந்து கொண்டான். ஆனால் அவள் தெளியவில்லை எனவும் “ஏய் என்னடி இப்போ.. எதுக்கு இப்படி இருக்க.. நியாயமா நீ அழவே கூடாது.. அதுவும் நான் அவனை போடாம இருந்தா போதாதா.. இதுல அவன் என்னை போடுவேன் சொன்னானாம். இவ அழுதுட்டு இருக்கா.. பைத்தியக்காரி..” என்று திரு அவளை வம்பிழுக்க

                            “ஒருத்தரை கொலை பண்றது அவ்ளோ ஈஸியா போச்சா உங்களுக்கு.. அவன் போன் பண்ணதும் என் உயிர் என்கிட்டயே இல்ல. அந்த நிமிஷம் உங்க வீரதீர பராக்கிரமம் எல்லாம் ஞாபகம் வரல.. என் புருஷன் தான் தோணுச்சு.. அதான் அழுதேன்..” என்றவள் ரோஷமாக விலகி நிற்க

                             “ஏய்.. இப்போ ஏண்டி தள்ளி போற.. இவ்ளோ நேரம் இங்கே தானே இருந்த.. இப்போவும் இங்கேயே இருந்து சண்டை போடு..”

                              “எனக்கு வர்ற கோபத்துக்கு உங்களைத்தான் கொல்லணும்..” என்றவள் அவன் கழுத்தை நெறிக்க

                           “ஏய்.. வீட்டுக்கு ஒரு திரு போதும்டி… நீ வேற கிளம்பிடாத.. ஆனா அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல.. அதான் அழுதுட்டே நின்னியே..” என்று அவன் நக்கல் பண்ண,

                        “உனக்கு விளையாட்டா போச்சா..” என்று அவன் சட்டையை பற்றிக் கொண்டாள் துர்கா.. இடுப்பில் கைகொடுத்து அவளை தூக்கி கொண்டவன் “ஏய் பொண்டாட்டி… அந்த சண்முகநாதன் ஒரு டம்மி பீசுடி… அவன் சொன்னதை எல்லாம் நம்பி நீ அழுதுட்டு நிற்பியா..உனக்கு திருவை தெரியாதா..”

                          “நான் தனியாளா.. யாருமே இல்லாம அனாதையா “எனும்போதே துர்காவின் முகம் மாற “அய்யோடா… இப்படி கண்ணை உருட்டினா உண்மை இல்லன்னு ஆகிடுமா.. இந்த துர்கா தேவி வரம் கொடுக்காம போயிருந்தா திரு அனாதை தான். அதுல எந்த சந்தேகமும் இல்ல..”

                        “நான் பேச வந்ததை விட்டுட்டேன் பாரு… ஹான்.. நான் தனியா இருக்கும்போதே அவ்ளோ ஜாக்கிரதையா இருப்பேன் துர்கா.. எதுலயும் சிக்கி பேரை கெடுத்துக்க கூடாது தோணிட்டே இருக்கும்.. என்னையெல்லாம் பெயில்ல எடுக்க கூட எவனும் வரமாட்டான். அடிச்சு போட்டாலும் ஏன் கேட்க ஆள் கிடையாது..

                       “அதனாலேயே இந்த அடிதடி எல்லாம் ஒரு அளவுக்கு தான்.. என்ன கை கொஞ்சம் நீளம்.. அவனுங்களாவே பயப்படுவானுங்க.. நான் கெத்தா நிற்பேன்.. அவ்ளோதான்… அதுதவிர தீவிரமா எல்லாம் இறங்கினதே இல்ல..”

                       “ஆனா என்னை காப்பாத்திக்க தெரியும்.. அந்த அளவுக்கு எப்பவுமே ஈஸியா இருக்க மாட்டேன்.. உனக்கு தாலி கட்டின நாளா உனக்கும் சேர்த்து இன்னும் கவனமா தான் இருக்கேன்.. இனியும் இருப்பேன்..”

                      “அந்த நாய் இனிமே போன் பண்ணா, நேரா என் வீட்டு வாசலுக்கு வந்து நில்லுடா.. என் புருஷனை வர சொல்றேன் சொல்லு.. திரும்ப கூப்பிட மாட்டான்..” என்று திரு சொல்லவும், துர்கா எதுவும் பேசவில்லை.ஆனால் முகம் தெளிந்து இருந்தது.

                   திருவுக்கும் அதுவே போதுமாக இருக்க, அவளை அதையே யோசிக்கவிடாமல் “பசிக்குதுடி.. குளிச்சுட்டு வரேன்.. சாதம் எடுத்து வை..” என்று அவளை திருப்ப

                     வேகமாக கிட்சனுக்குள் நுழைந்தாள் அவள். அடுத்த ஐந்து நிமிடத்தில் குளித்து வந்தவன் அதன்பிறகு அவளை தனியாகவே விடவில்லை. அவளை தன்னோடே வைத்துக் கொண்டு அவன் அமர்ந்துவிட, அவன் கைகளுக்குள் அந்த சோஃபாவில் முடங்கி இருந்தனர் இருவரும்.

                       நேற்றைய பிணக்குகள் அனைத்தும் சண்முகநாதனின் புண்ணியத்தில் முடிவுக்கு வந்திருக்க, திரு அவனுக்கு மனதார நன்றி சொல்லிக் கொண்டிருந்தான்.

Advertisement