Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 18

                                  காலை கண்விழித்த துர்காவால் அசைய கூட முடியாத அளவுக்கு அவளை இறுக்கி கொண்டிருந்தான் திரு. துர்கா தூக்கம் தெளிந்தவள் அவனை முறைத்துவிட்டு அவன் கையை மீண்டும் எடுத்துவிட பார்க்க, தூங்கி கொண்டிருந்தாலும் அவனது கைகள் துர்காவை இறுக்கமாக பிடித்திருந்தது.

                                  அவளுக்கு நேற்று முழுவதும் நடந்தது எல்லாம் நினைவு வர, அவனின் இப்போதைய அடாவடியில் கோபம்தான். நேற்று இரவு அவளை அணைத்து கொண்டவன் அதன்பிறகு அவளை தனித்து விடவில்லை என்றாலும் துர்காவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

                                  என்னை அந்த பாடு படுத்திட்டு இவன் கட்டிபிடிச்சிட்டா எல்லாம் மறந்திடணுமா ?? என்றுதான் தோன்றியது அவளுக்கு. அதுவும் நேற்று மயங்கி விழுந்தது எல்லாம் இப்போது நினைக்கையில் கடுப்பாக வந்தது. அந்த கடுப்புடன் உறங்கி கொண்டிருந்தவன் கையை பலமாக அவள் கிள்ளி வைக்க, வலியில் லேசான சத்தத்துடன் கண்விழித்தான் திரு.

                                 துர்கா அவன் கையை எடுக்கவும் எழுந்து கொண்டவள் அவனை கண்டுகொள்ளாமல் எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். குளிக்கும் போதும் கூட “நாலு மணிக்கு பேப்பர் போடுறவன் மாதிரி ஓடிடுவான்.. இன்னிக்கு என்னவாம்..” என்ற எண்ணம்தான்.

                               குளித்து முடித்தவள் வெளியே வர, கட்டிலில் அமர்ந்திருந்தான் திரு. குளியல் அறையிலிருந்து வெளிப்பட்டவள் ஒரு நைட்டியோடு நிற்க, திரு அவளை விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். துர்கா அவனை கண்டு கொள்ளாமல் வெளியே சென்றவள் தனக்கான காஃபியை போட்டுக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் அமரும்போது அவள் அருகில் வந்து அமர்ந்தான் திரு.

                              அப்போதும் அவனை கண்டு கொள்ளாதவள் தன் மொபைலை பார்க்க, திரு பொறுக்க முடியாமல் எழுந்து கொண்டவன் அவள் அருகில் நின்று அவள் கையிலிருந்த கோப்பையை பிடுங்கி அதை குடிக்க தொடங்க, அவனை முறைக்கக்கூட இல்லை அவள்.

                             அவள் பாட்டிற்கு எழுந்து மீண்டும் கிட்சனுக்குள் நுழைந்து கொண்டாள். திரு அவள் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாலும் மனம் மனைவியின் பின்தான் சென்றது. என்ன செஞ்சு இவளை சமாளிக்க போறேன் என்று அவன் யோசனை ஓடிக் கொண்டிருக்க, கையில் இருந்த பாதிக் கோப்பை தீர்ந்து போயிருந்தது.

                               அவன் கிச்சனுக்குள் நுழைந்த நேரம் துர்கா பாத்திரம் விளக்கி கொண்டிருக்க, தன் கையிலிருந்த கோப்பையை அங்கே போட்டு விட்டவன் அவள் அருகிலேயே நின்று கொண்டான். துர்காவுக்கும் ஊசியாக குத்தும் அந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் போக, பாதியில் கையை கழுவிக் கொண்டு நகர முற்பட்டாள் அவள்.

                             அவளை நகரவிடாமல் அவள் கைகளை பற்றிக் கொண்டவன் அவளை அந்த சமையல் மேடையிலேயே சாய்த்து நிற்கவைத்தான். அவனும் அவளை நெருங்கி உரசிக் கொண்டு நிற்க, துர்கா அசையவே இல்லை. அவன் மேலும் அவளிடம் நெருங்க “என்ன முடிவு பண்ணீங்க.. நான் எப்போ கிளம்பனும்… சொல்லிட்டீங்க ன்னா நான் தயாரா இருப்பேன்..” என்று இயந்திர குரலில் அவன் கண்களை பார்த்து கூறிவிட்டாள் துர்கா.

                              திரு அவளை கண்டுகொள்ளவே இல்லை. அவளை இடையோடு அணைத்து கொண்டவன் “எங்கேயும் வெளிய போகப்போறியா துர்கா… எங்கே போகணும்.. சொல்லு நானே கூட்டிட்டு போறேன்..” என்று மிகவும் சாதாரணமாக கேட்க

                               துர்கா அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை இம்முறை. அவள் கண்கள் அவன் சட்டையில் பதிந்திருக்க “சட்டை அழகா இருக்கா துர்காம்மா..” என்றவன் கூடவே “எங்கேயும் நீ தனியா போக வேண்டாம்.. எங்கே போறதா இருந்தாலும் முடிவு பண்ணி சொல்லு.. ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்..” என்று ரசனையாக அவளை பார்த்துக் கொண்டே சொல்லிவிட

                                  ஏளனமாக சிரித்துக் கொண்டாள் துர்கா. அவள் சிரிப்பில் கடுப்பானவன் “ஏய்.. எதுக்குடி இப்போ இந்த நக்கல் சிரிப்பு…” என்று கேட்க, இப்போது கவனமாக வாயை மூடிக் கொண்டாள் அவள். திரு மீண்டும் “ஓஹ்.. பேசமாட்ட.. ஹப்பா.. எவ்ளோ பெரிய சாதனை இது. என் பொண்டாட்டி வாயை மூட வச்சிட்டேன்…” என்று அவன் கத்த, அவனை முறைக்க தொடங்கிவிட்டாள் துர்கா.

                                அவள் முறைத்து பார்க்கவும், “கண்ணு அழகாத்தாண்டி இருக்கு.. அதுக்கு மாமாவை முறைச்சிட்டே இருப்பியா.. ” என்று அவள் கண்களில் முத்தமிடபோக, தலையை பின்னால் இழுத்து கொண்டாள் துர்கா.

                                “ஓஹ்.. முத்தம் கொடுக்கவும் தடையா…என்றவன் அவள் பின்கழுத்தில் கையை வைத்து தன்னை நோக்கி அவளை இழுக்க, “எனக்கு பிடிக்கல.. இப்படி பண்ணாதீங்க..” என்று கூறியே விட்டாள். திரு “உன் வாயை திறக்க தான இத்தனையும்..” என்று எண்ணிக் கொண்டவன் அவளை விட்டு சற்றே தள்ளி நின்றான்.

                             துர்கா சற்றே நிம்மதியாக அவனை பார்க்க, திருவோ “இது மட்டும் சத்தமா சொல்ற..” என்று கேட்டவன் பதில் கிடைக்காமல் போகவும் “ஒழுங்கா வாயைத் திறந்து பேசு துர்கா.. எப்பவும் பிடிக்கல னு மட்டும்தான் சத்தமா சொல்ற.. வேற ஏதாவது சொல்லு.. கேட்கறேன்..” என்று கையை கட்டிக் கொண்டு நின்றுவிட்டான்.

                               துர்கா “உங்ககிட்ட பேச எதுவுமே இல்ல… என்னை கல்யாணம் பண்ணாதே தப்பு ன்னு சொல்லிட்ட அப்புறம் உங்ககிட்ட பேச என்ன இருக்கு.. எனக்கு எதுவும் பேசத் தேவையில்ல..” என்றுவிட்டு வெளியில் நடந்தாள்.

                             அவள் சமையல் அறையை தாண்டி ஹாலுக்குள் நுழைய அவள் கையை பிடித்து இருந்தான் திரு. துர்கா அவன் கைகளையே பார்க்க, அவளை இழுத்து சென்று சோஃபாவில் அமர்த்தி விட்டு அவனும் எதிரில் இருந்த டீப்பாயின் மீதே அமர்ந்து கொண்டான்.

                                துர்கா அழுத்தமாக அமர்ந்திருக்க “ஏய்.. என்ன ஓவரா பேசுற.. நீயும்தானே சொன்ன.. என்னை பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ன்னு அப்புறம் என்னடி..” என்று திரு மிரட்டலாக கேட்க, அவன் குரல் சாதாரணமாகவே இருந்தது அப்போதும்.

                             ஆனாலும், துர்கா அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. நேற்று முழுவதும் அவன் படுத்தி வைத்ததற்கு அவனை ஒருவழி செய்ய காத்திருந்தாள் அவள். “என்ன சண்டையா வேணா இருக்கட்டும் போனை எடுக்க மாட்டானா” என்று அதுவேறு கொதிப்பாக இருந்தது அவளுக்குள்.

                             இப்போது அவனாக சமாதானம் செய்யவர, இன்னும் முறுக்கி கொண்டது பெண் மனம். அவன் தன் முன்னால் அமர்ந்து இருந்தாலும், அவன் தோரணை கடுப்பாக வந்தது. “செய்யுறதெல்லாம் செஞ்சிட்டு எவ்ளோ திமிரா பேசிட்டு இருக்கான் பாரேன்” என்பது போன்ற எண்ணம் தான்.

                             அவனை பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் துர்கா. திருவோ “ஏண்டி இப்படி அமைதியா இருக்க.. ஏதாவது பேசு..” என்று மீண்டும் கேட்க

                             “நீங்கதானே அன்னைக்கு சொன்னிங்க அமைதியான பொண்ணுன்னு நினச்சேன் ன்னு. அப்படியே இருக்கேன். இனி இந்த அளவு பேச்சு போதும் நமக்குள்ள..” என்று முடித்துக் கொண்டாள் துர்கா.

                         திருதான் அதிர்ந்து போனான் அவள் கூற்றில். எப்போ சொன்னாஹ்டிய எங்கே கொண்டு வந்து சேர்க்கிறா என்று பொசுங்கியவன் “துர்கா..நீ பேசணும் ன்னு பேசிட்டு இருக்க… என்னிக்கோ சொன்னதை இன்னிக்கு சொல்லி காட்டுவியா.. அதுவும் நான் கோபமா கூட சொல்லல அப்போ..” என்று எடுத்து சொல்ல

                        “நான் உங்களோட சண்டை போட தயாரா இல்ல. எனக்கு வேலை இருக்கு…” என்று அவள் முடிக்க பார்க்க, கடுப்பானவன் “ஏய்.. எனக்கு மட்டும் வேலை இல்லையா. வெட்டியா இருக்கேனா.. முதல்ல எனக்கு பதில் சொல்லுடி..” என்று கத்த

                          “எதுக்கு கத்துறிங்க இப்போ… எப்போவும் இதுதான் பண்றிங்க.. உங்களுக்கு வேலை இல்லன்னு நான் சொன்னேனா.. போய் உங்க வேலையை பாருங்க போங்க..” என்று எழுந்து கொண்டவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

                          அவளை பிடித்து மீண்டும் அமர்த்தியவன் அவள் கன்னங்களை தன் கைகளால் பற்றிக் கொள்ள இறுக்கமாகவே இருந்தாள் துர்கா. திரு அவளையே அசையாது பார்த்தவன் “சாரி.. நானும் கோபப்படாம இருக்கதான்டி முயற்சி பண்றேன்.. கொஞ்சமாவது புரிஞ்சிக்கோயேன்..” என்று அவளை கொஞ்ச

                         “நானும் அன்னிக்கு இப்படித்தானே கெஞ்சினேன்.. நான் வேணும்ன்னு சொல்லல சொன்னேன்ல.. நீங்க கேட்டிங்களா.. நான் என்ன சொல்லவரென் ன்னு கூட என்னை பேச விடல.. போனும் எடுக்கல.. இதுல என்னை கல்யாணம் பண்ணதே தப்பு ன்னு சொல்லியாச்சு. நானா உங்களை கல்யாணம் பண்ணிக்க சொன்னேன்.

                         “நான் பிடிக்காத கல்யாணம் ன்னு சொன்னா என்ன.. எங்கே குறைஞ்சி போய்ட்டிங்க நீங்க.. கல்யாணம் தானே பிடிக்கல ன்னு சொன்னேன். உங்களையா சொன்னேன்…”

                       “உங்களை பிடிக்காம இந்த வீட்ல ஏன் இருக்கணும்.. இதோ நீங்க இவ்ளோ அழ வச்சும் உங்ககிட்ட தானே கத்திட்டு இருக்கேன். உங்களை பிடிக்காமையா இதெல்லாம் செய்வாங்க.. யோசிக்காம வாய்க்கு வந்ததை பேசுவீங்களா…

                       “நான் எடுத்துட்டு வந்த சாப்பாடை கூட தொடல.. அப்பாவும் வெட்கமே இல்லாம சமைச்சு வச்சிட்டு உக்காந்துட்டு இருந்தேன் நான். எனக்கு உங்களை பிடிக்காதா… ஆமா..

                         “எனக்கு நீங்க வேண்டாம்… எனக்கு பிடிக்கவே இல்ல உங்களை… அன்னிக்கு சொன்னிங்கல.. விவாகரத்து பண்ணிடுவோம் ன்னு.. நான் இன்னிக்கு கேட்கறேன்.. எனக்கு விவாகரத்து கொ….” என்று அவள் பேசும்போதே அவள் வாயை கைகளால் பொத்தி விட்டான் திரு.

                                   துர்கா அவனை பார்க்க “எனக்கு விவாகரத்து கொடுக்கற ஐடியா எல்லாம் இல்ல.. சோ கேட்காத..” என்றான் அவன்.

                                     அவன் கையை தட்டிவிட்டவள் “உங்கமேல நம்பிக்கை இல்ல என் “எனக்கு உங்க மேல நம்பிக்கையே இல்ல.. “

           “ஏய்.. என்னை நம்ப மாட்டியாடி நீ..” என்று அவன் அதிர்ச்சியாக வினவ

            “ஆமா..” என்று முடிவாக சொல்லிவிட்டாள் துர்கா. திரு அவளை பாவமாக பார்க்க “இப்படி பார்க்காதீங்க.. இப்படி அப்பாவியா முழிச்சுதான் ஏமாத்துறிங்க எப்பவும்..” என்று கூறியவள் எழுந்து கொள்ள, திரு அவள் பின்னால் அலைந்து கொண்டிருந்தான்.

                        அவனை தன் பின்னால் சுற்ற வைத்தவள் ஒருமணி நேரம் ஆகியும் மலையிறங்கவே இல்லை. திருவுக்கு தேவா அழைத்து கொண்டே இருக்க, மார்கெட்டிற்கு கிளம்பினான் அவன். மனைவியின் பாராமுகம் வருத்தினாலும் அவள் வாய்மொழி வாக்குமூலங்கள் திருப்தியாக இருந்தது.

                        துர்காவின் பிடித்தம் திருவுக்கு அத்தனை பிடித்தது. தன் திருமணம் நடந்த விதத்துக்கும் இன்று எங்கள் வாழ்வுக்கும் சம்பந்தமே இல்லை என்றால் அது துர்காவால் மட்டுமே என்பது திருவுக்கு புரிந்தே தான் இருந்தது.

                      அவளை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிறையவே இருந்தது அவனிடம். ஆனால் இருவருக்குள்ளும் இருக்கும் அதீத காதலாலோ என்னவோ முட்டிக்கு கொண்டே நின்றனர் எப்போதும். ஆனால் இப்போது இந்த செல்ல சண்டைகளை ரசிக்க ஆரம்பித்திருந்தான் திரு. கோபத்தில் அவன் மனைவி உளறி வைக்கும் அவளின் காதல் கேட்க பிடித்திருந்தது அவனுக்கு. அவள்  சாதாரணமாக இருந்தால் இதை எல்லாம் பேசிவிடுவாளா என்ன??..

                      ஏதோ ஒரு வகையில் எப்போதுமே திருவாய் ஈர்த்துக் கொண்டிருந்தாள் துர்கா.. வள்ளியின் மகளாக பார்த்தபோதும் சரி.. திருமணம் என்ற எண்ணம் வந்தபோது கண்ணில்பட்ட போதும் சரி… அதன்பிரகா தருணங்களில் அவளை ஒளிந்து நின்று ரசித்த போதாகட்டும் எப்போதுமே அவளிடம் இழுக்கப்பட்டிருக்கிறான் திரு.

                      இப்போது மனைவியாக அருகில் இருக்க, அவளின் மீதான பித்து அதிகமானதே தவிர, எந்த விதத்திலும் குறையவே இல்லை. குறைய விடவில்லை துர்கா.. அவளின் ஒவ்வொரு செயலும், ஏன் பார்வைகள் கூட அவனை மீளவிடாமல் அடித்து கொண்டிருந்தது.

                                             அவளை பற்றிய எண்ணங்களுடன் மார்கெட்டிற்கு வந்தவன் அங்கிருந்த வேலைகளை பார்க்க தொடங்க, அதன்பிறகு அவன் வேலையே சரியாக இருந்தது அவனுக்கு. இதில் சண்முகநாதன் வேறு சில தலைவலிகளை இழுத்து விட்டிருக்க, தன் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டிருந்தான் அவன்.

                     அவனை இறங்கி அடிக்க, சில நொடிகள் கூட ஆகாது.. ஆனால் வேண்டாம் என்று விலகி நிற்கிறான் அவன்.. தனக்கு எதுவும் என்றால் அது நிச்சயம் துர்காவை பாதிக்கும் என்ற நினைப்பே அவனை இதுவரை பிடித்து வைத்திருக்கிறது. அவனின் பொறுமை எதுவரையோ.

                         இப்போதும் அவனிடம் சரக்கு எடுக்கும் சிலரை சண்முகநாதன் மிரட்டி இருக்க, அவர்கள் திருவுக்கு நன்றாக பழக்கமானவர்கள் என்பதால் அவனிடம் தெரிவித்து இருந்தனர். அவன் எந்த எல்லைக்கும் செல்பவன் என்பதால் திருவும் சற்று கவனமாகவே தான் இருந்தான்.

                          அந்த கடை உரிமையாளர்களிடம் பேசி சமாளித்து முடித்து, அன்றைய வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கி இருந்தான் அவன். ஆனாலும் சண்முகநாதனுக்கு ஒருவழி செய்ய வேண்டும் என்பது அவன் மூளையில் ஒரு ஓரத்தில் ஓடிக் கொண்டே தான் இருந்தது.

                           அதுவும் இப்போது பெரிதாக எதையோ செய்துவிட்டு அவன் ஓடிக் கொண்டிருப்பதும் திருவின் காதுக்கு வந்திருந்தது.. ஆனால் இந்த நிலையில் கூட தன்னை கெடுக்க நினைக்கும் அவனை எண்ணி சிரிப்பு ஒருபக்கம் வந்தாலும், அவன் குணம் தெரிந்தவன் என்பதால் எச்சரிக்கையாகவே இருந்தான் திரு.

                                    தன் வேலைகளை பார்த்து கொண்டிருந்தவன் நேரம் பதினோரு மணி ஆகி இருக்க, வீட்டிற்கு கிளம்பிவிட்டான். அவனுக்கு துர்கா சாப்பிட்டாளா என்பது தெரிய வேண்டி இருந்தது. அதோடு அவனும் இன்று இன்னும் எதுவும் சாப்பிட்டு இருக்கவில்லை.

                                 அவன் வீட்டுக்குள் நுழைந்த நேரம் துர்கா அவர்களின் அறையில் இருந்தாள். அவள் துணிகளை மடித்து கொண்டிருப்பதை பார்த்தவன் தானும் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டான். துர்கா

                                 துர்கா அவனை கண்டுகொள்ளாமல் தன் வேலையை தொடர கடுப்பாகி அவள் மடித்து வைத்த உடைகளை அவன் களைத்து போட, அவன் களைத்து போட்ட துணிகளை ஒரு பார்வை பார்த்தவள் “எல்லாத்தையும் நீங்களே மடிச்சு வைங்க..” என்றுவிட்டு ஹாலுக்கு வந்துவிட்டாள்.

                      அவள் சொன்னதை காதில் வாங்காமல் அவன் அவள் பின்னால் வர, சோஃபாவில் அமர்ந்திருந்தாள். கிட்சனை எட்டிப் பார்த்தவன் “சமைக்கலையா..” என்று கேட்டு வைக்க

                       மறுப்பாக தலையசைத்தாள் துர்கா. அவன் ஏன் என்பது போல் பார்க்க “மூட் இல்ல.. அதோட இனி நான் சமைச்சு கீழே கொட்டுறதாவும் இல்ல..” என்றுவிட்டு அவள் அமைதியாக அமர்ந்துவிட, அவளிடம் எதுவும் வெளியில் நடந்து விட்டான் திரு.

                        “போடா.. போடா..” என்று நினைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, அன்று போலவே அவளுக்கும் சேர்த்து டிபன் வாங்கி வந்திருந்தான். வாங்கி வந்தவன் ஒரு தட்டில் வைத்து அவளிடம் நீட்ட, வாங்கவே இல்லை.

                      “அப்போதும் கூட “சரியான தத்தி இது.. தேறவே தேறாது.” என்று திட்டிக் கொண்டுதான் அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் திட்டும்போதே திரு அவன் கையில் வைத்திருந்த இட்லியை பிய்த்து அவள் வாய்க்குள் திணித்துவிட, அதிர்ச்சிதான் துர்காவுக்கு.

                      “பாருடா.. ஊட்டி எல்லாம் விட்றாரு சாரு..” என்று எண்ணிக் கொண்டவள் வீம்பாகவே அமர்ந்திருக்க, திரு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான். அவன் முழுவதும் ஊட்டி முடிக்க, திருப்தியாக உண்டு முடித்திருந்தவள் காட்டிக் கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

                      திருவும் சாப்பிட்டு முடித்து கிளம்பும் நேரம் அவன் போன் அடிக்க, எடுத்து “ஹலோ” என்றான் அவன். ஏதோ தெரியாத என்னிலிருந்து அழைப்பு வந்திருக்க, யாரென்ற யோசனையுடன் தான் காதில் வைத்திருந்தான். எதிர்முனையில் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக சொன்னவர்கள் அவனை அங்கே வர சொல்லி அழைப்பை துண்டிக்க, புரியாமல் நின்றான் திரு.

Advertisement