Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 17

 

                                     காலை தன் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே விழித்துவிட்டாள் துர்கா. ஒரே பக்கமாக சாய்ந்து அமர்ந்திருந்தது கால்களில் வலியைக் கொடுக்க, எழுந்து கொண்டவள் சோஃபாவில் நன்றாக அமர்ந்து கைகால்களை உதறி கொண்டாள்.

 

                                       இரவு நடந்தது அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வர மீண்டும் வேதனை சூழ்ந்து கொண்டது அவளை. தான் பேசியது அவனை எந்த அளவுக்கு பாதித்து இருந்தால், அப்படி ஒரு வார்த்தையை தன்னை பார்த்து சொல்லி இருப்பான் என்று யோசித்தவளுக்கு அவன் வேதனையும் புரிவது போல் இருந்தது.

 

                                  இதை எப்படி சரிசெய்ய போகிறேன் இறைவாஎன்று நினைத்துக் கொண்டே எழுந்து அவள் தன்னறைக்கு செல்ல, திரு வந்து சென்றதின் அடையாளமாய் அவனின் உடைகள் அங்கிருந்த அழுக்கு கூடையில் இருந்தது.

 

                                     அதை பார்த்ததும் சற்றே நிம்மதியாக, தானும் குளித்து முடித்து சாமியறையில் இருந்த கடவுள் படங்களின் முன்னால் கண்மூடி நின்றுவிட்டாள். எப்போதும் போல் எனக்கு பொறுமையையும், தைரியத்தையும் கொடு என்று வேண்டிக் கொண்டவள் சமையலறைக்குள் நுழைந்தாள்.

 

                                       திரு சாப்பிட வருவானா?? இல்லையா? என்று தெரியாமல் அரைநொடி முழித்துக் கொண்டிருந்தவள் ஒரு முடிவுடன் சமைக்க ஆயத்தங்களை மேற்கொண்டாள். அவனை விடுவதாக இல்லை அவள். வாராமல் எங்கே போய்டுவாரு.. கண்டிப்பா வருவாருஎன்று தனக்குத்தானே சொல்லிக்கொள்ள வேறு செய்தாள்.

 

                                    ஆனால் அவள் சமைத்து வைத்து காத்திருக்க, திரு வரவே இல்லை. பொறுத்து பார்த்தவள் மீண்டும் அவனை அலைபேசியில் அழைக்க, அழைப்பையும் ஏற்கவில்லை அவன். அவன் வராமல் சாப்பிடவும் பிடிக்காமல் போக, அவளுமே உண்ணவில்லை.

 

                                 மதியமும் மீண்டும் சமைத்து முடித்து, மீண்டும் அதே காத்திருப்பை அவள் தொடர திருவிற்கு வீட்டுக்கு வரும் எண்ணமே இல்லை போலும். அவன் வந்தே சேரவே இல்லை. காத்திருந்தவளுக்கு அந்த காத்திருப்பு நரகமாக மாறிக் கொண்டிருந்தது.

 

                                 தனிமை வேறு அழுகையை கொடுக்க, அவளின் அழுகை அவளின் தைரியத்தை குறைத்துக் கொண்டிருந்தது. “முழுவதுமாக வெறுத்துவிட்டானோஎன்று நினைத்து அதற்கும் அழுதவள் ஒரு கட்டத்தில் அழுதுகொண்டே மூர்ச்சையாகி போனாள்.

 

                                நேற்று காலை திருவுடன் சேர்ந்து உண்டது. நேற்று மதியத்திலிருந்து இன்று இதோ மதியம் முடிந்து மாலை தொடங்கும் நேரம்வரை ஒன்றுமே சாப்பிடாமல் இருந்தது அவளை மயக்கத்தில் ஆழ்த்தி இருந்தது. படித்தவள் தான்.. இத்தனைக்கும் பிறரின் நலம் பேணும் செவிலி வேறு. ஆனால் அவள் தன் உடல்நிலையை கண்டு கொள்ளாமல் விட, அவளால் தாங்க முடியாமல் போனது.

 

                                கதவு திறந்து கிடக்க, சோஃபாவில் அமர்ந்திருந்தவள் அப்படியே பின்னால் சாய்ந்து விட்டிருந்தாள். பார்ப்பதற்கு அவள் உறங்குவது போல் தோன்ற, இரவு ஏறியதும் வீட்டுக்கு வந்த திருவின் கண்கள் கண்டது உறங்கி கொண்டிருந்த மனைவியைத் தான்.

 

                                “ஏன் சோஃபாவில் படுத்து தூங்கிட்டு இருக்கா..” என்று நினைத்தவன் உள்ளே வர, எந்த அசைவும் இல்லை அவளிடம். அவளை பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தவன் குளித்து உடையை மாற்றி வர, அப்போதும் அவள் படுத்தே இருக்கஉடம்பு எதுவும் முடியலையோ..” என்று யோசித்தான்.

 

                              “போன் பண்ணிட்டே இருந்தாளேஎன்றும் தோன்ற, வீட்டை சுற்றிலும் ஓடியது அவன் பார்வை. இதுவரை அவள் அருகில் செல்லவில்லை. டைனிங் டேபிளில் வழக்கத்தை விட அதிகமாக பாத்திரங்கள் இருக்க, அருகில் சென்று பார்த்தான். காலை செய்த டிஃபனும், மதியம் செய்த சமையலும் அப்படியே இருந்தது அந்த கிண்ணங்களில்.

 

                                செய்து வைத்தது அப்படியே இருக்க, அவள் சாப்பிடவே இல்லை என்பது அப்போதுதான் தெரியும் அவனுக்கு. இவளுக்கு என்னதான் பிரச்சனை?? என்று கோபம் கொண்டவன் அவள் அருகில் சென்று அவள் கையை முழங்கைக்கு மேலாக பற்றி எழுப்ப முயற்சிக்க, நிலையில்லாமல் அவன் கைகளில் தொண்டு விழுந்தாள் அவள்.

 

                               உயிர் ஒரு நொடி உறைந்து நின்றது திருவுக்கு. அவனின் முதல் பயமேஅவசரக்காரி என்ன செய்து வைத்தாளோஎன்பதாகத் தான் இருந்தது. அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டவன் அவள் கன்னத்தில் தட்டிதுர்கா.. துர்கா..” என்று அழைக்க கண்கள் கலங்கிவிட்டது இதற்குள்.

 

                              அந்த ஆறடி ஆண்மகன் உள்ளுக்குள் நடுங்கி போயிருந்தான். அங்கு டைனிங் டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தவன் மீண்டும் அவள் கன்னத்தில் பலமாக தட்ட லேசாக விழிகளை மலர்த்தினாள் துர்கா.

 

                             ஆனால் கண்களை திறக்க முடியாமல் அவள் உடல் சண்டித்தனம் செய்ய, கண்களை திறக்க முயன்றால் தலை எங்கோ பறப்பது போல் இருந்தது அவளுக்கு. அரைமயக்கத்தில் அவள் இருக்க, திரு அவள் வாயைத் திறந்தவன் சிறிது தண்ணீரை அவள் வாயில் சரிக்க, எரிந்து கொண்டிருந்த ஏதோ மெல்ல அணைவது போல ஒரு உணர்வு துர்காவிடம்/

 

                          லேசாக மிக மெதுவாக தன்னை மீட்டுக் கொண்டிருந்தாள் அவள். முயன்று அவள் கண்ணை திறந்து பார்க்க, அப்போதும் தலை சுற்றுவது போலவே இருந்தது. எழுந்து கொள்ள கால்கள் ஒத்துழைக்கும் என்றும் தோன்றவில்லை. சோர்வாக மீண்டும் திருவின் மீதே சாய்ந்து விட்டாள் அவள்.

 

                          திருவுக்கு இன்னும் பயம் தெளியாமல்துர்காதுர்காஎன்னை பாரு.. என்னடி செய்யுது.. ஏன் இப்படி இருக்க.. என்ன செஞ்சு வச்ச..” என்று அவன் கேள்விகளாக கேட்க

 

                           அவன் கேட்பது புரிந்தாலும், பதில் சொல்லும் தெம்பு இல்லை அவளுக்கு. சைகையில் மீண்டும் தண்ணீர் கேட்க, திரு மீண்டும் கொஞ்சம் தண்ணீர் கொடுக்கவும் சற்றே தெளிந்தவள் முயன்றுபசிக்குது..” என்று சொல்லிவிட்டாள் அவனிடம்.

 

                           அதுவே பெரிது என்பது போல் அவள் கண்களை மூடிக் கொள்ள, திருவுக்கு தான் அதிர்ச்சியில் ஒன்றுமே புரியவில்லை. இது அதிர்ச்சியாகும் நேரம் இல்லை என்று சொல்லிக் கொண்டவன் அவளை தூக்கி சென்று தன் அறையில் கிடத்தினான். அவள் மதியம் வைத்திருந்த உணவை லேசாக கரைத்து எடுத்துக் கொண்டவன் அதையே அவளுக்கு கொடுத்தான்.

 

                             துர்காவும் மெதுவாகவே அதை குடிக்க, குடிக்கும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் திரு. இவளை எப்படி சமாளிப்பது என்பதே அவன் கவலையாக இருந்தது இப்போது. அவன் கொடுத்ததை குடித்து முடித்தவள் இன்னும் அவன் கையணைவிலேயே இருக்க, அவள் கட்டிலில் கிடத்திவிட்டு அவள் அருகில் அமர்ந்தான் திரு.

 

                           அடுத்த கொஞ்ச நேரத்தில் தெளிவானாள் துர்கா. இப்போது கண்கள் நன்றாக தெரிய தள்ளாட்டமும் குறைந்து இருந்தது. மெதுவாக எழுந்து அவள் அமர, அவளுக்கு எதிரில் அவளை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் திரு.

 

                           அவனை கண்டதும் மறந்திருந்த அத்தனையும் வரிசையாக நினைவு வந்தது துர்காவுக்கு. உடலில் இன்னும் முழுதாக பலம் வந்திருக்காத நேரத்தில் அவனுடன்  சண்டையிடவும் எண்ணம் இல்லை. அமைதியாக அவனை பார்த்தவள் கட்டிலில் இருந்து இறங்க முற்பட லேசாக தள்ளாடினாள்.

 

                           திரு சட்டென எழுந்து அவளை பிடித்துக் கொண்டவன் அவளை அழைத்து சென்று பாத்ரூமில் விட, தன்னை இயல்பாக்கி கொண்டவள் முகத்தை கழுவிக் கொண்டு வெளியில் வர வாசலில் நின்றிருந்தவன் மீண்டும் தூக்கி சென்று கட்டிலில் விட்டான்.

 

                         “நான் என்ன பேஷண்டா..” என்று தோன்றியபோதும் அவனிடம் எதுவும் பேசவில்லை அவள். அமைதியாக படுத்துக் கொண்டாள். அவளின் மறுபுறம் திரு படுத்துக்கொண்டாலும் இதுவரை அவன் ஒருவார்த்தை கூட பேசவில்லை என்பது உறுத்திக் கொண்டே இருந்தது அவளுக்கு.

 

                        அதுவும் அவனுக்காக சாப்பிடாமல் உட்கார்ந்திருந்து மயங்கி விழுந்த தன்னை நினைக்கையில் ஆத்திரமாக வந்தது. அதுவும் மயங்கி கிடைக்கும் இந்த நிலையில் கூடஏன் இப்படி இருக்க.. ” என்று கேட்காத அவன் செய்கை இன்னமும் வலித்தது.

 

                            அவன் அணைத்து கொண்டது, தண்ணீர் கொடுத்தது, உணவு கொடுத்தது, தூக்கி வந்தது எதுவுமே அப்போது நினைவில் இல்லை. அவன் தன்னிடம் பேசாமல் போனதே பெரிய விஷயமாக தோன்ற, மீண்டும் கண்களில் கண்ணீர் வரும் போல் இருந்தது.

 

                               அழக்கூடாது என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள் அவன் முதுகையே வெறித்துக் கொண்டிருக்கும் தன் செயல் பிடிக்காமல் தானும் மறுபுறம் திரும்பிக் கொண்டாள். அழுது விடுவோமோ என்று பயந்து கொண்டே அவள் கண்களை இறுக மூடி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க, அவள் எதிர்பாராத நேரத்தில் அவளை இழுத்து தன்மீது போட்டுக் கொண்டான் திரு.

 

                              துர்காவுக்கு தெளிந்த மயக்கம் மீண்டும் வரும்போல் இருந்தது. அவன் நெஞ்சில் வந்து விழுந்திருந்தாள் அவள். அவன் கைகள் அவளை அத்தனை இறுக்கமாக பற்றி இருக்க, அவன் முகத்திலும் அதே இறுக்கம் இருந்தது தான் வேதனை.

 

                           நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளுக்கு அவன் முகத்தில் இருந்த இறுக்கம் புரிய, மெல்ல அவனை விட்டு விலக முற்பட்டாள் அவள். அவளின் விலகல் புரிந்தவனோஎன்னை கொன்னுட்டுதான் போவியாடி நீ..” என்று கத்த

 

                        பதிலே பேசவில்லை அவள். கண்களில் கண்ணீர் துளிர்க்கஅழுத.. சத்தியமா உன்னை கழுத்தை நெறிச்சு கொன்னுடுவேன் துர்கா… ” என்று மீண்டும் கர்ஜித்தான் திரு. அவள் அழுகையை முயன்று விழுங்கி கொண்டு அவனை பார்க்க அப்போதும்

 

                               “என் மூஞ்சில என்ன தெரியுது.. ஏன் என்னையே பார்த்து வைக்குறபடுத்து தூங்கு…” என்று கத்தவே செய்தான் திரு. துர்கா பார்வையை மாற்றிக் கொள்ளாமல் போகஅதான் நீ என்ன சொன்னாலும், செஞ்சாலும் வெட்கமே இல்லாம இதோ இப்படி தாங்கிட்டு இருக்கேனே.. வேற என்ன வேணும் தூங்கு..”

 

                              “இன்னும் இவனை என்னவெல்லாம் செய்யலாம் ன்னு யோசி.. ” என்று அவன் பொரிந்து கொண்டே இருக்க, அவனின் இயலாமை அங்கே கோபமாக வெடித்துக் கொண்டிருந்தது. துர்காவிடம் தன்னிலை இழந்து தடுமாறி நிற்கும் தன்னை பிடிக்கவே இல்லை அவனுக்கு.

 

                             அதுவும் அவள் மதிக்காதபோது அவளுக்காக உருகும் தன்னை நொந்து கொண்டிருந்தான் அவன். அவன் மனைவியோ அவன் பேசியதற்கு தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அவனை பார்த்திருந்தவள் அவன் முடிக்கவும், அவன் கைகளை உறுதியாக விலக்கிவிட்டு நகர்ந்து படுத்துக் கொண்டாள். அவள் செய்கையில் ஆத்திரம் தலைக்கேறியது திருவுக்கு.

 

                           அவள் கையை பிடித்து இழுத்தவன் தன் புறமாக அவளை திருப்பிக் கொள்ளப்ளீஸ்என்னால முடியலஎனக்கு கொஞ்ச நேரம் தூங்கணும். என்னை விடுங்க..” என்று தன் கையை இழுத்து கொள்ள பார்த்தாள் துர்கா.

 

                          அதில் இன்னும் கடுப்பானவன்ஏய் எனக்கு என்ன வேண்டுதலாஉன்கிட்ட இப்படி கத்திட்டு இருக்கணும் ன்னுஎன்னை தூக்கமே இல்லாம அலைய விட்டுட்டு நீ தூங்க போறியா…” என்று கேட்க

 

                           எழுந்து அமர்ந்துவிட்டாள் துர்கா. “சரி சொல்லுங்க.. நான் என்ன பண்ணனும் இப்போ..” என்று சட்டமாக அவள் கேட்க, என்ன சொல்லணும் இப்போ என்றுதான் பார்த்தான் திரு.

 

                             துர்காவே மீண்டும்சொல்லுங்க நான் செய்யணும்..” என்று கேட்க, அவளை முறைத்து கொண்டிருந்தான் திரு. துர்கா அவனை பார்த்தவள்நான் பேசின அந்த ஒரு வார்த்தைக்கு நேத்துல இருந்து எனக்கு தண்டனை கொடுத்துட்டு இருக்கீங்கஎத்தனை போன் பண்ணேன், ஒரு முறை ஒரே ஒரு முறை எடுத்தீங்களா நீங்க.. நேத்து காலையில உங்களோட சாப்பிட்டதுதான்.. நேத்து மதியமும் சாப்பிடல, நைட்டும் சாப்பிடல.. ஆனால் அப்பகூட உங்களுக்காக சமைச்சு வச்சுட்டு லூசு மாதிரி உக்காந்துட்டு இருந்தேன்.

 

                          நாள் முழுக்க வெயிட் பண்ணியும் வரவே இல்லை நீங்க.. நான் என்ன சொல்லட்டும். உங்களுக்கு என்னை பிடிக்கவே இல்ல அதனாலதான் என்னை இப்படி அவாய்ட் பண்றிங்க ன்னு சொல்லவா?? நான் எப்படி போனாலும் உங்களுக்கு கவலையே இல்லன்னு எடுத்துக்கலாமா?? ” என்று கேட்க

 

                         திரு அவளை முறைத்தவன்லூசாடி நீ.. செய்றதெல்லாம் நீ செஞ்சிட்டு, இப்போ என்னை குறை சொல்லுவியா..” என்று கோபமாக கேட்கவும்

 

                           “நாந்தான் செஞ்சேன்.. அதுக்காக உங்ககிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன்.. ஆனா நீங்க என்ன சொன்னிங்க?? என்னை கல்யாணம் செஞ்சதே தப்பா??? இல்ல நீங்க செஞ்ச மிகப்பெரிய தப்பு. இதுக்குமேல என்ன சொல்லணும்.”

 

                           “போதும்.. நான் வாழ்ந்த இந்த வாழ்க்கையும் போதும்.. நீங்க கொடுத்த பாசமும் போதும்என்னால இதையெல்லாம் தாங்கவே முடில.. எனக்கு இதெல்லாம் வேண்டாம்.. நேத்துல இருந்து எனக்கே என்னை பிடிக்கல.. அழுதுட்டே இருக்கேன்.”

 

                          “இதெல்லாம் என் குணமே கிடையாது. கத்துறது, இப்படி சண்டை போடறது இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது எனக்கு. ஆனா இப்போ எல்லாம் அதை மட்டும் தான் செய்றேன்.. வேண்டாம்.. நீங்க உங்களுக்கு என்ன தோணுதோ செய்ங்க.

 

                            “நான் இனி எதுக்கும் தயாரா இல்ல. நீங்க என்னை பொறுத்துக்க முடியலைன்னா அனுப்பிடுங்க…” என்று சொல்லும்போதே லேசாக கேவியவள்என் அம்மாவை நான் சமாளிச்சுக்குவேன்நீங்க  என்னால கஷ்டப்பட வேண்டாம்.. என்னை அனுப்பிடுங்க..” என்றாள் அழுது கொண்டே.

                                   திரு தான் அவளின் வார்த்தைகளை ஏற்க முடியாமல் அமர்ந்து இருந்தான். அவளை சொல்லிட்டு நீ என்னடா செஞ்சு வச்சிருக்க..” என்று கேட்டுக் கொண்டவனுக்கு அவளின் அழுகையை சகிக்க முடியவில்லை.

 

                    நிறைய அழ வைக்கிறேன் என்றும் தோன்ற, அவள் கையை பிடித்து இழுத்து மீண்டும் அனைத்துக் கொண்டான். இந்த முறை அவள் விலக முடியாத அளவுக்கு வன்மையாக இருந்தது அணைப்பு. அவளிடம் மென்மையை மட்டுமே இதுவரை பயன்படுத்தி வந்தவனுக்கு அது தவறோ என்று இப்போது தோன்ற  தொடங்கி விட்டது

 

                     நேற்று அவள் பேசிய போதே ஒரு அறை விட்டுவாடி” என்று இழுத்து வந்திருந்தால் இத்தனை தூரம் வந்திருக்காதோ என்று தோன்றியது அவனுக்கு. அவளின் வாய் பற்றி ஏற்கனவே அறிந்தது தானே. நேற்று என்ன புதிதாக உனக்கு ரோஷம் வந்துவிட்டது என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்க, தன்மீது இருந்த கோபத்தை அவள்மீது காண்பிக்க எண்ணியவன் அவளை அசையக்கூட விடாமல் இறுக்கினான்.

 

                     துர்கா எத்தனை முயன்றும் அவனை விலக்க முடியாமல் போக, கண்ணீருடன் முயன்று கொண்டே இருந்தாள். அவளை அசையவே விடாமல் செய்தவன் அவள் தோளில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு அவள் கழுத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தான்.

 

                     துர்கா அவனை விலக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போக, இறுக்கமாக அணைத்திருந்தவனோ அதுதான் வேண்டும் என்பதுபோல் அதற்குமேல் முன்னேறவே இல்லை. அவள் கழுத்தில் புதைந்து கொண்டதோடு சரி.

 

                   உன்னை விடமாட்டேன் என்று உணர்த்த நினைத்தானோ என்னவோ ???

                    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement