Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 16

                           அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு அதன் திரையை வெறித்துக் கொண்டிருந்தாள் துர்கா. மதியம் திரு விட்டுச் சென்றதிலிருந்து இதுவரை ஒரு ஐம்பது முறையாவது அழைத்திருப்பாள். ஆனால் ஒருமுறை கூட அழைப்பு ஏற்கப்படவே இல்லை.

                            கண்களில் கண்ணீர் திரண்டு நிற்க, பேசிய வார்த்தைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்து கொன்றது. அன்னையை பேசுவதாக நினைத்து திருவை காயப்படுத்தி விட்டோம் என்பது மிகத் தாமதமாக தான் புரிந்து கொண்டிருக்கிறது அவளுக்கு.

                            வள்ளிக்கு மகள் மீது அளவுகடந்த கோபம் இருந்தாலும் அவளின் இந்த நிலை சற்றே திருப்தியாக இருந்தது. ஆம்.. திருவின் கோபம் மகளை பாதிப்பதை நல்லவிதமாகவே எடுத்துக் கொண்டார் வள்ளி. அதன்பொருட்டே மகளை எதுவும் பேசி விடாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

                        துர்காவோ அவரை கண்டு கொள்ளவே இல்லை. அவர் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது கூட அவள் கருத்தில் பதியாமல் திருவுக்கு அழைக்க முயன்று கொண்டிருந்தாள். இவள் அழைத்துக் கொண்டிருக்கும் இந்த இடைவெளியில் வள்ளி இரவுக்கு சமைத்து முடித்திருந்தார்.

                        மகளை அவர் சாப்பிட அழைக்க, காது கேட்காதவள் போல் போனை கையில் இறுக்கி கொண்டு அமர்ந்திருந்தாள் துர்கா. வள்ளி பொறுத்து பார்த்தவர் “எழுந்து சாப்பிட வாடி.. பேசும்போது எதிர்ல யார் இருக்காங்க ன்னு பார்த்து பேசணும். வாய் இருக்கு ன்னு உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இப்போ உட்கார்ந்து ஒப்பாரி வச்சா ஆச்சா..” என்று சத்தம் போட

                      அவரை முறைத்தவள் “எங்க ரெண்டு பேருக்கும் சண்டை வரவே நீதான் காரணம்.. உன்னாலதான் இது எல்லாமே.. நீ என்னை குறை சொல்றியா.. நீ பண்ண வேலைக்கு தான் அவரை திட்டிட்டேன். போம்மா..” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

                      வள்ளி அவள் கண்ணீரை கட்டுப்படுத்துவதை புரிந்து கொண்டவர் அவளை நெருங்கி “எதுக்கு இப்படி அழணும். உன்வீட்டுக்கு கிளம்பி போக வேண்டியது தானே.” என்று பொறுமையாக கேட்க

                      “நான் ஏன் போகணும்.. என்னைத்தான் விட்டுட்டு போய்ட்டாரே..” என்று முடிப்பதற்குள் மீண்டும் கண்ணீர் கரைகட்டியது.

                      வள்ளி அவளை முறைத்தவர் “நீ பேசின பேச்சுக்கு உன்னை ரெண்டு வைக்காம அமைதியா போனானே அதுவே பெரிய விஷயம். அதோட அவன் உன்னை கூப்பிட்டான்ல. நீ தான வரமாட்டேன் ன்னு சொன்ன. அதை மட்டும் வசதியா மறந்திட்டியா..” என்று கேட்க

                      “ஹான்..” என்று முழித்தாலும் அன்னை சொன்னதை மறுக்க முடியவில்லை. அதே நேரம் தானாக செல்லவும் மனம் வரவில்லை. என்ன செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டே அமர்ந்திருக்க, வள்ளி இது ஆகாது என்று முடிவு செய்தவராக “சரி நீ போக வேண்டாம். திரு எப்போ வந்து கூபிடுதோ அப்போ போ.. இப்போ வந்து சாப்பிடு.. எழுந்து வா” என்று அழைக்க

                         திரு சாப்பிட்டு இருப்பானா என்று தான் எண்ணம் ஓடியது. மதியம் சமைக்காமல் இருந்ததும் நினைவு வர, நிச்சயம் சாப்பிட்டு இருக்கமாட்டான் என்று நினைத்துக் கொண்டவளுக்கு இங்கே அமர்ந்திருப்பது வேறு குற்றவுணர்வாக இருந்தது. இப்போது இங்கே சாப்பிடவும் மனம் வரவில்லை.

                        நேரத்தை பார்க்க அது ஒன்பது முப்பது என்று காட்டவும் ஒரு முடிவுடன் எழுந்து கொண்டாள். கிச்சனுக்கு சென்றவள் அங்கிருந்த எவர்சில்வர் தூக்கு ஒன்றில் சாதத்தையும் இன்னும் இரண்டு கிண்ணங்களில் குழம்பையும், பொரியலையும் எடுத்து வைத்தாள். வள்ளி வாயில் கைவைத்து வேடிக்கை பார்ப்பதை கண்டுகொள்ளவே இல்லை அவள்.

                  வேகமாக எடுத்து வைத்தவள் அனைத்தையும் எடுத்து ஒரு கூடையில் வைத்து, முகத்தை கழுவிக் கொண்டு கிளம்பி விட்டாள். வள்ளி தன்னையே பார்க்கவும், “நான் கிளம்புறேன்” என்று வீம்பாகவே சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டாள். வள்ளிக்கு மகளின் செயலில் ஒரு விரிந்த புன்னகைதான். இதைவிட வேறென்ன வேண்டும் அவருக்கும்.

                  துர்கா வீட்டுக்குள் நுழையும் நேரம் ஹாலில் இருந்த சோஃபாவில் படுத்துவிட்டிருந்தான் திரு. மதியம் வந்து அமர்ந்தவன் தான். அதற்கு மேல் எதுவும் செய்ய தோன்றாமல் அமர்ந்திருந்தவன் வீட்டை கதவை கூட மூடாமல் அப்படியே போட்டுவிட்டு படுத்திருந்தான் ஆனால் உறங்கவில்லை.

                 கண்களை வெறுமனே மூடிக் கொண்டு அவன் படுத்திருக்க, ஏதோ அரவம் உணர்ந்து கண்களை திறந்தவன் முன்பாக நின்று கொண்டிருந்தாள் அவனின் திருமதி. திரு அவளை பார்த்ததும், வந்துவிட்டாளா என்று ஒரு நொடி சந்தோஷித்தவன் அடுத்த நொடி பார்வையை மாற்றிக் கொண்டு மீண்டும் கண்களை மூடி படுத்து விட்டான்.

                துர்கா அவன் திட்டுவான் என்று நினைத்தவள் அவனின் இந்த அமைதியை எதிர்பார்க்கவில்லை. அவன் கண்டு கொள்ளாமல் அப்படி படுத்துக்க கொண்டதை தாங்கவே முடியவில்லை அவளால். கையிலிருந்த உணவை டைனிங் டேபிளில் எடுத்து சென்று வைத்தவள் திருவின் அருகில் வந்து நின்றாள்.

               அவன் கண்ணை திறக்காமல் படுத்தே இருக்க, “எழுந்து வாங்க… சாப்பாடு எடுத்து வந்திருக்கேன். வந்து சாப்பிடுங்க…” என்று எப்படியோ முயன்று அழைத்து விட்டாள்.

                ஆனால் திருதான் கண்டுகொள்ளவே இல்லை இப்போதும். காது கேட்காதவன் போல் படுத்திருந்தான் அவன். அவன் பேசாதது வருத்தமாக இருக்க, அவன் கையை லேசாக பிடித்தவள் “திரு..” என்று அழைக்க, நிதானமாக கண்களை திறந்தவன் அதே நிதானத்துடனே அவள் கைகளை விளக்கி விட்டு மீண்டும் படுத்துக்க கொண்டான்.

        அவ்வளவுதான்.. அவனின் இந்த ஒரே செயலில் கண்ணீர் மடை திறந்த வெள்ளமாக பெருகி விட்டது துர்காவின் விழிகளில். ஆனால் அதற்காக தன்னையே திட்டிக் கொண்டவள் கண்களை துடைத்துக் கொண்டு இந்த முறை அவனை பிடித்து வேகமாகவே உலுக்கினாள்.

                   “எதுக்கு இப்போ இப்படி இருக்கீங்க… என்கிட்டே பேசக்கூட முடியாதா உங்களால.. அப்படி என்ன பண்ணிட்டேன் நான்..” என்றவள் “எழுந்துகோங்க முதல்ல..” என்று அவனை உலுக்க

               திருவுக்கும் ஆத்திரம் தான். பண்றது அத்தனையும் பண்ணிட்டு என்ன பண்ணிட்டேன்ன்னு கேட்கிறா பாரு என்று நினைத்து கொதித்து போனவனாக அவன் எழுந்து கொள்ள, அவன் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் துர்கா.

              அவன் சோஃபாவில் படுத்திருக்க, அவனை எழுப்பவென்று மண்டியிட்டவள் அப்படியே இருந்தாள். திரு அவளை முறைத்தவன் “எதுக்கு இங்க வந்த..” என்றுதான் ஆரம்பிக்கவே செய்தான்.

                துர்காவும் “புரியல எனக்கு. எதுக்கு வந்தேன்னு கேட்டா..வரமாட்டேன் ன்னு முடிவு பண்ணிட்டிங்களா” என்று சூடாக கேட்க

               “நான் நினைக்கல… நீயே தான் சொன்ன…”

           “என்ன.. என்ன சொன்னேன்.. அப்போ உங்க மேல இருந்த கோபத்துல வரல சொன்னேன். அதுக்காக என்னை அப்படியே விட்டுட்டும் வந்துட்டீங்க. இப்போ நானே வந்தா எதுக்கு வந்த ன்னு வேற கேட்கறீங்களா..”

             “சரி.. இப்ப நீ வந்துட்ட.. அதுக்கு நான் என்ன செய்யணும்… முதல்ல நீயே எதுக்கு வந்திருக்க ன்னு எனக்கு தெரியணும்ல. யாருக்கு தெரியும் கல்யாணத்துக்கு உன்னை கட்டாயபடுத்தி சம்மதிக்க வச்சது போல, இப்போவும் உன்னை கட்டாயப்படுத்தி உன் அம்மா அனுப்பி வச்சிருக்கலாம்.” என்று கூறி எழுந்து விட்டான் திரு.

                    துர்கா தானும் எழுந்து கொண்டவள் “நான் மதியம் பேசினதை மனசுல வச்சிட்டு நீங்க இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க… நான் அம்மா மேல இருந்த கோபத்துல…” என்று அவள் பேசும்போதே இடையிட்டவன்

                   “இன்னும் எவ்ளோ நாளைக்கு துர்கா. இன்னும் எத்தனை நாளைக்கு நீ சொல்லிட்டே இருப்ப.. பிடிக்காத கல்யாணம்.. பிடிக்காத கல்யாணம் ன்னு… அதுவும் கடைசி ரெண்டு நாள்… என்னோட அப்படி வாழ்ந்தும் இது பிடிக்காத கல்யாணம் ன்னு சொல்லிட்டே இருப்பியா..

                  “நீ சொல்லும்போது எல்லாம் உன் எதிர்ல நிற்கிற நான் செத்து பொழைக்கிறேன்… ஏய்.. பிடிக்காத கல்யாணம் தானே.. அப்படியே போக வேண்டியது தானே.. நீ வேண்டாம்டா ன்னு என் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டு போயிருக்கலாம்ல. எதுக்குடி அமைதியா இருந்த…” என்று கத்த

                  “திரு நான் வேணும்ன்னு பேசல.. நீங்க இவ்ளோ ஹர்ட் ஆவிங்க ன்னு எனக்கு தெரியாது அப்போ.. நீங்க என்கிட்டே சொல்லாத கோபத்துல நான்..”

                 “என்ன சொன்ன… நான் சொல்லலையா.. நீ போன் பண்ற வரைக்கும் உன் அம்மா வேளைக்கு வர்ற விஷயம் உனக்கு தெரியாதுன்னு எனக்கு தெரியாது. அப்படி இருக்கப்போ நான் எப்படி சொல்லுவேன் உன்கிட்ட.. அதையும் மதியமே உன்கிட்ட சொல்லிட்டேன்.. அப்போகூட என்னை நம்பல நீ..”

                 “அவ்ளோ நம்பிக்கை என்மேல… அப்படி என்ன பண்ணிட்டேன் உன்ன…” என்று திரு கோபமாக கேட்கவும், துர்காவும் கலங்கி தான் போனாள். அவள் கண்ணீருடன் நின்றிருக்க திரு தொடர்ந்தான்.

                   “யாருமே இல்லாம தனியா இருந்தப்போ கூட நிம்மதியா இருந்தேன்..ஆனா இந்த கடைசி ஒரு வாரத்துல இந்த கல்யாணம் சரியா ன்னு என்னை நிறைய முறை யோசிக்க வச்சிட்ட நீ. நான் உன்னை கல்யாணமே பண்ணி இருக்க கூடாது. நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு அது..” என்று ஒரேடியாக கூறிவிட்டான் திரு.

                     அவன் கோபம் அவனை நிலையிழக்க செய்திருக்க, அதன் வெளிப்பாடே இந்த வார்த்தைகள். என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் எதிரில் இருப்பவள் தன் உயிருக்கும் மேலானவள் என்பதையும் மறந்து அந்த நேர கோபத்தில் வார்த்தைகளை விட்டு இருந்தான் திரு.

                     ஆனால் அப்போதும் கூட அவனது உக்கிரம் குறையவே இல்லை. அவன் அதே கோபத்தோடு நின்றிருக்க, துர்கா அதிர்ந்து நின்றிருந்தாள் அவன் வார்த்தைகளில்.

                        என்னோடான வாழ்வு ஒரு வாரத்திலேயே சலித்து விட்டதா இவனுக்கு?? என்னை கல்யாணமும் செய்து கொண்டு அது தப்பு என்றும் சொல்லுவானா?? கடவுளே உண்மையில் நாந்தான் தப்பாக இருக்கேனா?? என்னால இவனோட ஒத்து வாழவே முடியாதோ ” என்று யோசிக்க ஆரம்பித்து இருந்தாள் துர்கா.

                    அவள் அதிர்ந்து நிற்பதை கூட பொருட்படுத்தாமல் திரு அவன்பாட்டிற்கு அந்த நேரத்தில் வெளியே சென்றுவிட, அடுத்து என்ன என்று தெரியவே இல்லை துர்காவுக்கு. இந்த வாழ்வு என்னாகும் என்ற பயம் முன் எப்போதையும்விட அந்த நொடி அதிகமாக தாக்க, திருவை விட்டு இனி தன்னால் முதலில் இருக்க முடியுமா என்ற கேள்வியும் பெரிதாக நின்றது அவள் முன்னால்.

                      “நான் உன்னை கல்யாணமே பண்ணி இருக்க கூடாது” என்ற திருவின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது துர்காவுக்கு. தப்பு பண்ணிட்டாராமா என்று தன்னையே கேட்டுக் கொண்டவளுக்கு பதில்தான் தெரியவே இல்லை.

                மதியம் அவள் பேசும்போது உணராத வலியை இப்போது திருவின் வார்த்தைகளில் உணர்ந்து கொண்டிருந்தாள். அதுவும் இந்த இரண்டு மூன்று நாட்களாக அவனோடு மனம் ஒன்றியே வாழத் தொடங்கி இருந்தாள் அவள். திருவின் குணங்களை மெல்ல மெல்ல கிரகித்து கொண்டு அவனை நேசிக்க தொடங்கி இருந்தது அவள் மனது.

                  அப்படிப்பட்ட நேரத்தில் இந்த சண்டைகள், கோபங்கள் இவையெல்லாம் தாங்க முடியவில்லை அவளால். அதுவும் திரு சொன்ன”உன்னை கல்யாணமே பண்ணி இருக்கக்கூடாது” அவளை நிம்மதியாக விடவில்லை.

                  அழுவதே பிடிக்காது.. அழமாட்டேன் என்று நிமிர்ந்து நிற்பவள் இன்று முதல் முறையாக மதியத்திலிருந்து ஓயாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். மதியம் அவளின் கண்ணீர் அவள் அன்னையின் மீது கொண்டிருந்த பாசத்தின் வெளிப்பாடு என்றால், இப்போதைய அவளின் கண்ணீர் திருவின் மீது முளைத்திருந்த திடீர் காதலின் வெளிப்பாடு.

                  இரண்டுமே இரண்டு விதமான வலி… ஆனால் திருவின் வார்த்தைகள் தன்னை இத்தனை வீரியத்துடன் தாக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாள் துர்கா. அழுது கொண்டே அமர்ந்திருந்தவள் எப்போதோ அயர்ந்தாள் என்று தெரியாமல் அப்படியே தரையில் அமர்ந்து சோஃபாவில் தலையை சாய்த்து உறங்கி இருந்தாள்.

                            திரு கோபமாக வெளியே வந்து விட்டாலும் எங்கும் செல்ல மனம் வரவில்லை அவனுக்கு. அவனின் இருப்பிடமான மொட்டைமாடிக்கு வந்திருக்க அங்கிருந்த அறையில் பூட்டு தொங்கி கொண்டிருந்தது. அதை பார்த்து ஏளனமாக சிரித்துக் கொண்டவன் அந்த வெறும் தரையில், இருட்டில் கண்களை மூடிக்கொண்டு விழுந்து விட்டான்.

                 அவன் அங்கிருப்பது யாருக்கும் தெரியாதவாறு இருட்டு அவனை முழுதாக மறைத்திருக்க, அவன் மனதில் துர்கா தான் ஓடிக் கொண்டிருந்தாள். எப்படியும் அழுது கொண்டிருப்பாள் என்று தோன்றினாலும், எழுந்து சென்று எந்த சமாதானமும் செய்வதாக இல்லை அவன்.

                அவனின் பொறுமை இன்று எல்லை மீறி இருந்தது. அவள் வரமாட்டாள் என்று அத்தனை நேரமும் கனன்று கொண்டிருந்தவன் அவள் வந்துவிட்ட நிம்மதியில் அவன் மனதில் இருந்த அனைத்தையும் மொத்தமாக கொட்டி இருந்தான். அவள் கண்ணீர் தனக்கானது என்று தெரிந்தாலும் அதற்காக மகிழ்ச்சியடையவே முடியவில்லை அவனால்.

                     அவளின் கண்ணீர் நிச்சயம் அவனுக்கு வலி கொடுத்தது. ஆனால் அதற்காக அவள் பேச்சையும் பொறுத்து கொள்ள முடியவில்லை. நிச்சயம் அவளை விட்டுவிடும் எண்ணமில்லை அவனுக்கு. ஆனால் அவளின் வார்த்தைகளை இதுவரை பொறுத்துக்க கொள்ள முடியும் தன்னால் என்ற கேள்வி இருந்தது அவனுள்.

                      அவள் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் நிச்சயம் தங்கள் வாழ்வு நரகமாகி விடும் என்பது தெளிவாக தெரிய, அவளை சரி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன். அதன் பொருட்டே இப்போதும் அவளிடம் கடினமாக பேசிவிட்டு வந்திருக்க, ஆனால் எதையும் செய்து முடித்த திருப்தி இல்லை.

                      நிச்சயம் அவளை வருத்தப்படுத்திவிட்ட வலி மட்டுமே அவனிடம் மிஞ்சி இருந்தது.

                        இருவருக்கும் இருவேறு விதமாக கழிந்த அந்த இரவு ஒரு வழியாக முடிய, இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்தவன் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து கீழே வந்தான். கதவு அவன் சென்றபோது எப்படி இருந்ததோ அப்படியே இருக்க, துர்கா ஹாலில் சோஃபாவில் தலையை சாய்ந்திருந்தாள்.

              அவளின் நிலை உறுத்தினாலும், கண்டு கொள்ளாமல் அறைக்குள் நுழைந்தவன் குளித்து உடையை மாற்றிக் கொண்டு கிளம்பி விட்டான் தன் மார்கெட்டிற்கு. தசெல்லும் முன்பு துர்காவின் அருகில் நின்று சில நொடிகள் அவளையே அவன் பார்த்திருந்து அவன் மட்டுமே அறிந்த ரகசியம்.

                 அவள் அவனுக்காக கொண்டு வந்திருந்த சாப்பாட்டு கூடையும் டேபிளில் இருக்க, இவ சாப்பிட்டு இருப்பாளா ? இல்லையா? என்று தோன்றியது அவனுக்கு. ஆனால் அதற்காக தன்னையே கடிந்து கொண்டவன் “ஆமாடா.. நீ இப்படியே உருகிட்டு இரு.. அவ உன்னை மதிக்கவே மாட்டா..” என்று சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான்.

Advertisement