Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 15

 

                               துர்கா அழைக்கவும் ஒரு புன்னகையுடன் தான் திரு அழைப்பை ஏற்றான். ஏதோ கேட்கப்போகிறாள் என்று அவன் நினைக்க, அவள் கண்ணீருடன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாஹே ஏற்கவே முடியவில்லை அவனால்.

 

                             வள்ளி அவளிடம் கூறாமல் இங்கு வேலைக்கு வந்திருப்பார் என்று அவன் யோசிக்கவே இல்லையே. வள்ளியின் மீது கோபமாக வந்தாலும், யாரிடம் கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது என்று நினைத்துக் கொண்டவன் வள்ளியை தேடிச் சென்றான்.

 

                               அவர் முன் நின்றவன்நீங்க இங்க வேலைக்கு வர்றது உங்க பொண்ணுக்கு தெரியுமா வள்ளிம்மா.. சொல்லிட்டீங்களா..” என்று கேட்க

 

                               திரு திருவென முழித்தார் வள்ளி. என்ன பதில் சொல்வார் அவர். திரு மீண்டும் அழுத்தி கேட்கவும், இல்லை என்பதை போல் தலையசைத்தார் அவர். அவரின் முகம் பார்க்கவே பாவமாக இருக்க அவரையும் ஒன்றும் சொல்ல முடியவில்லை அவனால்.

 

                         “ஏன் வள்ளிம்மா இப்படி செஞ்சீங்க.. அவகிட்ட சொல்றதுக்கு என்ன..” என்று திரு கேட்க

 

           “சொன்னா விடமாட்டா தம்பி.. எனக்கு அந்த வீட்லயே இருக்கறது வெறிச்சுன்னு இருக்கு.. அவ நான் இங்கே ரொம்ப வேலை பார்க்குறேன் ன்னு நினைச்சு போக வேண்டாமா ன்னு சொல்லிடுவா. அதான் சொல்லாம விட்டுட்டேன்..” என்று பொறுமையாகவே கூற

 

                      “கிளம்புங்க..” என்று விட்டு முன்னால் நடக்க ஆரம்பித்தான் திரு. வள்ளிக்கு புரியவே இல்லை. இவன் வெளியே போக சொல்றானா?? என்று பரிதாபமாக பார்த்தார் அவர்.

 

                        அவர் உடன் வராமல் போகவும் திரு திரும்பி பார்த்தவன்வாங்க வள்ளிம்மாநீங்க இழுத்து வச்ச வில்லங்கம் அங்கே கைகால் முளைச்சு உக்காந்திட்டு இருக்கு. வாங்க..” என்று அவரை கூப்பிட்டவன் அவரையும் வண்டியில் ஏற்றுக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றான்.

 

                         அவன் வீட்டு வாசலில் பூட்டு தொங்கி கொண்டிருக்க, வண்டியை விட்டு இறங்கவே இல்லை அவன். அப்படியே வண்டியை திருப்பி கொண்டு வந்து வள்ளியின் வீட்டு வாசலில் நிறுத்தினான். வள்ளி கேள்வியாக பார்க்கவும், ” நீங்க வேலைக்கு வர்ற விஷயம் அவளுக்கு தெரிஞ்சிடுச்சு வள்ளிம்மா.. என்கிட்டே போன்ல கேட்டா.. அதான் உங்களை கூட்டிட்டு வந்தேன்.. வாங்க..” என்று அவன் அழைத்து செல்ல

 

                        “இங்க ஏன் வந்து உட்கார்ந்து இருக்கா..” என்று யோசித்துக் கொண்டே தான் வள்ளி பின்னால் நடந்தார். இவர்கள் வீட்டிற்குள் நுழைய துர்கா உள்ளறையில் கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள். பார்வை சுவரையே வெறிக்க இவர்களை திரும்பியும் பார்க்கவில்லை அவள்.

 

                       வள்ளி தான் முதலில் அவள் அருகில் சென்றார். “துர்காம்மா..” என்று அவர் அவள் கையை பிடிக்க, பட்டென்று கையை தட்டிவிட்டாள் அவள்.

 

                       வள்ளி மீண்டும்துர்கா.. அம்மா சொல்றதை கேளுடா.. அம்மா வேணும் ன்னு சொல்லாம இல்ல. சொன்னா நீ கோபப்படுவியோ ன்னு சொல்லாம விட்டுட்டேன்டா.. நான் அங்கே பெருசா எந்த வேலையும் செய்யுறது இல்ல துர்கா..” என்று அவர் பொறுமையாக எடுத்துக் கூற

 

                       அப்போதுதான் முகத்தை நிமிர்த்தி அவரை பார்த்தாள் துர்கா. திருவிடம் பேசிவிட்டு வைத்ததில் இருந்து அழுது கொண்டே தான் இருந்தாள் அவள். முகம் அழுததில் சிவந்து போயிருக்க, பார்க்கவே ஏதோ போல இருந்தாள். திருவுக்கு சகிக்கவே முடியவில்லை அவளின் அழுகையை.

 

                     “இப்போ எதுக்கு அழுதிட்டு இருக்கா..” என்று கோபம்தான் வந்தது அவனுக்கு. வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவன் வேடிக்கை பார்க்க, வள்ளியின் முகத்தை பார்க்காமல் வேறு புறம் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.

 

                   வள்ளி மக்களிடம் கெஞ்சி கொண்டிருக்க துர்காவுக்கு தன்மீதே கோபமாக வந்தது. திருமணம் முடிந்ததும் எல்லா பெண்களையும் போல கணவன், குடும்பம் என்று மாறிவிட்டேனா, என் அன்னையை பற்றி நான் யோசிக்கவே இல்லையேஎன்னை மகளா பெத்ததுக்கு இந்த வயசுல அதுவும் உடம்பு முடியாம இருந்தும் வேலைக்கு போறாங்களே..” என்று அத்தனை வருத்தமாக இருந்தது அவளுக்கு.

 

                      இந்த கல்யாணம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் என் அம்மகூடவே இருந்து இருப்பேனே.. கடவுளே என்னை ஏன் பொண்ணா பொறக்க வச்ச.. பையனா இருந்திருந்தா கல்யாணம் செஞ்சிக்கிட்டாலும் என் அம்மாவை கூடவே வச்சி பார்த்திருப்பேன்ல..” என்று ஏதேதோ எண்ணி எதற்கென்று புரிந்தும் புரியாமலும் அபப்டி ஒரு அழுகை.

 

                         கூடவே அன்னையை எட்டிக்கூட பார்க்காமல் இருந்த தன் மடத்தனத்தையும் எண்ணி குற்ற உணர்ச்சியாக இருந்தது அவளுக்கு. அவளின் நுண்ணுணர்வுகள் அவளால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியவை. அவள் தாயின் செயல் அவளுக்கு தான் இருந்தும் ஒரு பயனுமில்லையே என்ற எண்ணத்தை தந்து விட்டிருக்க அதன் வெளிப்பாடே இந்த கண்ணீர்

 

                         அவள் அழுது கொண்டே இருக்க வள்ளி மகளை நெருங்கி அவள் கண்களை துடைக்க முற்பட, அவர் கையை கோபமாக தட்டிவிட்டாள் மகள். அவரை முறைத்தவள்நான் எப்படி போனா உனக்கென்னநான் வேண்டாம்ன்னு தான சொல்லாம கொள்ளாம வேலைக்கு போனநான் உன்னை பார்த்துக்க மாட்டேன்னு நினச்சு தான போன.. இப்போ ஏன் என் பக்கத்துல உக்காந்திட்டு இருக்க. எழுந்து போ.. இது உன் வேலை நேரமில்ல.. உன் முதலாளி சம்பளம் கொடுக்காம போய்ட போறாரு.. எழுந்து போமா..” என்று கத்தியவள் கடைசியில் அழுதுவிட்டாள்.

 

                          திருவுக்கு அவள் சின்ன விஷயத்தை பெரிதாக்குகிறாள் என்ற எண்ணம் தான். வள்ளியின் உடல்நிலையை நினைத்துப் பார்த்தவன்அவங்களை வேற அழ வச்சிட்டு இருக்காளே..” என்று தான் நினைத்தான். துர்காவிடம் பேச எண்ணி அவளை நெருங்கியவன்துர்கா..” என்று அழைக்க

 

                   “நீங்க பேசாதீங்கஇதுவரைக்கும் இவங்க கடைக்கு வர்றதை என்கிட்டே சொல்லணும் ன்னு ஒருநாள் கூட தோணவே இல்லைல உங்களுக்குஎன்கூடவே இருக்கீங்க.. ஆனா என்கிட்டே சொல்ல முடியல…” என்று அவனையும் துர்கா முறைக்க, திரு அதோடு விட்டிருக்கலாம்.

 

                   ஆனால் அவனோஏய்.. சும்மா பேசினதையே பேசிட்டு இருப்பியாஉனக்கு புரியுதா இல்லையாசின்ன விஷயம் இது.. எனக்கு தெரியாது இவங்க உன்கிட்ட சொல்லாதது..” என்று அவனும் கத்த

 

                 “சின்ன விஷயமாஎது சின்ன விஷயம்இவங்க வேலைக்கு வர்றது சின்ன விஷயமா ??? அதுவும் அவங்க உடம்பு இருக்க நிலமைல அவங்க உங்க கடைக்கு வந்தே ஆகணுமா. நீங்க ஏன் இவங்களுக்கு புரிஞ்சிகிட்டு வர்றிங்க..

 

                   “நீங்க தான் இவங்களை வேலைக்கு வர சொன்னிங்களா.. ஏன் உங்க கடைக்கு வேற யாரும் கிடைக்கலையாஎன் அம்மாவை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு. நான் சொன்னப்பவே அவங்களை வேலையை விட்டு அனுப்பி இருந்தா, அவங்க உடம்பு இந்த நிலைமைக்கு வந்தே இருக்காது. அப்பவும் உங்களுக்கு உங்க கடை வேலை தான் முக்கியமா இருந்தது. இப்போவும் அப்படிதான் இருக்கு..” என்று துர்கா கத்தும்போதே பேச்சின் திசையை ஊகித்துவிட்ட வள்ளி அதை வளரவிட்டு விரும்பாதவராக துர்காவை தடுக்கப் பார்த்தார்.

 

                    ஆனால் அவளோ அவரையும் விட்டு வைக்காமல் விளாசினாள். “ஏன் மருமகனை சொன்னதும், ரொம்ப வருத்தமா இருக்கா உனக்குஅப்படி என்ன என்னைவிட இவர் முக்கியமா போய்ட்டாரு.. எப்போ பார்த்தாலும் இதை பேசாத, அதை பேசாத.. திருவை எதுவும் சொல்லாதஎத்தனை கண்டிஷன் போட்டமா நீ..”

 

                     “அத்தனையும் கேட்டேன்ல.. கடைசியா நீ இவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும் ன்னு சொன்னப்ப கூட உனக்காக கழுத்தை நீட்டினேன்ல.. அப்பவும் என்னை வீட்டுக்கு வர வேண்டாம் ன்னு சொல்லிட்ட.. நான் என்ன இவரை லவ் பண்ணியா இழுத்துட்டு ஓடிட்டேன்.. வீட்டுக்கு வராத ன்னு சொல்றதுக்கு.. ஆனா நான் அதைக்கூட உன்கிட்ட கேட்கல.. நீ சொன்ன ஒரே வார்த்தைக்காக நான் எல்லாத்தையும் செஞ்சேன்ல..

 

                       “ஆனா நீ என்ன பண்ணி இருக்க.. அப்படி என்னமா உனக்கு வேலைக்கு போயே ஆகணும் ன்னு கட்டாயம்.. நாந்தான் சொன்னேனே கல்யாணம் வேண்டாம் உன்கூடவே இருந்து பார்த்துக்கறேன் ன்னு, என் பேச்சை கேட்காம கல்யாணம் பண்ணி வச்சகல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கும் போக விடலஇப்போ நீயே வேலைக்கும் போற.. அப்போ நான் எதுக்கு

 

                    “நான் உனக்கு பொறக்காமயே இருந்து இருக்கலாம்லஎன்னை இப்படி முடக்கி உட்கார வச்சிட்டு நீ வேலைக்கு போவ.. இவர் அதை என்கிட்டே சொல்லாம கூட இருப்பாரு.. அப்போ நான் எதுக்கு?? ” என்று அழுதாள் அவள்.

 

                     வள்ளிக்கு அவள் சொல்வது அத்தனையும் புரிந்தாலும், திருவை நினைத்தே அதிக கவலையாக இருந்தது. இந்த பெண் முட்டாள்தனமாக இவன் எதிரில் இப்படியெல்லாம் பேசி வைக்கிறாளே என்று ஆயாசமாக இருந்தது அவருக்கு. திரு என்ன சொல்வானோ என்று பயந்தவராக கையை பிசைந்து கொண்டு நின்றார் அவர்.

 

                      ஆனால் திரு அதற்கெல்லாம் முன்பாகவே உடைந்திருந்தான். துர்கா பேசிய வார்த்தைகள் அவனை வதைத்திருந்தது. துர்காவின் குற்றச்சாட்டுகள் முன்னர் எப்படியோ ஆனால் இப்போது அவனின் மனைவியாக ஏற்றுக் கொண்டு, அவளுடன் வாழ்வை தொடங்கி இருந்த இந்த நேரத்தில் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அவனால்.

 

                     என்ன வாழ்க்கை நடத்தினாள் இவள் என்னுடன் என்று யோசித்தவனுக்கு வருத்தமே மிஞ்சியது. அவளை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியது தவறுதான் என்றாலும் வேண்டுமென்றே அதை செய்யவில்லையே.. அவளுக்காகவும் தான் அவன் அப்படி செய்தது.

 

                      ஆனால் இத்தனை நாட்கள் கழித்து அதை அவள் இப்போது சொல்லிக்காட்டியது அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஏற்கனவே முன்கோபியான அவனுக்கு மனைவியின் சொற்கள் தீயாக சுட்டது.. இன்னும் எத்தனை நாளுக்கு இதையே சொல்லுவாள் என்று எண்ணிக் கொண்டவன் அவளை நேராக பார்க்கவே இல்லை.

 

                    அத்தனை கோபம்.. அவள் நிலை புரிந்தாலும் தன்னை புரிந்து கொள்ளாத அவள் செய்கையில் விளைந்த கோபம்.. தன்னை நம்பாத அவளை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று என்னும் அளவுக்கு கோபம்கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபம்அவள் அழும் சத்தம் கேட்க கேட்க கோபம் இன்னுமின்னும் அதிகமாகத்தான் ஆனது.

 

                    துர்காவோ அவனை கவனிக்கவே இல்லை. ஆனால் அவளுக்கு பதிலாக வள்ளிதான் பயத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாரே. இப்போது அவன் திரும்பவும் அவர் கெஞ்சலாக அவன் முகம் பார்க்க, அவரை கண்டுகொள்ளாதவன்நான் கடைக்கு கிளம்பனும்.. கிளம்பு.. உன்னையும் வீட்ல விட்டுட்டு போறேன்… ” என்று அழைக்க வள்ளி அவனுடன் செல்லுமாறு கையை அசைத்தார்.

 

                துர்காவோ அவனை முறைத்துஎனக்கு வழி தெரியும்என்று வீமபாக உரைத்து அமர்ந்துவிட்டாள். திருவுக்கு பொறுமை போய்க்கொண்டு இருந்தது. அவள் இந்த தொனியில் பேசப்பேச அவன் அவளைவிட்டு விலகிக் கொண்டிருக்கிறான் என்று துர்கா அறியவே இல்லை.

 

               திரு மீண்டும்உனக்கு வழி தெரியும் ன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. நான் கேட்டது இப்போ என்கூட வர்றியா?? இல்லையா??” என்று அழுத்தமாக கேட்க

 

                 “நான் வரல.” என்றவள் மேலே ஏதோ பேசப்போக திரு முந்திக் கொண்டான். “சரி நீ இங்கேயே இரு.. நான் இனி இங்க வரமாட்டேன்என்றுவிட்டு வேகமாக நடந்துவிட்டான் அவன்

 

                  துர்காவுக்கு அப்போதுதான் அவன் பேச்சின் தொனி உரைத்தது. அவள் வழக்கமாகி வீட்டில் வாயடிப்பதை போல் அவனிடம் பேசி வைத்திருக்க, வள்ளியின் முன்னால் அப்படி பேசியது அவனை சீண்டி விட்டிருந்தது.

 

                 துர்கா சுதாரிப்பதற்குள் அவன் கிளம்பிவிட, ஓய்ந்து போய் அமர்ந்துவிட்டாள் அவள். திருவை காயப்படுத்தி விட்டது புரிந்தாலும், எதுவும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்க, வள்ளி மகளை முறைத்து கொண்டிருந்தார்.

 

                 துர்கா அவர் பார்வையை உணரவே இல்லை.அவள் திரு கிளம்பி சென்ற நொடியிலேயே இருந்தாள் இன்னும். தன்னை விட்டு சென்று விட்டானா ?? என்று தோன்ற, தன்னையே நொந்து கொண்டவள் அழுது கொண்டே அமர்ந்திருந்தாள்.

 

                   வள்ளிக்கு மகளை அப்படி பார்க்கவே முடியவில்லை. அவளை நெருங்கி அமர்ந்தவர் அவள் கண்களை துடைத்துவிட, அவரை விட்டு விலகி அமர்ந்தவள் சுவற்றில் தலையை சாய்த்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

                   துர்காவின் வீட்டிலிருந்து புறப்பட்ட திரு கடைக்கு செல்லவே இல்லை. அவன் இருக்கும் மனநிலையில் யார் முகத்தையும் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை அவனுக்கு. வீட்டிற்கு வந்துவிட்டவன் அமைதியாக சோஃபாவில் சரிந்து கொண்டான்.

 

                    மனைவி பேசிய வார்த்தைகள் காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது. பிடிக்காத கல்யாணம் என்று எத்தனை முறை சொல்லிவிட்டாள் என்று யோசித்தவனுக்கு ஆத்திரம்தான் மிஞ்சியது. அதுவும் இந்த கடைசி இரண்டு நாட்களாக தன்னுடன் அப்படி வாழ்ந்துவிட்ட பிறகும் இப்படி ஒரு பேச்சு. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்.

 

                      இவள் பின்னாடியே போவதால் என்னை கேவலமாக நினைத்துவிட்டாளாஇவள் என்ன செய்தாலும் எனக்கு சூடு சொரணையே வராது என்று நினைத்துவிட்டாள் போல என்று கனன்று கொண்டிருந்தான் அவன்.

 

                       எதுவாக இருந்தாலும் இனி அவளே முடிவு பண்ணட்டும்.. நான் இனி அவ விஷயத்துல எதுவும் செய்றதா இல்ல.. ஆனா இந்த பேச்சுக்கு அவ பதில் சொல்லியே ஆகணும் என்பதே ஓடிக் கொண்டிருந்தது அவன் மனதில்.

 

                    அவள் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகவே தோன்றியது திருவுக்கு. அதுவும் அவள் அன்னையின் முன்னால் வைத்து அப்படி ஒரு பேச்சு. திரு அத்தனை சாதாரணமாக போய்விட்டேனா என்று ஒரு எண்ணம் அவனுக்குள் வந்து அமர்ந்து கொண்டது.

 

                    எங்குமே அவன் பெயருக்கு கிடைக்கும் மரியாதை தனிதான். திரு என்று சொன்னாலே அத்தனைப் பேரும் மரியாதையாக பார்க்க, இவள் தன்னை மீண்டும் மீண்டும் அசிங்கப்படுத்துகிறாள் என்று யோசிக்க தொடங்கிவிட்டான் அவன்.

 

                   எப்போது இந்த எண்ணம் அவனுக்குள் உதித்ததோ அப்போதே துர்காவின் மேல் ஒன்றன்பின் ஒன்றாக குற்றம் சுமத்த தொடங்கிவிட்டது மனது. அவள் செயல்கள் ஒவ்வொன்றும் வரிசையாக நினைவு வர, அவள் அம்மாவிடம் பேசியதும் நினைவு வந்தது.

 

                      “அப்போ அவங்க அம்மா வரவேண்டாம் ன்னு சொல்லிட்டதால என்னோட வாழ முடிவு பண்ணாளா.. நான் இவளுக்கு எதுவுமே இல்லையா?? என்று யோசித்தவன்இவ என்ன பெரிய இவ.. நான் இவ பின்னாடியே போயிட்டே இருக்கணுமாஎன்ன ஆனாலும் சரி.. அவ எனக்கு பதில் சொல்லியே ஆகணும் இந்த முறை..” என்று நினைத்துக் கொண்டவன் மனது அடங்கவே இல்லை.

                        இருவருமே ஊணர்வுகளின் பிடியில் சிக்கிக்கொண்டு அந்தநேர கோபத்தில் எதுவோ பேசி வைத்திருக்க, அது அவர்களை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருந்தது. இப்போது திருவின் மனதை ஈகோ முழுமையாக ஆக்கிரமித்து இருக்க, இனி இவனை எப்படி வெல்லப்போகிறாளோ அவள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement