Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 12

 

                                      அடுத்த நாள் காலை எட்டு மணிக்குதான் துர்காவின் நாள் விடிந்தது. இரவு தாமதமாக உறங்கி இருந்ததால் காலையிலும் அவள் தாமதமாகவே எழுந்து கொள்ள, குளியல் அறையில் இருந்த திருவின் உடைகள் அவன் வீடிற்கு வந்து சென்றதை உறுதிபடுத்தியது.

 

                                        எப்போ வந்தாங்க? என்று நினைத்துக் கொண்டே அவள் குளித்து முடித்து அன்றாட வேலைகளை தொடங்க, “பார்க்கக்கூட இல்ல. காலையிலயும் அப்படியே கிளம்பி போயாச்சு. அக்கறையே கிடையாது இவனுக்கு..” என்று வாய் அதுபாட்டிற்கு திருவை வசைபாடிக் கொண்டிருந்தது.

 

                                      திட்டிக் கொண்டே சமைத்து முடித்து அமர்ந்தவள் டிவியை பார்த்துக் கொண்டிருக்க, திருவும் பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துவிட்டான். சாப்பிட்டு முடித்தவன் தானாகவேநேத்து ரொம்ப லேட் ஆகிடுச்சு துர்கா. அதான் அப்படியே போய் படுத்துட்டேன்.” என்று கூறிவிட

 

                                  துர்கா பெரிதாக எடுக்கவில்லை. அவன் வேலை தான் முக்கியம் என்று நினைத்தவள்எப்போ வந்திங்க நைட். வண்டி சரியாகிடுச்சா..” என்று கேட்க

 

                                 “அதெல்லாம் ராத்திரியே சரி பண்ணியாச்சு. அந்த லோட் இன்னொருத்தரோடது துர்கா. நம்மள நம்பி கொடுத்து இருக்காங்க. அதுவும் எல்லாம் காய்கறி, பழங்கள். நம்மோடது இல்லேன்னாலும், அவங்களுக்கும் நஷ்டம் தானேஎன்று அவள் கேட்காமலே நேற்றைய விவரங்களை கூறிக் கொண்டிருந்தான் திரு.

 

                                “என்ன பண்ணீங்க.. லோட் அனுப்பி விட்டுடீங்களாஎன்று துர்கா கேட்க

 

               “அதெல்லாம் நைட்டே வேற ஒருத்தரோட வண்டியை பிடிச்சு அனுப்பி வச்சிட்டேன். சரத் நான் பார்த்துக்கறேன் சொன்னான்.. ஆனா சின்னப்பையன் அவனை எப்படி தனியா விட்டு வர முடியும். அதான் கூடவே இருக்க வேண்டியதா போச்சு..” என்று கூறிக் கொண்டிருந்தான் திரு.

 

                          அவன் முகத்தை பார்த்தவள்அதுவும் சரிதான்.. நைட் சாப்பிட்டிங்களா..” என்று கேட்க

 

             “எங்கே.. இருந்த பிரச்சனையில சாப்பாடு ஞாபகமே வரல. சரி இங்க வந்து சாப்பிட்டுக்கலாம் ன்னு வந்தா சரத் வீட்டுக்கு போறேன்ன்னு கிளம்பிட்டான். அதான் நானும் வீட்டுக்கே வந்து படுத்துட்டேன்..” என்றான் சலிப்பாக

 

                     அவன் சலிப்பில்எப்போ வந்திங்க நைட்..” என்று அவள் மீண்டும் கேட்க

     

                 “12 மணி இருக்கும் துர்கா.. ” என்றான் திரு.

 

           “12 மணிக்கு வந்தவரு என்ன செஞ்சீங்க..” என்று அவள் கதை கேட்கும் பாவனையை காட்ட

       “ஏய்.. நான் என்ன கதையா சொல்றேன்.. ” என்று திருவும் பொங்கிவிட்டான்.

 

                  “சும்மா சொல்லுங்க.. என்ன செஞ்சீங்கஎன்று துர்கா மீண்டும் கேட்க

  “என்ன செஞ்சேன்.. வந்து கதவை பார்த்தா, என் பொண்டாட்டி பூட்டிட்டு தூங்கிட்டா.. அதுக்குமேல எழுப்பவும் மனசு வரல. அதான் திரும்பவும் மேலே போய் படுத்துட்டேன்.” என்று அவன் கடுப்புடன் கூறினான்.

 

                    “உங்க பொண்டாட்டி தூங்கிட்டு இருக்கா ன்னு எப்படி தெரிஞ்சுது உங்களுக்கு. காமெரா ஏதும் வச்சிருக்கீங்களா.. ” என்று துர்கா கேள்வியெழுப்ப

 

                “தூங்கவே இல்லையா.. அப்புறம் ஏண்டி கதவை சாத்தின..” என்று திரு முறைத்தான் அவளை.

 

          “சும்மா இருந்தவ கிட்ட அந்த சண்முகநாதன் கதையெல்லாம் சொல்லி பயமுறுத்தி வச்சா கதவை சாத்தாம என்ன செய்வாங்க. அதோட நீங்க என்ன எட்டு மணிக்கா வந்திங்க.. “

 

                “வீட்டுக்கு வந்தா ஒழுங்கா கதவை தட்டணும்.. அதை செய்யாம என்கிட்டே கோபப்படறாரு திரு சார்..” என்று துர்கா நக்கலாக கூற, திருவுக்குபாயசம் போச்சே… ” என்ற நினைப்புதான்.

 

                 அவன் முழித்து கொண்டிருக்க, துர்காவோ அவனை மேலும் வெறுப்பேற்ற என்றேஇதுல பாயசம் வேற.. கெட்டுப்போன பாயசம் அப்படியே இருக்கு கிட்சன்ல. இருங்க உங்க தலையிலேயே கொட்டுறேன்என்று கூறியவள் எழுந்து கிச்சனுக்கு சென்றாள்.

 

                    “அந்த பாயசத்தை எடுக்கத்தான் போறாளோ.. நிஜமாவே கொட்டிடுவாளா”  என்று திரு பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்க்கும்போதே கையில் இரண்டு டம்ளர்களுடன் வந்தாள் மனைவி.

 

                    வந்தவள் திருவிடம் டம்ளரை நீட்ட உள்ளே நிஜமாகவே பாயசம் இருந்தது. திரு துர்காவை பார்க்கநேத்து செஞ்சது.. கெட்டு எல்லாம் போகல.. நம்பி சாப்பிடலாம்..” என்று சிரித்தாள் துர்கா.

 

                    அந்த பாயசத்தை பார்த்தவனுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. தனக்காக காத்திருந்து இருக்கிறாள் என்ற எண்ணமே செய்த தவறை அதிகமாக்கி காட்டியது. அவன் வேண்டுமென்று எதுவும் செய்யவில்லை அவனின் சூழ்நிலை அப்படி அமைந்து இருந்தது. எல்லாம் புரிந்தாலும் அவளை ஏமாற்றி விட்டது பிடிக்கவே இல்லை அவனுக்கு.

                  

                       முதல் முறையாக மனைவியிடம்சாரி துர்கா.. ” என்று தயங்கி அவன் மன்னிப்பு கேட்க, துர்காவோ  “அட விடுங்க சார்.. இதெல்லாம் அரசியல்ல சாதாரணம் திரு சார். நான் உங்களுக்கு மறந்து போயிருக்கும் ன்னு நினைச்சேன். அப்படி இல்லாம நினைப்பு இருந்து இருக்கே.. அதுவே முன்னேற்றம் தான்.. ” என்று அவள் வாயடிக்க, மனைவியை முறைத்தான் அவன்.

 

                     பேச்சுக்கள் இப்படியே இனிமையாக செல்ல, இருவருமே அந்த நொடிகளை ரசித்துக் கொண்டனர். இரண்டு நாட்களுக்கு முன் திருவுடன் இப்படி வாயடித்து கொண்டிருப்போம் என்று நினைத்திருப்பாளா அவள்?? அவனின் அந்த முசுட்டு குணத்தை எண்ணி எத்தனை கலங்கி இருந்தாள் அவள்.

 

                    திருவுக்கும் மனதில் மகிழ்ச்சிதான் துர்காவை நினைத்து. முதல் நாள் அத்தனை சண்டையிட்டு இருந்தாளே. திருமணமே சரியானதா என்று அவனை யோசிக்க வைத்தவள் அல்லவா.. அப்படி இருக்க இன்று இந்த நொடிகளை எப்படி விரும்பாமல் இருப்பான் அவன்.

 

                      இவர்கள் பேசிக்கொண்டே இருந்தால் நேரமும் அப்படியே நின்று கொண்டு இருக்குமா என்ன?? நேரம் பதினொன்றை தொட, திருவுக்கு மார்க்கெட் ஞாபகம் வர அவசர அவசரமாக எழுந்து ஓடினான் அவன்.

 

                        அவன் கிளம்பியதும் துர்கா, தன் அன்னைக்கு அழைக்க வள்ளி அழைப்பை ஏற்றவர் வீட்டில் இருப்பது போலவே காட்டிக் கொண்டார் மகளிடம். அவர் மீண்டும் மார்கெட்டிற்கு செல்வது இன்னும் துர்காவுக்கு தெரியாது. அவளுக்கு தெரியாது என்பதும் திருவுக்கு தெரியாது. வள்ளி சொல்லி இருப்பார் என்று நினைத்து அவன் துர்காவிடம் சொல்லாமல் விட்டிருந்தான்.

 

                  ஆனால் வள்ளி மகள் அழைக்கும் நேரம் எல்லாம் எதையோ சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தார் அவளிடம். அவள் எப்போதுமே இரவில் அழைப்பதால் தப்பித்துக் கொண்டிருந்தார். இதோ இன்று காலையிலேயே மகள் அழைக்கவும், எப்படி ஏற்பது என்று முதலில் யோசித்தவர், அந்த கடையின் உள்பகுதிக்கு சென்று அழைப்பை ஏற்றிருந்தார்.

 

                           அப்போதும் வீட்டில் இருப்பதை போலவே அவர் பேச துர்காதான் அவரை கேள்விகளால் குடைந்து கொண்டிருந்தாள். என்ன செய்றமா?? சாப்பிட்டியா?? டேப்லெட் எல்லாம் கரெக்டா எடுக்கறியா?? என்று வரிசையாக கேட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

 

                        வள்ளியும் அவள் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்னவர்நீ என்ன செஞ்சிட்டு இருக்க துர்காம்மா..” என்று வாஞ்சையாக கேட்க, அன்னையின் குரலில் தென்பட்ட இளக்கத்தில் மனம் துள்ளியது துர்காவுக்கு.

 

                     “ஒன்னும் வேலை இல்லம்மா.. சும்மா தான் இருக்கேன்..” என்றவள் கூடவேம்மா.. வீட்டுக்கு வரவா .. உன்னை பார்க்கணும் போல இருக்கு..” ஏக்கமாக கேட்க

 

                    “என்னை பார்த்து பத்து வருஷமா ஆகுது.. முதல்ல உன் குடும்பத்தை பாரு. நானே வந்து உன்னை பார்க்குறேன்..” என்று கூறிவிட்டார் வள்ளி.

 

                      “ஏம்மா.. இப்படி பண்ற.. நான் உன்னை வந்து பார்த்திட்டு வந்திடுவேன். அங்கேயேவா இருக்க போறேன். ரொம்ப பண்ற மா நீஎன்று அவள் கோபிக்க

 

                          “நீ வரணும் ன்னா திருதம்பியோட வா. அவரே உன்னை கூட்டிட்டு வரட்டும். நீ தனியா எல்லாம் வர வேண்டாம்.. நான் நல்லாதான் இருக்கேன்.. என்னை பத்தி யோசிச்சிட்டு இருக்காத. நீ ஒழுங்கா இருந்தாலே நான் நல்லா இருப்பேன். அதை மட்டும் மனசுல வச்சுக்கோ துர்கா..” என்றார் இப்போதும்.

 

                       துர்கா கடுப்பானவள்நீ என்னவோ பண்ணு. என்மேல பாசமே இல்லல உனக்கு. கல்யாணம் பண்ணி துரத்தி விட்டுட்டு நிம்மதியா இருக்க நீ. போ.. ” என்று கத்திவிட்டு போனை வைத்துவிட்டாள் அவள்.

 

                       வள்ளிக்கு மகளின் மனநிலை புரிந்தாலும், அவள் முதலில் திருவுடன் ஒன்றி வாழட்டும் என்று தன்னை சமாதானப் படுத்தி கொண்டார். ஆம்.. அவர்தான் மகளிடம் தனியாக வீட்டுக்கு வரக்கூடாது என்று மிரட்டி வைத்திருந்தார். திருவுடன் தான் வரவேண்டும் என்று ஏற்கனவே கண்டிப்பாக அவளிடம் சொல்லி இருந்தவர் அவராக இருவரையும் அழைக்கவுமில்லை.

 

                        முதலில் அவர்களுக்குள் ஒரு புரிதல் வரட்டும். மற்றதை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவர் இருவரையும் இப்போதைக்கு தனித்து விடுவது தான் சரி என்று நினைத்தார். அவர் நினைப்புக்கு ஏற்றபடி நிகழ்வுகளும் நடந்து கொண்டிருந்தது என்றாலும் அவருக்கு தெரியாது அல்லவா.

 

                       மகளிடம் எப்போதுமே ஓரிரு வார்த்தைகளோடு தான் முடித்துக் கொள்கிறார் அலைபேசியில். நேரில் வருகிறேன் அன்று அவள் பலமுறை இந்த மூன்று நாட்களாக நச்சரித்து இருந்தபோதும், “திருகிட்ட கேளு.. கூட்டிட்டு வந்தா கிளம்பி வாஎன்று அவளை சமாளித்திருந்தார் வள்ளி.

 

                   மகள் இன்னும் முறுக்கி கொண்டு நிற்பாள் என்று நினைத்து வள்ளி இப்படி செய்து கொண்டிருக்க, பாவம் அந்த தாய்க்கு தெரியவில்லை. மகள் பாயசம் போடும் அளவுக்கு முன்னேறி இருக்கிறாள் என்று.

 

                 வீட்டில் இருந்த துர்காவோ தன் அன்னையை எண்ணி சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவர் நினைப்பது துர்காவுக்கும் புரிந்தே இருந்தது. திருவுடன் தான் வாழும் வாழ்க்கை தான் அவருக்கு தன் மீது நம்பிக்கை கொடுக்கும் என்று அறிந்தே இருந்தாள் அவள்.

 

              ஆனாலும் அவள் அன்னையின் இந்த திரு புராணங்களும், அவனின் மீதான பாசமும் லேசான புகைச்சலை தான் கொடுத்தது அவளுக்கு. “இந்த வள்ளி என் அம்மாவா, இவன் அம்மாவா.. ஓவரா தான் சப்போர்ட் பண்ணுது..” என்று மனதுக்கு செல்லமாக நொடித்துக் கொண்டாள் அவள்.

 

                 “நான் ஏதோ தப்பு பண்ண மாதிரி பில்ட் அப் வேற. இத்தனைக்கும் ஒரு லவ் கூட பண்ணல நான். என்னை பிடிச்சு இவங்களே கட்டி வச்சிட்டு, இப்போ என்னை வீட்டுக்கும் கூப்பிட மாட்டார்களாம். நீ கூப்பிடாம வர மாட்டேனே.. பார்க்கலாம்.” என்று மனதிற்குள் சபதமெடுத்து கொண்டிருந்தாள் துர்கா.

 

                   இவள் யோசனையையிலேயே அமர்ந்து இருக்க, நேரம் ஓடி இருந்தது இதற்குள். மதியத்துக்கு அமைக்கவே இல்லை என்பது அப்போதுதான் நினைவு வர வேகமாக கிச்சனுக்குள் நுழைந்தாள் அவள்.

                       வேகமாக சமைத்து முடித்தவள் திருவுக்காக காத்திருக்க, அவனும் நேரத்திற்கு வந்தவன் மதிய உணவு முடிந்ததும் ஏதோ அவசர வேலை இருப்பதாக கூறி வேகமாக கிளம்ப, அவனிடம் இருந்து வீட்டின் சாவியை வாங்கி கொண்டாள் அவள்.

 

                  அவன் கேட்டதற்குசாவி இருக்கவும் தானே நீங்க பாட்டுக்கு போய் தூங்குறீங்க.. என்கிட்டே இருக்கட்டும். வீட்டுக்கு வந்தா கதவை தட்டுங்க இனிமேஎன்று விட்டாள். திருவுக்கு அவளின் செயலில் புன்னகை வர, அந்த வீடு கட்டிய நாள் முதலாக தன் கையில் மட்டுமே வைத்து பழகி இருந்த அந்த வீட்டின் சாவியை மனைவியிடம் கொடுத்து விட்டான் அவன்.

 

                 ஏதோ மொத்தமாக வாழ்வை அவளிடம் ஒப்படைத்த உணர்வு அதற்கே. அவனின் வண்டி சாவியை பிரித்து எடுத்துக் கொண்டு மற்றதை அவளிடம் கொடுத்துவிட்டான். கையில் வாங்கியவள்இத்தனை சாவி எதுக்கு..” என்று கேட்க

 

                 “ஒவ்வொண்ணா திறந்து பாரு. எது வீட்டு சாவி ன்னு நீயே எடுத்துக்கோஎன்றுவிட்டு சிரித்துக் கொண்டே கிளம்பி இருந்தான்.

@@@@@@

                  இவர்கள் வாழ்வு மெல்ல மெல்ல நிகழ்காலத்தை இதுதான் என்று ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப அழகாக சுழலத் தொடங்கிய நேரம், அங்கே சண்முகநாதன் திருவை பழிதீர்க்க சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்திருந்தான். அவனால் துர்கா அவன் கையை விட்டு போனதை இன்னமும் நம்பவே முடியவில்லை.

 

                      ஆதரவில்லாத இரு பெண்கள் என்ன செய்து விட முடியும்? என்று துர்காவின் விஷயத்தில் ஆரம்பத்தில் சற்று மெத்தனமாக இருந்து விட்டான் அவன். அதுவும் அன்று கடைசியாக துர்கா அவனைத் தேடி வரவும் எல்லாம் முடிந்தது, அவள் தனக்குத்தான் என்று முடிவே செய்து விட்டான் அவன்.

 

                          அவளை கட்டாயப்படுத்தாமல் அவளாகவே தன்னை நெருங்கி வந்ததை எண்ணி அவன் கர்வமாக எண்ணமிட்டு கொண்டிருந்த நேரம்தான் திரு உள்ளே வந்தது. அப்போதும் பெரிதாக இருக்காது என்று தன்னை சமாதானம் செய்து கொண்டவன் திருவின் முகபாவனைகளில் சுதாரித்துக் கொண்டான்.

 

                        திருவின் பார்வை மாறுபாட்டை உணர்ந்தவன் இனி துர்காவை விடுவதில்லை என்று முடிவு செய்து அவளை தூக்க திட்டம் போட்டிருக்க, திரு அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. அன்று சண்முகநாதன் வீட்டிற்கு அவள் சென்று வந்தது தான், அவள் கடைசியாக தனியே வெளியே சென்றது.

 

                    அதன் பின் எப்போதும் அவள் திருவின் பார்வை வட்டத்தில் தான். எங்கு செல்வதாக இருந்தாலும் தேவா, சரத் உடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டவன் அவர்களை பின்தொடரவும் தனக்கு நம்பிக்கையான சிலரை ஏற்பாடு செய்திருந்தான். துர்காவும் பெரிதாக எங்கும் வெளியில் செல்லாததால் சண்முகநாதனால் அவளை நெருங்கவே முடியாமல் போனது.

 

                       திரு அதோடு நின்றுவிடாமல் அவளை அடுத்த ஒரே மாதத்தில் திருமணமும் செய்து கொள்ள, சண்முகநாதனின் பழிவெறி உச்சத்திற்கு சென்றிருந்தது. புதிதாக வந்திருந்த பெண் டிஎஸ்பி ஒருத்தி அவனது பழைய வரலாறுகளை தோண்டி எடுத்துக் கொண்டிருக்க, சரியாக திருவின் திருமண நேரத்தில் இவனது தலைக்கு குறி வைத்திருந்தார்கள் காவல் துறையினர்.

 

                        அந்த நேரத்தில் அவர்கள் கண்ணில் படாமல் உயிரை காப்பாற்றிக் கொள்வது ஒன்றே குறியாக ஓடிக் கொண்டிருந்தவனால் துர்காவின் திருமணத்தை ஏதும் செய்ய முடியாமல் போனது. இப்போது நிலைமை சற்றே சீராகவும் தன் வீட்டிற்கு மீண்டும் வந்திருந்தான் அவன்.

 

                      அங்கிருந்த அவன் அல்லக்கைகளோடு அவன் சரக்கடித்துக் கொண்டிருக்க, திருதுர்காவின் முகம் அவனை விடாமல் துரத்திக் கொண்டிருந்தது.

                    “அவன ஏதாவது செஞ்சே ஆகனும்டா.. அவன் அவளோட வாழவே கூடாதுரெண்டு பேரையும் தூக்கி காட்றேன். இந்த சண்முகநாதன் கிட்ட வச்சுக்கிட்டா என்ன ஆகும்ன்னு தெரியணும் அவனுக்குஎன்று அவன் விடாமல் புலம்பிக் கொண்டிருக்க, அவன் உடன் இருந்தவர்கள் அவனுக்கு சரக்கை ஊற்றிக் கொடுத்து மேலும் மேலும் அவனுக்கு போதை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

@@@@@

                                  அதே நேரத்தில் சென்னையில் உயர்மட்ட காவல் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்ட ஒரு ரகசிய கூட்டம் நடந்து கொண்டிருக்க, அங்கு ஏற்பாடு செய்திருந்த ப்ரொஜெக்டரில் சண்முகநாதனின் நிழற்படம் காட்சியாக ஓடிக் கொண்டிருந்தது.

                                அந்த ப்ரொஜெக்டரின் வலது புறம் நின்றிருந்த நங்கை, அவனின் படத்தை காட்டி இரண்டு நிமிடங்கள் பேசியவள், அடுத்ததாக சில படங்களையும் வரிசையாக ஓடவிட்டு அங்கிருந்த தன் மேலதிகாரிகளுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தாள்.

 

                                அவள் பேசிமுடித்து அவள் மேலதிகாரிகளிடம் ஒப்புதல் பெற, சண்முகநாதனோடு சேர்த்து இன்னும் சில பெரிய தலைகளின் புகைப்படங்களும் அந்த திரையில் தெரிய, அதில் ஒரு சிலரின் கழுத்தை சுற்றி சிகப்பு கோட்டால் வட்டமிட பட்டு இருந்தது.

 

                               ஒரு திருப்தியான அரை இன்ச் புன்னகையுடன் அவள் தன் இடத்தில் அமர்ந்து கொள்ள, அவளது உயரதிகாரிகள் சில கோப்புகளில் கையெழுத்திட்டு அவளிடம் நீட்ட, அதை வாங்கி கொண்டு வெளியில் நடந்தாள் அவள்.

@@@@@

                                                               ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக கழிந்த அந்த நாள் ஒருவழியாக இரவை எட்ட, திருவுக்காக தயாராக காத்திருந்தாள் அவன் மனைவி. இன்று வீட்டுக் கதவை கூட சாத்தி வைக்கவில்லை துர்கா. கணவன் வருகைக்காக அவள் கையை கட்டிக் கொண்டு சோஃபாவில் அமர்ந்து காத்திருந்தாள்.

 

                                   திருவும் அன்று மிகவும் நல்ல பிள்ளையாக ஒன்பது மணிக்கே கடையில் இருந்து ப்புறப்பட்டு இருந்தான். பல கற்பனைகளோடு கிளம்பி இருந்தவன் முகம் முழுவதும் புன்னகையுடன் தான் வண்டியை ஓட்டி கொண்டு இருந்தான். மனம் மனைவியை நினைத்துக் கொண்டிருக்க, அவள் நினைவுடன் வீட்டை அடைந்தவன் இரும்புக்கேட்டை திறந்து, உள்ளே நுழைந்தவன் மீண்டும் முன்போலவே பூட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைய

 

                                    அவன் மனைவி முதல்நாள் பார்த்தது போல் கால்களை தூக்கி சோஃபாவில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளின் கைகள் முழங்காலிட்டிருந்த கால்களை கட்டி கொண்டிருக்க, வாசலையே பார்த்திருந்தாள் அவள்.

 

                                 திரு அவள் முகத்தை பார்த்து புன்னகைத்தவன் அவளுக்கு முன்னால் இருந்த டீபாயை பார்க்க, அவன் புன்னகை உறைந்து அவன் முகம் ஏழு கோணலானது. அந்த டீபாயில் அவன் அவன் தேவைக்காக பதுக்கி வைத்திருந்த அவனின் பலவகை சோமபானங்களும் ஒருபுறம் அழகாக அடுக்கப்பட்டு இருக்க, பக்கத்தில் அவன் குடித்து முடித்து விட்டு வைத்திருந்த காலி பாட்டில்கள் மறுபுறம் அடுக்கப்பட்டு இருந்தது.

 

                

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

                             

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement