Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 11

 

                               சமையல் அறையில் சுழன்று கொண்டிருந்தாள் துர்கா. திருவுக்கான மதிய உணவு தயாராகி கொண்டிருக்க, அவன் வரும் நேரத்திற்குள் முடித்துவிட எண்ணி வேகமாக சமைத்துக் கொண்டிருந்தாள் மனையாள்.

 

                                இது கடைசி இரண்டு நாள் பழக்கம். அன்று துர்காவிற்காக வீடு வந்திருந்தவன் அவள் சமைத்து முடிக்கும் வரை காத்திருக்க, துர்காவும் வேண்டும் என்றே பொறுமையாக தான் சமைத்து முடித்திருந்தாள். காலை உணவாக சுடச்சுட நெய் மணக்கும் பொங்கலையும், சட்னியையும் பரிமாறியவள் அவன் உண்டு முடிக்கும்வரை அருகில் நின்று பரிமாற, திருவுக்கும் மகிழ்ச்சிதான்.

 

                             அவன் உண்டு முடித்தும் கூட சட்டென கிளம்பாமல் சோஃபாவில் அமர்ந்து இருக்க, துர்காவுக்கு பசிக்கவும் அவளும் உண்டு முடித்தாள். திரு அமர்ந்திருப்பதை பார்த்தவள் வந்து சோபாவில் அமர,

 

                     திருநான் கிளம்புறேன்.” என்றவன் அவள் தலையசைக்கவும்மதியம் ஒழுங்கா சமைச்சு சாப்பிடு..” என்று சேர்த்து கூறினான். காலையிலிருந்து உதித்திருந்த அந்த இலகுத்தன்மை அவனை அப்படி பேச வைத்தது.

                            ஆனால் மனைவியோஎன்ன சமைக்கணும்.. பொங்கலே இருக்கு,மதியத்துக்கு போதும்..” என்றுவிட

 

                            “நீ பொங்கலே சாப்பிடு.. எனக்கு சமைச்சு வை.. நான் வருவேன்..” என்று அவளிடம் கூறியவன் வாசலை நோக்கி நடக்ககண்டிப்பா வருவிங்களா..” என்று சந்தேகமாக கேட்டாள் துர்கா.

 

                       திரு அவளை திரும்பி நின்று முறைக்க, அவளோ  “நேத்து சமைச்சேன்…”  என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

 

                       அவள் சந்தேகம் புரியஎன் நம்பர் இருக்கா.” என்றான் திரு. அவள் இல்லை என்பது போல் தலையசைக்க, அவன் நம்பரை சொன்னவன்மதியம் ரெண்டு மணிக்குள்ள நான் வராம இருந்தா நீ கூப்பிடு..” என்று முடித்துவிட்டான்.

 

                     துர்கா அப்போதும் முறைப்பாகவே பார்த்து இருக்கமார்க்கெட்டுக்கு போய்ட்டா நிறைய வேலை இருக்கும். சாப்பாடெல்லாம் ஞாபகம் இருக்காது. பசிச்சாதான் வயிறு இருக்கறதே ஞாபகம் வரும். அதான் சொல்றேன்நீ சமையல் முடிச்சிட்டா கூப்பிடு.. நான் வந்துடுவேன்..” என்று கூறிவிட்டு கிளம்பினான்.

 

                   ஆனால் துர்கா அழைக்க வேண்டிய தேவை இல்லாமல் அவனே வந்து நின்றான் அன்று மதியம். துர்காவுக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சிதான். இதுதான் வாழ்க்கை என்று ஆனபின் ஏற்றுக்கொள்ள தானே அவளும் நினைத்தாள். இப்போது திரு தன் சிறுசிறு செயல்கள் மூலம் அவளை நிறைக்க, தன் எண்ணம் சரிதான் என்று லேசாக தோன்ற தொடங்கி இருந்தது பெண்ணுக்கு.

 

                    அடுத்த நாளும் காலையும், மதியமும் அவனாகவே வீட்டிற்கு வந்து சென்றிருந்தான். உணவின் போது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதும் பழக்கம் ஆகி இருக்க, திருவுக்கு அந்த பொழுதுகள் பிடிக்க ஆரம்பித்திருந்தது. துர்காவிடம் வாயடிப்பது அவனுக்கும் பிடித்திருக்க, விரும்பியே ஏற்க தொடங்கி இருந்தான்.

 

                      இன்றும் துர்கா சமையலை முடித்துவிட்டு ஒரு குளியல் போட்டு முடித்து அவனுக்காக காத்திருக்க, வந்து சேர்ந்தான் திரு. திருவுக்கு உணவைப் பரிமாறியவள் அவன் அருகிலேயே அமர்ந்து கொண்டாள். இதுவும் திரு பழக்கி விட்டது தான். அவன் சாப்பிடும் நேரமே அவளையும் சாப்பிட வைத்து விடுபவன் சிறிது நேரம் அந்த சோஃபாவில் அமர்ந்து இருப்பான்.

 

                   இந்த இரண்டு நாட்களாக துர்காவும் அந்த நேரம் உடன் இருந்தாள். அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரும். சில சமயம் முறைப்புகளும், நொடிப்புகளும் கூட வரும். இப்போதும் உண்டு முடிக்கவும் இருவரும் வந்து சோஃபாவில் அமர திருதான் தொடங்கினான்.

 

                     “வீட்லயே  இருக்க போரடிக்குதா..”  என்று கேட்டு வைக்க

 

         “ம்ம்ம்ம்..” என்றவள்நான் திரும்ப வேலைக்கு போகட்டுமா..” என்று எதிர்கேள்வி கேட்டாள்.

 

            அவளை முறைத்தவன்உன்கிட்ட கேட்டே இருக்கக்கூடாது…”  என்றுவிட,

 

            “அதான் கேட்டுட்டீங்களே.. அதோட, நீங்கதான வேலைக்கு போகவிடாம பண்ணீங்கஅப்போ உங்ககிட்ட தான் கேட்கணும்..” என்றவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

               “நீ வேலைக்கு போறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லஆனா நீ போய்த்தான் ஆகணும்ன்னு கட்டாயமும் இல்ல. நீ வேலைக்கு போறதும், போகாம இருக்கறதும் நிச்சயம் உன் முடிவு தான்.” என்றதும் அவள் ஆச்சரியமாக பார்க்க

 

                   “ஆனா, இப்போதைக்கு நீ எங்கேயும் போக வேண்டாம் ன்னு தான் சொல்வேன். சண்முகநாதன் சாதாரணமானவன் இல்ல. அத்தனை கேவலமும் அத்துப்படி அவனுக்கு. இவனுங்களுக்கெல்லாம் எதுவுமே தப்பு இல்ல.

 

                   “ஆனா. அப்படி ஏதாவது நடந்தா நீ தாங்குவியா.. அதுதான் கேள்வி.. அதுக்குதான் சொல்றேன் கொஞ்ச நாள் வீட்ல இரு. இந்த விஷயம் எல்லாம் கொஞ்சம் அடங்கட்டும். அப்புறம் பார்க்கலாம்.” என்று பொறுமையாக எடுத்துக் கூறவும், அவள் முகம் பயத்தை தான் காட்டியது.

 

                  அவள் முகத்தை பார்த்தவன்இந்தளவுக்கு பயம் வேண்டாம். கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்போம் ன்னு தான் சொல்றேன். நீ என் பொண்டாட்டி இப்போ. அதுக்கே உன்கிட்ட அவன் வரமாட்டான். ஆனா நாமளும் கொஞ்சம் பாதுகாப்பா இருப்போம் ன்னு தான் சொல்றேன்சும்மா பயந்துட்டு இருக்காத.” என்றவன் அவள் அசையாமல் போகவும், தன் கையை நீட்டி லேசாக அவள் கையை பற்றி அழுத்த, சட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள் அவள்.

 

                    அவள் பார்க்கவும் “என்ன.. என்ன ஆச்சு இப்போ..” என்று அவன் கேட்க,அவன் பிடித்திருந்த தன் கையை பார்த்தாள் அவள். “என்ன இப்போ கையை விடணுமா..” என்று நினைத்துக் கொண்டவன் பிடித்திருந்த கையை விடவே இல்லை. துர்கா அவன் கையை பார்த்தாலும் எதுவும் பேசாமலே இருக்க, வசதியாக போனது அவனுக்கு.

 

                  கையை பிடித்துக் கொண்டவன் “சும்மா யோசிச்சிட்டே இருக்காத. உன்னை பயமுறுத்த இதெல்லாம் சொல்லல. விடு” என்றவன் மீண்டும் அவள் கைகளில் அழுத்தம் கொடுக்க, சரி என்பதை போல் தலையசைத்தாள் அவள்.

                                 திரு அவளை பார்த்து சிரித்தவன்ஆக வாய் எல்லாம் என்கிட்டே மட்டும்தான்..” என்று நக்கலாக கூற, அவனை முறைத்தவள் எழுந்து கொண்டாள். அவள் அப்படி எழுந்தும் கூட அவள் கையை விடாதவன் அவளை மீண்டும் இழுத்து அமர்த்த அவளோகையை விடுங்கஎன்றாள் கோபமாக

 

               “இதோ இதைத்தான் சொன்னேன்..” என்று அவன் மீண்டும் நக்கலடிக்க

 

       “என்ன சொன்னிங்க.. உங்ககிட்ட தான் வாய் பேச முடியும். அவன் யாரு எனக்கு அவன்கிட்ட நான் ஏன் பேசணும்.” என்று முறைத்துக் கொண்டாள் அவள்.

 

                அவள் கோபத்தில் சிரித்தவன்அவன்கிட்ட பேச வேண்டாம் சரி. ஆனா நான் யாரு.. என்கிட்டே ஏன் பேசலாம்..” என்று அவளை கூர்மையாக கேள்வி கேட்க

 

                  “என்ன இப்போ.. நான் காதல் வசனம் பேசணுமாநீங்கதான் என் புருஷன்.. கண்கண்ட தெய்வம்.. அப்படி ஏதாச்சும் எதிர்பார்க்கிறிங்களாஎன்று நக்கலாக வினவினாள் துர்கா.

 

                  அவனோநீ பதில் சொல்லாம எஸ்கேப் ஆக இப்படி பேசுறதா நான் எடுத்துக்கலாமா ?”

 

           “நான் ஏன் எஸ்கேப் ஆகணும்.. நீங்க என் புருஷன் தான, அதை நான் இல்லன்னு சொல்லவே இல்லையே.. நான் ஏன் எஸ்கேப் ஆகணும்..”

 

               “அப்பப்போ சொல்லுங்க துர்கா மேடம்.. மறந்து போயிடுது..”

 

        “இது வேணா உண்மை…” என்று கிண்டல் குரலில் கூறினாள் அவள்.

 

           அவள் கிண்டலில்என்ன உண்மை..” என்று திரு வினவ

 

       “புருஷன்னு மறந்து தான் போயிட்டீங்க.. அதான் பொண்டாட்டி ஞாபகமே வர்றது இல்லையாம்..”

 

       “அதுல என் தப்பு என்ன இருக்கு.. மறந்து போகாம இருக்க நீ என்ன செஞ்சஎன்று சட்டென கேட்டுவிட்டான் திரு.

 

                        அவளும் தயங்காமல்ஆமாசெய்றாங்க. தினமும் நைட் காணாம போறவங்க எல்லாம் இதை பேசவே கூடாது..” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டாள். திருவுக்கு தான் பல்ப் வாங்கியது போல் இருந்தது.

 

                    “அடிப்பாவி.. இவதானே டைம் வேணும்ன்னு சொன்னா.. நானும் நல்ல புள்ளையா அடங்கி இருந்தா, இப்போ என்னையே குத்தம் சொல்றாஎன்று அவன் மனம் கூச்சலிட, எழுந்து கொண்டவன் அறைக்குள் நுழைந்தான்.

 

                   அவள் கையில் மொபைலோடு அமர்ந்து கொண்டிருக்க, என்ன பேசுவது என்று புரியவில்லை அவனுக்கு. வேகமாக வந்துவிட்டான், ஆனால் பேச வந்தது மறந்து போனது போல் இருந்தது. துர்கா அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் அமைதியில் மீண்டும் மொபைலை பார்க்க, அவள் அருகில் வந்தவன் அவள் கையிலிருந்த மொபைலை பிடுங்கி விட்டான்.

 

                      துர்காஎன்ன பண்றிங்க நீங்க.. போன் குடுங்க.” என்றவள் எழுந்து நிற்க

   

           “என்ன சொன்ன வெளியில..” என்று நின்றான் அவன்.

 

           “என்ன சொன்னேன். நீங்க செய்றத தானே சொன்னேன்.” என்று அவளும் சிலிர்த்து நிற்க

 

        “தூக்க மாத்திரையை கலந்து கொடுக்க பிளான் பண்ற பொண்டாட்டியை வச்சுக்கிட்டு, நான் வேற என்னம்மா பண்றது. நான் எதுவும் செய்ய போய் நீ பாயசத்தை போட்டுட்டா.. எனக்கும் உயிர் மேல ஆசை இருக்கும்ல..” என்று திரு பயந்தவனாக சொல்ல, துர்கா இப்போது அவனை நிஜமாகவே முறைத்தவள்

 

               “உங்களை எல்லாம் பாயசத்தை போட்டு கொன்னாலும் தப்பே இல்ல.. ” என்று கூறிவிட, அவள் உதடுகளை இருவிரல்களால் அழுந்த பற்றியவன் வலிக்குமாறு இழுக்க, அவன் கையில் பட்டென்று அடித்தாள் அவள்.

             அப்போதும் விடாமல் பற்றிக் கொண்டவன்பாயசம் போடுவியா.. நான் சொல்லி தரேன், எப்படி போடணும் ன்னுஎன்று இதழ்களை சுண்டிவிட

 

                கையால் வாயை தேய்த்து விட்டவள் அவனை முறைத்துக் கொண்டு நிற்க, அவள் இடக்கையை பின்னால் மடக்கி, அவளை தனக்கு முன்னால் திருப்பி நிறுத்தியவன் தங்களுக்கு முன்னால் இருந்த கண்ணாடியில் அவள் முகம் பார்க்க, அவள் சற்றுமுன் பேசியதெல்லாம் மறந்து போனவளாக நின்றிருந்தாள்.

 

                   அவளுக்கு இந்த நெருக்கம் ஏதோ செய்தது. கழுத்தில் உரசிய அவனது மூச்சுக்காற்று தங்கள் நிலையை சொல்ல, எங்கிருந்தோ வெட்கம் வேறு வேறு கேட்காமலே குடி வந்திருந்தது. அவன் கண் எடுக்காமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டு நிற்க, நிமிரவே முடியவில்லை அவளால்.

 

                      அங்கிருந்த கட்டிலையும், சுவற்றையும் மாறிமாறி பார்த்தவள் அவன் முகத்தை பார்க்காமல் ஆட்டம் காட்ட, அவனுக்கு அதெல்லாம் தேவையே இல்லை என்பது போல் அவள் முகம் காட்டும் பிம்பங்களை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான் திரு. அவள் கையை இழுக்க முயற்சி செய்ய, அவள் தோளில் தாடையை வைத்து அழுத்தியவன் வலது கையால் அவள் முகத்தை கண்ணாடியை நோக்கி திருப்ப, அவள் முகவாய் அவன் கைகளில் இருந்தது.

 

                        ஏதோ அவளை செல்லம் கொஞ்சுவது போல் கண்ணாடி அவர்கள் பிம்பத்தை பிரதிபலிக்க, அவள் பார்வையை வேறெங்கும் திருப்ப முடியாமல் கட்டி வைத்திருந்தான் திரு. சிறிது நேரம் அவளை அசைய விடாமல் சோதித்தவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக தன் இதழ்களை பதித்து விலகினான்.

 

                   அவள் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டே நிற்க, “நைட் பாயசம் ரெடி பண்ணி வச்சிடு. உன்னை முதல்ல சாப்பிட்டு அப்புறம் பாயசத்தை குடிச்சிடறேன். ” என்றவன் கண்களை சிமிட்ட, முகத்தை எங்கே மறைத்துக் கொள்வது என்றே தெரியவில்லை அவளுக்கு.

 

                    இவனிடம் வாய்க்கு வாய் பேசி வைத்தோமே என்று தன்னை நொந்து கொண்டவள் தலையை குனிந்து கொண்டு நிற்க, அவளை பார்த்து சிரித்தவன்ஹேய் துர்கா.. திடீர் ன்னு இப்படிலாம் அமைதியா மாறிடாத. எனக்கு நெஞ்சுவலி வந்திட போகுது..” என்று வம்பிழுக்க அப்போதும் நிமிரவில்லை அவள்.

 

                   அவளை அதற்கு மேல் சீண்டாமல்சரி.. நான் போகணும் இப்போ.. கிளம்புறேன். ” என்றவன்நைட் பாயசத்தை மறந்துடாத.” என்று மீண்டும் நினைவூட்ட

 

                  “ஐயோ…”என்று தலையில் அடித்துக் கொண்டவள்போங்க..” என்று அவனை துரத்த, சிரித்துக் கொண்டே கிளம்பினான் திரு.

                        திரு சென்றபிறகும் துர்காவின் புன்னகை குறையாமல் இருக்க, அந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டவள் மனம் முழுவதும் திருமயம் தான் அந்த நேரம். அவள் இரண்டு நாட்களாக பார்க்கும் இந்த திருவுக்கும், முன்பு அவள் அன்னையின் முதலாளியாக பார்த்திருந்த திருவுக்கும் ஆயிரம் வித்யாசங்கள் இருந்தது.

 

                  இரண்டு நாட்களாக அவன் அடிக்கடி தன் முகம் பார்ப்பதும், தனக்காக அவன் செய்யும் செயல்களும் அவளை திருவை நோக்கி ஈர்த்திருந்தது. அதன் காரணமாகவே பேச்சுக்கள் இலகுவாக வர, அந்த இலகுத்தன்மையில் வாயை விட்டிருந்தாள் அவள்.

 

                ஆனால் அவனின் இந்த உடனடி அதிரடி அவள் எதிர்பாராதது. அவள் பேசியதும் எழுந்து சென்று விடுவான் என்று அவள் நினைத்திருக்க, அவனோ பின்னோடு வந்ததும் இல்லாமல், தன் கையை பிடித்தது, கட்டி கொண்டு நின்றது, முத்தமிட்டது எல்லாம் நினைத்துக் கொண்டவள்திருடன்..” என்று திட்டிக் கொண்டாள் கணவனை.

 

                  அவன் முத்தமிட்ட இடங்கள் இன்னும் ஈரமாகவே இருப்பது போல் ஒரு குளிர்ச்சி அவள் கன்னங்களில். கன்னங்களை தேய்த்துவிட்டு கொண்டவள்பாயசம் வேணுமா. நைட் வரட்டும் பாய்சன் ரெடி பண்ணி வைக்குறேன்.” என்று சொல்லிக் கொண்டாள். அவள் எண்ணத்தில் அவளுக்கே சிரிப்பு வர, அன்று முழுவதுமே சிரித்துக் கொண்டே தான் சுற்றிக் கொண்டிருந்தாள் அவள்.

                        மார்கெட்டிற்கு வந்து சேர்ந்த திருவுக்கும் மனைவியின் நினைவு தான். அவளுக்கு தன்னை  புரிய வைக்க நிறையவே போராட வேண்டி இருக்கும் என்று அவன் நினைத்திருக்க, அவளோ இன்றைய செயல்கள் மூலம் தன்னை புரிய வைத்திருந்தாள் கணவனுக்கு.

 

                    இப்போதும் அவள் அமைதியாக தன் முன் நின்றிருந்தது நினைவு வர, அப்போதே அவளை ஆட்கொள்ளும் வேட்கை தான் திருவிடம். ஆனால் அவசரப்பட்டு ஏதும் செய்யப்போய் அவள் காயப்பட்டு விடக்கூடாதே என்றுதான் கட்டுப்படுத்திக் கொண்டான் அவன்.

 

                  அவளுக்கும் யோசிக்க சிறிது அவகாசம் கொடுக்க நினைத்தே கிளம்பி வந்திருந்தான் அவன். அவளை பொறுத்தவரை பிடிக்காத கல்யாணம் தானே. இரண்டு நாட்களில் அவள் சற்று இயல்பாக இருப்பது மகிழ்ச்சி தான் என்றாலும், அதற்காக அவளை உடனடியாக எதற்கும் கட்டாயப்படுத்த விரும்பவில்லை அவன்.

 

                                அதற்காகவே அவளுக்கும் ஏன் தனக்கும் சேர்த்தே இந்த ஆறுமணி நேர இடைவெளியை கொடுத்துக் கொண்டான். யோசிக்கட்டும் என்று நினைத்தவனுக்கு, ஒருபுறம் எப்போதடா நேரம் நகரும் என்ற ஏக்கமும் இருந்தது.

                                     இவன் கடையில் அமர்ந்திருந்த நேரம் லோட் ஏற்றி சென்றிருந்த அவனது லாரியில் ஏதோ கோளாறு என்று போன் வர, சரத் தான் சென்றுவிட்டு வருவதாக கூற, அவனை தனியாக அனுப்ப மனமில்லாமல் திரு தானும் புறப்பட்டான். லாரி சென்னையை தாண்டி செங்குன்றம் அருகில் பழுதாகி நின்றிருந்தது.

 

               வண்டியில் இருந்த சரக்குகள் அடுத்தநாள் காலை ஆந்திரா செல்ல வேண்டியவை. திரு இன்னொரு வண்டிக்கு ஏற்பாடு செய்தவன் அதிலிருந்த சரக்குகளை மாற்றி முதலில் லோடை அனுப்பி வைத்தான். அந்த நேரத்திற்குள் மெக்கானிக்கும் வந்து சேர்ந்திருக்க, அவன் அவர்களுடைய லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்தான்.

 

                 ஆனால் அதற்கெல்லாம் மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆகி இருக்க, இவன் கடையிலிருந்து கிளம்பிய நேரம் மணி ஏழு. கிட்டத்தட்ட பத்தாகி இருந்தது இப்போது. ஆனால் இன்னமும் வண்டி வேலை இழுத்துக் கொண்டே இருந்தது. அந்த இடத்தில சாரத்தை தனியாக விடவும் மனமில்லாமல் உடன் நின்றிருந்தான் திரு.

 

                             வீட்டிலிருக்கும் மனைவியின் நினைவு வந்தாலும், ஒன்றும் செய்ய முடியாமல் நின்றான் அவன். வண்டி ஒருவழியாக சரியாகி இவர்கள் கிளம்பும் நேரம் மணி பதினொன்று முப்பதை தொட்டிருந்தது. அவன் வீடு வந்து சேரவே பனிரெண்டு மணிக்குமேல் ஆகிவிட, இன்று பார்த்து வீட்டை உள்ளிருந்து பூட்டி இருந்தாள் மனைவி.

 

                     அந்த நேரத்தில் கதவை தட்டவும் மனமில்லை அவனுக்கு. சாவி கையில் இருந்தாலும், இந்த நேரத்தில் அவள் தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என்று நினைத்தவன் தன் இடமான மொட்டைமாடி அறைக்கு சென்று படுத்துவிட்டான்.

                   உள்ளே படுத்திருந்தவளோ இவன் வருவான் என்று பத்து மணியிலிருந்து காத்திருந்து, உண்ணாமல் கூட அமர்ந்திருந்தவள் அப்படியே சோஃபாவில் படுத்தே உறங்கி இருக்க, திடீரென்று அவள் விழித்து பார்க்கும் போது மணி பதினொன்று.

 

               நேரத்தை பார்த்தவள் அவனுக்கு அழைக்க, போனை எடுத்தது சரத். வண்டி பழுதாகி நின்றதை கூறியவன் அண்ணன் மெக்கானிக் உடன் இருப்பதாகவும் அவனே கூறி விட, கதவை மூடி உள்பக்கமாக பூட்டிவிட்டு உள்ளறையில் சென்று படுத்துக் கொண்டாள் அவள்.

 

                   அவன் வராதது ஏமாற்றமாக இருந்தாலும், அவன் வேலையை புரிந்து கொண்டவள் தன்னை சரிசெய்து கொண்டாள். அவனின் நினைவிலேயே இருந்தவள் உறங்க தொடங்கி இருந்த நேரம்தான் திரு வந்தது. அவன் லேசாக கதவை தட்டி இருந்தால் கூட, எழுந்து வந்திருப்பாள் மனைவி.

 

                   ஆனால், அவன் அதை செய்யாமல் போனதற்காக நாளை வருத்தப்பட போகிறோம் என்று அறியாமல் மேலே இருந்த அறையில் படுத்து உறங்கி கொண்டிருந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                        

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement