Advertisement

அடுத்த நாளும் முன்தினம் போலவே புலர, இன்றும் திரு முதலில் எழுந்து வந்திருந்தவன் துர்காவை தரிசித்துவிட்டு கிளம்பி சென்றிருக்க, துர்காவிற்கு அது தெரியவே இல்லை. அவள் தன் வழக்கமாக எழுந்து கொண்டவள் குளித்து முடித்து காஃபி குடித்துவிட்டு, டீவியை போட்டுவிட்டாள்.

                          அவள் வழக்கமாக பாட்டுச்சேனல் ஒன்றை வைத்து விட்டவள் தான் இரண்டு நாட்களாக உடுத்திய உடைகளை ஊற வைத்துவிட்டு,கிட்சனை துடைத்து முடித்து, பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்க அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தான் திரு. அவன் உள்ளே நுழையும் நேரம்

                      ஒரு காதல் கடிதம் விழி போடும்

உன்னை காணும் சபலம் வர கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்

நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட

காயம்கை வைக்க தானாக ஆறும்…..

                                       என்று பாடிக் கொண்டிருந்தது தொலைக்காட்சி.

                           திருவின் கண்கள் துர்காவை தேட, அவள் சமையல் அறையில் நிற்பதை கண்டவன் மெல்ல எட்டிப் பார்த்தான். அவளும் மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டு இருக்க, கை அதன் பாட்டிற்கு வேலையை செய்து கொண்டிருந்தது.

                           அரவம் உணர்ந்து திரும்பியவள் திரு நிற்பதை காணவும், வாயை மூடிக் கொண்டாள். பாத்திரங்களை கழுவி முடித்தவள் அறைக்குள் நுழைந்து விட்டாள். சாப்பிடுகிறாயா? என்று அவனை கேட்கவே இல்லை இன்று. கேட்பதற்கு முதலில் சமைக்க வேண்டும் அல்லவா.. அவள்தான் சமைக்கவே இல்லையே.

                                                            அவன் வருவானா? இல்லையா? என்று தெரியாமல் சமைப்பதாக இல்லை அவள். இன்னும்  பத்து நிமிடம் கூட நிற்கமாட்டான் என்று நினைத்தவள் துணியை துவைத்துக் கொண்டிருந்தாள்.அவள் துணிகளை துவைத்து முடித்து வெளியே வந்த போது அவன் வீட்டிலேயே இல்லை.

                           எதிர்பார்த்தே இருந்ததால் ஏமாற்றமும் குறைவுதான் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் அடுத்து செய்ய வேலை ஒன்றும் இல்லாததால், டிவியின் முன் அமர்ந்துவிட்டாள்.

                       அவள் ஒருத்திக்கு மட்டுமாக என்ன சமைப்பது? என்று அதுவேறு கோபமாக வர, மதியம் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தவள், அப்படியே விட்டு விட்டாள். இப்படி அந்த வீட்டில் தனியாகவே அமர்ந்திருப்பது வேறு அவளின் எண்ணங்களுக்கு தீனி போட, எதையும் யோசிக்காதே என்று தனக்குத்தானே பலமுறை பதிய வைத்துக் கொண்டவள் சென்று மீண்டும் படுத்துவிட்டாள்.

                     திரு கடைக்கு வந்து விட்டிருந்தாலும் ஏனோ மனம் முழுவதும் துர்கா தான். இன்று அவள் பார்த்த அந்த பார்வையை ஆராய்ந்து கொண்டிருந்தது அவன் மனது. என்ன இருந்தது அவள் பார்வையில் எதுவோ குற்றம் சாட்டுவது போல் என்று யோசித்துவனுக்கு எதற்காக என்றுதான் புரியவில்லை.

                     அவன் யோசனையில் மூழ்கியவனாக அமர்ந்திருக்க, சரத் அந்த நேரம்தான் வந்து அவன் அருகில் அமர்ந்தான். வள்ளி இன்னும் கடைக்கு வந்திருக்கவில்லை.

                          சரத் சற்றுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தவன் “ஏண்ணா… உன்னையெல்லாம் அண்ணி ஒண்ணுமே கேட்கறது இல்லையா??” என்று கேட்க

                          “என்னடா கேட்கணும் புரியலையே..” என்றான் திரு.

         “ஹான்.. கல்யாணம் பண்ண ரெண்டாவது நாளே இப்படி கடைக்கு வந்து உட்கார்ந்து இருக்கியே. அதைத்தான் கேட்கறேன். ஏண்ணா இப்படி இருக்க.. உனக்கென்ன தலையெழுத்தா.. இங்க நான் பார்த்துக்கமாட்டேனா. நீ எதுக்கு நாலு மணிக்கு எல்லாம் முழிச்சு ஓடி வரணும்.”

                 “இதுவரைக்கும் கூட ஏதோ போனா போகுது ன்னு விட்டுடலாம். ஆனா, இப்போ அண்ணி வீட்டுக்கு வந்தும் இப்படியே பன்றியேணா” என்று பெரிய மனிதன் போல் அறிவுரை கூறியவன்

                   “அதுவும் அண்ணி கையாள சாப்பிடலாம் கொடுத்து வச்சிருக்கணும்.. நீ என்னடா ன்னா இந்த நொந்து போன வடையை முழுங்கிட்டு இருக்க.” என்று அவன் முன்னால் இருந்த வடையை அவன் முகத்திற்கு நேராக எடுத்து நீட்டி நக்கலாக அவன் கூற

                      திரு சட்டென தலையில் அடித்துக் கொண்டான். நேற்று அவளிடம் வந்துவிடுவதாக கூறி கிளம்பியது அப்போதுதான் நினைவு வந்தது அவனுக்கு. “இப்படியுமா இருப்பேன்.. கடவுளே நல்லா சொதப்பிட்டேனே.. அதான் அப்படி முறைச்சிட்டு இருந்தாளா?? “” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு அவன் அமர்ந்திருக்க,

                     சரத் புரியாமல் “என்னனா நீயே  பேசிட்டு இருக்க.. என்ன சொதப்புன” என்று அவனை உலுக்க, அவனிடம் எதுவும் கூறாமல் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டான். வழியெல்லாம் தன்னையே திட்டிக் கொண்டு அவன் வீட்டை அடைய, வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது.

                    இரவில் கூட வீட்டை பூட்டாதவள் இப்போ ஏன் பூட்டி வச்சிருக்கா??? என்று நினைத்துக் கொண்டே தன்னிடம் இருந்த சாவியை கொண்டு உள்ளே நுழைந்தான் அவன். ஹாலில் அவள் இல்லாமல் போகவும், அவன் அறையை எட்டிப்பார்க்க, உடலை குறுக்கி கொண்டு மொத்தமாக சுருண்டு நத்தை போல் ஒடுங்கி இருந்தாள் அவன் மனைவி.

                    இவ என்ன இப்படி படுத்திருக்கா?? எதுவும் முடியலையா? என்று பதட்டமானவன் அவள் அருகில் சென்று “துர்கா.. துர்கா..” என்று அழைக்க, அப்போதுதான் உறங்க ஆரம்பித்திருந்தவள் பதறி எழுந்து அமர்ந்தாள். யாரோ என்று அவள் பயந்து விட்டிருக்க, திருவை பார்த்ததும் தான் உயிர் வந்தது அவளுக்கு.

                      தன்னை நிதானித்துக் கொண்டு அவனையே அவள் பார்க்க, “என்ன ஆச்சு.. ஏன் இப்படி படுத்துட்டு இருக்க.. உடம்பு எதுவும் முடியலையா..” என்று அவன் வரிசையாக கேள்வி கேட்க

                    “ஒண்ணுமில்ல.. நல்லா இருக்கேன்..” என்று கூறியவள் கால்களை சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள். அவளிடம் அடுத்து என்ன கேட்பது என்று புரியவில்லை திருவுக்கு. “ஒண்ணுமில்லாம ஏன் இப்படி படுத்துட்டு இருக்கா..” என்று யோசித்தவன் யோசனையை அவனோடு வைத்துக் கொள்ள, துர்கா வாயைத் திறக்கவில்லை.

                     திரு அவனாகவே மீண்டும் “சாப்பிட்டியா” என்று கேட்டு வைக்க

            துர்கா அதிசயமாக பார்த்தாள் அவனை. “நான் இந்த வீட்டுக்கு வந்து இன்னிக்கு ரெண்டாவது நாள்” என்று அவள் கூறும்போது நக்கலும் சேர்ந்துகொண்டது.

                     திருவுக்கு அவள் சொல்ல வருவது புரிந்தாலும், “புரியல..” என்று விட

              “இரண்டு நாளா நீங்க சொல்லிதான் சாப்பிட்டேனா..” என்று துர்கா தெளிவாகவே கேட்க, அதில் அப்பட்டமான குற்றச்சாட்டுதான்.

                   திரு “நேத்து ஞாபகம் இல்ல. எப்பவும் காலையில போனா நைட் தான் வருவேன்.. அதே ஞாபகத்துல நேத்தும். தப்புதான்… கேட்டு இருக்கணும்..” என்று நிறுத்த

                  “நான் உங்களை கேட்கவே இல்லையே..” என்று விடாமல் வாயடித்தாள் மனைவி. அதில் கடுப்பானவன் “இப்போ என்ன செய்ய சொல்ற என்னை.. மறந்துட்டேன் என்ன பண்ணலாம்…” என்று அவன் கையை கட்டிக்கொண்டு நிற்க

                 “என்னவோ பண்ணுங்க…” என்பது போன்ற பார்வைதான் பார்த்தாள் அவள்.

                 திரு இன்று அவளை விடுவதில்லை என்று நினைத்தவன், “சரி இப்போ எடுத்து வை.. போ.. சாப்பிடலாம்.” என்று சமாதானமாக கூற

                    “சாப்பிடணும்ன்னா மொதல்ல சமைக்கணும்…” என்றாள் அவள்.

                அடிப்பாவி என்று நினைத்தவன் “சமைக்கவே இல்லையா..” என்று கேட்டு வைக்க,

         “நீங்க காலையில போனா நைட் தான் வருவீங்க.. எதுவுமே ஞாபகத்துலயும் இருக்காது. அப்புறம் ஏன் சமைச்சிட்டு.. நீங்க தினமும் ஏழு மணிக்கு கதவை திறந்துவிட வர்றீங்கள, அப்போ ரெண்டு இட்லி வாங்கிட்டு வந்திடுங்க.. அப்புறம் நைட்டும் அதே போல ரெண்டு இட்லி போதும்.” என்றவள்

                “இல்லைன்னா ஒன்னு செய்யலாம். கடையில ஒரு சுவர் வச்சிடுங்க.. நானும் உங்களோட கடைக்கே வந்துடறேன். வீட்டுக்கே வராதவருக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வீடு. நாம அங்கேயே குடும்பம் நடத்திக்கலாம்.” என்று நிற்காமல் பொரிய, சிரித்துவிட்டான் திரு.

                அவன் சிரிப்பை கண்டவளுக்கு மீண்டும் கோபம் வர “சிரிக்காதிங்க.. நிஜமா கோபமா வருது எனக்கு..” என்று அவள் முறைக்க, “நான் சிரிக்க கூட உன்கிட்ட அனுமதி கேட்கணுமா..” என்றவன்

                    “உன்னை ஆளைப்பார்த்து ரொம்ப அமைதியான பிள்ளை ன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன். இப்போதான் தெரியுது..” என்று சிரிப்போடு கூற

                   “ஏன் ரொம்ப வருத்தமோ அதுல.. இப்படி பேசியே உங்களை எதுவும் செய்ய முடியல என்னால. இன்னும் அமைதியா வேற..” என்று அப்போதும் நொடிப்பாகவே கூறினாள் அவள்.

                அவன் கட்டிலில் அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டவன் “சரி என்ன செய்யணும் என்னை.. இப்போ சொல்லு.” என்று விட்டு கைகளை சாவகாசமாக பின்னால் ஊன்றிக்கொள்ள, இலகுவான அவன் செயல்கள் அவளை பதட்டப்படுத்தியது.

              “என்ன செய்ய.. என்ன செய்ய முடியும்..”என்று அவள் கேட்கவும்

          “ஒன்னும் பண்ண முடியாது. இந்த ஜென்மத்துக்கு நமக்கு நாமே தான். அதான் சொல்றேன், இப்படி சண்டை போடுறதை விட்டுட்டு சாப்பாடு போடு..” என்று இலகுவாக வழி சொன்னான் திரு.

                  அவனை முறைத்து கொண்டே எழுந்தவள் “நான் எதுவுமே செய்யல.. இனிதான் சமைக்கணும். கண்டிப்பா ஒருமணி நேரம் ஆகும்.” என்று வேண்டுமென்றே கூற

             “ரெண்டு மணி நேரமானாலும் பரவாயில்ல..” என்று கட்டிலில் படுத்து விட்டான் திரு

             “இன்னும் பத்து நிமிஷமே அதிகம்..அதுக்குள்ள ஓடிடுவீங்க..” என்றவள் அவன் முன் கையை நீட்டி “அப்படி கெளம்பிட்டா, இப்போ சமைக்கிறத தான் ராத்திரிக்கு போடுவேன்” என்று எச்சரித்து விட்டு சமையலறைக்கு சென்றாள்.

            சற்று நேரத்திற்கு முன்பு இருந்த தவிப்புகள் விலகுவதை போல் இருக்க, அறையை விட்டு வெளியேறியவள் முகத்தில் புன்னகைதான். காலையில் இருந்த கண்ணீர் காணாமல் போயிருந்தது. திரு ஏதோ ஒரு வகையில் அவளை திடமாக்கி இருந்தான் என்றே சொல்ல வேண்டும்.

                 அவன் வருகையும் தொடர்ந்த இந்த பேச்சுகளும் அவளுக்காக மட்டுமே என்பது வரை அவளுக்கு புரிய, இப்போது அவன் காத்திருப்பதும் தன்னை சமாதானபடுத்தவே என்பதும் சிறு நிம்மதியை கொடுக்க, அதை பற்றிக் கொள்ள முடிவெடுத்தாள் அவள்.

                    திருவும் அறையின் கட்டிலில் புன்னகையுடன் தான் கண்மூடி இருந்தான். இவர்களின் புன்னகை எதுவரையோ????

Advertisement