Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 10

                               துர்கா திருவிடம் “நான் பார்த்துக்கறேன்” என்று கூறிவிட்டவள் எழுந்து சென்றுவிட, திரு தான் பேய் அடித்தவன் போல் அப்படியே அமர்ந்திருந்தான். அவனுக்கு புரிந்து கொள்ளவே முடியவில்லை அவன் மனைவியை. “என்னடா நடக்குது இங்கே?” என்பது போன்ற பார்வை தான்.

                              “அவளாத்தான் சண்டை போட்டா, இப்போ அவளே நான் பார்த்துக்கறேன் ன்னு சொல்லிட்டு போய்ட்டா… இவ உன்னை என்னன்னு நினைச்சிட்டா திரு” என்று அவன் மனசாட்சியே அவனை காறித்துப்ப, வெட்கமே இல்லாமல் துடைத்துக் கொண்டான் அவன்.

                            இத்தனை பஞ்சாயத்திலும் அவள் “இதுதான் என் வாழ்க்கை..” என்று கூறியதை மட்டும் அவன் மனம் குறித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு தன்னை விட்டுச்செல்லும் எண்ணம் இல்லை என்பதே அவனுக்கு நிம்மதியாக இருக்க,நேற்று இரவிலிருந்து தோன்றி இருந்த சஞ்சலங்கள் கூட மெதுவாக மறைவது போல் இருந்தது.

                            அவன் அறிந்த வரையில் துர்கா அதிர்ந்து பேசி கூட அவன் பார்த்தது கிடையாது. ஏன் அவள் வட்டத்தை தவிர்த்து பிறரிடம் அவள் பேசி பார்த்ததே இல்லை என்று கூட கூறலாம். அவளின் அந்தக்குணம் தான் அவனை ஈர்த்ததும் கூட. அவள் உண்டு அவள் வேலையுண்டு என்று இருப்பவள் தான். வள்ளி அவர் மகளை பற்றி சொல்லி இருந்ததை வைத்துப் பார்த்தால் பொறுப்பான பெண்ணும் கூட.

                            அப்படி பட்டவளாக அவன் நினைத்திருந்தவள் நேற்றிலிருந்து அவனை வாட்டி எடுத்திருக்க, வெளியில் சொல்ல முடியாத வேதனையான கணங்கள் தான். நேற்று இரவு முதல் இருந்த நிலைக்கு இது பரவாயில்லை என்று தோன்றியது இப்போது.

                               வெகுநேரம் தன் யோசனையிலேயே மூழ்கி விட்டவன் அதன் பிறகே நேரத்தை பார்த்துவிட்டு, எழுந்து கொண்டான். இன்று சிலருக்கு பணம் தருவதாக சொல்லி இருக்க, அவன் இப்போது சென்றே ஆக வேண்டும். எழுந்து கொண்டவன் லேசாக சமையல் அறையை எட்டிப் பார்க்க, அங்கே அடுப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தாள் அவன் மனைவி.

                                வாசலில் நின்றவன் சொல்வதா? வேண்டாமா? என்ற நொடிநேர தயக்கத்திற்கு பிறகு “நான் மார்க்கெட் போகணும்.. கிளம்புறேன்” என்று சுவற்றை பார்த்து சொல்லிவிட, அவன் முடித்த பின்பு தான் திரும்பினாள் அவன் மனைவி.

                               அவனை பார்த்தவள் “சமைக்கிறேன்.. சாப்பிட்டு போங்க” என்று முறைப்பாகவே சொல்ல

                  “ஐயோ..” என்ற பாவனை தான் அவனிடம். அவன்தான் ஏற்கனவே டீயுடன் சேர்த்து இரண்டு வடையையும் உள்ளே தள்ளி இருந்தானே. வேண்டாம் என்றவனிடம் தேவா பிடிவாதமாக திணித்திருக்க,இப்போது வினையானது.

                      பொதுவாகவே மூன்று வேளை உணவு என்று கட்டாயமாக உண்ணும் பழக்கம் கிடையாது அவனிடம். அவன் பசிக்கு ஏற்பத்தான் எப்போதும் உணவு. காலை உணவெல்லாம் இந்த நேரத்திற்கு என்று சொல்லவே முடியாது.

                       இப்போது அவன் உண்டிருந்த வடையே போதுமாக இருக்க, அதோடு அவனுக்கு நேரமும் ஆகி கொண்டிருந்தது. அவனிடம் பணம் வாங்கும் வியாபாரிகள் அவனை நம்பி தொழில் செய்பவர்கள்.. இவன் தாமதித்தால் நஷ்டம் அவர்களுக்கு தான். ஆனால் இதை அவளிடம் என்னவென்று சொல்லி புரிய வைப்பது. ஏற்கனவே பேசினாலே முட்டிக் கொள்கிறது.

                  என்ன செய்வது?? என்று யோசித்தவன், இறுதியில் “நான் போயிட்டு வந்து சாப்பிடறேன்..” என்று கூறி கிளம்பி இருந்தான். மார்கெட்டிற்கு வந்துவிட்டவனை அடுத்தடுத்த வேலைகள் இழுத்துக் கொள்ள, காலை உணவை வழக்கம் போல் மறந்துவிட்டவன் மனைவியையும் மறந்திருந்தான்.

                  இடையில் வள்ளி வேறு அழைத்திருக்க, அவரிடம் பேசி முடித்தவன் தேவாவை விட்டு அவரை கடைக்கு அழைத்துக் கொண்டிருந்தான். கடையில் அவருக்கு பெரிதாக வேலை என்று எதுவும் இல்லை.இவர்கள் செய்வது மொத்த வியாபாரம் தான் என்பதால் பெரும்பாலும் அவனிடம் வாங்குபவர்கள் அவர்களே வண்டியில் ஏற்றி விடவும் ஆட்களை அழைத்து வந்துவிடுவர்.

                  வள்ளிக்கு வேலை என்று பார்த்தால் யார் எவ்வளவு வாங்கியது?? எவ்வளவு தொகை வந்திருக்கிறது?? எவ்வளவு வர வேண்டி இருக்கிறது என்று குறித்து வைப்பதும், காய்கறி லோட் அவர்கள் ஏற்றுவதை மேற்பார்வை பார்ப்பதும் தான். ஆனால் இப்போது அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதிலிருந்து அந்த வேலையையும் அவருக்கு கொடுக்காமல் இவர்களே பார்த்துக் கொண்டிருக்க, இதோ வள்ளி கிளம்பி வந்து விட்டார்.

                   அவருக்கு வீட்டிலேயே இருப்பது அடைத்து வைத்ததை போல் இருக்க, மகளையும் சென்று பார்க்க மனமில்லை. மகளை பற்றி நன்கு தெரிந்தவர் என்பதால் மகள் முதலில் திரு வீட்டில் சற்று பொருந்திக் கொள்ளட்டும் பிறகு சென்று பார்த்துக் கொள்வோம் என்று நினைத்தார் அவர். அதன் பொருட்டே திருவுக்கு அழைத்தது.

                     அவனும் முதலில் மறுத்தவன் அவர் பிடிவாதம் பிடிக்கவும், வேறு வழி இல்லாமல் அவரை அழைத்துக் கொண்டிருந்தான். அதோடு அவருக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் உட்கார வைத்திருந்தவன் தேவாவை அவருக்கு துணையாக இருத்திவிட்டு மதியம்போல் ஒரு வேலையாக வெளியில் சென்று விட்டான்.

                  அவன் சென்ற வேலை முடியவும் அவன் உடன் வந்திருந்த வியாபாரிகளுடன் சேர்ந்து அவனும் மதிய உணவை அங்கேயே ஒரு உணவகத்தில் முடித்து விட்டிருந்தான். அன்றைய தினம் அப்படியே கழிந்துவிட, மாலை அவன் வசூலை கவனிக்க சென்றவன் மீண்டும் கடைக்கு வர, மணி ஒன்பதை தாண்டி இருந்தது.

                                வள்ளி அப்போதே வீட்டிற்க்கு சென்றிருக்க, தேவாவும், சரத்தும் மட்டும் கடையில் இருந்தனர். அவன் வந்ததும் கடையை பூட்டி சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு அவர்கள் கிளம்பிவிட, இவனும் அப்போதுதான் வீட்டிற்கு கிளம்பினான்.

                        வீட்டிற்கு வந்து இரும்பு கேட்டை திறந்தவனுக்கு அப்போதுதான் மனைவியின் ஞாபகம் வந்தது. அப்போது கூட அவளிடம் வருவதாக சொல்லிவிட்டு சென்றது நினைவில் இல்லை அவனுக்கு. அவன் வாசலில் இருந்த மணியை அழுத்த, வந்து கதவை திறந்தவள் அவனை அமைதியாக பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

                       அவன் தனது அறைக்குள் நுழைய முற்பட, “சாப்பாடு எடுத்து வைக்கவா..” என்றவள் கேள்வியாக இழுக்க, ‘ம்ம் ” என்று தலையசைத்தவன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

                     அவன் குளித்து முடித்து வரவும், அவனுக்கு உணவை பரிமாறியவள் அவன் உண்டு முடிக்கவும், தானும் சாப்பிட்டு அனைத்தையும் அவள் எடுத்துவைக்க, அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்தவன் எழுந்து சென்றுவிட்டான்.

                   நேற்றும் இதேபோல் அவன் சென்றுவிட்டிருக்க, இன்றும் எங்கே போகிறான் என்று நினைத்தவள் வாசலில் நின்று பார்க்க, மேலே படிகளில் ஏறி கொண்டிருந்தான் திரு. நேற்றும் இங்கேதான் இருந்தானா?? என்று நினைத்துக் கொண்டவளுக்கு நேற்று தான் பயந்ததும் நினைவு வந்தது.

                     காலையில் தான்  வாய்விட்டு கேட்டும்கூட, அவன் மீண்டும் தனியாக விட்டுச் சென்றது ஏதோ போலாக அவனிடம் சென்று மீண்டும் நிற்கவும் மனம் வரவில்லை. அமைதியாக சென்று நேற்று படுத்த அறையிலேயே படுத்துக் கொண்டாள் அவள்.

                       கதவை லேசாக மூடி இருந்ததோடு சரி. தாழ்ப்பாளையும் போடவில்லை. ரூம் கதவையும் ஒருக்களித்து மூடி விட்டவள் அமைதியாக படுத்துக்க கொண்டாலும், மனம் அமைதியாகவே இல்லை. அவனின் இந்த செயல்கள் அவளை அலட்சியப்படுத்துவதாகவே தோன்றியது அவளுக்கு.

                  எதை எண்ணி பயந்து கொண்டிருந்தாளோ அதுவே நடந்தது அவள் விஷயத்தில். திரு பார்வையால் அலட்சியப்படுத்துவான் என்று அவள் பயந்திருக்க, அவனோ தன் செயல்களால் அவளை தூர நிற்கவைத்துக் கொண்டிருந்தான்.

                    காலையில் அத்தனை கோபத்திலும் கூட அவனை பசியோடு அனுப்ப மனம் இல்லாமல் தான் சென்று கிச்சனில் நின்றிருந்தாள் அவள். இன்னும் பத்து நிமிடங்கள் இருந்திருந்தால் உணவையும் தயார் செய்தே முடித்திருப்பாள். ஆனால் அவன் மீண்டும் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றிருக்க, பதினோரு மணிவரை காத்திருந்தவள் அதற்குமேல் முடியாமல் தான் மட்டும் சாப்பிட்டு இருந்தாள்.

                      மதியமும் கூட அவன் வரமாட்டான் என்று ஒரு மனம் சொன்னாலும், ஒருவேளை வந்துவிட்டால் என்ன செய்ய என்று யோசித்தவள் அவனுக்காக சமைத்து வைத்திருக்க அப்போதும் வரவில்லை திரு. மதிய உணவை நான்கு மணிக்கு மேல் வேண்டாவெறுப்பாக விழுங்கி வைத்திருந்தாள்.

                     இப்போதும் இந்த நேரத்திற்கு வந்தவன் உண்டு முடித்து மேலே சென்றுவிட, எதற்கு இந்த திருமணம் ? என்று அவளே கேட்டுக் கொண்டாள். காலையில் அவனிடம் பேசிவிட்டபோது அவளிடம் இருந்த அந்த வீரம் இப்போது தூரப் போய் நின்றிருக்க, விழவா?? வேண்டாவா ??? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது கண்ணீர்.

                     இப்போதெல்லாம் அடிக்கடி அழுகை வேறு வர, அதற்கும் சேர்த்து நொந்து கொண்டவள் ஒருவித அழுத்தத்தோடு கண்களை மூடிக் கொண்டாள். அவனுக்காக இனி கண்ணீர் விடுவதாக இல்லை அவள். “நீதானே கல்யாணம் செஞ்சுக்கிட்ட, உனக்கு என்ன தோணுதோ செய்டா..” என்று நினைத்துக் கொண்டு அப்படியே உறங்கிப் போனாள்.

Advertisement